கனடாவில் இந்த வருடத் தமிழ் மரபுக் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. சென்ற ஞாயிற்றுக்கிழமை 28-1-2024 அன்று ‘கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின்’ பொங்கல் விழாவும் மரபுத்திங்களும் மிகவும் சிறப்பாக ஒன்ராறியோ, எத்தோபிக்கோவில் கொண்டாடப்பட்டது. மங்கள விளக்கேற்றிக் கனடா தேசிய கீதம் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகள் கலந்து பாடப்பெற்றது. தொடர்ந்து தமிழ்வாழ்த்தும் அகவணக்கமும் இடம் பெற்றன.

தமிழர்களின் பாரம்பரியத்திற்கு அமைய பொங்கல் பற்றிய உரையும், மற்றும் மொழி, கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றன. இதைவிட மன்றத்தைச் சேர்ந்த சிறுவர் சிறுமிகளால் வரையப்பட்ட தமிழ் மொழி சார்ந்த பதாகைகளும் மண்டபத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தமிழர்களின் உணவு வகைகள், ஆடை அணிகள், இசைக்கருவிகள் போன்றவையும் தமிழ்ப் பெரியோர்களின் படங்கள், மற்றும் இலங்கையை ஆண்ட தமிழ் மன்னர்கள் பற்றிய குறிப்புக்களும் அடையாளப் படுத்தப்பட்டன. பார்வையாளர்களுக்கு இளம் தலைமுறையினரே தமிழில் விளங்கங்களும் தந்தனர். தமிழ் மரபுத் திங்களின் நோக்கம் எதுவோ, அது இங்கே சரியான முறையில் கடைப்பிடிக்கப்பட்டு, ஏனைய மன்றங்களுக்கு இது ஒரு எடுத்துக்காட்டாக அமைந்திருந்தது பாராட்டுக்குரியது.

மன்றத்தின் காப்பாளர்களில் ஒருவரான நவா கருணரட்ணராசா அவர்களின் உரையைத் தொடர்ந்து பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் உரை இடம் பெற்றது. ‘தமிழர்களுக்கான மொழி, கலாச்சாரம், பண்பாடு, மற்றும் இந்த மண்ணில் அவர்களுக்கு உள்ள உரிமைகள் போன்றவற்றைக் கொண்டாடுவதற்காக கனடிய அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டதுதான் மரபுத்திங்கள் நிகழ்வாகும். எனவே பெற்றோர்களே, பிள்ளைகளே, ஆசிரியர்களே வேறு எந்த புலம்பெயர்ந்த நாட்டிலும் கிடைக்காத இந்த அங்கீகாரம் எங்களுக்குக் கிடைத்திருக்கின்றது. கிடைத்த சந்தர்ப்பத்தை நாங்கள் நல்ல வழியில் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டார்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் துணைத்தலைவரும், எழுத்தாளருமான குரு அரவிந்தன் தனது உரையில் ‘எங்கிருந்து திடீரென இந்த எழுச்சி வந்ததோ தெரியவில்லை, இம்முறை கனடாவின் மூலை முடுக்கெல்லாம் மரபுத்திங்கள் கொண்டாடுகின்றார்கள். இது வரவேற்கப்பட வேண்டிய விடயமாக இருந்தாலும் எங்கள் பாரம்பரிய விழாவான தைப்பொங்கலை நாங்கள் மறந்துவிடக்கூடாது. இம்முறை நடந்த கொண்டாட்டங்களில் சிலர் தைப்பொங்கல் என்ற சொல்லையே தவிர்த்திருந்ததை நேரடியாகவே நான் அவதானித்தேன், காரணம் தெரியவில்லை. இந்தநிலை தொடருமானால் இந்த மண்ணில் தமிழர்களின் தைப்பொங்கல் திருநாள் வெகுவிரைவில் மறக்கடிக்கப்பட்டு விடலாம். இந்த நிகழ்வில் பெற்றோரும் இளைய தலைமுறையினரும் ஆசிரியர்களும் ஈடுபாட்டுடன் பங்குபற்றி நிகழ்வின் நோக்கத்தை நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’ என்று குறிப்பிட்டார்.

எழுத்தாளர் இணைய தலைவர் அகணி சுரேஸ் அவர்களால் எழுதப்பட்ட தைப்பொங்கல் பாடலுக்கு பெண்கள் அமைப்பின் அங்கத்தவர்கள் சிலர் தமிழரின் பாரம்பரிய நடனமான கோலாட்ட நடனத்தை ஆடிக் கண்ணுக்கு விருந்தளித்ததைத் தொடர்ந்து அவரது உரை இடம் பெற்றபோது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களைப் பாராட்டியிருந்தார்.

கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின் தலைவி கமலவதனா சுந்தா அவர்கள் உரையாற்றும் போது, ‘கற்றறிந்தோர் பலர் வந்து இந்த நிகழ்வைப்பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒற்றுமையாகச் செயற்பட்டால் இது போன்ற பல நல்ல விடயங்களைக் கனடாவில் பெண்களால் சாதிக்க முடியும் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு’ என்று குறிப்பிட்டார். நிகழ்ச்சிகளை நவகீதா முருகண்டி சிறப்பாகக் கொண்டு நடத்தினார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.