இங்கிலாந்தில் இருந்து வருகை தந்திருந்த பாவலர் பாலரவியின் கவிதைத் தொகுப்புக்கள் 24-12-2023 ஆம் ஆண்டு ஸ்காபரோவில் உள்ள 110, ‘அயன்சைட் கிறிசென்ட்’ மண்டபத்தில் வெளியிட்டு வைக்கப்பட்டது. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் ‘தெளிந்தபின் தெளிந்தவை,’ ‘எண்ணங்களின் வண்ணங்கள்,’ ‘வாழ்வாங்கு வாழ்ந்தோர்க்கும் வாழ்வோர்க்கும் வாழ்த்துக்கள்,’ ‘தேசமேயாகிய சுடர்கள்,’ ஆகிய நான்கு கவிதைத் தொகுப்புக்கள் வெளியிட்டு வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுக்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் தலைவர் கவிஞர் அகணி சுரேஸ் அவர்கள் தலைமைதாங்கினார். வாழ்த்துரை வழங்கிய பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தனது உரையில் கவிஞர் பாலரவியின் தங்கை சசிகலா தனது மாணவி என்றும், புலம்பெயர்ந்த மண்ணில் தமிழ் வளர்க்கும் இவர்களைப் போன்றவர்களின் தன்னலமற்ற சேவை பாராட்டப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கனடா தமிழ் எழுத்தாளர் இணையத் துணைத்தலைவர் குரு அரவிந்தன் தனது உரையில் பாவலர் பாலரவி அவர்களை 2018 ஆம் ஆண்டு முதன் முதலாகச் சந்தித்தாகவும், கனடாவில் புலம்பெயர்ந்த தமிழர்கள் கடந்த 33 வருடங்களாகத் தமிழ் மொழியை வளர்ப்பதில் ஈடுபாடு கொண்டிருப்பதைப் போலவே பிரித்தானியாவிலும் பாவலர் பாலரவி போன்றவர்கள் தமிழ் மொழியைத் தக்கவைப்பதில் ஈடுபட்டிருப்பதையும், அங்கே அச்சகம் ஒன்றை நடத்தி அதன் மூலம் தமிழ் நூல்களை வெளியிட்டுத் தமிழ்த் தொண்டு ஆற்றுவது பற்றியும் குறிப்பிட்டார்.

ஒன்ராறியோ மாகாணசபை உறுப்பினர் லோகன் கணபதி அவர்கள் மாகாணசபை சார்பாக வாழ்த்து மடல் கொடுத்து வாழ்த்தினார். கனடா கவிஞர் கழகத் தலைவர் குமரகுரு, மற்றும் கவிஞர் கஜன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.

அகணிசுரேஸ் அவர்கள் தனது தலைமை உரையில் கனடா எழுத்தாளர் இணையம் இது போன்ற நூல்களை வெளியிட்டு, எழுத்தாளர்களை ஊக்குவித்து வருவதையும், முடிந்தளவு தமிழ் இலக்கிய நூல்களை ஆவணப்படுத்துவதில் முன்னிற்பதாகவும் குறிப்பிட்டார்.

நூல் அறிமுகவுரை, ஆய்வுரை ஆகியவற்றை வாசுகி நகுலராஜா, நகுலேஸ்வரி குமரகுரு, வைத்திய கலாநிதி மேரிகுயூரி ஜோசெப், பவாணி தர்மகுலசிங்கம், கவிஞர் கஜன், ராஜ்மீரா இராசையா, சிவவதனி பிரபாகரன், மாவிலிமைந்தன் சண்முகராஜா ஆகியோர் வழங்கினார்கள்.

ஏற்புரையில் பாவலர் பாலரவி அவர்கள் அவ்வப்போது தான் எழுதிய கவிதைகளைத் தன்னிடம் அச்சகம் இருந்ததால் நூல்களாக்க முடிந்ததாகவும், இளமைப் பருவத்தில் எழுதிய கவிதைகள் அத்தனையும் 1983 ஆண்டு இலங்கையில் நடந்த இனக்கலவரத்தில் அழிக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார்.

பாவலர் பாலரவியின் சார்பாக அவரது சகோதரிகளான திருமதி ரஜனி சதானந்தன், திருமதி கிரிஜா மோகனதாஸ் ஆகியோர் நன்றியுரை வழங்கினார்கள். நிகழ்ச்சிகளை அவரது சகோதரி சசிகலா ஜீவானந்தன் சிறப்பாகத் தொகுத்து வழங்கினார்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.