தினகரன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் கலாசூரி இ.சிவ குருநாதனின் இருபதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு 'இலங்கை இதழியலில் சிவகுருநாதன்' நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 16.07.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணிக்கு கொழும்பில் நடைபெறவுள்ளது. கொழும்பு தமிழ்ச் சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர் தலைமையில் நடைபெறவுள்ளது.

இலக்கியப் புரவலர் ஹாசிம் உமர் முன்னிலை வகிக்க , பிரதம அதிதியாக லேக்ஹவுஸ் நிறுவனத்தின் ஆசிரிய பீட பணிப்பாளர் சிசிர பரணதந்திரி கலந்து கொள்ளவுள்ளார். இந்நிகழ்வில் கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் நடராஜா காண்டீபன், ‘ஞானம்’ பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் சாகித்யரத்னா ஞானசேகரன் ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தவுள்ளனர்.

தகவல் அறியும் ஜனாதிபதி ஆணைய உறுப்பினர் ஏ.எம்.நாகியா, எழுத்தாளர் முருகபூபதி (ஆஸ்திரேலியா) சிறப்புரை வழங்குவர். தில்லை நடராஜா (மேனாள் கூடுதல் செயலாளர் கல்வியமைச்சு) நூலை அறிமுகம் செய்கிறார். தொடர்ந்து கலை நிகழ்வுகள் நடைபெறும். இறுதியாக கே. பொன்னுத்துரை நன்றியுரையுடன் விழா நிறைவு பெறும். இந்த நிகழ்வுகளை மேமன்கவி தொகுத்து வழங்குவார்.

இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கலாசூரி இ. சிவகுருநாதன் நினைவுக் குழு அழைப்பு விடுத்துள்ளது.

        - தெளிவாகப் பார்க்க படத்தை ஒரு தடவை அழுத்தவும். -

தமிழ் மக்களின் அபிமானத்தைப் பெற்ற முன்னாள் தினகரன் ஆசிரியர் கலாசூரி சிவகுருநாதன் இலங்கை இலக்கியப் பரப்பிலும், ஊடகத்துறையிலும் தனக்கெனப் பல முத்திரைகளைப் பதித்துக்கொண்டவர். தினகரன் பத்திரிகையில் நீண்ட காலமாக ஆசிரியராக பணியாற்றிய, கலாசூரி சிவகுருநாதன் மிக இலகுவான மொழியில் எல்லோருக்கும் புரியக்கூடிய வகையில் கருத்துக்களை சொல்வதில் வல்லவர் அவரே.

இலங்கை பத்திரிகையியலில் வரலாற்றுச் சாதனை படைத்த இரத்தினதுரை சிவகுருநாதன் அவர்களின் இருபதாம் ஆண்டு நினைவாக “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” எனும் நூல் வெளியிடப்பட உள்ளது.

தினகரனில் தொடங்கிய கலாசூரி சிவகுருநாதனின் ஊடகப்பணி மற்றும் இலக்கியப்பணி இன்று வரை எவராலும் மறக்க முடியாத ஆளுமை உள்ளவராக தொடர்கின்றது என்பது அவரின் வாழ்வியல் சாதனையாகும். அவரின் இருபதாம் ஆண்டு நினைவாக (08/08/2003) “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” எனும் நூலை ‘ஐங்கரன் விக்கினேஸ்வரா’ தொகுத்துள்ளார்.

மூன்று பாகங்களாக வெளிவரும் “இலங்கை இதழியலில் சிவகுருநாதன்” நூலில் தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரத்தையும், பண்பாட்டு விழுமியங்களையும் பேணிப் பாதுகாத்த கலாசூரி சிவகுருநாதன் ஆற்றிய பெருங்கடமையை ஊடக, இலக்கிய அறிஞர்களின் திறனாய்வு கட்டுரைகள் அலங்கரிக்கின்றன.

இந்நூலின் முதல் அங்கம் ‘ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்குக் களம் தந்த தினகரன் சிவகுருநாதன்’ எனும் பகுதி அவரைப் பற்றிய வரலாற்றுப் பதிவுகளும், திறனாய்வு ஆக்கங்களை பல ஊடக ஆளுமையாளர்கள் எழுதியுள்ளனர்.

இரண்டாம் அங்கம் “பத்திரிகை ஆசிரியர்களுள் - மக்கள் திலகம்” எனும் பகுதியாக அவரைப் பற்றிய அரசியல் வல்லுநர்களின் அஞ்சலிகளும், ஆராதனைகளும் இடம் பெற்றுள்ளது.

இந்நூலில் “பூமாலைக்கு ஏன் பாமாலை” எனும் மூன்றாம் பகுதியில் கவிதைகளில் தெரிந்த சிவகுருநாதன் சிந்தனைகளை பல கவிஞர்கள் வடித்துள்ளனர். தினகரனில் ஆசிரியராக பணியாற்றிய காலத்தில் கலாசூரி சிவகுருநாதன் பல இளம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் முன்னின்றதற்கு சாட்சியமாக இக்கவிதைகள் உள்ளன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.