இன்று மாலை 3600 KIngston Road இல் அமைந்துள்ள ஸ்கார்பரோ கிராமச் சமூக நிலையத்தில் தேடகம், காலம் மற்றும் பதிவுகள்.காம் ஒன்றிணைந்து நடத்திய எழுத்தாளர்கள்  முருகபூபதி மற்றும் சாம்ராஜுடனான இலக்கியச் சந்திப்பு அமைதியாக ஆனால் காத்திரமானதாக நடந்து முடிந்தது. நிகழ்வினை எழுத்தாளர் பா.அ.ஜயகரன் தலைமையேற்றுச் சிறப்பாக  நெறிப்படுத்தினார்.

ஆரம்பத்தில் எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம் எழுத்தாளர் முருகபூபதி பற்றி நல்லதோர் அறிமுகத்தைச் செய்தார். ஆரம்பத்தில் மல்லிகையில் முருகபூபதியின் முதலாவது சிறுகதை வெளியானதையும், தொடர்ந்து வெளியான இரண்டாவது கதை தான் நடத்திய 'பூரணி'சஞ்சிகையில் வெளியானதையும் நினைவு கூர்ந்தார். முருகபூபதி இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் கொழும்புக் கிளையில் முக்கிய பங்கு வகித்ததைக் குறிப்பிட்ட என்.கே.மகாலிங்கம் அவர்கள் ஆனால் முருகபூபதியின் கதைகளில் ஏனைய முற்போக்கு இலக்கிய எழுத்தாளர்களின் கதைகளில் உள்ளதைப்போன்ற பிரச்சாரத்தொனி இருந்ததில்லை என்றும்  சுட்டிக்காட்டினார். கூடவே முதல் கதைத் தொகுதி சுமையின் பங்காளிகள் ( 1976 இலும்  )  முதல் நாவல் பறவைகள் ( 2003 இலும்) சாகித்திய விருது பெற்றதையும்  நினைவு கூர்ந்தார். இவ்விதம் ஆரம்பத்தில் புனைவிலக்கியத்தில் கால் பதித்த முருகபூபதி பின்னர் ஊடகத்துறைக்குள் மூழ்கி அபுனைவிலக்கியத்தில் மூழ்கி விட்டார் என்னும் கருத்துப்படத் தன் உரையினையைத் தொடர்ந்தார்.

தொடர்ந்து உரையாற்றிய என்.கே.மகாலிங்கம் அவர்கள் முருகபூபதியின் சமூகச் செயற்பாடான இலங்கை மாணவர் கல்வி நிதியம் இலங்கையில் வடக்கு , கிழக்கு , மலையக மாணவர்களுக்கு  ஆற்றும் சேவையினையும் சிலாகித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய முருகபூபதி புனைவிலக்கியத்தில் தொடங்கி அபுனைவில் மூழ்கிவிட்ட தன் நிலையைக் குறிப்பிட்டு ஒரு வகையில் தான் திசை மாறிய பறவையென்றார். முருகபூபதி அவர்கள் தனது விரிவான நீண்ட உரையில் தனது இலக்கிய, ஊடகச் செயற்பாடுகள், சமூச் செயற்பாடுகள் பற்றியெல்லாம் விரிவாகக் குறிப்பிட்டார். அவரைப் பற்றி போதிய புரிதலில்லாமல் கூட்டத்துக்கு வந்திருந்தவர்களுக்கு முருகபூபதியின் கலை, இலக்கிய , சமூக ஆளுமைக் கூறுகளை  நன்கு புரிய  வைக்கும் வகையில் அவரது உரை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத்தொடர்ந்து அவருடன் நடந்த கலந்துரையாடலில் என்.கே.மகாலிங்கம் முருகபூபதியை நோக்கி அவரது ஜேவிபியுடனான, குறிப்பாக ஜேவிபி தலைவர் ரோகண விஜேவீராவுடனான தொடர்பு பற்றிச் சிறிது கூறும்படி வினவியபோது அதற்கு விரிவானதொரு பதிலை முருகபூபதி அவர்கள் வழங்கினார்.  பல தடவைகள் தம் கட்சியில் சேரும்படி ஜேவிபி கேட்டபோதும் தான் ஒருபோதும் அரசியலில் ஈடுபட விரும்பவில்லையென்று கூறி மறுத்துவிட்டதாகக் குறிப்பிட்ட முருகபூபதி தனது ஜேவிபியுடனான தொடர்பு  மொழிபெயர்ப்பு போன்ற விடயங்களுடன் நின்றுவிட்டதாகத் தன் நிலையினைத் தெளிவுபடுத்தினார். வ.ந.கிரிதரன் அவரிடம் மீண்டும் அவர் புனைவிலக்கியத்துறையில் ஈடுபடுவாரா என்று கேட்டபோது  அதற்குப் பதிலளித்த முருகபூபதி  ஏற்கனவே அம்முயற்சியில் இறங்கி விட்டதாகக் கூறினார்.

தொடர்ந்து நிகழ்வில் காலம் செல்வம் எழுத்தாளர் சாம்ராஜ் பற்றிய சுருக்கமானதொரு ஆனால் நல்லதோர் அறிமுக உரையை ஆற்றினார். தொடர்ந்து உரையாற்றிய சாம்ராஜ் தான் பாட்டியுடன் மதுரையில் வாழ்ந்த பால்ய பருவ நினைவுகளை, தன் சித்தியொருத்தி காரணமாகச் சாண்டில்யன், சுஜாதா போன்றோரின் எழுத்துகளை வாசித்த ஆரம்ப கால வாசிப்பனுபவங்களை, நக்சலைட் அமைப்புடனான தனது ஆரம்ப காலத் தொடர்புகளை , அவை எவ்விதம் தன் ஆளுமையினை வடிவமைத்தன என்பதை, தான் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை, வலியினை நன்குணர்ந்திருப்பதாகவும், அவற்றைத் தான் எப்பொதும் ஆதரிப்பதாகவும் குறிப்ப்பிட்டு உரையாற்றினார். அத்துடன் வாசிப்பும் , எழுத்தும் எப்போதும் தனக்கு முக்கியமானவையென்றும் மீண்டும் மீண்டும் அழுத்திக் காட்டினார்.

அவருடனான கலந்துரையாடலில் எழுத்தாளர் சுமதி ரூபனின் சகோதரியான எழுத்தாளர் வச்ந்திராஜா முன்பு தன்னை கவர்ந்த எழுத்தாளர் ஜெயமோகனின் எழுத்துகளைத் தன்னால் இப்போது அப்போதுபோல் வாசிக்க முடியவில்லை. இதற்கு அவரது தனிமனிதக் கருத்துகளே  காரணம் என்னும் கருத்துப்படக் கருத்தினை முன் வைத்து இது பற்றி என்ன நினைக்கின்றீர்கள் எனக் கேட்டபோது இதற்குப் பதிலளித்த சாம்ராஜ் எழுத்தாளனின் தனிப்பட்ட கொளகைகளையும் அவனது படைப்புகளையும் வேறு வேறாக அணுக வேண்டும் என்னும் கருத்துப்படக் கருத்தினைத் தெரிவித்தார். படைப்பைப் படைப்பாகப் பார்க்கும் பக்குவத்தை வாசகர்கள் பெற வேண்டும் என வலியுறுத்தினார். இதனை என்னால் ஏற்க முடியவில்லை.

தேடக நண்பர் மயில் அண்மையில் 'ஊடறு' றஞ்சி முகநூலில் குறிப்பிட்டுக் கடுமையாகச் சாடிய விடுதலைப்புலிகளின் தலைவர் பற்றிய விமர்சனக் கவிதை பற்றிய அவரது விளக்கத்தைக் கேட்டபோது தான் அக்கவிதையை 2015இல் எழுதியதாகவும் ,அது போராட்டத்தை முள்ளிவாய்க்கால் அழிவில் கொண்டு வந்து நிறுத்தியதற்கான விமர்சனக் கவிதையென்னும் சாரப்படத் தன் கருத்தினை முன் வைத்தார் சாம்ராஜ். மேற்படி கவிதை எழுதப்பட்ட  காலம் மே 2009 என்று ஊடறு றஞ்சி குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வந்தது. மேற்படி பதிலில் தேடகம் மயில், சேனா மற்றும் எழுத்தாளர் எஸ்.கே.விக்னேஸ்வரன் ஆகியோர் பூரண திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை என்பதைப் பின்னர் அவர்களுடன் உரையாடியபோது உணர முடிந்தது.

நிகழ்வில் எழுத்தாளர்கள் ப.ஶ்ரீகாந்தன், அசை சிவதாசன், கனடா மூர்த்தி, எஸ்.கே.விக்னேஸ்வரன், குரு அரவிந்தன், தேவகாந்தன், சுமதி ரூபன், கலைஞர் திவ்வியராஜன், 'தாய்வீடு'ஆசிரியரும் நாடகக் கலைஞருமான திலீப்குமார், சமூக அரசியல் செயற்பாட்டாளர்களான ஜான் மாஸ்டர், யோக வளவன், அலெக்ஸ் வர்மா , தேடக நண்பர்கள் எனப் பலரைக் காண முடிந்தது.

நிகழ்வில் எழுத்தாளர்கள் சாம்ராஜ்,  காலம் செல்வம் ஆகியோரின் நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. நானும் ஐந்து கட்டடக்கா(கூ) முயல்கள் சிறுகதைத் தொகுப்பை வைத்திருந்தேன். நான்கு விற்பனையாகியிருந்தன. வாங்கியவர்களுக்கு என் நன்றி. மொத்தத்தில் காத்திரமாக நடந்து முடிந்த நிகழ்வு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.