இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினை தீவிரம் பெற்ற 1980களில் , இலங்கை தமிழ்ச் சூழலின்   கல்வி, அரசியல்,  சமூகம்,  இலக்கியத் தளங்களில் முன்னணியில் இருந்த ஆளுமைகளிலொருவராக மு. நித்தியானந்தன் இருந்தார். அந்தப் பெயர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக  அப்போது இருந்தது. அன்றைய சூழலில் இந்த பல்தளங்களில் நடந்த பல முக்கிய பணிகளுக்கு  நேரடியாகவும் , பகுதியாகவும் அவரது பங்களிப்பும் உழைப்பும் தலையீடும் இருந்து வந்திருக்கின்றன. அன்றைய சமகாலத்து முக்கிய ஆளுமைகளுடனும் அரசியல், சமூக, கலை இலக்கியப் போக்குகளுடனும் உறவும் உரையாடலும் செயற்பாடும் அவருக்கு இருந்திருக்கிறது. இந்த பெரும் ஆளுமை உருவாக்கம் அறிவாலும், தொடர்ச்சியான வாசிப்பாலும் தேடலாலும் , செயற்பாடுகளாலுமே சாத்தியமாகியது. அத்தகைய முக்கிய இருப்பு , இப்போதைய அவரது எழுபத்தைந்தாவது அகவை வரையும் தொடர்வது எல்லோருக்கும் வாய்த்துவிடும் பெறு அல்ல.

அவரைப்பற்றி எழுதுவதாக இருந்தால், ஒரு விரிவான நூலே எழுதி விட முடியும். அதற்கான விடயப்பரப்பும் பங்களிப்புக்குமுரிய வரலாறும் நம் கண்முன்னே உள்ளது. அந்தளவிலான விரிந்த இயக்கப் பரப்பு அவருடையது. தமிழ்கூறும் அறிவுலகம் தெரிந்து வைத்திருக்கும் , மதிக்கும் ஒரு ஆளுமை பற்றி  விரிவாக எழுத இந்த பகுதி அதற்கு இடம் வழங்காது!   எதைச் சொல்வது எதைத் தவிர்ப்பது  என்கிற  தெரிவு , அவரைப் பற்றி எழுதுவோருக்கு முன்னிருப்பது தவிர்க்க முடியாததே!

0000

மலையக, இந்திய வம்சாவளி அடையாளாத்தினை கொண்டிருக்கும் ஒருவர், இலங்கைத் தமிழ்ச் சூழலில் ஒரு முக்கிய ஆளுமையாக  மேற்கிளம்பி உரிய இடத்தை பெறுவதற்கு அடிப்படையாக இருந்தவை அவரது அறிவின் விகாசிப்பும் கற்றலுக்குமான அவரது அயராத தேடலுமேயாகும். அவர் தன்னை எப்போதுமே, மேல் நிலையாக்கம் பெற்ற ஒரு கல்வியலாளராகவோ, புத்திஜீவியாகவோ வெளிக்காட்டியதில்லை. இன்னொரு வகையில் சொன்னால் அவர் தன்னை, ஒடுக்கப்படும் மக்களுடனும் , ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்துக்களுடனும் , செயற்பாட்டுகளுடனுமே தன் வாழ்வின் முழுப்பகுதியையும் செலவிட்டு வந்துள்ளார். இந்த தேர்வுக்கு அவரது வாழ்வில் அவர் இழந்தவை அதிகம். இந்த இழப்புகளி இட்டு அவர் துயரமடையவுமில்லை, கலங்கி நிலை குலைந்ததுமில்லை என்பதை அவருடன் நெருக்கமாகப் பழகியோர் நன்கு அறிவர்.

 பாடசாலைக் காலத்திலிருந்தே கலை இலக்கியம், சமூகவியல் , அரசியல் துறைகளில் ஆர்வம் கொண்டிருந்த அவர், அமைப்பு ரீதியாக இடதுசாரி அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தார். காலனித்துவத்திற்குப் பின் இலங்கையில்  உருத்திரண்டு நிலைபெற்ற சிறுபான்மை மக்கள் மீதான சிங்கள பௌத்த தேசியவாதத்தின் ஒடுக்குதலை , ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மக்கள் அரசியல் போராட்டங்களின் வழியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதில் அவர் என்றும் உறுதியான நிலைப்பாட்டினைக் கொண்டவராக உள்ளார்.

ஒடுக்கப்படும் மக்கள் தொடர்பான அவரது உணர்வு, அறிவு , அரசியல் நிலைப்பாட்டின் அடிப்படையில்தான் அவர், இலங்கை மலையக மக்களின் சமூக, பொருளாதார, கலை, இலக்கியம் தொடர்பிலான முக்கியமான பணிகளை வரித்துக் கொண்டார். தன் சமூகம் சார்ந்து மட்டும் சிந்திக்காது இலங்கைத் தமிழ் மக்கள், முஸ்லிம்கள் என அனைத்து மக்கள்  மீதான அவரது கரிசனை ஆழமானது. தலித்துகள் , பெண்கள், அடிப்படை வசதிகள் மறுக்கப்பட்ட  அனைத்து மக்கள் மீதும் , உலகளவில் பரந்து  இருந்தமையை நாம் அவரது வாழ்வின் வழியே , அவரது கருத்துக்களின் வழியே கண்டு வந்திருக்கிறோம். எங்கு மக்கள் மீதான ஒடுக்குதல் நிகழ்கிறதோ  அங்கே அவரது ஆன்மா ஒடுக்கப்படும் மக்களின் ஆவேசமிகு இருப்பாக தனது ஒருமைப்பாட்டினை தழுவி நிற்கும்.  பல வருடங்களாக இங்கு லண்டனில் நடைபெறும் பல்வேறு அடையாள எதிர்ப்பு போராட்டங்களிமும், கூட்டங்களிலும் அவரது பிரசன்னமும் குரலும் இருக்கும். தான் மட்டும் கலந்து கொள்ளாது தனது துணை, மற்றும் இரு குழந்தைகளையும் பங்கு பற்றச் செய்யும் அவரது ஒருமைப்பாடு  விரிந்தது.

0000

1980 களில் இலங்கையில் தோன்றிய இனத்துவ அரசியல் காலத்தில் அவர் பல்கலைகழக ஆசிரியராக ,ஊடகவியலாளராக , கலை இலக்கிய விமர்சகராக , பதிப்பாளராக இருந்தார். கல்வி, அறிவுசார் பணிகளுக்குள்  மட்டும் தன்னை குறுக்கிக் கொள்ளாது , எந்தப் பல்கலைகழக ஆசிரியரும் செய்யாத துணிச்சலான நிலைபாட்டை எடுத்தமைக்காக 1982 இன்  இறுதிப் பகுதியில் அவர் இலங்கை அரசின் சிறைக்குள் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்குள்ளானார். 1983 ஜூலை சிறைப்படுகொலைகளை நேரடியாக கண்ட சாட்சியாளரானார்.  அவர் அன்று செய்த அரசியல் அர்ப்பணம் அவரது தனிப்பட்ட வாழ்வின் சௌகரியங்களை பாதித்தது.

இலங்கை பல்கலைக்கழகங்களிலோ, உயர் நிறுவனங்களிலோ  முக்கிய துறைகளில் பெரும் பதவிகளை வகிக்கக் கூடிய அறிவுசார் புலைமையைக் கொண்டிருந்தும் , இதன் வழியாக தன் தனிப்பட்ட வாழ்வை உயர்த்திக் கொள்ள வாய்ப்பிருந்தும் , அவர்  ஓடுக்கப்படும் மக்கள் மீது கொண்ட உறுதியான  அரசியல் நிலைப்பாடு காரணமாக இவைகளை புறம் தள்ளினார்.  சொந்த வாழ்வில் அவருக்கு கிடைத்திருக்கக் கூடிய பதவிகளையும் பொருளாதார வாய்ப்புகளையும் இழந்தார். இந்த தனிப்பட்ட இழப்புகளின் பின்னும், அவை பற்றிய  துயரமும், மனத் தடுமாற்றமும் இன்றுமே அவரிடம் இல்லை என்பது முக்கியமானது. இதற்கு வாழ்வு பற்றிய அவரது பார்வையும், ஒடுக்கப்படும் மக்கள்  மீதான தீரா நேசமுமே அடிப்படையானது.

தான் எடுத்த அரசியல் நிலைப்பாடு காரணமாக , தன் தனிப்பட்ட வாழ்வில் பெற்றிருக்கக்கூடிய நலன்களையும் சுகபோகத்தினையும் துறந்த அவர், சொந்த நாட்டில் வாழக் கூடிய உரிமையையும் இழந்தார். புலம்பெயர்ந்து தமிழகம், ஒல்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ்,  பிரித்தானியா என அகதியாக அலைந்துழலும் வாழ்வையும் ஏற்றுக் கொண்டார்!எந்த நாட்டில் இருந்தாலும் தனது  வாசிப்பினையும் செயற்பாட்டையும்  சிந்தனையையும் கிஞ்சித்தும் கைவிடாத ஒரு அறிவுசார் பங்களிப்பாளனாக அவர் தன்னை வெளிப்படுத்தி வந்திருப்பதையே அவரது பாதை நெடுகக் காண்கிறோம்!.

000

1987 இல் இருந்து புகலிட தமிழ் அரசியல்,  சமூக, கலை இலக்கியத் தளத்தில் அவரது பணி மிக ஆழப்பதிந்தது. புகலிட இலக்கிய சந்திப்பு அரங்குக்கும், அதற்கு வெளியிலும் பல்வேறு பங்களிப்புகளை அவர் வழங்கி உள்ளார். ஐரோப்பாவின் பல நாடுகளிலும் பல்வேறு நிகழ்வுகளிலும் இலங்கை, தமிழகம், புகலிட நாடுகளில் வெளிவந்த  பன்னூறு நூல்கள் பற்றிப் பேசியும் எழுதியும் உள்ளார். இந்த முக்கிய பணியைச் செய்த பங்களிப்பாளர் . அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.  அவர் ஒரு நூலைப் பற்றியோ, ஒரு விடயத்தினைப் பற்றி பேசுவதோ  அதிக சிரத்தை எடுத்ததாக இருக்கும். அதன் அடி ஆழத்திற்குள் சென்று விடயங்களை பேசும் அறிவும் ஆற்றலுடனும் ,  அறிவை சிந்தனையை தரவுகளை கேட்போருக்கு கொண்டு சென்று சேர்க்கக் கூடிய வல்லமை  அவரது உரைகளின் செப்பமாகும். அத்துடன் அந்த உரைகளில் இருக்கும் அங்கதம் மட்டுமல்ல, கடுமையான விமர்சனத்  தொனியும் மற்றொரு கூட்டுச் சுவையாகும்.  

000
இந்த வருடம் ஜனவரியில், நண்பர் எழுத்தாளர் , அரசியல் செயற்பாட்டாளர்   ரவிக்குமார் அவர்களுக்கு அவரது 60 வயதையொட்டி தமிழகத்தில் ” நூலறிவன் ” எனும் ஒரு கௌரவத்தினை வழங்கினர். நமது  தமிழ் புகலிடச் சூழலில் இப்படி அழைக்கக்கூடிய முழுத் தகுதியும் , வாழ்வும் தேடலும் கொண்டவர்தான் மு. நித்தியானந்தன் அவர்கள்.அனைத்தையும் விட புத்தகங்கள் மீதான  அவரது ஈடுபாடே   அவருக்கு முதன்மையானது.  இதனை பல வருடங்களாக நான் பார்த்து வருகிறேன்.  

 நம் காலத்தில் ,   நம்முடன்  மிகச் சாதாரணமான மனிதராக அவர் வாழ்ந்து  கொண்டிருக்கிறார். ஏழை பணக்காரன், கற்றவன் , கற்காதவன் ,  மேலானவர், கீழானவர் ,  மூத்தோர், இளையோர் என்கிற எந்தப் பாகுபாடுமின்றி பழகுவதற்கும் , எதையும் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கும், எதைப்பற்றி உரையாடவும், விவாதிக்கவும் ,  ஒரு பெரும் ஆளுமை  நம் அருகில்  இருக்கிறார் என்பது அவரது நட்பு வட்டத்திற்கு கிடைத்த மகத்தான  வாய்ப்பாகும்.

இறுதியாக, இப்படியான ஆளுமைகளை நமது தமிழ் அறிவுச் சூழல், சமூகத் தளம் எந்தளவு நேர்மையாக  எதிர்கொண்டுள்ளது,  அவர்களின் விரிந்த பணிகளுக்கும் பங்களிப்புகளுக்கும்  நாம்  செய்து   இருக்க வேண்டிய குறைந்த பட்ச மரியாதையை வழங்கி இருக்கிறோமா என்பதை ஒவ்வொருவரும் , சமூக மனிதராக கேட்டுப் பார்த்துக் கொள்வோம்! இந்த நிலை நமது தமிழ்ச் சூழலின் தீ ஊழ்!.