கடந்த இரண்டு வருடங்களாக எம்மை அச்சுறுத்தி வருகின்ற பெருந்தொற்றும் அதனூடாக எம்மீது திணிக்கப்பட்ட உள்ளிருப்பு வாழ்வும் எமது வாழ்வில் மட்டுமல்ல நாம் இயங்குகின்ற எமது சமூக, அரசியல், பண்பாட்டு தளங்களிலும் கூட பல்வேறுவிதமான மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தன. இப் பெருந்தொற்று காலகட்டத்தில் மாபெரும் வல்லரசுகள், அரசாங்கங்கள், மிகப் பணபலம் படைத்த பன்னாட்டு நிறுவனங்கள் கூட இயங்கமுடியாமல் முடக்கம் பெற்றிருந்த நிலையில் சமூக, பண்பாட்டு தளங்களில் இயங்கிய எமது சிறிய அமைப்புக்களும் முடங்கிப் போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. முக்கியமாக நேரடி நிகழ்வுகளாக நிகழ்த்தப்பட்ட இலக்கியக் கூடுகைகளும் பல்வேறு விதமான கலந்துரையாடல்களும் முடக்கம் பெற்று, அவை மெய்நிகர் நிகழ்வுகளாக காணொளி வாயிலாக நடைபெறும் நிகழ்வுகளாக மாற்றம் பெற்றன. இதனால் உள்ளூர் ஆளுமைகளைக் கொண்டே மட்டும் நிகழ்த்தப்படக் கூடிய நேரடி நிகழ்வுகள் ஆனது மெய்நிகர் நிகழ்வாக மாற்றம் பெற்ற போது அது உலகெங்குமுள்ள ஆளுமைகளை இலகுவாக ஒன்றிணைத்து மாபெரும் கூடுகைகளாக இடம்பெற்றன. இது இந்நிகழ்வுகள் குறித்த ஒரு முக்கியமான நேர்மறை அம்சமாகும். இது போன்ற பல்வேறு நேர்மறை அம்சங்களினாலும் மக்களிடையே பலத்த வரவேற்பினை பெற்றிருந்த இம்மெய்நிகர் நிகழ்வுகளானது காலப்போக்கில் கட்டுக்கடங்காமல் வரம்பு மீறிப் பல்கிப் பெருகியமையாலும், அனுபவங்கள் அற்ற, ஆளுமைகள் அற்ற பலரும் இதனை செய்ய தலைப்பட்டமையாலும் இந்நிகழ்வுகளில் காத்திரத் தன்மை மறைந்து, பெறுமதியற்ற நிகழ்வுகளாக மாறிப் போய் விட்டிருந்தது. அத்துடன் இந்நிகழ்வுகளில் பங்கேற்ற பலரது அசிரத்தையானதும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும் கூட இந்நிகழ்வுகளை மிகவும் கேலிக் கூத்தாக மாற்றிப் போட்டு விட்டிருந்தது. இந்நிலையில் நேரடி நிகழ்வுகள் இனிமேலும் நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பினை பலரின் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தன.

இந்நிலையில் உள்ளிருப்பு விதிகளில் கொஞ்சம் தளர்வுகள் ஏற்பட்ட நிலையில் இலண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘திரள்’ அமைப்பினர் 23.10.2021 சனிக்கிழமை அன்று எழுத்தாளர் பாமரன் எழுதிய ‘பகிரங்கக் கடிதங்கள்’ என்ற நூல் அறிமுகவிழவினை நேரடி நிகழ்வாகச் செய்தி ஒரு உடைப்பினை ஏற்படுத்தியிருந்தனர். திரள் அமைப்பானது மிக அண்மையில் சுமார் 2 வருடங்களுக்கு முன்பு மட்டுமே உள்ளிருப்புக் காலகட்டத்தில் உருவாகியிருந்த ஓர் இளைய அமைப்பாகும். மெய்நிகர் நிகழ்வுகளின் ஊடாகவே தம்மமை அறிமுகம் செய்து கொண்டு கலை, இலக்கியத் தளத்தில் கால் பதித்த இவர்கள், நேரடி நிகழ்வுகளில் எந்தவித அனுபவங்களும் அற்றிருந்த போதிலும் இப்படி நேரிடையாகவே முதன் முதலில் இந்நூல் அறிமுக விழாவினைச் செய்திருந்தது உண்மையில் ஒரு ஆச்சரியமான விடயமே. அதன் பின் திரள் அமைப்பினரே 04.12.2021 அன்று இயக்குனர் ஆனந்தரமணனின் 'ஆறாம் நிலம்' திரைப்படத்தை திரையிட்டு அது குறித்து கலந்துரையாடல் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர். மேலும் அவர்கள் 05.02.2022 அன்று ரூபன் சிவராசாவின் ‘எழுதிக் கடக்கின்ற தூரம்’ கவிதா லட்சுமியின் ‘சிகண்டி’ என்ற 2 கவிதைத் தொகுப்புக்களையும் அறிமுகம் செய்து மற்றைய அமைப்பினருக்கும் இனி எந்தவித தடங்கலுமின்றி நேரடி நிகழ்வினை நடாத்தலாம் என்ற சமிக்ஞையினை வழங்கியிருந்தனர்.

இதனையடுத்து கடந்த 18 வருடங்களாக வருடந்தோறும் குறும்பட விழாக்களையும் நாவல் அரங்கு, கவிதை அரங்கு என்று பல்வேறு நூல் அறிமுக விழாக்களையும் நடாத்தி வந்து, இந்த உள்ளிருப்புக் காலகட்டத்தில் எந்த செயற்பாடுகளும் அற்று முடங்கிப் போயிருந்த, ஓவியர் கே.கிருஷ்ணராஜாவை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு இயங்கும் விம்பம் கலை, இலக்கிய அமைப்பினர், 16.04.2022 அன்று East Ham, Trinity Centre இல் நூல் அறிமுக விழாவொன்றினை ஏற்பாடு செய்திருந்தனர். சாரல் நாடனின் 'வானம் சிவந்த நாட்கள்' செ.வே.காசிநாதனின் 'விற்கின்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்' எனற இரு நூல்களையும் அறிமுகம் செய்வதற்காக அவர்கள் இந் நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்விற்கு என்னால் நேரடியாக சமூகமளிக்க முடியாமல் போயிருந்த போதிலும், நேரடியாக காணொளி வாயிலாக இந்நிகழ்வினைக் காணும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

நிகழ்வானது பேராசிரியர் மு.நித்தியானந்தனின் அறிமுகவுரையுடன் ஆரம்பமாகியது. அவர் தனதுரையை அண்மையில் காலமான பேராசிரியர் சோ.சந்திரசேகரம் மற்றும் பலரது அஞ்சலிகளுடன் ஆரம்பித்து, இந்த இரு நூல்கள் குறித்த சிறு அறிமுகங்களையும் செய்து வைத்தார். வழமையான அவரது மற்றைய உரைகளைப் போன்றே அவர் தனது இந்த உரையிலும் அரசியல், வரலாற்று, பண்பாட்டுத் துறைகளில் நாம் அறிந்திராத பல்வேறு தகவல்களையும் வாரி வழங்கினார்.

சாரல் நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’ குறித்து பேசும்போது அவர் அந்நூலின் பின் உள்ள வரலாற்றுச் சம்பவங்கள் குறித்து மிகவும் விலாவாரியாகப் பேசினார்.

'விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்' நூல் பற்றி அவர் குறிப்பிடும்போது ‘ ஈழத்திலோ தமிழகத்திலோ இதுவரை விற்கன்ஸ்ரைன் குறித்து யாரும் பேசியது கிடையாது. இவர் எமதுசமூகதிற்கு முற்றிலும் புதிதானவர்’ என்று குறிப்பிட்டார். இது ஓரளவு உண்மையாக இருந்தபோதிலும் தமிழகத்தில் பேராசிரியர் பன்னீர்செல்வம் என்பவர், இவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவத்துறையில் பேராசிரியர் ஆக இருந்து ஒய்வு பெற்று, தற்போது அகில இந்திய தத்துவ மகாசபையில் பொதுச் செயலாளராகவும் பணி புரிந்து வருபவர், மிக அண்மைக்காலமாக விற்கன்ஸ்ரைன் குறித்து அதிகம் பேசியும் எழுதியும் வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் முதலாவது அமர்வாக சாரல்நாடனின் ‘வானம் சிவந்த நாட்கள்’ நூல் அறிமுகமானது மீனாள் நித்தியானந்தன் தலைமையில் இடம்பெற்றது. இந்நூலிற்கான அறிமுக உரைகளை கோகுலரூபன், கவிஞர் நா.சபேசன், பாரதி சிவராசா ஆகியோர் ஆற்றினர். உண்மையில் இவர்களது உரைகள் நூலை உடனடியாகவே வாங்கிப் படிக்கத் தூண்டும் வகையில் அமைந்திருந்தது. முக்கியமாக இவர்கள் அந்நூலை விட அந்நூலிற்கு மு.நித்தியானந்தன் எழுதிய 40 பக்க நீண்ட முன்னுரை குறித்தே சிலாகித்து பேசினார். இந்நிகழ்வினை பார்க்கும்போது நான் அந்நூலினை வாசித்திருக்கவில்லை. அதன் பின் அந்நூலை வாங்கி வாசித்தபோது அவர்கள் கூறியபடியே மு.நித்தியானந்தனின் ஒரு மிகச் சிறந்த, ஒரு ஆவணமாகப் பேணிப் பாதுகாக்கப் படவேண்டிய முன்னுரை ஒன்றினை எழுதியிருப்பதை அவதானிக்க முடிந்தது. இந்நாவல் குறித்து மதிப்பீடுகள் மட்டுமல்லாமல், இந்நாவளிற்கு பின்னால் உள்ள வரலாற்றுச் சம்பவங்கள், ஒரு வரலாறு புனைவாகும் போது கடைப்பிடிக்கப் பட வேண்டிய முக்கிய புள்ளிகள் எவை என்பன போன்ற விடயங்களை மிகத் தெளிவாகவும் அழகாகவும் விபரித்திருந்தார். உண்மையில் அவர் இன்று எம்மிடையே உள்ள விரல்விட்டு எண்ணக்கூடிய கல்விமான்களில் ஒருவர் மட்டுமல்ல, அடுத்த தலைமுறைக்குக் கடத்தப்பட வேண்டிய பல்வேறு தகவல்களையும் தன் விரல் நுனியில் வைத்திருப்பவர். இத்தகைய மிகப் பெரும் கல்விமானாகிய அவர் இனிமேலாவது எட்டாம் வகுப்புக் கூட தாண்டாத அற்பஜீவிகளின் சகவாசத்தை உதறித்தள்ளி, அவர்களின் உந்துதலினால மலினமான சச்சைகளில் ஈடுபடாமல் இது போன்ற அறிவுக் கருவூலங்களை அடுத்த தலைமுறைக்கு கடத்துகின்ற வகையில் தமது பணிகளைத் தொடர வேண்டும் என்பதே இவ்வேளையில் நாம் வைக்கும் விண்ணப்பமும் வேண்டுகோளும் ஆகும்,

அடுத்த அமர்வில் நவஜோதியின் தலைமையில் செ.வே.காசிநாதனின் 'விற்கன்ஸ்ரைன்: மொழி, அர்த்தம், மனம்' நூல் அறிமுகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நூல் குறித்து ராகவன் திரு.வேலு அவர்களும் ராகவன் அவர்களும் உரையாற்றினார்கள். இருவரும் நூலிற்குள் உள் நுழையாமல் வேறு விடயங்களைக் குறித்தே தமது உரைகளை நிகழ்த்தியது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்ததுடன் இவர்கள் விற்கன்ஸ்ரைன் பற்றியும் இந்நூல் குறித்தும் புரிந்து கொள்ள மிகவும் சிரமப்பட்டிருப்பதையும் எம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. அது ஒன்றும் குறையாகச் சொல்லப்பட வேண்டிய விடயம் அல்ல. ஏனெனில் விற்கன்ஸ்ரைன் தாம் வாழ்கின்ற காலத்திலேயே புரிந்து கொள்ளப்படாவர் என்று அறியப்பட்ட பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கிய ஒரு விந்தை மனிதர். அவர் தனது முதல் நூலாகிய The Tractatus Logico-Philosophicus இனை பதிப்புக்கும்போது பதிப்பாளர்களின் வற்புறுத்தலின் பேரில் அன்றைய மாபெரும் தத்துவமேதையும் அவரது ஆசிரியருமாகிய பெட்ரண்ட் ரசலிடம் முன்னுரை வாங்கிப் போடுகிறார். அன்றைய தத்துவவாதியான ஜி.ஈ.மூரும் இவரது நூலைப் பெரிதும் பாராட்டுகின்றார். பின்னர் 10, 12 வருடங்கள் கழித்து அந்த நூலைப் பற்றி விற்கன்ஸ்ரைன் குறிப்பிடும்போது பின்வருமாறு சொல்கிறார். “என்னுடைய The Tractatus Logico-Philosophicus நூலைப் புரிந்து கொள்ள முயற்சித்தவர்கள் இருவர். ஒருவர் பெட்ரண்ட் ரசல். இன்னொருவர் ஜி.ஈ.மூர். ஒருவர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டுள்ளார். இன்னொருவர் என்னைப் புரிந்து கொள்ளவேயில்லை.” இதன்படி விற்கன்ஸ்ரைன் மாபெரும் தத்துவ மேதைகளினாலேயே புரிந்து கொள்ளப்பட முடியாத ஒரு மனிதராக, அல்லது தன்னை எந்த ஒரு மேதைகளினாலும் கூட புரிந்து கொள்ள முடியவில்லை என்ற இறுமாப்பு கொண்ட மனிதராக நாம் வரையறுத்துக் கொள்ளலாம். காசிநாதனின் இந்நூல் கூட அப்புரிதலை இன்னும் சிக்கலாக்கும் வகையில் எழுதப்பட்டிருப்பதனையும் இந்நூலை வாசித்தபோது எம்மால் அவதானிக்க முடிந்தது. ஒருவேளை விற்கன்ஸ்ரைன் இன்று உயிருடன் இருந்திருந்தால் அந்தப் புரிந்து கொள்ளாதவர் வரிசையில் செ.வே. காசிநாதனையும் சேர்த்துக் கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இவ்விரு நூல்களின் அறிமுக நிகழ்விற்குப் பின்பாக விம்பம் அமைப்பினர் ‘கவிதை வனைந்த உலகு’ என்ற பதாகையின் கீழ் 5 கவிதைத் தொகுப்புக்களை அறிமுகம் செய்த நிகழ்வொன்றினையும் திரள் அமைப்பினர் சாவித்திரி அத்துவிதானந்தன் எழுதிய ‘போரும் வலியும்’ நூல் அறிமுக நிகழ்வொன்றினையும் நடாத்தியதாக எம்மால் அறிய முடிகின்றது. இதற்குமப்பால் இந்த உள்ளிருப்புக் காலகட்டத்தில் தமிழ் மொழி செயற்பாட்டகம் என்று பெயர் மாற்றம் அடைந்த தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகத்தினரும் புத்தகக் கண்காட்சி ஒன்றினை நடாத்தியதும் இங்கு முக்கியமாக குறிப்பிடத்தக்கது. இப்படியாக நேரடி நிகழ்வுகள் இலண்டனில் மீண்டும் களை கட்ட ஆரம்பித்திருப்பது ஒரு நம்பிக்கையினையும் மகிழ்ச்சியினையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ள போதிலும், இந்நிகழ்வுகளிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருப்பதினையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், உரையாற்றுபவர்கள், நெறிப்படுத்துபவர்கள் தவிர ஒருவர் அல்லது இருவர் மட்டுமே சமூகமளிக்கும் கசப்பான உண்மையை இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சொல்லும்போது மனதிற்கு மிகவும் வேதனையை அளிகின்றது. இதற்கு 2 வருடங்களுக்கு முன்பு உள்ளிருப்புக் காலகட்டத்தில் இலண்டன் இலக்கிய சமூகமானது தேவையற்ற சச்சைகளில் ஈடுபட்டு அவதூறுகளை ஒருவர் மீது ஒருவர் அள்ளி வீசி இரண்டாகப் பிளவடைந்ததும், இன்று அது பல்வேறு குழுக்களாகச் சிதறி இருப்பதும் ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இனிமேலாவது இது போன்ற சமூக செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல்லெறிவது போன்ற தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபடாமல் சமூகத்தை முன்னோக்கித் தள்ளும் வகையில் தமது செயற்பாடுகளை மேற்கொள்ளவேண்டும் என்பதே இக்காலகட்டத்தில் நாம் வைக்கும் விண்ணப்பமும் வேண்டுகோளும் ஆகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.