புத்தகத் திருவிழா என்றதும் பழைய ஞாபகங்கள் சில காட்சியாய் மனதில் ஓடின. எங்க மாணவப் பருவத்தில் இலக்கிய ஆர்வமுள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் சிறிய நூலகம் கட்டாயம் இருக்கும். அது அறை முழுவதும் பரப்பப்பட்டும் இருக்கும், அல்லது ஒரு அலுமாரிக்குள் அடங்கியதாகவும் இருக்கும். பாடசாலைகளிலும், சனசமூக நிலையங்களிலும் நூலகங்கள் இருந்தன. வீடு தேடியும் இதழ்கள் வரும். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டு எங்கள் அடையாளங்களை அழிக்க முற்பட்ட சம்பவங்களும் அவ்வப்போது நினைவில் வந்து போகும். வாசிப்பு என்பது எங்கள் பெற்றோர்கள் எங்களுக்குத் தந்த கொடைகளில் ஒன்றாகும்.

சின்ன வயதில் இருந்தே சிறுவர் இலக்கியத்தில் இருந்து சிறந்த புத்தகங்களை தேர்ந்தெடுத்துத் தந்ததால் நாங்களும் வாசிப்புக்கு அடிமையாகி விட்டிருந்தோம். அம்புலிமாமா, கண்ணன், மஞ்சரி, கல்கண்டு போன்ற புத்தகங்கள் கிடைத்தன. வளர்ந்ததும் எங்களுக்குப் பிடித்தமான நூல்களை நாங்களே தெரிவு செய்து வாசித்தோம். இன்று தமிழ் உலகறிந்த ஒரு எழுத்தாளனாக என்னை மாற்றியது வாசிப்பு மூலம் எனக்குக் கிடைத்த அனுபவமும் எனது வாசகர்களும்தான். இம்முறையும் சென்னை புத்தகக் காட்சியில் எனது புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காட்சி, கனடிய எழுத்தாளரான எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. கடைசியாக நடந்த சென்னை புத்தகக் காட்சியில் ‘என்ன சொல்லப் போகிறாய்?’, ‘சொல்லடி உன் மனம் கல்லோடி?’ ஆகிய இரண்டு நாவல்களும் வெளியிட்டு வைக்கப்பட்டிருந்தன.

45வது சென்னை புத்தகக் கண்காட்சி சென்ற பெப்ரவரி மாதம் சென்னையில், நந்தனத்தில் உள்ள வை.எம்.சி.ஏ மைதானத்தில் சிறப்பாக ஆரம்பமானது. இந்தப் புத்தகக் காட்சியை தமிழக முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மா.சுப்ரமணியன், கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வின் போது மொழி மாற்றம் செய்யப்பட்ட சில நூல்களையும் முதல்வர் வெளியிட்டு வைத்தார். ‘திசைதோறும் திராவிடம்’ என்ற இந்தத் திட்டத்தின் படி தமிழ் மொழியில் இருந்து திராவிட மொழிகளுக்கும், திராவிட மொழிகளில் உள்ள சிறந்த நூல்களை இனம் கண்டு தமிழ் மொழிக்கும் மொழி மாற்றம் செய்து வெளியிடுவதே இதன் முக்கிய நோக்கமாகும். திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற சிறந்த தமிழ் நூல்களும் இத்திட்டத்தில் இடம் பெற்றிருக்கின்றன.

தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்கள், மற்றும் எழுத்தாளர்கள், வாசகர்கள் இணைந்து சென்னையில் வருடந்தோறும் புத்தகக் காட்சியை நடத்தி வருகின்றார்கள். முதலாவது புத்தகக் காட்சி 1977 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதல் புத்தகக் காட்சியில் 22 விற்பனைக் கடைகள் மட்டுமே இருந்தன. இந்த வருடம் தை மாதம் நடக்க இருந்த புத்தகக் காட்சி கோவிட் - 19 காரணமாகப் பிற்போடப்பட்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 6 ஆம் திகதிவரை நடைபெற்றது. 19 நாட்கள் இந்த நிகழ்வுகள் இடம் பெற்றது. கைக்குழந்தைகளைக் கொண்டு வரவேண்டாம் என்றும், கட்டாயம் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது. விற்பனை நிலையங்கள் தினமும் காலை 11 மணி தொடக்கம் இரவு 8 மணிவரை திறந்து வைக்கப்பட்டிருந்தன. சுமார் 790 அரங்குகளில் 1,000,000 மேற்பட்ட தலைப்புகளைக் கொண்ட புத்தகங்கள் விற்பனைக்கும், காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன. சுமார் 500 பதிப்பகங்கள் இதில் பங்கேற்றன. மாணவர்கள் தமது அடையாள அட்டையைக் காட்டிக் கட்டணமின்றி செல்லக்கூடிய வசதிகளும் ஏற்படுத்தப் பட்டிருந்தன.

மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்தோடு திறன்வளர் போட்டிகளான பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி போன்றவையும் இடம் பெற்றன. கவிஞர் முத்துலிங்கம் தலைமையில் ஆறு கவிஞர்கள் கலந்து கொண்ட கவியரங்கமும் இடம் பெற்றது. நாஞ்சில் சம்பத், மணிகண்டன், பேராசிரியர் ஞானசம்பந்தன் உட்படப் பல இலக்கிய ஆர்வலர்களின் உரைகளும் இந்த நிகழ்வில் இடம் பெற்றன. சுமார் 12 லட்சத்திற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் புத்தகக் காட்சிக்கு வருகை தந்ததாகத் தெரிகின்றது. இதில் ஆன்லைன் மூலம் 20,000 மேற்பட்ட அனுமதிச் சீட்டுக்கள் இம்முறை விற்பனை செய்யப்பட்டன.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.