எமது கனடா கவிஞர் கழகமானது ஒவ்வொரு மாதத்தின் கடைசிக் கிழமையிலும் தமிழறிஞர்கள், படைப்பாளிகள் மற்றும் கலைஞர்களை அழைத்து மெய்நிகர் வழியாகச் சிறப்புரைகளையும், கலந்துரையாடல் களையும் நடத்தி வருகின்றது. அதன்படி, சென்ற செப்ரெம்பர் மாதம் இருபத்தைந்தாம் திகதி சனிக்கிழமை எமது கழகத்தின் இணைய வழிக் கலந்துரையாடல் காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரை இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரபல எழுத்தாளரும், கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவருமான குரு அரவிந்தன் அவர்களின் ‘சிறுகதை எழுதுவது எப்படி?’ என்ற பயிற்சிப்பட்டறை இடம் பெற்றது. முதலில் கழகத்தின் தலைவர் திரு. கந்த ஸ்ரீ பஞ்சநாதன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து பொருளாளர் திரு. குமரகுரு. கணபதிப்பிள்ளை அவர்கள் எழுத்தாளர் குரு அரவிந்தனை அறிமுகம் செய்து வைத்தார்.

அடுத்து ‘கவிஞர்களும் எழுத்தாளராகலாம்’ என்ற தலைப்பில் குரு அரவிந்தன் சிறுகதை எழுவது எப்படி என்பது பற்றியும், ஏன் அதிக மக்களால் சிறுகதைகள் வாசிக்கப்படுகின்றன என்பது பற்றியும் விளக்கங்களைத் தந்தார். சிறுகதையின் தொடக்கம், அதன் வளர்ச்சி, இன்றைய நவீன சிறுகதைகள் பற்றி உதாரணங்களையும் இலகு நடையில் எடுத்துச் சொன்னார். மேலும் அவர் தனது உரையில் சிறுகதைகள் எவ்வாறு எழுதப்படவேண்டும் எனவும், அவை எவ்வாறு வாசகர் உள்ளங்களைச் சென்றடையும் என்னும் பொருளிலும் பின்வரும் வழி முறைகளை எடுத்துச் சொன்னார்.

அழகான தலைப்புடன் கதை இருந்தால் வாசகர்களை உடனே கவரும், அதற்கு ஏற்றது போல ஓவியம் அல்லது படம் இருந்தால் இன்னும் நன்றாக அமைவதோடு, இலகு நடையும் உண்மைத் தன்மையும் இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பொதுவாக ஐந்து அல்லது ஆறு பக்கங்களில் சிறுகதை அமைவது நல்லது என்றும், சிலவற்றை ஒரு பக்கத்திலும் முடிக்கலாம் என்றும், கற்பனைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, அதேவேளை உண்மையான சம்பவமாக இருக்குமிடத்து, கதாபாத்திரங்கள், இடங்களின் பெயர்கள் மாற்றப்பட வேண்டுமெனவும், வாசகர்கள் நம்பும்படியாக சூழ்நிலைகள் அமைய வேண்டுமெனவும், கருப்பொருளோடு கதையானது ஒத்துப் போக வேண்டுமெனவும், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற ஆவலை வாசகரிடத்தில் தூண்டுவதாக அமைய வேண்டுமெனவும் கூறியதுடன், மேலும் பல விதி முறைகளையும் மொழிந்தார். எழுத்துநடை மிகவும் முக்கியம் என்றும், வாசகர்களுக்காகவே எழுதப்படுவதால், அவர்களுக்கு கதைபிடித்திருந்தால் அவர்கள் உங்கள் வாசகர்களாகி விடுவார்கள் என்பதையும் கூறினார்.

மேலும் அவர் தனது உரையின்போது, முந்திய காலங்களில் படைப்புக்கள் ஏடுகளிலும், தாள்களிலும் கையால் எழுதியே அச்சகத்துக்கு அனுப்பப்பட்டு வந்தன என்றும், இன்று இந்த முறைகள் நீங்கித் தற்போது தொழில் நுட்ப வசதிகள் இருப்பதால், படைப்புக்களின் தொகை அதிகரித்ததோடு வாசகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்றும் நவின்றார்.

தனது படைப்புக்களான ஈழ யுத்தம், முதல் காதல் கதைகள் வரை வெளிவந்த நூல்களைக் குறிப்பிட்டார். அவரது நூல்களான 'என் காதலி ஒரு கண்ணகி', சதிவிரதன், தங்கையின் அழகிய சிநேகிதி, நீர் மூழ்கி நீரில் மூழ்கி, அம்மாவின் பிள்ளைகள், எங்கே அந்த வெண்ணிலா?, உறங்குமோ காதல் நெஞ்சம்?, உன்னருகே நான் இருந்தால் போன்ற சில சிறுகதை தொகுப்புக்கள், மற்றும் நாவல்களின் பாத்திரங்கள் பற்றியும் குறிப்பிட்டார். இவரது ‘சொல்லடி உன் மனம் கலலோடி’ என்ற நாவல் ‘சிவரஞ்சனி’ என்ற பெயரில் படமாக்கப்பட்டதையும் குறிப்பிட்டார். அவற்றுக்கு கிடைத்த விருதுகள், பரிசில்கள், அவை வெளி வந்த இதழ்கள், ஏடுகளின் விபரங்களையும் எடுத்துச் சொன்னதோடு, நாமும் இவ்வாறு ஆக்கங்கள் புனைய வேண்டுமென்றும், கவிஞர்களான எமக்கு இது மிகவும் இலகுவானது என்பதோடு, சில வரிப் பாடல்களையும் இவற்றில் சேர்த்துக் கொள்ளலாமென்றும் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார்.

இதைத் தொடர்ந்து வாசகர்களுடனான கலந்துரையாடல் இடம் பெற்றது. வாசகர்கள் கேட்ட வினாக்களுக்குக் குரு அரவிந்தன் மிகத் தெளிவாகப் பதில்கள் தந்தார். ஆர்வம் உள்ளவர்கள் சிறுகதைகளை எழுதிச் செயலாளரிடம் கொடுத்தால், கனடா கவிஞர்கள் எழுதிய முதல் சிறுகதைத் தொகுப்பாக அதை வெளியிடமுடியும் எனவும் குறிப்பிட்டார். தமிழர்கள் ஆவணப்படுத்துவதில் எப்பொழுதும் பின்தங்கியே நிற்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி, இது போன்ற ஆவணங்களை ஒன்றுபட்டுக் கூட்டாக வெளியிடுவதால், புலம் பெயர்ந்த இந்த மண்ணில் எமது இருப்பை அடுத்த தலைமுறைக்குத் தெரியப்படுத்தப் பெரிதும் உதவியாக இருக்கும் என்பதையும் தெரியப்படுத்தினார். இதைத் தொடர்ந்து கழகத்தின் செயலாளர் திருமதி பவானி தர்மகுலசிங்கம் அவர்கள் நன்றி உரையுடன் இணைய வழிக் கலந்துரையாடல் இனிதே முடிவுற்றது.

அனுப்பியவர்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.