முதல் முறையாக உலகவாழ் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்வு லண்டன் வோட்டஸ்மித் மண்டபத்தில, ‘கிரிபின் கல்லூரி சர்வதேச கல்விப் பேரவை நுண்கலைத் தெரிவு ஆணைய’த்தினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்டது.

‘ஆச்சாரிய கலாசாகர விருது', ‘நிர்த்திய சிரோன்மணி விருது’, ‘நாட்டிய கலா விபஞ்சி விருது’, ‘கான கலாதரர விருது’. ‘வாத்திய கலாதரா விருது’. ‘சங்கீத இரத்னா விருது’ போன்ற விருதுகளை விழங்கி கௌரவித்திருந்தனர். தமது வாழ்நாளில் கலைச் சாதனைகளைப் புரிந்தவர்களுக்கும், இசை, நடனம். வாத்தியக் கலைஞர்களுக்கும் அவரவர்களின் கலைத் துறைகளின் திறமைகளுக்கேற்ப கௌரவிக்கப்பட்டிருந்தனர்.

பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்த மருத்துவத் துறைப் பேராசிரியர் திரு. நிர்மலன் மகேசன் அவர்கள் தனது பிரதமர் உரையின்போது: ‘கனவுகள் நனவாகின்றன என்று அன்றைய கலை நிகழ்வுகளைப் பார்த்து பரவசப்படுவதாகவும், 1993, 1994 ஆம் ஆண்டுக் காலப்பகுதிகளில் கொழும்பு வைத்தியசாலையில் பணிபுரிந்த காலத்தில் அளவெட்டி எம்.கே.பத்மநாதனின் நாதஸ்வர இசையில் தான் கரைந்து போனதை எடுத்துரைத்துப் பேசியிருந்தார். அக்கலைஞன் தன் நலிந்த, மெலிந்த, தளர்ந்த நிலையிலும் அவரின் சகோதரர்களுடன் அவர் அக்கலையை முன்னெடுத்த சேவையை நினைவிருத்தியிருந்தார். அந்த வகையில் இங்கிலாந்தில் நாதஸ்வர இசையோடு கலைப் பாரப்பரியங்கள் மாறாமல் புதிய தலைமுறைக்கு ஏற்றமுறையில் கலை மறுமலர்ச்சியின் முக்கிய மயிற் கல்லாக இவை திகழ்கின்றன. மாணவர்களுக்கு கலைக்கல்வி பல்கலைக் கழகத்திற்குத் தர மதிப்பீடுகள், பல்கலைக்கழகம் போவதற்காக மட்டுமல்ல ஆத்மீகத்தை வெளிக்காட்டுவதற்கும் கலைகள் பங்களிப்பு செய்ய வேண்டும்’ என்று ஆழமான கருத்துக்களை முன்வைத்துப் பேசியிருந்தார்.

‘கிரிபின் கல்லூரி’யின் நிர்வாகத்தின் நிறுவனர் கலாநிதி திருமதி. பத்மா ராகுலன், இயக்குநர் திரு. நாதன் ராகுலன் மற்றும் கவுன்சிலர் பரம் நந்தா, உலகளாவிய செயற்பாட்டாளர் திருமதி. சுகந்தினி சுதாகரன், உலகளாவிய நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் செல்வி சஸ்கியா யோகராஜா ஆகியோரின் கடின உழைப்பையும்’ மேலும் பாராட்டிப்; பேசியிருந்தார்.

‘கிரிபின் கல்லூரி’ கடந்த மூன்று வருடங்களாக நடனம், சங்கீதம், பக்கவாத்தியங்கள் என பதினாறு பாடங்களுக்கு பல்கலைகழகங்களுக்கான மேலதிக இணைப்புப் புள்ளிகள் அடங்கிய தரப் பரீட்சைகளுக்கான சான்றிதழ்களை வழங்கி வருகின்றது. அறுபத்திமூன்றுக்கும் மேற்பட்ட நாடுகளில்; கிரிபின் கல்லூரியின் பரீட்சைச் சான்றிதழ் அங்கீகாரம் பெற்றிருக்கிறது என்பதும் நல்ல செய்திகளாகும்.

கொரோனாவின் தொற்றை மீறிய கலைப்பற்றோடு பல நாடுகளில் இருந்து வந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளும் மிகச் சிறப்பாகவே காணப்பட்டது. தொடர்ந்து இம்முயற்சிகள் உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட இருப்பதுவும் பாராட்டப்படுவதோடு, வரவேற்க வேண்டியதொன்றாகும்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.