[ தமிழ் மொழிச் செயற்பாட்டகம் சார்பில் இலண்டனில் நடைபெறவுள்ள எழுத்தாளர் மு.தளையசிங்கம் பற்றிய மீள்வாசிப்பு பற்றிய நிகழ்வு  பற்றிய , பதிவுகள் இணைய இதழில் வெளியான, எழுத்தாளர் பெளசரின் அறிவிப்பினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன்.
இலங்கையின் தமிழ் இலக்கியச் சூழலைப் பல்வேறு பிரிவுகளாகக் கோட்பாடுகள் வாயிலாக, காலகட்டம் வாயிலாகப் பிரித்தாலும், அவற்றை மேலும் பல உப பிரிவுகளாகப் பிரித்தாலும், அவற்றில் மூன்று காலகட்டங்கள் முக்கியமானவை: முற்போக்கு, நற்போக்கு மற்றும் பிரபஞ்ச யதார்த்தவாதம்.  இம்மூன்றின் மூலவர்களாக நான் அ.ந.கந்தசாமி, எஸ்.பொன்னுத்துரை மற்றும் மு.தளையசிங்கம் ஆகியவர்களையே  குறிப்பிடுவேன்.

மு.த மகத்தான ஆளுமை என்பதில் சந்தேகமில்லை. என்னைப்பொறுத்தவரையில் அவர் தனது நூலான 'ஏழாண்டு இலக்கிய வளர்ச்சி' நூலில் பாவித்துள்ள சொற்பதங்களில் (தாழ்த்தப்பட்ட சமூகங்களின் இலக்கியம் பற்றிய கருத்துகள்) உடன்பாடில்லையென்றாலும் நிஜவாழ்வில் அவர் அவ்விதமான சொற்பதங்களுக்கேற்ப வாழவில்லையென்பதையும் அறிந்து மதிக்கின்றேன். அச்சொற்பதங்களைப்பாவிக்காமல் அவர் சிறப்பாக அந்நூலிலுள்ள கட்டுரைகளை எழுதியிருந்தால், அந்நூல் முக்கியமான இடத்திலிருந்திருக்கும். இவ்விதம் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கும் நிலையில் இருந்திருக்காது.

இவரும் தனது குறுகிய வாழ்வில் மறைந்து விட்டார். தனது சமூக,அரசியற் செயற்பாடுகளுக்கேற்ப வாழ்ந்ததாலேயே அவரும் மரணத்தைத்தழுவியதாகவும் அறியப்படுகின்றது.

அவரைப்பற்றி அறிய முயற்சி செய்பவர்கள் கூடுதலாக மு.பொ.வின் பிரபஞ்ச யதார்த்தவாதம் என்றால் என்ன? அது கூறும் தத்துவம் என்ன? என்பவற்றில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். உண்மையில் மார்க்சியமும், மதங்களும் மனிதர்களின் அனைத்துப்பிரச்சினைகளுக்குமான விடுதலைக்குத்தான் தமது கோட்பாடுகளுக்கேற்ப வாதங்களை முன் வைக்கின்றன. பிரபஞ்ச யதார்த்தவாதம் என்பது மு.பொ.  மார்கசியத்தை உள்வாங்கி, அதனைத் தனது பார்வையில் மேலும் தர்க்கங்களுக்கு உள்ளாக்கி, இன்னுமொரு தத்துவத்தை முன் வைக்கின்றார். அது சரியா தவறா என்பதற்கப்பால் , அந்த அவரது தர்க்கச்சிறப்புள்ள சிந்தனைதான் முக்கியமானது. மு.த.வை அறிந்துகொள்வதற்கு அவரது பிரபஞ்ச யதார்த்தவாதக் கோட்பாடுகளை அவர் எவ்விதம் மார்க்சியத்திலிருந்து வந்தடைந்தார் என்பதைப்புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு அவரது அக்கோட்பாடு பற்றிய கட்டுரைகளிலேயே முக்கிய  கவனம் செலுத்த வேண்டும். அதன் பின்பே அவரது படைப்புகளில் கவனத்தைக் குவிக்க வேண்டும். இதுவே எனது பார்வை.

ஒரு மனிதரின்  பங்களிப்பினையும்  பாத்திரத்தினையும் மதிப்பிட , அவரது   திறந்த வாழ்வையும்   மரணத்தினையும் விட- உங்களுக்கு வேறு சாட்சியங்கள் ஏதும் வேண்டுமா? - வ.ந.கிரிதரன் -


மு.தளையசிங்கத்தினை தெரிந்து கொள்ள......  14ம் திகதிய உரையாடலுக்கான தொகுப்பு- 03 - பெளசர் -

ஒரு மனிதரின்  பங்களிப்பினையும்  பாத்திரத்தினையும் மதிப்பிட , அவரது   திறந்த வாழ்வையும்   மரணத்தினையும் விட- உங்களுக்கு வேறு சாட்சியங்கள் ஏதும் வேண்டுமா?  

மொழியின் சொற்கள் உண்மையாக இருக்க வேண்டுமா ? என்கிற கேள்வியைப் பற்றி பலர் பேசுவதே இல்லை. அதிலும் தமிழ்  மொழியில் பேசப்படும், எழுதப்படும் சொற்களில் உண்மை கட்டாயமாக அவசியம் இல்லை என்பது , உண்மையிலும் உண்மை. இது தமிழ் மொழி பற்றிய பார்வை ! பல் வருடங்களாக தமிழ் மொழியில் எழுதப்படும் இலட்சக்கணக்கான பக்கங்களை படித்தாலும் , சமகாலத்தில் படித்தாலும் , மொழிக்கு இலக்கணம் தேவை என வாதிடுவோர் இருப்பர், மொழியின் சொற்களுக்கு உண்மை  கட்டாயமாக இருக்க  வேண்டுமென வாதிடுவோர் , வலியுறுத்துவோர்  மிக மிகக் குறைவு. அதுவும் புகழ்ந்தும் , இகழ்ந்தும் எழுதப்படும் பிரதிகளில் , மொழியின் சொற்களில் உண்மை  முழுவதுமாக வாழ்வதில்லை.

ஆக இந்த வார்த்தைகள்,  எழுத்துகளுக்கு அப்பால், ஒரு மனிதரைப்பற்றியான உண்மைகளை  நாம் பெருமளவில் அவரது வாழ்விலிருந்தும் மரணத்தில் இருந்துமே காண முடியும். மு.தளையசிங்கத்தினை நாம் வாசிக்கவும், மதிப்பிடவும், அவரைத் தேடவும் அவரது வாழ்வையும் மரணத்தினையும் பேச வேண்டி உள்ளது. அவரது வாழ்வு 38 வருடங்கள், எழுத்து , செயற்பாடு என்பது கிட்டத்தட்ட 15 வருடங்கள் . 38 வயதில் துன்பகரமான மரணம்.

000

அவருக்கு மரணம் நிகழக் காரணமாக இருந்த  விடயங்கள்  , அவரை நிரூபிக்கவும் மதிப்பிடவும் ஏற்கவும், ஏன் கொண்டாடவும் போதுமானவை. ஆனால் துரதிருஷ்டவசமாக அவரது இடம், அரசியல் கருத்து நிலைகளாலும் , அறிவுச் சூழல் போட்டியாலும் இருட்டடிப்பு செய்யப்பட்டு, ஒதுக்கப்பட்டு, போலி வார்த்தைகளால் திசை திருப்பட்டு , அவரை முடித்து வைத்து விட்டார்கள். இதனால் அன்று அவர் பரவலாக வாசிக்கப்படவில்லை, பின்னர் இளைய தலைமுறையினருக்கும் அவர் தெரிய வரவில்லை.

இதற்கு காரணமாக இருந்த பிரிவினர் மு.தளையசிங்கத்திற்கு மட்டும் இந்த அநியாயத்தினை செய்யவில்லை, ஒட்டுமொத்த இலங்கை தமிழ் இலக்கியம், அரசியல், எழுத்து , வாசிப்பு சூழலுக்கும் , ஒரு பெரிய பங்களிப்பின் வல்லமையை, அறிவின் , சிந்தனையின் பலத்தினை , தடுத்து விட்டார்கள் என்பதை மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் சொல்ல முடியும்.
இப்போது அவரது மரணம் பற்றி பேசுவோம்.

 மு.தளையசிங்கம் வாழ்ந்த, செயற்பட்ட  சமகாலத்தில் வடக்கில் , குறிப்பாக யாழ்ப்பாணத்தில்  வாழ்ந்த இடதுசாரிகள், அரசியல், அமைப்பு சாராது  செயற்பட்ட மனித சமத்துவத்தினை வலியுறுத்திய பலரும், சாதிய அடக்குமுறைக்கு எதிராக பேசியிருக்கின்றனர், எழுதி இருக்கின்றனர், போராடி இருக்கின்றனர். ஆனால் மு.தளையசிங்கம் இம்மக்களுக்காக தன்னுயிரையே தியாகம் செய்தவர். அவரது மரணமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, ”நல்ல குடி தண்ணீர்” கிடைக்க வாய்ப்பு வழங்கப்படல் வேண்டும் என்ற போராட்டத்தின் வழிதான் நிகழ்கிறது. இங்குதான் சாதிய ஒடுக்குமுறைக்கெதிராக போராடி , தன்னுயிரை அர்ப்பணித்த உண்மையான  மனிதர்களில்  ஒருவராக மு.தளையசிங்கம் முன்னிலைக்கு வருகிறார்.

இங்குதான்  இந்தக் கேள்வியை நாம் மீண்டும் கேட்கிறோம்! ஒரு மனிதரின்  பங்களிப்பினையும் , பாத்திரத்தினையும் மதிப்பிட
அவரது   திறந்த வாழ்வையும்   மரணத்தினையும் விட , வேறு சாட்சியங்கள் ஏதும்வேண்டுமா? என....

ஆனால்  சாதிய அடக்குமுறைக்கு எதிராக போராடிய வரலாற்றை எழுதும் பலர், இலங்கை தமிழ் சூழலில் தலித்திய உரிமைகளை வலியுறுத்தும் பலரும், சாதிய ஒடுக்குதலுக்கு எதிராக, போராடி உயிர் நீத்த மு. தளையசிங்கத்தினை மறந்து விடும் அரசியல் என்ன? எம்மை பொறுத்தவரை வாழ்வதை விட, தன்னுயிரையே அர்ப்பணம் செய்வது என்பது உண்மை சாட்சியமாகும். இந்த மரண ஏற்பே அவர்களை மகத்தானவர்களாக முன் நிறுத்துகிறது. ஆனால் மொழியின் சொற்கள் உண்மை வாழ்வை இருள் மூடி போர்த்தி விடுகிறதுதான்....

0000

ஆகவே, எனது குறிப்பினையும் நீங்கள் ஆதாரமாகக் கொள்ளாதீர்கள். மு.தளையசிங்கம் புகழ்ந்தும் இகழ்ந்தும் எழுதப்பட்டவற்றையும்  ஆதாரமாக வரிக்காதீர்கள். நீங்கள் முற்கற்பிதங்கள் இன்றி, மு. தளையசிங்கத்தினை வாசியுங்கள், ஏலவே வாசித்தவர்கள் மீளவாசியுங்கள்.  தொடர்ந்தும் பேசுவோம்....

அவர் இப்படி சொல்லி இருக்கிறார், இவர் அப்படி சொல்லி இருக்கிறார் என மற்றவர்களின் அபிப்பிராயங்களை மட்டும் சுமந்து கொண்டு வராதீர்கள்...

மு.தளையசிங்கத்தால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு , அவர் வாழ்ந்து கொண்டிருக்கும் போது பதில் சொல்ல முடியாத பிரிவினர் , அவரது மரணம் நிகழ்ந்து 6 வருடங்களுக்குப் பின் பதில் சொன்ன அறிவு, எழுத்து , அரசியல் கொண்ட சூழல் அல்லவா  நமது  சூழல். ( எவைகள் அவரால் எழுப்பபட்ட கேள்விகள், அதற்கான பதில்கள் எவை என்பதை தேடிப் படித்தால்தான் கண்டு கொள்ள முடியும்).
இப்போது மு.தளையசிங்கத்தின் கேள்விகளையும் , அவருக்கு எழுதப்பட்ட பதிலையும் மீள வாசிக்கின்ற போது , எந்த வகையான அபத்தமான பதில்கள் அவை என சொல்ல முடிகிறது... மு.தளையசிங்கம் எழுப்பிய கேள்விகள், இலங்கை அரசியல், எழுத்து தளங்களில் இன்னும் பதில் அளிக்கப்படாதவைகளாக, கேள்விகளாகவே .....  அவரது மரணம் நிகழ்ந்து கிட்டத்தட்ட 50 வருடங்களாகவே  உள்ளன...

பதில் அளிப்போர் யார்???

000000

மு.தளையசிங்கம் மீள வாசிக்கப்படல் வேண்டும். ஆர்வமுள்ள பிரிவினர் தமது தேடலின் எல்லைகளை விரியுங்கள்.. .. புதிய வாசல்கள் ஒரு வேளை திறக்கக்கூடும்.