அறிமுகம்

மலையக தமிழ் சமூகத்தில் நாடகமும் அரங்கியலும் கற்றல் கற்பித்தல் செயற்பாடானது சில பாடசாலைகளில் மட்டுமே கற்பிக்கப்படுகின்றது. இந்நிலையில் மாணவர்களிடம் நாடக தயாரிப்பு நெறிமுறைகளும் முகாமைத்துவ நடவடிக்கைகளும் மிகக் குறைவாகவே உள்ளது. நாடகத்தில் தயாப்பு முகாமைத்துவ விடயங்களை உட்புகுத்தி காத்திரமான நாடகத்தினூடாக சிறந்த அரங்க நிர்வாகிகளை வெளிக்கொணர முடியும்.

அதாவது, நாடகமானது மனித நேயத்தைப் போல மிக பழைமையானது. நீண்ட கால கலாச்சார மரபு மற்றும் அணுகுமுறைகளால் பாதிக்கப்பட்ட அன்றாட நடவடிக்கைகளிலிருந்து அனைத்து நாடக நடவடிக்கைகளும் உருவாகின. கலாச்சாரத்தின் மறுநிகழ்வு கலை என்பதை நாடகம் உணர்த்துகின்றது. அரங்கானது மனித வாழ்வியலை கற்பிக்கும் ஒரு பாடமாகும். அரங்கானது சமூக சிந்தனைக்கும் சமூக ஒருங்கு சேரலுக்கு அமையவும் வளர்ச்சியடைகின்றது. சமூக பண்பாட்டில் இன்றியமையாத நிறுவனங்களில் ஒன்று நடிப்பும் பார்வையும் என்று நோக்கி வந்த முறைமைக்கு மாறாக நாடகம் இன்று புதிய அர்த்தங்களை வேண்டி நிற்கின்றது. நாடகம் மனிதனை, மனித உணர்வுகளை, முரண்பாடுகளை, சிக்கல்களை, போராட்டங்களை விளங்கிக் கொள்வதற்கான ஒரு முகாமைத்துவ வகையாகவும் விளங்குகின்றது.

முகாமைத்துவமானது இன்றைய நவீன உலகின் சவால்களுக்கு முகம் கொடுக்க கூடிய வகையில் வளர்ச்சியடைகின்றது. தற்கால கல்வித்துறையில் முகாமைத்துவத்தின் வகிப்பங்கு அவசியமாக காணப்படுவதால் அதன் வளர்ச்சியும் புதிய எண்ணக்கருக்கள் மற்றும் கொள்கைகள் என்பவற்றின் தோற்றமும் இன்றியமையாததாகும். மாணவ சமூதாயத்தில் முகாமைத்துவமானது வளங்களை திட்டமிடல், ஒழுங்கமைத்தல், வழிநடத்தல், கட்டுப்படுதல் என்பன மூலம் கல்வித்துறையின் இலக்கினை பயனுறுதி மிக்கதாகவும் திறமையாகவும் அடைய முற்படும் செயற்பாடாகும்.

நாடகம் என்னும் நிர்வாகச் செயற்பாடானது மனித வளம், பௌதீக வளம் ஆகியவற்றை உள்ளடக்கியது. மனித வளங்களுக்கு உரிய பயிற்சியளித்து அவற்றின் ஆற்றல் திறன் என்பவற்றை விருத்தி செய்ய முடியும். அதாவது நாடகப் பிரதியை எழுதுதல், வாசித்தல், நடிப்பு பாணியை செய்துக் காட்டுதல், நாடகத்திற்கு பொறுத்தமான இசை, உடை, ஒப்பனை, ஒளி என்பவற்றை கற்பனை செய்தல் அவ்விடயம் சார்ந்து தேடுதல் என்பன மனிதவளத்தினுள் அடங்கும். பௌதீக வளங்களான நிதி, மூலப்பொருள், தொழில்நுட்பம், ஆகியவற்றில் தவறுகளை இலகுவாகக் கண்டுக்கொள்ளவும் நிவர்த்தி செய்யவும் முடியும். அதாவது நாடக தயாரிப்பிற்கு தேவையான நிதி உதவிகள், மேற்கூறியப்படி உடையமைப்பு, ஒப்பனை, ஒளிக்கருவிகள், இசைக்கருவிகள், என்பவற்றை ஒழுங்குப்படுத்தல் அவற்றில் பிழை ஏற்பட்டால் அவற்றை சரி செய்தல் என்பன முக்கியமாகும். மனிதர்கள் சம்பந்தப்பட்ட ஒரு செயற்பாடு மனிதர்களால் செய்யப்படுவதை நாடக நிர்வாகம் குறிக்கின்றது.

சமூகத்தை பிரதிபளிக்கும் கண்ணாடியே நாடகமாகும். இது வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல மாறாக அரங்க நடவடிக்கைகள் சமூகத்துடன் நேரடி தொடர்புக் கொண்டவை என்ற கூற்றின் வழியாக சிறந்த ஆற்றுகையை உருவாக்குவதாகும். நாடகத்தில் நிர்வாகம் நடுநிலையானது. எழுத்துபிரதியில் உள்ளவற்றிற்கு உயிர் கொடுப்பவன் நடிகன் ஆவான். நாடகமானது கூட்டுக்கலையாகும். எல்லா கலை வடிவங்களையும் ஒன்றிணைக்கும் சங்கமமாகும். ஏனென்றால் ஒரு பொருள் செயல் வடிவம் பெற பிற துறைகளின் உதவி அவசியம். இந்த செயல் வடிவம் பெற்ற சம்பவம் அடுத்தக்கட்ட பிரச்சினையின் முதற்கட்ட பிரச்சினையாகும்.

நாடக தயாரிப்பில் முகாமைத்துவமும் நிர்வாகமும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. நாடகத்தில் முகாமைத்துவம் என்பது எதிர்பார்ப்புக்களை அடைவதற்கான வளங்களை ஒருங்கிணைப்பதற்கான நெறிப்படுத்தல்களை அல்லது வழிகாட்டல்களை வழங்குதல் ஆகும். நாடக தயாரிப்பில் மனித மற்றும் பொருள்சார் பங்களிப்புகளை உச்சப்படுத்த முகாமைத்துவம் அவசியம். திறமை மிக்கதும் சிறப்பானதுமான வளப்பயன்பாட்டினை முன்னேற்றுவதற்காக நிர்வாகம் அமையப்பெற்றுள்ளது. நாடக நிர்வாகத்தில் திறமை மிக்க தன்மை அல்லது வினைத்திறன் என்பது குறைந்தளவிலான வளங்களை பயன்படுத்துவதாகும்.

அரங்க முகாமைத்துவத்தினூடாக நாடகத்தயாரிப்பில் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், வழிநடத்தல், கட்டுப்படுதல் இவை நான்கும் மிக முக்கியமாகும்.

திட்டமிடல்

ஒரு நாடகத்தின் நோக்கம், குறிக்கோள், என்பவற்றை தீர்மானித்து அதனை அடைவதற்குரிய தந்திரோபாயங்களை வடிவமைத்து செயற்படுவதன் மூலம் மாணவர்களின் எதிர்கால நோக்கினையும் செல்ல வேண்டிய பாதையினையும் தீர்மானித்தலைக் குறிக்கின்றது.

ஒழுங்கமைத்தல்

நாடக குறிக்கோள்களை அடைவதற்கான திட்டங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு வேண்டிய தயாரிப்பு செயற்பாடுகள் வளங்கள் என்பவற்றை தீர்மானித்து இவற்றை திறமையாக நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரம், பொறுப்பு, பாரப்படுத்தல் என்பவற்றை பகிர்ந்தளித்தல், ஒன்றிணைத்தல், செயலாற்றல் என்பவற்றினை குறிக்கின்றது.

வழிநடத்தல்

நாடக திட்டத்திணை செயற்படுத்துவதற்கு ஒவ்வொரு ஒரு அங்கத்தவரின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புக்கள் என்ன என்பதை தொடர்பாடலினூடாக தெளிப்படுத்துவதன் மூலம் குழு அங்கத்தவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு தமது செயற்திறனை அதிகரிப்பதற்கு வேண்டிய சூழல் ஏற்படுத்தலை குறிக்கின்றது.

கட்டுப்படுத்தல்

நாடகத்தின் தேவை மற்றும் எதிர்பார்ப்புக்களை வெற்றிகரமாக அடையும் நோக்கோடு அதன் செயற்பாடுகளை வழிநடத்தல் , அவதானித்தல், மாற்றியமைத்தல், என்பவற்றினூடாக மாணவர் சாதனை புரிதலைக்குறிக்கின்றது.

இதன் அடிப்படையில் நாடகத்தின் மூலம் மாணவரிடத்தில் தலைமைத்துவமும், சிறந்த நிர்வாகத் தன்மை ஏற்படுவதுடன் தயாரிப்பு முறைமைகளையும் சவால்களையும் திட்டங்களின் அடிப்படையில் இலக்கினை அடையமுடியும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

மலையகத்தில் நாடகமும் அரங்கியலும் துறையை பொறுத்தவரையில் பாடசாலைகளில் நாடகம் சாந்த முறையான பயிற்சிகள் இல்லாத காரணத்தினால் முறையான நாடக நிர்வாக தயாரிப்பு முறைகள் மறுவுகின்றன. அத்துடன் அரங்கியல் மாணவர்களுக்கு நாடக தயாரிப்பு ஒன்றை எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்ற அறிவுத் தேடல் குறைவாகவே இருக்கின்றது. அதாவது சரியான வழிநடத்தலும், தேடுதலும் இல்லாதக் காரணத்தினால் நாடகத்தில் அடிப்படை விதிகள் மீறப்படுகின்றது. அத்துடன் மாணவரிடத்தில் தலைமைத்துவம், கூட்டுமுயற்சி, தனியாள் செயற்பாடுகள், கருத்துவேறுபாடு, நேரமுகாமைத்துவம், என்பவற்றை முகாமை செய்ய முறையான திட்டமிடல் இல்லாமையே அடிப்படை பிரச்சினையாகும்.

பயிற்சிகள் சார்ந்து அடிப்படை தேடல் இல்லாமை நடைமுறையில் உள்ள நிலமைகள் பற்றி அறியாமை போன்ற காரணங்களினால் தயாரிப்பாளர், நெறியாளர், மேடைமுகாமையாளர், ஒளியமைப்பாளர், உடையமைப்பாளர், ஒப்பமையாளர், நடிகர், இசையமைப்பாளர், போன்ற முகாமைத்துவ பாத்திரங்களை மாணவர்களால் முழுமையாக ஏற்கமுடியாமல் உள்ளது. ஆகவே நாடக நுட்பங்கள் மற்றும் திட்டமிடல் முகாமைத்துவத்தின் அவசியம் இங்கே முக்கியமாகின்றது. அதாவது,

நாடக தயாரிப்பின் சமூகம் சார்ந்த நோக்கங்கள் எவை?
நாடகத்திகல் திட்டமிடல், ஒழுங்கமைத்தல், கட்டுப்படுதல், வழிநடத்தல், முரண்பாடுகளை தீர்த்தல், மற்றும் தந்திரோபாய உத்திகளை நாடக தயாரிப்பில் பயன்படுத்துவதன் அவசியம் என்ன?

நாடக தயாரிப்பில் மாணவர்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய திட்டங்கள் எவை?

முயற்சியாளர்களின் வினைத்திறன் விருத்தியில் அரங்க முகாமைத்துவத்தின் பங்களிப்பு என்ன? போன்றன பெரும் பரப்பாகும். ஏனெனில், மலையகக் தமிழ் சமூகத்தில் குறிப்பிட்டளவு பாடசாலைகளிலே நாடகமும் அரங்கியலும் கற்கையானது அறிமுகஞ்செய்யப்பட்டுள்ள நிலையில் அரங்க முகாமைத்துவம் குறித்து பாடசாலை மட்டத்தில் இவ்விடயப் பரப்பு ஆராயப்படுமானால்,

1. மாணவரிடையே நாடக தயாரிப்பினூடாக முகாமைத்துவ கட்டமைப்பை தெளிவுப்படுத்தல்.
2. மாணவர்கள் இத்துறையை முகாமைத்துவ முயற்சியாக கற்கின்றார்களா என்பதை கண்டறிதல்
3. நாடகத்தின் அடிப்படை விதிகளையும், உத்திகளையும், தயாரிப்பில் பயன்படுத்தலும் மாணவரை ஈடுப்படச் செய்தலும்
4. தனியாள் மற்றும் குழுச்செயற்பாடுகள் மூலம் நாடகம் சார்ந்த நிர்வாக திட்டங்களை உருவாக்களும் அதை செயற்படுத்தலும்.
5. நாடகத்துக்கும், சமூகத்துக்குமான உறவை அறிந்து தொழில்சார் சிந்தனைகளை அந்நிய நாட்டவர் உள்வாங்கி சிறந்த முறையில் பின்பற்றி வருவதை மாணவருக்கு உணர்த்துவதன் மூலம் நாடகம் மீதுள்ள அசமந்த போக்கை நீக்குதல்.
6. மேல்நாட்டு அரங்கவியலாளர்களின் முகாமைத்துவ கட்டமைப்பை அறிதலும், அதில் பொருத்தமானதை நடைமுறைப்படுத்தலும் போன்ற நகர்வுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளை துரிதப்படுத்தலாம்.

நாடக கல்வியிலே பயில்வதற்குரிய செல்கான தயாரிப்பு நடிப்பு, அரங்க விதானிப்பு, காலம், இடைவெளி, என்பவற்றை கருத்தில் கொண்டு நடைமுறை வடிவில் வினையாற்றலுடன் அடைவதற்குரிய செயன்முறை அரங்கியல் முகாமைத்துவமாகும். மனிதவளம் பற்றிய கோட்பாட்டு ரீதியிலான சிந்தனையானது அரங்கின் வளர்ச்சிக்கும், நாடக கலைஞர்களுக்கும் இடையிலான அடிப்படை எடுகோளாக விளங்குகின்றது. வெற்றிகரமான நாடக செயற்பாட்டிற்கு கலைஞர்களின் உடல் நலம், திறன்கள், ஊக்கம், என்பன அவசியம். ஒரு நாடகத்தின் வெற்றி அதில் பங்குபற்றிய அனைத்து கலைஞர்களையும் சாரும். அரங்க செயற்பாட்டில் ஒவ்வொரு உறுப்பினரின் ஒத்துழைப்பும், கருத்தும் முக்கியம். அந்தவகையில்,

அனைத்து செயற்பாடுகளை இயக்கி அதற்கு பொறுப்பாகவிருத்தல்

தனக்கு வழங்கப்பட்ட செயற்பாடுகளுக்கு தலைமைத் தாங்கல்
கட்டளையிடுதல், கட்டுபடுதல்
தீர்மானமெடுத்தல், நெறிப்படுத்தல்
பிரச்சினைகளைத் தீர்த்தல்

நாடகச் செயற்பாட்டை கூட்டுச்செயற்பாடாகவும் சமூக முன் முன்மாதிரி செயற்பாடாகவும் முன்னெடுக்கலபம். நாடகத் தயாரிப்பில் முகாமை செய்வோரின் பாத்திர வகைகளும் நிலைகளும் சிறப்பாக சுட்டிக்காட்டப்படுகின்றன. ஆளணியினரை கையாளுதல் நாடக நிர்வாகத்தில் சிறப்பிடம் பெறுவதால் ஆளிடைத் தொடர்பு, பாத்திர முகாமை செய்வோர் தனிமனிதனாக நின்று நிர்வாகத்தையும் செயலாற்றுகையும் வெற்றிகரமாக முன்னெடுக்க வேண்டியுள்ளது. அரங்க தயாரிப்பில் முகாமைத்துவம் என்ற எண்ணக்கருவானது செயல் முறை (Integrated Process)ஆகும்.

மேலும், திட்டங்கள், தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகள் எம்மை முன்நோக்கி பார்ப்பதற்கும் எமது எதிர்காலச் செயற்பாடுகளை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்கும் உதவுகின்றது. அதேப் போல நாடகமும் இறந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்காலச் செயற்பாடுகளை மனக்கண்முன் கொண்டு வருவதற்கு உதவுவது மட்டுமன்றி நாடகமானது மாவணர் திட்டமிடல், தீர்மானம் எடுத்தல், மற்றும் நடைமுறைச் செயன்முறைகளில் ஈடுபடுத்தி பங்கேற்கும் வகையில் சமூகத்திற்கு அவசியமாகின்றது. மாணவர் தனது சுய நிலைத்திருத்தல், தங்களின் தேவைகளை பூர்த்தி செய்தல் தங்களுக்கு தேவையான வளங்களை தோற்றுவித்தல் என்பவற்றின் அடிப்படையில் சூழலினூடாக ஒரு வாழ்வை அமைப்பதில் இவ்வாய்வு முக்கியம் பெறுவதுடன், நாடகம் மாணவருக்கு வழிக்காட்டியாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நாடக தயாரிப்பின் முன் சிந்தித்தல், சாத்தியமான பிரச்சினைகளை எதிர்பார்த்தல், எதிர்காலம் பற்றிய சிந்தனையில் தற்போதைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் ஆகிய நடத்தை விதிகள் நீண்டகால இருப்பிற்கும் சிந்தனை விருத்திக்கான அம்சமாகவும் மாற்றமடைந்து கொண்டிருக்கும் மாணவ சமூகத்திற்கும் முக்கியத்துவமாகின்றது.

மாணவரின் முன்னேற்றங்களுக்கு உதவக்கூடியதான நாடகமும் அரங்கியலும் கற்கையை விருத்தி செய்வது கல்வித்துறையின் பொறுப்பும் கடமையும் ஆகும். உயர்ந்த தொழில் முறை ரீதியில் அல்லது நிதிவளம் இருக்கும் இடத்தில் பாத்திரம் நாடகங்கள் செய்யப்படுவதில்லை. காணப்படும் வளங்களை பூரணமாகவும், சிக்கனமானவும், உச்ச பயனுறுதியுடனும் பயன்படுத்த வேண்டும்.

அரங்க முகாமைத்துவம் பற்றிய முழுமையான தகவல்கள் இவ்விலக்கியங்களில் அல்லாவிட்டாலும் ஆய்வாளரை குறித்த எல்லைக்குள் வைக்க இவை உதவுகின்றன. அவற்றில் சில,

குணசேகரன் K.A , நாடக அரங்கம், நியூ செஞ்சரி  புக் ஹவுஸ், தமிழ்நாடு , 2003.

இந்த நூல் ஒரு அறிமுக நூல். இதில் அரங்கியற்கலை சார்ந்த அனைத்து அம்சங்களும் தொட்டு விளக்கப்பட்டுள்ளது. நாடக அரங்கின் அடிப்படை நூலானது மாணவருக்கு தெளிவான அறிமுகத்தையளிக்கும். ஆனால் ஆய்வாளரை பொறுத்தவரையில் பூரண விளக்கமின்மை மிக்கதாகும். இருப்பினும் தனித்தனி அரங்க துறைகள் சார்ந்த விடயங்களின் தொடுகையானது இவ்வாய்வுக்கு பயனளிக்கும். 1979ல் தமிழ் உலகில் ஆட்சியாளர்கள் மாறி மாறித் திரைக் கலை உலகத்தில் பெயர் பெற்றவர்களே வந்தாலும் நாடகத்துறைக்கென தனிக்கவனம் இல்லை. நாடகத்துறையைப் பாடங்களில் சேர்த்திருக்கவில்லை.இச்சுழலில் இந்த நூல் வெளியிடப்பட்டது.

அருளானந்தன் க, அரங்க ஆற்றுகைகளும் ஆய்வு வழிகாட்டியும் சிவசாயிகலா மன்றம்.2013 

காலத்தின் தேவைக்கருதி மாணவர் தந்த இந்த நூல் தமிழ் நாடகத்துறைக்கு பொருளாழம் புத்தூக்கம் மிக்க அறிய முயற்சியாகும்.செயற்திறன் படைப்பாற்றல் தொகுப்பாற்றல் ஆய்வு ஆர்வம் என்பன வெளிப்படும் வகையிலான மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது. மாணவர் நாடக அரங்கிற்கென மூன்று நாடக எழுத்துப்பிரதிகளும் ஒரு நூற்றாண்டு கல ஆய்வுக்கு வழிநடத்தும் இலங்கையில் வெளிவந்த தமிழ் நாடக நூல் ஆவணப்பட்டுயலும் எம்க்கு கிடைத்துள்ளன.கிராமிய கலைகளின் தாக்கத்தினால் அவர் மேற்கொண்ட பாடசாலை மட்ட மூன்று நாடக நெறியாள்கையானது மரபு வழிப்பட்டதாக அமைந்துள்ளது. மூத்த கலைஞர்களின் நேர்க்காணல் ஒரு சான்றாக அமையும். இருப்பினும் மாணவர்களை நெறிப்படுத்திய முறையும் ஒரு பகுதியாக அருந்திருப்பின் பெரிதும் உதவியிருக்கும். ஆசிரியர் என்ற வகையில் அனுபவ வெளியிடாமை ஒரு இடைவெளியாகவுள்ளது.

ஏழு நாடகங்கள், தமிழ் மன்றம், சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் 1987.

ஏழு நாடகங்கள் ஒவ்வொன்றும் பாடசாலை மட்டத்தில் தயாரிக்கப்பட்டவையாகும். நூடக தயாரிப்புக்கான நன்மாதிரிக்கென போற்றப்பட்டவை. ஆய்வாளரால் ஆராயப்படவுள்ள சில முனைவுகள் இந்த ஏழு நாடகத்தின் தயாரிப்பில் காணப்படுகின்றது. ஆண்கள் பாடசாலை மற்றும் மகளீர் பாடசாலை உயர்தர மாணவர்களை பரிசோதிக்கும் முயற்சி இவ்வாய்வு இலக்கியத்தில் காணப்படுகின்றது. அத்துடன் பல்கலைக்கலக மற்றும் பாடசாலை ஊடாட்டம் தொடர்புப்படுகின்றது. இந்த தொடர்பு அவசர நிலைப்பட்டதன்று. கண்டி மாவட்ட கம்பளை வலயத்தில் நாடகமும் அரங்கியலும் பாடமானது சில தமிழ் பாடசாலைகளில் அறிமுகமாகியுள்ள இச்சந்தர்ப்பத்தில் ‘நமது பாடசாலைகளில் அழகியல் கல்விக்கு வயது வந்து விட்டது’ என்று போராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவுக் கூற்றை நிரூபிப்பதாக இவ்வாய்வு அமையப்படலாம்.

பேரா.சி.மௌனகுரு, பேரா.கா.சிவதம்பி, க.திலகநாதன், அரங்கு ஓர் அறிமுகம், குமரன் புத்தக இல்லம் (2014)   

இந்நூல் க.பொ.த உயர்தர மாணவர்களை மையப்படுத்திய அறிமுக நூலாகும். நாடகம் பற்றிய கல்வியிலே ஒரு நிலையில் அதன் பயில்வுக்குரிய செயல்களான தயாரிப்பு நடிப்பு அரங்க விதானிப்பு முதலிய விடயங்களை இந்நூல் மையப்படுத்துகின்றது. நாடக தயாரிப்பு மற்றும் நாடக பாடத்தை மாணவருக்கு கற்பித்தல் போன்ற விடயப்பரப்பின் அறிமுகமானது நுணுக்கங்களைத் தருவதுடன் தேடலுக்கான வழிவகையைத் தருகின்றது.

மு.குணசேகரன் அவர்களால் எழுதப்பட்ட “நாடக அரங்கம்” மற்றும் பேரா.சி.மௌனகுரு, பேரா.கா.சிவதம்பி, க.திலகநாதன், மூவரால் எழுதப்பட்ட “அரங்கு ஓர் அறிமுகம்” ஆகிய இரு வெளியீடுகளிலும் அரங்கியற் கலை குறித்து அனைத்து அம்சங்களையும் குறிப்பாக தொட்டு விளங்கியுள்ளது.

நாடக கலைஞன் மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும் நீண்ட காலத்திற்கு அடுத்த தலைமுறையினருக்கு இழப்பு இல்லாத வகையில் இருக்க வேண்டும். இத்தகைய ஆற்றல் உடையவனே சிறந்த முயற்சியாளன். சிறந்த முயற்சியாளர்களை உருவாக்கும் அரங்கானது அதிகரிக்கும் போட்டி நிலைமை நிலவுகின்ற நிச்சயமற்ற தன்மை, சிக்கலான பண்பு என்பவற்றை விளங்கிக் கொள்வதற்கும் புதியவற்றை உருவாக்குவதற்கும் மாற்றங்களை ஏற்படுத்துவதற்குமான திறன்களை வளர்ப்பதில் இவை மாணவருக்கு பயனளிக்கின்றது.

உசாத்துணை நூற் பட்டியல்

1. பேரா.சி.மௌனகுரு, பேரா.கா.சிவதம்பி, க.திலகநாதன், அரங்கு ஓர் அறிமுகம், குமரன் புத்தக இல்லம் (2014)   
2. அருளானந்தன் க, அரங்க ஆற்றுகைகளும் ஆய்வு வழிகாட்டியும் சிவசாயிகலா மன்றம்.2013
3. நாடக சஞ்சிகை, நாடக அரங்க கல்லூரி வெளியீடு, யாழ்ப்பாணம்.1981
4. Raguragavan.K,Organization Planning,Kumaran printers, Chennai (1996)
5. ஏழு நாடகங்கள், தமிழ் மன்றம், சுண்டிக்குளி மகளிர் கல்லூரி, யாழ்ப்பாணம் 1987.
6. குணசேகரன் K.A , நாடக அரங்கம், நியூ செஞ்சரி  புக் ஹவுஸ், தமிழ்நாடு , 2003.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

*டிஜிட்டல் ஓவியம் -  கூகுள் நனோ பனானா 2