கட்டுரையாசிரியர்: - முனைவர் சா. சதீஸ் குமார், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, நேரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி , கோயம்புத்தூர் -641105. -

முன்னுரை

தமிழ் இலக்கிய மரபில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாகத் திகழ்வது சிலப்பதிகாரம். இளங்கோ அடிகள் இயற்றிய இக்காப்பியம், கோவலன்–கண்ணகி–மாதவி ஆகிய பாத்திரங்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு, அறம், அரசியல், சமூகம், காதல், பழிவாங்கல் போன்ற பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்துகிறது. இதனை ஒரு காப்பியமாக மட்டுமன்றி, நாடகக் கூறுகள் நிறைந்த இலக்கியமாகவும் ஆராய முடியும். சிலப்பதிகாரத்தில் காணப்படும் நிகழ்ச்சித் தொடர், உரையாடல்கள், உணர்ச்சி வெளிப்பாடுகள், காட்சியமைப்பு ஆகியவை அனைத்தும் நாடகத் தன்மையுடன் அமைந்துள்ளன. இதனால் இக்காப்பியம் வாசிப்பிற்கும் மேடைக்காட்சிக்கும் ஏற்ற வடிவத்தைப் பெற்றுள்ளது. சிலப்பதிகாரக்காப்பியத்தில் இடம் பெற்றுள்ள நாடகக் கூறுகளில் உள்ள ஆடல் ஆசான் , இசையோன், புலவன், அறங்காமைப்பு மற்றும் ஆடல் நிகழ்ச்சி பற்றி அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

சிலப்பதிகாரம்:

சிலம்பிலே உள்ளத்தை வயப்படுத்தும் கதை அமைப்பு உள்ளது. உள்ளத்தோடு ஒன்றி கலந்து விடும் உயிர்ப்புள்ள கதை மாந்தர்களையும் ஏழிசை இனிதாக இயங்குகின்ற குரவைகள் ஒலிக்கின்ற பண்கள் பயின்று வருகின்றன.தமிழிசையின் தண்ணீகரற்ற உயர்வையும் தமிழகத்திற் கூத்தும் குரவையும் குலாவிய பாங்கையும் தமிழர் மறமேம்பாட்டின் செவ்வியையும் சிலம்பிலே நாம் கண்டு மகிழலாம். நாடக வழக்கு, கூத்து, அவைக்குழாம்என்னும் சொல்லாடல்கள் சிலம்பிலே காணப்படுகின்றன.

அரங்கேற்று காதை:

கணிகையர் குல பெண்ணான மாதவி ஆடல் கலையில் சிறந்தவளாக விளங்குகிறாள். அவள் ஆடல் அரங்கேற்றம் செய்த நிகழ்வினையும், அரங்க அமைப்பு, அரங்கேற்றம் முடித்திறத்தையும் , கண்டவர்கள் வியந்ததையும் காணமுடிகிறது .

கூத்தும் பாடலும் ஒப்பனையும் என்று நாடக மகளிருக்கு உரியனவாக சொல்லப்பட்ட மூன்றனுள் ஒன்றினும் குறைவு படாமல் ஏழாண்டு காலம் இவள் முறையாகப் பயிற்றுவிக்கப் பெற்றாள் மாதிவியான இவள் "கலைசிறந்த மரபிலே இவளும் வந்து பிறந்தனள் என்று கூறுவதை

“ ஆடலும் பாடலும் அழகும் என்றிக்
கூறிய மூன்றின் ஒன்றுகுறை படாமல்
ஏழாண் டியற்றி ஓரீரா றாண்டில்
சூழ்கழல் மன்னற்குக் காட்டல் வேண்டி”
( அரங்கேற்று காதை - 8-11 )

என்ற பாடல் அடி மூலம் ஆடல், பாடல், அழகுபடுத்திக்கொள்ளும் ஒப்பனை ஆகிய கலைகள் மூன்றனுள் ஒன்றிலும் குறைவுபடாமல் இருக்கும்படி ஏழு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்பட்டது. அறியலாம்

கூத்து :

கூத்து அகக்கூத்து ,புறக்கூத்து என்று இருவகை என்பதுடன் “வேத்தியல் பொதுவியல்” எனவும் உரைப்பர், பல்வகை கூத்து என்பது சாந்திக்கூத்து,வினோத கூத்து முதலியென. விலக்கு பதினான்கு வகைப்படும். அவை பொருள்,யோனி, விருத்தி,சந்தி, சுவை, நாடகம், குறிப்பு, தத்துவம்,அபிநயம்,சொல் சொல்வகைகள், சந்தப்பாட்டு ,இசைப்பாட்டு, சேதம் என்பனவாகும் .

கூத்து என்பது நாட்டுப்புறக் கலைகளில் ஒன்றாகும். இவற்றை “நாட்டுப்புறக் கூத்துகள்” என்றும் அழைப்பதுண்டு. கிராமிய நாடகங்கள் என்றும் அழைக்கப்படுகிறது. இவற்றில் பொதுவாக ஆடல்களும் பாடல்களும் கலந்திருக்கும். கதையோடு சேர்ந்த ஆடல் கூத்தாகவும், இக்கூத்தின் வளர்ச்சியே நாடகமாவும் திகழ்கிறது. சுருக்கமாகக் கூறினால் மேடையின்றி, திரைகளின்றி, அதிக ஒப்பனைகள் இன்றி, திறந்தவெளி அரங்குகளில் நடைபெறும் கிராமிய நாடகங்களே கூத்துகளாகும்.

கூத்துகளே கலைகளை வளர்ப்பதில் முன்னோடியாக விளங்குகின்றன. இக்கிராமியக் கூத்துகளுக்குத் தேசிய முக்கியத்துவமுண்டு. அவை கிராமிய மக்களின் வாழ்க்கை வரலாற்றையும் ஓரளவு வெளிப்படுத்தும் வகையில் இருக்கும். கிராமிய மக்கள் கூத்து நிகழ்த்துபவரைக் “கூத்தாடிகள்” என்று அழைத்தனர்.

“கூத்தாடி கிழக்கே பார்ப்பான்
கூலிக்காரன் மேற்கே பார்ப்பான்”

என்றும் ஒரு பழமொழியும் உண்டு.கூத்துக்கள் இரவு பொழுதில் நடைபெறும் என்பதையும் விடியும் வரையும் நிகழ்த்தப்படும் என்பதையும் உணர்த்துகிறது. இப்பழமொழி. இரவு பொழுது மகிழ்ச்சிக்கரமாக அமையும் வகையிலே இக்கூத்து நிகழ்த்தப்படும்.

கிராமியக் கூத்துகளில் இயல், இசை, நாடகம் ஆகிய முத்தமிழும் இடம் பெறுகின்றன. ஆயினும், பாட்டின் செல்வாக்கே அதிகம் காணப்படுகிறது. கதை தொடர்ந்து செல்லுகையில் இடையில் விளக்கம் உரைப்பதற்கு உரையாடல் இடம்பெறுகின்றது. மத்தளத்தின் இசைக்கேற்ப நடிகர் ஆடுவர். மத்தள அடிகள் ஒவ்வொன்றும் பாத்திரங்களினது வருகையையே குறிப்பதாக அமையும். பொதுவாக மத்தளம் இல்லாமல் கூத்தில்லை என்பதை உணரலாம். முற்காலத்தில் கூத்து என்ற சொல் வழக்கு தெருக்களில் மண்ணால் ஆன மேடை அமைத்து நாடக கலைஞர்கள் இரவும் பகலும் விடிய விடிய நாடகத்தை நிகழ்த்தி மக்களுக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தவும் ,விழிப்புணர்வினை ஏற்படுத்தவும் பல்வேறுநிகழ்ச்சிகளை நாடகம் மூலம் நடித்துக்காட்டி வந்தனர்.தற்காலத்தில் பொருள் வசதியினால் நாடக மன்றம் அமைத்து நாடகத்தை நிகழ்த்தி வருகின்றனர்

ஆடல் ஆசான் :

நாடகக்கலையினை கற்றுக்கொடுப்பவரை ஆடல்ஆசான் என்று அழைக்கின்றனர். இருவகை கூத்துகளின் இலக்கணங்களையும், பலவிதமான கூத்துக்களின் நுணுக்கங்களையும் அறிந்திருப்பார்.ஆசானின் தன்மையைப்பற்றி

ஆடலும், பாடலும், பாணியும்,தூக்கும்,
கூடிய நெறியின் கொளுத்தும்காலை (அரங்கேற்று காதை - 16-17)

என்றும்,

ஆடல் செய்த கை பிண்டியில் களைதலும்,
குரவையும் வரியும் விரவல செலுத்தி,
ஆடற்கு அமைந்த ஆசான் – தன்னொடும்
(அரங்கேற்று காதை - 23-25)

என்ற பாடல் வரியின் மூலம் குறிப்பிட்டுள்ளனர்

ஆடல் பாடலுடன் விளங்கும் நாடக மன்றத்தில் பாட்டு-சந்தம் முதல் பிரபந்தம் இறுதியாக இருபத்தெட்டும், தேம்பாவணி முதலாக அரங்கொழிச் செய்யுள் ஈராக உள்ளவையும் , தேம்பாவணி -கடவுள் வாழ்த்து ,அரங்கொழிச் செய்யுள்- மங்கலம் பாடுதல் ,கொட்டு -கொட்டப்படும் வாத்தியங்கள் இவை ஆடலுக்கு இசைந்தனவும்,பாடலுக்கு இசைந்தனவும் என இரு வகைப்படும் .

இசையோன்:

ஆடல் ஆசானை போன்று இசைக்கருவிகளை இசைப்பவனை இசையோன் என்று கூறுகின்றனர் . இவனும் யாழ் ,குழல், தாளக் கூறுபாடுகளும், மிடற்றுப் பாடலும், தாழ்ந்த குரல் எழுப்பும் தண்ணுமையும் ஆகிய இவற்றால் இசைந்த இசையைக் கூத்திற்குப் பொருந்துமாறு இசையுடன் இசைக்கும் வல்லவனாக இருத்தல் வேண்டும் என்று இசையோன் பற்றி அரங்கேற்றுக்காதை கூறுகின்றது .

“யாழும், குழலும், சீரும், மிடறும்,
தாழ் குரல் தண்ணுமை, ஆடலொடு இவற்றின்
இசைந்த பாடல் இசையுடன் படுத்து”
(அரங்கேற்று காதை - 26-28)

என்ற பாடல்வரிகள் யாழின் இசை, குழலின் இசை, பாட்டில் வரும் சீர்களைப் பிரித்து இணைக்கும் இசை, தொண்டையில் வரும் குரல் மாறுபாட்டு இசை ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவனாக இருக்க வேண்டும். என்று குறிப்பிட்டு இருப்பதன் மூலம் இசையோன் திறன் இருக்கவேண்டும் என்பதை நம்மால் அறியமுடிகின்றது

புலவன்:

ஆடல்ஆசான், இசையோனைத் தொடர்ந்து பாடல் எழுதும் புலவனின் தனித்தன்மையைப் பற்றி

“இசையோன் வக்கிரித்திட்டத்தை உணர்ந்து, ஆங்கு,
அசையா மரபின் அது பட வைத்து,
மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து,
நாத் தொலைவு இல்லா நல் நூல் புலவனும்”
(அரங்கேற்று காதை - 41-44)

என்று நல்லறிவுமிக்க ஒரு ஆசான் மாதவிக்கு தமிழ் ஆசிரியனாக இருந்தான் என்று சிலப்பதிகார அரங்கேற்றுக்காதையில் ஆடல் ஆசான், இசையோன், புலவன் என்ற மூன்று கலைகளையும் கற்ற ஆசான்கள் மாதவிக்கு வாய்த்திருந்ததை நம்மால் அறையமுடிகின்றது .

அரங்க அமைப்பு:

'அரங்கு' என்ற கட்டட அமைப்பைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொல்லானது சங்க இலக்கியங்கள் பலவற்றுள்ளும், திருக்குறள், சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களிலும் பயின்று வந்துள்ளது.

"அவை புகழ் அரங்கின் மேல் ஆடுவாள் அணிநுதல்
(கலித்தொகை,பாடல் எண் : 79)"

என்று கலித்தொகையிலும்,

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்” ( திருக்குறள் எண் : 401)

என்று திருக்குறளிலும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

சிலப்பதிகாரத்தில் அரங்கேற்றுக்காதை அமைக்கப்பட்டு, நாடக அரங்கின் அமைப்பு விரிவாகப் பேசப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும். ‘அரங்கேற்றுக்காதை’ என்ற பெயரில் தனியொரு காதையே அமைக்கப்பட்டு நாடக அரங்கின் அமைப்பைப்பற்றி விரித்துரைக்கின்றது

சிலப்பதிகார நாடக அரங்கமைப்பு

நிலத்தைத் தேர்ந்தெடுத்தல் : பண்டைய கால நாடகங்களிலிருந்து இன்றைய நாடகங்கள் பற்பல மாற்றங்களைப் பெற்றிருக்கும் நிலையில் நாடக அரங்கமைப்பிலும் மாற்றங்கள் உண்டாகியிருப்பதும் இயல்பான ஒன்றே. நாடக அரங்கை அமைப்பதற்கான நிலத்தைத் தேர்ந்தெடுப்பதே முதல் படிநிலையாகக்கொள்ளப்பட்டது. மண்ணகம் வகுத்தல் (Soil Conservation) என்ற பெயரில் இது குறிப்பிடப்படுகிறது.

“………தித்திப்
பனிபெருகு மாவ தரங்கு? (நாடக நன்னூல் - இயல் :2 நூற்பா -1)

மண்ணின் சுவையானது அறுசுவைகளுள் இனிப்புச் சுவையுடையதாக இருக்க வேண்டும். அதுவே நாடக அரங்கை அமைப்பதற்கான ஏற்ற நிலமாகக் கருதப்பட்டது. மேலும் ஊருக்கு நடுவே, தேரோடும் வீதிகளில் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டு அரங்குகளை அமைத்துள்ளனர். நாடக நன்னூல் குறிப்பிடும் இக்கருத்தானது இரத்தினச் சுருக்கமாக இளங்கோவடிகள் கூறிய,

"எண்ணிய நூலோர் இயல்பினின் வழா அது
மண்ணகம் ஒருவழி வகுத்தனர்"
(அரங்கேற்று காதை - 95-96)

என்னும் வரிகளிலிருந்து பிறந்ததே. இவற்றின்படி, தரமான, குற்றமற்ற நிலத்தையே நாடக அரங்கிற்கெனத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை அறியலாம்.

"நூலறி புலவர் நுண்ணிதின் கயிறுஇட்டு”
(நெடுநல்வாடை - அ . எ.76)

என்னும் நெடுநல்வாடை வரியும் இதற்கு வலுச்சேர்க்கிறது.

அரங்கமைப்பிற்கான அளவுகோல்:அரங்கின் நீளம், அகலம், உயரம், மேடையின் அளவு எனப் பலவற்றிற்கும் அளவுகோல் கொண்டே அளவுகள் நேர்த்தியுற எடுக்கப்பட்டு, நாடக அரங்குகள் அமைக்கப்பெற்றுள்ளன. துல்லியமான கோல் அளவிற்கென, 'சிலப்பதிகாரம் ஓர் இலக்கணத்தை வகுத்துத் தந்திருப்பதை.

"புண்ணிய நெடுவரைப் போகிய நெடுங்கழைக்
கண்ணிடை ஒருசாண் வளர்ந்தது கொண்டு
நூனெறி மரபின் அரங்கம் அளக்குங்
கோலள விருபத்து நால்விர லாக"
(அரங்கேற்று காதை – 97-100)

என்னும் வரிகளால் அறியமுடிகிறது. பொதிகை போன்ற புண்ணிய மலைகளில் வளர்ந்த மூங்கிலின் ஒரு கணுவிற்கும் அடுத்த கணுவிற்கும் இடையே ஒரு சாண் அளவு இடைவெளி இருப்பது போன்ற மூங்கிலை எடுத்து வந்து, கைப்பெருவிரல் இருபத்து நான்கு அளவு கொண்டதாக அளவுகோல் உருவாக்கப்பட்டதாக இளங்கோவடிகள் கூறியுள்ளார். இக்கோல் அளவு பற்றி நாடக நன்னூலானது.

“ஒத்த அணுமுதல் உயர்ந்துவரு கணக்கின்
உத்தமன் பெருவிரல் இருபத்து நாலுள
கோலே கோடல் குறியாரித்தோரே ”
(நாடக நன்னூல் - இயல் :2 நூற்பா -5)

என்னும் வரிகளால் அறியமுடிகின்றது

எத்தனை அளவு உயரம், எத்தனை அளவு நீளம், எத்தனை அளவு கொண்டதாக மேடை இருக்க வேண்டும் என்பனவற்றையெல்லாம் சிலப்பதிகாரம் சிறப்புற எடுத்துரைக்கிறது. நாட்டிய அரங்கு சிற்ப சாத்திர முறைப்படி அமைக்கப்பட்ட ஒன்று. அதன் உயரம், நீளம், அகலம் குறிப்பிட்ட அளவுகளைக் கொண்டு விளங்கியது. தக்கோன் ஒருவன் கைவிரல் அளவு இருபத்து நான்கு கொண்டது ஒரு கோல் எனப்பட்டது.

"எழுகோ லகலத் தெண்கோல் நீளத்
தொருகோல் உயரத் துறுப்பின தாகி
உத்தரப் பலகையோ டரங்கின் பலகை
வைத்த இடைநிலம் நாற்கோ லாக"12
(அரங்கேற்று காதை – 101-104)

தரையில் இருந்து மேடை ஒரு கோல் அளவினதாக இருந்தது; அதன் அகலம் ஏழு கோல் அளவு என்றும், நீளம் எட்டுக்கோல் அளவு என்றும், உயரம் நான்கு கோல் அளவு என்றும் கூறப்பட்டன. திரைச் சீலைகள் ஒரு முக எழினி, எதிர்முக எழினி, கரந்துவரல் எழினி என்று மூன்று வகை அமைக்கப்பட்டன. வழிகள் இரண்டு வைக்கப்பட்டு இருந்தன. மேடை மீது வருணப் பூதர் சித்திரங்கள் மாட்டி இருந்தனர். இந்த இசைக் கலைஞர்கள் அத்தெய்வங்களை வழிபட்டே நிகழ்ச்சிகளைத் தொடங்கினர். அதன் விளக்குகள் தூண்களின் நிழல்கள் தடுக்காதவாறு தக்க வகையில் அமைக்கப்பட்டன. தலைக்கோல் அதனை மேடையில் நிலைக்கோலாக வைத்துச் சிறப்புச் செய்தனர்.

ஆடல் நிகழ்ச்சி:

மாதவி வலக் கால் எடுத்து வைத்து மிதித்து மேடை மீது ஏறி வலப் பக்கம் சார்ந்து நின்றாள். துதிபாடும் தோரிய மகளிர் இடப் பக்கம் ஏறி நின்றனர். நிகழ்ச்சிகள் தொடங்கின.

முதற்கண் தெய்வப் பாடல்கள் இரண்டு அத் தோரிய மகளிர் பாடினர். அவற்றிற்குப் பக்க இசையாகக் கருவி இசையாளர் தொடர்ந்து இசைத்தனர். அவர்கள் பாடி முடித்த பிறகு மாதவி ஆடியும், பாடியும் தன் கலைத் திறத்தை அவையோர் அறியச் செய்தாள். நாடக நூல் காட்டிய இலக்கணம் பிழையாது பல்வகை ஆடல்களையும் கூத்து வகைகளையும் ஆடிக் காட்டினாள்.

முடிவுரை :

சிலப்பதிகாரம் ஒரு காப்பியமாக மட்டுமல்லாமல், நாடகத் தன்மைகள் நிறைந்த இலக்கியமாகவும் விளங்குகிறது. நிகழ்ச்சித் தொடர், உரையாடல், உணர்ச்சி வெளிப்பாடு, காட்சியமைப்பு ஆகியவை இதனை மேடைக்காட்சிக்கு ஏற்ற படைப்பாக மாற்றுகின்றன. ஆடல் ஆசான், இசையோன், புலவன், அரங்கஅமைப்பு மற்றும் ஆடல் நிகழ்ச்சிகள் ஆகியவை காப்பியத்தின் நாடகச் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. இதனால் சிலப்பதிகாரம் தமிழின் நாடக மரபையும் கலாச்சாரப் பாரம்பரியத்தையும் வெளிக்கொணரும் சிறந்த இலக்கியமாக திகழ்கிறது.

துணை நூற்பட்டியல் :

1. ந.மு.வேங்கடசாமி நாட்டார்(உ.ஆ), சிலப்பதிகாரம் (புகார்க் காண்டம்), பாாி நிலையம், சென்னை , முதற் பதிப்பு- 2003
2. முனைவர் அ. விசுவநாதன், நெடுநல்வாடை , கலித்தொகை - நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் பி லிட் , ஐந்தாம்பதிப்பு - அக்டோபர் -2014
3. முனைவர் அ. விசுவநாதன், கலித்தொகை - நியூ செஞ்சூரி புக் ஹவுஸ் பி லிட் , ஐந்தாம்பதிப்பு - அக்டோபர் - 2014
4.திருக்குறள் - பரிமேலழகர் ( உ .ஆ ) குமரன் பதிப்பகம் , தி நகர், சென்னை 6000017
5. முனைவர் ப.சு இலட்சுமி, நாடக நன்னூல், மீனாட்சி புத்தகநிலையம், மதுரை - முதல் பதிப்பு ,டிசம்பர் -2007

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.