முன்னுரை

இன்று ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே ஓராண்டிற்கும் மேலாகப் போர் நடைபெற்று வருகிறது. இதேபோல இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனியர்களுக்குமான போரையும் குறிப்பிட்டாக வேண்டும். இவைமட்டுமில்லாது உலகின் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போர்களும் பிராந்திய மோதல்களும் நடைபெற்று வருகின்றன. இவை எவற்றை முன்வைக்கின்றன என்பதே கேள்வி. இவ்விடத்தில்தான் அறம் (நீதி) குறித்தான கேள்வியையும் கேட்க வேண்டியிருக்கிறது.

போர் குறித்தான சிந்தனை நம்முடைய சங்க இலக்கியங்கள் தொடங்கி பார்க்கிறோம். நீதிநூல்களில் ஒன்றான திருக்குறளில் போருக்கான அறத்தையும் காண்கிறோம். சங்க இலக்கியங்கள் தொடங்கி அற இலக்கியங்கள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், பிற்கால நீதி நூல்கள், தற்கால இலக்கியங்கள் வரை அனைத்தும் பல்வேறு அறங்களை (நீதிகளை) முன்வைக்கின்றன. ஆனாலும், ஏன் எல்லாக் காலங்களிலும் போர்கள் உருவாகி வருகின்றன என்பது விளங்காமலே இருக்கின்றன. இவர்களுக்குள் அறம் என்பது இல்லையா? அல்லது அறம் போதிக்கப் படவில்லையா?.

மதங்கள் என்று வருகிறபோது ஒவ்வொரு மதமும் தங்களுக்கான நீதி போதனைகளை முன்வைப்பதைக் காணமுடிகின்றன. இருப்பினும் மனித உயிர்களும் பிற உயிரினங்களும் கிள்ளுக்கீரைகளாக நினைத்து ஏதோவொரு சிந்தனையால் சாகடிக்கப்பட்டு வருகின்றன. தீர்வு, எல்லா உயிர்களுக்குமான ‘அறத்தை’ ஒரு பண்டமாற்றுபோல எல்லாக் காலங்களுக்கும் பகிர்தல் வேண்டியிருக்கிறது. அவ் உயிரினங்களுக்கான சுயமரியாதையையும் உயிர்நேயத்தையும் கற்பித்தால் மட்டுமே மக்கள் உள்ளிட்ட பிற உயிரினங்களைக் குறைந்தளவேனும் சுரண்டுகிற உடைமை (முதலாளித்துவ) பண்பாட்டிலிருந்து தங்களைக் தற்காத்துக் கொள்ளமுடியும். செயற்கையாக உருவாக்கப்பட்ட எஜமான் X சேவகன், முதலாளி X தொழிலாளி, ஆண்டான் X அடிமை, அதிகாரமிக்கவன் X அதிகாரமற்றவன், என் எல்லை X பிறர் எல்லை, என் சாதி X பிறர் சாதி, என் மதம் X பிறர் மதம் என்கிற பல்வேறு ஏற்றத்தாழ்வுகளிலிருந்து தப்பித்துக் கொள்ள இயலும்.

உயிர்களின் இன்பம்

அறம் என்றால் என்ன? என்பதற்கு நன்மை X தீமை, ஏற்றத்தாழ்வு என்பதை அடியொற்றி பிறந்த ஒன்றாகப் புரிந்து கொள்ளலாம் என்பது அறிஞர்கள் கருத்து. மக்கள் புவிப்பரப்பில் பல குழுக்களாக, இனங்களாக, மொழிகளாக, நிலங்களாக, பண்பாட்டினராகப் பிரிந்திருக்கின்றனர். இங்குள்ள காற்றும் சூழலும் மண்ணிற்கும் இடத்திற்கும் ஏற்ப மாறுபட்டுக்கொண்டே இருக்கின்றன. வெப்பப் பிரதேசத்தில் வசிப்பவருக்குண்டான உணவுப் பழக்கவழக்கங்களும் குளிர் பிரதேசத்தில் வசிப்பவருக்கான உணவுப் பழக்க வழக்கங்களும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை. ஏன், ஒரே வீட்டில் பிறந்த இரு குழந்தைகளுக்குமான அறம் ஒன்றுபோல் இருப்பதில்லை. ஆண் குழந்தைக்கு ஒன்றும் பெண்குழந்தைக்கும் ஒன்றுமாக வளர்ப்புக் கொள்கைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இருவரும் ஆணாகவே இருந்தாலும் அவர்கள் இருவருக்கும் ஒரே விதி பொருந்துமா என்றால் அதிலும் ஏற்றத்தாழ்வு / பாகுபாடு இருப்பதையும் பார்க்கிறோம். இதில், படித்தவன் X படிக்காதவன், அதிகாரமுள்ளவன் X அதிகாரம் இல்லாதவன், அழகானவன் X அழகற்றவன், கருப்பன் X வெள்ளையன் (சிவப்பன்) என்ற வேறுபாடுகளைப் பொருத்து விதிகள் தீர்மானிக்கப்படுகின்றன. இருப்பினும் உயிர்களின் இயக்கம் ‘இன்பத்தை நாடுதல்’ என்பதே. அதற்காகத்தான் ஒவ்வொரு ஜீவனும் இறுதிவரை முயற்சிக்கிறது. இந்த உயிர்ப் பண்பை உணர்ந்த சான்றோர்கள் அறம் என்பது அவசியம் என்பதைக் கற்பிக்கலாயினர். தங்களால் முடிந்த அளவிற்குப் பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருத்தல் வேண்டும் என்பதை அனைவரும் பின்பற்ற வேண்டிய கடமைகளுள் ஒன்றாக முன்வைத்தனர். மேலும், பல கற்பிதங்களையும் உருவாக்கி இருக்கின்றனர். எல்லாவற்றிற்கும் அடிப்படை நோக்கம் ‘எல்லா உயிர்களும் இன்புற்று இருத்தல்’ என்பது. அவ்வகையில் சங்க இலக்கியம் தொடங்கி இன்றுவரையிலான இலக்கியங்கள் வரை ஏராளமான அறங்களை முன்வைப்பதன் நோக்கம் இதுவாகத்தான் இருக்கமுடியும். ஆனாலும், இலக்கியங்களில் வெளிப்பட்டுள்ள அனைத்து அறங்களும் அனைத்து உயிர்களுக்கும் நன்மை தரக்கூடியதா? என்றால் கேள்வியே.

சான்றாக, “ஆன்றவிந்த மூத்த விழுமியர் தம்முடன் செல்லும்போது வாகனத்தில் ஏறியும் காலில் செருப்பணிந்தும் குடைபிடித்தும் செல்லுதல் கூடாது” (ஆசாரம். 59) என்பது ஆசாரக்கோவை கூறும் அறமாகும். இந்த அறமானது 110oF அளவிற்கு வெப்ப அலை வீசும் இன்றைய சூழலுக்குப் பொருந்துமா? என்றால் பொருந்தாது. இவற்றை அனைத்து மக்களுக்கான பொது அறமாக எடுத்துக்கொள்ள இயலுமா என்றால் இல்லை என்றே சொல்வோம். இவ்விடத்தில் நினைவிற்கொள்ள வேண்டியது தமிழர் அறங்களாக வைதீக, அவைதீக, அறங்களும் உடைமைச் சமூக அறங்களும் கலந்திருப்பதைத்தான்.

‘சிங்கமும் தந்திரமான முயலும்’ என்கிற பஞ்சந்திரக் கதை உணர்த்தும் கருத்து அல்லது நீதி (moral) ‘உடல் வலிமையைவிட அறிவுதான் வலிமையானது’. உண்மை அதுவாக மட்டும்தான் இருக்கவேண்டும் என்பதல்ல. ஒரு சிங்கத்தின் பசித்தேவையைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக, மற்ற விலங்கு இனங்களையே வேட்டையாடுவது சிங்கத்திற்கான அறமாக இருக்கலாம். பிற விலங்குகளிடம் நீங்கள் உயிரை விடவேண்டும் என்று நிர்பந்திப்பது எவ்வகையில் சரி. அவ்விதியினை அனைத்து விலங்குகளும் எவ்வாறு ஏற்றுக்கொள்ள இயலும். அவையும் இம்மண்ணில் வாழவே பிறந்திருக்கின்றன. அதற்கும் இயல்பூக்க உணர்வுகளும் ஆசைகளும் உண்டு. சிங்கத்தின் இன்ப வேட்கை உணர்வுதான் மற்ற ஜீவராசிகளுக்கும் இருந்திருக்க முடியும். அவ்வாறிருக்க சிங்கராஜா தனக்கான அறமாகக் கொண்டவற்றை மற்ற விலங்குகள் ஏன் ஏற்க வேண்டும். அவ்வாறு நினைப்பது சர்வாதிகார சிந்தனையாகாதா?. ராஜாவை மட்டும் அடிப்படையாகக் கொண்டு சட்டங்கள் இயற்றப்படக்கூடாது. அதனை எதிர்கொள்ளவிருக்கிற மக்களையும் கவனத்தில் கொள்ள வேண்டுமல்லவா?.

மனிதர்களின் அறங்களைப் பொறுத்தவரை புற அளவிலான பார்வை மட்டும் பார்க்கக் கூடாது; அக அளவிலான பார்வையும் அவசியம். தமிழர்கள் அவ்வாறு அகம், புறம் இரண்டையும் இணைத்து எல்லா உயிர்களுக்குமானப் பொதுவான அறங்களை வளர்த்தெடுத்துள்ளனர்.

சங்ககால அறம் பற்றிப் பேசும் ராஜ் கௌதமன் “பழைய பாணர் மரபின் அகம், புறம் என்ற பொருள் மரபின் சட்டகத்துள் வடமரபின் தர்மம் (அறம்), அர்த்தம் (பொருள்), காமியம் (இன்பம்) என்னும் உறுதிப்பொருட்களைப் புலவர் மரபு உட்செறிக்க முயன்றுள்ளது” (ராஜ் கௌதமன், 2008:29) என்கிறார். ‘இதன் பின்னணியில் உடைமை சமூகத்தின் ஆதிக்கம், சமயங்களின் ஆதிக்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும் என்கிறார். அவ்வகையில்தான் ஐம்புலன்களின் அடக்கம், நா – பேச்சும் உணவும், ஈகை, நட்பு, கல்வி, அறிவு, உண்மை, நில்லாமை, வினை - ஊழ் –பிறவி, துறவு, சான்றாண்மை, சான்றோர் அறம், வணிக அறம், வைதீகம், பிராமணர், வேளாளர், பாலியல் முதலான அறங்கள் சங்க இலக்கியங்கள் தொடங்கி பிற்கால நீதிநூல்கள் வரை பேசப்பட்டுள்ளன’ என்கிறார். இச்சிந்தனை மிகமுக்கியமானது. சங்ககாலப் புலவர்கள் கூறிய அற ஒழுக்கங்களில் உடைமை சமூகத்தின் ஆதிக்கம் நிறைந்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள துணைநிற்கும்.

அன்பு

உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் தங்களோடு சகோதரத்துவ (நட்பு) உறவோடு இணைந்திருக்க வேண்டும் என்பதே தமிழரின் அவா. அதற்காக, ‘அன்பு’ என்பதை அறங்களில் முக்கியமான ஒன்றாக உருவாக்கி வளர்த்திருக்கிறார்கள். சங்கப்பாடல்களில் ஏராளமான பாடல்களை இதற்குச் சான்றாகக் கூறலாம். அன்பை விளக்குவதற்குத் தமிழர்கள் ஏராளமான விலங்குகளையும் பறவைகளையும் பிற உயிரினங்களையும் பயன்படுத்தியிருக்கிறார்கள். மனித இனத்தில் சான்று காட்டுவதற்கு இடமில்லை என்பதால் அல்ல. அவர்கள் விலங்குகளையும் பறவைகளையும் பிற உயிரினங்களையும் சமமாக மதித்திருக்கிறார்கள்; இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதால்தான்.

சான்றாக, கலித்தொகையில் (காண்க: கலி.11) பாலை பாடிய பெருங்கடுங்கோ பாடலில் பொருள்தேடச் சென்ற தலைவனை நினைத்து தோழி வருந்திக் கொண்டிருக்கிறாள். தலைவி யானை, புறா, மான் முதலான காட்டு விலங்குகளையும் பறவைகளையும் அவைகளுடைய காதலையும் (அன்பை) உவமைகளாகக் கூறி ஆற்றுப்படுத்துகிறாள். விலங்குகளின் அன்பும் மனிதர்களின் அன்பும் வேறுவேறல்ல. இன்னும் சொல்லப்போனால் விலங்குகள் மனிதர்களுக்கு அன்பைக் கற்றுத் தருகின்றன. இது மனிதனின் தொல்மனச் செயல்பாடு என்பதால் பொது அறம் என்கிறோம்.

ஈகை

உடைமை நாகரிக வளர்ச்சியைக் கடந்தும் சிலவற்றை வரவேற்றுதான் ஆகவேண்டும். ஈகை என்பதில் ‘வழங்குதல் X பெறுதல்’ என்கிற இரு செயல்கள் இருக்கின்றன. இதனை ‘ஆதிக்கம் X அடிமை’ (கட்டுப்பட்டவன்) என்பதாகவும் கொள்ளலாம். இருப்பினும் புலவர் மரபு ஈகை என்பதை உடைமை (ஆதிக்கத்தார்) சமூகத்தார் மத்தியில் உருவாக்கக் காரணம், இல்லாதவர்களுக்கான அங்கீகாரத்தை உண்டாக்கும் இடமாகும். ‘இல்லாதவர்கள்’ இல்லாமல் உடைமை சமூகம் நிலைபேறு அடைய வாய்ப்பில்லை. அதனை நேரடியாக உடைமையாளர்களிடம் கூறமுடியாது. அதற்காக, உங்களுடைய பெருமை நீங்கள் இறந்தபின்னும் நீடித்திருக்க ‘புகழ்’ பெறுதல் அவசியம். புகழை அடைய வேண்டுமானால் பொருட்களைச் சேர்ப்பதில் மட்டும் கவனம் கொள்ளாமல் அவற்றைத் தானமாக (தர்மமாக) வழங்குங்கள் என்கிற உந்துதலைப் (பயிற்சியினை) புலவர் மரபு உண்டாக்கி இருக்கலாம். அதற்கு முன்னோடியாக பாணர் மரபு, வேட்டை மரபு வளர்த்த அறங்களில் பாதீடு, உண்டாட்டு என்பவற்றைச் சுட்டலாம். இனக்குழு சமூகத்தின் பாதீடு - உண்டாட்டு பயிற்சி உடைமை சமூகத்தில் இல்லாதவர்களுக்கு ஈதல் என்கிற அறத்தை உருவாக்கி இருக்கிறது. சங்கமருவிய கால இலக்கிய நூலான திருக்குறளில் ஈதல் பற்றிக் கூறும் வள்ளுவர்,

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” (குறள்.231) 

என்கிறார். இக்குறளிற்கான விளக்கமாக மு.வரதராசனார் “வறியவர்க்கு ஈதல் வேண்டும். அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும். அப்புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை” என்கிறார். ஏனெனில் அனைத்து உயிரினங்களும் இந்த மண்ணில் எதிர்பார்ப்பது ‘இன்பம்’ என்கிற ஒன்றை மட்டும்தான். இதனை மனதில் கொண்ட சங்ககால பாணர் மரபு, வேட்டை மரபு, புலவர் மரபு ஆகியவைத் தொடர்ந்து மக்கள் மத்தியில் ஒரு சமத்துவ நிலையினை உருவாக்க முனைப்புக் காட்டியிருக்கிறது. புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதியின்,

“உண்டாலம்ம இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவது ஆயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;” (புறம்.182) 

என்னும் பாடலில் தான் உண்டால்போதும் என்று நினைக்காமல் ‘பிறரை உண்ணவைத்து உண்பது, பழியை நினைத்து அஞ்சச் செய்வது, உலகத்தில் உள்ள மக்களுடன் முரண் கொள்ளாதிருக்கச் செய்வது, பிறருக்காக முயற்சி மேற்கொள்வது’ முதலான பல கருத்துகளைக் காணமுடிகிறது. இவை தமிழர்களுக்கான அறங்களாக இன்றும் தொடர்ந்து வருகின்றன. ஈகையின் மூலம் பிறஉயிர்களை இன்புறச் செய்தல் என்பதே இதன் அடிநாதம். இப்பாடல் தனி உடைமை சிந்தனைக்கு எதிரான பாடல். எதிர்காலத் தேவையைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்ட உயிர்களுக்கான இயங்கியலை முன்னிறுத்துகிறது. அதனால்தான் தொல்கூறுகளின் பண்புகளோடு பிணைக்கப்பட்டுள்ள தமிழர்கள் அனைத்து உயிர்களுக்குமான பொது அறத்தைக் கட்டமைத்தவர்களாக இருந்திருக்கின்றனர் என்கிறோம்.

விருந்தோம்பல்

விருந்தோம்பல் என்பது தமிழரின் முக்கியமான பண்புகளுள் ஒன்று. ‘வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு’ என்கிற சிறப்பு அடைமொழியைப் பெற்றதும் இதன்காரணமாகத்தான். தமிழர்கள் நடு இரவில் விருந்தினர் வந்தாலும் மகிழ்ந்து வரவேற்று உணவிடக்கூடிய ப/வழக்கம் கொண்டவர்கள். நற்றிணையில்,“அல்லில் ஆயினும் விருந்து வரின் உவக்கும்” (நற்.142) எனும் பாடல் அடிகளின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம். தானியம் ஏதும் இல்லாத நிலையிலும் விதைக்காக வைத்திருந்த தானியங்களைக் கொண்டு உபசரித்தவர்கள். இதன்மூலம் தமிழர்கள் பசியாற்றும் வேலையை மிகச் சிறப்பாகச் செய்துள்ளனர் என்பதை விளங்கிக் கொள்ளலாம். (காண்க: புறம்.333). இது இனக்குழு சமூகத்தின் தொல்மரபின் அடையாளம்.

பொருள்

தமிழர்களின் பொருள்கள் குறித்த சிந்தனைகளும் சிறப்பாக உள்ளன. வளர்ந்து வரும் உலகமயமாக்கல் சூழலில் பொருள் குறித்தான பார்வை மிக முக்கியமானது. ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை’ என்பது வள்ளுவர் வாக்கு. இது தனி உடைமையை வளர்த்தெடுக்கும் சிந்தனை. இக்கருத்து பொருள்களின் மீதான பற்றினை உண்டாக்குமே ஒழிய அவற்றின்மீது பற்றிலாத்தன்மையை உருவாக்காது. திருக்குறள் உள்ளிட்ட அறநூல்கள் பொருள்களின் மீதான பற்று உலகப் பெருந்துன்பத்திற்குக் காரணமாக அமையும் என்கின்றன. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், விளம்பரமயமாக்கல் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிற நாம் இதனை ஏற்பதில்லை. உடைமை மீதான ஆதிக்கம் அதிகமாக வளர்ந்திருப்பது இதற்குக் காரணம். அதேசமயம், சங்ககாலம், வள்ளுவர் காலம் தொடங்கி தற்காலம் வரை பொருளை நேர்மையான வழிகளில் சேர்க்க வேண்டும் என்று அறத்தையும் கூறிவருகின்றனர். சேர்க்கப்பட்ட பொருள்களைத் தமக்காக மட்டுமில்லாமல் பிறருக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். இதற்குக் காரணம் மனித இனத்தின்மேல் கொண்ட அக்கறை. பொருளின்மேல் கொண்ட பற்றில்லாத்தன்மை. ஆகையால்தான் குடும்பத் தலைவிக்கு ஈதல் அறமே சிறந்தது என்கின்றனர். “இவளினுஞ் சிறந்தன்று ஈதல் நமக்கு” (அகம்.131) எனும் பாடல் வரிகளைச் சான்று காட்டலாம். இனக்குழு சமூகத்தில் பொருளுக்கு மதிப்பிருந்ததில்லை என்பதோடு இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

வணிகம்

தமிழரின் வணிகச் சிந்தனையினைக் கூறும் இடத்தில் கபிலரின் பாடல் நினைவுக்கு வருகிறது. பறம்பு நாட்டைப் பற்றிக் கூறும் கபிலர், பாரி இறக்குமுன் அவரை எதிர்த்து போருக்காக வரும் குதிரைகளை அவ்வூர் மக்கள் எண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். தற்போது உமணர்கள் ஏற்றிவரும் உப்பு வண்டிகளை எண்ணுபவர்களாய் இருக்கின்றனர் என்று வருந்துகிறார் (புறம். 116). இது வணிகத்திற்கு எதிரான பாரியின் (தமிழரின்) செயல்பாட்டைக் காட்டுகிறது. ஆய் என்கிற மன்னனின் அறச்செயல்களை விளக்குமிடத்து,

“இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவிலை வணிகன் ஆஅய் அல்லன்;” (புறம். 134) 

என்கின்றனர். அதாவது, இப்பாடலில் இருவேறு சமூக முரண்களை கவனிக்க முடிகிறது. குறுநில மன்னனாக இருக்கின்ற ‘ஆய்’ ‘அறவிலை வணிகன்’ இல்லை. அப்படியென்றால் வேறுசிலர் அல்லது பலர் (மன்னர்கள்) அறவிலை வணிகர்களாக இருக்கிறார்கள் என்பது இப்பாடலின் தொனிப்பொருள். அவர்களுக்கு மத்தியில் இனக்குழு சமூகத்தினுடைய எச்சமாக ‘ஆய்’ இருப்பது மிக முக்கியம். மற்றவர்கள் உடைமை சமூகத்தின் அங்கமாக இருக்கும்போது இவர் தனித்திருக்கிறார். இவ்விடத்தில், தமிழ்ச் சமூகம் பயன்கருதி நன்மை பயக்கும் அறங்களைச் செய்வதில்லை என்பது தெரியவருகிறது. மேலும், அன்றும் இன்றும் வளர்ந்து நிற்கிற மிகமோசமான வணிகச் சூழலைப் புரிந்து கொள்ளமுடிகிறது. தொல்கூறு கட்டமைக்கிற வாழ்க்கைமுறையானது பயன்கருதாது, கிடைக்கும் வளங்கள் அனைவருக்கும் பகிர்ந்தளிக்கபட வேண்டும் என்பதைத்தான். இங்கு விற்பனைக்கு இடம்தரக் கூடாது. இதனைத் தமிழரின் சமத்துவ சிந்தனையாக அடையாளம் காட்டலாம்.

கல்வி

சங்ககாலத்தில் பெண்கள் கல்வி, அறிவு ஆகியவற்றில் சிறந்து விளங்கியிருக்கின்றனர். சான்று, சங்க இலக்கியங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் இருப்பது. அவர்கள் ஒரு மன்னனுக்காகத் தூது செல்லும் அளவு அறிவு வாய்க்கப் பெற்றவர்களாக இருப்பது. ஔவை அதியமானுக்காகத் தூது சென்ற பாடல்கள் நமக்கு நினைவிருக்கும். பெண், ஆண் இடையிலான நட்புக்கும் ஔவையின் பாடல்களே சான்று. ஒருபெண்பாற் புலவர் அதியமானிற்காகத் தொண்டைமானிடம் தூது (புறம்.95) செல்வதும் அதியமானின் ஈகையைப் புகழ்ந்துரைத்தலும் மிக முக்கியமானது. இன்றைய ஜனநாயக அரசியலிலும் அரிதாகக் காணக்கூடியது. ஔவைக்குக் கிடைத்த கல்வி அறிவே இந்த அளவிற்கு அவரை உயர்த்தி இருக்கிறது. எனவேதான், பெண்கல்வியை முன்னிறுத்துகிற சங்க இலக்கிய மரபைத் தமிழர்களுக்கு மட்டுமானது என்றில்லாமல் உலகம் முழுமைக்குமான பொது அறம் என்கிறோம்.

பாலியல் அறம்

பாலியல் சுதந்திரம் என்பது ஆண்களுக்கு மட்டுமானது. பெண்களுக்குப் பாலியல் விருப்பத்தைப் பற்றிப் பேச இயலாத சமூகச் சூழலைத்தான் இன்றும் காண்கிறோம். அந்த அளவிற்கு ஆண் ஆதிக்கச் சமூகம் பெண்களுக்குப் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கின்றது. இச்சூழல் தொல்காப்பியம் தொடங்கி பல நூல்களில் காணமுடியும் என்று ராஜ் கௌதமன் தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும் நூலில் குறிப்பிடுகிறார். ஆனால், இனக்குழு சமூகத்தின் எச்சம் சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. சங்கப் பெண்பாற் புலவர்கள் தங்களுடைய பாடல்களில் தங்களுடைய விருப்பத்தை வெளிப்படையாகக் கூறுவதற்கு வாய்ப்பிருந்திருக்கிறது. குறிப்பாக, ஔவை,

“முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன் யானும் ஓர் பெற்றி மேலிட்டு
‘ஆஅ! ஒல்’ எனக் கூவுவேன் கொல்? –
அலமரல் அசைவளி அலைப்ப, என்
உயவுநோய் அறியாது, துஞ்சும் ஊர்க்கே” (குறுந்.28)

என்று கூறும் பாடல் அடிகளைச் சான்றாகக் கூறலாம். மேலும், திருமணத்தில் பெண்களின் விருப்பம் முக்கியம் என்பதற்கு, மணிமேகலை திருமணம் செய்வதற்கு விருப்பமில்லாமல் உதயகுமரனை மறுப்பதும், சீவக சிந்தாமணியில் சுபத்திரனின் மகள் கேமசரிக்கு நடக்கும் திருமணமுறையும் சான்றுகளாக அமைகின்றன. பக்தி இயக்கக் காலக்கட்டத்தில் ஆண்டாளைக் குறிப்பிடலாம். அவளும் பாலியல் சுதந்திரம் பெற்றவளாகவே காட்சி தருகிறாள். திருமாலைத் தன்னுடைய இணையராகக் கொள்ளவேண்டும் என்பதில் மிகத் தெளிவாக இருந்திருக்கிறாள். இவற்றை இனக்குழு சமூகத்தின் தொடர்ச்சியாகவே பார்க்கிறோம். எனவேதான், பெண்களுக்கானப் பாலியல் சுதந்திரத்தைப் பேசியுள்ள சமூகம் தமிழ்ச் சமூகம் என்கிறோம். ஆண், பெண் என்கிற பால்பாகுபாடு காட்டாத தமிழர் சிந்தனை மிகவும் முக்கியமானது.

அரசியல்

அரசியல் தெளிவும் தமிழர்களுக்கு இருந்திருக்கிறது. நாடோடி வாழ்க்கையை மேற்கண்ட இனக்குழுவின் அனுபவம் உடைமை சமூகத்திற்குப் பயன்பட்டது. பிசிராந்தையார் பாண்டியன் அறிவுடைநம்பிக்குக் கூறிய ‘வரிச்சுமை’ பற்றிய அறிவுரை மிகமுக்கியமானது. இதனை இன்றுள்ள அரசியல் சூழலோடு ஒப்பிட்டும் புரிந்து கொள்ளலாம். மக்களுக்குக் கூடுதலாக வரிச்சுமையை ஏற்றுவதென்பது,

“யானை புக்க புலம்போலத்
தானுமுண்ணா னுலகமுங் கெடுமே” (புறம். 184) 

என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆள்வோர்களுக்கு அறம் வேண்டும் என்கிற தமிழர்களின் அறவியல் உணர்வை அறியமுடிகிறது.

பொதுவுடைமைச் சிந்தனை

வ.சுப.மாணிக்கத்தின் ‘சங்க நெறிகள்’ எனும் கட்டுரையில் ‘அன்பு நெறிகள், மனிதநெறிகள், பொருள்நெறிகள், உலகநெறிகள் என்று பல வகையாகப் பிரித்துத் தமிழர்கள் அறத்தோடு வாழந்திருக்கிறார்கள்’ என்கிறார். தமிழர் வளர்த்த நெறிகள் என்பவை தமிழர்களுக்கு மட்டுமானதா என்றால் இல்லை. இந்தப் பூமியில் பிறந்த அனைத்து உயிர்களுக்குமான நெறியாக அணுகவேண்டும். இந்த நிலமும் மக்களும் வளங்களும் தனிப்பட்ட ஒருவருக்கு மட்டும் சொந்தமானதில்லை. இதனை ஆறறிவு கொண்ட மனித இனம் மட்டும் ஆக்கிரமித்துக் கொள்வதும் அதிகாரம் செலுத்துவதும் கூடாது. ஆகையால்தான் கணியன் பூங்குன்றனார், “யாதும் ஊரே யாவரும் கேளிர்” (புறம். 192) என்கிற பாடலைப் பாடியிருக்கிறார். சங்கப் புலவர்களுக்கு விசாலமான பார்வை இருந்தது. எல்லைகள் கிடையாது. குறிப்பிட்டவர்கள் மட்டும் உறவென்பதில்லை. எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும். இல்லையேல் உயிரினங்களுக்குள் வேறுபாட்டினையும் ஏற்றத்தாழ்வையும் அவை வளர்க்கும். அதனால் மதியாது நடக்கும் சூழல் நிலவும் என்பதை உணர்ந்தவர்களாகத் தமிழர்கள் இருந்திருக்கின்றனர். பொதுவுடைமைச் சிந்தனைக்காரர்களாக இருந்திருக்கிறார்கள்.

இவ்வாறு பல்வேறு அறங்கள் குறித்துத் தமிழர்கள் சிந்தித்திருக்கிறார்கள். இவ்வறங்களுள் சில இசங்களாக மாறி கவனம் பெற்றிருக்கின்றன. ஆனாலும், ராஜ் கௌதமன், “சமண-பௌத்தம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம், சமூகச் சீர்திருத்தம், காந்தியம், மார்க்சியம், தலித்தியம், சுயமரியாதை – இயக்கம், பெண்ணியம்… ஆகிய எதிர்ப்பு – மாற்று “அறங்கள்” தங்களுக்குள்ளே உள்ளார்ந்த வகையில் (immanet) ஒடுக்குமுறைக்கான “அறங்களை”க் கொண்டுள்ளன என்று கூறுவது வெற்று அரசியல் அல்ல; இயக்கவியல் அரசியலாகும்”3(ராஜ் கௌதமன், 2008:411) என்கிறார். இது மிக முக்கியமான கூற்றாகும். ஆகையால்தான் சங்க காலம் தொட்டு இன்றுவரை பல்வேறு அறங்களைப் பேசினாலும் சமூகத்தில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைப் போக்குவதில் பல்வேறு சிக்கல்கள் நீடிக்கின்றன. அதற்குப் பல்வேறு காரணங்களைக் கூறலாம். உடைமைச் சமூகத்தின் தோற்றம், சமயங்களின் (சமணம், பௌத்தம், வைதீக சமயங்கள்) ஆதிக்கம் என்று. அதனைக் கடந்து தமிழர்கள் முன்வைத்த அறங்கள் யாவும் தனிமனித சிந்தனைக்குள் புகவேண்டியதிருக்கிறது. அவை தனிமனித அறமாக மாற வேண்டியிருக்கிறது.

ஏனெனில் “அறம் என்பது இத்தகைய விதியல்ல. அது ஒருவன் தன்னுடன் வைத்திருக்க வேண்டிய உறவு முறையைப் பற்றியது, தனிமனிதன் தனது சொந்தச் செயல்களுக்கு ஓர் ஒழுக்கத் தலைவனாகத் தன்னைத்தானே உருவாக்கிக் கொள்ளுவதே அறம் என்கிறார் ஃபூக்கோ.” (ராஜ் கௌதமன், 2008:232) எனும் செய்தியை இதனோடு இணைத்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

தனிமனிதர்களின் தொகுப்புதான் சமூகம். தனிமனிதப் பண்பு செம்மையுறும்போது சமூகப் பண்பு உயரும். குற்றங்களில்லாத, ஏற்றத்தாழ்வுகளில்லாத, நன்மை தீமை என்று பாகுபடுத்த முடியாத அளவிற்கு அறத்தோடு கூடிய ஒரு நல்ல சமூகம் உருவாகும்.

இந்தியா மற்றும் உலகநாடுகள் அனைத்தும் உருவாக்கியிருக்கும் அரசியலமைப்புச் சட்டங்களை இந்தப் பின்னணியில் இருந்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது. மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர், அயோத்திதாசர் உள்ளிட்ட புரட்சியாளர்களின் சிந்தனைகளை அவ்வாறுதான் பார்க்கிறோம். தமிழர்கள் உணர்ந்த ‘உயிர்களின் இன்பம்’ என்கிற அறப்பின்னணியிலிருந்தே சாதிய இடஒதுக்கீடு, மகளிருக்கு 50% இட ஒதுக்கீடு, பாலின சமத்துவம், பெண்களுக்கு உரிமைத் தொகை, சாதி, மத பாகுபாடு கூடாது, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம், மதசார்பற்ற நாடு, சிறுபான்மையினருக்கான முன்னுரிமை சட்டங்கள், பதினெட்டு வயது நிரம்பிய ஆண், பெண், மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் வாக்குரிமை என்று முன்னெடுக்கப்படுகிற அரசியல் சட்டங்களாகப் பரிணமித்திருக்கின்றன. இதனை ஒடுக்கப்பட்ட உயிர்களுக்கான நீதியாக மேலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய பொறுப்பு நமக்கிருக்கிறது. அப்பொழுதுதான் ஒரு நாட்டிற்கும் இன்னொரு நாட்டிற்கும் போர்கள் நடைபெறாத சூழலை உருவாக்க முடியும். இச்சூழலில்தான் தமிழரின் தொல்கூறு தாயுமானவரின் தொடர்ச்சியாக மாறி “எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பதுவே அன்றி வேறறியேன் பராபரமே” என்று தொடர்ந்திருப்பதைபோலத் தமிழர்கள் வகுத்த அறம் எல்லை கடந்து அனைத்து நாடுகளும் ஏற்கக்கூடிய பொது அறமாக உருவாகும். அவ்வாறு உருவாகும்போது உலக நாடுகளுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக, சிறந்த பண்பாட்டைக் கொண்டிருப்பவர்களாகத் தமிழ்ச் சமூகம் அடையாளப்படும். தமிழரின் அறம் அனைத்துலகிற்கான பொது அறமாக உருவாகி நிற்கும் என்பதில் ஐயப்பாடில்லை.

துணைநின்றவை

ஆசாரக்கோவை, tamil virtual Academy

கலித்தொகை, tamil virtual Academy

திருக்குறள், tamil virtual Academy

புறநானூறு, . tamil virtual Academy

நற்றிணை, tamil virtual Academy

அகநானூறு, tamil virtual Academy

குறுந்தொகை, tamil virtual Academy

ராஜ் கௌதமன், தமிழ்ச் சமூகத்தில் அறமும் ஆற்றலும், 2008, விடியல்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.