முன்னுரை

உலகில் உள்ள தொன்மையான இனங்களில் தமிழினமும் ஒன்று. ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றிய மூத்தகுடி’ என்று சிறப்பித்து அழைக்கப்படும் தமிழினத்திற்கு என்று தனித்த பண்பாட்டு அடையாளமும், வரலாற்றுப் பின்புலமும் உண்டு. நாடோடி மக்களாக வாழ்க்கையைத் தொடங்கிய தமிழர் நிலையான குடியிருப்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து தாங்கள் வாழ்ந்த நிலப்பரப்பிற்கு உட்பட்ட பகுதிகளுக்கு என்று தனித்த அடையாளத்தை உருவாக்கினர். தங்களுடைய வாழ்க்கை முறைகளைச் செழுமையானதாக வடிவமைத்துக் கொண்டனர். இந்த நிலை ஈராயிரத்தைநூறு ஆண்டுகளுக்கு முன்னரே நடந்தேறியுள்ளது. நிலத்தின் அடிப்படையில் அமைந்தது அவர்களின் அந்த வாழ்க்கை முறை. அது மலை, காடு, வயல்வெளி, நீர்நிலை, வறண்ட நிலப்பரப்பு என்பதாக அமைந்திருந்தது. அதைப் பண்டைத் தமிழ் இலக்கியப் பாடல்களும் பதிவு செய்துள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற பெயர்களில் அமைந்த அவ்வாழ்வியல் அகம் – புறம் என இரு பிரிவாக அமைந்திருந்தது.

மிகப் பழமையான நாகரீகத்தைக் கொண்ட சமூகங்களில் ஒன்றாக விளங்கும் தமிழினத்தின் வாழ்வியல் தொடர்ந்து ஒவ்வொரு காலத்திலும் மென்மேலும் செழுமை பெற்று வந்துள்ளது. தொடக்கத்தில் காதல் / வீரம் என்றிருந்துள்ளது. அதன் பின்னர் அறம், பக்தி, பகுத்தறிவுச் சிந்தனை எனப் பல சிந்தனைகள் தொடர்ந்து உருவாகியுள்ளன. பல்வேறு அரசியல், சமூக நெருக்கடிகள் நிலவியிருந்த பின்னணியிலும், தொடர்ந்து காலச்சூழலுக்கு ஏற்பச் சிந்தனைகளைச் செழுமைப்படுத்தி வந்துள்ளனர். பிற இனத்தவரால் (பிற மொழி, பண்பாட்டுப் பின்னணி) அதிக காலம் ஆளபட்டிருந்தாலும், தமிழ்ச் சமூகத்தில் தம் இனத்தின் தனித்த அடையாளங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டுள்ளன. இன்றும் தொடர்ந்து பாதுகாப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த வரலாற்றுப் பின்னணியில் துறவறம் குறித்த தமிழரின் கருத்து என்ன? தமிழகத்தில் துறவின் தோற்றப் பின்னணி மற்றும் அதனுடைய வீரியம் எந்த அளவுக்கு இருந்தது அல்லது இருக்கின்றது? என்பன குறித்தான சில குறிப்புகளை மட்டும் மிகச்சுருக்கமாக அடையாளங்காட்ட முயல்கின்றது இக்கட்டுரை.

பழந்தமிழரும் துறவறமும்

பழந்தமிழினத்தின் அடையாளமாக விளங்குவது அகம் / புறம் என்ற இரண்டு. இது உலகில் எந்த இனத்திலும் பார்க்க இயலாத ஒன்று. தமிழர் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு உழைப்பை முதலாகக் கொண்டு தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். அதனால் அவர்கள் வீரம் மிக்கவர்களாகவும் வீரத்திற்கு நேர் எதிரான காதல் உள்ளம் கொண்டவர்களாகவும் தம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டனர். அவர்களது வாழ்க்கையில் பின்னாளில் துறவு என்ற ஒன்று நுழைந்தது. அது சமண, பௌத்தத் துறவிகளால் அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும், அது பழந்தமிழர் வாழ்வியலில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வீரியத்தோடு மக்களின் மனங்களில் இரண்டறக் கலக்கவுமில்லை. அதற்குக் காரணம் தமிழரின் நிலம் சார்ந்த வாழ்வியல். மண்ணும் மண்ணோடு தொடர்புடைய உயிர்களோடு அவர்கள் கொண்டிருந்த உறவு.

சங்க மருவிய காலமான கி.பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து சமண பௌத்தர்களுடைய தொடர்பு அதிகரிப்பதை வரலாற்றில் பார்க்க முடிகிறது. அந்தப் பின்னணியில்தான் அகம் / புறம் என்ற தமிழனுடைய வாழ்வியலில் பின்னிப் பிணைந்திருந்த உணர்வு நிலையுடன் ‘அறம்’ என்ற ஒன்று புதிதாக அடையாளம் காட்டப்படுகிறது. தொடர்ச்சியாக நடந்த போர்களும் அப்போர்களினால் உண்டான உயிர் இழப்புகளும் அதனால் மக்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட நிலையற்ற தன்மைகளும் ஒன்று சேர்ந்து ஒருவித வறட்டுத்தனமான வாழ்க்கையை ஏற்படுத்தியது. பதட்டமான சூழ்நிலையிலேயே மக்கள் தொடர்ந்து இருந்துவந்த பின்னணியில் இந்தத் துறவு உள்ளே நுழைந்தது. சமண, பெளத்த துறவிகள் வழியாக மக்களிடம் அறிமுகமானது.

தமிழகத்தில் துறவறம்

சங்க காலத்தில் இருந்தே இத்துறவிகள் தமிழகத்தில் இருந்துள்ளார்கள். அவர்களுடைய எண்ணிக்கை மிகக் குறைவான அளவிலே இருந்துள்ளது. அவர்கள் பாடிய பாடல்கள் சில சங்க இலக்கியப் பாடல்களில் இடம் பெற்றிருப்பதையும் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. அதனுடைய தொடர்ச்சியாகத்தான் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் அதைத் தொடர்ந்து உருவான சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற சமயப் பின்புலத்தோடு கருத்துக்களைச் சொல்லுகிற காப்பியங்களையும் இணைத்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. அப்படிப் பார்க்கிறபொழுது சமண, பௌத்தத் துறவிகளாக அடையாளம் காணுகின்ற இளங்கோவடிகள், சீத்தலைச் சாத்தனார் போன்ற பெரும் புலவர்கள் காப்பியங்களை உருவாக்கி இருப்பதையும் அந்தக் காப்பியங்களில் சுட்டப்படும் துறவு சார்ந்த குறிப்புகளையும், துறவு மேற்கொள்ளும் நபர்களுக்கு (இந்த மண்ணில்) பெரிய அளவிலான வரவேற்பு இல்லை என்பதை உணர்த்தும் குறிப்புகளையும் காணமுடிகின்றன.

அதேவேளை மாடலமறையோன், தேவந்தி போன்ற வேதநெறியைப் பின்பற்றுகின்றவர்களின் பின்னணியில் வைதீக மரபின் செல்வாக்குக் காலூன்றுவதையும் பாக்கமுடிகின்றது. இவ்வாறு முரண்பட்ட இருவிதமான உண்மைகளையும் இவ்விரு காப்பியங்களில் நுட்பமாகக் கூறப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அப்படிப் பார்க்கிறபொழுது சமண, பௌத்தப் பின்புலத்தில்தான் தமிழுக்குத் துறவு என்பதும் அந்தத் துறவின் மூலமாக மக்களுக்கு நன்மையைச் செய்வது என்ற ஒரு செயலும் தமிழுக்கு அறிமுகம் ஆகின்றது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

இங்கு இன்னொரு செய்தியும் கவனத்தில் கொள்ள வேண்டும். சங்க இலக்கியத்தில் குறிப்பாக மதுரைக் காஞ்சியில் சமணப்பள்ளி, பௌத்தப்பள்ளி என்ற குறிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தக் குறிப்புகள் மூலமாகச் சமணர்களும் பௌத்தர்களும் தமிழகத்தில் காலூன்ற ஆரம்பித்த காலகட்டத்தில் இரண்டு விதமான செயல்பாடுகளை இந்த மண்ணில் அவர்கள் செய்திருப்பதை அறிந்துகொள்ள முடிகிறது. ஒன்று அவர்கள் மக்களுக்கு அறிவு சார்ந்த முன்னெடுப்புகளைக் கொண்டு சேர்த்தது. இரண்டாவது மக்களின் பசிப்பிணியைத் தீர்த்தது.

துறவு நூலான மணிமேகலையில்,

அறம் எனப்படுவது யாது?" எனக் கேட்பின் 

மறவாது இது கேள் மன் உயிர்க்கு எல்லாம் 

உண்டியும் உடையும் உறையுளும் அல்லது

கண்டது இல்...................(மணிமே. 25;228-231)  

என்று பசியைப் பிணி என்றும் அதைப் போக்குவதே அறம் என்றும் கூறப்பட்டுள்ளதைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இவ்வளவு சிறப்புகள் கொண்டிருப்பினும் தமிழர்கள் மிகக் குறைந்த அளவில்தான் சமண, பௌத்த சிந்தனைகளால் கவரப்பட்டு அத்துறவுக் கோட்பாடுகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

அதற்கான முக்கியக் காரணம் அவர்களின் சிந்தனை. ‘உடம்பானது உணவால் அமைந்த பிண்டம். உடம்பில் உயிர் இருக்கவேண்டும் என்றால் உணவு வேண்டும். உண்ணும் உணவு நிலமும் நீரும் இணைந்த கூட்டுப்பொருள். நிலத்தில் நீரைச் சேர்த்து வைத்தால் உணவுப்பொருளின் விளைச்சலைப் பெருக்கலாம். எனவே நிலத்தில் நீர் தங்கும்படி சேமித்து வைத்தவர் உடலில் உயிரைப் படைத்தவர் ஆவார்’ (புறம்.18) என்று நம்பினர். அதனால் உழைப்பை அவர்கள் மிக முக்கியமான ஒன்றாக ஏற்றனர். மேலும், பசியைப் பிணியாகவும் அதைப் போக்குபவனை மருத்துவனாகவும், இல்லறத்தானாகவும் பார்க்கும் சிந்தனையும் அவர்களிடம் இருந்தது. எனவே ‘உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே’ என்ற சிந்தனை பெரிய அளவில் அவர்களிடம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

சிறிய அளவில் பின்பற்ற துறவியல் சிந்தனையும் பக்தி என்ற ஒன்றால் சிதைத்து ஒழிக்கப்பட்டது. அதாவது, சமண, பௌத்தப் பின்புலத்தில் உருவான துறவுச் சிந்தனை சைவ அடியவர்களிடம் குறிப்பாகத் தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர் மற்றும் அவர்களைத் தொடர்ந்து வந்த அடியவர்களின் மூலமாக நிகழ்ந்துள்ளது. சமண, பெளத்த துறவிகள் எல்லாம் அரக்கர்கள் என்று சித்தரிக்கப்பட்டுள்ளனர். ‘இந்த மண்ணில் இருந்து அவர்கள் அகற்றப்பட வேண்டியவர்கள்’ என்ற பிரச்சாரம் மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுள்ளது. சிந்திக்கத் தூண்டுபவர்களையும், கேள்வி கேட்பவர்களையும் ‘ஒற்றுமையைச் சிதைப்பவர்கள், தேசத்திற்கு எதிரானவர்கள்’ என்று இன்றைய காலகட்டத்தில் சித்தரிப்பதைப் போல அப்பிரச்சாரம் இருந்துள்ளது.

மக்களின் நன்மையே தங்களுடைய வாழ்வின் நோக்கமாகக் கொண்ட துறவிகளைக் கூட்டம் கூட்டமாக கழுவேற்றியுள்ளனர். அதை அதிகாரத்தின் (மன்னர்கள் உள்ளிட்ட) மூலம் ‘பக்தி’ என்ற பெயரில் (அனல் வாதம், புனல் வாதம்) நிறைவேற்றியுள்ளனர். இங்கு வேடிக்கை என்னவென்றால் இன்றும் நம் பாடப்புத்தகங்களின் வழி அவைப் பெருமிதமான ஒன்றாவே கூறப்படுகின்றன. தமிழகத்தில் மெல்லப் பரவ ஆரம்பித்த துறவுச் சிந்தனையை அழித்து தமிழரின் அக உணர்வின் மேல் கட்டி எழுப்பப்பட்டது. கடவுள் தலைவனான். பக்தன் தலைவியானாள். இப்படி உருவான பக்தி என்பது அடியவர், தொண்டர், பக்தர் என்ற பலப் பெயர்களை உருவாக்கின. புதிய மரபொன்றைக் காலூன்ற வைத்தது. அதை ஓர் இயக்கமாகவே கொண்டு செயல்படுத்த முனைந்தது. அது இன்றுவரை தமிழ் மண்ணில் தொடர்ந்து வீரியத்தோடு செயல்பட முயன்று கொண்டுள்ளது.

துறவு, துறவி - போலித் துறவி

துறவுக்கான இலக்கணம் என்ன? என்பது குறித்தும் இந்த நேரத்தில் சில அடிப்படையான செய்திகளைப் பார்ப்பது அவசியமாகிறது. ‘பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்று விடற்கு’ என்று திருக்குறளில் துறவுக்கான விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. அதாவது, ஒரு துறவி என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்று விளக்கம் அளிக்கின்றது. உயிர்களிடம் பற்று இல்லாத முழு முதல் கடவுளாக உள்ள இறைவனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ள வேண்டும். காரணம் இறைவன் பற்றற்றவன். அவனைப் பற்றினால் உலகத்தின் மீது கொண்ட அனைத்து விருப்பங்களையும் வெறுப்புக்களையும் ஒழிக்க முடியும். இதுதான் துறவு என்கிறது திருக்குறள்.

திருக்குறளில் சொல்லப்பட்டுள்ள துறவு சிந்தனைகள் சிலவற்றை அறிஞர்கள் சிலர் அது தமிழருடைய துறவு சிந்தனை என்பதாக அடையாளம் காணுகின்றனர். அது எந்த வகையில் சரியாக இருக்கும் என்று ஆராய வேண்டிய ஒன்று. ஏனெனில் நம்முடைய மரபு, பண்பாட்டுக் கூறு துறவை மேற்கொள்ளவில்லை. துறவு எக்காலத்திலும் தமிழருடைய அடையாளமாக இருந்ததில்லை. தமிழருடைய தனித்த அடையாளங்களில் இதுவும் ஒன்று. ஆனால், தமிழருடைய வாழ்வியலில் துறவுச் சிந்தனை தொடர்ச்சியாக தொடர்பில் இருந்து வருகிறது என்பதையும் மறுக்க முடியாது. வரலாற்று நெடுகிலும் அதைப் பார்க்க முடிகிறது.

அதேவேளை ‘பக்தி’ என்ற ஒன்று இந்தப் ‘பற்றுக பற்றற்றான் பற்றினை’ முதலான வெளியில் இருந்து வந்த ‘உண்மைத் துறவை’ இந்த மண்ணில் இருந்து முற்றிலுமாக அப்புறப்படுத்திப் போலியான ஒரு துறவினைப் ‘பக்தி’ என்ற பின்னணியில் உருவாக்கியது. இந்தப் போலித் துறவுதான் இன்றுவரை தொடர்ந்து நம் மண்ணைச் சிதைக்க முயன்று முயன்று தோற்றுக் கொண்டே இருக்கிறது. என்றாலும், அது தொடர்ந்து பல்வேறு வகையில் (வடிவங்களில்) தன் முயற்சிகளைக் கைவிடாமல் இருந்து வருகிறது. தமிழரிடம் துறவு சிந்தனை என்பது எடுபடாமல் போனதற்கும் (போவதற்கும்) முக்கியக் காரணங்களாக இரண்டைக் குறிப்பிடலாம். ஒன்று பகுத்தறிவுச் சிந்தனை. மற்றொன்று புதுமை நோக்கிய தொடர் தேடல்கள்.

20 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பெரியார் போல் அதற்கு முன்னர் எண்ணற்ற பகுத்தறிவுவாதிகள் தமிழ் மண்ணில் பகுத்தறிவுச் சிந்தனையை விதைத்துள்ளனர். அடையாளமற்ற அவர்களுடைய முயற்சிகள் இந்த மண்ணில் தொடர்ந்து நடந்திருக்கிறது. இன்றும் அது தொடர்கிறது. மேலும், உழைப்பைச் சுரண்டி பக்தியின் பெயரால் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கற்பிதம் செய்து கொண்டு சுகபோகமாக வாழும் போலித் துறவைத் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர். அதேநேரம் உண்மையான துறவிகள் இந்த மண்ணில் தங்களது முயற்சிகளை ஒருபுறம் முன்னெடுத்துச் சென்றிருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.

அந்த வகையில் ஒரு சிலரை இங்கு அடையாளம் காணலாம். குறிப்பாக, 19ஆம் நூற்றாண்டில் உருவான சித்தர் மரபில் தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கிய வள்ளலாரைக் குறிப்பிடலாம். சைவ சமயத்தின் பின்புலத்திலிருந்து தம் சிந்தனையைத் துவங்கிய வள்ளலார் இறுதியில் ‘அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை’ என்று முழக்கத்தோடு ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பசிப்பிணியைப் போக்குவது தன்னுடைய வாழ்வின் முக்கிய பணியாக வாழ்ந்து மறைந்தார். இது சமண, பௌத்தச் சிந்தனைகள் இந்த மண்ணில் விட்டுச் சென்றதின் மறு ஆக்கம் எனலாம். அதாவது, மணிமேகலை, ஆபுத்திரன் அட்சயப் பாத்திரத்தின் எச்சமாகக் கொள்ளலாம்.

இது ஒருபுறமிருக்க கால்டுவெல், எல்லீஸ் துரை, ஜி.யு. போப், வீரமாமுனிவர் போன்ற பல்வேறு கிறிஸ்துவத் துறவிகள் இங்குத் தமிழர்களாகத் தமிழின் மீது கொண்ட பக்தியின் காரணமாகத் தங்கள் அடையாளத்தை மறந்தனர் (மாற்றிக் கொண்டனர்) என்பது வரலாறு. குறிப்பாக, ‘கான்ஸ்டன்டிஸ் ஜோசப் பெஸ்கி' என்ற தன்னுடைய பெயரை ‘தைரியநாதன்’ என்று மாற்றியவர் அது சரியான தமிழ்ப் பெயர் இல்லை என்று பின்னாளில் ‘வீரமாமுனிவர்’ என்று மாற்றினார். இது ஓர் உண்மையைச் சொல்லிச் செல்கின்றது. தமிழன் எக்காலத்திலும் துறவரத்தை அனுமதித்தவன் இல்லை. துறவு என்பது தமிழனுக்குத் தேவையற்ற ஒன்றாகவே அது எல்லா காலத்திலும் அவனுக்கு அந்நியப்பட்டதாகவே இருந்திருக்கிறது என்று.

உறுதிப் பொருளில் உண்டான மாற்றம்

பண்டைக் காலம் முதல் இந்தச் சிந்தனை இருந்து வந்துள்ளது. இதைச் சங்க இலக்கியங்கள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள பாடல்களின் பின்னணியில் பார்ப்பது சரியாக இருக்கும். தமிழர் மரபில் முதலிடம் பெறுவது இன்பம். அதற்கடுத்து பொருள் மற்றும் அறம். இன்பத்தை நுகர விரும்பும் ஒருவர் அதற்குத் தேவையான பொருளை அறத்தின் வழியில் ஈட்டி அறத்தின் வழியில் அதைச் செலவு செய்வது என்பதாக அமையும் என்கிறது சங்க இலக்கியங்கள். அதாவது, ஓர் ஆண்மகன் ஒரு பெண் மகளைக் காதலித்து அக்காதலைத் திருமணம் என்ற பந்தத்தில் இணைப்பதற்குப் பொருளை ஈட்டி அவ்வாறு ஈட்டிய பொருளைத் தான் (தனக்கு) மட்டுமே செலவழிக்காமல் மற்றவர்களுக்கும் கொடுத்து இன்பமான வாழ்க்கையை வாழ்வது என்பதாக இது அமைகிறது. பண்பட்ட அக்கால வாழ்க்கையானது இவ்வாறு இன்பம், பொருள், அறம் என்ற வரிசை முறையில் அமைந்திருந்தது.

ஆனால், அது பின்னாளில் இன்பத்திற்கு மூன்றாவது இடமும் பொருளுக்கு இரண்டாவது இடமும் அறத்திற்கு முதலிடமாகவும் என இடம் மாறியுள்ளது. அறம், பொருள், இன்பம் (வீடு) என மாறிய அம்மாற்றம் பற்றித் திருக்குறளில் கூறப்பட்டுள்ளது. இது சங்க மரபிலிருந்து முற்றிலும் மாறுபட்ட அல்லது நேர் எதிரான ஒரு பண்பாட்டுச் செயல்பாடாகும். அத்துடன், இதில் ‘வீடு’ என்ற ஒன்று புதியதாக உருவானதைப் பார்க்க முடிகின்றது. இங்கு ஒரு கேள்வி எழலாம் சங்க காலத்தில் துறவு என்ற ஒன்று இல்லையா? அப்படி இல்லை என்றால் சங்க காலத்தில் முழுக்க முழுக்க அகம் புறம் மட்டுமே இருந்ததா? இந்த வினாவை நாம் மிகச் சுலபமாகப் புரிந்து கொள்ளலாம். சங்க இலக்கியங்களில் 90 விழுக்காட்டிற்கு மேல் அகம் சார்ந்த பாடல்கள் தான். மிகக் குறைந்த எண்ணிக்கையிலே புறப் பாடல்கள் இருப்பதையும் திருமுருகாற்றுப்படை பரிபாடல் போன்றவற்றில் இடம்பெற்றுள்ள பக்தி சார்ந்த குறிப்புகள் என்பது பின்னாளில் பாடப்பட்டவை என்பதும், அப்பாடல்கள் தொகுக்கப்பட்டவர்களால் பின்னாளில் சங்க இலக்கியத்தில் கொண்டு சென்று சேர்க்கப்பட்டது என்பதும் அறிஞர்களால் மிகத் தெளிவாக விளக்கப்பட்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் இணைத்துப் பார்க்க, சங்க மரபில் துறவு என்பதும் துறவறம் என்ற ஒன்றும் இல்லாமல் இருந்த ஒன்று என்பது உறுதி.

மேலும், சங்க காலத்தில் துறவு என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. துறந்தோன், துறப்ப, துறப்பான், துறப்பார் என்பன போன்ற சொற்கள் உள்ளன என்றாலும், அவை ‘பிரிவு’ என்ற பொருளில் அதுவும் தலைவன் தலைவி இடையிலான பிரிவு என்றே உள்ளது. ஆனால் துறந்தார், துறந்தார் பெருமை, துறந்தார்க்கும் எனத் ‘துறவு’ என்ற பொருளில் பின்னாளில் பயன்படுத்தபட்டுள்ளது. இதைத் திருக்குறலில் இருந்து அறிகின்றோம்.

இல்லறமும் துறவறமும்

துறவுநூல் என்று கூறப்படும் மணிமேகலை சமுதாய வாழ்வின் அடிப்படை நெறியாகிய இல்லறத்தைத் திடமாக வற்புறுத்துகின்றது. 'பத்தினி இல்லோர் பல்லறம் செயினும் புத்தேள் உலகம் புகார்' ( மணிமே.22:117- 18) என்ற அடிகளில், இல்லற வாழ்வை ஏற்காதவர் என்ன அறம் செயினும் பயனில்லை என்பதை வற்புறுத்திக் காட்டுகிறது. மேலும், துறவியாகிய மணிமேகலையின் கையுள்ள வெற்று 'அமுதசுரபி' சிறந்த இல்லறத்தாளாகிய ஆதிரையின் கையினாலே சோறிடப்பட்ட பிறகே எடுக்க எடுக்கக் குறையாத நல்ல உணவைத் தந்தது. மேலும், துறவறத்தினையும் அதனொடு சார்ந்த பிறவற்றையும் அறமெனக் காட்டாது, உலகில் இன்றியமையாத உணவினை அளிக்கும் சிறப்பினையே அறமெனக் காட்டுகிறது மணிமேகலை. அறங்களில் எல்லாம் சிறந்தது ‘மாசில்லாத மனமே’ என்று சொல்லும் வள்ளுவரும் கூட ‘அறம் எனப்பட்டதே இல்வாழ்க்கை’ என்றே குறிப்பிட்டுள்ளார். இவையெல்லாம் சங்க மரபின் எச்சங்களாகும்.

சங்கப் பாடல்களில் ஒன்றான குறிஞ்சிப்பாட்டில் தான் காதலித்த பெண்ணைத் திருமணம் செய்ய விரும்பும் தலைவன் ‘இல்லறத்தின் அறமே விருந்தோம்பல் என்றும். விருந்தினர் உண்டு எஞ்சியதைத் தலைவியே உன்னோடு நான் உண்டு மகிழ்வதே இன்பமாகும் (குறிஞ்.பா.200-15)’ என்று கூறுவதான இடமும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இல்லறத்தின் சிறப்புகள் சொல்லப்படும் பின்புலத்தில்தான் மறுபுறம் தன் காதலன் இறந்ததால் மாதவி தன் மகளுடன் பெளத்தத் துறவியானாள். மணிமேகலையின் தோழியான சுதமதி தன் காதல் கணவன் கைவிட்டதால் முதலில் சமணத்திற்கும் பின்னர் பெளத்திற்கும் மாறி துறவியான்னாள். குண்டலகேசியின் துறவும் இதே பின்புலத்தில் இருப்பது. கவுந்தியடிகள் துறவும் ஏமாற்றத்தின் பின்னணியில் தான் ஏற்பட்டது என்று நீளும் பட்டியலில் தன் கணவனால் துறத்தப்பட்டதால் துறவியான புனிதவதியார் இணைவது எனப் பெண்களின் துறவுப் பின்னணியில் அவர்களின் வ‍ழ்க்கையின் ஏமாற்றங்களே காரணமாக இருக்க, மறுபுறம் ஆண்களின் துறவு வாழ்வானது அறவண‍ அடிகள் தொடங்கி பட்டினத்தார், வள்ளலார் என முக்தி என்ற ஒன்றை நோக்கி நடப்பதாகச் சுட்டப்படுகிறது. பெண்களுக்கு ஆண்களைப் போன்று முக்தி என்ற ஒன்று கிடையாது என்பது ஓர் உண்மை. அது ஒரு புறமிருக்க ஆண்களுக்கு நிகரான அளவில் ‘துறவு வாழ்வியல் உரிமையும் கூட பெற்றிருக்கவில்லை’ என்ற மற்றொரு உண்மையும் இருந்தது கவனத்தில் கொள்ளத்தக்கது.

முடிவுரை

பசியைப் பிணியாகவும் அதை நீக்குபவனை மருத்துவனாகவும் அடையாளம் கண்ட இனம் ஆதலால் தமிழர்கள் பசியைப் போக்குகிற வேலையை முக்கியமானதாகக் கருதினர். அதேவேலையைச் செய்த பௌத்தச் சிந்தனையைத் தன்வயப்படுத்திய வைதீக நெறி பக்தியின் பின்புலத்தில் பிரசாதம் கொடுப்பது, அன்னதானம் செய்வது, ‘தானத்தில் சிறந்த தானம் அன்னதானம்’ என்று சொல்லுவது என்ற செயல்பாடுகளாக இன்று மாற்றியுள்ளன. இவை பல்வேறு வடிவங்களாக இன்று மக்களிடையே பயன்பாட்டில் இருப்பதைப் பார்க்க முடிகிறது. என்றாலும், இந்திய நாட்டின் சட்ட முன் வரைவுக்கு இறுதி வடிவம் கொடுத்துச் சென்ற அம்பேத்கர் என்ற சட்டமேதையையே கவர்ந்த பௌத்தச் சிந்தனை கூட தமிழ் மண்ணில் நிலை பெறாமல் போனது. அதற்கு அடிப்படைக் காரணம் தமிழன் கடவுள் நம்பிக்கை இல்லாதவன். அவன் உழைப்பை நம்பியவன். பகுத்தறிவு சிந்தனையை அடிப்படையாகக் கொண்டவன். காதல் உள்ளம் கொண்டவன் என்ற அவனது மரபின் தொடர்ச்சி இன்றும் அவனுக்குள் ஊறி உள்ளூர செயல்படுவதுதான்.

துணை நின்றவை

    இராசாராம். வித்துவான் துரை. பதினெண் கீழ்கணக்கு நூல்கள் தெளிவுரை, 1995 (முதற்பதிப்பு), முல்லை நிலையம், சென்னை- 600 017.

    இளவழுதி.வீ., சிலப்பதிகாரம் (மூலமும் உரையும்), 2015 (முதல் பதிப்பு), தி.நகர், சென்னை - 600 017.

    சிதம்பரனார், சாமி.,  சிலப்பதிகாரத் தமிழகம், 2008 (முதல் பதிப்பு), அறிவுப் பதிப்பகம்,  இராயப்பேட்டை, சென்னை – 600 014.

    சிதம்பரனார். சாமி., மணிமேகலை காட்டும் மனித வாழ்வு, 2018, கௌரா பதிப்பகம் 6 /16 தோப்பு வெங்கடாசலம் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005.

    சீனிச்சாமி. து., தமிழ் காப்பிய கொள்கை, 1985 (முதல் பதிப்பு) தமிழ் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் - 613 010.

    தண்டபாணி.துரை (உ.ஆ)., மணிமேகலை (தெளிவுரை), 2019 (எட்டாம் பதிப்பு), உமா பதிப்பகம், சென்னை - 600 001.

    துரைச்சாமிபிள்ளை. ஒளவை சு., முப்பெருங்காப்பியங்களில் ஒன்றான மணிமேகலை ஆராய்ச்சி, டிசம்பர் - 1942, கழக வெளியீடு, சென்னை – 600 018.

    நடராசன், தி.சு., சிலப்பதிகாரம் மறுவாசிப்பு,  2015 (முதல் பதிப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை - 600 098.

    பஞ்சாங்கம், க., இலக்கியத் திறனாய்வு (பஞ்சாங்கம் கட்டுரைகள் II), 2010 (முதல் பதிப்பு), காவ்யா வெளியீடு, கோடம்பாக்கம், சென்னை – 600 024.

    மாணிக்கம்.ஞ (உ.ஆ)., சிலப்பதிகாரம் தெளிவுரை, 2019 (பத்தாம் பதிப்பு), உமா பதிப்பகம், சென்னை – 600 001.

    மாணிக்கம். வ.சுப., இரட்டைக் காப்பியங்கள், 1958 (முதல் பதிப்பு) செல்வி பதிப்பகம், காரைக்குடி- 630 001.

    மீனாட்சி சுந்தரனார், தெ.பொ., சிலப்பதிகாரம் குடிமக்கள் காப்பியம் தெ.பொ.மீ களஞ்சியம் - 4, 2005 (முதல் பதிப்பு), காவ்யா வெளியீடு, கோடம்பாக்கம், சென்னை - 600 024.

    வேங்கடசாமி. மயிலை சீனி., பௌத்தமும் தமிழும், டிசம்பர் - 1942, கழக வெளியீடு, சென்னை – 600 018.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.