ஆளுமையைப் பற்றிய விரிவான கருத்துக்களை எடுத்துரைத்தவர்களுள் காரல் யுங் குறிப்பிடத்தக்கவர் ஆவார். இவர் பகுப்பு உளவியல் கோட்பாட்டைத் தோற்றுவித்தவர். இயற்கைக்கு அப்பாற்பட்ட உலகத்தில் நம்பிக்கை கொண்ட தீவிரமான சமயவாதியாகத் திகழ்ந்தவர். இயல்பான மனித உலகம் அவருக்கு எவ்வளவு உண்மையானதோ, அந்த அளவு அமானுட உலகமும் அவருக்கு உண்மையானது. அந்த நம்பிக்கையை அவருடைய சுயசரிதையும் மற்றும் அவர் எழுதிய உளவியற் புத்தகங்களும் மிகுந்த அக்கறையுடன் வெளிப்படுத்தி உள்ளதை அறிய முடிகின்றது. அவா் குறிப்பிட்டுள்ள ஆளுமை வகைப்பாடுகளை விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

பிராய்டும் யுங்கும்

காரல் கசுதவ் யுங் கெஸ்வில் நகரில் 1875 ஜீலை 26 ஆம் நாள் பால்அக்கிஸ், எமிலி பிரிஸ்வொ்க் தம்பதியின் மகனாகப் பிறந்தார். 1895 இல் University of Basel இல் மருத்துவம் படித்தார். 1900 இல் Zürich நகரில் உள்ள Burghölzli என்ற மருத்துவமனையில் மனநோய் மருத்துவராக Eugen Bleuler என்பவருடன் இணைந்து பணியாற்றினார். அவர் சிக்மண்ட் பிராய்டுடன் ஏற்கனவே தொடா்பு கொண்டிருந்தார். யுங்கின் ஆய்வேடு 1903இல் வெளியிடப்பட்டது. அவரது ஆய்வேட்டின் தலைப்பு On the Psychology and Pathology of So-Called Occult Phenomena.1 1906இல் Studies in Word Association இல் அதனை வெளியிட்டார். அதனுடைய பிரதி ஒன்றினை பிராய்டுக்கு அனுப்பி வைத்தார். அதன் பின்னா் இருவருக்கும் இடையில் நெருங்கிய தொடா்பு ஏற்பட்டது.

பிராய்டுக்கும் யுங்கிற்கும் இடையிலான பிரிவு

பிராய்டும் யுங்கும் ஆறு வருடங்கள் ஒருவருக்கொருவா் பணியில் உதவியாக இருந்தனா். 1912 இல் யுங் Wandlungen und Symbole der Libido 2 (known in English as Psychology of the Unconscious) என்னும் நூலை வெளியிட்டார்.கருத்து மாறுபாட்டின் காரணமாக பிராய்டுக்கும் யுங்கிற்கும் இடையில் பிரிவு ஏற்பட்டது.

உளவியல் ஆய்வில் பிராய்டின் உளப்பகுப்பாய்வுக் கொள்கை உலகின் பல இடங்களில் பரவியது. பிராய்டின் கொள்கையை மறுத்து காரல்யுங் சில கருத்துக்களை வெளியிட்டுள்ளார். யுங் “தான்” (Self) என்ற தன்னுணர்வாற்றல் தான் மனிதனின் முழுமையான ஆற்றலுக்கு மையமாகத் திகழ்வதாகக் கருதினார்.

“ஃபிராய்டின் கோட்பாடு பாலியல் உந்துதல்களை அடிப்படையாகக் கொண்டதாகும். அவை உந்துதல்கள் உள்சிந்தனை (ஈத்-உள்ளவம்), தன்முனைப்பு (ஈகோ-தானவம்), இடித்துரைக்கும் மேல்மனம் (ஸபர்ஈகோ) ஆகியவற்றையும், பிரக்ஞைபூர்வ மற்றும் பிரக்ஞைபூர்வமற்ற நோக்கங்கள், அவற்றின் இடைவினைகள் ஆகியவற்றையும் சார்ந்துள்ளன. ஒரு தனிமனிதர் பயன்படுத்திக் கொள்ளக் கூடிய பாதுகாப்புச் செயல்பாடுகளுக்கும் ஃபிராய்டு முக்கியத்துவம் கொடுத்தார்.

ஃபிராய்டைப் போலவே பிரக்ஞைபூர்வமற்ற உந்துதல்களுக்குச் சிறப்பிடம் கொடுத்த யுங், பாலியல் உந்துதலைக் கணக்கில் சேர்க்கவில்லை. மேலும் மனிதர்களை அகவயத்தார் மற்றும் புறவயத்தார் என்று பகுக்கக்கூடிய விதத்தில் ஒரு கொள்கையை முன்மொழிந்தார். ஒரு தனிமனித ஆளுமை என்பது (அதாவது சமூகப்புறத்தோற்றம்) வழிவழியாக வந்த நினைவுகளின் சேகரிப்பான “பிரக்ஞைபூர்வமற்ற தொகுப்பு” என்பதிலிருந்து வடிவமைக்கப் பெறுகிறது என்றும் யுங் வலியுறுத்தினார்3எஸ். சுந்தர சீனிவாசன் (ஆசிரியர்), ஆளுமை மேம்பாடு, ப.247 ) என்பா். அந்த அடிப்படையில் யுங் மனிதா்களின் ஆளுமையை வகைப்படுத்தியுள்ளாா்.

ஆளுமை வகைப்பாடு

காரல்யுங் மனிதர்களின் ஆளுமையை அவர்களின் பண்புக் கூறுகளின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார்.

“ஆளுமை எதிர் எதிர் நிலையில் இரண்டு வகையாக அமைகிறது. அகவயத்தார் உள்நோக்கிய எண்ணம் கொண்டவா்களாக தங்களைப் பற்றிய சொந்த எண்ணங்களிலேயே இருப்பவா்களாக அமைகின்றனா். புறவயத்தார் உலக எண்ணங்களிலேயே கவனம் செலுத்துவா். ஆனால் பெரும்பாலான மக்கள் இரண்டு வகையான எண்ணங்களும் கலந்தவா்களாக உள்ளனா்”  என்பார்.

தனிமனிதனின் மனதில் ஏற்படக் கூடிய ஊக்கத்திறன் உள்நோக்கிச் செல்லுமாயின் அவன் அகமுக ஆளுமை கொண்டவன் என்றும் வெளியுலகை நோக்கிச் செல்லுமாயின் புறமுக ஆளுமை கொண்டவன் என்றும் யுங் விளக்குகின்றார்.

மனிதர்கள் இத்தகைய இரண்டு ஆளுமையையும் பெற்று விளங்குவதால் பின்னாட்களில் இதே வகைப்பாடு மூன்றாகவும் அமைகிறது. மனிதர்களை அவர்களின் பண்புகளின் அடிப்படையில்

“வெளிநோக்காளர் (Extrovert) 4

உள்நோக்காளர் (Introvert) 5

இருநோக்காளர் (Ambivert)”   ( எஸ். சுந்தரசீனிவாசன், ஆளுமை மேம்பாடு, ப.12.) என்றும் பின்னாட்களில் வரையறை செய்துள்ளனர்.

அகவயத்தார்

மனிதர்களில் சிலர் தம்மைப் பற்றிய எண்ணத்திலேயே இருக்கின்றனர். இத்தகைய பண்புக்கூறினை அகவயம் என்பர். அகவயப் பண்புக் கூறினை உடையவர்கள் சமூகச் சூழல்களில் இருந்து ஒதுக்கியும் தம்வயப்பட்டும் கூச்சம் மிகுந்தும் இருப்பர்.

“Introvert என்ற சொல்லானது intro, vertre என்ற இலத்தீன் சொற்களின் கூட்டுச்சொல்லாகும். intro – உள்நோக்கி, vertre – திருப்பு என்ற பொருள்களைத் தருகிறது. இவை உள்முகமாக மனதைத் தன்பால் கொண்டு செல்லும் ஆளுமையைக் குறிப்பிடுகின்றன. இவ்வகை ஆளுமையினா் மக்கள் கூட்டங்களைத் தவிர்ப்பா். தங்கள் பொழுதைத் தனிமையிலேயே கழிக்க விரும்புவா்.புறவயத்தார் அகவயத்தாருக்கு நோ்மறையானவர்கள்.இவா்கள் மற்றவா்களுடனான தொடா்புகளில் ஆற்றலைக் காண்பா்” என்று குறிப்பிடுவா்.

“அகவயத்தார் பெரும்பாலும் தங்களைப் பற்றிய சுய சிந்தனைகளிலேயே இருப்பா். அமைதியான மனநிலை கொண்டவா்கள். தங்களைச் சுற்றி இருக்கும் மக்களை விரும்பினாலும் கூட்டத்துடன் இருக்க விரும்ப மாட்டார்கள். விருந்து கொண்டாட்டங்களில் பங்கு கொள்வது இவா்களுக்குப் பிடித்தமாக இருக்காது. ஆயினும் அகவயத்தார் எல்லா நேரங்களிலும் கூச்சம் கொள்பவா்களாக இருப்பது இல்லை”  என்பார்.

“அகவயத்தாராக இருந்தாலும் அவரால் வேடிக்கையாக, கூா்மையாக, கவனிக்கின்ற மற்றும் துல்லியமாக பேசுபவராக இருக்க முடியும்” என்றும் குறிப்பிடுவார்.

“அகவயத்தார் குறித்து யுங், பொதுவாக அகநோக்கு உடையவர்கள் தயக்கம் கொண்டவர்களாகவும் வெளிப்படையாகப் பேசாதவர்களாகவும், தனிமை விரும்பிகளாகவும், மந்தமாகவும், கலந்துரையாடுவதில் விருப்பமற்றவர்களாகவும் இருப்பர்” ( Daryl Sharp, Personality Types Jung’s Model of Typology, p.15 ) என்று குறிப்பிடுவர்.

“அகவயத்தார் தன்னை முன்னிலைப்படுத்தத் தயங்குவா். சமுதாயத்தில் இருந்து விலகி இருக்கவே விரும்புவர். தனிமை விரும்பிகள். தனக்குச் சாதகமான, பாதுகாப்பான, தனிவழியை விரும்பித் தேர்ந்தெடுப்பர். தாழ்வு மனப்பான்மை, பொறாமை, பிறரை நம்பாத போக்கு உடையவர். எதிர்மறை எண்ணங்கள் நிறைந்தவர். கவலை அதிகம் சுமப்பவர்கள். இவர்கள் உலகம் தனித்து விடப்பட்ட, பொது மக்களுக்கு அனுமதி இல்லாத இரும்புத்திரை காண்ட ஆராய இயலாத உலகமே சொர்க்கம் என உலாவுவா்” 6( Daryl Sharp, Personality Types Jung’s Model of Typology, p.66) என்று அகவயத்தாருக்கான குணநலன்களை யுங் விவரித்துள்ளார்.

புறவயத்தவர்

அகவயப் பண்புக் கூறினுக்கு எதிரிடையான பண்புக் கூறு புறவயம் எனப்படும். புறவயப் பண்புக் கூறினை உடையவர்கள் நண்பர்களை விரைவில் தேடிக் கொள்பவராகவும், கூச்சமின்றிப் பிறருடன் பழகுபவராகவும் இருப்பர்.

“இந்த வகை ஆளுமை கொண்டவா்கள் சமூகத்துடன் கலந்து இருப்பவா்கள். நடைமுறை வாழ்வோடு இணைந்து இருப்பவா்கள். அனைவருடனும் அன்புடன் பழகக் கூடியவா்கள். உரையாடல் திறன் மிக்கவா்கள். செயல்துடிப்புடன் விளங்கக் கூடியவா்கள். வெளிப்புற நடவடிக்கைகளை விரும்புபவா்கள். சமூகத்துடனும் சமூகம் சார்ந்த செயல்பாடுகளுடனும் இணைந்து செயல்படுபவா்கள். ஆற்றல் மிக்கவா்களாக விளங்குபவா்கள். பல்வேறு துறைகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்பவா்கள்.பெரிய அல்லது சிறிய கூட்டத்திற்குத் தலைவா்களாக இருப்பா். இவா்கள் நிகழ்காலத்தில் வாழ்பவா்கள். நிகழ்கால நிகழ்வுகளில் கவனம் செலுத்துவா். சூழலுக்கு ஏற்பத் தங்களை எளிதாக மாற்றிக் கொள்வா். அவா்களைச் சுற்றி இருக்கும் பொருள்கள் மற்றும் நிகழ்வுகளின் தாக்கம் இவா்களிடம் அதிகம் இருக்கும்” என்று ஆங்கில அகராதி விளக்கம் அளிக்கிறது.

“புறவயத்தார், வெளிப்படையானவர்களாக இருப்பர். மனதில் பட்டதைப் பேசுபவர்கள். புதியவர்களுடன் பழகுவதற்கும், புதிய இடங்களைப் பார்ப்பதற்கும் தயக்கம் கொள்ள மாட்டார்கள். மேலோட்டமான சிந்தனையாளர்கள். அதிகமான நண்பர்களைக் கொண்டவர்கள்” ( Daryl Sharp, Personality Types Jung’s Model of Typology, p.12) என்பர்.

“புறவய மனப்பான்மையினரின் செயல்பாடுகளுக்கு வெளிப்புற காரணிகளே உந்து சக்தியாக அமைகின்றன. புறவயத்தார் அதிகமாகப் பயணம் செய்ய விரும்புவார்கள். புதிய இடங்களைப் பார்க்க விரும்புவார்கள். உலகின் யதார்த்தத்தை உணர்ந்தவா்கள். எந்த ஒரு நிகழ்வையும் தமக்கு சாதகமாக மாற்றும் இயல்பு கொண்டவர்கள். சுற்றம் சூழ நட்பு வட்டாரத்தில் குதூகலித்து இருப்பர். தன்னை முன் நிறுத்திக் காட்டுவதில் அக்கறை கொள்வர்” ( Daryl Sharp, Personality Types Jung’s Model of Typology, p.13 ) என்று குறிப்பிடுவர்.

“புறவயத்தார் வெளிப்படையாக இருப்பர். தன்னுள் இரகசியத்தைப் பதுக்கி வைக்க மாட்டார்கள். நேர்மறையான எண்ணம் உடையவா்கள். எந்தச் சூழலிலும் பிரச்சனைகளை நம்பிக்கையுடன் சந்திக்கத் துணிவர். தாழ்வு மனப்பான்மை அற்றவர்கள்” ( Daryl Sharp, Personality Types Jung’s Model of Typology, p.38 ) என்பார்.

“மனிதா்களை மின்கலமாக எண்ணிக் கொண்டால் அகவயத்தார் தங்களைத் தானே ஆற்றலுடன் நிரப்பிக் கொள்வா். புறவயத்தார் மற்றவா்களிடம் இருந்து ஆற்றலைப் பெற்றுக் கொள்வா்.இவ்விருவரையும் ஒன்றாகக் காண்கையில் அகவயத்தார் உள்நோக்கி இருப்பா். புறவயத்தார் வெளிப்புற நடவடிக்கையை விரும்புவா்”  என்று அகவயத்தாருக்கும் புறவயத்தாருக்கும் இடையிலான வேறுபாடுகளைச் சுட்டுவார்.

யுங் குறிப்பிடக் கூடிய இந்த ஆளுமை வகைப்பாடுகள் மனிதா்களை அவா்களின் இயல்புக்கு ஏற்றவாறு வகைப்படுத்தி இருக்கும் தன்மையை அறியமுடிகிறது. ஆயினும் மனிதா்கள் அனைவரும் ஒரே நேரத்தில் அகமுகத்தன்மை கொண்டவா்களாக மட்டுமோ, அல்லது புறமுகத்தன்மை கொண்டவா்களாக மட்டுமோ அமைவதற்கான வாய்ப்புகள் இல்லை. மனிதா்கள் அவா்களின் அடிப்படை இயல்பினால் மட்டும் அல்லாமல் அவா்கள் வாழும் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்பவும் அவா்களின் இயல்பில் மாற்றம் ஏற்படுவது உண்டு. ஆயினும் யுங்கின் வகைப்பாடு ஒரு மனிதனின் நடத்தைக்கான காரணங்களை ஆராயமுற்படுகையில் மிகுந்த பயனுடையதாக அமைகிறது எனலாம்.

உசாத்துணைப் பட்டியல்

1. On the Psychology and Pathology of So-Called Occult Phenomena By C.G. Jung, Princeton University Press, 1978
2. .Wandlungen und Symbole der Libido  by C.G.Jung, Princeton University Press
3. 2. ஆளுமை மேம்பாடு -  எஸ். சுந்தர சீனிவாசன் (ஆசிரியர்),    தாமரை பப்ளிகேஷன்ஸ் 2008
4.   https://www.vocabulary.com/dictionary/introvert 
5.  https://www.vocabulary.com/dictionary/extrovert
6.  Personality Types (Studies in Jungian Psychology by Jungian Analysts) by Daryl Sharp (Author) 1987

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

* [டிஜிட்டல் ஓவிய (Google Nano Banana) உதவி: வநகி]