['டிஜிட்டல்' ஓவியத் தொழில் நுட்ப  (Google Nano Banana) உதவி: VNG] 

அறிமுகம்

ஓர் ஊர் அல்லது ஒரு தலம் அமைந்த இடம், அல்லது ஒரு தலம் குறித்த அதிகளவிலான இடப்பெயர் ஆராய்ச்சி, பல்வேறு நோக்குகளில் நடைபெற்றிருக்கும் எனில், அது ‘கதிர்காமம்’ என்பதற்கே என்பதை, இடப்பெயர் ஆய்வு பற்றிய ஈழத்து எழுத்துக்களை வாசித்தோர் நன்கு உணர்வர். ஈழத்தில், பல்லின பல்சமயச் சங்கமிப்பு நிகழும் இடங்களில், கதிர்காமம் முதன்மையானது. அதனால், அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களில், அச்சொல் குறித்த அர்த்தப்படுத்தலும் அது குறித்த அவதானிப்பும் அதிகமாகவே இருக்கிறது. இப்பொருண்மை குறித்த அறிமுகக் கட்டுரையாகவே இது அமைகிறது. ஆகையால், ‘கதிர்காமம்’ என்பதன் இடப்பெயர் அர்த்தம் குறித்;து மொழி, பண்பாடு, சமயம் ஆகியவற்றின் நிலைநின்று, சுருக்கமாக விளக்க இக்கட்டுரை முயலுகிறது.

திருப்புகழிலா முதல் பதிவு?

குகதொன்மைப் பதியாகிய ‘கதிர்காமம்’ எனும் பெயர்க் காரணம் பற்றிப் பலரும் பலவிதமாக எழுதி வைத்துள்ளனர். பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை அவர்கள், “கதிர்காமம் என்ற தலப்பெயர் அருணகிரிநாதர் திருப்புகழிலேயே முதன்முதலில் இடம்பெறுகிறது” (2013:75) என்கிறார்.

வடமொழிக் கந்தபுராணத்து வீரமாமகேந்திர காண்டம், பதினெண் புராணங்களில் ஒன்றாகிய காந்தமகா புராணத்தில் வரும் தட்சிணகைலாச மான்மியம் முதலானவை இவ்விடயத்தில் முதலில் நமது கவனத்திற்குரியவை. அவற்றிற் பலவும் பேராசிரியர் குறித்த கருத்தைக் கூறும் காலத்துக்கு முன்னரேயே தமிழில் வெளியாகியவை.

தட்சிண கைலாச மான்மியத்தின் பதிவு

‘தட்சிண கைலாச மான்மியம்’ என்ற வடமொழி நூலை சி. நாகலிங்கம்பிள்ளை அவர்கள் 1928இல் தமிழில் மொழிபெயர்த்தார். அந்நூலில், கதிர்காம மகிமை உரைத்த படலம், கதிர்காம கிரி மகிமை உரைத்த படலம், கதிர்காமத் தலவிசேடப் படலம் முதலாய படலங்கள் அமைந்துள்ளன.

மேற்குறித்த படலங்கள் கூறும் செய்திகளை ஆழ்ந்து நோக்கினால், மிகவும் பிற்பட்ட காலத்தவரான அருணகிரிநாதரின் திருப்புகழில்தான் ‘கதிர்காமம்’ என்ற சொல் முதன்முதலில் இடம்பெறுகிறது முதல் பதிவு இடம்பெறுகிறது என்ற செய்தி தவறானது என்பதைப் புரிந்துகொள்ள இயலும்.

சங்கதத்தில் இருந்து தமிழுக்கா?

பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை அவர்கள், தாம் எழுதிய ‘சன்னிதி முருகன் வழிபாட்டு வரலாற்றுப் பின்னணி’ எனும் கட்டுரையில், ‘கதரகம’ என்பது தலப் பெயராகவும் ஊர்ப் பெயராகவும் விளங்குவது என்றும், அவை, பாளி மற்றும் சிங்கள மொழிகளில் நெடுங்காலமாக நிலவுவது என்றும் குறிப்பிடுகிறார்.

“‘கதரகம’ தலப் பெயரும் ஊர்ப்பெயரும் பாளி, சிங்கள மூலாதாரங்களிலே நீண்டகாலமாக இடம்பெற்று வந்துள்ளன” (2013:75) என்று கூறும் அவர், “கிராமம் என்ற சங்கத மொழிச் சொல், சிங்களத்திலே ‘கம’ எனவும் இலங்கைத் தமிழிலே ‘காமம்’ எனவும் திரிபுபட்டு வழங்குகின்றன” (2013:75) என்றும் கூறுகிறார்.

சங்கதம், பாளி, சிங்களம் ஆகிய மொழிகளின் தோற்றம், பரம்பல், பயில்நிலை ஆகியவற்றை வரலாற்று ரீதியாக அறிந்தோர் அவர் கருத்தின் பொருத்தப்பாடின்மையை உணர்வர்.

சிங்கள சொல்லின் மரூஉவா?

முதலியார் குல.சபாநாதன் அவர்கள், ‘கதிர்காமம்’ என்னும் தனது நூலில், கதிர்காமம் என்பது சிங்களச் சொல்லிலிருந்து மரூஉவிப் பிறந்த திசைச் சொல் என்றும் அது பிற்கால வழக்கு என்றும் கூறுகிறார்.

“கதிரகாமம் என்பது சிங்களமொழிச் சொல்லின் மரூஉவாய்த் தமிழ் மொழியின் கண் திசைச் சொல்லாய்ப் பிற்காலத்தில் வழக்கில் வந்ததே எமது கொள்கை” (2007:13) என்பது அவர் கூற்று.

இலங்கையில் சிங்கள அரசு ஆதிக்கம் செலுத்திய காலத்தில், அந்த அரசின் அரசாங்க சமாச்சாரப் பகுதியின் வெளியீடான ‘ஸ்ரீலங்கா’ என்ற மாதாந்தச் சஞ்சிகையின் தமிழ்மொழி மூல ஆசிரியராகப் பணியாற்றியமையால், இவ்வாறானதொரு கருத்தை, அவர் தமது கொள்கையாக்கி வெளியிடும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம்.

மாமரமா? மாங்காய் மரமா?

சிவசம்புப் புலவர் புலமை மரபினரும் பன்மொழி ஆராய்ச்சிக் கலாநிதியும் ‘ஈழநாட்டின் தமிழ்ச்சுடர் மணிகள்’ நூலின் ஆசிரியருமான தென்புலோலியூர் மு.கணபதிப்பிள்ளை அவர்கள், ‘கதிர்காம முருகன்’ (1975) என்ற தலைப்பிலான தமது விரிவான கட்டுரையில், குல.சபாநாதன் அவர்களது நூலில் உள்ள பெரும்பாலான கருத்துகள் தவறென்று இடித்துரைக்கிறார்.

குல. சபாநாதன் அவர்களின் நூலில் உள்ள குறைபாடுகளை, மு. கணபதிப்பிள்ளை அவர்கள், தனது கட்டுரையில் விரிவாக மறுத்துரைத்து, இறுதியில், “இவையாவும், புதுவதாக ஏதாவது காட்டிவிட வேண்டும் என்ற ஆசையினால், ஆராய்ந்து பாராது புனைந்து கொள்ளப்பட்ட ‘நாடோடிச் சப்தோற்பத்தி’கள் எனவே கொள்ளுதல் வேண்டும்” (1976:ஏஐ) எனக் கடிகிறார்.

தல வரலாற்றையும் தல மூர்த்தியின் வரலாற்றையும் கவனத்திற் கொண்டு இடப்பெயர் விளக்கத்தினை, குல. சபாநாதன் அவர்கள் வழங்கவில்லை என மு. கணபதிப்பிள்ளை அவர்கள் கூறுகிறார்.

“முருகன் வரலாற்றையும் திருக்கோயில் வரலாற்றையும் அறிந்துகொள்ளாமல் - மாமரத்தை ‘மாங்காய் மரம்’ என்று கூறுவதுபோல - ‘கதரகமத் தெய்யோ’ எனவே வழங்கும் ஒரு மொழியில் கோயிற் பெயர்க்காரணம் காண விழைவது அழகாக இருக்கிறது” (1976:ஏஐ) என, மு. கணபதிப்பிள்ளை அவர்கள் எள்ளி நகைக்கிறார்.

யாத்திரைப் பாதை ஊர்கள்

ஆய்வாளர் கதிர். தணிகாசலம் அவர்கள், தாம் எழுதிய, ‘தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர் ஆய்வும்’ (1992) என்ற ஆய்வு நூலில், ‘காலங் கூறவொண்ணாக் கதிர்காம யாத்திரையும் இடப் பெயர்களும்’ என்ற பகுதியில், தொன்றுதொட்டு நிகழும் கதிர்காம யாத்திரையில், யாத்திரை பாதை அமையும் ஊர்களை அடிப்படையாகக் கொண்டு, தமது கருத்தை நிறுவுகிறார்.

கதிர்காம யாத்திரை, இலங்கையின் வடக்குப் பகுதியில் ஆரம்பித்து, கிழக்கை ஊடறுத்து, தெற்கில் கதிர்காமத்தைச் சென்றடையும் வரை உள்ள ஊர்கள் யாவும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து, தமிழர் வதியும் இடங்களே என அவர் பதிவு செய்கிறார். அவ்வூர்களை அடையாளங் காட்டி, அவ்வூர்ப் பெயர்கள் யாவும் தமிழ் இடப் பெயர்களே என்றும் நிறுவுகிறார். (1992:144-147)

‘கட்டகாமம்’, ‘கதிர்காமம்’ போன்ற இடங்களின் அருகில், “முன்னர் தமிழர் வாழ்ந்த பகுதி” (1992:147) எனவும் குறிக்கிறார்.

சிங்களமாய் மாறிய தமிழ் ஊர்கள்

‘கதிர்காம யாத்திரை வழித் தலங்கள் அனைத்தும் தமிழ்ப் பெயர் தாங்கிய ஊர்கள், இன்று சிங்கள மக்கள் வாழும் ஊர்களாயிருந்தாலும், அவையும் தமிழ்ப் பெயரையே தாங்கியுள்ளன, அவை, பெரும்பான்மை தமிழையும் சிறுபான்மை சிங்களத்தையும் கலந்துபேசும் வேடுவர் வாழும் குடியிருப்புகள், இலங்கை அரசால் சிங்களக் குடியேற்றம் இப்பகுதிகளில் வேகமாக நடைபெற்றவாறுள்ளன’ (1992:160, 147) போன்ற செய்திகளை கதிர். தணிகாசலம் அவர்கள் தனது நூலில் விரிவாகக் குறிப்பிடுகிறார்.

“வடக்கும் - கிழக்கும் யாழ்ப்பாணக் குடாநாடு தொடக்கம் கதிர்காமம்வரை தமிழரது மரபுவழித் தாயகம் என்பதை எடுத்துக்காட்டும் இயற்கையான வலுவான சான்று இது. தமிழ் ஊர்ப்பெயர்கள் சிங்களமயமாகிக் கொண்டு வருகின்றன” (1992:147) என்றும் அவர் வலியுறுத்திக் கூறுகிறார்.

இரு புதுப் பொருள்

‘யானைகள் கூட்டம் கூட்டமாகச் சென்று வழிபட்ட இடம்’ என்பதால் ‘கஜரகம’ எனப் பெயர் ஏற்பட்டு, ‘கதரகம’ எனச் சிங்களத்தில் வழங்கி, பின்னர் தமிழில் ‘கதிர்காமம்’ எனவாகியது என்று ஆய்வாளர் சிலர் கூறுகின்றனர் (1992:159) என்று கூறும் கதிர். தணிகாசலம் அவர்கள், அது தவறானது எனச் சுட்டிக்காட்டுகிறார்.

கதிர். தணிகாசலம் அவர்கள், கதிர்காமம் என்பதற்குக் கூறும் பெயர்க் காரணங்கள் சிலவற்றில் இரண்டு புதியவையாகத் தோன்றுகின்றன. இந்த இரண்டும் முன்னர் பலரும் குறிப்பிடாதவையுங்கூட.

“தினைப் புனங்களால் சூழப்பட்ட இடம்: இது, கதிர் + அகம் - கதிரகம் - கதிரகம” (1992:159), “கதிர் என்பது வேலையும் குறிக்கும்” (1992:159) எனும் இரண்டுமே அவர் கூறுவனவற்றில் புதியவை. இங்கு முதலாவது பற்றிச் சுருக்கமாக நோக்கலாம்.

கதிர் - தினை

வேளாண்மைச் சமூகம் மனித வரலாற்றில் உயர்நிலை பெற்றதாகக் கருதப்பெறுவதால், கதிர்காமம் என்பதற்கு, ‘தினைப் புனம்’ குறித்து அவர் வரையும் பொருள் ஏற்புடையதாக அமைகிறது. ‘தினைப் புனங்களால் சூழப்பட்ட இடம்: இது, கதிர் + அகம் - கதிரகம் - கதிரகம’ என அவர் குறிப்பது ஆழ்ந்து சிந்திக்கத் தக்கது.

தமிழர் வரலாற்றிலே, பண்பாட்டு வளர்ச்சியில் உயர்வடைந்த மக்கள், ஊர்களை அமைத்து வாழும் பகுதிகளது இடப்பெயர்களின் பின்னொட்டுகளாக ஊர், புரம், பற்று, காமம், கை, கோயில் முதலியவை அமைவதை இடப் பெயர் ஆய்வாளர் சுட்டுவர். (1992:148) ஆகையால், கதிர்காமம் என்பதன் பின்னொட்டும் ‘காமம்’ என வருவதால், அதனை ஏற்க முடிகிறது.

இன்னும், வள்ளி தினைப்புனங் காத்த கதையைக் கருத்திற்கொண்டு, வேளாண்மைச் சமூக வளர்ச்சியை அதனோடு தொடர்புபடுத்தி, இதனை மேலும் விரிவாக்கி உரைப்பதற்கு இடமுளது. இப்பொருள் கொள்ளல், கந்தபுராணப் பொருண்மையோடு தொடர்புற்ற வரலாற்றைக் கொண்ட, தென்னிலங்கைக் காடுகளில் வள்ளி வாழ்ந்த இதிகாச புராண வராலாற்றைக்கொண்ட கதிர்காமத்திற்கு அதிக பொருத்தம் உடையதாய் அமையும்.

இடப் பெயரில் தத்துவம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில், ஈழத்தில் நிகழ்ந்த சைவ மறுமலர்ச்சி இயக்கத்தின் செயற்பாடுகளில் ஒன்று அனைத்திற்கும் சைவ நிலை சார்ந்து தத்துவப் பொருளேற்றும் நிலை. அது தொடர்பான விவாதங்களுக்கு அப்பால், அக்கால நிலவரத்தின்படி, அது சரி இயல்பானது என்பதையும் மனங்கொள்ளல் வேண்டும்.

மகாவித்வான் நா. கதிரைவேற்பிள்ளை அவர்கள் கதிர்காமம் என்பதற்கு வழங்கும் விளக்கத்தையும் நோக்க வேண்டும். அவர்கள், ‘கதிர்காமம்’ என்பதை, ‘கதிர் - ஒளி, காமம் - இன்பம்’ (1960:297) எனவாறு பகுக்கிறார். “ஆன்மாக்களுக்குச் சிவஞானவொளியினாற் பேரின்பத்தையளிப்பது” (1960:297) எனவும் “பரஞ்சுடராகிய கந்தக் கடவுள் விரும்பியுறைவது” (1960:297) எனவும் கூறுகிறார். பின்னர், “துரியப் பொருளாகிய குகஞானமென்னுஞ் சோதி வியாபித்தலானும் குகசாயுச்சியமென்னும் இன்பத்தைக் கொடுத்லானும் வந்த காரணப் பெயரென்னலுமாம்” (1960:297) எனவும் கூறுகிறார். அவர் விரிக்கும், தத்துவப் பொருள் விளக்கம் நுண்மையானதுதான். குகத்தலமாகிய கதிர்காமத்துக்கு அமைவானதுதான்.

மகாவித்வான் அவர்களின் விளக்கத்தை அனுசரித்து, பின்னாளில் அவர் சொல்லியவாறு சொல்லாமல், இப்பொருள்பட, தம் கருத்துப்போன்றே, பலரும் தமது நூல்களில் சொல்லிவைத்துள்ளனர். ஆயினும், ‘கதிர்காமம்’ தமிழ்ச்சொல் என்பது அறிஞர் பலரும் பெரும்பாலும் வலியுறுத்திய ஒன்று என்பது உறுதி.

மெய் விரிபொருள்

மகாவித்வான் கதிர்காமத்தின்மீது ‘கதிர்காம மான்மியம்’, ‘கதிர்காமப் புராணம்’, ‘கதிர்காமக் கோவை’ ஆகிய நூல்களை எழுதியவர். ‘கதிர்காமக் கலம்பகம்’, ‘கதிர் காமத் திருப்புகழ்’ ஆகிய நூல்களைப் பதிப்பித்தவர். அவர், கந்தப்ப சுவாமிகள் எழுதிய ‘கதிர்காமக் கலம்பகம்’ எனும் நூலைப் பரிசோதித்து எழுதும் முகவுரையில், கதிர்காமம் குறித்து எழுதும் வியாசம் வருமாறு.

“அநாதிமல முத்தராய், ஆதிமத்தியாந்த சமானாதிக நாமரூப குணரகிதராய், சர்வஞ்ஞ சர்வகர்த்தத்துவ சர்வாநுக்கிரக அதிபரமாப்தபதியாய், விளங்காநின்ற சிவகுகக் கடவுள், நல்லசுரர்மேற் குழைந்து, வல்லசுரரைக் களைந்து, தொல்பதத் திருத்துவான் திருவுளங் கொண்டு, படையுடனடந்து உவகை யோடுந் தங்கி யருளிய பாடி வீடான ஏமகூடம் எனப் பகர்தற்கிலக்காய் நிற்பதும், அடைந்தவரது மாசுகளைத் துடைத்துத் தூய்மை செய்யும் மாணிக்க கங்கை என்னும் மகா நதியினையும், சோதி வடிவமாயுள்ள திருக்கோயிலையும், கதிரைமலை முதலிய பர்வதங்களையும் கொண்டிருப்பதும், அரிபிரமேந்திராதி யமரர்களானும், அகத்தியாதி முனிவர்களானும் பூசிக்கப்பட்டதும், கண்டியிலிருந்து அரசாண்ட பாலசிங்க மன்னனின் தந்தையும், சோழராசாவின் மருகனுமாகிய நாரசிங்க நரேந்திரன் வசித்து வழிபட, அவற்கிட்ட சித்தியை அளித்த தானமாயுள்ளதும் சிவசுப்பிரமணியக் கடவுளின் திருவருட் பெருஞ் செல்வராகிய ஸ்ரீ அருணகிரிநாத சுவாமிகளால் திருப்புகழ் புனையப்பெற்றதும், குன்று தோறாடற்பதிகளுள் ஒன்றாய் மகாமகிமையுற்றதும், பாபயுகமாகிய இக் கலிகாலத்தும் மெய்யன்பர் பொருட்டாகப் பற்பல திவ்வியாற்புதங்கள் நிகழப் பெறுவதும், மாண்பினையுடைய மேருகிரியின் பொற்சிகரம் பொருந்தப் பெற்றமையால் ‘பொன்னகரம்’, ‘ஈழம்’ எனச் சிறப்புப் பெயர்களை வகித்த பல்வளம் படைத்த இலங்கைத் தேசத்திலே, தக்கிண பாகாந்தத்திலே, ‘மகேந்திரக் கடல்’ என வழங்குஞ் சமுத்திர சமீபத்திலே இலங்குவதுமாகிய திருக்கதிர்காம ஷேத்திரம்” (1897:2)

மேற்குறித்த வியாசத்தை, சைவ மறுமலர்ச்சி இயக்கத்தின் கருத்துநிலை நின்று துணியும்போது, கதிர்காமமானது, சைவத் தமிழரது பூர்வீக வழிபாட்டுத் தலமும் வாழ்விடமும் என்பது, சைவமறுமலர்ச்சியின் சார்பெடுத்து நின்ற, அக்கருத்துநிலையைச் சார்ந்து நின்ற, மகாவித்வான் கூறுவது வியப்பில்லை என்றே தோன்றுகின்றது.

நிறைவாக

ஊர்ப் பெயர் ஒன்று, கால ஓட்டத்தாலும் கருத்தியல்சார் நிலைப்பாட்டாலும், பல்வேறு அர்த்தப்படுத்தல்களுக்கு உட்படுவது இயல்பானது. அது இடப்பெயர் குறித்த வாசிப்பு அரசியலைச் சார்ந்தது. கதிர்காமமும் அதற்கு விலக்கல்ல. எனினும், கதிரை, கதிர்காமம் என்பன தமிழ்ப் பெயர்கள்தாம் என்பதை, வரலாற்று நோக்கில், அழுத்திக் கூறுவதிலும் தவறேதும் இருப்பதாகத் தெரியவில்லை.

உசாத்துணை நூல்கள்

அனந்தராஜ், ந. (2001) சந்நிதிச் செல்வம்,வல்வெட்டித் துறை: நந்தி பதிப்பகம்.
இரகுபரன், க., (ப.ஆ.) (1996) ஆறுமுகநாவலர் பிரபந்தத் திரட்டு, கொழும்பு: இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம்.
கதிரைவேற்பிள்ளை, நா. (1960) சுப்பிரமணிய பராக்கிரமம், கொழும்பு: சரஸ்வதி புத்தகசாலை.
குணசேகர, சுனில். (2007) கதிர்காமத்திற்கு நடைப் பயணம், கொழும்பு: இனத்துவக் கற்கைகளுக்கான சர்வதேச நிலையம்.
சசிவல்லி, வி.சி. (2007) திருப்புகழ் ஒளிநெறி தொகுதி- 3, சென்னை: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்.
சண்முகதாஸ், அ., மனோன்மணி, சண்முகதாஸ். (1989) ஆற்றங்கரையான், பருத்தித்துறை: வராவொல்லை.
சபாநாதன், குல. (2007) கதிர்காமம், கொழும்பு சென்னை: குமரன் புத்தக இல்லம்.
சிவயோக சுவாமிகள். (2024) நற்சிந்தனை, யாழ்ப்பாணம்: சிவதொண்டன் சபை.
சின்னையாசிவம், அ. (1953) கதிர்காம மான்மியம், கொழும்பு: ஸ்டான்காட் பிரிண்டர்ஸ் லிமிட்டெட்.
சின்னையா, சி. (1961) எங்கள் கதிர்காமம், திருநெல்வேலி: சுதந்திரநாத அச்சகம்.
சுதர்சன், செ., நீலகண்டன், கா. (ப.ஆ.) (2014) உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு -தேவ பாகமும் மானுடபாகமும், உடுப்பிட்டி: புலவரில்லம்.
சுந்தரலிங்கம், செ. (1982) கதிர்காமம் - கந்தன் கோவில், யாழ்ப்பாணம்: கீரிமலை.
செந்திநாதையர், சி. (2002) கந்தபுராண நவநீதம், பண்டத்தரிப்பு: செல்லையா பாக்கியம் குடும்பம்.
தணிகாசலம், கதிர். (1992) தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர் ஆய்வும், சென்னை: சரவணா பதிப்பகம்.
தாமோதரம்பிள்ளை, சி. (1879) கதிர்காம புராணம், யாழ்ப்பாணம்: சச்சிதானந்த அச்சியந்திரசாலை.
திருஞானசம்பந்தப்பிள்ளை, ம. வே. (1923) கதிரை யாத்திர விளக்கம். யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச யந்திரசாலை.
நாகலிங்கபிள்ளை, சி. (மொ.பெ.) (1928) தக்ஷிண கைலாச புராணம், யாழ்ப்பாணம்: விநாயக சுந்தரவிலாச யந்திரசாலை.
................... (1932) கதிர்காம புராணம், பருத்தித்துறை: சரஸ்வதி யந்திரசாலை.
வேலுப்பிள்ளை, ஆ. (2013) சைவசமயம் அன்றும் இன்றும் இங்கும், கொழும்பு: குமரன் புத்தக இல்லம்.

இதழ்கள்

கந்தபுராண கலாசாரத்தின் கலங்கரை விளக்கம் காசிவாசி செந்திநாதையர் நூற்றாண்டுச் சிறப்பிதழ், (ஜூன் 2024) ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகை, கொழும்பு.
கதிர்காம யாத்திரிகர் தொண்டர் சபை பொன்விழா மலர் (1975) கொழும்பு - நியூ லீலா அச்சகம்.

ஆங்கில நூல்கள்

Clothey, W. Fred. (2005) The Many Faces of Murukan: The History and Meaning of a South Indian God, India: Munshiram Manoharlal Publishers Pvt. Ltd.
Goonasekera, Sunil. (2007) Walking to Kataragama, Colombo: International Centre for Ethnic Studies.
Harrigan, Patrick. (2011) Kataragama: The Mystery Shrine, Chennai: Institute of Asian studies.
John, Daniel.(----) A New Interpretation of the Kandapuranam Unfolding the Truth about the Ancients' Heaven and Earth Golden Meru Kailasam Etc.,Madras:The Royal printing works.

கட்டுரையாசிரியர் குறிப்பு:

கலாநிதி செல்லத்துரை சுதர்சன். இலங்கையின் இன்றைய இளம் புலமையாளரில் முதன்மையானவர். பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர். அறிஞர் எம்.ஏ.நுஃமானின் மாணவர். கவிஞர், ஆய்வாளர், விமர்சகர். மணற்கேணி, போதி, தலித் ஆகியவற்றில் அவரது முக்கியமான படைப்புகள் வெளியாகியுள்ளன. க்ரியாவின் அண்மைய பதிப்பில் ஈழத்து அறிஞராகப் பணியாற்றியவர். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்ட அவரது முக்கியமான கவித்தொகையான “தாயிரங்கு பாடல்கள்” நூல் மணற்கேணியூடாக வெளிவந்து தமிழ்ப்புலத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.