* ஓவியம் - AI

முன்னுரை

இசுலாமியத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களில் தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து கவிதை, கட்டுரை, புதினம், சிறுகதை எழுதுவதில் வல்லவராகத் திகழ்ந்து கொண்டிருப்பவர் பாத்திமுத்து சித்தீக் அவர்கள். இந்நூற்றாண்டின் தலை சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார். இவருடைய எழுத்துக்கள் எளிமையானவை கருத்துக்கள் புதுமையானவை. இவருடைய எழுத்துக்களில் சமூகத்தில் நிலவும் அவலங்கள் முரண்பாடுகளை நன்றாக வெளிப்படுத்தியுள்ளார். பாத்திமுத்து சித்தீக்கின் ‘ஒற்றைப் பறவை’ சிறுகதைகள் வழி அறியலாகும் சமூக நிலைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இலக்கியமும்; சமூகமும்

மனிதர்களின் அறிவுத் தோட்டத்தின் களமாக இயற்கை இருப்பது போலவே அவர்கள் கூடிவாழும் சமூக அமைப்பும் ஒரு களமாக இருந்து வருகிறது. அந்தச் சமூக அமைப்பு குடும்பம்,மதம், அரசு, பொருளாதார உற்பத்தி, கலை, இலக்கியம், நாடு, மொழி, இனம் முதலிய பல உட்கூறுகளால் ஆனது.

இந்த உட்கூறுகளுக்கிடையே நிலவுகின்ற உறவுகளையும் அந்த உறவுகள் எந்த அடிப்படையில் இயங்குகின்றன என்பதையும் நெறிப்படுத்தப்பட்ட முறையில் வெளிக்கொணருவதுதான் சமூக இலக்கியமாகும்.

“மனிதர் நடத்தை அல்லது சமுதாய நிகழ்வுகளை அறிவார்ந்த முறையில் விளக்கி புதிய சமுதாயத்தை உருவாக்கும் முயற்சியே சமூக இலக்கியமாகும்” என்பார் பாலின் யங் என்னும் சமூக இலக்கிய அறிஞர்.

“சமுதாயச் சூழ்நிலைகளில் மனித சமுதாயத்தை ஆராய்ந்து அதன் ஒழுங்குமுறை, நிறுவனங்கள், அறநெறி ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவுவதே சமூக இலக்கியமாகும்” என்பார் ரம்மல் என்னும் சமூக இலக்கிய ஆய்வாளர். இதனடிப்படையில் பாத்திமுத்து சித்தீக்கின் ஒற்றைப் பறவை சிறுகதைகள் வழி அறியலாகும் சமூக நிலைகளை ஆராய்வோம்.

பிள்ளை பேற்றிற்காக தர்கா வழிபாடு

இசுலாத்தில் ஒரு சில சாரார் இடையே தர்கா வழிபாடு இருந்து வந்தமையைப் பாத்திமுத்து சித்தீக் அவர்கள் தம் ‘ஒற்றைப்பறவை’ சிறுகதையின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். தனக்கு என்ன தேவையோ அதைத் தர்காவிற்குச் சென்று நேர்ந்து கொள்வதையும் தன் கதையின் வாயிலாக ஆசிரியர் குறிப்பிடுகின்றார். பிள்ளைப் பேற்றிற்கான தர்கா வழிபாட்டை பின்வரும் கூற்றின் வாயிலாக அறியலாம்.

“இந்த வருஷம் கூட கோட்டைப்பட்டினம் ராவுத்தர் சாயபு தர்காவுக்கு நேர்ந்துகிட்டு இருக்கேன். பிள்ளை பொறந்தா அம்மியும் குழவியும் வாங்கிப் போடுகிறதா..” மனதில் பல்கீஸ் நன்னி நேர்ந்திருந்ததை வெளியே அறிவிப்புச் செய்து விட்டது.

“நன்னி, ஒன்னு கேக்குறேன்னு… கோவிச்சுக்காதே… போனவருஷம் நாகூர் காதர் அவ்லியா தர்காவுக்கு, கந்தூரி ஆக்குறதா நேர்ந்திருந்தியே அது கான்ஸலாயிருச்சா.. முத்துப்பேட்டை சேக்தாவூது அவ்லியா, கமுதி சகுபர் சாதிக் அவ்லியா தர்காவுக்குப் போய் இரண்டு, மூன்று நாளைக்கு டேரா போடுறேண்டு நேர்ந்தியே”1 என்ற கூற்றின் வாயிலாக பிள்ளைப் பேற்றிற்காக தர்கா வழிபாடு இருந்தமை அறியப்படுகின்றது.

ஆகுமானவற்றை வலியுறுத்தல்

இசுலாத்தில் ஹலாலான (ஆகுமானது) செயல்களையே செய்யவேண்டும் ஹராமான (விலக்கப்பட்டது) செயல்களை செய்யக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கின்றது. இறைவழியில் செல்பவர்கள் ஆகுமானவற்றையே செய்வார்கள். இறையச்சம் இல்லாதவர்கள் தாம் லஞ்சம் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள். பாத்திமுத்து சித்தீக் அவர்களின் கதைகள் ஆகுமானவற்றை வலியுறுத்துவதைப் பின்வரும் கூற்றின் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.

“சத்தமா பேசிட்டா, ஒரு தப்பு ‘சரி’ன்னு ஆயிடாதுங்க! நாயக வாக்கியமே இருக்குதுங்க… ‘ஒரு காலம் வரும் உலகிலே.. தான்; சம்பாதிக்கிறது ஆகுமான வழியிலா… விலக்கப்பட்ட வகையிலா…? என்றெல்லாம் மனுசன் கவலையே படமாட்டான்னு…! நீங்க எவ்வளவோ மார்க்க ஒழுக்கங்களோடு தான் இருந்தீங்க.. பேங்க்லே வாங்குற வட்டி கூட தப்புன்னு சொல்லுவீங்க… சூப்பரின்டென்டாக பிரமோஷன் ஆனாலும் ஆச்சு… ரொம்பவும் தான் மாறிட்டீங்க.. எப்படியெல்லாம் குறுக்கு வழியிலே பணந்தேடலாம், வசதியெப் பெருக்கிக்கலாம்னு ஆலாப் பறக்க ஆரம்பிச்சுட்டிங்க… நாணய வரவிலேயே குறியாயிருந்ததுலே நாணயமான நற்குணத்தைத் தொலைச்சுட்டீங்களே”2 , என்ற கூற்றும்,

“யார் யாரோ தவறான பாதையிலே போறாங்கன்னு நாமளுமா போகனும்…? ஹலாலான தேட்டைத் தான் அல்லாஹ் நமக்கு ஆகுமான தாக்கியிருக்கான். அரை வயித்துக்கு இருந்தாலும் அதுதாங்க மனசுக்கு முழு திருப்தியும் தரும். நாலு பேருக்கு முன்னால பெருமையா, தலை நிமிர்ந்து நடக்க வைக்கும்…! இனிமேலும் அவன் குடுத்தான், இவன் குடுத்தான்னு இந்த வூட்டுக்குள்ளே என்னத்தையாவது கொண்டாந்தீங்கன்னா நான் இந்த வூட்டை விட்டுப் போயிட வேண்டியது தான்”3 என்ற கூற்றும் ஆகுமானவற்றையே இசுலாம் பின்பற்றச் சொல்வதாக ஆசிரியர் தன் ‘பாறையில் பெய்த மழையா? கதை வாயிலாக குறிப்பிடுவது இங்கு நோக்கத்தக்கதாகும்.

வரதட்சணை

பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுள் முதன்மையானது வரதட்சணை ஆகும். வரதட்சணை என்பது பொருட்களை வாங்குவது போல் பெண்வீட்டார் மணமகனை வாங்குவதற்கு ஒப்பானது.

பெற்றோர்களால் பெண்ணிற்குக் கொடுக்கப்படும் அன்பளிப்பே பின்னாளில் வரதட்சணையாக மாறியது. முஸ்லிம்களின் திருமணங்களில் வரதட்சணை முறைக்கு முற்றிலும் மாறுபட்ட ‘மஹர்’ என்னும் ‘பெண் தட்சணை’ முறை உள்ளது. இம்முறைப்படி மணமகன்தான் மணமகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையைத் திருமணக் கட்டணமாகச் (மஹர்) செலுத்த வேண்டும்.

“பெண்களுக்கு அவர்களுடைய திருமண கட்டணத்தைப் பிரதிபலனில்லாமல் கொடுத்து விடுங்கள்.”4 என்று முஸ்லிம்களின் வேதநூலான திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

“இக்காலத்தில் வரதட்சணை வாங்கி நடைபெறும் முஸ்லிம் திருமணங்களில் பெயரளவிலேனும் இம்முறை பின்பற்றப்படுகிறது. இத்திருமணக் கட்டணத் தொகையின் குறைந்த அளவு பத்து நாணயங்கள். அதற்கு மேல் மணமகன் தன் விருப்பப்படி எவ்வளவு வேண்டுமானாலும் மணமகளுக்குக் கொடுக்கலாம்.”5 என்கிறார் அப்துல் ரஹீம்;.

ஆனால் இதற்கு மாறாக மணப் பெண்ணிடமிருந்து பொருள் பெரும் வழக்கம் முஸ்லிம்களிடம் புதிதாகத் தோன்றிய ஒன்றாகும். மேலும் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் தங்கள் பெண்ணுக்குத் திருமணம் செய்து வைக்க எவ்வளவுத் துன்பப்படுகிறார்கள் என்பதை பாத்திமுத்து சித்தீக் அவர்கள் “குர்பானி! குர்பானி” என்னும் சிறுகதையில் குறிப்பிட்டுள்ளார்.

“அவளோடொத்தவர்கள் கையிலே குழந்தையை வச்சுக் கொஞ்சிக்கிட்டிருக்காங்களே… என் வயத்துலே பிறந்த தோஷத்தினாலேதான் இந்த நிலமை…? காட்டிலே காயுற நிலவு மாதிரி… நாளும் பொழுதும் வீணாப் போவுது..”6 என்னும் கூற்றும்,

“பார்;த்தால் பளிச்சென்று இருக்கும் பவுன் நிறத்து கமருன்னிஸாவின் நிக்காஹ் மட்டும் தள்ளிக்கொண்டே போனது. “பத்தாவது படித்தவனுக்கே எட்டாயிரம் பத்தாயிரம் சீதனம் என்று ஊரே தலைகீழாக இருக்கும்போது செய்யது வாத்தியார் எப்படி அவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்துப் பெண்ணைக் கரையேற்றுவார்” என்று அவரவரும் மனக்கணக்குப் போட்டுக் கொண்டு வசதியான சம்பந்தங்களை நாடிச் சென்றனர்.”7

என்னும் கூற்றும் ‘வரதட்சணை’ என்பது ஏழை மக்களுக்கு எந்த அளவிற்கு துன்பத்தைத் தரக்கூடியதாக உள்ளது என்றும், இதனால் இளவயது பெண்கள் உரிய நேரத்தில் திருமணம் செய்து கொள்ளாமல் துன்பப்படுவதும் குர்பானி! குர்பானி!! என்னும் கதையின் வாயிலாக அறிய முடிகின்றது.

‘மஹர்’ என்னும் திருமணக் கொடை

இசுலாமியத் திருமண முறையில் பெண்ணுக்குத்தான் ஆண்கள் திருமணக் கொடையை (மஹர்) கொடுத்திருக்கின்றார்கள். ஆனால் நாளடைவில் பெண்களிடமே வரதட்சணை வாங்குகிற நிலை வந்துவிட்டது. பணக்காரர்கள் செல்வம், பொருள் கொடுத்து தங்களுக்குத் தேவையான மணமகனை வாங்கிவிடுவர். ஆனால் ஏழ்மையில் உள்ளவர்கள் வரதட்சணை கொடுக்க முடியாமல் துன்பப்பட்டனர். திருக்குர்ஆனில் கூறியபடி நடந்து கொண்டால் யாருக்கும் எவ்வித சங்கடங்களும் துன்பங்களும் வராது என்பதை ‘வைரம் அறுத்த வைரம்’ என்னும் சிறுகதை வாயிலாக பாத்திமுத்து சித்தீக் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

“திருமறையிலே கூறியபடி மஹர் தொகையை எழுதுனா மட்டும் போதாது.. கையிலே குடுத்துத்தான் மாப்பிள்ளை வூட்டுக்குக் கூட்டியாரணும்.. அதுவும் முக்கியமா, கலியாணம் பண்ணிக் குடுக்க முடியாத ஏழைப் பொண்ணுகளுக்கு வாழ்வளிக்கணும், அதுக கண்ணீரைத் துடைக்கிறது நம்ம ஒவ்வொருத்தருடைய கடமையாகும்…”8 எனக் கூறுகிறார்.

பிறர் சொத்துக்கு ஆசைப்படுதல்

‘மஹர்’ என்கிற பெயரில் பிறரின் சொத்துகளை அடைவதற்கு எப்படியெல்லாம் ஏமாற்றலாம், ஏமாற்றுகிறார்கள் என்பதையும் இன்றைய இளைஞர்களின் மனநிலையையும் ‘உலக நடப்புகள் தெரியாதவள்’ கதையின் வழி இயல்பாக எடுத்து காட்டியிருக்கின்றார் பாத்திமுத்து சித்தீக்;.

“அஷ்ரப், நீ ரொம்ப அதிருஷ்டசாலிடா பொண்ணு வெள்ளை வெளேர்ன்னு இல்லாட்டியும், அழகா, அம்சமா இருக்கும்னு, எங்கம்மா, தங்கச்சியெல்லாம் வாயாறப்புகழ்ந்து சொல்வாங்க.”

“போடப் போ… அழகுன்னு பார்த்தா ஈரோடு முகம்மது கனி, மதுரை டாக்டர் வஹாப் பொண்ணுங்கதாண்டா சூப்பர்;! அதுக அழகுக்கு முன்னாடி இது நிக்க முடியாது, அழகைப் பார்த்தா சொத்து சுகம் வரும்மான்னுதான் சம்மதிக்கலே ரெண்டு மாசத்துக்கு முந்திதான் கடைசி நிமிசத்துல வேணாம்னேன்.”

“இப்போ நுழையுற வூட்டுலே அதுவும் கிடைக்காதேடா.. நீ மஹருக்குக் கட்டப் போறேன்னுல ஊரோடு பேசிக்கிறாங்க, பணங்காசு எப்படி…

“இந்தப் பேச்சு நமக்குள்ளே இருக்கட்டுண்டா, மார்க்கப்படி மஹருக்குத் தான் ஒத்துக்குவேண்ணு உலக நடப்பு தெரியாம உளறிக்கிட்டிருக்குது இந்தப் பொண்ணு… வீட்டாமை பேசிக்கிட்டிருக்கிற இதுகிட்டே சீதனம் கீதனம்னு கேட்டா வழிக்கு வராதுன்னுதான் சௌதாப் பெரியம்மா சொல்லிதந்த ‘மஹர்’ங்கற சின்னமீனை தூண்டிலில் போட்டிருக்கேன். அப்துல்லா ராவுத்தர் சொத்தில் சரிபாதியை மகள் பேருக்கு எழுதிவைச்சிருக்காருங்கற இரகசியத்தையும் பெரியம்மாவே சொல்லுச்சு, கலியாணமான கையோட, கழுத்தில கருகமணியெ போட்டவுடனே நமக்கு வரவேண்டியதெல்லாம் ஒட்ட வசூல் பண்ணிப்பிட வேண்டியதுதான்…”9 என்னும் கூற்றின் வழி சமுதாய நிலைப்பாடு உணரப்படுகிறது.

மனிதாபிமானம் இல்லாமை

இன்றைய காலத்தில் மக்களிடையே மனிதாபிமானம் அற்று வருவதை தன் கதையின் வாயிலாக, சாடுகிறார் ஆசிரியர் பாத்திமுத்து சித்தீக் அவர்கள். ‘தழும்பு புண்ணாகிறது’ என்னும் சிறுகதையில் வரும் கூற்று இங்கு உற்று நோக்கத்தக்கது.

“டாக்டர் சாஹெப் எங்கம்மாவுக்கு வயிற்றுப்போக்கா இருக்குது.. காலராவாக இருக்கும்னு பேசிக்கிறாங்க! பெரிய மனசுவச்சு வந்து பாருங்க.. எங்கம்மாவுக்கு என்னவாச்சும் ஆயிட்டா நாங்க அனாதை டாக்டர் சாஹெப்.. நாங்க அனாதையாயிருவோம்…!

“அறிவு கெட்டவனே! வேளை கெட்ட வேளையில் வந்து உசிரை வாங்கறீங்க! வண்டிக்கு முக்கால் ரூவாயும், மூணு ரூவா பீஸ{ம் கொண்டாந்திருக்கியா…? என்று தூக்கம் கலைக்கப்பட்ட எரிச்சலில் ‘வள்’ளென்று விழுந்தார் டாக்டர்.

டாக்டர் சாஹெப், உயிர்ப்பிச்சை போடுங்க.. இந்தப் பணத்தை நாலே நாள்ல தந்துடறேன் கையிலே காலணா இல்லீங்களே.. அழமாட்டாத குறையாக காலில் விழாத குறையாக கெஞ்சினான் நயீமாவின் அண்ணன்.

“போ… போப்பா… காலைல ரூவாயோடு வந்து பாரு…” என்று பிடரியைப் பிடித்துத் தள்ளாத குறையாக விரட்டி கதவையும் அடைத்துவிட்டார்.”10 என்னும் கூற்றின் வழியாக சமுதாயத்தில் மனிதாபிமானம் அற்றவர்கள் சிலர் இருப்பதையும் அறியமுடிகிறது.

மண முறிவு (தலாக்)

“தலாக் என்பது இசுலாமியச் சமுதாயத்தில் விவாகரத்தைக் குறிக்கும் சொல்லாகும்.

“இல்லறம் என்பது இயற்கைத் தேவைக்காகவும், மக்கள் ஒழுக்கப் பாதுகாப்பிற்காகவும், இன்பத்திற்காகவும், மக்கள் பேற்றிற்காகவும், சமூக கௌரவத்திற்காகவும், ஆன்மீக முதிர்ச்சிக்காகவும் ஏற்படுத்தப்பட்டது. இவை நிறைவேற்ற முடியாத சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில் வாழ்க்கையை நரகமாக்கி; கொள்வதைவிட இருவரும் கௌரவமாக பிரிந்து விடுவதே இருவருக்கும் நல்லது.”11 என்கிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்.

கணவன் மனைவியிடையே இணக்கமற்ற நிலை ஏற்பட்டு விட்டால் அவர்களது வாழ்வில் நிம்மதி இருக்காது. ஒவ்வொரு நாளும் குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும். ஆதலால் விவாகரத்து செய்து கொள்வதே நல்லது எனக் கூறுவதும் பொருந்தும்.

பல குடும்பங்களில் கணவன் மனைவியிடையே ஒற்றுமை இல்லாது தினமும் நரக வாழ்க்கை அனுபவித்து வருகின்றனர். கருத்து வேற்றுமை, உடற்கோளாறு, அழகின்மை, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், இல்லறத்தில் மன நிறைவின்மை, நாகரிகமின்மை போன்ற காரணங்களால் பலர் தம் மனைவிக்கு மணவிலக்கு அளிக்கின்றனர்.

“கணவன் மனைவி ஆகிய இருவரும் கூடி வாழ்ந்தால் துன்பம் விளையும் என்றோ, அவர்களால் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்றோ, இறைவனுக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் நிறைவேற்ற முடியாது என்ற நிலைமை உருவாகும் போதோ அவர்களின் ஒளிமயமான வாழ்வு கருகிவிடாமல் இருப்பதற்காக இஸ்லாம் இறுதி கட்டத்தில் அளித்த அனுமதியே ‘தலாக்’ ஆகும்”12 என்கிறார் இஸ்லாமிய கலைக் களஞ்சிய ஆசிரியர் அப்துல் ரஹீம். மேலும்,

“பிரிந்து செல்ல விரும்புவோர் ‘தலாக், தலாக், தலாக்’ என்று மூன்று முறை கூறிவிடுவதாலேயே ‘தலாக்’ நிறைவேறி விடுகிறது. ஒரு தடவையோ, இரு தடவையோ ‘தலாக்’ கூறினால் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பிருக்கிறது. ஆனால் மூன்று முறை ‘தலாக்’ கூறிவிட்டால் விவாக விலக்கு நிறைவேறி விடுகிறது. அதன் பிறகு அவர்கள் சட்டப்படி கணவன், மனைவியாக வாழ முடியாது. எனவேதான் பிரிந்து செல்ல விரும்புகின்றவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பளிக்கும் விதத்தில் ‘தலாக்’ கூறுவதை ஒரு தடவை அல்லது இரு தடவையுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் கூறுகின்றது.

ஒருவன் மூன்று தலாக்குகளையும் கூறித் தன் மனைவியை முற்றிலுமாக விலக்கிவிட்ட பிறகு மீண்டும் அவளோடு வாழ விரும்பினால் அவளை வேறொருவருக்குத் திருமணம் செய்து கொடுத்து அவர் ‘தலாக்’ கூறினால் மட்டுமே அவளை அவன் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். தான் கூடி வாழ்ந்த தன் மனைவியை வேறொருவனுக்குத் திருமணம் செய்து கொடுப்பதை எந்த ஆண்மகனும் விரும்ப மாட்டான். எனினும் முத்தல்லாக்கும் கொடுத்த காரணத்தினால் இந்தத் தண்டனையை அவன் அனுபவித்துத்தான் ஆகவேண்டும். இங்ஙணம் தலாக்கைத் தவிர்க்க பலவிதமான விதிகளையும் இஸ்லாம் ஏற்படுத்தியுள்ளது.”13 என்கிறார் அப்துல் ரஹீம்.

பாத்திமுத்து சித்தீக் அவர்களின் கதைகளில் பெரும்பாலான இடங்களில் ‘தலாக்’ பற்றிய செய்திகள் வருகின்றன. ‘ஒற்றைப்பறவை’ என்னும் சிறுகதையில் குழந்தை இல்லை என்னும் காரணம் காட்டி நன்னியும், அத்தாவும் ஜமீலாவைத் ‘தலாக்’ கூற அஸீமை வற்புறுத்துவதாக அமைந்துள்ளது. ஆனால் எவ்வளவு வற்புறுத்தியும் அஸீம் அதற்கு உடன் படாததை ஆசிரியர் மிக அழகாக சுட்டிக்காட்டியுள்ளார்.

“…ஏன் நன்னி, சுய புத்திய இழந்துட்டா பேசறே.. ஜமீலாவுக்குப் பிள்ளை பெறக்கலைன்னா, உடனே இரண்டாந்தாரமா கட்டணும்னு சட்டமா? இது உனக்கே நல்லாயிருக்கா.. நம்ம வம்சத்துலே.. இந்த மாதிரி இதுவரை யாராவது செஞ்சிருக்காங்களா.. படிச்சவங்களுக்கும், படிப்பறிவில்லாதவங்களுக்கும் என்ன வித்தியாசம்… இதென்ன சட்டையா... செருப்பா.. ஒன்னு சரியா அமையலைன்னா வேறொன்னு வாங்கிக்கிறதுக்கு…” படபடவென பாப்கார்ன் பொரிகிற மாதிரி அஸீம் பொரிந்து தள்ளினான்.”14

இக்கூற்றின் வாயிலாக குழந்தை இல்லாமையால் ‘தலாக்’ சொல்ல வேண்டிய நிலை ஏற்படுவதை ‘ஒற்றைப்பறவை’ சிறுகதை வழி அறிய முடிகின்றது.

கணவன் மனைவி உறவு

கணவன் மனைவிக்குள் சண்டைகள், சச்சரவுகள் வந்தாலும் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாமல் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து அன்போடு வாழ்க்கை நடத்தினால் பிரிய வேண்டிய அவசியம் இருக்காது என்று பாத்திமுத்து சித்தீக் அவர்களின் ‘வெளிச்சம் தரும் விளக்கு’ கதையின் வாயிலாக அறிய முடிகின்றது.

“என் வியாபாரம் நொடிச்சுப் போய்த் திரும்பி வந்து வூட்டோட கெடந்தப்போ, உங்கத்தா நடு ஹால்லே நின்னுகிட்டு “சம்பாதிச்சு, குடும்பம் காப்பாத்தத் துப்பில்லாதவன்கிட்டே என்னத்துக்கும்மா ஒட்டிக்கிட்டு கிடக்கிற… பேசாம ‘வார்த்தை(தலாக்)யைக் கேட்டுக்கிட்டு வந்துரும்மா… அவலையும் சவலையுமா நின்னு அழுவுதுக..? ங்கற மாதிரி சொன்னப்போ.. நீ அத்தாக் காரர்ன்னு பயந்துக்கிட்டு சும்மாவாயிருந்தே…? “அத்தா, மருமகன்னு கூட வச்சுப் பார்க்காமெ வாய்லே வந்தபடி பேசுறீங்களே..! பூ கூட ஒரு தரம்தானே மலருது? பொம்பளை அதைவிடவா கேவலமா போயிட்டா? துப்பு கெட்டவரோ துப்புள்ளவரோ… நீங்க தேடிப்பார்த்து கட்டிவச்ச மாப்பிள்ளை தானே.”15 என்ற கூற்றின் வாயிலாகவும்,

“காலம் பூரா ஒருத்தர் மனசை ஒருத்தர் புரிஞ்சு, ஒருத்தர் மற்றவருக்கு ஆடையா, மானம் காத்து நம்ம கஷ்ட நஷ்டத்தை நமக்குள்ளேயே பகிர்ந்துக்கிடறது உத்தமம் இல்லையா”16 என்ற கூற்றின் வாயிலாகவும் கணவன் மனைவி ஒருவருக்கொருவர் ஆடையாகவும் மானம் காப்பவராகவும் இருக்க வேண்டும் என்பது புலப்படுத்தப்படுகிறது.

தாய்க்குத் தரும் சிறப்பு

இசுலாத்தில் தாய்க்கென்று தனிச்சிறப்புண்டு. தாயின் காலடியிலேயே சுவர்க்கம் இருப்பதாக இசுலாம் கூறுகிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக பாத்திமுத்து சித்தீக் அவர்கள் ‘மாதாவின் மலரடியில்’ என்னும் சிறுகதையில் வரும் கூற்று நோக்கத்தக்கது.

“அல்லாவுக்கும் ரஸ_லுக்கும் அடுத்தபடியா எனக்கு என் அம்மாதா… என்னோட எல்லாமே சுவர்க்கமே அவங்க காலடியில் தான்ங்கறதை நினைவிலே வச்சுக்க… அவங்களோட தியாகக் தனல்லே தான் இப்ப நீ குளிர் காய்ஞ்சுக்கிட்டிருக்கே”17 என்றும்

“பெற்றவர்கள் மனம் குளிர்ந்து அடைகிற சந்தோஷத்திலே தான் அல்லாவோட சந்தோஷம் அடங்கியிருக்குதுன்னு நம்ம நபிகள் நாயகமே சொல்லியிருக்காங்க”18 என்றும்,

“எங்கம்மாவுக்காக உசிரைக்கூட குடுப்பேன்… ஏன்னா, இந்த உசிரு, உடம்பு, பொருள் எல்லாமே அவங்களோடது…! போதாததுக்கு வயித்திலே பத்து மாதமும், கையிலே பல மாதங்களும் என்னைச் சுமந்து, கண் முழிச்சிருந்து காப்பாத்தி ஆளாக்கினவங்கறதை மறந்திடாதே”19 என்றும் தாயின் சிறப்பைத் தன் சிறுகதை வாயிலாக பாத்தி முத்து சித்தீக் கூறுகிறார்.

முடிவுரை

பாத்திமுத்து சித்தீக்கின் சிறுகதைகளில் இசுலாமிய மார்க்க நம்பிக்கைகள், கோட்பாடுகள், வாழ்க்கை நெறிமுறைகள், பழக்க வழக்கங்கள், பண்பாட்டுத் தனித்தன்மைகள் ஆகியவற்றைக் காணமுடிகிறது.

இசுலாமிய அடிப்படையிலான திருமண உறவு, மணவிலக்கு போன்ற செய்திகளும் காணப்படுகின்றன.

சமூக ஒற்றுமை, சமய நல்லிணக்கம் குறித்த செய்திகளும் இவருடைய சிறுகதைகளில் காணமுடிகிறது.

சமூக அவலங்கள் குறித்தும், பெண்களின் பிரச்சினைகள் குறித்தும் இவருடைய சிறுகதைகளில் ஆங்காங்கே சொல்லப்பட்டிருக்கின்றன.

நாகரிகம் என்ற பெயரில் இறைக் கடமைகளில் அலட்சியம் காட்டுபவர்களை ஆசிரியர் சாடியிருப்பதும் இவருடைய சிறுகதை வாயிலாக புலப்படுத்தப்படுகிறது.

இறையச்சம், இறைநம்பிக்கைப் பற்றிய செய்திகள் இவருடைய சிறுகதைகளில் ஆங்காங்கே வெளிக் கொணரப்பட்டிருக்கின்றன.

பெண்களின் மன இயல்புகளையும் குழந்தைகளின் மன இயல்புகளையும் பாத்திமுத்து சித்தீக் அவர்கள் யதார்த்தமாக வெளிக்காட்டியிருக்கின்றார்கள்.

பெண்களுக்கு எதிரான வரதட்சணை பற்றிய செய்திகள் சிறுகதையில் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன.

‘மஹர்’ (பெண்களுக்குக் கொடுக்கப்படும் திருமணக் கட்டணம்) பற்றிய செய்திகள் இவருடைய சிறுகதைகளில் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன.

கணவன் மனைவி உறவு, மாமியார் மருமகள் உறவு, பெற்றோர்க்கும் குழந்தைக்கும் உள்ள உறவு, மனித உறவுகள் ஆகியவற்றை தம் சிறுகதைகளில் பாத்திமுத்து சித்தீக் அவர்கள் அழகாக படைத்திருப்பது புலனாகிறது.

வேறு வேறு மதத்தவர்களாக இருந்தாலும் தன்னுடைய சமயச் சடங்குகளை விவாதிக்காமல் இருந்தால், சமூகத்தில் மதச்சண்டைகள் ஏற்படாது. மாறாக உதவும் மனப்பான்மை வளரும் என்பது ஆசிரியர் கூற்றாக காணமுடிகிறது.

கல்வியறிவு இல்லாமையால் இந்தச் சமூகம் வறட்டு கவுரவம் பார்த்து வாழ்க்கையைச் சீரழித்துக் கொள்வது சிறுகதைகளின் வாயிலாகப் புலப்படுகிறது.

சமூகத்தில் ஒருத்தி தாய்மை அடையவில்லை என்றால் அவளுடைய வாழ்க்கை ஏளனத்துக்குரியதாகிறது. இவருடைய பெரும்பாலான சிறுகதை களிலும் பின்னோக்கு உத்தி கையாளப்பட்டிருப்பது காணமுடிகிறது.

அடிக்குறிப்புகள்

பாத்திமுத்து சித்தீக், ஒற்றைப் பறவை / ஹாஜ்ஜா எஸ். இ. பாத்திமுத்து சித்தீக், ஹைதராபாத் : பாமு பதிப்பகம், 1998

பாத்திமுத்து சித்தீக், ஒற்றைப் பறவை, ப.7

மேலது, ப.40

மேலது, ப.41

அல்லாமா ஏ.கே.அப்துல் ஹமீத் பாகவி, தர்ஜூமத்துல் குர் ஆன், ப.91

அப்துல் ரஹீம், மஹர், இஸ்லாமியக் கலைக் களஞ்சியம், ப.668

பாத்திமுத்து சித்தீக், ஒற்றைப் பறவை, ப.45

மேலது, ப.46

மேலது, ப.84

மேலது, பக்.123, 124

மேலது, ப.146

அப்துல் ரகுமான், இஸ்லாம் பெண்ணுரிமைக்கு எதிரானதா? ப.132

அப்துல் ரஹீம், இஸ்லாமியக் கலைக்களஞ்சியம் (தொ.மூ), ப.249

மேலது, பக்.249, 250

பாத்திமுத்து சித்தீக், ஒற்றைப் பறவை, ப.15

மேலது, ப.163

மேலது, ப.164

மேலது, ப.169

மேலது, ப.170

மேலது, ப.171

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.