எளிமை, சந்தநயம், அழகியல் சித்தரிப்பு என்ற பின்னணியில் அமைந்த கவிதைகள் கொண்ட தொகுப்பு தொடுவானம். இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் மரபின் தொடர்ச்சி மற்றும் நவின கருத்தியல் என்ற இரு புள்ளிகளை கொண்டமைந்துள்ளதை அறிந்தகொள்ள முடிகின்றது. வசன நடையில் எளிமையான சொற்களைக் கொண்ட கவிதைவரிகளில் உருவத்தில் மரபின் தொடர்ச்சியும் உள்ளடக்கத்தில் நவினத்தின் அதாவது, காலமாற்றதின் தேவை பற்றிய கருத்தியல் முன்னெடுப்புகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவை இன்றும் உயிர்புடன் இருக்கின்ற சமூகத்தின் சில புள்ளிகளை அடையாங்காட்டுவனவாக உள்ளன.

கவிதைகளில் இடம்பெற்றுள்ள சில வரிகளைக் காலச் சூழலுக்கு மட்டும் ஏற்றவை என்று கொண்டாலும் அவற்றில் ஏராளமான செய்திகள் சமகாலத்தின் தேவையாகவும் சமூகத்தின் அங்கலாய்ப்புகளை வெளிப்படுத்தி உள்ள ஆவணமாக அமைந்துள்ளதுள்ளன. இத்தகைய தன்மைகளைக் கொண்ட இப்பிரதி வாசிக்கின்ற பொழுது அவற்றில் சில கூறுகளை நாம் அடையாளம் கொள்ளக் கூடியதாக இருக்கிறது. அவற்றில் ஒன்று அழகியல் சார்ந்த விவரிப்புகள். இது எக்காலத்திற்கும் உரியதான ஒன்றாக விளங்குகிறது. அழகியலை வெளிப்படுத்தும்விதம் காலந்தோறும் தொடர்ச்சியாக மாறுதல்களைச் சந்தித்து வந்தாலும், அதன் உள்ளார்ந்த அகம் என்றும் நிலைபெற்ற ஒன்றாக இருக்க வேண்டும் என்பதை மறுப்பதற்கு இல்லை. அப்படிப் பார்க்கிறபொழுது கவிஞன் தான் கண்ட - தன் மனதைக் கவர்ந்திழுத்த அழகியலை எளிமையான சொற்களில் சொல்லிச் சென்றிருப்பதைப் பார்க்கமுடிகிறது.

சான்றாக,  

‘’மாவின் பசுந்தளிர்கள் பனித்துளி தூவிடும் !
மலர்கள் பரப்பி உயிர்களைக் கூவிடும் !
பூவின் மதுநுகர்ந்து பொறிவண்டு பாடிடும் !
புதர்கள் தலை அசைத்துப் புன்சிரிப் பூட்டிடும்!
கூவிச் சிறகடித்து வரிச்சேவல் எழுப்பிடும் !
கொடுமை இருளகல ஒளி எங்கும் தாவிடும்!’’

என்ற முதல் கவிதை இயற்கையின் அழகை எளியச் சொற்களால் சித்தரித்துவிடுவதைப் பார்க்கலாம். என்றாலும், கவிதையின் இறுதிவரி கவனிக்க வேண்டியதாக உள்ளது. அந்த வரி ஒளி பற்றியதாக இருந்தாலும், அந்த ஒளியால் அகற்றப்படும் இருள் வெறும் இருளா? என்ற கேள்வி எழாமல் இல்லை. காரணம் அது ‘கொடுமை இருள்’ என்று சுட்டப்பட்டுள்ளது. இருள் என்பதன் பொருள் என்ன? இருள் யாருக்கு என்ன கொடுமை தந்தது என்பன போன்ற வினாக்கள் பின்னணியில் நாம் விரித்துப் பொருள் கொள்ளலாம். மேலும், எழுதப்பட்ட காலத்தில் மட்டுமன்றி இன்றும் புதுமையானதாகவே அவ்வரி உள்ளதை உணரலாம்.

வேறொரு கவிதை

‘’நெஞ்சில் ஈரம் இல்லார் நாண
நீளுழைப்பைக் கொடையைக் காட்டி

செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின்
சீருக் கேற்ப முழவை மீட்டும்’’

என ஒடையின் பயணம் பற்றிக் கூறுகிறது.

‘’நாட்டில் பொருள் முடக்கும் நரிகளைப் போலன்றி’’
வள்ளல் தன்மை உடையதாக நிலவு ஒளி உள்ளது.

என்கிறது ஒரு கவிதை. மேலும்,

‘’மருண்ட மக்களின் அறிவைக் கொளுத்தும்
தெருண்ட மேலவர் செந்தமிழ்ப் போலே
இருண்ட மேகத் திடை புகுந்தே
உருண்டு செல்லும் வெள்ளித் தட்டு’’
என்றும்,

‘’அழகுப் பெண்ணின் நெற்றி போலே!’’

வும் பிறை மதியின் அழகு இருப்பதாகக் கூறப்படுள்ளன.

                                                   - கவிஞர் வாணிதாசன் -

இக்கவிதை வரிகளில் சுட்டப்படும் உவமைகள் புதியனவாக உள்ளன. ஒன்று, அதாவது வழக்கமாக நிலவொளி பெண்ணின் முகம் போல் இருக்கும் எனக் கூறப்படும். ஆனால் இக்கவிதையில் பிறைமதி அழகுப்பெண்ணின் நெற்றி போல் இரப்பதாக உவமானம் உவமேயம் என்பன தலைகீழாக்கப்படுள்ளன. இரண்டாவது, ஓடை, நிலவொளி முதலானவை பிரதிபலன் பார்க்காமல் உயிர்களுக்குப் பயன்தரக்கூடியன என்று கூறப்படும் இடங்களில் அவற்றின் எதிரான சுரண்டல் பற்றிய சமூகத்தின் அவலங்களையும் அவற்றை மேற்கொள்ளும் நபர்களின் செயலையும் சுட்டிச் செல்லப்படுகின்றன. கவிதைவரிகளில் இடம்பெற்றுள்ள இந்த வார்த்தைப் பிரயோகங்கள் சமகாலத்திலும் சற்றுப் புதிதாகவே படுகின்றன. இவை வாசித்து மகிழத்தக்கனவாக இருப்பது மட்டுமன்றிப் புதுமையுடனும் இருக்கின்றன. தொகுப்பில்,

"தொடுவானம் தொட்ட நட்சத்திரங்கள்,
   கடலின் நுரை போல்,
  கனவுகள் சிதறிக் கிடக்கின்றன."

"கடல் அலைகள் எழுந்து சிரிக்கும்"

  "மலைகள் முகம் திறந்து நிற்கும்"

  "ஆறுகள் பாடிக் கொண்டே ஓடும்"

  "மரங்கள் இலைகளை ஆட்டி மகிழும்"

    "மரங்கள் தம் இலைகளை அசைத்து,
        காற்றுக்கு ஒரு கதை சொல்கின்றன."

    என அழகியலைக் கவிதைவரிகளில் அள்ளித்தெளித்துள்ள வரிகள் வாசித்து மகிழத்தக்கனவாக உள்ளன. இந்த வரிகள் உயிர்ப்புடன் காட்சிகளைக் கண்முன் கொண்டு வந்து காட்டும் இயல்பில் அமைந்திருக்கின்றன. கவிதையின் ஆழம் வாசிப்பவனின் வாசிப்பின் ஆழத்தைத் தொட்டு உறவாடி மகிழ்வதை மேற்கண்ட கவிதைவரிகள் நிகழ்த்திக் காட்டுகின்றன. 

அடுத்ததாக, கவனம் பெறக்கூடியது மனிதனுக்கும் இயற்கைக்கும் உள்ள உறவு குறித்த பதிவுகள். மனிதன் இயற்கையை எந்த அளவுக்கு கெடுக்க முடியுமோ அந்த அளவுக்கு கெடுத்து ஒழித்துவரும் இன்றையச் சூழலில் அது குறித்த சிந்தனை முக்கியத் தேவையாக உள்ளது. ‘சூழலில்’ என்ற ஒரு துறை வளர்ந்து இயற்கையின் பயன் இயறகையைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்த கவனம் செலுத்தும் இன்றைய காலகட்டத்தில் இது போன்ற கவிதைகள் எழுதப்படுவது காலத்தின் தேவைதான். ஆனால் இயற்கையின் அழிவு பற்றிய சிந்தனை பெரிய அளவில் பேசப்படாத - அப்படிப்பட்ட கருத்து தமிழில் உருவாகாத காலகட்டத்தில் இக்கருத்துக் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இயற்கையின் அவசியம் இயற்கையைக் காக்கவேண்டியதன் தேவை மனிதனுக்கும் இயற்கைக்குமுள்ள உறவு எந்த அளவுக்கு நெருக்கமானதாக அமைய வேண்டும் என்பது போன்ற சீரிய கருத்துக்களைக் கவிதையின் வரிகள் சொல்லிச் சென்றுள்ளன. இவை கவனிக்கத்தக்க அம்சங்களாகும்.  

    "இயற்கைதான் நமக்கு அனைத்தையும் தருகிறது,
     நாம் அதற்கு என்ன தருகிறோம்?"

   "மரங்கள் நம்மை காக்கின்றன,
     நாம் மரங்களை காக்க வேண்டும்."

"இயற்கை நமக்கு அன்னையாகும்,
     நாம் இயற்கையை மறந்து விடக்கூடாது."

என மனித வாழ்க்கையில் இயற்கையின் பங்கு மற்றும் மனிதனின் பிரச்சாரம் போல் இருந்தாலும் இன்றும் அதன் தேவை தவிர்க்க இயலாத ஒன்றாக உள்ளதை மறுப்பதற்கில்லை. இயற்கை மீதான கவனிப்பின்மை மற்றும் அதற்கான அவசியம் பற்றிய கவிதை சொல்லியின் எதிர்பார்ப்பு காலத்தின் தேவை.

    "நாம் வாழும் பூமியை பாதுகாப்போம்,
     எதிர்கால சந்ததியினருக்காக."

    "இயற்கையை நேசிப்போம்,
     அதனுடன் இணைந்து வாழ்வோம்."

    "நாம் இயற்கையின் ஒரு பகுதி,
     இயற்கையை அழித்தால் நமக்கும் அழிவுதான்."

இந்த வரிகள் மூலம் நாம் புரிந்து கொள்ளலாம். இயற்கையை ஒரு உயிரோட்டமுள்ள சக்தியாகக் கருதும் இடங்கள் அருமை. இயற்கை மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. மனிதன் இயற்கையின் ஒரு பகுதி என்பதை உணர்ந்து, அதைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தைக் கவிதைவரிகள் வலியுறுத்துகின்றன. இயற்கையை மதிக்காமல் இருப்பதன் விளைவுகள் குறித்தும் எச்சரிக்கின்றன. தொடுவானம் கவிதைகள், இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தினை முன்னெடுத்துள்ள மன்னோடி படைப்புகளில் ஒன்றாகும் என்பதில் ஐயமில்லை.

இந்தத் தொகுப்பில் காதல் பற்றிய கவிதைகள் சில இடம் பொற்றுள்ளன. அவற்றில்,

‘’புன்னை உறவினை அன்னை உணர்ந்தனள் ;
தென்னை குளக்கரை செல்லாதே என்றனள்;
கன்னற் கழனிக்கோ காவலும் மூண்டது;
மின்னல் இருள் என்றேன்; மெல்லியல் சோர்ந்தது !’
திருமணம் ஒன்றே பெண்ணின் காதலுக்குக் காப்பு’’

பெண்ணின் காதல் பற்றியும் அக்காதல் தாயினால் தடுக்கப்படும் காலத்தின் நிலையப் பற்றிக் கூறும் கவிதையின் இறதிவரி காதலை உயிர்புடன் வைப்பதற்கு ஒரே வழி திருமணம் மட்டுமே என்கிறது.

‘’தாழை விலக்க எண்ணில் தாய்விழி மூடாது
தலைவனை இனிக்காண இரவினில் ஆகாது
பேழை எனை அணைக்கும் அன்னைகை சோராது
பிரிவுத் துயர் பொறுக்க இனியென்னால் ஆற்றாது
விடிய விடிய கண்ணை இமைகளோ மூடாது
வேலன் வெறியாட இடந்தரக் கூடாது
கடிமலர் கொய்யாவோ நீர்மொண்டு போகவோ
கன்னியான் வருவது செல்லவே செல்லாது’’

எனச் சங்கக்கக் கவிதையின் மறுஅச்சாகத் தோன்றும் கவிதைவரிகள் சமகால பெண்ணின் அங்கலாப்பைப் படம்பிடித்துக் காட்டுவனவாக உள்ளன.

‘’நிலவும் ஒளியும் போல என்றும்
நீயும் நானும்... ‘’

என்று கூறும் கவிதையில் நிலவிற்கில்லாத குளிர்மை தலைவிக்கு இருப்பதாகக் கூறுகிறது. இவ்வாறு காதலின் அழகைப் பற்றிக் கூறும் இக்கவிதையின் கடைசி வரிகள்,

‘’தலைவன் அன்றோ குற்றவாளி?
தளிரைத் தீய்த்தல் முறையோ தோழி?’

என்று காதலின் பின்னணியில் பெண்ணுக்கு உண்டாகும் பிரச்சனை குறித்தும் அப்பிரச்சனை ஆண் சமுகத்தால்தான் வருகிறது எனச் சொல்லிச் செல்லுகிறது.

‘’வருவார் வருவா ரென்று வழிமேல் விழிவைத்து
வாடி வதங்க உயிர் ஓடாத ஓடானேன்!’’

மற்றும்

‘’வானை இருள்மெல்லத் தாவுதே - அலை
வந்து கரையைத் தழுவுதே’’
மற்றும்
‘’முல்லை பூக்க வருவேன் என்று
சொல்லிப் போன அன்பன் - அன்று
சொல்லிப் போன அன்பன்’’

என்ற காதல் கவிதைவரிகளில் சங்கப் பாடல்களின் சாயலைக் காணலாம். அத்துடன், இத்தொகுப்பிலுள்ள காதல் பற்றிய கவிதைகள் சங்க இலக்கியம் மட்டுமன்றி திருக்குறள் (காமத்துப்பால்) மற்றும் கலிங்கத்துப்பரணி (கடைதிறப்பு) முதலானவற்றில் இடம்பெற்றுள்ள பெண்ணின் ஏக்கங்களை நினைவூட்டிச் செல்லுகின்றன.

மேலும், காதலைப் பற்றிப் பேசும் இடத்தில் பொண்ணுக்கு உண்டாகும் சமகாலப் பிரச்சனைகள் குறித்தும் பேசத் தவறவில்லை. உதாரணமாக,

"பெண்கள் வீட்டில் இருக்க வேண்டும் என்ற கட்டளைகள்"

  "பெண்கள் அடக்குமுறையை எதிர்கொள்கின்றனர்"

  "பெண்களுக்கு கல்வி உரிமை மறுக்கப்படுகிறது"

என இவை எல்லாம் அகற்றப்படவேண்டும் என்று கூறுவதுடன்  "பெண்கள் சுதந்திரமாக வாழவேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது. அதற்கு ஒருபடி மேல் சென்று,

‘’புலிநிகர் ஆளனைத் தேடு - பெற்றோர்
புகுந்திடை வந்தால் ஒப்பாதே சாடு
மலிந்த சரக்கல்ல பெண்கள் - நாட்டின்
வாழ்விற்கும் வளத்திற்கும் அவர்களே கண்கள்!’’

எனப் பெண் உரிமை பற்றிப் பேசுகின்றது. இந்த வரிகள் இன்றைய காலத்தின் தேவயாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு அம்சங்களை ஆழமாக ஆராய்ந்துள்ள கவிதைகள், சமூக ஏற்றத்தாழ்வு, பழமைவாதம், சமூக ஒற்றுமை, சமூக நீதி மற்றும் பெண்களின் நிலை போன்ற பல்வேறு அமசங்கள் குறித்துப் பதிவு செய்தள்ளன.

‘’பஞ்சணை தந்தாலும் நஞ்சைக் கொடுத்தாலும்
கெஞ்சி உன் காலடி தஞ்சம் புகுந்தாலும்
அஞ்சாதே கலங்காதே பஞ்சையைத் திரும்பிப் பார்!
நெஞ்சை உருக்கும் ஏழை நிலை மாற்ற எழுந்திரு!’’

‘’ குப்பனும் சுப்பனும் குந்தக் குடிசை யின்றி
இப்பெரும் மண்ணுலகில் என்றும் உழைத்து வாடத்
தொப்பை தடவி உண்ட சோறு செரிக்க நாளும்
உப்பைக் குடிக்கும் செல்வர் ஊர் எய்த்தல்’’

என்ற நிலை மாற வேண்டும்.
‘’ஏற்றமும் தாழ்வும் எம்மான் செயலே என்று
போற்றிடும் ஏழைமன மாற்றம் அடைந்திட’’

வேண்டும்.

‘’காட்டைத் திருத்தி வயல் கழனியைக் கண்டவர்
கஞ்சிக்கு வழியற்றுப் பஞ்சையாய் வாழ்வதோ ?’’

என்று கோபத்துடன் முழங்குவது என்பன குறிப்பிடத்தக்கன. கவிதைவரிகள் சமூக ஏற்றத்தாழ்வு குறித்தும், ஏழை எளியோர் வாழ்க்கையில் சந்திக்கும் சிரமங்கள் குறித்தும் வெளிப்படுத்துகிறது.

ஏழைகள் எவ்வாறு துன்பப்படுகிறார்கள் என்பதை நேரடியாகக் கூறுகிறது. கவிதைகளில் சமூகத்தில் நிலவும் குறைகளைப் பற்றி வெளிப்படையாகக் கூறப்பட்டுள்ளது. சமூக நீதிக்கான கோரிக்கை: சமூகத்தில் சமத்துவம், நீதி நிலவ வேண்டும் எனபன போன்ற கருத்துக்கள் வலியுறுத்துப்பட்டுள்ளன. சமூக மாற்றத்திற்கான அழைப்பு: பழைய முறைகளை மாற்றி, புதிய சமுதாயத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்பன போன்ற கருத்துகள் விரவிக்கிடக்கின்றன.

மூடப்பழக்கதை எதிர்த்து,

‘’பிறப்பினில் உயிரெலாம் ஒத்தது தம்பி
பிரித்தாளப் பகைவர்கள் செய்ததை நீ நம்பி’’

ஏமாற வேண்டாம். எனத் தமிழ்ச் சமூகத்தின் பல்வேறு அடுக்குகளில் வாழும் மக்களின் வாழ்க்கை, போராட்டங்கள் மற்றும் கனவுகளை உணர்வுபூர்வமாகப் பதிவு செய்கிறது. குறிப்பாக, சமூக நீதி, சமத்துவம் போன்ற முக்கியமான கருத்துகளை இக்கவிதைகள் வலியுறுத்துகின்றன.

தமிழ் இலக்கியத்தில் பகுத்தறிவு சிந்தனையின் ஒரு முக்கியமான குரலாக விளங்குகிறது. கவிதைகளில் மூடநம்பிக்கைகள், சாதி, மதம் போன்ற சமூகப் பிரச்சினைகளை எதிர்த்துப் பேசும் பல வரிகள் இடம்பெற்றுள்ளன. சான்றாக,

    "கடவுள் இருக்கிறார் என்று சொல்லி,
         மனிதன் தன்னைத்தானே ஏமாற்றுகிறான்."

    "கோயில்களில் கடவுள் இல்லை, மனிதனின் ஆசை மட்டுமே."

மற்றும்

"சாதி என்ற பேர் கேட்டு,
மனிதன் தன்னைத்தானே சிறுமைப்படுத்துகிறான்."   

மற்றும்

"ஒரு மனிதன் ஒரு மனிதனுக்கு சமம்,
         இதுதான் உண்மையான சமத்துவம்."

   மற்றும்

"அனைத்து மதங்களும் ஒன்றுதான்,
         அன்புதான் மதம்."

மற்றும்

    "விஞ்ஞானம்தான் நமது கடவுள்,
         அறிவுதான் நமது பக்தி."

மற்றும்

    "காரணம் கண்டுபிடித்து செயல்படுவதுதான் பகுத்தறிவு."

 மற்றும்

  "எல்லோருக்கும் சமமான உரிமை,
         இதுதான் சமூக நீதி."

என்பன போன்ற பல வரிகள் கவிதைகளில் இடம்பெற்றுள்ளன. இவை  மூடநம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, மதச்சார்பின்மை, பகுத்தறிவு சிந்தனையை உருவாக்குதல், சமூக நீதி நிலைநாட்டுதல் என்பன போன்ற கருத்துகள் முன்வைக்கபட்டுள்ளன. அதாவது, மனிதர்கள் அனைவரும் சமம். சாதி, மதம், ஏழை பணக்காரன் என்பன போன்ற வேறுபாடுகளைத் தாண்டி அனைவரும் சம உரிமைகளுடன் வாழ வேண்டும். என்பன போன்ற சிந்தனையைக் கொண்டுள்ள இந்தக் கவிதைகளின் மூலம், பகுத்தறிவு சிந்தனையைப் பரப்பி, சமூகத்தில் நிலவும் அநீதிகளை எதிர்த்துப் போராடிய கவிஞரின் உள்ளத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள முடிகின்றது.

தமிழ், தமிழன் எதிர்காலம் குறித்த பார்வை குறித்தும் கவிதைகளில் பார்க்கமுடிகின்றன.

‘’கம்பன் நடைவேண்டாம் ! சேக்கிழான் நடைவேண்டாம்!
காஞ்சி கச்சியப்பத் தம்பிரான் கடைவேண்டாம்!
கொம்புத் தமிழ்த்தேன்மிகு சங்க நடைபோல்
கொல்லேறு பாரதி தாசன் நடைபோடே!’’

தமிழனின் மரபைத் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது.

‘’வந்தவர் ஆரியர் தமிழால் செழித்தார்!
மக்கள் மனம்மயக்கித் தமிழைப்பின் அழித்தார்!
நொந்தவர் தமிழர் சற்றேகண் விழித்தார் 1
நூல்காட்டி ஏய்த்தவர் ஆந்தைபோல் விழித்தார்’’

எனத் தமிழால் வாழ்ந்தவர் பற்றியும், வீழ்ந்தவர் பற்றியும் கூறும் கவிதைவரிகள்,

‘’கொலைவாள் எடுஉன் மலைத்தோள் குலுக்கு
கொடுமைகள் சாய்ந்திடுமே நாட்டில்;
தலையாம் இப்பணி தாய்நாடுனதே
தயங்காதே தமிழா சற்றும்.’’

என்றும்

‘’ பாடிவந்தோர்க் குற்ற பரிசிலாய்த் தன்னரும்
நாடும் மலைவயல் காடும் வழங்கினோர்
ஓடேந்தித் திரிவதோ? உறுத்த லுக்கிலையோ?
கூடிக் குறைமுடிக்கக் குதித்தெழு வாயடா!
என்றும்
‘’காடுமை எதிர்த்து நாட்டில் குறையை முடித்தவர்
கொல்புலி போல்பகை இல்லா தொழித்தவர்
மடமை இருட்குழியில் வாய்மூடிக் கிடப்பதோ?
மறத்தமிழ் சிறுத்தையே ! புறப்படு புறப்படு’’

எனத் தமிழ் உணர்வு உட்டுவதைப் பார்க்கமுடிகிறது.

‘’ கவின்பெறு திராவிடம் அமையும் எழுச்சிகொள்ளே?’’

‘’ஆரியம் சூழ்ந்ததால் அறிவிழந்தார் -ஆண்கள்
அடிமைக்கு ஆட்பட்டுத் தாழ்ந்தார்.’’

உழைப்பைப் பற்றிப் பேசும் இடத்தில் உழைப்பிற்கு ஈடானது உலகில் வேறொன்றில்லை. என்றும்,

‘’பழுதின்றிப் பாடுபட்டுழைப்பாய்!
எங்கும் படர்ந்திடும் ஆரியப் புல்லுருவி அழிப்பாய்!

என உழைப்புச் சுரண்டலை செய்து சுகபோகத்தில் வாழும் கூட்டத்தை அழித்தொழிக்க வேண்டும் என்கிறது.

இவ்வாறு வாணிதாசனின் 'தொடுவானம்' கவிதை, இயற்கை, வாழ்க்கை, உழைப்பு போன்ற பல்வேறு தலைப்புகளை மிகவும் எளிமையாகவும் கவித்துவமாகவும் விவரிக்கிறது. இக்கவிதை, வாழ்க்கையைப் பற்றிய புதிய பார்வையை நமக்குத் தருகிறது. இக்கவிதையைப் படிப்பதன் மூலம், நாம் இயற்கையின் அழகை ரசிக்கவும், வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை புரிந்து கொள்ளவும் உதவும். இக்கவிதையில் இயற்கை மிகவும் அழகாக வர்ணிக்கப்பட்டுள்ளது. காலை வெளிச்சம், மழைத்துளிகள், பறவைகளின் கூவல் போன்ற இயற்கை நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக விவரிக்கப்பட்டுள்ளன. நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கை நிகழ்வுகள் எளிமையாகவும் உணர்வுபூர்வமாகவும் விவரிக்கப்படுகின்றன. உழவன், வண்டிக்காரன் போன்ற சாதாரண மனிதர்களின் வாழ்க்கை மையமாகக் கொண்டு, அவர்களின் போராட்டங்கள், கடமைகள் போன்றவற்றை விவரிக்கிறது.

உழைப்பின் மதிப்பை உயர்த்திப் பிடிக்கிறது. உழைப்பாளிகளின் வாழ்க்கை நிலை மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது.

அரசின் அதிகார துஷ்பிரயோகங்களை விமர்சித்து, மக்களாட்சியின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது.

உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலை, அவர்களின் போராட்டங்கள் ஆகியவற்றை வாணிதாசன் விவரிப்பதுடன், உழைப்பாளிகளின் வாழ்க்கை மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது.

சமூகத்தில் உள்ள ஏற்றத்தாழ்மைகளை விமர்சிப்பதுடன், அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறது.

இயற்கை வளங்களை அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகிறது.

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், உழைப்பின் பெருமை குறித்து வலியுறுத்துகிறது.

சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையை எதிர்க்கிறது.

இயற்கை நமது வாழ்வின் ஒரு அங்கமாகும். இயற்கையை நேசித்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

உழைப்பின் மூலமே நாம் வாழ்க்கையில் முன்னேற முடியும். உழைப்பு என்பதே வாழ்க்கையின் முதுகெலும்பு என்கிறது.

தொகுப்பிலிள்ள கவிதைகள் மிகவும் எளிமையான நடையில் அமைந்துள்ளது, எளிதில் புரிந்து கொள்ள முடியும் வகையில் உள்ளது. ஆழமான கருத்துக்களைக் கொண்டுள்ளது.

துணை நின்ற நூல்கள்

இலக்கியத் திறனாய்வு (பஞ்சாங்கம் கட்டுரைகள் II), பஞ்சாங்கம், க., 2010 (முதல் பதிப்பு), காவ்யா வெளியீடு, கோடம்பாக்கம், சென்னை – 600 024.

இஸங்கள் ஆயிரம், சுரேஷ், எம். ஜி., 2017 (முதல் பதிப்பு), அடையாளம் பதிப்பகம், புத்தாநத்தம், திருச்சி - 621 310.

சிலப்பதிகாரம் மறுவாசிப்பு, நடராசன், தி.சு.,  2015 (முதல் பதிப்பு), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட், சென்னை - 600 098.

தொடுவானம், கவிஞர் வாணிதாசன், 1952 (முதற் பதிப்பு), திராவிடன் பதிப்பகம், வேலூர் (வ.ஆ.).


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.