ஏர் என்றால் கலப்பை. இது ஒரு உழவுக்கருவி. வயலில், மண்ணை உழுது, பதப்படுத்தி, விதைப்பின் முன்பும், நடவின் முன்பும் மண்ணைத் தளர்வாக்கி, கீழ் மேலாகக் கிளறப் பயன்படும் கருவி ஆகும். ஏர் மரத்தால், அல்லது இரும்பால் செய்து, அதில் கூரிய அலகைப் பூட்டி, மண்ணைக் கிட்ட பயன்பட்டது. ஏர் மாந்தரின் வரலாற்றைப் புரட்சிகரமாக மாற்றிய வேளாங்கருவி ஆகும். முதலில் மாந்தர் ஏரை இழுத்தனர். பின்னர் ஏர் மாடுகள், குதிரைகள் பூட்டி உழுதனர். இன்று இதற்கென இழுபொறி இயந்திரங்கள் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளன.

ஏர் என்ற சொல், பள்ளு என்னும் தமிழ் சொல்லில் இருந்து பிறந்துள்ளது. பள்ளு என்றால், உழவு. உழவன் இப்பூமியில் ஏறி உழுவதால், பள்ளம் தோன்டுவதால், அது ஏர் எனப்பட்டது.

ஏரின் அடிப்படை உறுப்புகள்.

1. நுகம் அல்லது கிடைவிட்டம்.

2. ஏர்க்கால்

3. குத்து நிலைக் கட்டுப்படுத்தி,

4. துளறு.

5. உளி (முன் கொழு)

6. கலப்பை அல்லது கொழு

7. பரம்பு அல்லது வார்பலகை.

1975ஆம் ஆண்டின் இத்தாலி நாட்டில், நாணயத்தில் இத்தாலிய லிரா நாணயத்தில் கொழுவின் இலச்சினை படம் பொறிக்கப் பட்டுள்ளது.

கலப்பை = ஏரினுழார் உழவர் (குறள். 14)

உழவு ஏரினுநன்றா லெருவிடுதல். (குறள் 1038)

அழகு = கடனறிவார் முன்னின்றிரப்புமோ ரேஎ ருடைத்டு (குறள். 1053)

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும் வாரி வளங்குன்றிக் கால். (குறள் . 14)

மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், ( உணவுப் பொருள்களை உண்டாக்கும்) உழவரும் ஏர் கொண்டு உழவு செய்ய மாட்டார். மழை எப்போது வரும் எனத் தவமிருந்து உழவு செய்யத் தலைப்படுவான் விவசாயி. எனக்கு இதில் மிக்க அனுபவம் உண்டு. காரணம் நான் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். என் அப்பையா, ஆச்சி விவசாயிகள். என் மாமனார் மாமி விவசாயிகள். என் தாய் தந்தையரும் விவசாயிகள். அந்த அனுபவம், இன்று, கனடாவிலும், கோடைகாலத்தில், கடலை, மிளகாய், தக்காளி, வெண்டை, பூசணி, வெங்காயம், பாவற்காய் என என்னைப் பயிர் செய்யத் தூணடின. அப்போது, நானும் மழைக்காக ஏங்குவேன். இங்கு குழாய்த் தண்ணீர் தான் செடிகளுக்கு பாய்ச்சுவேன். அதற்கு பணம் செல்வாகும். மழை பெய்தால், அதனைச் சேகரித்து வைக்க ஒரு தொட்டி வைத்துள்ளேன். அதில் சேரும் தண்ணீரை நான் செடிகளுக்கு பாய்ச்சுவேன். எனக்கு இந்த நாட்டில் இந்த நிலை என்றால், வானம் பார்த்துக் காத்திருக்கும் உழவன் மழைக்கு எப்படி ஏங்கியிருப்பான். சொட்டு மழை நிலத்தில் விழுந்ததும். மறுநாளே ஏர் பூட்டி, உழவு செய்யத் தொடங்குவான். மழை இல்லை என்றால், உழவன் ஏர் பூட்ட மாட்டான் என்பதை அழகாக தன் குறள் மூலம் திருவள்ளுவர் விளக்கியுள்ளார். வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க சொல்லேர் உழவர் பகை. (குறள் . 872) கொலைக் கருவி கொண்டு வாழ்பவரை பகைத்துக் கொண்டாலும், சொல் கொண்டு வாழ்பவரை பகைக்க வேண்டாம். என்னுடைய அப்பையா ஒரு விவசாயி என்று சொன்னேன். அவர் படித்தது மிகவும் குறைவு. 3ம் வகுப்பு தான். தன் 94 வது வயதிலும் (அதுவரை தான்) வாழ்ந்தார். வாய்ப்பாடமாக இந்தியாவின் கரையோரப் பட்டணங்களைக் கூறுவார். நல்ல சிந்தனையாளர். அதிகாலை 3.30 மணிக்கு தபால் வண்டி வரும் சத்தம் கேட்டு எழுந்து விடுவார். ஆச்சியும் அப்பையாவும் காலை செபம் செய்வார்கள். ஆச்சி, காலை எழுந்து பசு மாட்டில் பால் கறந்து, தேனீர் போட்டு இருவரும் குடித்த பின், அப்பையா குளத்தில் ஊறிய தென்னோலையைக் கிழித்துப் போடுவார். ஆச்சி, கிடுகு பின்னுவார். அதே வேளை அப்பையா பனை ஓலைப் பாய் இழைப்பார். இது காலை 6 மணி வரை செய்வார்கள். பின்னர், கொஞ்சம் பழைய கஞ்சி குடித்து விட்டு, இருவரும் தோட்டத்தில் சென்று வேலை செய்வார்கள். ஆச்சி துலா மிதித்து, நீர் இறைப்பார். அப்பையா வாய்கால் வெட்டி செடிகளுக்கு நீர் பாச்சுவார். இருவரும் மாறி மாறிச் செய்வார்கள். பின்னர் அன்று விளைந்த காய்கறிகளைப் பறித்து எடுத்து வருவார்கள். ஆச்சி அவற்றைச் சந்தையில் கொண்டு சென்று விற்று, மீன், சீனி, மளிகை சாமாங்களுடன், அன்றைய செய்திப் பத்திரிகையும் வாங்கி வருவார். அப்பையா, அடுப்பில் அரிசி வைத்து, அம்மியில் அரைத்து, கறி தயார் செய்து காத்திருப்பார். ஆச்சி வந்ததும் ஒரு செவ்விளநீர் வெட்டிக் கொடுப்பார். ஆச்சி மீன் வெட்டிக் கழுவி, அடுப்பில் வைப்பார். அந்த இடைவெளியில் என் அப்பையா பத்திரிகை படித்து, அதைச் சுருக்கமாக என் ஆச்சிக்குச் சொல்வார். பின்னர் இருவரும் சாப்பிடுவார்கள். கொஞ்சம் ஓய்வு எடுப்பார்கள். பின்னர் மீண்டும் வயலுக்குச் சென்று வேலை செய்வார்கள். மாலை வந்ததும், வயலில் வேலை செய்த கூலித் தொழிலாளர்க்கு, என் அப்பையா, அன்றைய பத்திரிகைச் செய்திகளைச் சுருக்கமாக விளக்கிச் சொல்வார். ஆக அந்த வட்டாரத்து பாமர மக்களுக்கு என் அப்பையா, ஒரு கல்வி கற்ற மேதாவி. தங்கள் எந்த ஒரு தேவைக்கும் என் அப்பையாவைத் தேடி வந்து அறிவுரை கேட்டுச் செல்வார்கள். எனக்கும் அவர் ஒரு அறிவுரை சொல்லித் தந்தார்.

"அத்தியாவசியமில்லா கதைகளைக் கதைக்கக் கூடாது. உன்னை எதிர்ப்பவனிடம் அமைதி காத்துக்கொள்.”

அப்பையாவின் கருத்தை வேத வாக்காக இன்றும் நான் கடைப்பிடித்து வருவதால், எனக்கு யாருடனும் பிரச்சனை வருவதில்லை. யாரும் என்னுடன் சண்டை பிடித்தால், எதிர்த்துப் பேச மாட்டேன். அமைதி காப்பேன். ஓரிரு மாதம் பேசாமால் விட்டு விடுவேன். நல்ல சந்தர்ப்பம் வரும்போது, தொடர்ந்து பேசுவேன். என் அப்பையா, எனக்கு ஒரு சொல்லேர் உழவராக இருந்தார். அவர் வில்லேர் உழவராகவும், கூடவே பலருக்குச் சொல்லேர் உழவராகவும் இருந்தார் என்பதில் நான் பெருமைப் பட்டுக் கொள்கிறேன்.

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை. (குறள் . 1031) அன்று உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும் ஏர்த் தொழிலின் பின் நிற்கின்றது, அதனால் எவ்வளவு துன்புற்றாலும் உழவுத் தொழிலே சிறந்தது. வட இந்தியாவுக்குள் அத்து மீறிப் புகுந்த அன்றைய ஆரியர்கள், தாம் கடவுளின் தலையில் இருந்து பிறந்தவ்ர்கள் என கங்கணம் கட்டினார்கள். வர்ணாசிரமக் காரர்கள், உழவன் சூத்திரன் என்றும், அவன் இறைவனின் காலடியில் இருந்து பிறந்தவன் என்றும் கூறினர். உழவனைப் பின் தள்ளி அவன் உழைப்பை தாம் கொண்டார்கள். உழவனைத் தமக்கு அடிமையாக்கினார்கள். தாம் உண்ட மிச்சத்தை உண்ண வைத்தார்கள். தமது பழைய உடைகளை உழவர்கள் உடுக்கச் செய்தார்கள். அவர்களை தாழ்த்தினார்கள். இதனைக் கண்டு ஐயன் திருவள்ளுவர், துன்பமுற்றுள்ளார். எனவே தான் உலகின் மிகச் சிறந்த தொழில் உழவுத் தொழில் என்பதைப் பலமுறை வலியுறுத்தியுள்ளார். அதனால் உழவு என்னும் ஒரு தனி அதிகாரத்தையே எழுதித் தந்து விட்டுச் சென்றுள்ளார். அதனாற்தான்

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்" (குறள். 1033) எனக் கூறினார். என் குடும்பத்தில் விவசாயம் பரம்பரையாக நிறைவாக இருந்துள்ளது. என் அப்பையா, தன் 90 வயது வரை ஏர் பிடித்து உழுது, விவசாயம் செய்து உண்டவர். தன் 19 வயதில் "திசமாறகம" என்னும் தென்னிலங்கை பக்கம் சென்று, அங்கு, ஒரு கூலித்தொழிலாளியாக வேலை செய்து, வேலை பழகி வந்து, தனது 22 வயதில் தன் நண்பர்களுடன் கிளிநொச்சி மாவட்டம் வந்தார். பரந்தன் என்னும் கிராமத்தில் வந்து, காடு வெட்டி, களனியாக்கி, "ஏதேன் நந்தவனம்" எனும் பைபிள் பெயரைத் தன் காணிக்கு வைத்து வாழ்க்கை நடத்தியவர். சுமார் 55 வருடங்கள் அந்தக் காணியைக் கட்டிக் காத்தவர். என் ஆச்சிக்கு முடக்கு வாதம் வந்தது. என் மாமனார், அவர்களைத் தன்னுடன் வரும்படி அழைத்ததினால், வேறு வழியின்றி, 6 ஏக்கர் நிலத்தை விற்று விட்டு, வீட்டையும் அதனுடன் சேர்ந்த 3 ஏக்கர் காணியையும் என் தாயாருக்கு எழுதிக் கொடுத்தார். தான் வாழ்ந்த வீட்டின் பொருட்கள் அம்மி, குளவி, ஆட்டுரல், பத்தாயம், பாய், தலையணை, உரல், உலக்கை, மாட்டுவண்டில் , ஆடு, மாடு என அனைத்தையும் உழவு இயந்திரம் ஒன்றில் ஏற்றிக் கொண்டு, சுமார் 15 மைல் தொலைவில் உள்ள தன் மகன் வீடு சென்றார். அப்போது எனக்கு 15 வயது. போகும் போது, என்னிடம் கெஞ்சினார். "நான் கஸ்டப்பட்டுக் காடு வெட்டிய நிலம். என் பெயர் அழிய விடாது நீ காக்க வேண்டும்." என்றார். எனக்கும் என்ன தோன்றியதோ தெரியவில்லை. “நான் உங்கள் பெயரை வாழச் செய்வேன் அப்பையா.” என உறுதி கொடுத்தேன். போர்ச்சூழல் காரணமாக நான் இடம்பெயர்ந்து, கனடா வந்து விட்டேன். ஆட்கடத்தல், வெள்ளை வான் கடத்தல், கொலை எனக் கொடுமைகள் நடந்ததால் சுமார் 34 வருடங்கள் அந்தப் பக்கம் போகவில்லை. கடந்த வருடம் நான் அங்கு சென்றேன். ஆச்சி அப்பையாவின் காணியை, போர்க்காலத்தில், புலிகள் இயக்கத்தினர், யாரோ ஒருவருக்கு, இருக்க இடமில்லை என்பதால் கொடுத்துள்ளார்கள். அவர்கள், அதை அரசிடம், "இங்கு யாரும் இல்லை. நாம் தான் வாழ்கிறோம், எனக் கூறி, காணி உறுதி பெற்று, அதனை வேறு எவருக்கோ விற்று விட்டனர். என் தாயாரின் காணியையும் அவர்களே எடுத்து, இந்தக் காணி விற்ற காசில், மற்றக் காணியில் வீடும் கட்டி, வாகனமும் வாங்கிச் ஆடம்பரமாக வாழ்கின்றனர். குப்பி விளக்கில் வாழ்ந்த என் ஆச்சி அப்பையாவின் காணியில் இன்று அக்கம் பக்கம் மின்சார விளக்குகள் தெரிகின்றன. ஆனால், வீடு இடிந்து பாழாகிக் கிடக்கின்றது. ஒரு சுவர் மட்டும் இருக்கின்றது. அழுதபடியே திரும்பி வந்து விட்டேன். அந்தக் காணியை மீட்டு, அங்கு ஒரு சிறுவர் பாடசாலை கட்ட வேண்டும் என எண்ணியுள்ளேன். அதற்கான என் முயற்சி தொடர்கிறது.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் வுலகு (குறள். 336) எனும் குறள் என் நினைவில் வந்து என் ஆச்சி அப்பையா அவ்விடத்தில் ஏர் உழுது வாழ்ந்த வாழ்வை எனக்கு நினைவில் நிறுத்திச் சென்றது. அவ்விதமாய் வாழ்க்கை வாழ்ந்த அந்த வயோதிபர்கள் என்றும் என் நினைவில் நிலைத்து நிற்கட்டும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின் நீரினும் நன்றதன் காப்பு. (குறள் 1038) ஏர் உழுது, அதை விட எரு இடுதல் நன்மை பயக்கும். இந்த இரண்டும் சேர்ந்து, விதைத்த பின் நீர் பாய்ச்சிக் களை நீக்கி பயிரைக் காவல் காத்தல் மேலும் நன்மையே தரும். ஒரு உழவனின் முக்கிய தேவை ஏர் உழுதல் தான். என் தாயார் கூட ஏர் பூட்டி உழுதுள்ளார். எப்போது மழை மண்ணிலிறங்கும் எனக் காத்திருப்பான் விவசாயி. ஆடியில் மழை பெய்யும். அந்த நேரத்தில், அனைவரும் விதைப்புக்குத் தயாராகி விடுவார்கள். உழவு இயந்திரங்கள் வைத்திருப்போர், அப்போது தான் உழைக்கலாம் என ஓடித் திரிந்து உழுவார்கள். நமக்கு வேண்டிய நேரத்துக்கு அவர்கள், உழ வரமாட்டார்கள். நாட்கள் நகர்ந்து விட்டால், விதைப்பு பின் தள்ளப்பட்டு விடும். எனவே என் தாயார், ஏர் பூட்டி உழுது, விதை விதைப்பவரை விட்டு விதைத்ததை என் சிறு வயதில் நான் கண்டு, இன்றும் வியக்கிறேன். ஒரு பெண்ணால் எப்படி உழ முடிந்தது என்று. ஆனால், இன்று எனக்குமே அந்த தைரியம் வந்துள்ளது. “கண் பார்த்தால் கை வேலை செய்யும்” என்பார்கள். அப்படித்தான், என் மகளும் இன்று, தன் தந்தை உயிருடன் இருநத போது செய்த கார் வேலைகள், காரின் உருளி மாற்றுதல், காரின் இயந்திர வேலைகல், காருக்கு எண்ணெய் மாற்றுதல், மற்றும் கட்டட வேலைகள் செய்தல், தோட்ட வேலைகள் செய்தல் எனத் தொடர்கிறார்.

என் அப்பையா, கலப்பை பிடித்து உழுதது, இன்றும் என் கண்ணில் நிழலாக நிழலாடுகின்றது. அப்படி நானும் உழலாம் என எண்ணுகிறேன். காரணம் என் அப்பையா, தன் 87 வயதில் ஏர் பிடித்து உழுதார். ஒருமுறை நல்ல மழை. வயலில் வெள்ளம் தங்கி விட்டது. ஆகவே பலகை அடித்து விதைக்கலாம் என முடிவு செய்தார். விதை நெல்லை, தோட்டத்தில் இருந்த சிறு குளத்தில், சாக்கில் கட்டி, கயிறு கட்டி இறக்கி விட்டு, முளை கட்ட வைத்தார். இரண்டாம் நாளில், அதனை இழுத்து மேலே கொண்டு வந்தார். கூடவே பலகை பூட்டிய கலப்பையில், எருது பூட்டி, அதன் மேல் ஏறி நின்று, உழுதார். பலகை, வயலைச் சமநிலைப் படுத்திவிட்டது. பின்னர், முளைகட்டிய நெல்லை, விதைப் பெட்டியில் போட்டு, தானே விதைத்தார். 5ஆம் நாள் மஞ்சள் முளை வரும் எனக் காத்திருந்தார். மேல் மிச்சமாக வயலில் தண்ணீர் இருந்ததால், முளைநெல் அழுகிவிடும் என்பதால், அந்த நீரை சிறு வாய்க்கால் வெட்டி, வெளியேற்றிப் பயிரைக் காத்தார். பின்னர், பசளை இட்டார். களை பிடுங்கினார். இப்படிப் பாதுகாத்தார். அப்பையா செய்வதனைப் பார்த்து, எனது தாயாரும் தன் வயலில் வேலை செய்தார். மழை பெருவெள்ளமாக வந்தால், வயலில் வடிகால் அமைத்து நீரை வெளியேற்றுவார். மண் மூடைகளை அணைகட்டி, மேலும் நீர் உள்ளே வராமல் காத்துக் கொள்வார். அறுவடை காலம் வரும்போது, நெல் மணிகள் நிறைநத கதிர்கள், தலைசாய்ந்து, அழகாகத் தொங்கும். அறுவடை நடக்கும். நாங்களும் அருவி வெட்டுவோம். கதிர் கட்டி அள்ளி வநது, சூடு வைப்போம். அப்போது இரவு இரவாக உழவு இயந்திரம் நெல்லை அடித்துத் தரும். கூலியாட்கள், வைக்கலை உதறி, பதர் நீக்கி, மூட்டை கட்டுவார்கள். வியாபாரத்துக்கு அனுப்பிய நெல் மூட்டைகளை உழவு வண்டியில் அனுப்பிிடுவார்கள். வீட்டுக்கு உணவுக்கென சில மூட்டைகள் களத்தில் கிடக்கும். அப்படி, ஒரு முறை திடிரென மழை பெய்யத் தொடங்கியது. என் அப்பையா, தனது. 87 வது வயதில், இப்படி மூன்று மூட்டைகளை, நான் அவர் முதுகில் ஏற்றிட உதவிட, தான் சுமந்து வந்து எங்கள் வீட்டு விறாந்தையில் வைத்தார். அந்த நினைவுகள் இன்றும் என்னுள் பசுமரத்தாணி போன்று நிழலாடுகின்றது. அந்த வயதில் இப்படியான வேலைகள் செய்வது, அவர்களின் உடல் பலத்தைக் காட்டுகிறது அல்லவா!

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து. (குறள். 1089) மானின் பிணை போன்ற மட நோக்கினையும், உள்ளத்தே நாணப் பார்வையும் உடைய இவளுக்கு, அவை சிறந்த அழகாக இருக்க, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ? பெண் என்றால் அழகு என்று அர்த்தம். இந்தக் குழுமத்தில் அதிகம் ஆண்கள் இருப்பதால், அவர்களும் இதை “ஆம்” என்று ஒப்புக் கொள்வார்கள் என நம்புகிறேன். பெண்ணின் அழகு என்பது வெளி அழகுடன் சேர்ந்து, ஆளுமை, கருணை, நேர்மை, மரியாதை, நேர்த்தி, இலட்சியம் போன்ற அக அழகுகளையும் உள்ளடக்கியது என்பது சமுக உடன்பாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பார்வையாகும். இந்த உளவியல் காரணிகளின் அடிப்படையில், உடலியல் பண்புகளும் மதிப்பிடப்படுவது இன்றைய அழகியல் கோட்பாடு ஆகும். அழகான முகங்களை விரும்பும் போக்கு மழலைப் பருவத்திலேயே தோன்றி விடுகின்றது. சிறு குழந்தை அழகாகத் தெரிய நாம் குழந்தையைக் கொஞ்சி மகிழ்கிறோம். மெல்லிய உடலமைப்புக் கொண்ட பெண்கள் அழகானவர்கள் எனலாம். அனைத்து வடிவங்கள், நிறங்கள், உடல் அளவுகள் என அனைத்து அம்சங்களில் இருந்தும் அழகு பிறக்கிறது. அழகை அடைய முடியாத போது, கோபமும் அதிருப்தியும் ஏற்படுகின்றன. அவர்கள் சமுகத்திடமிருந்து ஒதுக்கப் படுகின்றனர். தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர். "உண்டி சுருங்குதல் பென்டிர்க்கு அழகு" என்றார் ஒளவைப்பிராட்டியார். இதனையே ஆண்களும் விரும்பி, அழகான பெண்ணைத் துணையாகத் தேர்ந்தெடுக்கின்றனர். எதற்காக? பெண் என்றாலே அழகு என்று தானே பொருள். அதனால் தான் ஆண் உருவம் கொண்ட ஒருவர்,

அசையியற்கு உண்டாண்டோர் ஏஎர்யான் நோக்கப் பசையினள் பைய நகும். (குறள். 1098) நான் பார்க்கும் போது என் மீது பரிவு கொண்டவளாக மெல்லச் சிரிப்பாள்; அப்போது, துவளுகின்ற அந்தத் துடியிடையாள் ஒரு புதிய பொலிவுடன் தோன்றுகிறாள். நிலா போன்ற பிரகாசமான முகம். இங்கு நிலாவின் நிறம் அல்ல. நிலாவின் பிரகாசம் பேசப்படுகின்றது. ஒருவர் பிரகாசிக்க அவருக்கு நிறம் தேவையில்லை. முகப் பொலிவு நிறத்தைப் பொறுத்து வருவதில்லை. பலர் முகப் பொலிவு பெற பல அழகு முயற்சிகளைச் செய்கின்றனர். அது எப்படி வரும்? மோசமான வாழ்க்கை நிலை, அதிக சூரிய ஓளி, மாசுபாடு, மருத்துவ நிலை, அதிக மன அழுத்தம் என்பன ஒருவரது முகத்தைப் பொலிவிழக்கச் செய்கின்றன. பழிச்சென்று முகம் ஈரப்பதமுள்ளதாக இருக்க வேண்டும். புத்துணர்ச்சி கொண்ட முகமாக இருக்க வேண்டும். இதுவே முகப் பொலிவு. இதற்கு போதிய தூக்கம் வேண்டும். 7 மணி நேரம் தூங்காவிடில், முகம் பிரகாசம் குறைந்து காணப்படும். போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். உடலை ஈரப்பதமாக வைத்திருக்க அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும். நல்ல உணவு உண்ண வேண்டும். இரத்தஓட்டம் அதிகரிக்க, பால், பழங்கள், நார்ச்சத்துள்ள உணவு உண்ண வேண்டும். உடற்பயிற்சி செய்ய வேண்டும். இப்படி நம்மை, நம் உடலை நாம் நன்றாகக் கவனித்துக் கொன்டால், மனம் நிறைவாக இருக்கும். முகம் தன்னாலே பொலிவு பெறும்.

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப் பெண்நிறைந்த நீர்மை பெரிது. (குறள். 1272)

என் கண்களை நிறைவாக்கும் மழைமுகிலாள் மூங்கில் போன்ற தோள் உடைய பேதைக்கு பெண்மைக்கு உரிய இளகிய குணம் பெரியதாக இருக்கிறது. மூங்கில் போன்ற தோள் கொண்ட இவளின் அழகு. முதலில் அழகு என்றால் என்ன எனும் கேள்விக்கு பதில் காண்போம். அழகு என்பது ஒரு வித உணர்வு. இரசிப்பவர் கண்களில் அழகு இருப்பதால் தான் அவருக்கு அழகு தெரிகின்றது. மழை அழகு, மலை அழகு, நதி அழகு, பாடும் பறவைகள் அழகு, நாம் கண்ணால் சுவைத்துக் காணும் அத்தனையுமே அழகின் மறு வடிவம் தான். மொத்தத்தில் இறைவன் படைத்த இயற்கையே அழகு தான். ஒரு பொருளின் முழு வடிவம் தான் அழகு, ஆக நம் எண்ணம் அழகாக இருப்பதே அழகு என்கிறார் பிளேட்டோ. அழகுக்கும் நல்லொழுக்கத்திற்கும் தொடர்பு உண்டு, அழகாக இருப்பது தான் நல்லொழுக்கத்தின் நோக்கம் என்றார் அவர். “தனித் தனிப் பொருட்களின் பண்புகளுக்கு ஏற்ப அவற்றை முறைப்படுத்துவதால், அழகு உண்டாகிறது” என்பார் அரிஸ்டாட்டில். “ஓர் இலக்கியப் படைப்பின் ஒட்டுமொத்தப் படையல் முழுவதுமே அழகைத் தருகிறது” என்பார் மார்க்சிய அறிஞர் ஜி. லூகாச். “முயற்சிதான் அழகு” எனக் கண்டார் சிந்தனையாளர் பிரெடிக் நீட்சே. ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் அது அழகு. அந்தக் குழந்தையின் சின்ன நாக்கு, சிமிழி மூக்கு, அழகுக் கண்கள், மென்மையான கை கால் விரல்கள் என அழகு கொட்டிக்கிடக்கும். பொக்கை வாயச்சிரிப்பும், பார்வையும், செல்ல அழுகை கூட நம்மை இன்பத்தில் கிறங்க வைக்கும். அதிலும், அது ஒரு பெண் குழந்தையாகப் பிறந்தால், இன்னும் அழகு. அடியெடுத்து வைத்து நடக்கும் பெண் மகளுக்குக் காலில் சலங்கை பூட்டி, பட்டுப் பாவாடை அணிவித்து அழகு பார்க்கும் போது, வீட்டில் தேவதையே வந்து ஓடி விளையாடுவது போலிருக்கும் அல்லவா! அழகு என்றால் பெண் என்பதனை மறுப்பார் இங்கு எவரும் இல்லை. பெண்ணின் காம்பேர்தோள் தான் இந்தக் குறளில் அழகு எனக் காட்டியுள்ளார் திருவள்ளுவர். அதில் தோள் அழகு என்பதனை நாம் காணலாம். ஒருவர், சாய்ந்து கொள்ள இடமளிக்கும் தோள். மனிதனின் தன் மகிழ்விலும் தோள் சாய்கிறான். பாசம், அன்பு, நேசம், கருணை தேடியும் தோள் சாய்கிறான். நோயிலும் சாய்ந்து கொள்ளத் தோள் தேடுகிறான். இங்கே கண்களை நிறைக்கும் மழை முகிலாள், மூங்கில் போன்ற தோள் உடைய பேதைப் பெண் இவளுக்கு, பெண்மைக்கு உரிய இளகிய குணம் பெரியதாக இருக்கிறது என்பதனை நாமும் உணர வைக்கிறார் திருவள்ளுவர்.

நலத்தகை நல்லவர்க் கேஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து. (குறள் .1305)

பண்பதனை நலமானதாக, அணிகலனாகக் கொண்ட நல்லவர்க்கு மதிப்பானது, பூப் போன்ற கண்களை உடையவளின் அகத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே!

பண்பு நலம் என்றால் என்ன? இது ஒரு குணம், தகைமை பண்பு என்றால், வண்ணம், வடிவு, அளவு, சுவை. என்னும் நாற்குணம்.

“பண்பெனப்டுவது பாடறிந் தொழுகல்”    (கலித். 133) “பண்புப் பெயர். பண்புகொள் பெயர்க்கொடை” (தொல் சொல். 18)

சிறுவயது முதல் நாம் பண்பு நலன்களை அறிந்து, கற்று, அதனைப் பின்பற்றி வருகிறோம். எம் பெற்றோரிடம் கற்றதை விட, நம் ஆசிரியர்களிடமும் பெரியவர்களிடமும், சான்றோர்களிடம் நாம் பண்பு நலனைக் கற்றுக் கொண்டு அதன் படி இன்றும் வாழ்கிறோம். ஒரு குழந்தைக்கு பண்புகளை கற்றுக்கொடுக்க நல்ல பெற்றோர்கள் நல்ல பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் எம்மைப் பார்த்துத் தான் பிள்ளைகள் பின்பற்ற ஆரம்பிப்பார்கள். உதாரணமாக “தயவு செய்து, நன்றி,” எனும் சொற்களைக் கூறக் கற்றுக் கொடுக்க வேண்டும். அதனைப் பெரியவர்கள் நாம், முதலில் கற்றுக் கொள்ள வேண்டும். நல்ல பண்புகள் என்பவை நல்ல நடத்தை, நாகரீகம், ஒழுக்கம் என்பவற்றுடன் தொடர்புடையது. இவற்றை, வழிகாட்டல், உதவுதல், பாராட்டல் எனப் பல வழிமுறைகள் மூலம் குழந்தைகட்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்படித்தான் எமது பேரன் பேத்திகள், எமது பெற்றோர், உறவுகள், நட்புக்கள் எமக்கு நற்பண்புகளைப் புகட்டி இருப்பார்கள் அல்லவா!

ஒரு பண்பு நலன் மிக்க ஒருவன், தன் நல்ல குணங்களால் உயர்ந்தவன். அவனுக்கு அழகு தருவது பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்துள் நடக்கும் ஊடலின் சிறப்பே ஆகும். ஆக அவன் நல்ல பண்பு நலன் மிக்கவனாக இருந்தால் மட்டுமே இது நடக்கும். நடத்தை கெட்ட இந்த வாழ்க்கை. இதனைப் பெண்மை தங்காது. இதனையே திருவள்ளுவர், இக்குறள் மூலம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றார். இன்று பல குடும்பங்களில் நல்ல கணவன் என் நம்பி வாழ்ந்த பெண்கள், தம் கணவர்மாரின் பண்பு நலன் கெட்ட நடத்தையால், அவரைப் பிரிந்து வாழ்கிறார்கள். குழந்தைகளுக்குத் தாய் தந்தையரின் அன்பு, பாசம் பங்கிடப் பட்டுள்ளது. பிரிந்து வாழும் பெற்றோரின் அரவணைப்பு இல்லாது தவிக்கும் குழந்தைகள் இன்று நாடெங்கும் அதிகரித்துள்ளதை நாம் காணலாம். எனவே பண்புநலன் காத்து வாழ விழைவோமாக.

முடிவுரை:

இரவார் இரப்பர்க்கொன்று ஈவார் கரவாடு கைசெய்தூண் மாலை யவர் (குறள். 336) எனும் திருக்குறளுக்கு ஏற்ப வாழ்ந்தவர்கள் என் ஆச்சி அப்பையா. உழுதுண்டு வாழ்ந்து பெரு வாழ்வு கண்டவர்கள். தமது தொழிலாளர்க்கும் அறிவு புகட்டி வாழ்ந்தார்கள். உழவுத் தொழில் தான் உலகிற் சிறந்த தொழில் என்று நம்பி ஏர் பூட்டி உழுதுண்டு தம் வாழ்வைத் தொடர்ந்தவர்கள். பிறரிடம் இரவாது தம்மிடம் இரப்பவர்க்கும் அவர்கள் வேண்டியதைச் செய்து தந்தார்கள். அவர்கள் ஆசையை நிறைவேற்ற நானும் தொடர்கிறேன்.

உசாத்துணை நூல்கள்

1. திருக்குறள் தெளிவுரை - வரதராசன், மு. ; பதிப்பாளர். திருநெல்வேலி : திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் , 1994
2. கலித்தொகை (மூலமும் உரையும் ) - ஆசிரியர்: வ.சுப.மாணிக்கனார், பூம்புகார் பதிப்பகம்
3. தொல்காப்பியம் - சொல்லதிகாரம்(மூலமும் உரையும்) - ச.திருஞானசம்பந்தம், கதிர் பதிப்பகம் 

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.