முன்னுரை

தமிழகம் நீர், நிலப்பொருள் வளங்களைக் கொண்டுள்ளது. பொருள் ஆதாரமாக, அடித்தளமாக இருக்குமானால் அது மற்ற நாடுகளை விடச் சிறந்ததாகத் திகழும். இதற்கு, அங்கு நிகழும் வணிகம் முக்கியமான காரணமாக அமைவதே ஆகும். இத்தகைய வியாபாரம் (வணிகம்) இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழ் மண்ணிலும் நடந்துள்ளது. இது குறித்துச் சங்க இலக்கியங்கள் கூறுகின்றன. அவற்றுள் பட்டினப்பாலை குறிப்பிடும் வணிகம் குறித்த செய்திகளை இக்கட்டுரை கூறுகிறது.

ஒரு நாடு குறையாத விளைச்சல், நடுநிலைமையாளர், சோர்வற்ற வணிகர் என்று இருக்குமானால் அது வளமுடையதாகக் காட்சியளிக்கும் என்ற கருத்தமைந்த பாடலைக் குறள் புலப்படுத்துகிறது.

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு (கு.எண்.731)

இதன் வழியாக வணிகரின் மேன்மையை அறிய முடிகிறது.

பெருங்குடி

வணிகர் மிகுதியாக இருந்த பூம்புகார், புகழாகிய சிறப்புக் கொண்ட அரசரின் மதிப்புக்கும், பெருமைக்கும் உரியதாய், இம்மக்களைக் கொண்டு பயன்பெற்று விளங்கியது. இதைப் 'பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்" என்ற தொடர் வலியுறுத்துகிறது. வணிகர் தம் குடிக்கு ஏற்ற ஒழுகலாறைக் கைக்கொண்டு, அதிலிருந்து சிறிதும் பிறழாதவராய்த் திகழ்ந்தனர். இவர்கள் அறவழியில் சேர்த்த பொருளில்லாதவர்களுக்குத் தந்தனர். அதன் பயனாகப் போகப் பூமியில் மகிழ்ச்சியை அடைபவர் போல் தோன்றினர்.

‘குலத்தில் குன்றா கொழுங்குடிச் செல்வர் அத்தகு திருவின் அருந்தவம் முடித்தோர் உத்தர குருவின் ஒப்பத் தோன்றிய என்ற அடிகள் இதனைச் சுட்டிக்காட்டுகின்றன.

உயர்ந்த நிலை

வருணத்தார் சிறப்பாகக் பழந் தமிழகத்தில் நால்வகை குறிப்பிடப்பட்டனர். அவர்கள் முறையே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்போர் ஆவர். அரசரை அடுத்த நிலையில் வணிகர் இடம் பெற்றிருப்பதும், அவர்கள் வணிகரை மதித்த நிலையும் சமுதாயத்தில் இவர்களுக்கு இருந்த தனித்ததொரு நிலையைப் புலனாக்குகிறது. அவரவர் தகுதிக்கு ஏற்ப உயர்வாகச் சொல்லப்படும் புகழுக்கு கஉரியவர்களாக விளங்கினர். இது குறித்துத் தொல்காப்பியம்,

'இடை இருவகையோர் அல்லது நாடின்
படைவகை பெறா அர் என்மனார் புலவர்* (தொல்.மரபு.77)

என்று கூறுகிறது. அந்தணர், வேளாளர் என்ற இருவகையினரைத் தவிர்த்துப் போர்ப்பயிற்சி மற்றும் படைக்கலன்களைப் பெறுவதற்கு அரசர், வணிகர் என்ற இருவரும் உரியவர்கள் ஆகிறார்கள் என்ற கருத்துப்புலனாகிறது.

வணிகர் என்போர் தொழில் அல்லது வாணிகம் செய்து வாழ்பவர் ஆவர். இக்கூற்றை,

‘வைசிகன் பெறுமே வாணிக வாழ்க்கை’ (தொல்.மரபு.166)

என்ற தொல்காப்பிய நூற்பா குறிப்பிட்டுக் காட்டுகிறது.

அடையாளம்

அரசர்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ளப் பனம்பூ, அத்திப்பூ, வேப்பம்பூ மாலைகளை அணிந்துகொள்வது உண்டு. அதைப் போல வணிகரும் தம்மை வெளிப்படுத்திக்கொள்வதற்குத் தலைமாலை, அடையாள மாலைச் சூடிக்கொள்வது இக்கருத்து, உண்டு.

கண்ணியும் தாரும் எண்ணிலர் ஆண்டே (தொல்.மரபு.80)

என்ற மரபியல் நுாற்பா வழி வெளிப்படுத்தப்படுகிறது.

சான்றாகக் கோவலன் மல்லிகை மாலை அணிந்திருக்க, கண்ணகிச் செங்கழுநீர் மாலையுடன் காட்சிதர, இருவரும் அன்புடன் ஒருவரையொருவர் தழுவிக் கொள்ள, இருவரது தாரும், மாலையும் கலைந்து குலைந்தன. இதை,

வெண்தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு

கழுநீர்ப் பிணையல் முழுநெறிப் பிறழத்
தாரும் மாலையும் மயங்கிக் கையற்று (சிலம்பு.மனை.35)

என்ற சிலம்பின் அடிகள் குறிப்பிடுகின்றன. இக்கருத்தைக் குறிப்பீடுவதன் வழியாகக், கோவலன் 'தார்' என்ற அடையாள மாலை அணிந்து விளங்கியதை அறியமுடிகிறது.

தொழில்

வணிகர், பொருள்களை வியாபாரம் செய்வதோடு மட்டு அல்லாமல் அவற்றை உழுது விளைவிப்பதையும், தம் தொழிலா பொன் வணிகர் சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்ற நான்கு வகையான மாற்றுக்குறையாத பொன்னை விற்பனை செய்தனர். பருத்தி நூல், எலிமுடி, பட்டு நுால் இவற்றால் நுணுக்கமாக உருவாக்கப்பட்ட துணிகள் விற்கப்படும் கடைகள் இருந்தன.

பறை, மரக்கால் என்ற அளவைக் கருவிகளும், நிறுத்தல் கருவியான துலாக்கோலும் விளங்க, மிளகு மற்றும் பலவிதமான தானியங்கள் அடங்கிய பல்பொருட் கடைகளும் காட்சியளித்தன." இத்தகைய கொண்டனர். எண் வகைத் தானியங்களான பயறு, உழுந்து சுடுகுகடலை, எள்ளு, கொள்ளு, அவரை; துரை என்பனவற்றை தெ விதைத்துப் பயிரிட்டனர். இது குறித்துத் தொல்காப்பியம்,

மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
செய்தியும் வரையார் அப்பாலான (தொல்.633)

என்ற நூற்பாவில் விளக்கிச் சொல்கிறது.

கொடுத்துதவும் அன்பு

இல்லாதவருக்கும் வறியவருக்கும் கொடுத்து உதவுகிற இயல்பை வணிகர், நேரிய வழியில் பொருளை ஈட்டிச் சேமித்த வருவாயை உடையவராய் இருந்தனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக மாநாய்கள், மாசாத்துவான் ஆகிய இருவரையும் குறிப்பிடலாம். வானிலிருந்து பெய்கிற மழை போன்ற கொடைத் தன்மையை உடையவன் மாநாய்கன்., உண்மையாக இருந்து பெருக்கிய பொருளைப் பிறருக்குத் தருபவன் மாசாத்துவான் என்ற செய்தியை,

மாகவான் நிகர் வண்கை மாநாய்கன்
வருநிதி பிறர்க் கார்த்து மாசாத்து வானென்பான் (சிலம்பு 12)

என்ற சிலம்பின் தொடர்கள் சுட்டிக்காட்டுவன.

பொருள்கள்

நிலத்தின் வழியாக, நீர் மூலமாகப் பொருள்கள் நகரில் வந்து இறங்குகின்றன. இப்படிப்பட்ட பண்டங்கள் வீதிகளில் விற்கும் இடம் அங்காடிகள் எனப்படும் செம்புப் பொருட்கள், வெண்கலப் பொருட்கள், வரைபடப்பொருள்கள், கயிற்றுப் பொருட்கள், வாள் போன்ற கருவிப் பொருட்கள், சாந்துப்பொருட்கள், மலர்ப் பொருட்கள் என்பன அரசரும் விரும்புவதற்கு ஏற்ற வகையில் காணப்பட்டன.

மாணிக்கம், புட்பராகம், நீலம், நவரத்தினக் கடைகளில் கோமேதகம், வைடூரியம், வைரம், மரகதம், முத்து, பவளம் முதலான ஒன்பது விதமான மணிகள் விற்கப்பட்டன. கடைவீதிகள் நிறைந்து வளம் பெற்று விளங்கிய புகார் நகரத்தைச் சிலப்பதிகாரம் அழகிய சித்திரமாகத் தருகிறது.

பட்டினப்பாலை குறிப்பிடும் வணிகம்

செழிப்பு மிக்க காவிரிப்பூம்பட்டினமாகிய புகாரில் உள்ள வணிகர், அவர்கள் செல்வம், செல்வாக்கு, பொருள்கள் வாங்கல், விற்றல் நடைபெறும் அங்காடிகள், குறித்த கருத்துகளைச் சிலப்பதிகாரம் எடுத்துக்கூறுகிறது. கரிகால் சோழன் ஆட்சி விளங்கும் புகார் நகரில் நிலவிய வணிகம், வியாபாரம் செய்யப்படும் பொருள்கள், கடை வீதிகள் என்பனவற்றைப் பட்டினப்பாலைச் சுட்டிக்காட்டுகிறது.

பொருள்கள் தோன்றிய இடங்கள்

கடல் வழியாகத் தரைக்கு வேகத்தையுடைய குதிரைகள், கரிய மிளகுப் பொதிகள் ஆகியவை வந்திறங்கின. மேருவில் தோன்றிய மாணிக்கம், சாம்பூநதம் என்னும் பொன், பொதிகை, மலையில் கிடைத்த சந்தனம், அகில் கட்டைகள் தெற்குப்பகுதி கடலிலுள்ள முத்து, கிழக்குக் கடலில் உருவாகும் பவளம், கங்கையில் கிடைத்த யானைகள், மாணிக்கம், முத்து, பொன், காவிரியில் கிடைக்கும் பொருள்கள், ஈழத்தின் நுகர் பொருள்கள், கடார நாட்டுப் பொருள்கள் சீனம் முதலான இடங்களிலிருந்து இறக்குமதியான கருப்பூரம், பனிநீர், குங்குமம் மற்றும் இவை தவிர்த்த பிற பொருள்களும் நிலத்தின் முதுகு நெளியும்படி ஒரு சேரத் திரண்டு புகாரை வளப்படுத்தின. இதனைப் பட்டினப்பாலையின்,

நீரின் வந்த நிமிர்ப்பரிப் புரவியும்
அரியவும் பெரியவும் நெரிய வீண்டி (பட்டின.185 – 192)

எனும் அடிகள் சுட்டிக் காட்டுகின்றன.

பொருள்கள் முத்திரை பெறல்

நிலத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்கள், கடலிலிருந்து இறக்குமதியானவை என்ற அனைத்து விதமான அளக்க முடியாத பல பொருட்களும் அரிய பாதுகாப்பிற்கு உட்படுத்தப்பட்டன. பின்னர் சோழனின் புலி முத்திரைப் பொறிக்கப்பட்டுப் பொதிகளாக வண்டிகளில் ஏற்றப்பட்டு உரிய இடங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. இன்று பொருள்களுக்குச் சுங்கவரி என்பதைக் காண முடிகிறது. ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழக மண்ணில் சுங்கமுறை இருந்தது வியப்பிற்குரியது. பட்டினப்பாலையின் அடிகள் இதைத் தெளிவுப்படுத்துகின்றன.

நீரினின்று நிலத்தேற்றவும்...
புலி பொறித்துப் புறம்போக்கி (பட்டின.129-135)

என்பன அவ்வடிகள்

வணிகர்க்கு உரியன

தேவர்களை வழிபடுதல், யாகங்களைச் செய்து, பிரசாதங்களை அவர்களுக்குக் (தேவர்கள்) கொடுத்தல், நல்ல பசுக்களுடன் எருதுகளைப் பாதுகாத்தல், அந்தணர்க்கு உரிய புகழை அவர்களுக்காக நிலைபெற செய்தல், மிகுந்த புண்ணியச் செயல்களைச் செய்தல், செய்யு இயலாதவருக்குத் தானம் அளித்தல், அரிசி, கறி கொடுத்தல்- இத்தகைய அறத்தொழில்கள் அனைத்தையும் செய்து குறைவற்ற கருணை மனமுடன் வாழ்கின்ற வாழ்க்கையை உடையவர்கள் என்பதை,

அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும் (புறம்.99)

என்ற அடிகள் குறிப்பிடுகின்றன. இதனைப் பட்டினப்பாலையில்,

புண்ணிய முட்டாத் தண்ணிழல் வாழ்க்கை (பட்டின.205)

என்று கூறுகின்றன.

நடுநிலையாளர்

வியாபாரம் செய்யும் போது அதற்குரிய வழிகளைக் கடைப் பிடிக்கவேண்டும். அதற்குத் துலாக்கோலின் முள் போல நடுவு நிலைமையில் இருக்கும் உள்ளம் வேண்டும். குலப்பெருமைக்குக் களங்கம் இல்லாமல் உண்மை சொல்ல வேண்டும். பிறரிடம் தாம் பெறும் பண்டங்களை அளவில் மிகுதியாகாமல் தாம் கொடுக்கும் பொருள்களின் அளவு குறைவு படாமலும் தொழில் செய்யவேண்டும் என்பதைக் கீழ்க்காணும் பாடல் அடிகள்

‘கொடுமேழி நசையுழவர்...
பல்பண்டம் பகர்ந்து வீசும் (பட்டின.205 -211)

சுட்டிக்காட்டுகின்றன.

முடிவுரை

பிளினி என்பார் தமிழகத்தின் பழங்காலத் துறைமுகங்களான தொண்டி, முசிறி, கொற்கை, காவிரிபூம்பட்டினம் என்பவற்றைக் குறிப்பிடுகிறார். புகார் இதில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத் வணிகம் தமிழகத்தில் தகுந்தது. கடல் சிறந்து விளங்கிய. தமிழகத்திலிருந்து சந்தனம், அரிசி, மயில்தோகை, இஞ்சி, மிளகு, முதலானவை பாபிலோனியா, கிரேக்க நாடுகளுக்கு ஏற்றுமதி பட்டு, சர்க்கரைச் சீனத்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது இந்த நிலையில் முன்னேற்றமான வணிகம் அறியப்படுகிறது. இதனால் ஒரு நாடு எத்தனை வளங்களைப் பெற்றாலும் பொருள் சேர்க்கைக்கு ஆதாரமான ஏற்றுமதி இறக்குமதிக்குட்பட்டப் பொருள்கள் பரிமாற்றம் அதற்கு காரணமான அந்நியச் செலாவணி என்பவை அடித்தளமாக அமைகின்றன. உழவு ஒரு முக்கியக் காரணியாக இருப்பது போல் மற்றொரு குறிப்பிடத்தகுந்த கருவியாகவே திகழ்கிறது. இவ்வணிகம் பண்டைய நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வந்ததை இலக்கியங்கள் குறிப்பிடும்போது அளவற்ற வியப்பைத் தருகிறது.

துணை நின்ற நூல்கள்

1.மு.வ, திருக்குள், பாரி நிலையம், சென்னை.

2. தொல்காப்பியம்‌, பொருளதிகாரம்‌, இளம்பூரணம்‌, முல்லை நிலையம்‌, சென்னை.

3.சாமி.சிதம்பரனார், பட்டினப்பாலை,கௌரா பதிப்பகம், சென்னை.

4. ஜவஹர்லால், சிலப்பதிகாரம், கிழக்கு பதிப்பகம், சென்னை.

5. புலியூர் கேசிகன், புறநானூறு, சாரதா பதிப்பகம், சென்னை.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.