முன்னுரைஇலக்கியமும் அறிவியலும் வெவ்வேறானவை; ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்லது எதிரும் புதிருமானவை எனப் பொதுவாகக் கருதப்படுகிறது. ஆனால் இலக்கியத்தில் அறிவியலைத் தேடுவதும், அறிவியலை இலக்கியமாக்குவதும் நிகழ்ந்த வண்ணம்தான் உள்ளன. அவ்வகையில் ஆற்றுப்படை இலக்கியங்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் அறிவியல் கூறுகளில் ஒன்றான தாவரங்களை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்.
தாவரவியல்
தமிழர்கள் பழங்காலத்தொட்டே தாவரங்களுடன் தங்களின் வாழ்க்கை முறையைப் பிணைத்துக் கொண்டார்கள். 'தாவரவியலின் தந்தை' என்று குறிக்கப்பெறும் 'தியோபிராஸ்டஸ்' தாரவங்களை உயிர்ப்பொருள் அடிப்படையில் ஆராய்ந்தார். கி.மு.2000 ஆண்டுகட்கு முன்பே தொல்காப்பியர் அவற்றை உயிர்ப்பொருளாகக் கொண்டு ஆராய்ந்தர் என்பதை,
‘புல்லும் மரனும் ஓரறி வினவே,
பிறவு உளவே அக்கிளைப் பிறப்பே' (தொல்.பொ. மர.28)
என்னும் தொல்காப்பிய நுாற்பாவால் அறியலாம்.
தொல்காப்பியத்தில் தாவரப் பாகுபாடு
தொல்காப்பியர் தாவரங்கள் அனைத்தையும் புல், மரம் என்னும் இரு பிரிவுகளில் அடக்கியுள்ளார். மேல்புறம் உறுதி உடையவை புல்லினம் எனப்படும். அவை தென்னை, பனை, பாக்கு, மூங்கில் முதலானவை ஆகும். உட்புறம் வயிரமுடையவை மர இனம். இவற்றை,
‘புறக்கா ழனவே புல்லென மொழிப,
அகக்கா ழனவே மரமெனப் படுமே' (தொ.பொ. மர.86)
எனும் தொல்காப்பிய நுாற்பா மூலம் அறியலாம்.
தாவரங்கள்- அகராதி விளக்கம்
ஓரிடத்திலிருந்து ஓரிடம் அசையாதவை. அவை, மரம், செடி, கொடி,பூண்டு,புல் முதலியன. இவை இடம்விட்டு அசையக்கூடாதன ஆயினும் பிராணிகளென்றே கூறலாம். இவை பிராணிகளைப் போல் வளர்ந்து ஆகாரங்கொண்டு தம் வர்க்கத்தை விருத்தி செய்து நாளடைவில் விரிவடைகின்றன. இவை,
‘பிராணி வகைபோல் பல பாகங்களையுடையன'
என்று விளக்கமளிக்கிறது அபிதான சிந்தாமணி.
(ஆ.சிங்காரவேலு முதலியார், அபி சி. மணி, ப.980)
'நிலத்தில் வேர் விட்டோ, விடாமலோ குளம் போன்ற நீர் நிலைகளில் மிதந்து தண்டோடும், இலைகளோடும் வளர்வது' என்று விளக்கமளிக்கிறது நர்மதாவின் தமிழ் அகராதி.
(செந்தமிழறிஞர் மாருதிதாசன் ஆசிரியர் குழு, நர்மதாவின் தமிழ் அகராதி, ப-45)
தாவரங்களின் சிறப்பியல்புகள்
உயிரினங்களில் மிகச் சிறப்பானவை தாவரங்கள் ஆகும். ஏனெனில் தங்களுக்குத் தேவையான உணவுப் பொருட்களைத் தாங்களே தயாரித்துக் கொள்ளும் திறன் தாவரங்களைத் தவிர மற்ற எந்த உயிரினங்களுக்கும் இல்லை. தாவரங்களை விளக்கும் அறிவியல் பிரிவு தாவரவியல் எனப்படும் என்கிறார் கே.ஆர்.பாலச்சந்திர கணேசன். (கே.ஆர்.பாலச்சந்திர கணேசன்- சூழ்நிலை, பரிணாமம், மரபியல் ப.25)
தாவரங்களின் பயன்கள்
தாவரங்கள் பலவித மூலிகைகளாகப் பயன்படுகின்றன. நோய்களைக் குணப்படுத்தும் தாவரங்களில் பல வைட்டமின் சத்துக்கள் உள்ளன. வீட்டிற்குத் தேவையான பொருள்கள் செய்யவும், விளையாட்டுப் பொருள்கள் செய்யவும் பயன்படுகின்றன.
சிறுபாணாற்றுப்படையில் தாவரங்கள்
பெயர்கள் ஆற்றுப்படை இலக்கியங்களில் ஒன்றான சிறுபாணாற்றுப்படையில் பலவிதமான மரங்கள், செடிகள், கொடிகள் காணப்படுகின்றன. அவைகள் பின்வருமாறு:
மரங்கள்
கடம்பம், 2. பலா, 3. நுணா, 4. காஞ்சி, 5. சுரபுன்னை, 6. மூங்கில், 7.பனை முதலான மரங்கள் காணப்படுகின்றன.
மலர்கள்
வேங்கை, 2. காந்தள், 3. வாழை, 4. கோங்கு 5. முல்லை, 6, செங்கழுநீர், 7.காட்டு மல்லிகை, 8. தாழை, 9. செருத்தி, 10. கழிமுள்ளி, 11.புன்னை, 12. அவரை, 13. காயா, 14. தாமரை முதலான மலர்கள் காணப்படுகின்றன.
செடிகள், கொடிகள்
மிளகு, 2. முசுண்டை, 3. முல்லை முதலான காணப்படுகின்றன.
கட்டுரையின் சுருக்கம் கருதி ஒரு சிலவற்றையே இக்கட்டுரை விளக்கமுற்படுகிறது.
மரங்கள்
மருந்தாகவும் மரங்கள் மனித இனத்துக்கு விருந்தாகவும், பயன்படுகின்றன. வறண்ட நிலத்துக்கு வளத்தைக் கொடுப்பவை மரங்கள் ஆகும். மரங்கள் தரும் பல்வேறு நன்மைகளால்தான் மனித வாழ்வே சிறக்கிறது. உயிர், உடல் இரண்டுக்கும் வலிமை கிடைக்கிறது. தங்களுக்கு மழை கிட்டவும் பேருதவி புரியும் மரங்களைப் பண்டைக்காலம் முதலே தமிழ் இனத்தவர் மதித்து வணங்கினர்.
1. கடம்பம்
கடம்பின் மற்றொரு பெயர் ‘மராஅம்’ என்பதாகும். கடம்பின் மலரைப் பற்றி புலவர் பெருமக்கள் புகழ்ந்துரைப்பர்.
இதன் மலர் தேர்ச் சக்கரத்தை ஒத்து மிக அழகாகத் தோன்றும் வட்ட வடிவம் கொண்டது. நடுவில் சிறு துளை காணப்படும். அதற்கு வெளிப்புறம் இளஞ்சிவப்பு நிறம். மலரின் வட்டத்தை ஒட்டிய மிகச் சிவந்த பிசிர் போன்ற நுாற்றுக்கணக்கான தாதிழைகள் உள்ளன. நுனியில் தாதுப்பைகள் அவைகளில் இருந்து வெளிப்படும். குங்கும நிறமான மகரந்தம் உள்ள இப்பூக்கள் ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கியது போல மலரும் என்கிறார் கு.சீனிவாசன். (கு.சீனிவாசன், சங்க இலக்கியத் தாவரங்கள், ப.326)
முருகனுக்குரிய மரமாக இதனை கருதினர். ஆகவே இம்மரத்தில் இறைத்தன்மை இருப்பதாகக் கருதி வழிபட்டனர் என்பதனை,
'கார்நறுங் கடம்பின் கண்ணிசூடி
வேலன் கொண்ட வெறிமனை வந்தோய்' (நற்-34)
என்ற நற்றிணைப் பாடல் அடிகளின் மூலம் அறிய முடிகிறது.
இதன் சங்க இலக்கிய பெயர் - மராஅம்
இதன் சங்க இலக்கிய வேறு பெயர் - கடம்பு
உலக வழக்குப் பெயர்- செங்கடம்பு, அடம்பு, அடப்ப மரம், கடம்ப மரம் போன்றவை ஆகும்.
கொடுப்போரைத் தேடிக் கொண்டு செல்லும் பாணனோடு அவனைச் சார்ந்த விறலியர் கான்யாற்று மணற்பாங்கான நிலத்துப் பரல் குத்த வருந்தி மெல்ல நடந்தும், பாலைவனத்தில் செல்லும்போது சூரிய வெப்பத்தால் நடக்கமுடியாமல் போகவே கடம்ப மரத்தின் நிழலில் தங்கியும் செல்கின்றனர்.
‘பாலை நின்ற பாலை நெடுவழிச்,
சுரன்முதல் மராஅத்த வரிநிழல் அசைஇ' (சிறு11-12)
என்ற வரிகளின் மூலம் அறியமுடிகின்றது.
2. காஞ்சி
இதன் சங்க இலக்கியப் பெயர் காஞ்சி ஆகும். தாவரப் பெயர் ‘ட்ரீவியா நுாடிபுளோரே' ஆகும். இதனை ஆற்றுப் பூவரசு என்றும் கூறுவர். தண்ணீர் நிறைந்த பொய்கை, ஆறு, மடு இவற்றின் கரைகளில் வளர்ந்து நிற்கும். கொத்துக் கொத்தாகப் பூக்கும் இயல்புடையது. நுனியில் சிறுத்து மாலை தொடுத்தது போல அழகான தோற்றம் உடையது. நீல நிறத்தில் இருக்கும் என்றும் கூறுவர்.
‘பயறு போல் இணர பைந்தாது படீஇயர்,
உழவர் வாங்கிய கமழ்பூ மென்சினைக் காஞ்சி' (குறுந்.-10)
என்ற குறுந்தொகை பாடல் மூலம் அறியலாம்.
நிறைய மலர்களை மாலை கட்டினாற்போல ஒழுங்காகக் கொண்டுள்ள கிளைகளையும், குறிய அடியினையுடைய காஞ்சி மரத்தின் பெரிய கொம்புகளிலே சிச்சிலிப்பறவையானது ஏறிக் கொண்டு சமயம் பார்த்து மீனைக் குத்தி எடுத்துச் செல்லும்போது அதன் உகிர்வடு பதிந்த பசிய இலையையுடையது வெண்டாமரைக் கொடி ஆகும். இதனை,
‘நறும்பூங் கோதை தொடுத்த நாட்சினைக்
குறுங்காற் காஞ்சிக் கொம்ப ரேறி
நிலையருங் குட்ட நோக்கி நெடிதிருந்து
புலவுக்கய லெடுத்த பொன்வாய் மணிச்சிரல்
வள்ளுகிர் கிழித்த வடுவாழ் பாசடை' (சிறுபாண், 178-182)
என்ற பாடல் வரிகளின் மூலம் அறிய முடிகிறது.
மலர்கள்
1. காந்தள்
இதன் அறிவியல் பெயர் 'Gloriosa Superba' ஆகும். ஆங்கிலத்தில் "The Glory Lily' என அழைப்பார்கள். சங்க நுால்களில் கூறப்பட்ட அழகிய பூக்களில் காந்தளைச் சிறப்பாகக் கூறலாம். இதைக் கார்த்திகைப் பூ கலப்பைக் கிழங்கு என்றும் அழைப்பர். கார்த்திகைத் திங்களில் இதன் பூ அகல் விளக்கு போல பூப்பதால் கார்த்திகை விளக்குக்கு ஒப்பிட்டு கார்த்திகைப் பூ என்றழைக்கின்றனர். காந்தள் பூவின் மொக்கு மலரும் பொது இதழின் நுனி மட்டும் சிவந்து அடிப்பகுதி பச்சையாய் காணப்படும்.
குருதிர் பூனிள் குலலகாத் தட்டே! (குறுந்.-1)
என்ற குறுந்தொகை அடியில் காந்தள் நிறத்தை இரத்தச் சிவப்புடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளனர் என்பதனை அறியமுடிகிறது.
செழுங்குலைக் காந்தள் கைளிரல் பூப்பவம்? ( சிறுபாண், - 167)
என்ற வரியில் வேலூரின் சிறப்பைக் கூறும்போது, வளவிய குலையினையுடைய காந்தள் கைவிரல் போன்று பூத்திருக்கும் என்பதன் மூலம் அறிய முடிகிறது.
2.வேங்கை
இலக்கியங்கள் சிறப்பித்துக் கூறும் தாவர மலர்களில் தலைமை பெற்று விளங்குவது வேங்கை மலர் ஆகும்.இதன் தாவர பெயர் .ப்ரோகார்பிபஸ் மார்சூர்ப்பியம்' ஆகும். வேங்கை மரத்தை "ஓங்கு நிலை வேங்கை! என்று சிறப்பிப்பர். ஓங்கல் என்றால் உயர்ந்து தோன்றுவது ஆகும்.
மலைமீது மேலோங்கித் தோன்றுவது வேங்கைப் பூவாகும். மஞ்சள் கலந்த செந்நிறத்தில் காணப்படுவதால் இதைச் செந்நிற மலர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
யானை வேங்கையின் தழையையும், பூவையும் உணவாக உட்கொள்ளும், தான் உண்பதோடு, தன் கன்றோடு பெண் யானையும் தழுவி அழைத்துச் சென்று வேங்கையின் பெரிய கிளையை முறித்து அதில் பூத்த பொன் போன்ற பூங்கொத்துக்களைக் கவனமாக ஊட்டும் என்கிறார் பாலை பாடிய பெருங்கடுங்கோ.
மடப் பிடி தழீஇய தடக் கை வேழம்,
தேன் செய் பெருங் கிளை இரிய, வேங்கைப் (நற்-202)
என்னும் நற்றிணைப் பாடல் அடிகள் மூலம் அறிய முடிகிறது.
வேங்கை மரத்தில் தோன்றிய அன்று மலர்ந்த மலர் இது என்று மயங்கி விரும்பி, களிப்பினையுடைய வண்டுகள் ஆரவாரிக்கப் பெற்ற சுணங்கினையும் (தேமல்) என்பதன் மூலம் வேங்கை மலரைப் பற்றி இங்கு அறியமுடிகிறது.
நளிச்சினை வேங்கை நாண்மலர் நச்சிச்
களிச்சரும் பரற்றுஞ் சுனங்கிற் சுனங்கு பிதிர்ந்து! ( சிறுபாண், 23-24)
என்ற வரிகளின் மூலம் அறியலாம்.
முடிவுரை
சிறுபாணாற்றுப்படையில் பலவிதமான மரங்கள், மலர்கள்,, கொடிகள் முதலான தாவரங்கள் காணப்பட்டாலும் அவற்றின் பெயர்களே மிகுதியாக இடம் பெற்றுள்ளன. செடிகளும் சிலவற்றையே காணமுடிகிறது.
பார்வை நூல்கள்
1, தொல்காப்பியம், பொருளதிகாரம், இளம்பூரணம், மூன்றாம் பகுதி முல்லை நிலையம், பாரதி நகர்,மூன்றாம் பதிப்பு, 2000
2.சினிவாசன்.கு.,சங்க இலக்கியத் தாவரங்கள், தமிழ்ப்பல்கலைக்கழகம் தஞ்சாவூர்:
3, பாலச்சந்திர கணேசன், கே.ஆர். சூழ்நிலை, பரிமாணம் மரபியல் தமிழ்நாட்டுப் பாட நூல் நிறுவனம், சென்னை, 1976.
4,சாமிநாதயைர், உ.வே. குறுந்தொகை மூலமும் உரையும் மகாமகோபாத்திமாய தாஷிணாதீய கலாநிதி டாக்ட உ.வே.சாமிநாதமைர் நூல் நிலையம், 2. அருண்டேல் கடற்கரைச்சாலை பெசன்ட்நகர், சென்னை-90, ஐந்தாம் பதிப்பு 2000.
5, மோகன், இரா (௨.ஆ) பத்துப்பாட்டு மூலமும் உரையும், நியூ செஞ்சரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41.பி.சிட்கோ இண்டஸ்டரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை, 98, முதல் பதிப்பு.
6 மோகன், இரா (௨.ஆ) நற்றிணை மூலமும் உரையும், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41.பி.சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர் சென்னை, 98, முதல் பதிப்பு, 3004.
7, சிங்காரவேலு முதலியார், ஆ. அபிதான சிந்தாமணி, சாரதா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு 2001.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.