(Ref: SHC/DB/Grant/20234/02)

முன்னுரை

திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்  மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் வேடியப்பன் மற்றும் வேண்டியம்மன் வழிபாடு. மக்களால். பரவலாக வழிபட்டு வருவதைப் பார்க்க முடிகிறது. தமிழரின் வீரத்தின் எச்சமான நடுகல் வழிபாட்டில் தொடங்கி உள்ள வேடியப்பன் வழிபாடானது இன்றும் மக்களால். முன்னெடுக்கப்பட்டு வருகிறது. வேடியப்பன் என்றாலே எல்லோரும் கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஊத்தங்கரையை  அடுத்த கல்லாவி என்ற ஊரில் உள்ள வேடியப்பனைத்தான் பொதுவாக அடையாளமாகக் கொள்கின்றனர்.  “கிருஷ்ணகிரி மாவட்டத்து கல்லாவி ஊரில் வேடியப்பன் கோவில் உள்ளது. வன்னிமரம் கோவிலில் உள்ளது. வேடியப்பன் உருவம் கற்பலகையில் செதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு கல்லாக இருக்க வேண்டும். இவன் வன்னியர்களின் குலதெய்வம். 500 ஆண்டுகள் பழமை உடையது. நாள் பூசைகள் உண்டு. தைமாதத்தில் 7 நாட்கள் திருவிழா. நடைபெறும். அருகிலுள்ள முனியப்பனுக்கே ஆடுவெட்டி அழைத்து ஏழை எளியவர்களுக்குத் தருமம் செய்கிறார்கள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பு பூசைகள் உண்டு. மற்ற சாதியினரும் தற்போது வழிபடுகின்றனர்.”1

ஆனால் நமக்கு நடுகல் வடிவில் கிடைக்கும் வேடியப்பன் பற்றிய தரவுகளைக் கொண்டு பார்க்க கல்லாவியை நோக்கிய அந்தப் போக்கில் மாற்றம் தேவை என்று சிந்திக்கத் தோன்றுகின்றது.  இன்றைய நடுகற்கள் மற்றும் மக்கள் வழிபாட்டுப் பின்புலத்திலிருந்து கிடைக்கும் தரவுகள் அடிப்படையில் வேடியப்பன் பற்றிய வரலாற்றைப் பற்றிய ஒரு சிறு முன்னெடுப்பை முன்வைக்கிறது இக்கட்டுரை.

வேடியப்பன் வழிபாட்டிட நடுகற்கள்

கி பி. 5ஆம்  நூற்றாண்டு முதல் வேடியப்பன் நடுகல்களுடன் கல்வெட்டுகளும் நமக்குக் கிடைக்கின்றன. அவற்றில்  ‘’திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் வட்டத்திற்குட்பட்ட சாத்தனூர் (கி.பி 6. ஆம் நூற்றாண்டு)  எடுத்தனூர் (கி.பி 624) மோத்தகல் (கி.பி. 622)  தண்டம்பட்டு (கி.பி. 608) தொரைப்பாடி கி.பி. 600 படி அக்கரஹாரம் (கி.பி. 587) சின்னையன் பேட்டை (கி.பி 9. ஆம் நூற்றாண்டு) போளூர் வட்டத்திற்குட்பட்ட கடலாடி (கி.பி.6) தர்மபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அரூர் சின்னகுப்பம் (கி.பி. 6,7) மொண்டுகுழி கி.பி. 604) கதிரம்பட்டி கி.பி. 597 கோரையாறு, கோறையாறு 2  (கி.பி. 568) பாப்பம்பாடி  (கி.பி.5), ஊத்தங்கரை வட்டத்திற்குட்பட்ட நடுப்பட்டி கி.பி.598)  கானம்பட்டி  கி.பி. 581)  புலியானூர் (கி.பி.573)’’2 முதலியன குறிப்பிடத்தக்கன.

இவ்வாறு 5, 6, 7 நூற்றாண்டுகளில் அதிக அளவில் கிடைக்கின்ற வேடியப்பன் நடுகற்களில்  பாப்பம்பாடி, மற்றும் கோரையாறு – 2 இல் (தர்மபுரி- ஆரூர்) இரு மனித உருவங்கள் உள்ளன.

ஊத்தங்கரை அருகே உள்ள கானம்பாடி பன்றி வேட்டையுடனும், புலியானூர்  புலிவேட்டயுடனும் தொடர்பு கொண்டிருக்க. செங்கம் அருகே உள்ள எடுத்தனூர் ஊமை வேடியப்பன் என்று  சுட்டபடுவதுடன்  நாய் கள்ளன் ஒருவனைப் பிடித்திருப்பது போல் உள்ளது. வரலாற்று அறிஞர்கள் வேடியப்பன் உருவத்தை நடுகல்  என்று அழைக்கின்றனர். வீரன் போர் செய்வதைப்போல் கற்கல் பல காணப்படுகிறது.  அப்படிக் காணப்படும் நடுகற்கள் 6 ஆம் நூற்றாண்டு முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்திற்கு உட்பட்டதாக பரவலாகக் கிடைக்கின்றன3. அவற்றில் உருவம் நன்கு தெரியுமாறானவையும் ஓரளவு உருவ அமைப்பும் உருவம் ஏதுமற்ற நடுகல் என்றவாறு காணக்கிடக்கின்றன.

வேடியப்பன் பற்றிய மக்கள் மத்தியில் உள்ள கதைகள்

வேடியப்பனைக் குலதெய்வமாக மக்கள் வணங்குகின்றனர். குறிப்பாகத் திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய நான்கு மாவட்டங்களில் பரவலாக காணப்படுவதுடன் காலத்தால் மிகவும் பழமையான வரலாற்றுப் பின்புலங்கொண்டுள்ளதாகவும் உள்ளது. நடுகற்களாக உள்ள இடங்களில் அதிகம் இந்த நான்கு மாவட்டத்தின் தொடர்புடைய பகுதிகளை ஒட்டி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த இடங்களில் வழிபடப்படும் வேடியப்பன் பற்றிய கதைகள் மக்களிடம் சிற சிறு மாறுபாடுகளுடன் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றை இனிக் காணலாம்.

“செஞ்சியிலிருந்து 11 குடும்பங்கள் தருமபுரிக்கு குடிபெயர்ந்தார்கள் அதில் 10 குடும்பங்கள் பங்காளி, ஒரு வீட்டார், சம்பந்தி வீட்டார் ஆவார். வேடியப்பன் என்னும்  சொல்  சிவனுடைய வேடர் அவதாரத்தைக் குறிப்பதாகும். ‘’ஒரு நாள் அர்ச்சுனன் தவம் செய்வதற்காகக் காட்டுக்குச் செல்கிறான் அவ்விடத்தில்  முகசுரன் என்னும் ஒரு அசுரனை துரியோதரன் பாண்டவர்களை அழிக்குமாறு ஏவி விடுகிறார்.  அர்ச்சுனனின் தவம் கலைந்து விடக்கூடாது என்று நினைத்து சிவபெருமான் வேடன் அவதாரம் எடுத்து அந்த அசுரனனைக் கொள்கிறார். அந்த வேடன் அவனே பின்னாளில் வேடியப்பன் என்று அழைக்கப்படுகிறான். ஐயப்பனை அண்ணன் என்றும் வேடியப்பனை தம்பி என்றும் சிலர் குறிப்பிடுகிறார்கள்’’4 . இது தருமபுரியில் சொல்லப்படும்  கதை.

 ‘’பதமா சூரன் என்று ஓர் அரக்கன். இவன் சிவனை நோக்க ஏழு ஆண்டுகள் கடுமையான தவம் இருந்தான். மரக்கட்டை நட்டு அதன்மேல் நின்று கொண்டு தவமிருந்தான். அவன் தவ வலிமையை ஏற்றுச் சிவன் ரிஷப வாகனத்தில் வந்துக் காட்சி கொடுத்தார் என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்குச் சூரன் நான் யார் தலையில் கைவைத்தாலும் அவர்கள் எரிந்து சாம்பலாகப் போக வேண்டும் என்ற வரத்தைக் கேட்டான். அவரும் அப்படியே ஆகட்டும் என்கிறார்.

 அப்போது ஒரு ஏழைக்கிழவன் தன் தோட்டத்தில் பூ நட்டுக்கொண்டு இருந்தான் வேர்ப் பகுதியை மேலும், இலை குருத்துப் பகுதியை கீழாகவும் கொண்டு தலைகீழாக நட்டுவந்தான். சூரன் அதைப்பார்த்து ஏய் கிழவா என்ன உன் கெடுமதி இப்படிச் செய்கிறாய் என்றான். அதற்குக் கிழவன் எல்லாம் நீ வரம் வாங்கினது போலத்தான் நானும் நீ போய் எவன் தலைமேலாவது கை வைத்துப் பார் அப்ப தெரியும் அப்படின்னு சொன்னார்.

சூரனுக்குக் கோபம் வந்துவிட்டது. வரம் கொடுத்த ஈசுவரன் மேலே கை வைக்கப்போனான். ஈசுவரன் பயந்து ஓடினார். சூரன் பின்னால் விரட்டுகிறான். ஈசுவரன் அய்வேலங்காயில் சென்று மறைந்துகொண்டார். சூரன் வெள்ளாட்டுக்கிடாய் வடிவம் கொண்டு அக்காய்களை மென்று திண்ண ஆரம்பித்துவிட்டான். ஈசுவரன் தன் மச்சானை நினைத்து வேண்டினார். சிவன், திருமால் இருவரும் மாமன் மச்சான் உறவுமுறையினர் ஏழுமலையான் பந்து அவதாரம் எடுத்தவர். தன் மாமனின் நிலையை உணர்ந்து, உடனே மோகினி அவதாரம் எடுத்து சூரனின் முன்பு சென்று நின்றார்.

மோகினியைக் கண்ட சூரன் அவளோடு சேர ஆசை தெரிவித்தான். அதற்கு மோகினி நீ நீண்ட நாள் காட்டில் இருந்துள்ளாய். போய் குளித்து சுத்தமாக வா என்றாள். சூரன் நீரைத்தேடி ஓடினான் அப்போது ஏழுமலையான் தன் தங்கையான பூமாதேவியை அழைத்து, எல்லா நீரினையும் உள்ளே இழுத்துக்கொள்ளும்படி கூறினார். அவளும் எங்கும் நீர் இல்லாதபடியும். சூரனின் கண்ணிற்கு நீர் தெரியாதவாறும் செய்துவிட்டாள். பத்மாசூரன் நீர் தேடி அலைந்து திரிந்து களைத்து வந்தான். எங்கேயும் இந்தக் காட்டில் நீர் இல்லை என் செய்வது என்றான். அதற்கு மோகினி எங்காவது காட்டில் சிறிதளவு நீர் இருந்தாலும், அதை எடுத்து உன் தலையில் தேய்த்துக்கொண்டு வா சுத்தமாகி விடுவாய் என்றார் அப்படியே ஆகட்டும் பெண்ணே என்று மீண்டும் ஓடினான் அப்போது மாட்டின் குளம்படியில் சிறிது நீர் இருக்கும்படி செய்தார். ஆவலோடு அதை எடுத்தான் தலையில் தேய்த்தான். எரிந்து சாம்பலாகிப்போனான்

அப்போது மோகினி அவதாரத்திலிருந்த திருமால் (ஏழுமலையான்) பகவானைப் பார்த்து மாமா நீ வா என்றார். சிவன் பயப்படுகிறார். எப்படி என்று கேட்கும்போது மாமனும் மச்சானும் சேர்ந்தனர். அதனால் இரண்டு குழந்தைகள் பிறந்தனர். 1.வேடியப்பன், 2. ஐயனாரப்பன்.

இவர்கள் காட்டில் பிறந்தவர்கள். இவர்கள் ஊருக்குள் வரக்கூடாது. கானகத்தில் பிறந்தவர்கள் காடாளக் கடவது என்றுள்ளனர். வேடியப்பன் கோயிலுக்குள் பெண்கள் வரக்கூடாது. ஏனென்றால் இவர் ஆணும் ஆணும் சேர்ந்து பிறந்தவர் இவருக்குப் பெண். வாசனையே பிடிக்காது’’5

இது திருவண்ணாமலை, திருப்பத்தூர் மற்றும் கிரிஷணகரியில் உள்ள வேடியப்பன் பற்றி மக்கள் மனங்களில் உள்ள கதைகளாகும். இக்கதையில் சில மாறுபாடுகளும் சில பகுதிகளில் வழக்கில் உள்ளது. குறிப்பாகத் திருப்பத்தூரில் உள்ள பொன்னேரி (வாணியம்பாடி  ஜோலார்பேட்ட பிரதான சாலை அருகில் பொன்னேரி) என்ற கிராமத்தால் உள்ள வேடியப்பன் கதை மேற் சொன்னவாறே உள்ளது. இருப்பினும் அங்குச் சிறு மாற்றம் உள்ளது. அது வேடியப்பன் எண்ணிக்கை. அலகுள்ளது ஒன்று இரண்டல்ல ஐந்து வேடியப்பன்கள்.

வெள்ளவேடி, சப்பவேடி, செவத்தவேடி, கருத்தவேடி, முத்துவேடி என ஐந்து வேடியப்பன்களுடன் (சிவன் மோகினி அவதார இணைவினால் பிறந்தவர்கள்) நாச்சியம்மன் ( இடையர் குலப்பெண்ணாகத் திருமாலின் அவதாரம்) மற்றும் ஐயனார் என எழுவர் ஒரே இடத்தில் எழுந்தருளியுள்ளனர். பிறக்கும் போதே வில் அம்புடன் பிறந்த இந்த ஐந்து வேடியப்பன்களுக்கும்  நடுக்காட்டில் தாகம் தீர்த்த பெண்ணான ஆச்சியம்மனுக்கும் (திருமால் அவதாரம்) உள்ள உறவு  தாய் மகன் முறை உறவாக அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.

இங்குள்ள இவர்கள் பெரியமண்டலவாடி, சின்னமண்டலவாடி, சின்ன பொன்னேரி, பெரிய பொன்னேரி, மூர்த்தியூர் ஆகிய ஐந்து ஊர்களில் உள்ள மக்களால் வழிபடப்படும் தெய்வமாக உள்ளனர். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை ஜூன் மாதம் திருவிழா நடைபெறுகிறது. வீதி உலாவரும்போது அவர்கள் பலி வாங்குவதில்லை. ஆனால் அவர்களுடன் வரும் ஐயனார் பலி வாங்குகிறார்.

திருப்பத்தூர் அக்ரஹாரத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பூஞ்சோலை நகரில் உள்ள வேடியபன் ஐயனார் வேடியப்பன் என்றழைக்கபடுகின்றார். அங்கு  வேடியப்பன்  ஐந்து உருவங்களில் (பின்வரும் படம் 3 உள்ளவாறு) காணப்படுகிறார் அவற்றில் ஒன்று பெண் வடிவத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.  .

வேடியப்பன் வடிவம்

வேடியப்பன் வடிவங்கள் இரண்டு வகையில் காணக் கிடைக்கின்றன. ஒன்று உருவம் இல்லாத நிலையில் உள்ளவை. இரண்டு உருவ அமைப்பு உள்ளவை. உருவம் இல்லாத நிலையில் உள்ள வேடியப்பன் பின்வரும் இரண்டு படங்களில் உள்ளவாறு காணக் கிடைகின்றார்.

இம்மாதிரியான நிலையில் இருப்பவற்றைச் சில பகுதி மக்கள் (திருப்பதூர் அருகிலுள்ள கல்லியூர் வவ்வால்தோப்பு - படம் 1) சுயம்புவாகத் தோற்றம் பெற்றவை என்கின்றனர். அவ்வாறான நடுகல்லை அகற்ற பெருந்துன்பம் ஏற்பட்டதாகவும், அதனால் மீண்டும் இருந்த இடத்திலேயே வைத்து வழிபடுவதாகவும் (திருப்பத்தூர் அக்ரஹாரம் அடுத்த பூஞ்சோலை நகர் படம் - 2) மக்கள் நம்புகின்றனர்

உருவம் உள்ள வேடியப்பன் பின்வருமாறான தோற்றங்களில் காணக் கிடைக்கிறார்.

படம் நான்கில் உள்ளது போன்ற தோற்றத்தில் மக்கள் வசிப்பிடங்களுக்குச் சற்று தள்ளிய இடங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. அவை வழிபடக்கூடியதாகவும் வழிபாடு ஏதும் செய்யப்படாமல் விடப்பட்ட நிலையிலும் என இரு நிலைகளில் உள்ளன.

முடிவுரை

மேற்படி பதிவுகளை எல்லாம் அடிப்படை ஆதாரமாகக் கொண்டு  பார்க்க, வேடியப்பன் தொடர்புடைய வழிபாடுகள் மற்றும் மக்களின் நம்பிக்கைகள் குறித்தானச் செய்திகள் திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மிகவும் அடர்த்தியாக உள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது.  

ஏறக்குறைய 15 நூற்றாண்டுகளுக்கும் மேலாக மேற்கொள்ளப்பட்டும் வரும் ஒரு (வேடியப்பன்) வழிபாட்டின் தொடர்ச்சியும் அவ்வழிபாட்டை முன்னெடுக்கும் மக்களின் நம்பிக்கைகள் சார்ந்த செயல் வடிவங்களும் அவற்றில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்துவருவதையும் காண முடிகின்றது.

வேட்டை சமூகத்தில் ஒரு போர் வீரனாக இருந்த (வேடியப்பன்) ஒரு வீரனின் கூட்டத்தினரின் வாழ்விடம் (இடப்பெயர்வு), தொடர் செயல்பாடுகள் அவ்வின மக்களின் இன்றைய வாழ்வில் முறைகள்  முதலியனவற்றின் பின்னணியில் நிகழ்ந்த மாற்றங்களினால் சைவ மற்றும் வைணவ அடையாளங்களுடன் இன்று மக்களால் வழிபட்டு வருவதை அறிந்துகொள்ள முடிகிறது.

 ஒரு சமூகத்தின் குலதெய்வமாகத் தொடக்கத்தில் வழிபட்ட வேடியப்பன் ஊர் எல்லை தெய்வமாகவும், ஊர்தெய்வமாகவும் எல்லோராலும் இன்று வழிபடப்பட்டு வருகிறார்.  அவ்வழிபாட்டில் இன்று வைதீக பெருந்தெய்வ சடங்குகள் மேலோங்கி நிற்கின்றன.

குறிப்பு விளக்கம்

நாட்டுப்புறத் தெய்வங்கள் : களஞ்சியம், முனைவர் பேரா.சு. சண்முகசுந்தரம் , 2009 (முதல் பதிப்பு ), வெளியீடு : காவ்யா, 16, இரண்டாம் குறுக்கு வீதி,  டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை - 600 024.

தமிழ்ச்செவ்விலக்கியங்களும் நடுகற்களும் (சமூகம், அரசியல்,மொழி), ர.பூங்குன்றன், 2023 (முதல் பதிப்பு)  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னை.  
அ) கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள்,  முனைவர் சீதாராம் குருமூர்த்தி (பொதுப் பதிப்பாசிரியர்), 2007, தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை.

ஆ)  தருமபுரி நடுகற்கள், இரா. நாகசாமி (பொறுப்பாசிரியர்),1975, தமிழ் நாடு அரசு தொல்பொருள் துறை, சென்னை.

தருமபுரி வேடியப்பன் வழிப்பாடு

தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றில் வேடியப்பன்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.