நடந்தாய் வாழி வழுக்கையாறு
ஊர்பலகண்டு ஊற்றின்றிய நீரதை
கார்கால கருமேகம் கனதியாய்
பொழியவும்
கோடை தொடரினும் வற்ற மறுக்கும்
வனிதை!
வட்டுக்கோட்டையதை எட்டிப்பாய்ந்து
சென்று
வாட்டமின்றி அராலி ஆளித்தாயுடன்
ஆரம்பட அணைத்துக்கலக்கும் வரை
நடந்தாய் வாழி வழுக்கையாறு!!
வழுக்கையாறு (வழுக்கியாறு)மாரி காலத்தில் மட்டுமே சல சலத்து ஓடும். வானம் பார்த்த வரண்ட பூமி வாழ் கிராமிய மக்களின் பார்வையில் அது கொள்ளை அழகைக் கொடுத்துப் பாயும். அதன் கருணையில் செழித்துக் கொழிக்கும் நெற் பயிர்கள் நன்றி சொல்லத் தாமும் தலை சாயும். நண்டுகள் ஓடும், மீன்கள் துள்ளும். அது கண்டு நாரைகள், கொக்குகள் திரள் திரளாய்ப் பறந்து அவற்றை கொத்திக் கொண்டோடும். ஆற்றின் இருமருங்கிலும் உள்ள நெற்பயிர்களுக்கு நீர் பற்றாதிருந்தால் நீர் இறைக்கும் இயந்திரங்கள் கட, கடவெனச் சத்தம் எழுப்பி இறப்பர் குளாய்களினூடாக ஆற்றில் பாயும் வெள்ள நீரை வயல்களுக்குள் பாய்ச்சும். கமக்காரர் முகங்களில் ஒளி வெள்ளம் பளிச்சிடும். சின்னப் பெடியங்கள் அதில் கப்பல் செய்துவிட்டு விளையாடியதும், அரைக்காற் சட்டையுடனோ, கோவணத்துடனோ அல்லது அவையின்றி அம்மணமாகவோ உன்னிப்பாய்ந்து நீச்சல் அடித்து கொட்டம் போட்டதெல்லாம் அந்தக்காலம்.
மாரிப் பருவகால வழுக்கையாறு எந்த மலை உச்சியில் இருந்து உற்பத்தியாகிறது என்று மட்டும் கேட்டு விடாதீர்கள். வழுக்கி ஆற்றுக்கு நீரைக்கொண்டுவந்த பல பாதைகள் அதாவது வெள்ள வாய்க்கால்கள் இன்று பல பிரதான வீதிகளாகி விட்டன. பாதி வழுக்கி ஆறு காணாமலே போய்விட்டது.
இன்று பலர் நினைத்துக்கொண்டிருப்பது வழுக்கி ஆறு அம்பனைச் சந்தியில் ஆரம்பிக்கின்றது என்றே. வலிகாமத்தின் மிகப்பெரிய ஒரு பரப்பளவை வழுக்கி ஆற்றுப் படுக்கை தன் வட்டத்துக்குள் கொண்டு வருகிறது. ஏராளமான வாய்க்கால்கள், சிறு குளங்கள் மூலமாக தண்ணீர் வழுக்கியாற்றில் இருந்திருக்கிறது.
யாழ்க்குடாநாட்டின் குறிப்பாக வலிகாமத்தின் உயரமான பகுதிகளை கூர்ந்து அவதானித்தால் தெல்லிப்பழையின் வடமேற்காக மயிலிட்டி தெற்கு, வறுத்தலைவிழான் பகுதிகள் வலிகாமத்தின் மிக உயரமான பகுதிகளாக இருந்திருக்கின்றன. அந்தப்பகுதிகளில் இருந்து தாழ்வான ஏழாலை பகுதிகளை நோக்கி ஓடிய வெள்ளத்தை கட்டுப்படுத்த கட்டுவன் பகுதியில் ஒரு அணையை கட்டியிருக்கிறார்கள். அந்த அணை இன்று ஒரு பிரதான வீதியாகி தெல்லிப்பழை-வறுத்தலைவிழான்- கட்டுவன் வீதியாகியிருக்கின்றது. “கட்டுவன்” என்ற பெயரே “கட்டு” “வான் கட்டு” என்பதில் இருந்து மருவி வந்ததாக கூறப்படுகிறது. குறித்த அணைக்கட்டு இந்த வீதியின் இன்றைய கிறிஸ்தவ சுடுகாடு இருக்கும் பகுதிக்கு அண்மித்ததாக இருந்ததாக கருதப்படுகிறது.
- வழுக்கையாற்றுத் தோற்றம் -
அவ்வாறு வழி மறிக்கப்பட்ட நீரின் ஒரு பகுதி மயிலிட்டி பக்கமாகவும் இன்னொரு பகுதி தெல்லிப்பழைப் பக்கமாகவும் ஓடியிருக்கின்றது. அவ்வாறு ஓடிய நீரின் ஒருபகுதி கரண்டைக்குளம், முல்லைக்குளம்/முள்ளான்குளம் ஊடாக ஆனைக்குட்டி மதவடியில் காங்கேசன் துறை வீதியை கடக்க, மறுபகுதி வறுத்தலையின் ஒரு பகுதி மற்றும் வீமன்காமம் ஊடாக வந்த நீரும் தெல்லிப்பழையின் ஒரு பகுதி நீருமாகத் தெல்லிப்பழை அம்பனை வீதி அருகில் உள்ள வாய்க்கால் வழியாக அம்பனை வயலை அடைந்திருக்கிறது. அங்குள்ள பெரிய தம்பிரான் குளம், சின்னக்குளம் என்பன நிரம்பி வழியும். (அந்தப்பகுதியில் தற்போது இரண்டு குளங்கள் காணப்பட்டாலும் மேலும் சில இருந்திருக்ககூடும் என நம்பப்படுகிறது) அவற்றில் இருந்து வடியும் வெள்ளம் அம்பனை வயற் காடுகள் முடியுமிடத்திலிருந்து தென்மேற்கு நோக்கி வழுக்கையாற்றை தோற்றுவிக்கும்.
அளவெட்டி ஒரு பக்கத்தில் அம்பனை சந்திவரையும் மறுபக்கத்தில் மாசியப்பிட்டி முத்துமாரியம்மன் கோவில் வரையும் நீண்ட பிரதேசம். அதனை அண்மித்த மைலிட்டி, தையிட்டி, தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோவில் பின்பக்கமாக உள்ள மாத்தனை ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்போது ஏற்படும் வெள்ளம் கடலுக்குப் போவதில்லை. அது அளவெட்டியை நோக்கிப் பாயும். அளவெட்டியில் மழை குறைவாகப் பெய்தாலும் அங்கு வெள்ளம் திரண்டு பெருக அதுவே காரணமாக இருந்தது. அது அளவெட்டி பினாக்கைக் குளம், வடக்குக் குளம் என்பவற்றையும் அடுத்து கந்தரோடை சண்டிலிப்பாய் கண்ணகி அம்மன் கோவில் வயல்களையும் நிரப்பி அராலியை அண்மித்த யாழ் ஏரியில் கலக்கிறது. வழுக்கையாற்றின் மொத்த நீளம் 16 கிலோ மீற்றர்.
சண்டிலிப்பாய் சந்தியிலிருந்து மானிப்பாய் வீதியில் ஒரு கூப்பிடு தூரத்தில் உள்ள கட்டுடை கிராமத்தை அண்மிக்கமுன் ஐந்து கண் மதவு உள்ளது. வழுக்கையாறு பெருக்கெடுத்து அதன் அணைகளில் உடைப்பெடுத்தால் மட்டும் அரச பணியாளர்கள் அவற்றின் வான் கதவுகளை ஊர்மக்கள் பயிர்கள் நாசமாகி விடுமே எனப் பதகளித்து கேட்கும் வரை காத்திருந்து அளவுக்குத் தேவையான முறையில் திறந்து விடுவார்கள். ஆற்று நீர் சீறிப்பாய்ந்து அராலி வரை செல்லும்.
வழுக்கையாற்றின் நீரோட்டம் கோடையில் முளைத்த அடர் பற்றைகளால், சிறு மரங்களால், செடிகளால் தடைப்படக்கூடாது என்பதற்காக அரச ஒப்பந்தக்காரர்கள் அவற்றை கோடை காலத்தில் அகற்றி துப்பரவு செய்துவிடுவார்கள். அப்போது கூட வழுக்கையாற்றில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாவிட்டாலும் பார்ப்பதற்கு ஒரு தனி அழகைக் கொடுத்துவிடும். நீரோடும் அழகு மானசீகமாகக் கண்ணில் படும்.
வர்ண பகவான் ஒரு பருவத்திலாவது கருணையுடன் பொழியும் மழையை அளவெட்டியிலோ, கந்தரோடையிலோ, சண்டிலிப்பாயிலோ அல்லது எங்கோ ஓரிடத்தில் இந்த ஆறு அராலி – யாழ் ஏரியில் கலப்பதற்கு முன்னால் நீரேந்து பகுதியை ஏற்படுத்தினால் வருடம் முழுவதும் கமக்காரர்கள் அந்த நீர்த்தேக்கத்தினால் பயனடைவார்கள். வழுக்கையாறு புனர் நிர்மானம் சம்பந்தமாக அளவெட்டியைச்சேர்ந்த நீர்முகாமைத்துவப் பொறியிறல்த்துறை கலாநிதி. க. சண்முகநாதன்(Oxford பல்கலைக்கழகம்) மற்றும் பல நிபுணர்கள் வெளிநாட்டு உதவிகளுடன் பல ஆய்வுத்திட்டங்களைச் சமர்ப்பித்திருந்த போதும் இந்தத் திட்டங்கள் இன்னும் நடைமுறைப் படுத்தப்படாமை மனவருத்தம் தரும் விடயம். புவியின் வெப்பநிலை அதிகரிப்பால் உணவுற்பத்தியில் விவசாயிகள் எதிர்நோக்கும் சவால்கள் பல. அவற்றுள் கோடைகால வரட்சி என்பது வருடாவருடம் அதிகரித்துவரும் இன்றைய நிலையில் யாழ் மாவட்டத்திலிருக்கும் வழுக்கையாற்றினையும் அதையண்டியுள்ள குளங்களையும் அகழ்ந்து புணருத்தாரணம் செய்வது மிகவும் இன்றியமையாததாகக் கருதப் படுகிறது.
கந்தரோடை – கந்தர் ஓடை தாண்டி சண்டிலிப்பாய் வழியாக கட்டுடை கட்டு – உடை கடந்தே இந்த ஆறு அராலியை அடைகிறது. ஓடை, உடை என்ற பதங்களை சற்று மனதில் நிறுத்திப்பாருங்கள். ஓடையில் நீர் பாயும் கட்டு உடைந்தாலும் நீர் பாயும்.
வளை என்றால் கட்டு என்று பொருள் படும். முள்ளியவளை, கண்டாவளை, ஆழியவளை, கும்பழாவளை, களுதாவளை என்பது போல். கல்வளை என்ற நீர் நிலை ஒரு பெரிய குளமாக இருந்திருக்கிறது,
வழுக்கையாற்றை அண்மித்து. அங்கு தாழை மரங்கள் அதிகமிருந்தன என்று சின்னத்தம்பிப் புலவர், தமது செய்யுள்களில் ஆங்காங்கே கூறியுள்ளார்.
வழுக்கையாறு ஒரு காலத்தில் ஆழமானதாக இருந்திருக்கிறது. தமிழ்நாட்டுடன் தமிழ் மக்கள் போக்குவரத்து, வாணிபம் என்பவற்றில் ஈடுபட இது ஓர் நீர் வழிப்பாதையாக முக்கியத்துவம் பெற்றிருந்தது என கல்வளைப் பிள்ளையார் கோவில் வரலாறு எடுத்துக் கூறுகிறது.
வழுக்கையாற்றை அண்டி இருந்ததால் மருதநிலப் பிதேசங்களான அளவெட்டி, மல்லாகம், நவாலி, வட்டுக்கோட்டை, அராலி, கல்வளைப் பகுதியும் பிரபலம் பெற்றிருந்தது. ஆதி திராவிடரின் நாக வழிபாடும் வழுக்கையாற்றின் கரையோரமாக இங்கு பரவியது. கல்வளையிலும் வேறுபல வழுக்கையாற்றையண்டிய கிராமங்களிலும் நாகதம்பிரான் வழிபாடு முதன்மையானதாக விளங்கியிருக்கிறது.
நாகபாம்புகள் இந்து மக்களால் வணக்கத்துக்கும் மரியாதைக்குமுரிய விலங்காக கொள்ளப்படுகின்றது. எனவே இப்பகுதியில் பெரும்பான்மையாக வாழும் இந்து மக்கள் நாக பாம்புகளை கொல்வது கிடையாது. நாகதம்பிரான் வழிபாடு வழுக்கையாற்றங்கரையோரம் பரவியிருந்தமைக்கு இதுவே முக்கிய காரணமாக இருக்கலாமெனக் கருதப் படுகிறது. வழுக்கியாற்று வடிநிலப் பகுதியானது நச்சுப்பாம்புகள் உள்ளடங்கலாக பாம்புகள் அதிகம் வாழும் பகுதியாக காணப்படுகின்றது. பாம்புகள் பொதுவாக விவசாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் அகிளான், எலி மற்றும் சிறு பூச்சிகளை இரையாகக் கொள்வதனால் அவை விவசாயத்திற்கு நன்மை செய்யும் அதேவேளை அவை கொண்டுள்ள கொடிய விஷமானது மனிதர்களுக்கும் கால்நடைகளுக்கும் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதுடன் மரணம் வரை இட்டுச்செல்கின்றது. இப் பகுதியில் வாழும் கீரி எனும் விலங்கானது பாம்புகளை உணவாகக் கொள்வதனால் இப்பகுதியில் பாம்புகளின் குடித்தொகையானது கட்டுப்படுத்தப்படுகின்றது.
வழுக்கியாறு வடிநிலப்பகுதியானது இயற்கை மிருகங்கள், பறவைகள் மற்றும் பூச்சி, புளுக்கள் என மிகப்பரந்த அங்கிப்பல்வகைமையை தன்னகத்தே கொண்டு காணப்படுகின்றது. Corvus splendens and Corvus macrorhynchos (crow) காகம், Psittaciformes (parrot) கிளி, Columbidae (pigeon) புறா, Otus (owls) ஆந்தை, Centropus sinensis (Greater coucal); செண்பகம், Eudynamys scolopacea (Asian koel) குயில், Hieraaetus pennatus (eagles) பருந்து, Gracula indica (myna) மைனா, Turdoides striata (seven sisters)புளுனி, Ardea alba (crane) நாரை, Chrysocolaptes festivus (White-naped woodpecker) மரங்கொத்தி, Anastomus oscitans (stork) கொக்கு, Alcedinidae (kingfisher) மீன் கொத்தி என்பன மிகப்பொதுவாக இப்பகுதியில் அவதானிக்கக்கூடிய பறவைகளாகும். இவற்றை விட வெளிநாட்டு குடிபெயர்வுப் பறவைகளை தை, மாசி மாத பருவகாலங்களில் வழுக்கியாற்று வடிநிலப்பகுதிகளில் அவதானிக்க முடிவதுடன் வழுக்கியாறானது கடலுடன் கலக்கும் அராலி வெளி என அழைக்கப்படும் கழிமுகப்பகுதியானது இது போன்ற வெளிநாட்டு குடிபெயர்வு பறவைகளை அதிகளவில் கண்டு களிக்கக்கூடிய பருவகால பறவைகள் சரணாலயமாக தொழிற்படுகின்றது.
Prionailurus viverrinus (fishing cat) காட்டுப்பூனை, Herpestidae (mongoose) கீரி, Serpentes (snakes) பாம்பு, Rattus (rats) அகிளான், Mus musculus (mouse) எலி, Oryctolagus (rabbits) முயல், Sciuridae squirrels அணில், Anura (frogs) தவளை, Chamaeleonidae (chameleons) ஒணான், Testudinidae (tortoise) ஆமை, Mustela (weasels) மரநாய் என்பன மிகப்பொதுவாக வழுக்கியாற்று வடிநிலத்தில் வாழும் சில விலங்குகளாகும். சருகுப்புலி எனும் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவகை விலங்கை இப்பகுதிவாழ் விவசாயிகள் தமது விவசாய நிலங்களிலும் பிரதேசத்தில் காணப்படும் பற்றைக்காடுகளிலும் மிக அரிதாக கண்டதாக கூறுகின்றனர்.
- வழுக்கையாறு அராலிக் கடலில் கலப்பதற்கு முன் அமைந்துள்ள அணை -
வளம் மிகுந்த வழுக்கையாற்றின் தொன்மையும் அதன் வரலாறும்
மாருதப்புரவீகவல்லி சோழ மண்டலத்தை ஆண்ட திசையுக்கிரசிங்க மன்னனின் மகள். இளவரசி மாருதப்புரவீகவல்லி கூனல் தோற்றமுள்ள முனிவர் ஒருவரைக் கிண்டல் செய்ததினால் அவர் கொடுத்த சாபத்தால், குதிரை முகமும் குஷ்ட ரோகமும் அவளைப் பீடித்துக்கொண்டது, பல சிகிச்சைகள் செய்தும் அவளுக்கு நோய் மாறவில்லை. அவள் தரிசிக்காத கோவில்கள் இல்லை. அவளது நோய் தீராததைக் கண்டு, தவசி ஒருவரின் வாக்குப்படி வட இலங்கையில் உள்ள கீரிமலை என்ற திவ்விய தீர்த்தத்தில் நீராடச் சென்றாள். அவளின் குதிரைமுகம் மாறிய இடத்தின் பெயர் "மாவிடுதிட்டி" அவள் மாவிட்டபுரத்தில் முருகனுக்கு ஒரு ஆலயம் அமைத்தாள்.
மாருதப்புரவீகவல்லியின் குதிரை முகம் பிறர், பார்வைக்கு நீங்கினாலும் அவளது சொந்த பார்வையிலிருந்தும் நினைவில் இருந்தும் நீங்கப் பெறவில்லை. அதன் காரணம் என்ன என்று ஆராய்ந்த போது முருகன் வழிபாட்டுக்கு முதல் பிள்ளையாருக்கு வழிபாடு செய்யாததே எனத் தெரியவந்தது. தான் செய்த தவறுக்கு பிராயசித்தமாக ஏழு இடங்களில் பிள்ளையாருக்கு கோவில் அமைத்து மாருதப்புரவீகவல்லி வழிபட்டாள். கொல்லங்கலட்டி, வரத்தலம், ஆலங்கொல்லை, கும்பிழாவளை, பெருமாக்கடவை. ஆலங்குழாய், கல்வளை (பரமானந்தப் பிள்ளையார் கோவில் என்ற ஆதியில் அழைக்கப்பட்டது) என்பனவே அப்பிள்ளையார் தலங்கலாகும். இத்தலங்களில் அதிகமானவை வழுக்கையாற்றையண்டியே கட்டப்பட்டன. பிள்ளையாருக்குக் கோவில் அமைத்து வழிபட்ட பின் இளவரசியின் குதிரைமுகம் அவளது பார்வைக்கு முற்றாக நீங்கியது என்கிறது மரபு வழி வந்த கதை. தமிழகத்தில் பிரசித்திபெற்ற ஆற்றங்கரைத் திருத்தலங்கள் போல இத் தலங்களும் விளங்குவதாக வரலாற்றில் சுட்டிக் காட்டப்படுகிறது.
இதில் அழகொல்லை,கும்பளாவளை, பெருமாக்கடவை ஆகிய மூன்று விநாயகர் திருத்தலங்கள் அளவெட்டியில் அமைந்துள்ளமை அந்த ஊருக்குச் சிறப்பையும் வனப்பையும் அள்ளித் தருகிறது. பெருவீதியருகில் அமைந்திருக்கும் அழகொல்லை விநாயகராலயத்தின் பின்புறமும் இடப்புறமும் குளங்களும் வலப்புறம் நெல்வயலுமாக, பினாக்கைக் குளத்தருகில் பரந்து விரிந்து கிடக்கும் நெல்வயல்ப் பிரதேசத்தின் மத்தியில் வீற்றிருக்கும் பெருமாக்கடவைப் பிள்ளையாரும் மருதநிலமாகப் பச்சைப் பசேலெனக் கண்ணுக்கு விருந்தளிக்கும். அளவெட்டியின் மத்தியில் குளத்தருகே வீற்றிருக்கும் கும்பளாவளை விநாயகராலயம் மாருதப்புரவீகவல்லியினால் அமைக்கப்பட்ட ஏழு விநாயகராலங்களுக்குள் நடுவில் அமைந்து அருள் பாலிப்பதால் தனிச்சிறப்புப் பெறுகிறது.
புராதன காலத்தில் இவ் வழுக்கியாற்று தொகுதியில் காணப்படும் குளங்கள் கால்வாய்கள் என்பன பூதங்களை கடவுளின் உதவிகொண்டு அரசர்கள் அடக்கி அவற்றின் மூலம் கட்டுவித்ததாக இன்று வரை இக்கிராம வாசிகள் நம்புகின்றனர். ஆற்றின் பிரதான வாய்க்காலின் இருபுறமும் கோயில்கள் பலவற்றை அவதானிக்க முடிவதுடன் இக்கோயில்கள் வரலாற்றுப் பெருமை வாய்ந்தனவாகவும் காலத்தால் முற்பட்டவையாகவும் விளங்குகின்றன. புராதனமக்கள் வழுக்கியாற்றுத் தொகுதியை தாம் வணங்கும் தெய்வங்கள் பாதுகாப்பதாக நினைத்தமை காரணமாக அதிக கோயில்களை ஆற்று வடிநிலப்பகுதியில் நிர்மானித்திருக்கலாம். ஆற்று படுக்கையின் கரைகளிலே சுடுகாடுகளையும் அவதானிக்க முடிகின்றது. சைவ மக்களின் அபரக்கிரியைகளுக்கு நீரானது முக்கியத்துவம் பெறுகின்றமையினால் சுடுகாடுகள் ஆற்றங்கரைகளில் அமையப்பெற்றிருக்கலாம். பண்டைய காலத்தில் இவ் வழுக்கியாற்றுத்தொகுதியானது கதிரமலை (கந்தரோடை) இராசதானியை பகைவரின் ஆக்கிரமிப்பில் இருந்து தடுப்பதற்கும், நீர்வழி போக்குவரத்திற்கும், இயற்கையில் தாழ்வான பகுதியான கந்தரோடையை வெள்ள அனர்த்தத்தில் இருந்து பாதுகாக்கவும். விவசாய நிலங்களில் இருந்து மேலதிக நீரை வெளியேற்றவும் பயன்பட்டது.
ஆதிமக்கள் இயற்கைக்கு எவ்வளவு மதிப்பளித்துள்ளனர் என்பதற்கு உதாரணமாக சுவாரசியமான கதை ஓன்றினை கிராமவாசிகள் கூறுகின்றனர். அதாவது கந்தரோடை இராசதானியின் மன்னனான உக்கிரசிங்கன் கந்தரோடை குளத்தின் மத்தியில் அழகிய மாளிகை ஒன்றை நிர்மானிக்க ஆசை கொண்டதாகவும் இயற்கைக்கு மாறாக தாம் செய்யும் காரியத்தால் இயற்கை சீற்றம் கொள்ளக்கூடாது எனக்கருதி பெருமளவு தங்கத்தை குளத்தில் போட்டு இயற்கைக்கு காணிக்கையளித்ததாக கூறுகின்றனர்.
கந்தரோடையை சூழ்ந்துள்ள கிராமங்களின் பெயர்கள் காரணப் பெயர்களாக உருவாகின இக்கிராமங்கள் பண்டய கதிரமலை இராசதானியின் பகுதிகளாக இருந்தமைக்கு பல சான்றாதாரங்கள் காணப்படுகின்றன. கந்தரோடையின் வடக்குப்பகுதியில் அளவெட்டி, மல்லாகம் போன்ற கிராமங்களும் கிழக்காக சுண்ணாகமும் (புராதன பெயர் மயிலணி என்பதாகும்) தென்கிழக்காக உடுவில் கிராமமும் தெற்கில் சங்குவேலி கிராமமும் மேற்கு எல்லையாக சண்டிலிப்பாய் கிராமமும் (புராதன பெயர் கல்வளை என்பதாகும்) மாசியப்பிட்டி கிராமமும் அமைந்துள்ளன.
அளவெட்டி பகுதியானது ஆதிகாலத்தில் சேற்று நிலமாக காணப்பட்டது இதனால் இப்பகுதியூடாக எதிரிகள் உட்புக முடியாப் புதை குழிகளாக தொழிற்பட்டன. நீர் வழிந்தோடும் சேற்றுப்பாங்கான நிலத்தை அளவெக்கை என கூறுவது வழமையாகும். சேற்று நிலமாக இருந்த பகுதியை பிற்கால மக்கள் ஒரு பகுதியை குளமாகவும் மறுபகுதியை மண்ணால் நிரவி குடியிருப்பு பகுதியாகவும் மாற்றினர். இதற்கு ஆதாரமாக அக்கிராமத்தில் அதிகமான வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்கள் காணப்படுவதுடன், கிராமத்தவர்கள் இப்பிரதேசத்தில் மண்ணை தோண்டும் போது கறுப்பு நிற சேற்று களியை அவதானிப்பதாகவும் கூறுகின்றனர். இதுவே புராதன சேறு ஆகும்.
மல்லாகம் என்பது மல்லர் கமம் அல்லது மல்லர் அகம் என்பதில் இருந்து மருவியது ஆகும். அதாவது இப்பகுதியானது போர்க்குடிகளின் குடியிருப்புக்களாக விளங்கின. போரும் விவசாயமும் இப்பிரதேசவாசிகளின் தொழிலாக புராதன காலத்தில் காணப்பட்டது. இதனால் இப்பகுதியூடக எதிரிகள் தலைநகருக்குள் உள் நுளைய முடியாது பாதுகாப்பான பகுதியாக இருந்தது.
மயிலணி என்பது முள்கொண்ட மயிலமரங்கள் அணியாக(வேலி போண்று) அமைந்திருந்தத காரணத்தால் உருவாகியது அதேபோல் சுண்ணாம்புக்கற் பாறைகள் மலையாக இருந்த காரணத்தால் சுண்ணாகம் என்ற பெயர் உருவாகியது. உடுவில் எனப்படுவது நீர் தேங்கும் வில்லாகும் இதன் தொடர்ச்சியாக உடுவில் குளம் தோன்றியிருக்கக்கூடும், முள்கொண்ட சங்கு செடிகள் வேலியாக அமைந்திருந்த பிரதேசம் சங்குவேலி எனப் பெயர்பெற்றது. கல்வளை எனும் பெயர் கற்களில் அமைந்த குழி எனப்பொருள்படும் அதாவது பொறிக்கிடங்குகள் பரவலாக அமைந்த பிரதேசம் என கொள்ளமுடியும். மாசியப்பிட்டி எனப்படுவது புதிய பிட்டி என்ற பொருள் பட மண்ணினால் அமைந்த மதிலைக் கொண்ட பகுதியாகும். கட்டுடை என்பது இன்று ஜந்து கண் மதகு அமைந்த பகுதியாகும். இது வழுக்கியாற்று தொகுதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். ஏனெனில் இப்பகுதியே முழுமையான வெள்ளநீரை கடத்தும் பகுதியாகும். நீரை தேக்கும் பொருட்டு அமைக்கப்படும் அணைக்கட்டானது நீர்மட்டம் தேவைக்கு அதிகமாக அதிகரிக்கும் பொழுது கட்டினை உடைத்து நீர்மட்டத்தை குறைக்கும் பிரதேசம் என்ற காரணத்தால் கட்டுடை என அழைக்கப்பட்டது.
ஆதிகாலத்தில் அரசர்களும் கிராமத்தலைவர்களாக காணப்பட்ட முதலியார்களும் தம் ஆளுகைக்கு உட்பட்ட குடிமக்களை கொண்டு குளங்களையும் கால்வாய்களையும் சுத்தப்படுத்தி புணரமைத்து பேணி பாதுகாத்து வந்தனர். இதற்கென ஒரு சில சமூக குழுவினரே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டனர். அளவெட்டி பிரதேசத்தில் காணப்படும் பினாக்கை குளத்தை வருடாவருடம் சேரும் சேறு, படிவுகளை அகற்றி துப்பரவாக்கும் குழுவினர் வாழ்ந்த பகுதியான குளமண்கால் கிராமம் இதற்கு சிறந்த உதாரணமாகும். ஆங்கிலேயர் காணிப்பட்டயம் வழங்குவதற்கு குளத்தில் வேலை செய்த கிராம வாசிகளிடம் உங்களது ஊரின் பெயர் என்ன எனக் கேட்க ஆங்கில அறிவு அற்ற அவர்கள் தமது காலில் ஒட்டியுள்ள சேற்றைபற்றி துரை கேட்கிறார் என நினைத்து குளமண்கால் எனக்கூற அதுவே அவ்வூர் பெயரானது என ஊர்ப்பெரியவர்கள் காரணம் கூறுவர். கல்வி அறிவற்ற அவ்வூர்மக்கள் கல்வி கற்க என ஆங்கிலேயர் பாடசாலை ஒன்றை அவ்வூரில் நிறுவியதுடன் மக்களை கிறிஸ்தவ சமயத்திற்கு மதம் மாற்றி அங்கு ஓர் தேவாலயத்தையும் நிர்மானித்தனர்.
வழுக்கையாற்றின் சிறப்பை மேலும் எடுத்தியம்புவதானால்:
இந்த வழுக்கி யாற்று படுக்கை ஒவ்வொரு மழையின் போதும் நிலத்தடிக்கு நீரை அனுப்புவதில் பெரும் பங்கு ஆற்றி வருகிறது. யாழ் குடாநாட்டில் நான்கு பெரிய நிலத்தடி நீர்த்தேக்கங்கள் காணப்படுகின்றன. எங்கள் அனைவருக்கும் குடிநீரும், விவசாயத்திற்கான நன்னீரும் கிடைப்பது அதில் இருந்து தான். அதிலும் குறிப்பாக “சுண்ணாகம் நீர்த்தேக்கம்” மிகப் பெரியது. அந்த நீர்த்தேக்கத்தினை அதன் அடியில் உள்ள உப்பு நீர் மேலெழாமல் சுத்தமாக பேணுவது இந்த வழுக்கி ஆறும் அதை சூழ உள்ள குளங்களும் நீரேந்து பிரதேசங்களும் என்பது பலருக்கும் தெரியாது. (காங்கேசன்துறைக் கடலேரியிலிருந்து ஆரம்பிக்கும் உப்பாறு மாவிட்டபுரம், சுண்ணாகம், இணுவிலூடாகச் சென்று யாழ்க்குடாநாட்டின் தெற்குப்பகுதியில் நாவற்குழியை அண்டிய கடலேரியுடன் கலக்கும் என்பது இங்கு அறியப்பட வேண்டிய விடயம்)
இது தவிர மண் வளமாக இருப்பதற்காக, அதில் நாம் இடும் கழிவுகளை கழுவி அகற்றுவதும் இந்த வழுக்கி ஆறும் அதை சூழ உள்ள குளங்களுமே. நம் பிரதேசத்தின் பல உயிரினங்களுக்கும் பறவைகளுக்கும் வருடம் முழுவதும் நீரை கொடுத்து உயிர்பல்வகைமையை காத்து அழகிய இயற்கை வனப்பை கொடுப்பதுவும் இந்த வழுக்கி ஆறும் அதன் சூழலுமே. உங்கள் கிணறுகளின் இன்று நீர் அள்ளக்கூடியவாறு கிடைப்பதுவும் இந்த வழுக்கியாறும் குளங்களும் கொடுத்த வரமே. ஏன் யாழ் குடாநாட்டில் கந்தரோடை பகுதியில் முதலாவதாக மனித நாகரீகத்தை வளர்த்ததும் இந்த வழுக்கியாற்றின் ஊடான படகுப் பயணங்களே! வழுக்கையாறு என்பது இறைவன் நமக்களித்த வரம். அதனைப் பேணிப் பாதுகாப்பது எமது தலையாய கடமையாகும்.
உசாத்துணை நூல்கள்
1. Sivashanmugarajah.S, 2013. Kaalaththi Ventru Nitkum Kantharodai.
2. Sitrampalam. S. K, 1993. Yalppanam Thonmai Varalaru.
3.Sanmugeswaran Pathmanesan, (2010). A Social anthropological analysis of a ‘Temple-
Centered Community: Jaffna in Northern SriLanka.
4. Kunarasa. K, valu nee valukkiarae
5. Research report: Dr K Sanmuganathan, Team Leader, Water Resources Consultant, UK Erik Helland-Hansen, Norconsult A.S
6. Essay: T.Thayanthan
7. Essay: V.N. Mathialagan
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.