“நவாஷ், முனீரா என்ன சொல்கிறாள்?”
“Sir, மனம் பற்றி படித்து, அவளின் மனசே உடைந்து விட்டதாம்….’
“முனீரா, உங்கள் உடைந்த மனதை காட்டுங்கள்…”

இந்த உரையாடல் பேராதனைப் பல்கலைக்கழக மெய்யியல் துறைக்கான விரிவுரை அறையில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்தது. கேள்வியைத் தொடுத்தவர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள். ‘மெய்யியல் பிரச்சினைகள்’ வரிசையில் அன்றைய விரிவுரை மனம் பற்றியதாக அமைந்திருந்தது. வெண்பலகையில் எழுதியவாறு மனம் பற்றிய மெய்யியல் அணுகலை பேராசிரியர் தெளிவு படுத்திக்கொண்டிருந்தார். மெய்யியலின் அரிச்சுவடியில் அமர்ந்திருந்த எமக்கு எதுவும் தெளிவாகவில்லை. ஆனால், “உங்கள் உடைந்த மனதை காட்டுங்கள் பார்ப்போம்” என்று பேராசிரியர் உரைத்ததும் எமக்கு மெய்யியல் பற்றி கொஞ்சம் உறைக்கத்தொடங்கியது. குறிப்பாக என் தேடலுக்கான ஊக்கியாக இது அமைந்தது. பல்கலைக்கழக நூலகத்தில் மெய்யியல் பற்றிய நூல்களை ‘பார்க்க’த்தொடங்கி, மெல்ல மெல்ல படிக்கவும் ஆரம்பித்தேன். பேராசிரியர் அனஸ் அவர்களின் விரிவுரைகள் எனக்கு பிடித்தமாயிற்று. தடித்த நான்கைந்து ஆங்கில மொழிமூல நூல்களுடன் விரிவுரை அறைக்கு வருகைத் தரும் அவர். கதிரையில் அமர்ந்துகொண்டு எம்முடன் சற்று நேரம் உரையாடுவார். இது சோக்கிரடீஸ் பாணி என்பது பின்நாட்களில்தான் புரிய ஆரம்பித்தது. அதன் பின் எழுந்து வெண்பலைகையில் எழுதியவாறு எடுத்துக்கொண்ட பாடுபொருளை பிரக்ஞைப் பூர்வமாக துலக்குவார். பின்னர் குறிப்புக்களை சொல்லத்தொடங்குவார். ஆங்கில நூல்களை பார்த்தவாறு தமிழில் சொல்லிக் கொண்டே போகையில் ரயில் பறக்கும். சில சந்தர்பங்களில் நாம் எழுதுவது எமக்கே விளங்குவதில்லை. நண்பர்கள் எழுதிய குறிப்புக்களை அறைக்கு எடுத்துவந்து, நான் எழுதியதையும் வைத்துக் கொண்டு திரும்பத்திரும்ப வாசித்து தெளிவாக அந்த குறிப்புக்களை பதிவுசெய்து கொள்வேன். இதனால் குறித்த மெய்யியல் விஷயஞானம் எனக்குள் பதியமாயிற்று. என்னால் முதலாம் வருட தேர்வில் மெய்யியல் பாடத்துக்குரிய புலமைப் பரிசிலையும் (IBRAHIM JAFEERJIE MEMORIAL SCHOLARSHIP FOR PHILOSOPHY – G.A.Q Ex. 91/92; 11.05.1992) மிகச் சிறந்த சித்தியையும் பெறமுடிந்ததால், மெய்யியல் என் சிறப்புக் கற்கைத்துறையாயிற்று. பேராசிரியருடன் ஆப்தநேசத்தோடு பழகும் வாய்ப்பும் எனக்குக்கிடைத்தது.

நான் விரிவுரைகளுக்குச் செல்லும்போது நான்கைந்து வெண்தாள்களை மடித்து பொக்கற்றில் வைத்துக்கொள்வேன். கையில் எதுவும் இருக்காது. இதனை பேராசிரியர் அனஸ் அவர்கள் அவதானித்திருக்க வேண்டும். இரண்டாம் வருடத்து முதல் விரிவுரைக்கு செல்லும் போது என்னை அழைத்து, “நீங்கள் இப்போது Philosophy Special மாணவன்… அந்த Special உங்களது செயற்பாடுகளிலும் இருக்க வேண்டும்… கையில் சில புத்தகங்கள்…. பைல் என்று ஒரு ஒழுங்கு முறையுடன் விரிவுரைகளுக்கு வருகைத் தரவேண்டும்"…. இப்படிப் பல அறிவுரைகள்…. இன்னுமொரு சம்பவம், பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களுக்கான ‘பகடிவதை’க் காலம். நானும் நண்பன் ஜாபிரும் முதலாம் வருடத்து பெண்பிள்ளைகளோடு கதைத்துக் கொண்டிருந்தோம். பேராசிரியர் நந்தகுமார் வருகிறார் என்று ஓய்வறையில் ஒரே சலசலப்பு… நாம் பேராசிரியர் நந்தகுமார் அவர்களை கண்டுக் கொள்ளாமல் குறித்த மாணவிகளுடன் உரையாடிக்கொண்டிருந்தோம். பேராசிரியர் எம்மிருவரினதும் பல்கலைக்கழக அடையாள அட்டையை எடுத்துப்போய்விட்டார். முதல் வருடத்தில் புவியியல் பாடம் கற்றதால் நந்தகுமாரை எனக்குத் தெரிந்திருந்தது; அவரிடம் போய் அடையாள அட்டையைக் கேட்டோம். சிரேஷ்ட விரவுரையாளர் ஒருவரிடம் கடிதம் கொண்டுவருமாறு அவர் சொல்ல, பேராசிரியர் துரை மனோகரன் அவர்களிடம் கடிதம்பெற்று அவரிடம் கொடுத்தபோது, துரை மனோகரன் என்ற பெயரை பார்த்ததும் கடும் சினத்துடன் ஏதோ தகாத வார்த்தைகளை கூறியவாறு, கடிதத்தை எம்முகத்தில் எறிந்தார். சிறிதுநேரத்தின் பிறகு பேராசிரியர் அனஸ் அவர்களிடம் கடிதம் எடுத்துவருமாறு கூறினார். எனது ஆசான் ஆயிற்றே, மகிழ்ச்சியோடு அனஸ் Sirரிடம் விடயத்தை சொன்னோம். முகம் சிவந்து இப்படி அவர் கோபப்பட்டதை நான் இதற்கு முன் கண்டதில்லை. மயான அமைதிக்குப் பின்னர் கோபம் மாறாத முகத்துடன் எம்மிருவரையும் அருகில் இருந்த விரிவுரை அறைக்கு அழைத்துப் போனார். இரண்டு மணித்தியாலத்திற்கு மேலாய் பகடிவதையின் அறமற்ற செயற்பாடுகள் பற்றி ஆவேசமாய் பேசினார். ‘பகடிவதை என்பது ஒரு காட்டு மிராண்டித்தனம்’ என்று அவர் உரைத்தது எனக்குள் இன்னும் எதிரொலிக்கிறது. அறை கதவைதிறந்தவாறு, “இப்போது போய் அடையாள அட்டையை கேட்டுக்கொள்ளுங்கள்” என்றார். பேராசிரியர் நந்தகுமாரிடம் போனதும், “பேராசிரியர் அனஸ் பேசினாரா” என்றார். “ஆம்” என்றோம். எதுவும் பேசாமல் அடையாள அட்டையைத் தந்தார்.

‘பல்கலைக்கழகத்தில் இறுதிப் பரீட்சை எழுதிய சிலநாட்களில் மெய்யியல், உளவியல் துறையில் பகுதிநேர விரிவுரையாளராக (01.03.1995) இணைத்துக் கொள்ளப்பட்டேன். அதன்பிறகு பெறுபேறுகள் வெளியானவுடன் இத்துறையின் விரிவுரையாளர் (06.06.1996) ஆனேன். 1995-2000 ஆண்டுவரையில் மெய்யியல் உளவியல் துறையில் ஒரு விரிவுரையாளராக கடமையாற்றினேன். இக்காலப்பகுதியில் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்களுடன் மெய்யியல், இலக்கியம், சமூகவியல், வரலாறு, அழகியல் சார்ந்த இன்னோரன்ன விடயங்கள் பற்றி கலந்துரையாடி இருக்கிறேன். அவரது தேடலின் மலையளவு பற்றி வியந்து போயிருக்கிறேன். அவரது மொழி (தமிழ், ஆங்கிலம், சிங்களம்) ஆளுமையின் வீச்சு என்னை பிரமிக்கச் செய்தது. எல்லா துறைகளைப் பற்றியும் விரிவாகவும் தெளிவாகவும் நுண்ணுணர்வோடு தெரிந்து வைத்திருந்தார்’ (ஈழக்கவி; ‘அழகியல் மெய்யியல்’; 2020: முன்னுரை). என்னுடைய ‘இரவின் மழையில்’ (2013) கவிதைத்தொகுப்பின் அணித்துரையில், ‘நவாஷ் எனது மாணவன். பல்கலைக்கழகத்தில் அமைதியும், படிப்பில் ஆர்வமுமுள்ள நல்ல மாணவனாக அவரை எனக்குத் தெரியும்’ என்றெழுதியிருந்தார். ஆழ, அகலமான கற்பித்தல் செயற்பாடுகளில் தன்னை அர்ப்பணித்து செயற்பட்டது போலவே, மாணாக்கர் நன்நல செயற்பாடுகளிலும் ஆர்வத்துடன் இயங்கி வந்திருக்கிறார்.

அனஸ் பிறந்தது 07.03.1949 அன்றாகும். புத்தளம் கல்பிட்டியச் சேர்ந்த, பள்ளிவாசல்துறைக் கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். பள்ளிவாசல்துறை முஸ்லிம் வித்தியாலயம், கல்பிட்டி அல் அக்ஸா மகா வித்தியாலயம், கொழும்பு ஸாஹிறாக் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான அனஸ் அவர்கள் கொழும்பு, பேராதனை ஆகிய பல்கலைக்கழகங்களில் பயின்றவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இளமாணி, முதுமாணி, முனைவர் (கலாநிதி) பட்டங்களைப் பெற்ற அவர், அதே பல்கலைக்கழகத்தில் மெய்யியல் துறையில் முதுநிலை விரிவுரையாளராகவும் பேராசிரியராகவும் மெய்யியல், உளவியல் துறை தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். களனி பல்கலைக்கழகம், யாழ் பல்கலைக்கழகம், போன்றவற்றிலும் பணியாற்றியவர். பல்கேரிய 'சோபியா பல்கலைக்கழகம்', SOAS இலண்டன் பல்கலைக்கழகம், கனடா 'டொராண்டோ' பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வருகை ஆய்வாளராகவும், வருகை புலமையாளராகவும் இருந்தவர். ‘தற்கால இஸ்லாமிய சிந்தனை’ (2001) என்ற பெரு நூலூக்கத்திற்கான ஆய்வு முயற்சி லண்டன் பல்கலைக்கழகம் SOAS இன் இஸ்லாமிய ஆய்வுத்துறை மையத்தின் வருகைப் புலமையாளராக இருந்த போது (!999-2000) ஆரம்பமானது - என்று குறித்த நூலில் பேராசிரியர் அனஸ் அவர்கள் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அவருடைய தந்தை அபூபக்கர் மரைக்கார் முஹம்மத் சாலிஹ். ‘தந்தையிடம் இருந்துதான் சிந்தித்தற் கலையையும் மனிதனாயிருத்தல் என்ற உணர்வையும் நான் கற்றுக்கொண்டேன்’ என்று அலீ ஷரீஅத்திப் இன் வார்த்தைகளில் கூறியுள்ளார். அவரெழுதுகின்ற நூல்களின் முன்னுரை முடிவில் ‘முஹம்மத் சாலிஹ் முஹம்மத் அனஸ்’ என்று தந்தையின் பெயரையும் சேர்த்தே எழுதிவருகிறார். பேராசிரியர் அனஸ், மெய்யியல், உளவியல், சமூகவியல், வரலாறு, பண்பாடு. அழகியல், நாட்டாரியல், இலக்கியம் என்று இன்னோரன்ன துறைகளில் ஆழமான தேடலும் கற்றலும் புலமைத்துவமும் கொண்டவர். அவை சார்ந்த கருத்தாடல்களிலும் ஆய்வுகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயற்படுபவர்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் கலைபீடுத்தினால் வெளியிடப்பட்ட “பல்கலை” ஆய்வு சஞ்சிகை, சமூக விஞ்ஞான சங்கத்தினால் வெளியிடப்பட்ட “ஆய்வு” சஞ்சிகை ஆகியவற்றின் ஆசிரியராக இருந்த பேராசிரியர் அனஸ் அவர்கள், பழைய அரிய நூல்களின் பதிப்பு (Publish), செவ்விதாக்கம் (Edit) போன்ற பணிகளிலும் ஈடுபட்டுவருகின்றார். தேசிய நாளிதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகள் நூற்றுக்கும் அதிகமானவை. 'விடிவெள்ளி' பத்திரிகையில் 2017 முதல் வாராந்தம் அவர் எழுதிவந்த, 184 தொடர்களைக் கொண்ட 'இலங்கை முஸ்லிம்களின் மறக்கப்பட்ட வரலாறு' என்ற கட்டுரைத் தொகுப்பு விரைவில் ஒரு நூலாக வெளிவரவுள்ளது. மெய்யியல். உளவியல், சமூக விஞ்ஞானம், வரலாறு, இஸ்லாமிய மெய்யியல், முஸ்லிம் பண்பாடு – வரலாறு – நாட்டாரியல் – நுண்கலை – கல்வி – அழகியல் – கவிதை – சமூக விவகாரங்கள் முதலான துறைகள் சார்ந்து, சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை இதுவரை எழுதியுள்ளார். அவற்றில் சில வருமாறு,

    சேர்.செய்யத் அகமத்கான் இந்திய முஸ்லிம் தேசிய வாதத்தின் தொடக்கம் – 1884 (முதல்நூல்)

    ஏ.எம்.மதார் மரைக்காரின் அபிவிருத்திப் பணிகளில் கல்வியும் சமூகமும் - 1986

    வரகவி செய்கு அலாவுதீன் - 1991

    ஷெய்கு இஸ்மாயில் புலவர் ஒரு பண்பாட்டுப் பார்வை - 1994

    எச்.எஸ்.இஸ்மாயில் ஒரு சமூக அரசியல் ஆய்வு - 1995

    சமூக விஞ்ஞானங்களும் விஞ்ஞானங்களும் - ஒரு முறையியல் நோக்கு - 1996

    கண்டி மாவட்ட முஸ்லிம்கள் - 1996

    இஸ்லாத்தின் தோற்றம் ஒரு சமூக பண்பாட்டியல் ஆய்வு – 1997

    தற்கால இஸ்லாமிய சிந்தனை – 2001

    புத்தளம் பிரதேச புலவர்கள் – 2002

    இலங்கையில் இனக்கலவரங்களும் முஸ்லிம்களும் -2003

    மெய்யியல் அறிமுக உரைகள் – 2003

    எஸ்.எம்.ஏ.ஹஸன் தற்கால முஸ்லிம் சமூக பண்பாட்டு வரலாற்றில் ஓர் அத்தியாயம் - 2004

    ‘மெய்யியல்’ கிரேக்க மெய்யியல் முதல் தற்காலம் வரை – 2006

    இலங்கையில் முஸ்லிம் நுண்கலை ஒரு விமர்சன ஆய்வு – 2007

    எ.எம்.எ.அஸீஸ் கல்விக்கொள்கையும் நவீனத்துவ சிந்தனைகளும் - 2007

    முஸ்லிம் நாட்டாரியல் தேடலும் தேவையும் - 2008

    புத்தளம் முஸ்லிம்கள் வரலாறும் வாழ்வியலும் – 2009

    அரபு இசை கஸீதா முதல் கஸல் வரை – 2014

    முஸ்லிம் அரசியல் முன்னோடி அறிஞர் சித்திலெப்பை – 2017

    அரபு உலக மக்கள் எழுச்சி – 2018

    ஈரானிய சினிமா சமயவாதங்களும் திரைப்படங்களும் – 2020

    தொடக்ககால இஸ்லாம் ஒரு சமூக பண்பாட்டு பார்வை – 2021

    மெய்யியலின் பெருங்கனவு சோக்ரடீஸ் – 2023

[தொடரும்]


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.