முன்னுரை

தொல்காப்பியர் அடிப்படையில் அகத்திணைகள் ஏழாகப் பகுக்கப்படுகின்றன. அகத்தைச் சார்ந்த வாழ்வாக புறம் அமைகின்றது. மக்களின் ஒழுகலாறுகளைக் கூறும் அகம ;ஐந்திணைப்பாடல்களில் இயற்பெயர் சுட்டாமல் அமையும் என்று இலக்கணநூலார் வரையறை செய்வர். ஒருவரும் தம் பெயரைச் சுட்டி கூறும் மரபுவழக்கில் இல்லை என்பதை ,

“மக்கள் நுதலிய அகன் ஐந்திணையும்
சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறாஅர்.”1 (தொல். 1000)

என்ற நூற்பா வழிமொழிகின்றது. அகப்பொருட்குரிய திணைகள் ஏழாகத் தொல்காப்பியம் வகுத்துள்ளது.

“கைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.”2 (தொல். 947)

முற்கூறிய ஐந்திணைகளின் சிறப்பியல்பு கைக்கிளை பெருந்திணையில் அமையாது போனாலும் அகத்திணையில் அடக்குவது தவறில்லை என்பர் சான்றோர்கள். காதலைத் தூயமுறையில் நுனித்தறியும் ஆற்றல் கொண்டு வாழ்ந்த சங்க மாந்தரின் வாழ்வியலை ஆய்வுசெய்யும் நோக்கில் இக்கட்டுரை அமைகின்றது.

நெஞ்சம் ஒருமித்தல்

அன்பினால் கூடிய உள்ளப்புணர்ச்சியே களவொழுக்கத்தின் சிறப்பினை எடுத்துரைக்க வல்லதாகும். இருமணம் பலமுறை சந்தித்தாலும் எவ்வித உறவும் இல்லாது நெருங்கிய நெஞ்சமோடு ஒருமித்து பிரியாது காணப்படும் தன்மையினை குறுந்தொகையில் காணலாம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற வாழ்வியல் தத்துவங்களை அகஇலக்கியங்கள் வழி அறியலாம்.

“யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழியறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.” (குறுந்: 40)

இப்பாடல் வழி அன்புடைய நெஞ்சம் திருமணத்தில் இணைய கணவனும் மனைவியும் பெற்றோரால் நிச்சயிக்கப்பட்டு அடுத்த கண்ட இல்லற வாழ்வை நாடும்படி தமிழர் மணமுறை வகுக்கப்படுகின்றது. காதல் உணர்ச்சி ஆன அன்பின் ஐந்திணை தான் இன்பத்திற்கான அடிப்படையாக அமையும் என்பது வெளிப்படை.

இடந்தலைப்படுதல்

முதல்நாள் சந்தித்த தலைவன் மீண்டும் தலைவியை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும். இதனை இடந்தலைப்பாடு என்று இலக்கணங்கள் அறிவுறுத்துகின்றது. தலைவன் தலைவி தன்னுடன் பேச பலவாறாக காதல் மொழிகளை எடுத்துரைப்பது மரபாகும். தாமாக முன்வந்து ஆடவன் தனது காதல் உணர்வை வெளிப்படுத்தும் உரிமை அன்றைய சமூகத்தில் வழக்கமாக இருந்தது. இருப்பினும் காமம் வரம்புஎல்லை மீறி அமைந்ததாக இலக்கியத்தில் பதிவுகள் குறிப்பிடவில்லை. நற்றிணையில் தலைவி மீண்டும் தலைவனைக் காணும் போது நாணத்தால் தலை கவிழ்கின்றாள். அன்றைய சமூகத்தில் பெண்கள் வெளிப்படையாகக் காதலைச் சொல்வது மரபன்று என்பது திண்ணம். இது குறித்து நற்றிணையில்,

“சொல்லின் சொல் எதிர் கொள்ளாய் யாழ நின்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ..” (நற்: 39)

என்ற மருதன் இளநாகனார் பாடல் இடந்தலைப்பாட்டின் மகத்துவத்தை எடுத்தியம்புகின்றது எனலாம்.

மற்றொரு பாடலில், தலைவி தனது தோழியுடன் சேர்ந்து ஓரை விளையாடாது, நெய்தல் பூவைத் தழையாக அணியாது தனித்து இருக்கின்றாள். அப்போது வணக்கத்துடன் தலைவன் வந்து நல்லழகு கொண்ட பெண்ணே! கடல்பரப்பில்விருப்பம் கொண்டு வாழும் தெய்வம் நீயா? அல்லது கடற்பரப்பில் உறைகின்ற பரதவரின் மகளோ? இனியாகிலும் சொல் பெண்ணே என்று வினாக்களைத் தலைவி பால் தொடுக்கின்றான் தலைவன்.

“ஒள் இழைமகளிரொடு ஓரையும் ஆடாய்
வள் இதழ் நெய்தற் தொடலையும் புனையாய்
விரி பூங் கானல் ஒரு சிறை நின்றோய்
யாரையோ நிற் தொழுதனெம் வினவுதும்
..........அதன் எதிர்
முள் எயிற்று முறுவல் திறந்தன.........” (நற்: 155)

என்ற பாடல்வழி தலைவியைக் காதல்மொழியால் தலைவன் வர்ணிக்கும் காட்சியினை அறியமுடிகின்றது.

அலர்

ஐந்திணை ஒழுக்கத்தில் களவு நெறியிலிருந்து கற்பாக மாறாகும் தன்மைக்கு அலர் என்பர். வெளிப்படையாக காதல் பேசப்படும். இருவரின் காதல் ஒழுக்கம் பற்றி ஊர்ப்;பெண்டிர் வாய்க்குள் பேசினால் அது அம்பலாகும். காதல் பரவாமல் மறைமுகமாக இருக்கும். ஊரார்க்கு களவினை வெளிப்படுத்துவது அன்றைய சமுதாய நெறிக்கு நல்லதாகவே இருந்துள்ளது. பழிச்சொல்லை வெளிப்படையாகப் பேசும் துணிவு பெண் சமூகத்திற்கு பிறவிக்குணமாக இருந்தமையை,

“வெவ் வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினும்.........”(அகம்: 50)
“வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சி......”(குறுந்: 373)

“மலர் அணிகண்ணிப் பொதுவனோடு என்றண்ணி
அலர் செய்து விட்டதிவ் வூர்....”(கலி: 105)

என்ற வரிகள் மூலம் ஊர்ப்பெண்டிர் பரப்பும் அலரால் பல நன்மைகள் களவில் ஏற்படுகின்றது எனலாம். காமத்தின் மிகுதியான தன்மை அலரின் வழி வெளிப்படும் என்பர். பயஉணர்வாக இருந்தாலும் அலர் ஊருக்கு உண்மை புலப்படுத்துவதால் தலைவிக்கு இன்பமாகவே அமைகின்றது. இன்னும் அலரைப் பொருட்படுத்தாது நாணமே மேவிட தலைவனை இடித்துரைக்கின்றாள் தோழி,

“மாணா ஊர் அம்பல்அலரின் அலர்க என
நாணும் நிறையும் நயப்பு இல் பிறப்பு இலி
பூண் ஆகம் நோக்கி இமையான நயந்து நம்
கேண்மைவிருப்புற்றவனை எதிர் நின்று
நாண்அடப் பெயர்த்தல் நயவரவு இன்றே...”(கலி:60)

என்பதன் வழிதிருமணமே தலைவனுக்குக் கடைசி வாய்ப்பாக தோழி எடுத்துரைக்கின்றாள். ஆடவர்கள் களவினை நீட்டிக்க விரும்புவது இயல்பாகும். ஆயினும் அம்பலும் அலரும் ஒருசேர கலந்து பெருகியமையால் அகத்திணை மரபுப்படி வரைவே தக்கதாக எள்ளி நகைக்கின்றாள் தோழி.

மற்றொரு பாடலில், தலைவியின் களவு வெளிப்பட்டாலும் தாய் தனது மகளினை விட்டுக்கொடுக்க மறுக்கின்றாள். உடன்போக்கு மேற்கொண்ட தலைவியை எண்ணி வருந்தினாலும் வழியின் அருமை எண்ணி மனம் கலங்குவது இயல்பாகும். அகநானூறு;றில் ஊர்ப்பெண்டீரை வஞ்சித்து தனது மகளின் பெருமிதமாக வாழ்த்தும் பண்பு இதோ,

“கௌவை மேவலர் ஆகி இவ் ஊர்
நிரையப் பெண்டிர் இன்னா கூறுவ
புரைய அல்ல என் மகட்கு எனப் பரைஇ........”(அகம்:95)

என்பதன் வழி இவ்வூர் பெண்டிர் சொல்லும் குறைகளை எண்ணி வசைமொழியினைத் தூற்றுகின்றாள் அன்னை.இங்ஙனம் ஊரார் வழி அலர் அம்பல் எழுந்தாலும் கற்புநெறிவழி ஒழுகுதலே சிறந்த பண்பாம். சாடையாகவும் நேராகவும் ஊரார் பழிச்சொல் கூறுவதைக்கேட்டு அன்னை சினம் எழாது இருந்தாலும் தலைவியின் வாயினாற் கூற அஞ்சினமை இப்பாடலில் சித்திரிக்கப்படுகின்றது.

நற்றாய் புலம்பல்

தலைவி தனது மனம் நாடும் தலைவனோடு உடன்போக்கு செல்வது வழக்கமாகும். அங்ஙனம் உடன்சென்றமை எண்ணி செவிலியும் நற்றாயும் புலம்பி வருந்துவதுண்டு. இளமையில் செல்வவளம் கொண்டு வளர்த்த அன்னையை விட்டு யவரும் அறியாத கானகம் நோக்கி செல்வது எண்ணி தாயர் மிகவும் வேதனை அடைகின்றனர். செல்வக்குடியில் பிறந்த பெண் குமரிப்பருவம் வாய்த்தவுடன் தாமாக முடிவெடுக்கும் உரிமை அன்றைய சமூகத்தின் மரபாகும். தலைவியின் நடைஅழகினை எண்ணி வருந்தும் காட்சி இதோ,

“பொன்போல் மேனித் தன் மகள் நயந்தோள்?
கோடு முற்று யானை காடுடன் நிறைதர
நெய் பட்டன்ன நோன் காழ் எஃகின்
செல்வத் தந்தை இடனுடை வரைப்பின்
ஆடு பந்து உருட்டுநள்.....................”(நற்:324)

“ சீர் கெழு வியன் நகர்ச் சிலம்ப நக இயலி
ஓரை ஆயமொடு பந்து சிறிது எறியினும்....
நலம் புனைந்து எடுத்த என் பொலந்தொடிக் குறுமகள்
அறனிலாளனொடு இறந்தனள் ........” (அகம்: 219)

இங்கு தலைவி விளையாடிய வீட்டின் முற்றில் மற்றும் மரநிழல் கண்டு தாய் வருந்தும் பாங்கினை அறியலாம். அறநெறி இல்லாமல் தலைவன் தனது மகளை அழைத்துச் சென்றமை எண்ணி நெஞ்சம் வருந்துகிறாள். வளர்த்த தாயாக இருந்தாலும் தன் மகளை த் தலைவன் கூட்டிச் சென்றமையை எண்ணி மனதார கவலை கொள்ளும் பாங்கினை ஈண்டு அறியலாம்.

ஐங்குறுநூற்றில் பெற்ற தாய் தனது மகள் உடன்போக்கு சென்றமை கண்டு புலம்புகையில்,

“தன் அமர் ஆயமொடு நன் மண நுகர்ச்சியின்
இனிது ஆம்கொல்லோ தனக்கே பனிவரை.....
வயக்குறு வெள் வேலவற் புணர்ந்து செலவே?” (ஐங்: 379)

என்ற பாடல்வழி புணர்ந்துடன் போகிய தனது மகள் முன்பே சொல்லியிருந்தால் தான் விரும்பும் சுற்றத்தாருடன் நாமே திருமணம் செய்து வைத்திருக்கலாம். அன்றி உடன்போவது இனியது அல்லவா என தாய் நொந்து புலம்பும் காட்சி ஈண்டு புலனாகிறது. இதன்வழி தலைவியின் களவுவாழ்க்கை முன்னரே தெரிந்திருந்தால் பெற்றோர் மனமுவந்து திருமணம் செய்து வைக்க முற்படும் நிலையை அறியலாம். பெண்விரும்பிய கணவனை அடையும் உரிமை அன்றே இருந்துள்ளமை தெளிவாகின்றது.

மணமுறை

திருமணம் நிகழ்த்தும் விதமாக முதலாவதாக பெண் பார்க்கும் படலம் அமைவதுண்டு. பருவம் வாய்த்தபின் இயல்பாக பெற்றோர்கள் மணம்பேசுவர். பெரியோர்கள் முன்னிலையில் சமுதாய நெறிப்படி கற்பைக் காத்துக்கொள்ள நொதுமலர் வரவு நிகழ்கின்றது. இத்தகு மரபில் வெளிப்படவரைதலும் வெளிப்பட வரையாமையும் நடைபெறும் என்பர் இலக்கண நூலார். களவு அறியாமலும் பெற்றோர்கள் தனது மகளுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு நிகழ்த்துவது கண்டு தலைவியும் தோழியும் அஞ்சுவது இயல்பாம். குறுந்தொகையில், தலைவியைப் பெண்பார்க்கவரும் உறவினரை பெற்றோர்கள் உவகையுடன் வரவேற்று உபசரிக்கும் காட்சி இதோ,

“.......நம்மூர்ப்
பிரிந்தோர்ப் புணர்ப்போர் இருந்தனர் கொல்லோ
தண்டுடைக் கையர் வெண்டலைச் சிதலவர்
நன்றுநன் றென்று மாக்களோடு
நின்று பெரிதென்னும்.............” (குறுந்: 146)

“எந்தையும் யாயும் உணரக்காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்
மலைகெழு வெற்பன் தலைவந் திரப்ப
நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே...
நீடிரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மைய லூரே.” (குறுந்: 374)

“மென் தோட் கிழவனும் வந்தனன் நுந்தையும்
மன்றல் வேங்கைக் கீழ் இருந்து
மணம் நயந்தனன் அம் மலைகிழவோற்கே”(கலி: 41)

இங்கு தலைவி விரும்பிய தலைவனது உறவினர் வீட்டிற்கு நரைமுடித்த பெண்களோடு வருகை புரிவதால் திருமணத்திற்குத் தடை எதுவும் இருக்காது எனத் தோழிதலைவிக்கு ஆறுதல் மொழிகின்றாள். இதன்வழி தலைவியின் பெற்றோர் பெருமைபட மகிழ்வதால் இருதரப்பினருக்கும் சம்மதம் கொண்டு மணமுறை நிகழ்வது தெளிவாகின்றது.இதன்வழி களவுவெளிப்படாமலே மணம்செய்து கொள்ளும் காட்சி அகப்பெண்டீரின் மரபாக அமைகின்றது. பெற்றோர்கள் தலைவியின் களவுஅறிந்தும் களவு அறியாமலும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கும் முறையினை மேற்கண்ட பாடல் வழி அறியமுடிகின்றது.

பொய்யும் வழுவும் தண்டனையே

சங்ககாலத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற வரையறை இருந்தமைக்குக் காரணம் காதலர் வாழ்வில் கற்புநெறிபட வாழவேண்டும் என்பதே. ஒழுக்கநெறித் தவறி வாழ்வோர் குலமரபினராக இருந்தாலும் அவர்களுக்கு கொடுந்தண்டனை வழங்குவதைக் கூட தவறவில்லை. பழந்தமிழர்கள் செய்த தவறினை செய்யாமல் மறைப்போரைக் குற்றவாளியாகக் கருதி அவர்களுக்கு முன்பு தண்டனை வழங்கி உள்ளனர். காதலுக்கு எவ்வளவு சுந்திரம் கொடுத்துள்ளார்களோ அதே போன்று ஒழுக்கத்துக்கு இழுக்கு ஏற்பட்டால் அதனைக் கண்டு வெகுண்டு சீறும் பண்பு இதோ,

“.......பெரும் பெயர்க் கள்ளர்
திருநுதற் குறுமகள் அணி நலம் வவ்விய
அறனிலாளன் அறியேன் என்ற
திறன் இல் வெஞ் சூள் அறி கரி கடாஅய்
முறி ஆர் பெருங் கிளை செறியப் பற்றி
நீறு தலைப்பெய்த ஞான்றை........” (அகம்: 256)

மேற்கண்ட பாடல் வழி கள்ள+ர் என்னும் ஊரில் வாழ்ந்த சிறுமியை ஒருவன் தன் வலிமையால் பெண்மையைக் கவர்ந்து கொண்டான். அவளை ஊரார் முன்னிலையில் எனக்குத் தெரியாது என்று கூறி சூளுரைத்தான். பின்னர் ஊரார் அவன் செய்த குற்றத்தைக் கண்டறிந்து கொதிக்கும் சுண்ணாம்பு நீற்றை அவன் தலையில் கொட்டி தண்டனை வழங்கினர். இங்ஙனம் அன்றைக்கே பெண்ணின் கற்பினைச் சூறையாடிய நபருக்குத் தக்க தண்டனைகள் வழங்கும் சட்டவியல் அணுகுமுறை நம்மை வியக்க வைக்கிறது. தவறிழைத்தோர் யாராக இருந்தாலும் ஊர்கூடி ஒன்றிணைந்து தண்டனைகள் வழங்குவது அன்றைய சமூகத்தின் ஒழுக்கநெறியைப் பறைசாற்றுகின்றது எனலாம். அகஇலக்கியத்தின் மதிப்பு குறையாமல் இருக்க தவற்றிற்கு தண்டனை கொடுப்பது சிறப்பாகும்.

கற்பு

கற்பானது கொடுப்போர் இன்றியும் அமையும் என்று இலக்கணநூலார் வரையறை செய்வர். அதாவது தமிழ்ச்சமுதாய முறைப்படி திருமணச்சடங்கு பெற்றோர் முன்னிலையில் நடப்பது வழக்கமாகும். ஆனால் கரணமொடு புணரும்போது கொடைக்குரியோர் இடம்பெறாமல் இருப்பதை,

“கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
புணர்ந்துடன் போகிய காலை யான” 3(தொல்.1089)

என்ற நூற்பா எடுத்துரைக்கின்றது.

ஐங்குறுநூற்றில் தலைவியை விரும்பிய தலைவன் கரண வகையால் திருமணம் செய்துள்ளமையை உறவினருக்கு அறிவிக்குமாறு கூறுகிறான். இதைக்கேட்ட தோழி முன்னரே தாய்க்கு தெரிவித்து விட்;டதாக மறுமொழி கூறுவதனை,

“வரைந்தனை நீ எனக் கேட்டு யான்
உரைத்தனென் அல்லெனோ அஃது என் யாய்க்கே?” (ஐங்:280)

என்ற வரிகள் சுட்டுகின்றன. இருவரும் வளமையோடு கற்புநெறி மாறாது வாழும் நெறியினை அகத்திற்குரிய நன்மதிப்பாக அறியமுடிகின்றது.

இன்னும் மனைவியின் கடமை செவ்வனே நடைபெறுவதால் கணவன் இளமையோடு இன்பமாக வாழ்கிறான். அதாவது ஆடவர் வாழ்வில் கவலையின்றி ஆரோக்கியமாக வாழும் காட்சி புறநானூற்றில் பதிவுசெய்யப்;பட்டுள்ளது. பிசிராந்தையார் என்ற புலவர் ஆண்டு பலவாயினும் இளமையான தோற்றத்துடன், தான் இருப்பதற்கான காரணத்தைச் சொல்லும் போது, இல்லறப் பண்புகள் அனைத்தும் நிரம்பியவளாய்த் தன் மனைவி இருப்பதால் தான் தனது வாழ்வு மகிழ்ச்சியுடன் இருப்பதாகத் தெரிவிக்கின்றார். இதனை,

“யாண்டு பல ஆக, நரைஇல ஆகுதல்
யாங்கு ஆகியர்? என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியொடு, மக்களும் நிரம்பினர்,
யான் கண்டனையர் என் இளையரும்.....................” (புறம்.191)

என்ற பாடல் அடிகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகின்றது. இக்கூற்றினை வள்ளுவப்பெருந்தகையும்,

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை” 4 (குறள்.53)

என்று குறிப்பிடுவதன் வாயிலாக, மனைவி சிறப்புடையவளாக அமைந்தால் தான் ஒருவனுடைய வாழ்வு சிறப்புடையதாகும் என்பது புலனாகிறது.

தொகுப்புரை

    தலைவன் மற்றொரு நங்கையைக் கண்டு முந்தைய பெண்ணை கைவிட்டதாக இலக்கிங்களில் சான்றுகள் பகரவில்லை.  ஐந்திணைகள் வழி காதலர்கள் அறத்தோடு வாழ்ந்து எல்லை மீறாத வண்ணம் ஒழுக்கநெறியோடு வாழ்ந்த குறிப்பு இலக்கியத்தின் வெற்றியைப் பறைசாற்றுகின்றது.  தோழியின் துணைவழி தலைவன் விரும்பிய தலைவியை அடைந்தானே ஒழிய பகைத்துக் கொண்டு விலகியதாக சான்றுகள் இல்லை.  தலைவியின் உடன்போக்கு எண்ணி பெற்றோர்கள் மனம் வருந்தினார்களே அன்றி தலைவனைத் தாக்கி அழித்ததாகக் குறிப்பில்லை. இருப்பினும் தலைவியின் களவு அறிந்தால் பெற்றோர் உடன்பட்டு மணமுடித்து தந்திருக்கலாம் என்று தாய் புலம்பு காட்சி பெண்ணின் காதலுக்கு முழுஉரிமை பெற்றோர்கள் அளிப்பது அகத்திணைக்குரிய நற்பண்பாகும்.

தலைவி பெற்றோர்களுக்காக விரும்பிய தலைவனை விட்டு வேறொரு ஆடவனை திருமணம் செய்ததாக இங்கு மரபு இல்லை. உடன்போக்கு மேற்கொண்ட இருவரையும் பெற்றோர்கள் வெறுத்து ஒதுக்கியதாக இலக்கியத்தில் சான்றில்லை.  காதலித்த பெண்ணை கைவிட்ட ஆடவருக்கே அன்றைய சமூகம் தண்டனை அளித்து வெறுப்பது அகத்திற்கு எதிரான செயலாக உள்ளது.  மனைவி இல்லற கடமைகளைச் செவ்வனே செய்தமையால் ஆடவருக்கு நரை தோன்றவில்லை. பெண்கள் கற்பு நெறி வழாது என்றும் இளமையோடு ஆடவர் வாழ உறுதுணை புரிந்த குறிப்பு புறப்பாடல் வழி அறியமுடிகின்றது.

துணைநூற்பட்டியல்

ச.வே. சுப்பிரமணியன் தெளிவுரை - தொல்காப்பியம் எழுத்து சொல் பொருள்- சாரதா பதிப்பகம், சென்னை.
மகேஸ்வரி, திருக்குறள் மூலமும் தெளிவுரையும்- மகேஸ்வரி ஆப்செட் காலண்டர்ஸ், சிவகாசி.
குறுந்தொகை: மூலமும் விளக்கமும் - இரா.இராகவையங்கார் (ஆசிரியர்) , கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
கலித்தொகை - ஆசிரியர்: புலியூர் கேசிகன் - பாரி நிலையம் , சென்னை
புறநானூறு - புலியூர்க் கேசிகன் (ஆசிரியர்) ச் , கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
நற்றிணை, அ.ப.பாலையன் (ஆசிரியர்)  , கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்
அகநானூறு மணிமிடைப்பவளம் (மக்கள் பதிப்பு தெளிவுரையுடன்) - புலியூக்கேசிகன், பாரி நிலையம், சென்னை
ஐங்குறுநூறு] - புலியூர்க் கேசிகன்  , கௌரா பதிப்பகம்/சாரதா பதிப்பகம்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.