- எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி -
முன்னுரை    

கரிசல் இலக்கியத்தின் வழியாகக் கிராமிய மக்களின் எளிய வாழ்வியலைத் தம் எழுத்தின் வழியாக வெளிப்படுத்தியவர் எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி. இவர் தமது 21வது வயதில் தனது முதல் சிறுகதையான ‘பரிசு’ எனும் சிறுகதையினை எழுதினார். அச்சிறுகதை செம்மலர் இதழில் வெளியானது. இதைத் தொடர்ந்து அவரது சிறுகதைகள் கல்கி, ஆனந்தவிகடன் போன்ற ஜனரஞ்சக இதழ்களில் வெளிவரத் தொடங்கின. இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் ஆறு நாவல்களையும், ஆறு குறுநாவல்களையும், ஒரு கட்டுரைத் தொகுப்பையும் எழுதித் தமிழன்னைக்கு அணிசெய்துள்ள இவருக்கு மின்சாரப்பூ சிறுகதைத் தொகுப்புக்காக 2008 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர்களுக்குச் சமூகம் மற்றும் அரசியல் பார்வை தேவை என்பதை வலியுறுத்தும் இவர், நுட்பமான அரசியல் அறிவாளியாக விளங்கியதுடன் தீவிர இடதுசாரி சிந்தனையாளராகவும் இயங்கியுள்ளார். இத்தகைய சமூக சிந்தைனை கொண்ட படைப்பாளியான மேலாண்மை பொன்னுச்சாமியின் சிறுகதைகளில் காணப்படும் குடும்பம் குறித்தான கருத்தியல்களை, உறவுகளை, சிந்தனைகளை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

குடும்பம்

ஆளுமைப் பருவம் எய்திய ஆணும் பெண்ணும் உரிய சமூக அங்கிகாரத்துடன் கூடி வாழ்வதே குடும்பம் எனப்படுகின்றது. இத்தகைய அமைப்பில் கணவன், மனைவி, இவர்களின் பிள்ளைகள் ஆகியோர் அடங்குவர். இத்தகைய குடும்பம் ஒரு தனி அலகு அல்லது தனிக்குடும்பம் என்று வழங்கப்படுகின்றது. ஒன்றுக்கு மேற்பட்ட இத்தகைய குடும்பங்கள் ஒன்றிணைந்து இரத்த உறவுடைய ஒரு தலைமையின் கீழ் வாழ்வது கூட்டுக் குடும்பமாக அறியப்படுகின்றது.

“மனித சமுதாயத்தில் இரத்தத் தொடர்புடையவரும் பொதுவாக ஒரே வீட்டில் வசிப்பரும் குறிப்பாகப் பெற்றோரும் குழந்தைகளும் அடங்கிய ஒரு குழுமமே குடும்பமாகும்” (Collier's Encyclopedia, Vol – 9, P.546) என்று குடும்பத்திற்கு இலக்கணம் கூறுகிறது காலர்ஸ் என்சைக்குளோபிடியா. மேலும், சமுதாயத்தின் அடிப்படையாகக் குடும்பம் விளங்குகிறது. ஆணும் பெண்ணும் திருமணத்தால் இணைந்து கணவன் மனைவியாகி, இல்லறம் நடத்தி மக்களைப் பெற்று சுற்றத்தோடு சேர்ந்து வாழ்வது குடும்ப வாழ்வின் தனிச்சிறப்பாகும்.” (மா. இராமச்சந்திரன், மா.பா.குருசாமி நாவல்களில் குடும்பம், ஆய்வுப் பொழில், ப.270) என்று மா. இராமச்சந்திரன் குடும்பம் குறித்த தனது கருத்தினைக் குறிப்பிடுகின்றார்.

கணவன் – மனைவி

ஒரு குடும்பத்திற்கு அச்சாணியாக விளங்குபவர்கள் கணவனும் மனைவியும் ஆவர். இவர்களே பிற உறவுகளோடு சேர்ந்து குடும்பம் எனும் காலச்சக்கரம் நகருவதற்கு அடிப்படையாக விளங்குகின்றனர். பொதுவாகத் தமிழர்களின் குடும்ப அமைப்பானது பாசப் பிணைப்பையும் அதனுடன் தொடர்புடைய உணர்ச்சிகளையும் அதிகமாகக் கொண்டு விளங்குவதாகும். குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்துவிட்டால் பிற உறவினர்கள் அனைவரும் தவித்துப் போய்விடுவர். இவை எல்லாத் தமிழ்க் குடும்பங்களிலும் இயல்பாகக் காணக்கூடியதாகும். அதேபோல் கணவன் மனைவிக்கு இடையே நடக்கின்ற உறவின் நெருக்கம், சிறு சிறு சண்டைகள் போன்றவையும் நம் குடும்பங்களில் தவிர்க்க இயலாத ஒன்றாக ஆகிவிடுகின்றது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். அந்தவகையில் மேலாண்மை பொன்னுச்சாமியின் ‘கண்ணா மூச்சி’, ‘அவனாகி’ ஆகிய இரண்டு சிறுகதைகள் கணவன் மனைவி இடையிலான உறவுக்குச் சான்றாக விளங்குகின்றன.

தன்னைக் கடிந்துகொண்டு கோபப்பட்டு அடித்துவிட்டு வெளியில் சென்று இன்னும் வீடு திரும்பாமல் இருக்கும் தனது கணவனை நினைத்து வருந்தும் மனைவி, தன் மகனை அழைத்து, அவனை அழைத்துவரச் சொல்லுகின்றாள். இதனை,

“பாடுபட்ட மனுஷன், இன்னும் சாப்பிடலடா

போய்க் கூட்டிட்டு வா, அய்யா சாப்பிட வேண்டாம்?”

(பொன்னுச்சாமி, கண்ணா மூச்சி, சிபிகள், ப.82)

என்று கணவன் மீது கரிசனம் காட்டும் மனைவியின் அன்பினை வெளிப்படுத்தும் எழுத்தாளர், தன்னுடன் கோபப்பட்டுக் கொண்டு சாப்பிடாமல் கிடக்கும் மனைவியைப் பார்த்து, அவளைச் சாப்பிடச் சொல்லும் கணவனைக் நம் கண்முன் நிறுத்துகின்றார். இதனை,

“அழாதே முத்து…. சாப்பிடாம கெடந்து

என்னைக் கொல்லாதே…”    (பொன்னுச்சாமி, அவனாகி, தாய்மதி, ப.81)

என்னும் வரிகளால் அறியமுடிகின்றது. கணவன் மனைவிக்கு இடையில் பிணக்குகள் வருதல் இயல்பானது என்பதும் அதனை அப்போதைக்கு அப்போது தீர்த்துக்கொள்ளுதல் வேண்டும் என்பதும் எழுத்தாளரின் கருத்தியலிலிருந்து உணர்ந்துகொள்ள முடிகின்றது.

குழந்தைகள்

கணவன் மனைவிக்கு அடித்தபடியாகக் குடும்பத்தில் முக்கியமாக அங்கம் வகிப்பவர் அவர்களின் குழந்தைகளாவர். இவர்களின் எதிர்காலம் குறித்தத் திட்டமிடலிலும் கல்விக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்திலுமே பெரும்பான்மையான பெற்றோர்களின் வாழ்க்கையானது கரைந்துபோகின்றது எனலாம். இந்த சூழலில் எளிய மனிதர்களாய் இருக்கும் தாய், தந்தையருக்குப் பிள்ளைகளாய் வாய்க்கின்ற குழந்தைகள் தங்களின் அன்றாட தேவைகளுக்கே அல்லல்படுகின்ற சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். என்னதான் கடினமாக உழைத்தாலும் தங்கள் பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றக் கூடிய சக்தியற்றவர்களாகவே பல பெற்றோர்கள் விளங்குகின்றனர்.

பள்ளியில் அபராதம் கட்டுவதற்காக ஐம்பது பைசாவைத் தன் தாயிடம் கேட்கின்றாள் சுந்தரி. தன்னிடம் பணம் இல்லாத சூழலில் கூலி வேலைக்குப் போகும் வேகத்தில் மகளை அடித்துவிட்டுச் சென்றுவிடுகின்றாள் சுப்புத்தாய். வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பும் அவள், தன் மகளைப் பார்க்கின்றாள். அப்போது, “மகளையே பார்த்துக் கொண்டிருந்த சுப்புத்தாய்க்கு நெஞ்சி கனத்தது. திணறியது. கண்ணெல்லாம் நெறுநெறுக்க நீர் கோர்த்துக்கொண்டு குபுக்கென்று அழுதுவிட்டாள்” (பொன்னுச்சாமி, தாளமுடியாத மன்னிப்பு, பூச்சுமை, ப.84) என்று எழுதுகின்றார் எழுத்தாளர். இதில் பிள்ளைகளுக்காகப் பாடுபடுகின்ற பெற்றோரின் இயலாமையைப் பார்க்க முடிகின்றது.

மாமியார் – மருமகள்

குடும்பம் என்று வந்துவிட்டாலே அங்கு மாமியார் மருமகள் ஆகிய உறவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. தன் மகனுக்குத் திருமணமாகித் தன் உரிமை பாசமெல்லாம் இன்னொரு பெண்ணுக்கு இயல்பாகச் செல்வதை எந்த தாயாலும் அவ்வளவு எளிதாக கடந்துசெல்ல முடிவதல்லை. இதன் காரணமாகவே பல வீடுகளில் மாமியார் மருமகள் சண்டையானது அணையா விளக்காக எரிந்துகொண்டே இருக்கின்றது எனலாம். மாமியார் மருமகள் சண்டையை, “அம்மாவுக்கும், பார்வதிக்கும் ஏழாம் பொருத்தம், சுத்தமாய் ஒத்துவரவில்லை. எந்நேரமும் ஏட்டிக்குப் போட்டிதான். குத்தலும் குதர்க்கமுமாய்ப் பேச்சுக்களும், அழுகையும்தான். ஆத்திரமும் அங்கலாய்ப்புமான புலம்பல்கள். வீடே மூச்சுத் திணறும்” (பொன்னுச்சாமி, பந்தம், தாய்மதி, ப.154) என்று எழுதுகின்றார் எழுத்தாளர். இவ்வாறு ஓயாத சண்டையாக மாமியார் மருமகள் சண்டை சமூகத்தில் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. இது முற்றுபெறுவதாகத் தெரியவில்லை.

அண்ணன் – தம்பி

ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகளானாலும் வளர்ந்து தமக்கென்று குடும்பம் குழந்தைகள் என்று ஆனபிறகு அண்ணன் தம்பிகள் சிலநேரங்களில் எதிரிகளாகவும் சண்டைக்காரர்களாகவும் மாறிவிடும் சூழல் குடும்ப உறவுகளில் தவிர்க்கமுடியாததாக ஆகிவிடுகின்றது. பொதுவாகs சொத்தின் காரணமாகவே அண்ணன் தம்பிகளுக்கு இடையே சண்டைகள் அதிகமாக வருகின்றது என்பதை நடைமுறை வாழ்க்கையில் நாம் பார்க்கலாம். அந்தவகையில் அண்ணன் தம்பிக்கு இடையே நடக்கின்ற சண்டையை, “பெரும்பாலும் ராமசாமிக்கும், அவனது அண்ணனுக்கும் இடையில்தான் அடிக்கடிச் சண்டை நிகழும். சில சமயம் கைக்கலப்பு வரைக்கும் கூட போய்விடும்.” (பொன்னுச்சாமி, சமரச விலை, மானுடம் வெல்லும், ப.11) என்று எழுதுகின்றார் எழுத்தாளர்.

முடிவுரை

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்கள் மனிதர்களின் வாழ்வியல் கூறுகளை தம் படைப்புகளில் பல்வேறு வகைகளில் படம்பிடித்துக் காட்டுகின்றார். அவரின் நுணுகியப் பார்வையில் சமூகத்தில் இடுக்குகளில் மறைந்திருக்கின்ற பாசங்களையும், பகைகளையும், அன்பினையும், அழுகையையும், சுரண்டல்களையும், உழைப்பையும், போராட்டங்களையும், அடிமைத்தனங்களையும், சாதிய வன்முறைகளையும், சமத்துவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை அவரின் படைப்புகள் புலப்படுத்துகின்றன. அந்தவகையில் அவரின் குடும்பம் குறித்தான பார்வையில் மிகச் சில கூறுகள் மட்டுமே இக்கட்டுரையில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமியின் பரந்துவிரிந்துபட்ட குடும்பப் பார்வையை நோக்கும் போது குடும்பங்களின் மீதும் அக்குடும்பம் சிதைவுறாமல் சிறப்பாக இயங்க வேண்டும் என்னும் அவரின் சிந்தனையும் புலப்படுகின்றது.


துணைநின்ற நூல்கள்

நா. பார்த்தசாரதியின் நாவலில் குடும்பச் சிக்கல்கள், கோவிந்தராஜு, அ., பானுரேகா பப்ளிகேஷன்ஸ், சென்னை, 1996.

சிபிகள், மேலாண்மைப் பொன்னுச்சாமி, குமரிப்பதிப்பகம், நாகப்பட்டினம், ப.1994.

தாய்மதி, மேலாண்மைப் பொன்னுச்சாமி, மீனாட்சி புத்தகநிலையம், மதுரை, 1994.

மானுடம் வெல்லும், மேலாண்மைப் பொன்னுச்சாமி, கரிகாலன் பதிப்பகம், மேலாண்மறைநாடு, 1981.

பூச்சுமை, மேலாண்மைப் பொன்னுச்சாமி, மீனாட்சி புத்தகநிலையம், மதுரை, 1992.

Collers Encyclopaedia, Collins, Macmillion educational Company, New York, 1980.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.