-*  இக்கட்டுரையை எழுதியவர்: -  பி.ஆர்.இலட்சுமி , (முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்), பி.லிட்.,எம்.ஏ , (தமிழ்,மொழியியல், இதழியல் மற்றும் மக்கள் தகவல் தொடர்புத்துறை ) எம்ஃபில் , பிஎச்.டி.,டிசிஎஃப்இ , புலவர் , பிஜிடிசிஏ , வேல்ஸ் பல்கலைக்கழகம், சென்னை-117. -


ஆய்வுச் சுருக்கம்

கணினி உருவானபோது தமிழ்க் கணினிக்கான ஏற்பாடுகளும் 1980களில் தொடங்கப்பட்டு வந்துள்ளன. முதன்முதலில் தமிழை இணையத்தில் சிங்கப்பூரைச் சேர்ந்த நா.கோவிந்தசாமி.1995 அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த திரு.பாலாபிள்ளை மடலாடுதலின் வழி இணையத் தமிழ் வளரும் என்ற நோக்கில் தமிழ்.நெட் என்ற இணையத் தளத்தை உருவாக்கினார். தமிழர்கள் மொழிப் புலமைக்காக இணையத்தில் தமக்குத் தெரிந்த செய்திகளைத் திரட்டி எழுதி வருகின்றனர்.(வலைப்பூக்கள்)

காரணம் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ,இந்தியா என கூகுள் பிரித்து வைத்து இணையத்தில் கொணர்ந்துள்ளது. இதனால், தமிழ் மக்களை வேறுபடுத்திப் பார்க்கும் வழக்கம் மிகுந்துள்ளது. பழமை மிகுந்த தமிழ்நாடு குமரிக்கண்டத்திலிருந்து அழிந்து உயிர்த்தெழுந்த நாடு என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. இருப்பினும் ஒவ்வொரு நாட்டினரிடையேயும் அவர்கள் பேசி வரும் தமிழ்தான் பழமையானது என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இதனால் சிக்கல்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதற்கான தீர்வுகள் இக்கட்டுரையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன.

குறிச் சொற்கள்

தமிழ்மொழி,எழுத்துருக்கள்,ஒருங்குறி,செய்தித்தாள்,கற்றல்,கற்பித்தல்

ஆய்வு நோக்கம்

தமிழ்மொழி மிகவும் பழமையானது. குமரிக்கண்டத்திலிருந்து பிரிந்து சிந்துவெளி நாகரிகம் அழிந்த காலம்முதல் சீதை பேசிய மொழி தமிழ் என்பது ஆய்வுகளால் உறுதி செய்யப்பட்டுள்ளன.

உலகெங்கிலும் வணிகம் தொடர்பாகப் பண்டைக்காலத்தில் மக்கள் பல இடங்களுக்கும் சென்று வந்துள்ளதால் தமிழ்மொழியின் வேர்ச்சொல் பலமொழிகளிலும் பரவியுள்ளது. இது குறித்து பரிதிமாற்கலைஞர், தேவநேயப் பாவாணர், கால்டுவெல் போன்ற அறிஞர் பலரும் எழுதியுள்ளனர். இந்தியநாட்டில் வாழ்ந்து வரும் தமிழர் இலக்கியங்களில் காணப்படுவனவற்றை இணையத்தில் எழுதுவது கிடையாது. ஏனெனில், ரிக், யசூர், சாமம், அதர்வணம் போன்ற வேதங்களுக்கு எல்லாம் முன்னோடியான தமிழில் பல செய்திகள் பொதிந்துள்ளன.

 உலகில் வாழும் தமிழர்கள் இலக்கியங்கள், மொழியியல், கோவில் கட்டிடக்கலை, சிற்பக்கலை, கல்வெட்டியல், சுவடியியல், அகராதி, மொழிபெயர்ப்பு போன்ற தமிழ் தொடர்பான பல துறைகளிலும் சிறப்பாக பல நூல்களையும் எழுதி வருகின்றனர். கணினித்தமிழ் வளர்வதற்கான செய்திகளை விளக்குவது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

எழுத்துருக்கள்

எழுத்துருக்கள் மேசைக் கணினியில் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும் இணையத்தில் 2010ஆம் ஆண்டு முதற்கொண்டு பிரபலமானது. இந்தியாவில் பெரும்பாலும் ஸ்ரீலிபி மற்றும் பாமினி எழுத்துருக்கள் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்மொழி வழியாக முரசு அஞ்சல் என்பதனை முரசு நெடுமாறன் அவர்கள் கொணர்ந்தார். தமிழ் மின்னஞ்சல் முறைகளும் இதனால் எளிமையாக்கப்பட்டுள்ளன.
யுனிகோட்(ஒருங்குறி) வருகையினால் இணையத்தில் தமிழ் படிப்பது 2010 ஆம் ஆண்டு முதல் எளிமையாக்கப்பட்டது. பெரும்பாலான தேடுபொறிகள் இணையத்தில் கிடைத்தபோதிலும் கூகுள் தேடுபொறியின் வழி தமிழக மக்கள் தங்களது தேவையினை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

பேச்சொலியைக்கேட்டு தானாகவே தட்டச்சு செய்து தரும் அளவு அறிவியல் முன்னேற்றம் அடைந்துள்ளது. தட்டச்சு தெரியவில்லை என்றாலும் கூகுள் பக்கம் சென்று நமது மின்னஞ்சலைத் திறந்து வைத்துக்கொள்ளவேண்டும். அதில் டாகுமெண்ட் என்று வரும். அதில் வரும் கூட்டல் குறியினைச் சொடுக்கினால் பக்கம் திறக்கும். பின்னர் டூல்ஸ் என்ற பக்கத்தைத் திறந்து பேச்சு என்பதைக் கிளிக் செய்யவேண்டும்.

நாம் பேசப் பேச எழுத்து வடிவில் கிடைக்கும் செய்திகளைப் பிழையில்லாமல் பார்க்கும் மென்பொருளுடன் வைத்து சரி செய்து கொள்ள வேண்டும். ஏனெனில் இந்த வசதியில் 75 சதவிகிதம் மட்டும்தான் பிழையின்றி கிடைக்கிறது. சரிவர நிறுத்தற்குறிகள் கிடைப்பது கிடையாது. மேலும் நமது உச்சரிப்பினைப் புரிந்து சொற்கள் சரிவரக் கிடைப்பது கிடையாது. என்எச்எம் கன்வெர்டரைப் பயன்படுத்தி நமக்குத் தேவைப்படும் எழுத்துருவில் மாற்றம் செய்து கொள்ளலாம்.

செல்லிடபேசியிலும், மடிக்கணினியிலும் தமிழ்மொழி

சிக்கல்கள்

1. அறிவியல் கருவிகளின் விலை அதிகம்,   
2. குறிப்பிட்ட வருடங்களுக்கு மேல் பயன்படுத்த முடியாதிருத்தல்

டிஜிடல் இந்தியா உருவாவதற்கான அடித்தளத்தை மக்கள் உருவாக்கி வருகின்றனர். இணையத்தில் வாட்ஸ்அப் ,டெலிகிராம், இன்ஸ்டாகிராம், ட்வீட்டர்,மெயில், பேஸ்புக் போன்ற குறுஞ்செயலிகளைத் தரவிறக்கம் செய்து அதன்வழியாக மக்கள் தங்களது அன்றாடத் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

ஆண்ட்ராய்டு தொலைக்காட்சி வசதி இருப்பதால் செல்லிடபேசியின் வழியாகச் செய்யும் அனைத்து வசதிகளையும் இவற்றினால் செய்ய இயலும். ஆனால் தமிழ்மொழியினைக் கையால் எழுதினால் அது தட்டச்சு வடிவில் கிடைக்கும் முறையினையும், வாயினால் பேசினால் தேடி எடுத்துத் தரும் வசதியினையும் பெரும்பாலான மக்கள் பின்பற்றுவது கிடையாது. புத்தகம் படிக்க என கிண்டில் என்ற கருவியும் கிடைக்கப்பெறுகிறது. செல்லிடபேசியிலும் மின்புத்தகங்களைத் தரவிறக்கம் செய்து கூகுள் டிரைவில் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

தீர்வுகள்

 அறிவியல் கருவிகளின் விலை அதிகமாக இருக்கின்ற காரணத்தினால் இந்தியா இன்னமும் முழுமையாக டிஜிடல் மயமாக்கப்படவில்லை. பொறியியல் கற்கும் மாணவர்கள் அறிவியல் கருவிகளைத் தயாரிக்கும் அளவு கற்றல்,கற்பித்தல் நிகழவேண்டும்.

இந்தியத் தயாரிப்புகள் தயாராகும்போது இயல்பாக அறிவியல் கருவிகளின் விலை குறைவாக் கிடைக்கும். இதனால் குடிசையில் வசிக்கும் இந்தியரும் அறிவியல் கருவியின் பயனை முழுமையாகப் பெற இயலும்.

கற்றல்,கற்பித்தலில் தமிழ்மொழி

சிக்கல்கள்

தமிழ்மொழி அறிவியல் கருவிகளில் வளர்ந்து வந்தாலும் கற்பித்தல் நிலையில் வகுப்பறைகளில் தமிழ்மொழி மிகவும் குறைவாகக் காணவப்படுகிறது. ஆசிரியர்கள் கணினியில் தமிழ்மொழியினைப் பயன்படுத்தி பயிற்சித்தாள் தயாரிப்பதைப் பெரும்பான்மையாக விரும்புவது கிடையாது. காரணம் தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பயன்படுத்துவதை வைத்துப் பெரும்பான்மையாகவும், இணையத்தில் கிடைக்கும் சில பயிற்சித்தாள்களை வைத்தும் கற்றல், கற்பித்தல் பணியினைச் செய்து வருகின்றனர்.

மாணவர்கள் அறிவியல் கருவிகளில் ஆர்வம் காட்டி திரைப்படம், இணைய விளையாட்டுகள் போன்றவற்றில் அதிகமாக ஈடுபட்டு படிப்பில் நாட்டமின்றி இருக்கின்றனர் என்பது பெற்றோரின் குறைபாடாக இருக்கிறது. அறிவியல் வளர்ச்சியைத் தடுக்க இயலாது. குழந்தைகளுக்கு வழிகாட்டுவதுதான் முக்கியமே தவிர அவர்கள் பயன்படுத்துவதை முழுக்க நிறுத்துவது அறிவுடைமை ஆகாது.

இது சிக்கலுக்கான தீர்வுக கிடையாது. ஒரு மொழியினைக் கற்கும்போதே அதற்கான அறிவியல் கருவிகளிலும் தமிழ் இருக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் ஒவ்வொருவரும் இயங்கவேண்டும். விண்வெளியில் பயன்படுத்தும் செயற்கைக்கோள் தமிழ்மொழியிலும் இயங்க வைக்கும் முறைமை மேலோங்கவேண்டும். செயற்கை நுண்ணறிவுத் திறனுடன் உருவாக்கப்படும் மனித இயந்திரங்களின் வரவு தீமையைத் தரும். இதை அறிந்து தமிழ்மொழிக்கணினி வல்லுநர்கள் செயலாற்ற முன் வரவேண்டும்.

தீர்வுகள்

வலது ஆள்காட்டி விரலைப் பயன்படுத்தி கணினியின் இடது மூலையில் உள்ள சிறு நாற்சதுரக் கட்டத்தைச் சொடுக்கினால் கணினி திறக்கும். திறந்தவுடன் நாம் தட்டச்சு செய்ய வேண்டிய எம்எஸ் ஆஃபிஸ் பக்கத்தைச் சொடுக்கினால் தட்டச்சு செய்யலாம். எழுத்துருவைக் கணினியில் தரவிறக்கம் செய்வது எப்படி என்ற வினாவினைக் கூகுளில் தட்டச்சு செய்தவுடன் விடை கிடைக்கும். எழுத்துருவைத் தரவிறக்கம் செய்த பின்னர் கணினியில் கண்ட்ரோல் பேனலைத் திறந்து ஃபாண்ட் என்ற ஃபோல்டரைத் திறக்கவேண்டும். தரவிறக்கம் செய்து வைத்துள்ள எழுத்துருக்களை நாம் அதில் இன்ஸ்டால் எனச் சொடுக்கினால் எழுத்துரு கணினியில் தட்டச்சிடத் தொடங்கலாம்.

ஆசிரியர்கள் தாம் விரும்பும் பயிற்சித்தாள்களை அவர்களே மாணவர்களின் கற்றல் திறனுக்கு ஏற்ற வகையில் தயார் செய்து கொள்ளலாம். எம்எஸ் ஆஃபிசில் இன்சர்ட் சென்றால் பிக்சர்ஸ்,ஷேப்ஸ், ஐகான் கிடைக்கும். இவற்றைப் பயன்படுத்தி தொடக்க் கல்வி நிலை கற்பித்தலை ஆசிரியர்கள் எளிமையாக்கலாம். டிரா என்ற குறிப்பைப் பயன்படுத்தினால் ஆசிரியர் பலவித வண்ணங்களில் எழுதலாம், வரையலாம்.

(Drawing for children free download)இது தவிர தாய்மொழியான தமிழ்மொழியில் பிற பாடங்களையும் மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு இணையத்தளம் பெருமளவு பயன் தருகிறது. இணையத்தளம் தொடக்கல்விக்கான இணையத்தளத்தைச் சிறப்பாக உருவாக்கி அமைத்துள்ளது. https://www.tamilvu.org

அதற்கான பாட நூல்களும் இணையத்தளத்தில் காணக் கிடைக்கின்றன.

எட்டு மணி நேர வகுப்பறையில் ஒரு மணி நேரம் எழுதுவதற்காக ஒதுக்கப்படுகிறது என்றால் பதினைந்து மணித்துளிகளாவது மாணவர்களின் எண்ணங்களுக்குப் பதில் கூறும் பெற்றோரும், ஆசிரியரும் இருக்கவேண்டும். குழந்தைகள் அப்போதுதான் அறிவியல் கருவிகளை நாடாமல் இருப்பர். பணத் தேவைகளுக்காகப் பெற்றோர் வெளியில் சென்று விடும்போது அறியாக் குழந்தைகள் அறிவியல் கருவிகளைத்தான் துணை தேடும்.

கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல் என்பது கற்றல்,கற்பித்தலின் படிநிலைகள் என ஆய்வறிஞர்களால் வரையறுக்கப்பட்டுள்ளன. கேட்டல், பேசுதல் திறனில் தெளிவுபெறும் மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கச் செய்வது செய்தித்தாளாகும். தொலைக்காட்சி வருகையினாலும், பள்ளிகள் காலைவேளைகளில் வெகு விரைவில் தொடங்கிவிடுவதால் மாணவர்கள் செய்தித்தாள் படிப்பதைத் தவிர்த்து விடுகின்றனர். இதனால் படித்தல்,எழுதுதல் திறனில் மாணவர்களின் நிலை பாதிப்படைகிறது. இதற்குத் தீர்வு செய்தித்தாள்களை மாணவர்களை வாசிக்க வைக்கவேண்டும். இணையத்தில் தினமணி, தினமலர், தினகரன், தி இந்து,தினத்தந்தி போன்ற பல நாளிதழ்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. வகுப்பறையில் மாணவர்களுக்கு நாம் இதைப் படிக்கக் கற்றுக் கொடுக்கலாம்.

மனிதர்களே இல்லாமல் இயந்திரங்கள் பணி செய்யும் நிலை முழுவதும் வராமலிருக்க தாய்மொழியில் கணினி தொடர்பான மென்பொருட்கள் முழுவதுமாக அமைவது அவசியமாகும்.

அவலோகிதம்.காம், சந்திப் பிழை திருத்தி, தமிழ் மொழி -ஒசிஆர் போன்ற வசதிகள் தமிழ்மொழிக்கு இருந்தாலும் ஆங்கில மொழியில் பணி வாய்ப்புகள் இருப்பதால் தமிழ்மொழியில் கற்றவர்களுக்குப் பணி வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. இன்னமும் வங்கி,கணக்கியல் துறைகளில் ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி அளிக்கின்றனர்.

முடிவுரை
மொழி என்பது வாழ்க்கைக்குத் தேவையானவற்றைக் கற்றுக் கொடுக்கும் இணைப்புப் பாலம். கணினி என்பது அறிவியல் கண்டுபிடிப்பின் அற்புதம். இரண்டாயிரம் முதல் கணினி தொடர்பாகப் பல ஆய்வறிஞர்கள் பல ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டும் இன்னமும் கணினியில் தமிழ்மொழி அடிப்படை நிலையில்தான் இயங்கி வருகிறது.

தமிழ் இலக்கியங்கள், மொழியியல், கல்வெட்டியல், சுவடியியல், அகராதியியல், கணினி மொழியியல், மொழிபெயர்ப்பியல், கலைகள் என அனைத்தும் தமிழ்மொழியில் இருப்பினும் பணி வாய்ப்பிற்கான மென்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு கல்லூரியிலேயே மாணவர்களுக்கு வர வேண்டும்.இந்நிலை அமைந்தால் மட்டும் கணினியில் தமிழ்மொழி வளர்ச்சி பெறும் என்பது இவ்வாய்வுக்கட்டுரையின் முடிவாகிறது.

ஆய்வுக்குப் பயன்பட்ட இணையத் தளங்கள்

1. https://www.valaitamil.com
2. https://www.infitt.org
3. https://www.tamilvu.org

ஆய்வுக்குப் பயன்பட்ட நூல்கள்

4. கணினித் தமிழ் வளர்ச்சியும் சவால்களும்-பகுதி-1,2(2021)
5. தமிழ் இணையக் கல்விக் கழகம், கோட்டூர்புரம், சென்னை-25

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.