முன்னுரை

மனித சமூகம் தொல் நிலையிலிருந்து இன்றைய நாகரீக நிலை வரை படிப்படியாக வளர்ச்சி பெறவையாகும். இவ்வளா்ச்சி குறிப்பிட்ட பண்பாட்டு மாறுதல் அல்லது சமூக மாறுதலாகும். இதில் பல்வேறு வழிபாடுகள் தொல்மரபைக் கடைபிடித்தாலும் சமூக அசைவியக்கத்தில் சில மாற்றங்களையும் சந்திந்துள்ளது.

இருப்பினும் வழிபடு தெய்வம் அதே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, அதன் வடிவங்களில் மட்டும் மாற்றங்கள் நடந்தேறிய வண்ணம் இருக்கிறது. இது ஒரு வகையான புறக்கிாியைக்கான தூண்டுதல் என்றும், சமூக அசைவியக்கதிற்கான அடையாள மென்றும், மக்களை ஈா்ப்பதற்கான உத்தியென்றும் கூறவேண்டியிருக்கிறது. அந்த வகையில் தொல் தமிழாின் வழிபாட்டு மரபுகளில் நெடுங்கல் வழிபாடு, இயற்கை வழிபாடு, குலக்குறி வழிபாடு ஆகியவற்றில் இன்று பல்வேறு மாறுதல்கள் தென்பட்டுள்ளன. அது குறித்து சங்கப்பனுவல்களோடு ஒப்புமை படுத்தி இன்றைய நடப்பியல் தன்மையில் அதன் நீட்சி எத்தகைய மாற்றுத் தளத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் மையமாகும்.

நடப்பியல்

நடப்பியல் என்பது கடந்த காலத்தைப் பற்றிய உள்ளீடுகளை விட நிகழ்காலச் சமூக வாழ்வும் அதில் வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் வாழ்வியலையும் பேசுவதாகும். இது பனுவலுருவாக்கத்தில் எதார்த்தவியலாக இருப்பதுடன், ஒரு நல்ல அளவுகோலாக விளங்குகிறது. தான் கண்டதைக் கண்டவாறு சொல்லுவதை விட விவரங்களை முறையாக அடுக்கி வெளித்தோற்றத்திற்கு தொியப்படுத்துகிறது. அதே நேரத்தில் செவ்வியல் கூறுகளையும் புனைவியல் கூறுகளையும் நிராகரிக்காமல் அதன் வழியாகவே பண்புகளை வெளிப்படுத்த முனைகிறது.

இத்தகைய நடப்பியல் இலக்கியப் பனுவல்களில் சமகால வாழ்வும் இயற்கையும் மிகச் சரியாகக் கூடுதல் குறைவின்றி, நுட்பமாகப் படைத்துக் காட்டுகிறது என்கிறாா் அ.இராமசாமி. கண்ணால் காண்பது அல்ல, அதனைத் தீர விசாரித்தறிய வேண்டும். காரண காரியங்களோடு வெளிப்படுத்துதல் வேண்டும். சமூகப் பின்புலமும் நடத்தைகளின் சுருக்க நிலைகளும் எதார்த்தத்தைச் சரிவரக் காட்டும். அதுவே நடப்பியலை நிவா்த்தி செய்யும். அவ்வாறு செய்வதன் மூலம் நடப்பியல் ஒரு முழுமை பெ்றறதாக மாறுகிறது.

பண்டைய தெய்வ வழிபாடு

பண்டையத் தமிழகத்தில் தெய்வ வழிபாடு தொல்காப்பிய மரபுப்படி (குறிஞ்சி - சேயோன், முல்லை - மாயோன், மருதம் - வேந்தன், நெய்தல் - வருணன்) என்ற திணைகளுக்குள்ளே பகுக்கப்பட்டிருந்தன. இதனை,

“மாயோன் மேய காடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்”1 (தொல். நூ. 951)

என்கிறது தொல்காப்பியம் இதனடிப்படையில் பண்டைய தமிழரிடத்தில் தெய்வ வழிபாடு அமைந்திருந்து. இம்மரபு இன்றைய நிலையில் “தெய்வங்களை வழிபடுவோாின் வாழ்க்கையிலிருந்து தொடங்குகிறது. ஒரு சமூகம் அதன் உணவுத் தேவை, இருப்பிடத்தேவை ஆகிய புறத்தேவைகள் எந்த முறையில் அமைகிறதோ அதற்குத் தகுந்தவாறு சமுதாய அமைப்பை உருவாக்கிக் கொள்வதுடன், தெய்வ அமைப்பையும் ஏற்படுத்திக் கொள்கின்றன”2 என்று நா.வானமாமலை (பழங்கதைகளும் பழமொழிகளும் ப.80) கூறுகிறார். இதனை, தொல்காப்பியா்,

“வழிபடு தெய்வம் நிற்புறம் காப்பப்
பழிதீா் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே“3

என்று வழிபடு தெய்வத்தை முன்னிருத்திக் கூறுகிறார். பண்டைய காலப் போர்மரபில் வழிபாட்டுச் சடங்குகள் நடத்தப்பட்டுள்ளன. தொல்காப்பியம் இதனை,

“காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு சிறப்பிற் பெரும்படை வாழ்த்தல் என்று
இருமூன்று வகையிற் கல்லொடு புணர”4 (தொல். நூ. 1006)

என்கிறது. இப்போக்கு போர்க்களத்தில் இறந்து பட்ட வீரரை நினைத்து நடுகல் நட்டு வழிபட்ட முறையை குறிப்பிடுகின்றது.

சங்ககால மரபில் வழிபாட்டு ஆதிக்கம்

மனித குல வரலாற்றில் ஆதியில் பெண்களே பூசாரிகளாக விளங்கினர். இதற்கான வலுவான சான்றுகள் சிலப்பதிகாரத்திலும் சங்க இலக்கியத்திலும் உள்ளன. சிலப்பதிகாரத்தில் வேட்டுவ வரியில் கொற்றவையின் பூசாரி சாலினி ஆவாள்.

கோவலனும் கண்ணகியும் மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது பாலைத்திணையில் கொற்றவை கோயில் அருகே இளைப்பாறினர். அங்கு பூசை செய்ய வந்த சாலினி கண்ணகியைப் பார்த்து "கொங்கமர் செல்வியே, குடமலையாட்டியே, தென்தமிழ்ப் பாவையே, உலகமெல்லாம் போற்றும் திருமாமணியாக வருவாய்"5 என்று வாக்குரைத்தாள். இன்றும். இதன் ஆதிக்கம் கிராமப்புறங்களில் அடித்தளப் பெண்கள் வாக்குரைப்பது சாலினி மரபின் தொடர்ச்சியாகும்.

ஆண் பூசாரிகளுக்கு முன்பு குறமகள்கள் (தேவராட்டிகள்) முருகனின் பூசாரிகளாக இருந்துள்ளதைத் திருமுருகாற்றுப்படை (228-249) கூறுகிறது. பின்னாளில் தான் முருகனுடைய பூசாரிகளாக வேலன்மார் வந்தனர்.

சங்க காலத்தில் குயவர்களும் பூசகர்களாக இருந்தனர் என்பதை "குயவன் இடுபலி நுவலும் அகன்றலை மன்றத்து"6 என்கிறது நற்றிணை (293). சங்ககாலத்தில் “வாலுவன்“ என்பாரும் பூசாரியாக விளங்கினார்கள் ஆதியில் வேலன்மார் முதன்முதலில் பூசாரியாக செயல்பட்ட போது அவர்கள் பெண் வேடமிட்டுப் பூசைகள் செய்தனர்.

அதன் பின்னர் மெல்ல மெல்ல பெண் வேடத்திலிருந்து விடுபட்டு ஆண்களாகவே நின்று பூசைகள் செய்தனர் இத்தகைய மனித குல வரலாற்றில் பூசாரியின் பரிணாமத்தைப் பேசுவதற்குத் தமிழ் இலக்கியங்களே மிகச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.

பழங்குடிகளின் வழிபாட்டு நீட்சி

சடங்கு வழிபாட்டினை பிரதானமாக கொண்ட கொழும்பு மட்டக்களப்பில் இன்றும் பூசாரிமார் சேலையினை சுற்றி உடுத்து முக்காடிட்டு பூசை செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவையும் தொல்குடி வழிபாட்டின் தொடற்சியாகவே உள்ளன.

இலங்கைப் பழங்குடிகளான வேடர் மரபிலும் பெண்களே ஆரம்பகால பூசாரிமார்களாக இருந்துள்ளனா். அசாம் மாநிலத்தில் பட்டிராபா பழங்குடிகள் “மானசா தேவி்“ வழிபாட்டில் பெண்பூசாரி (தியோதானி) பங்களிப்பு பிரதானமானது. சிலப்பதிகாரத்தில் பேசப்படும் சாலினி மரபு போன்று முக்கியமாகச் சாமியாட்ட நிலையில் பின் வரப்போவதை கணித்துக் கூறுதல் தியோதானியின் சிறப்பு அமைந்துள்ளன.

வலசமலை அதனைச் சுற்றியுள்ள பதினெட்டு கிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்கள் சித்திரை, வைகாசி மாதங்களில் ஊரின் எல்லை தெய்வமான பெண் தெய்வங்களைக் குடியழைத்தல்’ முறையில் எருதின் மேல்அள்ளக்கூடையில்’ (மூங்கிலால் செய்யப்பட்டது) வைத்துக் காடுகளுக்ககு எடுத்துச் சென்று வழிபடுகின்றனர். தெய்வங்களுக்குப் பிடித்தமான உணவுப்பண்டமான பச்சைப்பயறு, வெல்லம், தினைமாவு, தேன் (துள்ளுமாவு) முதலியவற்றைப் படைத்து ஆரவரச்சத்தம் முழங்க வழிபடுகின்றனா். இவ்வழிபாட்டில் பெண் தெய்வங்களை முன்னிடுத்தினும், இயற்கையை வழிபடும் மரபைத் தொடா்ந்து மீட்டுருவாக்கம் செய்யும் தன்மையை வெளிப்படுத்துகின்றனா்.

வலசமலை பழங்குடிகளின் இயற்கை வழிபாடு முதன்மையாக இருப்பதால் காட்டு இலைகளைக் கொண்டு ‘சூர்வகட்டுதல்’ முறையில் தற்காலிக ‘இலைக் கோயில்’ அமைத்து தெய்வச் சடங்கு நிகழ்த்தும் வழக்கமும் இருப்பதைக் காணமுடிகின்றன.

புனித பொருள் படைத்தல்

புனிதப் பொருள் படைத்தலானது அந்தந்த சமூக மக்களின் வாழ்வில் நிலைகளைப் பொருத்ததாகும். ‘கல், கிளிஞ்சல், கழுத்தணி, செதுக்கப்பட்ட மரத்துண்டு போன்ற பொருட்கள் அதிக தெய்வ சக்தி அற்றவையாகவும் அவற்றை வைத்திருப்பவர்களுக்கு நன்மை நிகழும் என்று நம்பி வழிபடுவதனைப் புனிதப் பொருள் வழிபாடு எனலாம். இதனை மானா என்றும் மானாயிசம் என்றும் மானிடவியலார் அழைப்பர். இப்புனிதப் பொருட்கள் காலத்திற்குக் காலம், மனிதனுக்கு மனிதன், இனத்திற்கு இனம் மாறுபட்டும் வேறுபட்டும் அமையக் கூடியதாகும். இவை நிலையானதல்ல. ஒரு தெய்வத்திற்குரிய புனிதப் பொருள் மற்றொரு தெய்வத்திற்கு ஒவ்வாத பொருளாகக்கூட கருதப்படுவதும் இயல்பாகும். இதில் பலிபொருட்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பண்டைய வழிபாட்டு மரபின் எச்சமாகவே இருந்து வருகிறது.

பலியிடுதல் மரபு

பண்டைய வழிபாட்டு முறையில் பலியிடுதல் என்பது மரபாா்ந்த வழக்கமாகும். குறிஞ்சி நிலத்தில் வெறியாட்டுக் களத்தின் மீது ஏறி ஆடும் பூசகருக்கு ஆட்டின் குருதியினைத் தினையரிசியோடு சேர்த்துத் தூவுவர். ஆட்டின் கழுத்தை அறுப்பதோடு தினைப் பிரப்பை வைத்து வழிபாடு செய்வர். இதனை, ‘‘மறிக்குரல் அறுத்துத் தினைப்பரப் பிரீ’’7 (குறுந்தொகை, பா.எ., 265). ‘‘சிறுதினை மலரொடு விரைஇ மறிஅறுத்து’’8 (திருமுருகு., 218 -வது வரி) ‘‘குருதியோடு வரைஇய தூவௌ் அரிசி’’9 (திருமுருகு., 233-வது வரி) ‘‘குருதிச் செந்தினை பரப்பி’’10 (திருமுருகு.,242-வது வரி) கூறுகிறது. மலையில் விளைகின்ற உருவத்தில் சிறிய தினை அரிசியுடன் மலையில் மலரும் காட்டு மலர்களைப் பறித்து விரவிச் சுளகில் பரப்புவார்கள். வரையாட்டை அறுத்து அதன் ஊனைத் தேக்கிலையில் வைப்பார்ள். இரண்டையும் தெய்வத்திற்குப் படைப்பார்கள். மலையில் விளைந்த தூய வெண்ணெல் அரிசியை வரையாட்டுக் குருதியில் விரவி, தேக்கிலையில் இட்டுப் படைப்பார்கள். செந்தினை அரிசியை வரையாட்டுக் குருதியுடன் கலந்து சுளகில் இட்டுப் பரப்பிப் படைப்பதே பண்டைய வழிபாட்டு மரபாகும். இம்மரபு இன்றும் சிறுதெய்வ வழிபாட்டில் கடைபிடிக்கப்படுகிறது.

கள் (மது) படைத்தல்

இறந்த வீரனது நினைவாகவும், வெற்றிக் களிப்பை கொண்டாடுவதற்காகவும், சடங்குகள் நிகழ்த்தும்போதும் கள்ளான மது படைக்கப்பட்டன. இதனை, ‘‘தோப்பிக் கள்ளுடன் துரூஉப்பலி கொடுக்கும்’’11 ( அகம்., பா.எ., 35) என்றும், அரிசியிலிருந்து வடித்து எடுக்கப்பட்ட ஒருவகைக் கள்ளைத் தாங்கள் வழிபடுகின்ற தெய்வங்களுக்குப் படைத்ததுடன், மலை ஆட்டையும் பலி கொடுத்து வழிபட்டனர். இதனை, ‘‘நனைமுதிர் நறவின் வாட்பலி கொடுக்கும்’’12 (அகம்., பா.எ.,13) என்கிறது. கடவுளுக்குக் கையுறையாக மலர்க் கண்ணியுடன் கள் படைக்கப்பட்டதையும் அகநானூறு உறுதிபடுத்துகிறது.

பசு மீட்பு போரில் இறந்தவனுக்கு பழிப்பூசை மேற்கொள்வதற்காக, துடி எனும் பறையை முன்னமே முழங்கியும் நெல்லால் ஆக்கப்பட்ட கள்ளை உணவாகப் படைத்தும், செம்மறி ஆட்டுக் குட்டியைப் பலியாகப் படைத்தும் வழிபட்டுச் சென்றனர். இதனை

“நடுகல் பீலி சூட்டி துடிப்படுத்து
தோப்பிக் கள்ளொடு துரூஉப் பலி கொடுக்கும்
போக்கு அருங் கவலைய புலவு நாறு அருஞ்சுரம்”13 (அகம்.பாலை.35:8-10)

என்று குடவாயிற் கீரத்தனாா் கூறுகிறாா். இதன் மரபு நீட்சியாக விருதுநகா், ஸ்ரீவில்லிப்புத்தூா், சங்கரன்கோவில் திருத்தங்கல், குன்னூா், வத்திராயிருப்பு ஆகிய ஊா்கள் பிற்காலப் பாண்டியா்களின் ஆட்சித்திறம் நிகழ்ந்துள்ள ஊா்களாகும்.

குன்னூரிலிருந்து மேற்குநோக்கி இரண்டு கிலோமீட்டா் தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் முனியாண்டி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் ஒரே ஒரு நெடுங்கல்லைக் கொண்டு அமையப்பெற்றவையாகும். இக்கல்லின் உயரம் 25 அடிக்கு மேல் இருக்கும். அதன் அகலம் அடிப்பகுதி 6அடி கொண்டு இருக்கும். இக்கல் கிழக்கு நோக்கி அமையப்பட்டிருக்கின்றன.

வழிபாட்டுப் பொருட்களாகச் சங்க இலக்கியத்தில் நெடுங்கல்லுக்கு எத்தகைய சடங்குகள், படையல்கள் நிகழ்த்தினார்களோ அதே பின்னணியில் சடங்குகள் நிகழ்கிறது. உயிர்பலியும் சோ்த்து சடங்கு செய்விக்கப்படுறது. சடங்குப் பொருட்களாக, (படையல்களாக) 21 முட்டை, ஆடு, கோழி, வெண்பொங்கல், சக்கரைப்பொங்கல், முனியாண்டிக்கு எட்டு முலம் வெள்ளை வேட்டி(நெடுங்கல்லின் அடிப்பகுதியில் சுற்றுவதற்கு), சந்தணம், குங்குமம், பீடி, சுருட்டு, மதுபானம், வெற்றிலை, பாக்கு, 21எலுமிச்சை மாலை, தேங்காய், பழம், பொறி, அவுல், இரண்டு கிலோ ஆப்பில், அரஞ்சு, திரட்சை, சவ்வாது, வெள்ளிக்காப்பு, நோ்த்திக்கடனாக மொட்டை போடுதல், காதுகுத்துல், கோயில் காணிக்கையாக 1001 பணம் போன்றவை படையாளாகப் படைக்கப்படுகிறது. இப்பொருட்களில் பெரும்பாண்மை தொடக்க காலத்தில் நடுகல்லுக்குப் படைக்கப்பட்டவையாகும். இன்றும் இம்மரபு தொடா்கிறது.

குறி சொல்லும் அதிகாரம் - மரபு வழிபாட்டின் நீட்சி

கோயிலில் குறிசொல்லும் அதிகாரம் ஆண், பெண் இருவருக்கும் இருந்து வருகிறது. ஆனால் கோயில் தள அதிகாரம் (இடம்) அனைத்தும் பள்ளா், பறையா் இனத்தைச் சார்ந்தவா்கள் கையில் எடுத்துள்ளனா். கோயில் குறிசொல்பவா் பெரும்பாலும் பள்ளா் இனத்தைச் சோ்ந்தவா்களே ஆவார். நடுகல்லுக்குப் படைக்கப்படும் பொருட்கள் காணிக்கைகள் அனைத்தும் குறிசொல்லுபவா்களே எடுத்துச் செல்கின்றனா். குறி சொல்லுதலுக்கு ஒருவா் மட்டும் அமா்த்தப்படவில்லை. முனிஷ்வரன் சாமி யார் யாருக்கு எல்லாம் வருகிறதோ அவா்கள் எல்லாம் தனித்தனியாக அக்கல்லைச் சுற்றி வணங்கி வருகின்றவா்களிடம் 51ரூ காணிக்கை வாங்கிக் கொண்டு சுருட்டைப் பற்றவைத்துக் குடித்துக்கொண்டு குறிசொல்லுகிறார்கள். இவ்வழக்கம் இன்று தொடா்ந்து நிகழ்ந்து வருகிறது.

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் இருந்து, 27 கி.மீ.,யில் உள்ளது கள்ளிக்குடி வடக்கம்பட்டி கிராமம். இங்கு, பல நுாறு ஆண்டுகள் பழமை வாய்ந்த, முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது.வடக்கம்பட்டி கிராம மக்கள், வறுமையில் உழன்ற காலம் அது. 1935ம் ஆண்டு இக்கிராமத்தைச் சேர்ந்த சுப்பா நாயுடு கனவில் தோன்றிய முனியாண்டி, என் பெயரில், சேவை மனப்பான்மையுடன் பொதுமக்கள் பசி மற்றும் தாகம் தீர்க்கும் தொழில் செய்யுங்கள்; நான் அருள்புரிகிறேன் என, அருளாசி வழங்கினார் அதன் படியே இன்றும் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.

மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் அமைந்துள்ளது வெள்ளக்கல் கழுங்கடி முனியாண்டி கோவில். இக்கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு நேர்த்திக்கடனாக முனியாண்டிக்கு ஆடுகளை பலியிடுவதாக வேண்டிக் கொள்கின்றனர். இக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை கறி விருந்து அன்னதான திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.

மேலும், மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2-வது வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அங்குள்ள முனியாண்டி கோவிலில் திருவிழா நடத்துவது வழக்கம். அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கப்படும் ஆடு, கோழிகளை பலியிட்டு படையல் இட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. மேற்காணும் தரவுகள் வாயிலாக இனங்காணும்போது சங்ககால வழிபாட்டின் தொடா்ச்சியானது இன்றும் மக்களது வழக்கத்தில் நீட்சி பெற்று்ளளது. வழிபடு தெய்வங்கள் அனைத்தும் மேல்நிலையாக்கம் பெற்றிருப்பினும் அதில் தொல் மரபு பூசகா்களாகப் பழங்குடிகளும், தாழ்த்தப்பட்ட மக்களுமே ஆதிக்கம் செலுத்துவது நடப்பியலாக உள்ளது.

முடிவாக

சங்ககால வழிபாடு இனக்குழு மரபுபிற்குள் நின்று செயல்படுத்தப்பட்டன. இ்தில் பெண்கள் பூசகா்களாக இருந்து வழிநடத்தினா். பின்னா் ஏற்பட்ட அரசுருவாக்கத்தில் ஆண் தலையேற்று முன்னிறுத்தப்பட்டனா். இருப்பினும் வழிபாட்டு மரபில் பலியிடுதல் முதன்மை தன்மையாக இருந்துள்ளன. இயற்கையையும், போாில் இறந்த வீரனின் அடையாளங்களையும் வழிபடு பொருளாக வைத்து வழிபட்டுள்ளனா். இதனது, வழிபாட்டுத் தொடா்ச்சியானது இன்றும் மக்களது வழக்கத்தில் நீட்சி பெற்றுள்ளது. வழிபடு தெய்வங்கள் அனைத்தும் மேல்நிலையாக்கம் பெற்றிருப்பினும் அதில் தொல்மரபு பூசகா்களாகப் பழங்குடிகளும், தாழ்த்தப்பட்ட மக்களுமே ஆதிக்கம் செலுத்துவது நடப்பியலாக உள்ளது.

அடிக்குறிப்புகள்

    தொல்காப்பியம் - தொல்காப்பியம், இளம்பூரணா் உரை. நூ. 951

    நா.வானமாமலை - பழங்கதைகளும் பழமொழிகளும், ப.80

    தொல்காப்பியம் - பொருள். நூ.422

    தொல்காப்பியம் - தொல்காப்பியம், இளம்பூரணா் உரை. நூ. 1006

    சிலப்பதிகாரம் - அடியாா்க்கு நல்லாா் உரை 12.47-50

    நற்றிணை, பாடல்.293

    குறுந்தொகை, பாடல். 265

    திருமுருகாற்றுப்படை 218 -வது வரி

    திருமுருகு., 233-வது வரி

    திருமுருகு.,242-வது வரி

    அகநானூறு, பாடல் - 35

    அகநானூறு, பாடல் -13

    அகநானூறு, பாடல் – 35

மின்னஞ்சல் : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.