3.3.1 தமிழர் நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட நாடகப் பிரதிகள்

சங்கிலியன் என்ற நாடக எழுத்துரு மகுடபங்கம் தொகுப்பில் உள்ளது. ஈழத் தமிழ் மன்னன் பற்றிய நாடகம். பேராசிரியர் க. கணபதிப்பிள்ளையின் சங்கிலியன் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர் இதனை எழுதியுள்ளார். ஏற்கனவே தமிழ்ச்சூழலில் இது தொடர்பான பல நாடக நூல்கள் வந்திருக்கின்றன. மாதகல் புலவர் சூசைப்பிள்ளையின் ‘சங்கிலியன் நாட்டுக் கூத்து’, பேராசிரியர் கணபதிப்பிள்ளையின் ‘சங்கிலியன் நாடகம்’, காரை ந. சுந்தரம்பிள்ளையின் ‘சங்கிலியம்’, வித்துவான் கந்தையாவின் ‘சங்கிலியன் நாடகம்’, மு. அருட்பிரகாசத்தின் ‘மாவீரன் சங்கிலியன' ஆகியன எழுதப்பட்டுள்ளன. ஈழத்து அரசியல் வரலாற்றிலும் சங்கிலியன் அரசனுக்கு முக்கியத்துவம் உண்டு.

ஏழுமலைப்பிள்ளை இதனை நான்கு காட்சிகளைக் கொண்ட ஒர் எழுத்துருவாகத் தந்துள்ளார். காக்கைவன்னியன் சங்கிலியின் தளபதியை வஞ்சமாகக் கொலை செய்துவிட்டு பறங்கியருடன் சேர்ந்து சங்கிலியனைக் காட்டிக்கொடுப்பதே இந்நாடகம் ஆகும்.

யாழ்ப்பாண இராட்சியத்தின்மீது வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கும்போது சங்கிலியன் போருக்கான ஆயத்தங்களைச் செய்கிறான். வீரமாணிக்கதேவர் என்ற தளபதியை வீரநாயகனுடன் சேர்ந்து சதி செய்து காக்கை வன்னியன் கொல்கிறான். வீரமாணிக்க தேவன் இறந்ததறிந்து சங்கிலியன் துயரப்பட்டிருந்தபோது பறங்கியர் சங்கிலியனை அரண்மனையில் முற்றுகையிடுகின்றனர். இக்காட்சிகளின் ஊடாக சங்கிலியன் நாடகத்தை நகர்த்தியுள்ளார் ஏழுமலைப் பிள்ளை.

மூதாதையான இராவணனைக் காட்டிக் கொடுத்தான் அவன் தம்பி விபீசணன். குலோத்துங்க சோழனை அழகேஸ்வரன் காட்டிக் கொடுத்தான். சங்கிலி வேந்தனை நீ காட்டிக் கொடுத்தாய்” என சங்கிலி காக்கைவன்னியனின் துரோகத்தை வரலாற்றோடு இணைத்து இழித்துக் கூறுகின்றான்.

குலோத்துங்க சோழன் பாண்டிய இளவரசியாகிய புவனமுழுதுடையாளை மானசீகமாகக் காதலித்து இணைந்த வரலாற்றைக் கூறுவது ‘ஆணை’ என்ற நாடகப் பிரதி. இது காதலின் மகத்துவத்தையும் வீரத்தின் உறுதியையும் கூறுவதாகும். ஐந்து காட்சிகள் ஊடாக இந்நாடகக் கதை விரிகிறது. ஒருபுறம் சோழப்படைகள் பாண்டியர் படைகளை யுத்தத்தில் வெற்றி கொள்கின்றனர்.

பாண்டியர் அரண்மனையைப் சோழப்படை சூழ்ந்து விட்டாலும் உன் மானத்திற்கு மாசு நேராது என்று குலோத்துங்க சோழனின் அரசவைப் புலவரான புகழேந்திப் புலவர் கூறுகிறார். போர் ஒரு முறை. அதில் கொலை ஒரு கலை. போர்புரியும் எல்லோருமே நெறி அழிக்கும் முறையற்றவர்கள் அல்லர். வெற்றியின் பின்னர் வீரபாண்டியன் சிறையில் அடைக்கப்படுகின்றான். குலோத்துங்க சோழன் புவனமுழுதுடையாளை விரும்பியமையால் அவளுடன் மீளுகிறான். இப்பிரதியில் போரின் வலிமையும் காதலின் வலிமையும் கூறப்படுகின்றன.

பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டும் போரும் காதலுமாக இந்நாடக வரலாறும் அமைந்துள்ளது. திருக்குறட் கருத்துக்களைக் கையாளுதல், பாடல்கள் எடுத்துக்காட்டுதல் ஊடாக இப்பிரதி நகர்கிறது. சோழர் ஆட்சிக்கால வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறான நாடகப் பிரதிகள் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இராஜராஜசோழனின் மகள் குந்தவி நாச்சியாரைக் கவிபாடிப் பரிசு பெற்ற வேங்கி நாட்டு மன்னன் விமலாதித்தனின் வரலாற்றை ‘வேங்கையின் ஆணை’ என்ற பிரதி சொல்கிறது. மும்முடிச் சோழனாகிய இராஜராஜனின் ஆட்சிக்காலம் பொற்காலமாகும். அக்காலத்தில் சோழப் பேரரசை விழுங்க இரட்டபாடி மன்னன் சத்தியாசிரியன் திட்டமிடுகிறான். அத்திட்டத்திற்கு பாலதேவர் உடந்தையாக இருக்கிறார். வேங்கி நாட்டுக்கும் சோழநாட்டுக்கும் விரோதம் ஏற்படுத்துவதன் ஊடாக நாட்டில் சிதைவை உண்டாக்கி பலவீனப்படுத்தி நுழையலாம் என இரட்டபாடி மன்னன் எண்ணுகிறான்.

இதற்காக, சந்தேகங்களை மெய்யாக்கி விமலாதித்தனைச் சந்தேகப்பட வைத்து பின்னர் அதிலிருந்து மீளுவதும் காட்டப்படுகிறது. விமலாதித்தன் தன்னை இவ்வாறு சோழநாடு சோதித்த காரணம் யாதெனக் கேட்கிறான். அந்த உரையாடல்கள் மிகச் சிறப்பாக வெளிப்படுவதைக் காணலாம். இக்காலத்து அரசியல் நிலைகளையும் பாத்திரங்களையும் கண்முன் நிறுத்துவதாக நாடகப் பிரதிகளும் திரைப்படங்களும் கூட வந்து மக்களை இன்பமூட்டின. அவ்வாறானவற்றையும் ஏழுமலைப்பிள்ளை தனது எழுத்துப் பாணியில் நயமாகத் தந்துள்ளார்.

தமிழ் ஓதவும் சிற்ப வேலை கற்கவும் காஞ்சிக்கு வந்தவரை மகேந்திர பல்லவன் சேனை கவர்ந்ததால் போர் முனையில் நின்று வீராதி வீரனென்று பேரெடுத்தார். அவர் பற்றிய நாடகப்பிரதியே வீரத்துறவு ஆகும். “அவருடைய உள்ளம் சிவபக்தியில் ஈடுபட்டிருக்கிறது. நான் அவருக்கு விடுதலை கொடுக்கிறேன். சிவனடியாரை சேனைத் தலைவராக வைத்திருப்பது குற்றம். அவரை எனது குருவாக வரித்துக் கொள்கிறேன்” என்று மாமல்லச் சக்கரவர்த்தியால் வியந்து போற்றப்பட்டவரே பின்னாளில் சிறுத்தொண்டர் என்னும் சிவனடியார் ஆனார்.

புயலுக்குப் பின் என்ற நாடகப் பிரதியிலும் இராஜேந்திரசோழனின் மனப்பக்குவம் எடுத்துக்காட்டப்படுவதை அவதானிக்கலாம். இராஜேந்திர சோழன் தனது வாழ்வின் இறுதிக் காலத்தில் பேரை வெறுத்தான். இக்கருத்தை மையமாக வைத்து ஏழுமலைப்பிள்ளை இந்த நாடகப் பிரதியை ஆக்கியிருப்பார். நடத்திய போர்கள் எல்லாம் அறியாமையால் நடத்தியவை. மமதையில் நடத்தியவை. இந்த உலகில் நாங்கள் பெரியவர்கள் என்று காட்டுவதற்கு நடத்திய போர்கள். உண்மையில் யார் பெரியவர்? யார் தலைவர்? இறைவன் மட்டுமே தலைவன். சமாதானமே வீரம், அன்பே வீரம்;. புயலுக்குப் பின் அமைதி வருமே அதுவே நிலையான வாழ்வு என்று போரை வெறுத்து ஒதுக்கும் நிலையை இராஜேந்திரசோழனின் அரசியல் வரலாற்றோடு காட்டுவார்.

இதுவும் பரஞ்சோதி சேனாதிபதி பதவியை விட்டு இறைநெறியில் மூழ்கியதைப்போல் சாம்ராட் அசோகன் புத்தனின் பாதங்களில் சரணடைந்ததைப்போல் இராஜேந்திர சோழனும் அமைதி கொள்கிறான். இவ்வாறான வீரர்களாக இருந்து பெரும் போர்களை நடாத்தியவர்களின் பாத்திரங்களின் அகவுணர்வின் மோதல்களையும் வெளிப்பாடுகளையும் இப்பிரதிகளில் ஏழுமலைப்பிள்ளை வெளியே கொண்டு வருவார். இவை பாத்திரங்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளை வெளிப்படுத்த துணையாக அமையக் கூடியவையாகும்.

தேசத்தின் ஆணை’ புலித்தேவன் வரலாற்றையும் ‘துரோகத்தின் முடிவு’ மருதநாயகத்தின் வரலாற்றையும் எடுத்துரைக்கின்றன. ‘தேசத்தின் ஆணை’ ஆங்கிலேயர் காலத்தில் ஏகாதிபத்திய ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட முதல் விடுதலைப் போரைப் பற்றிக் கூறுவதாகும்.

1755 ஆம் ஆண்டில் இடம்பெற்ற வரலாற்றுச் சம்பவத்தை அடியொட்டிதாக தேசத்தின் ஆணை நாடகப் பிரதி அமைந்துள்ளது. தாயக மண்ணுக்கு அந்நியன் உரிமை கொண்டாடக்கூடாது என்பதற்காக வாளெடுத்துப் போரி;ட்ட முதல் வீரன் புலித்தேவன் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அவனின் இனவிடுதலைப் போருக்கு மக்கள் வழங்கிய ஆணையாகவே தேசத்தின் ஆணை அமைந்துள்ளது. வெள்ளையருக்கோ ஆர்க்காட்டு நாவாப்புகளுக்கோ யாரும் வரியோ கப்பமோ செலுத்தக்கூடாது என்று பாளையக்காரர்களை ஒன்று சேர்த்து எதிர்த்து நின்றவன் புலித்தேவன்.

சென்னை செயிண்ட்கோட்டை பிரபு பிரித்தாளும் தந்திரத்தை மேற்கொள்கிறார். இதற்கு மருதநாயகத்தை வைத்து கட்டாயத்தேவரை சுட்டுக் கொல்கிறார்கள். மருதநாயகம் ஆங்கிலேயக் கவர்னர்பிகாட் பிரபுவால் மதுரை ஆளுநராக நியமிக்கப்பட்டவன். இறுதியில் புலித்தேவன் வெள்ளையரின் எதிர்ப்பைத் தாங்கமுடியாமல் தன் இடத்தை விட்டு வெளியேறுகிறான். தேசத்தின் ஆணை, துரோகச் செயல்களாலும் பிரித்தாளும் தந்திரங்களாலும் தோற்கடிக்கப்பட்டது என்ற உண்மை தெரியவருகிறது.

இந்தக் கால ஆட்சிப் பரப்பைத் துரோகத்தின் முடிவு என்ற நாடகப் பிரதியூடாக மருதநாயகம் வரலாற்றையும் கூறியிருப்பார். மாவீரன் புலித்தேவனை அழிக்க வெள்ளையருடன் கூட்டுச் சேர்ந்து சதி புரிந்த மருதநாயகத்தின் வெற்றியைப் பறித்துவிட்டு தூக்கிலிட்ட கதைதான் துரோகத்தின் முடிவு.

இது மருதநாயகத்திற்கும் நேர்கிறது. இப்பிரதி ஏழு காட்சிகளைக் கொண்டது. மருதநாயகம் வீரமும் உறுதியும் மதிநுட்பமும் நிறைந்தவன். இவனைப் போன்று வேறு இந்தியரைக் காண்பது அரிது என்று கூறி ‘தங்க மெடலும் வீரவாளும்’ கொடுத்து ஆங்கிலப் படைகளின் சிப்பாய்களுக்குத் தலைவனாக்குகின்றனர் ஆங்கிலேயர். ஆனால் வெள்ளையர் மீதான விசுவாசம் நீண்டகாலம் நீடிக்காமல் மருதநாயகம் பழிவாங்கப்படுகிறான். இதுவே துரோகத்தின் முடிவாக அமைந்துள்ளது.

ஆங்கிலேயரின் சதித்திட்டத்தை மருதநாயகம் பின்னர்தான் உணருகிறான். “வஞ்சம் தீர்க்கும் அந்;நியன் வார்த்தை அலங்காரங்களில் மயங்கி இந்த மண்ணின் மைந்தன் புலித்தேவனை எதிர்த்தேன். இன்று அதை நினைத்து வெட்கப்படுகிறேன். அன்று நாம் ஒன்றுமையாகச் செயற்பட்டிருந்தால் வெள்ளைப் பறங்கியும் ஒட்டுண்ணிகளும் மண்ணோடு மண்ணாகியிருப்பார்கள்.” என்கிறான். இவ்வாறு புலித்தேவனும் மருதநாதயகமும் மட்டுமல்ல. மராட்டிய வீரசிவாஜியும் பழிவாங்கப்பட்ட வரலாறும் இவ்வாறுதான் கூறப்படுகிறது.

சிவகங்கைக்குள் மருதுபாண்டியர்களும் வெள்ளையர்களால் பழிவாங்கப்பட்டார்கள். அவர்களின் வரலாற்றையொட்டியும் மருது பாண்டியர்கள் என்ற எழுத்துருவைப் படைத்திருக்கிறார் ஆசிரியர். இதனையும் புலித்தேவன், மருதநாயகம் ஆகியோருக்கு நடந்து சதிவலையோடு சேர்த்துப் பார்க்கலாம்.

ஆணை’ என்ற தொகுப்பில் உள்ள ஐந்து எழுத்துருக்களும் தமிழ்நாட்டு நிலக்கதைகளாக அமைந்துள்ளன. ஒருபுறம் தமிழ்மன்னர்கள் தமக்குள் போரிட்டு அழிகிறார்கள். மறுபுறத்தில் அந்நியரால் தூண்டாடப்பட்டு அழிகிறார்கள். இதனால் வஞ்சகமும் துரோகமும் பழிவாங்கலும் புராண இதிகாசக் கதைகளில் மட்டுமல்ல வரலாற்றுக் கதைகளிலும் நீட்சியாக அமைந்துள்ளமையை இப்பிரதிகள் ஊடாக ஏழுமலைப்பிள்ளை நமக்குக் காட்டுகிறார்.

3.3.2 ஏனைய நிலப்பரப்பை அடிப்படையாகக் கொண்ட நாடகப் பிரதிகள்

தமிழ்நாட்டு நிலப்பரப்புக்களுக்கு அப்பாலான வீர வரலாறுகளையும் ஏழுமலைப் பிள்ளை நாடகப் பிரதிகளாக்கித் தந்துள்ளவற்றை நோக்குவோம். இந்திய நிலப்பரப்பில் வீரசிவாஜி மற்றும் மோவார் இராட்சியம் என்பனவும் மேலைத்தேயத்தவர்களின் ஆட்சிப்பரப்பில் நடைபெற்ற வரலாற்றின் அடிப்படையிலான பிரதிகளாகிய ஜுலியஸ் சீசர், பழிக்குப் பழி, மகுடபங்கம், மாவீரன் போரஸ், மாவீரனை மயக்கிய பேரழகி, வெற்றியின் ஆணை ஆகிய பிரதிகளையும் தந்திருக்கிறார்.

இந்தியாவில் டில்லிப் பேரரசன் ஒளரங்கசீப் வீர சிவாஜியின் வெற்றியைக் கட்டுப்படுத்த போர் ஒப்பந்தம் செய்கிறான். அதனூடாக வீரசிவாஜிக்கும் சதி வலை பின்னுகிறான். தனது பண்பான வீரத்தால் அதனை முறியடிக்கும் வீரசிவாஜியின் தற்துணிவே இங்கு நாடகமாக மிளிர்கின்றது.

சக்கரவர்த்தி ஒளரங்கசீப் வீர சிவாஜியை அரவணைக்கத் திட்டமிடுகிறான். ஆனால் பாதுஷா அழைப்பை ஏற்றுச்சென்ற சிவாஜியை ஒளரங்கசீப் அவமதிக்கின்றான். உரையாடல் முரண்நிலை அடைகின்றபோது சிவாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றான். இங்கும் சதிவலைதான் பின்னப்படுகிறது. வீரர்கள் அடக்கப்படுகிறார்கள்.

இந்தியாவின் வடமேற்கில் அமைந்திருக்கும் மோவார் இராட்சியம் எனப்படும் உதய்பூர் இராட்சியத்தில் நடைபெறும் கதைதான் தந்தையின் ஆணை. மேவாரை ஆண்ட மன்னர்களுள் பெரும்வீரர் ராணா சங்ராம் சிங். ராஜஸ்தானின் வரலாறும் வீரம் மிகுந்தது. உயிரைத் துச்சமாக நினைத்து முகலாயர்களுடனும் பிரிட்டிசாருடனும் போரிட்ட ராஜபுத்திரர்களின் வீர வரலாறுதான் தந்தையின் ஆணை. இதனை அடிப்படையாக வைத்து சந்திரமதி என்ற நாவலை சாண்டில்யன் எழுதியிருப்பார். ஏழுமலைப்பிள்ளை மோவாரின் சுதந்திரப்போர் எப்படித் தொடங்கியது என்பதற்காக இந்தப் பிரதியை எழுதியிருக்கிறார்.

மகுடபங்கம் தொகுப்பில் உள்ள அசோகன் கதை மௌரியப் படைகள் கலிங்க தேசத்தின் மீது படையெடுத்த வரலாற்றை தருகின்றது. அசோகனின் தந்தை பிந்து சாரன் அவனின் பாட்டன் சந்திரகுப்தன் மௌரியன் கலிங்கத்தின் மீது படையெடுத்து தோற்ற வரலாறும் சொல்லப்படுகிறது.

அசோகன் போர்க்களத்திற்குச் செல்வதற்கு வீரமுழக்கமிடுகிறான். “ஒலிக்கட்டும் போர் முரசம். அணிவகுத்து நிற்கட்டும் இரத கஜ தரத பதாதிகள். புறப்படுங்கள் வில் ஏந்தும் வீரர்களே. தேர் ஓட்டும் தீரர்களே காதலுக்கு அல்லாது காதலிக்கே போதியற முத்தம் தந்துவிட்டு போர்க்களம் நோக்கிப் புறப்படுங்கள் காதற் கடலிலே கண்டெடுத்த கன்னியர்க்கு கடைசி முகம்காட்டிவிட்டு களம் காணப் புறப்படுங்கள். செம்பவளச் செல்வியரின் செங்காந்தச் செல்விரலால் செந்தூரத் திலகமிட்டு போர்முனைக்குப் புறப்படுங்கள்”

இந்த வசன நடை திராவிடக் கருத்துக்களின் தாக்கத்தில் வந்த நாடகங்களுக்கு பொதுமைப்பட்டதாக அமைந்து விடுகின்றது.

ஆசிரியர் தமது குறிப்பில், கலைஞர் கருணாநிதி வசனம் எழுதிய சாம்ராட் அசோகனை பாடசாலைக் காலத்தில் நடித்த பற்றினால் இதனை எழுதினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

அசோகனின் படையெடுப்பை நிறுத்துமாறு புத்தபிக்கு கோருகிறார். ஆனால் அசோகன் மறுக்கிறான். தனது வாழ்நாள் கனவு கலிங்கத்தில் மௌரியக் கொடி ஏற்றுவது என்று கூறுகிறான்.

120 நாட்கள் போர் நடைபெறுகிறது. ஆனால் அசோகன் அமைதியின்றி அலைந்தன். சஞ்சலப்பட்டான். நிலை தடுமாறினான். போர்க்களத்தைச் சுற்றி வரும்போது பிசாசுகளின் ஊழித்தாண்டவம் தெரிகிறது. ஓரு தாய் பிணத்தைக் கட்டிக் கொண்டு அழுகிறாள். அப்போது அசோகன் தண்ணீர் கொடுக்கிறான். அவள் நீ யார்? என் மகன்போல் இருக்கிறாயே என்கிறான். தான் சாம்ராட் அசோகன் என்கிறான்.

அதுகேட்டு அவள்

“ஆ. சாம்ராட் அசோகன். சாம்ராட் வெறிபிடித்த சாம்ராட் அசோகன். கசங்கிய மலர்கள் கருகிய மொட்டுக்கள், அழிந்த குங்குமம், அறுபட்ட தாலிகள், அவசியமின்றி போர் தொடுத்து இத்தனை அழிவுகளையும் ஏற்படுத்தி விட்டாயே. உனக்கு இருதயம் என்பதே கிடையாதா? நீ மனிதன்தானா. உன்மகுடத்திற்கு பங்கத்தை ஏற்படுத்தி விட்டாயே! கறை படிந்த மகுடத்தைக் கழற்றி வீசிவிடு. அது இரத்த ஆற்றில் மிதக்கட்டும். சாம்பல் மேட்டில் யொலிக்கட்டும். பிணக்குவியலில் எண்ணிக்கையாக இருக்கட்டும். உன் மகுடம் நாற்றமெடுக்கும் சாக்கடை நீரைவிடப் பெறுமதியற்றது.” என்கிறாள்.

இரத்தம் தோய்ந்த கைகளால் பறக்க விடப்பட்ட வெற்றிக் கொடி வீரமல்ல அவமானம் இறுதியில் புத்தரைச் சரணடைகிறான் அசோகன்.

யூலியஸ் சீசர் என்ற நாடகப் பிரதி மகுடபங்கம் நூலில் உள்ளது. பண்டைய ரோமப் பேரரசன் யூலியஸ் சீசர். மாவீரன் சீசர் றோமின் பகை நாடுகளை வெற்றி கொண்டு றோம் நகர் திரும்புகிறான். அங்கு நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறான். இது ஐந்து காட்சிகளாக விரிகிறது.

“ரோமின் கலையழகைப் பார்க்கிறேன். வானத்து வெண்ணிலவு வையத்தில் தவழ்வதைப் பார்க்கிறேன். வானத்துத் தாரகைகள் ஊரெல்லாம் மின்னுவதை ரசிக்கிறேன். பாவையே பாரெல்லாம் புகழ்பாட ஊரெல்லாம் கதை பேச எம்நகரவிழா நெஞ்சே நிறைகிறது கண்ணே” என்று றோம் நகரின் அழகை சீசர் வியந்து பேசுகிறார்.

அன்ரனியும் சீசரின் துணை கல்போர்ணியாவும் உரையாடுகின்றனர். அப்போது ஒருவர் சீசரைக் கூப்பிடுகிறார். 15 ஆந்திகதி முடிசூடவிருக்கும் நாளில் ஆபத்து உள்ளது எனக் கூறுகிறார். புரூட்டஸ், காஸ்கா, காசியஸ், சிம்பர் முதலானவர்கள் இணைந்து சீசரைக் கொல்கிறார்கள். ‘பழிக்குப் பழி’ என்ற மற்றொரு நாடகப் பிரதியிலும் சீசரைக் கொன்ற சதிகாரர்களின் முடிவு சொல்லப்படுகிறது. அதுவே பழிக்குப் பழி என விரிகிறது.

இந்நாடகத்தின் சிறப்புப் பற்றி வளவை வளவன் எழுதும்போது “யூலியஸ் சீசரின் வாழ்க்கை திரைப்படமாக வந்து உலக மொழிகளின் ஆய்வாளர்களிடத்தில் எல்லாம் பாராட்டைப் பெற்ற மகத்தான காவியம். அந்தக் காவிய நாயகனின் பாத்திரப் படைப்பும் எதிரிகளின் பாத்திரப் படைப்பும் அவர்கள் மூலமாகக் கொடுக்கப்பட்ட விளக்கங்களும் சொற்பொழிவு மேடை என்று காட்சி 7 இல் எழுதப்பட்ட வசனங்களும் உரையாடல்களும் மிகமிக ஆழமானது. அர்த்தம் செறிந்ததுமாகும். மிகவும் கைதேர்ந்ந்த முறையில் இந்நூலாசிரியர் படைத்த திறன்மிகு நாடகம் இது. நீயுமா புறூட்டஸ் என்று கொலை செய்யப்பட்ட கடைசி நேரத்தில் சீசர் பேசிய வார்த்தையாக அரசியல் இலக்கிய உலகங்களில் பேசு பொருளாகிய ஒரு அர்த்தம் மிகுந்த வரி நினைவில் வருகிறது.”

மாவீரனை மயக்கிய பேரழகி என்ற மற்றொரு நாடகப் பிரதி ரோமானிய வரலாற்றில் மற்றுமொரு வீரனாகிய மாக் அன்ரனியே மிகப் பெரிய வீரன் இவன் சீசரின் படைத்தளபதியாக இருந்தவன். கிளியோபட்ராவின் மீது காதல் வசப்பட்டு காமத்தில் கரைந்ததால் தனது வீரத்தையும் வாழ்வையும் இழந்தவன். இதனை மனித வாழ்வுக்கு படிப்பினையாக இந்நூலில் எழுதியுள்ளேன் என ஆசிரியர் குறிப்பிடுவார்.

மகா அலெக்சாண்டர் பற்றிய இரண்டு பிரதிகள் குறிப்பிடத்தக்கவை. ஓன்று நாடகப்பிரதி மற்றையது வரலாற்று நூல் இப்பகுதியில் வெற்றியின் ஆணை என்ற நாடகப் பிரதி பற்றி நோக்கலாம்.

இதில் அலெக்சாண்டரின் மசிடோனியப் படைகள் பாரசீகத்திற்குள் நுழைந்து போரிடுவது முதல் உலகை வெல்ல ஏனைய நாடுகளைப் பிடிக்கவும் வீரத்துடன் போரிடுவது வரை வரலாறு விபரிக்கப்பட்டுள்ளது. தான் நாடுகளைப் பிடிப்பது நாகரிகத்தையும் பெருமையினையும் அந்தந்த நாடுகளில் விதைக்கவும் அவர்களின் பண்பாடுகளைக் கற்கவும் என்று அலெக்சாண்டர் கூறுகிறார். பாரசீக மன்னர் டேரியஸ் உடன் மிகப் பலமாகப் போரிடுகிறான். பாரசீகப் படைகள் தோற்று மன்னன் டேரியஸ் தப்பி ஓடுவதும் பின்னர் படை திரட்டிப் போரிடுவதுமாக இருக்கின்றனர்.

3.4 ஏனைய உரைநடைப் பிரதிகள்

ஏனைய உரைநடைப் பிரதிகள் என்ற வகைப்பாட்டுக்குள் இரண்டு நூல்களை நோக்கலாம். முதலாவது ‘கீதாத்துவம்’ என்ற ஆன்மீக உரையாடற் காவியம், மற்றையது ‘உலகை வெல்ல முயன்றவன்’ என்ற மகா அலொக்சாண்டரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் கட்டுரை நூலாகும்.

எழுதிய மகாபாரதக் கதைப்பிரதிகளோடு சேர்த்துப் பார்க்கவேண்டிய மற்றுமொரு நூல் கீதாத்துவம். இது பகவத் கீதையை அடிப்படையாகக் கொண்ட ஆன்மீக உரையாடற் காவியமாக அமைந்துள்ளது.

கீதாத்துவம் என்ற நூல், பொருள் அடிப்படையில் மகாபாரத குருஷேத்திரப் போரின்போது, கண்ணனுக்கும் அருச்சுனனுக்கும் இடையிலான உரையாடலையும் போர்க்களக் காட்சிகளையும் விபரிப்பதாய் அமைந்துள்ளது. வடிவ அடிப்படையில் காவியமாகவும் அமைந்துள்ளது. அதனாலேயே ஆன்மீக உரையாடற் காவியம் என்று குறிப்பிட்டுள்ளார்.

“கண்ணன் அருளிய கீதை உலகின் மெய்ப்பொருள் நூலாகும். இதனால் பாரதக் கதை நிலையான வழிவழியான ஏற்றம் பெற்றுத் தெய்வத்தன்மை உடையதாக விளங்கி வருகின்றது. கண்ணன் தொடர்பில்லாவிடின் பாரதம் ஒரு போர்க்காவியமாகவே போற்றப்படும்;. தெய்வநூலாக உயர்ந்திராது” என்று ஆசிரியர் கூறுகிறார்.

இது இரண்டு பாகங்களாக விரிகின்றது. துரியோதனன் நாட்டின் பாகத்தைக் கொடுக்காததால் பாண்டவர்கள் போருக்கு ஆயத்தமாகிறார்கள். இருபுறமும் படைகள் அணிவகுத்து நிற்கின்றன. அருச்சுனன் இருபுறத்தாரையும் பார்த்து மனம் சோர்ந்து போகின்றான். அப்போது கிருண்ணன் உரைத்தவற்றையே ஏழுமலைப்பிள்ளை உரைநடையில் கீதாத்துவமாகத் தந்துள்ளார்.

இருபடைகளுக்கும் நடுவில் நின்று கொண்டு போர்க்களத்தைப் பார்த்தான் அருச்சுனன். இருதரப்பிலும் தன் குடும்பத்தாரையும் உற்றாரையும் உறவினர்களையும் பார்த்து இவர்கள் மடிந்து போவார்கள் என்ற துயரத்தால் தளர்ந்து போகின்றான்.

இக்காவியத்தில், சுதந்திரத்தை இழந்தோம். வாழ்வை இழந்தோம். எனவே, உரிமையைப் பெற போரிடவும் தயங்கவேண்டாம் என்று குந்திதேவி பாண்டவர்களுக்குக் கூறுகின்றாள். அதன்பின்னர் திருதராஷ்டிரன் போர்க்கள நிகழ்ச்சிகளை அறிவதற்கு வேதவியாசர் சஞ்சயனுக்கு அருட்பார்வை அளிக்கிறார். அதனூடாக களத்தில் நிகழ்வனவற்றை சஞ்சயன் விபரிக்கின்றான். இவை தொடக்கம் போர்முடிவு வரையான காட்சிகள் இந்நூலில் விபரிக்கப்பட்டுள்ளன.

அரவான் போருக்கு ஆயத்தமாதல், அவனைப் பலியிட்டுத் தெய்வமாக்கிவிட்டுப் போர் தொடங்குதல். அப்போது கீதை பிறந்த கதை, கீதாத்துவப் போர் உபதேசம், அமரத்துவ நிலை தேடு, செயலில் ஈடுபடு, கர்மயோகம், சமநிலை, பகையும் நட்பும், பேராண்மை, கீதாத்துவ கரும பலன், கீதாத்துவ ஞானம், பரம வசனம், தெய்வாம்சம், தூய பக்தன், ஜீவாத்மா, பரமாத்மநிலை, அமரத்துவ நிலை, இறையருள், சாஸ்திர பிரமாணம், தியாகம் ஆகிய தலைப்புகளில் கண்ணன் அருச்சுணன் உரையாடலும் இவற்றை சஞ்சயன் திருதராஷ்டினனுக்குத் தெரிவித்தலும் முதற் பாகத்தில் இடம்பெறுகின்றன.

இதன் இரண்டாம் பாகத்தில் போர்க்களத்தில் பீஷ்மரும் தருமரும், முதல்நாள், இரண்டாம் நாள் யுத்தம் தொடக்கம் 13 ஆம் நாள் யுத்தம் வரை யுத்தக்காட்சிகளை விபரித்தல் கூறப்படுகிறது.

இதன் உரைநடைச்சிறப்புக்குப் பின்வரும் பகுதியை எடுத்துக்காட்டலாம். அருச்சுனனுக்கும் கண்ணனுக்கும் இடையில் நடைபெறும் உரையாடலில்,

கண்ணன் : அதர்மம் பரவினால் என்ன ஆகும்?

அருச்சுனன் : அதர்மம் பரவினால் நல்லொழுக்கம் நசிக்கும் குலப்பெண்கள் கெட்டுப்

போவார்கள்.

கண்ணன் : பெண்கள் கெட்டுப்போனால் என்ன ஆகும்?

அருச்சுனன் : பெண்கள் கெட்டுப்போனால் கேடுகள் உள்ள இனக்கலப்பு ஏற்பட்டு விடும்.

கண்ணன் : இனக்கலப்பால் என்ன கேடு வரும்?

அருச்சுனன் : இனக்கலப்பு இதற்கு காரணமாக இருந்தவர்களை மட்டுமல்ல. அக்குலம் முழுவதையும் நரகத்திற்கு இட்டுச் சென்றுவிடும். பிண்டதானம், சலதானம் (சிரார்த்தம், தர்ப்பணம்) இல்லாததால் முன்னோர்கள் (பிதுருக்கள்) தாழ்வு நிலையை அடைகிறார்கள். இனக்கலப்பு ஏற்படுத்தும் குற்றங்களால் குலதர்மம், சாதிதர்மம் இரண்டுமே அழிந்து போகின்றன.

இரண்டாம் பாகத்தில் அமைந்துள்ள போர்க்களக் காட்சி வர்ணனையில் கர்ணன் அர்ச்சுனனுக்கு இடையிலான யுத்தத்தில் கர்ணனின் தேர்ச் சக்கரம் புதையுண்டு போக சக்கரத்தைத் தூக்கித் திருப்புகிறேன் அதுவரையில் யுத்த தருமப்படி ரதத்தின் மேல் இருந்து கொண்டு ரதமில்லாமல் தரையில் நிற்பவனாகிய என்மேல் பாணம் செலுத்தாதே! என்று கேட்கிறான். அப்போது கண்ணன், நீ யுத்த தர்மத்தைப் பற்றிப் பேசுகிறாயே! இதற்கு முன்னர் உன் தர்மம் எல்லாம் எங்கே போயின? என்று கேட்கிறான்.

கண்ணன் : ஒற்றை ஆடையுடன் இருந்த திரௌபதியைச் சபைக்கு இழுந்தீர்களே! அது எந்த தர்மத்ததைச் சார்ந்தது?

சூதாட்டத்தின் மூலம் தருமனைத் தோற்கடித்து அவருடைய செல்வத்தை எல்லாம் கவர்ந்தீர்களே அது தர்மம் தானா? பாண்டவர் காட்டிலே பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து, அதன் பிறகு ஒரு வருடம் தலைமறைவாக இருந்து திரும்பிபோது முதலில் பேசியபடி அவர்களுக்கு ராச்சியம் கொடுக்க மறுத்தீர்களே அது தர்மமா? என்று கேட்கிறான்.

இதேபோல் துரோணரின் கூற்றினூடாக “பொருளானது வெறுக்கும் அடிமைப்படாது. மனிதனோ பொருளுக்கு அடிமைப்பட்டவன் ஆகிறான்.” என்ற கூற்றுக்கள் சுலோகங்களாக இருப்பவற்றை மிக எளிமைப்படுத்தி இக்காவியத்தில் தந்திருப்பது ஆசிரியரின் மொழிநடைக் கையாளுகைக்கு சிறந்த எடுத்துக்காட்டுக்களாக அமைகின்றன.

உலகை வெல்ல முயன்றவன்’ என்பது மகா அலெக்சாண்டரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நூலாகும். கி.மு 384 முதல் 322 வரை வாழ்ந்தவர் அலெக்சாண்டர். அவர் உலகை வெல்லக் கனவு கண்டார். மசிடோனியாவில் இருந்து இந்தியா வரை வந்து போர் செய்தான். அவனின் போர் வரலாற்றையும் படைநடத்தும் திறமையையும் படைகளின் வீரத்தையும் வெற்றியையும் இந்நூல் கூறுகிறது. சிறுவன் அலெக்சாண்டர் அடங்காக் குதிரையை அடக்கிய கதையில் இருந்து அவனின் வெற்றி பேசப்படுகிறது. அவனின் முதற்போர், பாரசீகப் போர்க்களம், இஸ்ஸஸ் யுத்தம், காதலும் வாழ்வும், அலெக்சாண்டர் படை நடத்தும் தீரம் முதலானவை எல்லாம் இந்நூலில் பேசப்படுகின்றன.

[தொடரும்]
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.