தமிழ்க்கடவுளாம் முருகப்பெருமான் பற்றிய குறிப்புகளைத் தொல்காப்பியம் சங்கஇலக்கியம் போன்ற பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் காணமுடிகின்றன. வரலாற்றுக் காலத்திற்கு முன்னரேயே முருகவழிபாடு இருந்தமையைத் திறனாய்வாளர்கள் சுட்டுகின்றனர். ”சேயோன் மேய மைவரை உலகமும்”(தொல்.பொருள்.அகத்.நூ-5) எனத் தொல்காப்பியம் மலை சார்ந்த பகுதியான குறிஞ்சி நிலத்திற்குரிய கடவுளாக முருகனைச் சுட்டுகிறது. குறிஞ்சி நிலத்திற்குரிய தெய்வமாகப் போற்றப்பட்டு வழிபடப்பட்டு மக்களின் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்த முருகக்கடவுள் பற்றிய செய்திகளைச் சங்க இலக்கியங்கள் முழுவதும் காணமுடிகின்றன.

“உருவப் பல்தேர் இளையோன் சிறுவன்
முருகற் சீற்றத்து உருகெழு குருசில்”(பொருந.131-132)

எனவும்,

“முருகன் நற்போர் நெடுவேள் ஆவி”(அகம்.1)

என்றும்,

“அணங்குடை முருகன் கோட்டத்து“(புறம்.299)

எனவும் பல இலக்கியச் சான்றுகளைச் சுட்டிச் செல்லலாம். வெறியாட்டு என்ற நிகழ்வு முருகவழிபாடாகச் சுட்டப்படுவதையும் அகநூல்களில் காணமுடியும். இவ்வாறு மலையும் மலைசார்ந்த நிலப்பகுதியான குறிஞ்சி நிலத்தின் கடவுளாகப் போற்றப்படும் முருகனைக் குறித்த செய்திகள் பத்துப்பாட்டுள் ஒன்றாகிய குறிஞ்சிப்பாட்டில் இடம் பெற்றிருப்பதை எடுத்துரைக்கும் முகமாக இக்கட்டுரை அமைகின்றது.

கல்வெட்டுகள் செப்பேடுகள் போன்று இலக்கியங்களும் பண்டைக்கால் வரலாற்றை அறிந்து கொள்ளும் வரலாற்று ஆவணங்களாகத் திகழ்வன. அவ்வகையில் சங்க இலக்கியங்களும் தமிழரின் இறை நம்பிக்கையைத் தெரிவிக்கும் இலக்கியச் சான்றுகளாகத் திகழ்கின்றன. அவற்றுள் ஒன்று குறிஞ்சிப்பாட்டு. பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றாகிய இந்நூல் “பெருங்குறிஞ்சி” எனப்பெயர்பெற்றது.

கபிலரால் இயற்றப்பட்ட இந்நூல் ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ் அறிவிப்பதற்காகப் பாடப்பட்டது. தமிழை அறிவிக்கையில் தமிழ்க்கடவுளாம் முருகனின் பெருமைகளையும் பதிவு செய்தது இவ்விலக்கியம். களவுக்காலத்திய நிகழ்ச்சிகளோடு 99 மலர்களின் பெயர்கள், மலைவளச்சிறப்பு, கடவுளை முன்னிறுத்தி வஞ்சினம் உரைத்தல், நோய் நீக்கப் பரவியும் தொழுதும் வழிபாடு இயற்றுதல் போன்ற மரபுச் செய்திகளையும் இந்நூல் எடுத்தியம்புகிறது.

வெறியாட்டு

தலைவியுடன் அன்பு கொண்டு இணைந்த தலைவன் ஒருவழித் தணந்து நின்ற சூழலில் தலைவி தலைவனை எண்ணி உடல் இளைக்க அது உணராமல் உடல் மெலிவிற்கான காரணம் தேடி செவிலி வேலனையோ, குறிசொல்லும் பெண்டிரையோ கேட்க அவர்களும் முருகன் அணங்கினான் என்றுரைத்து இறைவழிபாடு செய்தால் நலம் பெறுவாள் எனக்கூறி நடத்தப்படும் வழிபாட்டு முறை வெறியாட்டு. இதனை ”முருகயர்தல்” என்றும் கூறுவர்.

அவ்வமயம் வேலன் தன்னுடலில் முருகன் புகுந்ததாகக் கூறி ஆவேசம் கொண்டு ஆடும் ஆட்டம் இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சங்க அகப்பாடல்களில் வழிபாட்டின் ஒரு கூறாக இவ்வெறியாட்டு இடம் பெற்றிருப்பது பண்டைக்காலத்திய வழிபாட்டு முறையை உணர்த்துவதாய் உள்ளது. இன்றும் இதுபோன்ற சாமியாடல்களைக் காணமுடிகின்றன.

குறிஞ்சிப்பாட்டில் தோழி அறத்தோடு நிற்கும் போது, ”தலைவனைப் பிரிந்ததாலேயே தலைவி உடல் மெலிவுற்றாள் .நீயோ அதனை அறியாது கட்டினானும் கழங்கினானும் எண்ணிக் கூறுவாரை அழைத்துக் காரணம் கேட்கிறாய். அவர்கள் கூறியபடி

“பரவியும் தொழுதும் விரவுமலர் தூயும்
வேறுபல் உருவின் கடவுட் பேணி
நறையும் விரையும் ஓச்சியும்“(குறிஞ்சி.5-7)


வழிபட்டாய் என்று தோழி செவிலியிடம் கூறுகிறாள். இவ்விடத்து தலைவியின் உளம் அறியாமல் நிற்கும் அன்னையைப் பார்த்துத் தோழி கூறுமிடத்தில் பண்டைக்காலத்து இருந்த முருக வழிபாட்டு முறைகளை அறிந்து கொள்ளமுடிகிறது.

கட்டுவைத்து அறிதல், கழங்குகளை எண்ணி அறிதல், தெய்வங்களுக்கு நேர்ந்துகொண்டு பரவுக்கடன் கொடுத்தல் போன்ற முறைகள் இருந்தமையை அறியமுடிகின்றன. கட்டு என்பது முறத்தில் நெல்லைப் பரப்பிப் பார்க்கும் குறியாகும். இதனை அறிந்து கூறுபவள் கட்டுவிச்சி என்றழைக்கப்பட்டுள்ளாள். கழங்கு –கழற்சிக்காய் இக்காய்களைக் கொண்டு வாழ்வியலைக்கூறுதல். இவை இன்றளவும் வழக்கில் உள்ளன. மேலும் தொழுதல், பூக்களைத் தூவி வழிபடுதல் போன்ற வழிபாட்டுமுறைகளையும் இவ்விலக்கியம் எடுத்துக்காட்டுகிறது. இத்தகைய வழிபாட்டுக்குரிய முருகக்கடவுளைப் பற்றிக் குறிப்பிடுகையில்,

“சுடர்ப்பூண் சேஎய்”

“ஒன்னார்க்கு ஏந்திய இலங்கிலை ”

”நெடுவேள் அணங்குறு மகளிர்”

”பிறங்குமலை மீமிசைக் கடவுள்”

என்று கபிலர் முருகனுக்குரிய போற்றிமொழிகளைப் பதிவு செய்துள்ளார்.

சுடர்ப்பூண்சேஎய்

குறிஞ்சிப்பாட்டில் மகளிரின் சுனையாடல் பற்றிக் குறிப்பிடுகையில்,

“இன்இசை முரசின் சுடர்ப்பூண்சேஎய்” (குறிஞ்சி,51)

என்று முருகப்பெருமான் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.ஒளி பொருந்திய அணிகலன்களை அணிந்த சேயோன் என்று முருகனின் தோற்றம் குறித்துப் பேசுகிறார் கபிலர். “சேயோன்“ என்று தொல்காப்பியர் சுட்டியதைப்போல கபிலரும் “சேஎய்“ என்று முருகனைச் சுட்டுகிறார். சிவன் –உமையவளின் மகனாம் முருகன் ஒளி பொருந்திய அணிகளும், வீரமிக்கப் போர்த்தொழிலும் மிக்கவன் என்பதை இவ்வடிகளில் கபிலர் அறிவிக்கிறார்.

ஒன்னார் ஒழித்தோன்

ஒன்னார் என்பதற்கு பகைவர் என்பது பொருளாகும். பகைவர்களாகிய தீயவர்களை அழிப்பவன் முருகன் என்பதனை

“ஒன்னார்க்கு ஏந்திய இலங்கி இலை எஃகின்” (குறிஞ்சி,52)

என்று குறிப்பிடுகிறார் கபிலர்.மேகத்தின் இடியோசை முரசு அதிர்வதைப் போலவும் அதன் மின்னலின் ஒளி முருகப்பெருமான் அசுரர்களைக் கொல்வதற்கு உயர்த்திய விளங்கும் இலைத் தொழிலையுடைய வேல்போல் மின்னின என்றும் கபிலர் குறிப்பிடுகின்றார். இங்கு முருகன் அசுரர்களை வென்ற பெருமை பேசப்படுகிறது. முருகனைப் பற்றிய புராணச்செய்திகள் தொன்று தொட்டு வழங்கிவருவதற்கு இந்நூல் சான்று காட்டுகிறது.

நெடுவேள்

குறிஞ்சிப்பாட்டில் மற்றொரு இடத்தில் யானை சினத்துடன் புனத்திற்கு வர மகளிர் நடுங்கி நிற்கையில் தலைவன் அம்பு எய்தி யானையைத் துரத்துகிறான். அந்த யானையின் மத்தகத்தில் அம்பு பாய்ந்து புண்களிலிருந்து குருதி வெளிப்படுகிறது. இதற்கு முருகனுக்கு நிகழ்த்தப்படும் வெறியாட்டும் பலி கொடுக்கும் பண்டைய வழிபாட்டு முறைகளும் உவமையாக்கப்பட்டுள்ளன.

”அண்ணல் யானை அணிமுகத்து அழுத்தலின்
புண் உமிழ் குருதிமுகம் பாய்ந்து இழிதர
புள்ளி வரிநுதல் சிதைய நில்லாது
அயர்ந்து புறங் கொடுத்த பின்னர் நெடுவேள்

அணங்குறு மகளிர் ஆடுகளம் கடுப்ப”(குறிஞ்சி.170-175)

என்று குறிப்பிடுகிறார் கபிலர். “முருகயர்தல் நிகழ்ந்த மகளிர்க்கு மறியறுத்து ஆடும் வெறியயர் களத்தில் மறியின் உடலிலிருந்து குருதிபொங்கி எழுதலைப்போல யானையின் உடம்பில் குருதி பெருகிற்று“ என முருகவழிபாடு தலைவனால் வீழ்த்தப்பட்ட யானைக்கு உவமிக்கப்பட்டுள்ளது. நெடுவேள் என்று முருகக்கடவுளைக் குறிப்பிட்டும்,, மறியறுத்து வழிபடும் அவருக்குரிய வழிபாட்டு முறை குறித்தும் அந்நிகழ்வு நடைபெறுமிடத்தை ஆடுகளம் என்றுரைத்தும், முருகனுக்கு ஆடிநிகழ்த்தப்படும் வெறியாட்டு நிகழ்வு குறித்தும் இவ்விடத்துப் பதிவு செய்துள்ள கபிலர் அவற்றின்வழி தொன்மையான முருகவழிபாடு பற்றிய இலக்கியச் சான்றுகளையும் தமிழுலகிற்குத் தந்துள்ளார்.

“களம் நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி
வளநகர் சிலம்பப்பாடி பலிகொடுத்து
உருவச் செந்தினை குருதியோடு தூஉய்
முருகாற்றுப்படுத்த உருகெழு நடுநாள்”(அகம் 22)

என அகநானூறும்,

“வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்”(குறுந்.53)

எனக் குறுந்தொகையும் வெறியாடும் களம் குறித்துப் பதிவிட்டிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

மீமிசைக்கடவுள்

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனிருக்கும் இடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலக்கடவுளாகப் போற்றப்படும் தெய்வமாகிய முருகனை வணங்கி தலைவன் தவறு செய்யேன் என வஞ்சினம் கூறி, இறைவனை வாழ்த்தி, சூளுறவினைப் பொய்த்தல் செய்திலேன் எனத் தலைவி உளம் கொளச் செய்ததைப்,

“பிறங்குமலை
மீமிசைக் கடவுள் வாழ்த்திக் கைதொழுது
ஏமுறு வஞ்சினம் வாய்மையின் தேற்றி”(குறிஞ்சி 208-210)

எனக் கபிலர் சுட்டுகிறார். சூள் பொய்ப்பரோ என்ற அச்சத்தை நீக்க தெய்வத்தை முன்னிறுத்த அச்சம் தீர்க்கும் வாய்மைக்குரிய கடவுளாக முருகப்பெருமான் போற்றப்பட்டதையும், பெரிய மலையில் மிகஉயர்ந்த இடத்தே உறைபவன் முருகன் என்பதையும் குறிஞ்சிப்பாட்டு பதிவு செய்கிறது. முருகக்கடவுளை முன்னிறுத்தி வஞ்சினம் கூறியதையும், எந்த பொய்த்தலும் நிகழாது தெய்வம் காக்கும் என்ற நம்பிக்கை கொண்டு மக்கள் வாழ்ந்ததையும், ஏதம் ஏதும் நிகழா முருகன் காப்பான் என்றும், அவ்வாறு நிகழின் தெய்வம் நின்று கொல்லும் என்ற நம்பிக்கை பண்டைத்தமிழ் மக்களிடம் இருந்தமையையும் இதன்வழி அறியமுடிகின்றன.

பண்டைக்காலம் தொட்டு முருகக் கடவுள் குறித்தச் செய்திகள் இலக்கண இலக்கியங்களில் அமைய முருகனுக்கேயுரிய குறிஞ்சிநிலம் பற்றிய குறிஞ்சிப்பாடலிலும் கபிலர் மீமிசைக்கடவுளின் பெருமைகளைப் பலவாறாகப் பதிவு செய்து தொன்மக்கடவுள் சேயோன் என்பதற்குச் சான்று பகர்ந்துள்ளார்.

ஒளி பொருந்திய அணிகலன்களுடன் பகைவர்களை அழிக்கும் வீரமிக்க நெடுவேளுமாகிய அழகனுக்கு நடத்தப்படும் வெறியாட்டு குறித்தும் அது தொடர்பான வழிபாட்டு முறைகளையும் கூறியதோடு, மலை மேல் உறைபவனாகிய தமிழ்க்கடவுள் வாய்மைக்கும் நல்லனவற்றுக்கும் துணைநிற்பவன் என்ற நம்பிக்கையையும், வாய்மை தவறின் நின்று கொல்வான் என்பதையும் உணர்த்தி நிற்கிறது குறிஞ்சிப்பாட்டு.

இவ்வாறு வரலாற்று காலத்திற்கு முன்னரேயே வணங்கப்பட்டு மரபுமாறாமல் தொன்மக்கடவுளாய்ப் போற்றப்பட்டு இன்றளவும் தமிழர்களின் வழிபடுதெய்வமாய் விளங்கும் தீந்தமிழ் இன்பம் கண்டு மகிழும் செவ்வேளை குறிஞ்சிப்பாட்டில் கபிலரும் பதிவு செய்து போற்றிப்பரவச்செய்ததோடு தமிழ்க்கடவுளின் தொன்மையை உலகோர் அறிய வழிவகை செய்துள்ளார்.

உசாத்துணை நூற் பட்டியல்

1. இளம்பூரணர் (உ.ஆ) (1953) தொல்காப்பியம்,சைவ சித்தாந்தநூற்பதிப்புக்கழகம்,திருநெல்வேலி

2. செயபால்.இரா,(உ.ஆ),(2004), அகநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரிபுக்ஹவுஸ்,சென்னை,

3. நாகராசன் .வி, (உ.ஆ) , (2014) பத்துப்பாட்டு,பகுதி-2, குறிஞ்சிப்பாட்டு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை,

4. நாகராசன் .வி, (உ.ஆ) , (2004) குறுந்தொகை மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை,

5. பாலசுப்பிரமணியன்.கு.வெ, (உ.ஆ) (2004),புறநானூறு, மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை,

6. மோகன்.இரா, (உ.ஆ) (2014) பத்துப்பாட்டு,பகுதி-2, , பொருநராற்றுப்படை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை,

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.