முன்னுரை

இந்தியாவின் மிகச் சிறந்த ஆறுகளில் ஒன்று காவிரி. இந்துக்கள் இதைப் புண்ணிய நதியாகக் கருதி வழிபாடுகள் செய்கின்றனர்.காவிரி ஆறு பற்றி பட்டினப்பாலை, புறநானூறு, பொருநராற்றுப்படை, சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரியபுராணம்,போன்ற பல நூல்களிலும் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன. கம்பர் காவிரி நாட்டினர். வளமான இயற்கையை எங்குக் கண்டாலும், பொன்னி ஆற்றையும், பொன்னான சோழநாட்டையும் ஒப்பிட்டு மகிழ்வார். கம்பர் காலத்திலும் காவிரிஆறு, கங்கை ஆற்றுக்கு ஒப்பானது என்று மக்கள் கருதி வந்தனர்.கம்பரும் கங்கையை நினைவு கூறும்போதெல்லாம் காவிரியையும் நினைவு கூருகின்றார். அவ்விடங்களில் சிலவற்றை ஆராய்வோம்.

காவிரி ஆறு வந்த வரலாறு

கா- என்றால் சோலை.தான் செல்லும் இடமெல்லாம் பசுமையான சோலைகளை விரித்துச் செல்வதால் “காவிரி” என்று பெயர். பொன்னி ஆறு என்று அழைக்கப்படுகிறது.காவிரி நதியின் நீரில் பொன் தாது அதிகம் இருப்பதால் இது ’பொன்னி’ என அழைக்கப்படுகிறது. சப்த ரிசிகளில் ஒருவர் அகத்தியர். அகத்தியரால் கமண்டலத்தில் சிறைபிடிக்கப்பட்ட காவிரி நதி, காக்கை உருவில் வந்த விநாயகரால் விடுவிக்கப்பட்டதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அகத்தியன், எட்டுத் திசைகளும் ஏழு உலகங்களும், அங்குள்ள உயிர்களும். நற்கதி அடையும்படி தனது கமண்டலத்தில் இணையற்ற காவிரி ஆற்றைக் கொண்டு வந்தவன். அந்த அகத்தியன்

“எண்திசையும் ஏழ் உலகும் எவ் உயிரும் உய்ய
குண்டிகையினில் பொரு இல் காவிரி கொணர்ந்தான்”
(அகத்தியப்படலம் 161),

கம்பர் பஞ்சவடியை வருணித்து வியந்த போதும் 'பொன்னி' பற்றிப் புகன்றது நினைந்து மகிழத் தக்கது.

காவிரி பாய்ந்து வளம் கொழிக்கும் நாடாகச் சோழநாடு விளங்குவதாகக் கம்பர் குறிப்பிடுகிறார். ’துறைகெழு நீர்ச் சோணாடு’(நாடவிட்டப்படலம் 767)

உயர்வான தோற்றமுள்ள குளிர்ந்த நீர் நிரம்பிய தெய்வத் தன்மை பெற்றது நதிநீர்

“நாடு உறிதிர் உற்று அதனை நாடுறுதிர்
அதன்பின்னை நனி நீர்ப் பொன்னிச்
சேடுஉறு தண்புனல் தெய்வத்திரு நதியின்
இரு கரையும் தெரிதிர் மாதோ”
(நாட விட்ட படலம் 766)

சீதையைத் தேடச் செல்லும் வானரர்களுக்கு, சுக்ரீவன் வழி கூறினான்., தொண்டை நாட்டைக் கடந்துபோய், அகன்று ஒப்புக்கூற வேறொரு நாடு இல்லாத, சிறப்பைக் கொண்ட பொன்னி என்ற காவிரி ஆறு பாயும் நாட்டை அடைந்தார்கள்.செந்நெல்லும், கரும்பும், பாக்கு மரங்களும் அடர்ந்து வழியில் நெருக்கமான தடையாகத் துன்பப்படுத்தும் வழிகளில் மிக்க முயற்சியுடன் செல்லலானார்கள்.

காவிரி பாய்வதால் நாடுவளம்    

அனுமன் தன் துணைவர்களுடன் சீதையைத் தேடிச் செல்கையில் சோழ நாடு கடந்தனர். சோழ வள நாட்டை ஐந்து பாடல்களில் வருணித்து மகிழ்கிறார். (கிட்கிந்தா காண்டம்- ஆறுசெல்படலம் 931,932,933,943)

"அன்ன தண்டக நாடு கடந்தகன்
பொன்னி நாடு பொரு இலர் எய்தினார்;
செந்நெலும் கரும்பும் கமுகும் செறிந்து,
இன்னல் செய்யும் நெறி யரிது ஏகுவார்".
(கிட்கிந்தா காண்டம்- ஆறுசெல்படலம் 930)

காவிரி வானரர் கருப்பு பொருந்திய வாயை உடைய நாரைகள் வாழ்கின்ற நீர் கரைகளில் முளைத்து வளர்ந்துள்ள, இளமையான தென்னை மரத்தினது கழுத்து பக்கம் சுமந்து கொண்டிருக்கும், விருப்பத்தை தரும் பழுத்து கீழே விழுந்த காய்களால் தடுக்கி விழுபவர்களும், மனம் மிக்க தேன் பெருக்கினால் வழுக்கி விழுபவரும் ஆனார்.

"கொடிறு தாங்கிய வாய்க் குழு நாரைவாழ்
தடறு தாங்கிய கூனிளந் தாழையின்
மிடறு தாங்கும் விருப்புடைத் தீங்கனி
இடறுவார்; நறுந் தேனின் இழுக்குவார்"
(கிட்கிந்தா காண்டம்-ஆறுசெல்படலம் 931)

கரிய நிறத்தை உடைய நீர் காக்கைகள் ஒன்று கூடி, மீன்கள் வளர்ந்து வாழும் சிறிய குட்டை என்று மனத்தில் கொண்டு எழும்பி, பாடல் போன்று ஒலிக்கும் கரும்பாலைகளில் இருந்து, ஒழுகிப் பாயும் கருப்பஞ் சாற்றைத் தாங்கிய மிடா எனும் கலத்தில் ஒன்றன்பின் ஒன்றாக முழுகி மேல் கிளம்பும்.

"குழுவும் மீன் வளர் குட்டம் எனக் கொளா
எழுவு பாடல் இமிழ் கருப்பு எந்திரத்து
ஒழுகு சாறுஅகன் கூனையின் ஊழ்முறை
முழுகி நீர்க் கருங் காக்கை முளைக்குமே".
(கிட்கிந்தா காண்டம்-ஆறுசெல்படலம் 932)

பூக்களில் நெருங்கி மொய்க்கின்ற வண்டுகள் தங்கிய சோலைகள் தேனை மிகுதியாக சொரிவதால், அது இன்னது என்று தெரியாமல், அந்தத் தேனை மீன்கள் நிறைந்த வெள்ளம் என்று அஞ்சி, அந்தச் சோலையில் வாழும் குரங்குகள் கீழே இறங்கி வராது மரத்தின் மேலேயே இருக்கும்.

"பூ நெருங்கிய புள்ளுறு சோலைகள்
தேன் ஒழுங்கு சொரிதலின், தேர்வில
மீன் நெருங்குறும் வெள்ளம் வெரீஇப், பல
வானரங்கள் மரங்களின் வைகுமால் ".
(கிட்கிந்தா காண்டம்-ஆறுசெல்படலம் 933)

தாழை மரங்கள், கொலைகள் தோன்ற பெற்று விளங்கின அந்தத் தாழையின் அருகில் உள்ள மாமரங்களில் பழுத்து தொங்கும் மாம்பழங்கள், தாழைகளின் மகரந்தப் பொடிகள் பதியப் பெற்று, அம்மணத்தையே வீசின. வயல்களில் நாற்றுக்கள் தோன்றின. அந்த நாட்டை வளர்க்கின்ற குழைசேறுகள் தம்மிடம் முளைத்து மலர்ந்துள்ள செங்கழுநீரின் தொடர்பால் அந்தச் செங்கழுநீர் மணத்தை வீசின.

"தாறு நாறுவ, தாழைகள் தாழையின்
சோறு நாறுவ, தூம்புகள் மாங்கனி
நாறு நாறுவ, நாறு வளர்க்குறும்
சேறு நாறுவ, செங்கழுநீர் அரோ"
(கிட்கிந்தா காண்டம்-ஆறுசெல்படலம் 934)

இவ்வாறு வளம்மிக்க பொன்னி நாடாகத் தமிழ்நாடு இருந்தது என்று கம்பர் காட்டுகிறார்.

காவிரிஆறு

’காவிரி நாடன்ன கழனிநாடு’ என்று கோசலநாட்டின் சிறப்பைக் கூற வந்தவர், காவிரிஆறு பாய்கின்ற சோழநாட்டைப் போன்ற கோசலநாடு என்று கூறுகிறார். ஒரு நாட்டின் பெருமையை விளக்குவதற்கு எடுத்துக் காட்டாய் நிற்பது காவிரி. ஆறு என்றாலே அது காவிரி ஆறையேக் குறிக்கும் என்கிறார்.

கம்பரும் காவிரி ஆற்றை, கங்கைக்கு ஒப்பானது என்று கருதினார். கங்கை ஆற்றில் பொன்னிறமான கொன்றை மலர்கள் வீழ்ந்து, கங்கை ஆற்றையே பொன்னிறமாக்கி விடுகிறதாம். அவற்றினை காணும்போது, பொன்னிறமுடைய காவிரியைப் போன்று அது காணப்படுகிறது என்று கம்பர் குறிப்பிடுகிறார். கங்கை, காவிரிஆகாது. ஏனெனில் அதில் கொன்றைமலர்கள் கலக்க வாய்ப்பில்லை. ஆனால் காவிரி, கங்கையாகும். ஏனெனில் இதில் கொன்றை மலரும் இருக்கிறது. புனிதத் தன்மையும் இருக்கிறது..கங்கையின் பெருமையைக் காட்டி, காவிரியின் இயற்கை வளத்தைக் கம்பர் குறிப்பிடுகிறார்.

"கன்னி இளவாழை கனி ஈவ; கதிர் வாலின்
செந்நெல் உள; தேன் ஒழுகு போதும் உள: தெய்வப்
பொன்னி எனல் ஆயபுனல் ஆறும் உள, போதா
அன்னம் உள, பொன் இவளொடு அன்பின் விளையாட"
(அகத்தியப்படலம் 173)

அகத்தியப் படலத்தில் ;கன்னி இள வாழைக்கனி’ அந்தப் பஞ்சவடியில் பழங்களை வழங்கும் மிக இளமையான வாழைமரங்கள் உள்ளன. அணிலின் வாலைப் போன்ற செந்நெல் கதிர்கள் உள்ளன. கடவுள் தன்மைப் பெற்ற காவிரி என்று கூறத்தக்க, நீர் நிறைந்த ஆறுகள் உள்ளன என்று கூறுமிடத்து தாய்நாட்டுப் பற்றும், காவிரியின் ஏற்றமும் புலப்படுகிறது.

நளன், சேது அணைக் கட்டினான். நூறு யோசனை நீளமும், பத்து யோசனை அகலமும் கொண்ட அணை அது. அணைக்கட்டி முடிந்ததும், வீடணன் முன்னால் நடந்தான். கருநிற இராமனும், அவன் வெற்றி புனை தம்பியும் பின் நடந்தனர். கடைசியில் நிறைநூல் கற்று உணரும் மாருதி வந்தான். பெருந்திரளான வானரங்களைக் கொண்ட சேனைகள் நவமணிகளையும், சந்தனச் கட்டைகளையும், அலை கடலில் வீழுமாறும் செல்லும் காவிரி போன்று நடை போட்டது. சேனை, கடல்மீது நடந்து சென்ற வானரப் படையானது,. குறிஞ்சி முதலான நிலங்களில் உள்ள பொருள்களைப் புரட்டிச் செல்வதால் ’பொன்னி’ என ஆயிற்று. பொன்னி என்று முடித்தும் மனம் ஆறாத கம்பர் காவிரியை மேலும் உவமித்து விவரித்தார்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐவகை நிலப்பாகுபாடுகளைப் பாடுவது தமிழ் இலக்கிய மரபு, கம்பர் காவிரியை இலங்கைமீது கட்டப்பட்ட சேதுவைப் புகழ்ந்து பாடுகிறார்.:காவிரிப் பூம்பட்டினக் கடலில், காவிரி கலக்கிறது. கருங்கடலில் பொன்னியாறு கலக்கும்போது ஏற்படும் நிற,தன்மை மாற்றங்களை,

"இருங்கவி கொள் சேனை, மணி ஆரம் இடறித் தன்
மருங்கு வளர் தெண்திரை வயங்கு பொழில் மான,
ஒருங்கு நனி போயின - உயர்ந்த கரை யூடே
கருங் கடல் புகப் பெருகு காவிரி கடுப்ப"
(ஒற்றுக் கேள்விப்படலம் 692)

என்று பாடுகிறார்.

மணிகளையும், மாலைகளையும் இடறிக்கொண்டு தன் இரண்டு பக்கங்களிலும் ஓங்கிய தெளிவானலலைகள் சோலைகளைப்போல விளங்க, உயர்ந்த கரைகளின் இடையே கரிய கடலில் புகுமாறு பெருகுகின்ற காவிரி போல, பெரிய குரங்குகளைக்கொண்ட, படைகள் அந்த அணை மீது திரண்டு சென்றன.

தாங்கள் கட்டிய பாலத்தில் வானரப்படைகள் மகிழ்வோடு சென்றன.அவ்வாறு செல்வது என்பது, காவிரியாறு கடலில் கலக்கும்போது விரைவுபோல மகிழ்ச்சியளிப்பது போல இருந்தது.

"ஓதிய குறிஞ்சி முதலாய நிலன் உள்ள
கோது,இல அருந்துவன கொள்ளையின் முகந்துற்று
யாதும் ஒழியா வகை சுமந்து, கடல் எய்தப்
போதலினும், அன்ன படை பொன்னி எனல் ஆகும் "
(ஒற்றுக் கேள்விப்படலம் 693)

கம்பர் காவிரி நாட்டினர். வளமான இயற்கையை எங்குக் கண்டாலும் பொன்னி ஆற்றையும், பொன்னான சோழ நாட்டையும் ஒப்பிட்டு மகிழ்வார். அவ் இடங்களில் சில

அனுமன் மருத்துவ மலையைத், தேடி இமயம் அடைந்து, பல மலைகளைக் கடந்தான். உத்தரகுரு என்னும் செழிப்பும், வளப்பமும் உடைய இடம் வந்தான். அவ் உத்தரகுருவை வருணிக்கும் கம்பர், அதனைக் காவிரி நாடு போன்றது என உவமித்தார். தமிழ் கம்பரின் நாட்டுப் பற்றை இது சுட்டும்.சோழநாட்டையும், அதனை ஆண்டு வரும் சோழஅரசனையும், காவிரியையும் இணைத்துக் கம்பர்

"வன்னி நாட்டிய பொன் மௌலி வானவன், மலரின் மேலான்,
கன்னி நாள் திருவைச் சேரும் கண்ணனும், ஆளும் காணி
சென்னி நாள் தெரியல் வீரன் தியாக மா விநோதன் தெய்வப்
பொன்னி நாட்டு உவமை வைப்பை புலன் கொள நோக்கிப் போனான்"
(மருத்துமலைப்படலம் 2702)

வன்னி மலரைத் தரித்த, பொன்னிறமான சடையைத் தலை மீது கொண்டவனான சிவனும், தாமரையில் வீற்றிருக்கும் பிரம்ம தேவனும், என்றும் இளையவளும் அழகுடையவளும் புதியவளுமான கன்னிப்பருவம் வாய்ந்த திருமகளைத் தன் திருமார்பின் மீது கொண்டுள்ள செந்தாமரைக் கண்ணனான திருமாலும், ஆட்சி செய்யும் தலமாகித் தலையில் அன்று மலர்ந்த மலர் மாலையைப் புனைந்த வீரனும், கொடையினையே தன் வினோதப் பொழுதுபோக்காகக் கொண்டவனுமான சோழனுடைய காவிரி வளம் செய்யும் நாட்டுக்கு, உவமையான நிலங்களைக் கண்ணால் கண்டு களிப்புடன் சென்றான்.

கம்பர் தமது தாயக மண்ணான காவிரியைக், கங்கையோடு ஒப்பிட்டும் மகிழ்ந்துள்ளார். பரதன் சேனையோடு கங்கைக் கரையை அடையும்போது,காவிரி வளம் செய்யும் சோழநாடு போன்ற வயல் வளமுடைய கோசலநாட்டை நீங்கி, இயங்காப் பொருள், இயங்கு பொருள் என இரு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ள எல்லா உயிரினங்களும் தனது நிலை கண்டு இரங்கி ஏங்க, கங்கைக் கரையை அடைந்தான்.

"பூ விரி பொலன் கழல், பொரு இல் தானையான்
காவிரி நாடு அன்ன கழனி நாடு ஓரீஇ
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிட கங்கை எய்தினான்"
(கங்கை காண் படலம் 985)

காவிரி நதியைப் போன்ற கடைவீதி

மிதிலைக் காட்சிப் படலத்தில் அளவில்லாத இரத்தினங்கள்-பொன் முத்துகள் – கவரி மானின் வால்-காடுகளில் உண்டாகும் அகிற்கட்டைகள்-மயில் தோகைகள்-யானைத்தந்தங்கள் ஆகியவற்றை, வயல்களுக்கு வரம்புகளை அமைத்து முடிக்கும் உழவர்கள் குவித்து வைக்குமாறு இரு கரைகளிலும் பரவச் செல்கின்ற காவிரி நதியைப் போன்ற கடைவீதிகளை அவர்கள் கண்டார்கள்.

“குரப்பு அணை நிரம்பும் மள்ளர் குவிப்புற கரைகள் தோறும்
பரப்பிய பொன்னி அன்ன ஆவணம் பலவும்கண்டார்”
(மிதிலைக்காட்சிப்படலம் 495

இரு கரைகளிலும் காவிரி ஆற்றில் அடித்துவரப்பெற்ற பெரும் பொருட்கள் கிடக்கின்றன என்று கம்பர் குறிப்பிடுகிறார். பல பொருட்கள் குழுமிய காவிரியாற்றின் இரு கரை போல வணிகமையங்கள் அமைந்திருக்க, நடுவில் ஆறு போல வீதி அமைந்திருக்கக் காவிரியை மிதிலைநகர வீதிகளுடன் ஒப்பிடுகின்றார்.

முடிவுரை

கங்கையைப் போன்றே காவிரியும் இந்துக்கள் தொழும் தெய்வத்தன்மை உடையதாகும். அகத்தியரே, காவிரி நதியை கமண்டலத்தில் வைத்திருந்தார், அதைக் காக்கை உருவில் வந்த விநாயகப்பெருமான் கீழே கவிழ்த்து, காவிரி நதியாக ஓடச்செய்தார் என்று பிராணங்கள் கூறுகின்றன.மிதிலை நகரக் கடைவீதி காவிரிநதியைப் போன்று இருந்தது என்றும், பரதன் கங்கைக் கரையை அடைந்தது, சேது அணை கட்டியபோது என்று வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் கம்பர் காவிரியின் பெருமையைக் கூறிச் சென்றுள்ளதை அறியமுடிகிறது..

துணை நூற்பட்டியல்

1. இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம்,    சென்னை,2016.

2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு,     (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம்  ,  புதுச்சேரி, சென்னை.

3.கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப்   பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

4. எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.

5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளிபதிப்பகம், சென்னை,2019.

6. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6,7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

7. செல்வம்.கோ,கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை 2016.

8. கம்பராமாயணத்தில் ஆறுகள் http://www.muthukamalam.com/essay/literature/p304.html

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.