
யாழ்ப்பாணம் அல்லைப்பிட்டிப் பகுதியில் , பொலிசாரின் வேண்டுகோளையும் புறக்கணித்துத் தப்பி வாகனத்தில் விரைந்த, வட்டுக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த, 17 வயதுள்ள , அயூப்ராஜ் அருள் என்னும் சிறுவன் கொல்லப்பட்டிருக்கின்றான். வழக்கம்போல் பல்வேறு விமர்சனங்கள், குற்றச்சாட்டுகளால் சமூக ஊடகங்கள் நிறைந்து வழிகின்றன.
பொலிசார் அவ்வப்போது மேலதிகமாகத் தம் பலத்தைப் பாவிப்பதால உயிர்கள் பறிபோவதென்பது உலகின் பல பாகங்களிலுன் அவ்வப்போது நடைபெறுமொன்று. இங்கும் அதுதான் நடந்திருக்கின்றது. பொலிசாரின் நடவடிக்கையைக் கடந்த கால வரலாற்றுடன் இணைத்துப் பார்க்கும் போக்கென்பது நம்மவரின் பலரின் பொதுவான பண்பு. இவ்விடயத்திலும் அதைக் காணலாம்.
இங்கு நடந்ததென்ன?
பொலிசாரின் வேண்டுகோளையும் புறக்கணித்துச் சிறுவன் தப்பியோடியிருக்கின்றான். அது சட்ட மீறல். அந்தச் சட்ட மீறலுக்கு அவன் சுடப்பட்டிருக்க வேண்டுமா? இல்லை. அவனால் பொலிசாருக்கு ஆபத்து எதுவும் ஏற்படாத நிலையில் அவனைச் சுட்டிருக்கத் தேவையில்லை. அப்படியே சுடுவதாக இருந்திருந்தாலும் வாகனத்தின் டயர்களைச் சுட்டு நிறுத்த முயற்சி செய்திருக்கலாம். அவனை விரட்டிச் சென்று கைது செய்ய முயற்சி செய்திருக்கலாம். ஏனைய பொலிசாரின் உதவியை நாடியிருக்கலாம். இங்கு பொலிசார் தேவையின்றி சிறுவன் ஒருவனைச் சுட்டுக்கொன்றிருக்கின்றார்கள்.
இதற்கெதிராகப் பாதிக்கப்பட்ட சிறுவனின் குடும்பத்தினர் பொலிசுக்கெதிராக நீதிமன்றத்தின் உதவியை நாட வேண்டும். உரிய நட்ட ஈட்டைக்கோர வேண்டும். அதுவே தற்போதுள்ள சூழலில் சரியான நிலை. முறையான நீதி விசாரணையில் பொலிசார் குற்றம் புரிந்தது நிரூபிக்கப்பட்டால் அவ்விடயத்தில் சட்டம் தன் கடமையைச் செய்யும்.
இப்பொழுது சமூக ஊடகங்களில் அச்சிறுவனின், குடும்பத்தினரின் பின்னணி, போதைப் பொருட்களைக் கையாடும் வன்முறைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அச்சிறுவனும், அவனுடனிருந்தவர்களும் என்றொரு தர்க்கமும் தலை விரித்தாடுகின்ற்து. அவன் வாகனச் சாரதிப்பத்திரம் அற்றவன். பொலிசாருக்குப் பணம் கொடுத்தே இதுவரை வாகனம் ஓட்டி வந்தவன். இவ்விதம் அச்சிறுவனின் சிறிய தாயார் குறிப்பிட்டதாகவும் செய்தியொன்று உலா வருகின்றது.
இவையெல்லாம் அச்சிறுவனின் மரணத்தை நியாயப்படுத்துமா? இல்லை.
இங்குள்ள பிரச்சனை பொலிசாரின் நடவடிக்கையும், மேலதிக வலுவைப் (Force) பாவித்தமையும் அதனால் ஏற்பட்ட மரணமும் பற்றியதுதான். ஏனைய விடயங்கள் நீதி மன்றத்தில் நிரூபிக்கப்படாத விடயங்கள். அச்சிறுவன் குற்றம் புரிந்திருந்தால் அவன் நீதி மன்றத்தின் முன் நிறுத்தப்பட்டுத் தண்டிப்பட்டிருக்க வேண்டும். தண்டிக்கப்பட வேண்டும்.
அவன் சட்ட விரோதமாக வாகனம் ஓட்ட உடந்தையாகப் பொலிஸ் இருந்துள்ளதென்ற , அவனது சிறிய தாயின் கூற்று உண்மையாகவிருந்தால், அச்சிறுவனைத் தொடர்தும் வாகனச்சாரதிப் பத்திரமற்று வாகனத்தை இயக்க விட்டது பொலிசின் மிகப்பெரிய தவறு. அந்தத்தவறே இன்றுள்ள நிலைக்கு அடிப்படைக் காரணம். இவ்விடயத்தில் முறையான விசாரணை நடைபெற்று , இந்த நடைமுறை முற்றாக ஒழிக்கப்படுதல் அவசியம். இது மட்டும் உண்மையாகவிருந்தால் தற்போது எத்தனை பேர்சட்டவிரோதமாக வாகனங்களை ஓட்டிக்கொண்டிருப்பார்கள் என்பது அச்சத்தைத் தருகின்றது. இது ஏனைய சட்டபூர்வமாக இயங்கிக்கொண்டிருக்கும் வாகனச் சாரதிகளின், பொதுமக்களின் பாதுகாப்பைக்கேள்விக்குரியதாக்கும்.
இங்கு இச்சிறுவனின் மரணத்திற்கு அடிப்படைக் காரணங்கள் இரண்டு:
1.பொலிசார் மத்தியில் நிலவும் இலஞ்சம். பணம் வாங்கி அச்சிறுவனை வாகனம் ஓட்ட அனும்தித்திருக்கின்றார்கள் என்னும் குற்றச்சாட்டு பாரதூரமானது. உண்மையாகவிருக்கும் பட்சத்தில் கடும் தண்டனையை வேண்டி நிற்பது.
2. பொலிசார் தேவைக்கு அதிகமான வலுவைப் பாவித்திருக்கின்றார்கள். அதுவே அச்சிறுவனின் மரணத்திற்குக் காரணமாக அமைந்திருக்கின்றது.
பொலிசாரின் இந்நடவடிக்கையை யாரும் அரசியலாக்கத்தேவையில்லை. இப்பிரச்சனை சட்டத்தின் மூலம் கையாளப்பட வேண்டியதொரு பிரச்சனை. சட்டம் தன் கடமையைச் செய்யட்டும். பாதிக்கப்பட்ட அச்சிறுவனின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கட்டும். எதிர்காலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாதிருக்கும் வகையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படட்டும்.