தோழர் குட்டி ‘தீப்பொறி’, ‘தமிழீழ மக்கள் கட்சி’, மற்றும் ‘மே 18 இயக்கம்’ போன்ற அமைப்புகளுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து செயற்பட்டவர். அமைப்பின் ஒவ்வொரு முன்னெடுப்புகளிலும் தீவிரமாக தன்னை வெளிப்படுத்தியவர். அமைப்பிற்காக லண்டனில் மாத்திரமன்றி, ஏனைய ஐரோப்பிய தலைநகரங்களிலும் பணியாற்றியவர்.
 
எம்மால் வெளியிடப்பட்ட ‘உயிர்ப்பு’ சஞ்சிகையை அச்சிட்டு வெளியிடுவதில் முக்கிய பங்காற்றியவர். ‘வியூகம்’ சஞ்சிகை வெளிவந்தபோது அதன் வெளியீட்டு விழாக்களை லண்டனின் ஒழுங்கமைத்தவர். அண்மையில் நான் தொகுத்து வெளியிட்ட ஈழப்போராட்டம் தொடர்பான மூன்று நூல்கள் வெளியானபோது அவற்றை லண்டனில் மாத்திரமன்றி, பாரிஸ், சூரிச் நகரங்களிலும் வெளியிடுவதற்கான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்தவர். பாரிஸ் கூட்டத்தில் கலந்துகொண்டது மட்டுமன்றி கூட்டத்தில் நடைபெற்ற விவாதங்களிலும் தீவிரமாக ஈடுபட்டவர்.
 
தீவிரமான அரசியல் பிரக்ஞையும், அர்ப்பணிப்பும் உள்ள தோழர் குட்டியின் இழப்பானது தோழர்களைப் பொறுத்தவரையில் ஈடுசெய்ய முடியாத பெரிய இழப்பாகும்.
 
குடும்பத்தினரான மனைவி, மற்றும் மூன்று சிறுவர்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வழிதெரியாமல் தவிக்கிறோம். அவர்களது துயரை நாமும் பகிர்ந்து கொள்கிறோம்.
மனிதர்கள் யாருமே பூரணத்துவம் வாய்ந்தவர்களோ, அல்லது பலவீனங்களுக்கு அப்பாற்பட்டவர்களோ கிடையாது. ஆனால் இந்த மனிதர் எங்கெல்லாம் அவரது பாத்திரம் தேவைப்பட்டதோ அங்கெல்லாம் முன்னின்று பெருஞ்சுமையை சுமந்தவர். அப்படிப்பட்ட ஒரு புரட்சிகர போராளிக்கு நாம் செவ்வணக்கம் செலுத்தி இறுதி விடைகொடுக்கும் நேரம் வந்துவிட்டது. கனத்த இதயத்துடனும், அவரை காப்பாற்ற தவறிவிட்டோமே என்ற குற்ற உணர்வுடனும்தான் இந்த வழி அனுப்புதலை செய்ய முடிகிறது