முன்னுரை

   பெண்களின் கண்களுக்கு மானின் கண்களை ’மருளுதல்’ என்பதற்கு உவமையாகப் புலவர்கள் குறிப்பிடுவர். கம்பராமாயணத்தில் கவரிமான், நவ்வி மான், புள்ளிமான் என மான்கள் குறித்து கூறப்பட்டுள்ளன. தன் காவியத்திற்கு சிறப்பு சேர்க்கும் விதமாகக், கம்பர் உவமையைக் குறிப்பிடும்போது, மானை பற்றி சில இடங்களில் கூறிச் சென்றுள்ளார். மான் கூட்டம் போன்ற மங்கையர்கூட்டம், புலியைக் கண்ட புள்ளிமான் போல, புலி தன்னைத் தின்ன வருவதைக் கண்ட மான் போல, வலையில் அகப்பட்ட மான் போல, என்றெல்லாம் குறிப்பிடுகிறார். முனிவர்கள் மான் தோலைப் பயன்படுத்தினர் என்பதையும், மான் ஊடல் கொண்டது குறித்தும், குறிப்பிடுகிறார். சீதை  மானைக் கேட்டு அடம்பிடித்ததையும், இலட்சுமணன் தடுத்தும் இராமன் மானின் பின் சென்றதையும், மாயமான் இறுதியில் அழிந்தது குறித்தும், கூறிச் செல்கின்றார். மான் பற்றிய செய்திகள் கம்பராமாயணத்தில் அமையும் விதம் குறித்து ஆராய்வோம்.

மான் கூட்டம் போல மங்கையர் கூட்டம்

மிதிலை நகரத்தில் இராமனைக் காண பெண்கள் வந்தனர். அவர்கள் மனம் இராமனைச் சென்று சேர்ந்தது. பள்ளத்தை தண்ணீர் தேடிச் செல்வதைப்போல, இராமனை நாடிச் சென்ற பெண்களின் கருங்குவளைக் கண்களைப் ’ பூத்த வெள்ளத்துப் பெரிய கண்ணார்’ என்கிறார். குடிக்கத் தண்ணீர் இல்லாத வறண்ட காலத்தில் சிறிதளவு  பருகத்தக்க நீரைக்கண்டு, அதைக் குடித்துத் தாகம் தீர்க்க ஓடிவரும் மான் கூட்டங்களைப்போல மங்கையர்க் கூட்டம் இராமனை நோக்கி ஓடி வந்தது.

                     “மண்ணின் நீர் உலந்து வானம் மழை அறவறந்த காலத்து
                      உண்ணும் நீர் கண்டு வீழும் உழைக் குலம் பலவும் ஒத்தார்” (உலாவியற்படலம் 1013)

மான் போன்ற மருண்டப் பார்வை

பெண்கள் மான் போன்ற கண்களை உடையர்கள் . பெண்களின் கண்களை வர்ணிக்கும்போது மானின் பார்வை போன்றது என்பர்.

         “மான் அமர் நோக்கினாரை மைந்தரைக் காட்டி வாயால்” (களியாட்டுப்படலம் 2772)

         “மாப்பிறழ் நோக்கினார் தம் மணி நெடுங் குவளை வாட் கண்”  (களியாட்டுப்படலம் 2775)

இராமன் கன்னிமாடத்தில் நின்றிருந்த சீதையைக் கண்டு காதல் கொண்டு, அவளின் நினைவால் துன்பம் அடைந்தபோது, மான் விழிச் சீதையோடு சென்ற நெஞ்சமே என்று கூறுகிறான். இளமானின் பார்வையையுடையவளே என்று இராமன் சீதையின் பார்வைக் குறிப்பிடுகிறான்.

       “மன்றலின் மலி கோதாய் மயில் இயல் மட மானே” (வனம்புகு படலம் 683)

                       “மெய்ஞ் ஞிறை விரி சாயல் கண்டு நின் விழி கண்டு
                    மஞ்ஞையும் மட மானும் வருவன பல காணாய்” (வனம்புகு படலம் 686)
       
முதுகில் வளைவு கொண்ட நத்தைகள் எல்லாம் தாம் ஈன்ற முத்துகள், பெண்களின் பற்களுக்கு ஒப்பாகாமல் தோற்றுவிட்டதால், மான் போன்ற பார்வை கொண்ட அம் மகளிரின் எதிரில் வெளிப்பட்டு அவர்களைப் பார்க்கவும் வெட்கப்பட்டுத் தன் மேன்மையான இயல்பால் ஒளித்து விட்டது போல ஒடுங்கிய கண்களையுடையனவாய்ச் சேற்றில் மூழ்கின.

                                   “ஒளித்தன வாம் என ஒடுங்கு கண்ணன
                                   குளித்தன மண்ணிடைக் கூனல் நந்து எலாம்”  (கார்காலப்படலம் 559)

இராமனைப் பார்க்க வரும் சூர்ப்பணகைத் தன்னை ஓர் அழகான பெண்வடிவம் பெற்று வரும்போது, ஒப்பற்ற மானின் மருண்டப் பார்வையைப் பெற்று ஒரு மயில் வருவது போல வந்தாள் என்றே குறிப்பிடுகின்றார். சடாயு உயிர் நீத்த படலத்தில் இராவணன்  மான் போன்றவளான சீதையிடம் பேசினான்.(சடாயு உயிர் நீத்தபடலம் 857)

மான் கூட்டம்

வனம்புகு படலத்தில் பூக்களும், அரும்புகளும் மிகுந்து இடையிடையே பறவைகள் நிறைந்து பல நிறங்களை உடைய கொடிகள், மான் கூட்டங்களும், மயில்களின் கூட்டங்களும், குயில்களின் கூட்டங்களும் வாழ்கின்ற இந்தக் காட்டுப்பகுதிகள், தீயைப் போலும், செந்நிறச் சித்திர வேறுபாடு அமைந்த திரைச் சீலைகளை ஒத்திருப்பதைப் பாராய் என்று இராமன் சீதையிடம் கூறினான்.

                  “மான் இனம் மயில் மாலை குயில் இனம் வதி கானம்
                  தீ நிகர் தொழில் ஆடைத் திரை பொருவன பாராய்” (வனம் புகு படலம் 698)
                                          
கவரி மான்

பக்கமலையின் பல இடங்களில் கவரிமான்களின் பால் போலும் வெண்ணிறமுடைய வால்கள் விரைவாக அசைவன அவற்றைப் பாராய் என்றான் இராமன்.

                             “கவரிபால் நிற வில் புடைபெயர்வன கடிதின்”  (சித்திரக்கூடப்படலம் 732)

பட்டத்து யானையையுடைய தசரதன், முரசுகள் முழங்க காட்சிக்கு இனிய கவரிமானின் மயிரால் செய்யப்பட்ட சாமரைகள் இருபுறமும் வீச மந்திராலோசனை மண்டபத்தை அடைந்தான்.

                             “கண்ணுறு கவரியின் கற்றை சுற்றுற
                              எண்ணுறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான்”  (மந்திரப் படலம் 1)

சாமரம் வீச கவரிமானின் மயிர் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை அறியமுடிகிறது.

தசரதனின் அமைச்சர்கள் சிறந்த குணங்களைக் கொண்டவர்கள் என்று குறிப்பிடும்போது, அரிய நூல்களைத் தெரியக் கற்றவர்கள். மானத்தின் சிறப்பை மதிப்பிட்டால், மயிர் நீப்பின் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள்.

                   “பெற்றியர் பிறப்பின் மேன்மைப் பெரியவர் அரிய நூலும்
                    கற்றவர் மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார்” (மந்திரப் படலம் 6)

கவரிமானின் வால் வெள்ளை நிறம் உடையதெனவும், முடி சாமரம் செய்ய பயன்பட்டது என்பதையும், மானத்திற்கு மயிர் நீப்பின் வாழாது என்பதையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

நவ்விமான்
          
 நடனம் செய்யும் மயில் போல நடந்து வருகின்ற மானின் பார்வை பெற்ற மங்கையரும், வாலிப வீரர்களும் தம்முள் கலந்து திரிந்தனர்.

                            “நடிக்கும் மயில் என்ன வரும் நவ்வி விழியாரும்” (சந்திரசயிலப்படலம் 776)

மான் போன்ற மருண்ட விழிச்சீதையுடன் ஓர் இரவு இராமன் சரவங்கன் ஆசிரமத்தில் தங்கியிருந்தான் எனச் சொல்ல வந்தபோது, சீதையின் கண்களை நவ்வியின் விழி என்றான்.

                          “நவ்வியின் விழியவளோடு நனி இருளைக்
                          கவ்விய நிசி ஒரு கடையுறும் அளவின்” (சரவங்க    படலம் 35)

புள்ளிமான்

உழை என்பது புள்ளிமான்.’வல்லியம் மருங்கு காண் மான்’ என்று சீதையை வர்ணித்தபோது மான் என்றது புள்ளிமானையே இருக்கும்.
மிதிலை நகரத்தில் உள்ள, புது மலரால் நனைந்தக் கூந்தலை உடைய மகளிர் வண்டுக் கூட்டம் மிகுதியாக ஆரவாரம் செய்யவும், கால்களில் உள்ள சிலம்புகள் ஒலிக்கவும், விரைவாக வந்து வீதியில் நிறைந்தார்கள்.அவர்கள் வந்த காட்சி மான் கூட்டம் வருவது போலவும், மயில் கூட்டம் திரிவது போலவும் இருந்தது.

                               “மான் இனம் வருவ போன்றும் மயில் இனம் திரிவ போன்றும்” (உலாவியற்படலம் 1010)
கலைமான்
         
கலைமானை வாகனமாகக் கொண்டவள் மலைமகள் பார்வதி. (மந்திரப்படலம் 39)

மான் தோல்
     
நகர்நீங்குபடலத்தில் பெருமையோடு அணியத்தக்க மகுடத்தையும், பொன்னாலான அரியாசனத்தையும், வெண்கொற்றக் குடையையும், பெருமை பொருந்திய மார்பையும் அங்கே தங்கியிருக்கும் திருமகளையும், நான் சிறப்புற்ற மரவுரியையும், கிருஷ்ணாஜிதம் என்னும் மான் தோலையும் அணிந்து கொள்வதைக் கண்ணால் காணாமல் இவ்வுலகை விட்டுச் சென்றால் அச்செயல் நல்லதாகும் என்று தசரதன் இரங்கிப் புலம்பினான்.

                 “மாணா மரவற்கலையும் மானின் தோலும் அவை நான்
                 காணாது ஒழிந்தேன் என்றால் நன்று ஆய்ந்து அன்றோ கருமம்” (நகர்நீங்கு படலம் 357)

பரத்வாசர் கையில் குடையைப் பெற்றவர். பெரிய சடை முடியை உடையவர். மானினது உரித்த தோலைப் போர்த்தவர்.

                “குடையினன் நிமிர் கோலன் குண்டுகையினன் மூரிச்
                 சடையினன் உரி மானின் சருமன் நல் மர நாரின்” (வனம்புகுபடலம் 701)

அம்பு பட்ட மான் போல

இராமன் காடு செல்ல அதைக் கண்ட மகளிர்,மேகக்கூட்டம் போன்ற தம் கூந்தல் அவிழ்ந்து  மண்ணில் புரள, தாம் அணிந்த ஆபரணத்தொகுதி சிதறி விழ, அம்பால் அடிபட்டுச் சோர்கின்ற பெண்மானின் கூட்டங்கள் வருந்துவன போல வருந்தினர்.

                         “இழைக் குலம் சிதறிட ஏவுண்டு ஓய்வுறும்
                          உழைக்குலம் உழைப்பன ஒத்து ஓர் பால் எலாம்”
                                                                                                           (நகர் நீங்கு படலம் 488)

புலிகள் பல திரிகின்ற காட்டிலே புள்ளிமான்

அகத்தியப்படலத்தில் இராமனிடம், முனிவர்கள் குறையைக் கூறினர். வில் வீற்றிருக்கும் தோளை உடையவனே, புலிகள் பல திரிகின்ற காட்டிலே உள்ள புள்ளிமானைப் போல, இரவும் பகலும் இன்னலடைந்து, இரங்கி அவ்வரக்கர்களை எதிர்க்கும் ஆற்றல் அற்றவராய் இருக்கின்றோம். அதனால் அறநூல்கள் கூறும் தர்மநெறியாகிய தவத்துறையை விட்டு நீங்கினோம். இத்துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவோமா என்றனர்.

               “வல்லியம் பல திரி வனத்து மான் என” (அகத்தியப்படலம் 128)

ஆண் சிங்கத்தைக் கொல்லும் மான்குட்டி
          
சடாயு உயிர் நீத்த படலத்தில் இராவணன்  மான் போன்றவளான சீதையிடம், எளியவரான மனிதர்கள், வலியவரான அரக்கர்களை அடியோடு அழித்து வெற்றி பெறுவார்கள் என்றால், யானைக் கூட்டங்கள் அனைத்தையும் ஒரு சிறு முயல் கொன்று விடும். மேலும், வளைந்த நகங்களையுடைய ஆண் சிங்கத்தை ஒரு மான் குட்டி கொன்றுவிடும் என்று கூறினான்.

                      “யானையின் இனத்தை எல்லாம் இள முயல் கொல்லும் இன்னும்
                       கூன் உகிர் மடங்கல் ஏற்றின் குழுவை மான் கொல்லும் என்றான்” (சடாயு உயிர் நீத்தபடலம் 857)

அதற்கு பதில் அளிக்கும் முகமாக சீதை, இராவணனிடம் நீங்கள் சொன்ன ஆண் சிங்கம், என் பெருமானாகிய வள்ளல், மான் கூட்டம், அரக்கர் கூட்டமே,அந்த அரக்கர் சுற்றத்தோடு முற்றிலும் அழியும் விதத்தையும், தேவர்கள் உயர்வு பெறும் விதத்தையும், நாளைக்கே பார்ப்பீர்கள், அல்லவா? நீங்கிச் செல்லாத தருமத்தைப் பாவம் வென்று விடுமா? மாசற்ற முனிவரான நீங்கள் இதை அறியவில்லையோ? என்று சீதை கூறினாள்.

                         “வாள் அரி வள்ளல் சொன்ன மான் கணம் நிருதர் அன்னார்
                          கேளொடு மடியுறும் வானவர் கிளருமாறும்”  (சடாயு உயிர் நீத்த படலம் 859)

புலியைக் கண்ட புள்ளி மான்கள் போல்

சடாயு, சீதையிடம் பயப்படாதே என்று கூறிய பின், இராவணனுக்கு அறிவுரை கூறியது. எல்லா உலகங்களில் உள்ளவர்களும், தேவர்களின் தலைவனான இந்திரனும், அவன் ஒழித்த அவனினும் உயர்ந்தவர்களான மும்மூர்த்திகளும், உயிர்களைக் கொல்லும் எமனும், இராமனைப் பார்த்ததும் புலியைக் கண்ட புள்ளிமான்கள் போல் ஆவார்களே அல்லாமல், அந்த வில் வீரனாகிய இராமனை வெல்லும் வல்லமை உள்ளவர் ஆவாரோ? ஆகமாட்டார் என்று கூறினான்.

                              “புல்வாய் புலி கண்டதுபோல்வர் அலால்
                               வில்லாளனை வெல்லும் மிடுக்கு உளரோ” (சடாயு உயிர் நீத்த படலம் 898)

புலி தன்னை தின்ன வருவதைக் கண்ட  பெண் மான் போல

நிந்தனைப் படலத்தில் அரம்பையர் கூட்டமும், மற்றவர் தொகுதியும் வேறிடத்தில் விலகி நிற்க, இராவணன் மட்டும் பெண்களுக்குள் பெரு விளக்கு போன்ற சீதை இருந்த இடத்தை அடைந்தான். அந்நேரத்தில், அவனைக் கண்டு அஞ்சிய சீதை உயிர்போவதுபோல நடுங்கி, உடலுக்கு மேலே வரிகளையும், உடலுக்குள்ளே வலிமையையும் பெற்ற கடுஞ் சினத்தால் புகை கக்கும் கண்களையுடைய ஒரு புலி தன்னைத் தின்ன வருவதைக் கண்ட மானைப் போல உருகிப் போனாள்.

                               “போயின உயிரளாம் என நடுங்கி
                                         பொறி வரி எறுழ் வலி புகைக் கண்
                              காய்சின உழுவை தின்னிய வந்த
                                          கலை இளம் பிணை எனக் கரைந்தாள்”  (நிந்தனைப் படலம் 426)

வலையில் அகப்பட்ட மானைப் போல
                   
சடாயுவின் வீரச் செயல்களால் வெட்கம் அடைந்த இராவணன், அவன் வீழ்ந்ததைக் கண்டு பெரிய வானம் முழுதும் மோதி ஒலிக்கும்படி ஆனந்தத்தால் ஆரவாரம் செய்து, பெருமை கொண்டான். வலையில் அகப்பட்ட மானைப் போல வருந்திச் சோர்பவளான சீதை, இனி என்ன செய்வது? என்று சிந்தித்தாள். பெருமூச்செறிந்தாள். அறிவு மயங்கினாள். தனக்கு எந்த ஆதரவையும் காணாதவள் ஆனாள். இந்நிலையளான சீதை, பற்றிப் படர நின்ற கொழுக்கொம்பு, இற்று ஒடிந்து போக, அதைச் சுற்றி நின்ற பூங்கொடி நிலத்தில் விழுந்து அலைந்தது போல நிலை குலைந்து வருந்தினாள்.

                      “வெள்கும் அரக்கன் நெடு விண் புக ஆர்த்து மிக்கான்
                       தொள்கின்தலை எய்திய மான் எனச் சோர்ந்து நைவாள்” (சடாயு உயிர் நீத்தபடலம் 930)

மான் கூட்டம், சிங்கத்தை வெல்ல நினைப்பது போல

சாரனிடம், இராவணன் மான் கூட்டம் சிங்கத்தை வெல்ல நினைப்பது போன்றதே, என்னை வானரக் கூட்டம் வெல்ல நினைப்பது என்று கூறுகிறான்.

                                            “வனங்களும் படர் வரைதொறும் திரி தரு மானின்
                                             இனங்களும் பல என் செயும் அரியினை என்றான்” (இராவணன் வானரத் தானை காண் படலம் 835)

ஆண் புலியை ஒரு பெண் மான் கொன்றது போல

இந்திரசித்தை, இலட்சுமணன் கொன்றதை அறிந்த இராவணன் ஆண் புலியை, பெண் மான் கொன்றது ஒக்கும் என்று கூறுகிறான்.இராவணன்,அழுதுத் துடித்தபோது அவனுடைய ஒவ்வொரு தலையும் ஒவ்வொரு விதமாகப் பேசியது.

                        “உழுவைப் போத்தை உழை உயிர் உண்பதே
                         செழுவில் சேவகனே எனும் ஒர் தலை” (இராவணன் சோகப்படலம் 3142)

            - கம்பர் சிலை -

புலியிடம், மான் கன்று பால் உண்ணுதல்

     வனம்புகு படலத்தில் வேடர்களும் முனிவர்களைப் போலக் கோபம் அற்றவராகி, எந்த உயிரையும் கொல்லாத அருள் பெற்றனர். தம் எதிரே தோன்றும் விலங்குகளைப் பற்றிக் கொல்லும் கொடிய விலங்குகள் இப்போது பசி இல்லாதனவாகவும், பகை இல்லாதனவாகவும் மாறின. பெண்புலிகளின் காம்புகளில் வாய் வைத்து மான் கன்றுகள் பால் அருந்தி மகிழ்ந்தது.

                  “தழுவி நின்றன பசி இல பகை இல தணிந்த
                   உழுவையின் முலை மான் இளங்கன்றுகள் உண்ட” (வனம்புகு படலம் 721)

ஆண் மானும் பெண் மானும்

பெண் மயிலும் , ஆண் மயிலும் ஒன்றாக உலாவ, பெண் மானும் ஆண் மானும் பிணைந்து வர ஒன்றாய்ப் பழகிய பெண் யானையும், ஆண் யானையும் எதிரே வந்து இணைந்து திரிய, இராமன் அவற்றைப் பார்த்தான். குயிலின் குரலும், கரும்பின் சாறும், செழிப்பான தேனும், குழலின் ஓசையும், யாழின் இசையும், கொழுமையான வெல்லப்பாகும், விரும்பி அருந்தும் அமுதமும் ஆகியவை சீதையின் சொல்லுக்கு முன்னே சுவையற்றன என்று கூறத்தகும் இனிய மொழிகளையுடைய சீதையைப் பிரிந்திருப்பதால் மயில் முதலிய இணைகளைக் கண்ட இராமன் இன்னல் அடைந்தான்.

                           “மயிலும் பெடையும் உடன் திரிய மானும் கலையும் மருவி வர” (சடாயு உயிர் நீத்தபடலம் 1053)

அமைதியாக இருந்த மான்கள்
               
கார்காலப் படலத்தில் தன் பார்வை அழகால், நம்மை வெற்றி கண்ட நுட்பமான இடையையுடைய பெண் தெய்வம் போன்ற சீதைக்குப் பொறுத்தற்கரிய துன்பத்தை மாரீசன் என்ற அரக்கன் மானான தன் வடிவத்தைக் கொண்டு செய்தான் என்பதால், நமக்கு உண்டாகின்ற அரிய மகிழ்ச்சியை வாயால் சொல்லோம் என்ற இராமனிடம் உண்டான அச்சத்தால் பேசாமல் மகிழ்ச்சி கொண்டதுபோல மான்கள், அந்த உருசிய முக மலையில் குரலைக் காட்டாமல் மகிழ்ச்சி கொண்டன.

                                   “ஆக்கினான் நமதுருவின் என்று அரும் பெறல் உவகை
                                    வாக்கினால் உரையாம் எனக் களித்தன மான்கள்”  (கார்காலப்படலம் 478)

சீதை, மான்களிடம் வேண்டுதல்

இராவணன், சீதையைப் பர்ணசாலையோடு தூக்கிச் செல்லும் போது, சீதை துயர மிகுதியால் பலவாறு கதறினாள். மலைகளே, மரங்களே, மயில்களே, குயில்களே, ஆண் மான்களே, பெண் மான்களே, ஆண் யானைகளே, பெண் யானைகளே ஒரு நிலையில் நில்லாது தத்தளிக்கும் உயிரையே பெற்றுள்ள எனது நிலையை, என் கணவர் இருக்கும் இடத்தைத்தேடிச் சென்று அழியாத ஆற்றல் பெற்ற அவரிடத்தில் சொல்வீராக என்றாள்.
                            “மலையே மானே  மயிலே குயிலே
                        கலையே பிணையே களிறே பிடியே”
                                                                                                                    (சடாயு உயிர் நீத்த படலம் 877)

இராமன், மானிடம்  வேண்டல்

மானே, விரும்பத்தக்க பொருள்களை விரும்பேன். மெய்மை நெறியினின்று தவறமாட்டேன்.பொருள்களின் நன்மை தீமைகளை நன்கு அறிவேன்.ஆயினும் அத்தன்மைகள் தற்போது என்னிடம் இல்லாமல் போனதால் பிழைபாடு உடையவன் ஆனேன். எனவே என் உயிருடன் சீதை பிரிந்து போனாள்.அவள் இப்போது எங்கிருக்கிறாள் கூறுவாயாக என்று வேண்டுகிறான்.

                     “பிழையேன் உயிரோடு பிரிந்ததனரால்
                      உழையே அவர் எவ் உழையார் உரையாய்” (கார்காலப்படலம் 495)

மானின் ஊடல்

ஆண் மான்கள் தாம் கொண்ட காமத்தின் முதிர்ச்சியால் எதிர்ப்பட்ட மரங்களில் எல்லாம் உராய்ந்து    நன்றாக உடல் தேய்ந்து வர, அம்மரங்களில் சந்தனம், அகில் முதலிய மணமுடைய மரங்களின் தொடர்பால் முதிர்ந்த                       கத்தூரியின் நறுமணம் உடலில் கமழ்ந்தது.  அதனால் அந்த ஆண் மான்களுடன் பெண்மான்கள் அவற்றை வேறு இனமான கத்தூரி மானோடு கூடி வந்தனவாக நினைத்து, ஊடல் கொண்டன என்பதை,

                        “ஓவிய மரங்கள் தோறும் உரைத்து உற உரிஞ்சி ஒண்கேழ்
                          நாவிய செவ்வி நாறக் கலையொடும் புலந்த நவ்வி" (கார்காலப்படலம் 474)

என்ற பாடலில் கம்பர் கூறுகிறார்.

                           மானும் ஊடல் கொண்டுள்ளது.
வெண் திங்கள் மானை நீக்கியது

நிகும்பலை யாகப் படலத்தில் இலட்சுமணன்,,இந்திரசித் இருவரும் எய்த அம்புகளால் நீண்ட வானம் மீன்களைச் சிந்தியது. ஞாயிறு வெயிலை நீக்கியது. கலை நிறைந்த வெண் திங்கள் தன் உடலிலுள்ள மானை நீக்கியது. ஆகாயம் மேகத்தை உகுத்தது. தொகுதியாகிய மலைகள் எட்டும் உதிர்ந்து பொடிப்பொடியாயின.

                              “மீன் உக்கது நெடு வானகம் வெயில் உக்கது சுடரும்
                               மான் உக்கது முழு வெண் மதி மழை உக்கது வானம்”  (நிகும்பலை யாகப் படலம் 2992)

மானைத் தூக்கும் யானை

தசரதன் கைகேயியைப் பார்த்து ‘இவளிடம் வந்து பற்றிக் கொண்ட துன்பம் எதுவோ? என்று வருந்தி வாடும் மனத்தவன் ஆனான். ஒரு மானைத் துதிக்கையிலே தூக்கும் யானையைப் போல, கைகேயியைத் தன் பெரிய கைகளால் தழுவி எடுக்க முயன்றான்.
                             “மடந்தையை மானை எடுக்கும் ஆனையேபோல்
                         தடங்கைகள்கொண்டு தழீஇ எடுக்கலுற்றான்”
                                                                                                            (கைகேயி சூழ்வினைப்படலம் 184)

ஆண் மானும் பெண்மானும்

திருவடிசூட்டு படலத்தில் பரதன் படைக்கு, பரத்வாசன் விருந்து அளித்தான் என்று கூறப்பட்டுள்ளது. அதில் செம்பஞ்சுக் குழம்பு தீட்டப் பெற்ற சிலம்பை அணிந்து தளிர் போன்ற பாதங்களையும்,நஞ்சினைப் போன்ற கண்களையும் உடைய தேவமகளிர், ஐந்து பொருள்களால் அழகுபடுத்தப்பெற்ற பஞ்சணையில் ஆண் மானருகில் படுத்திருக்கும் பெண்மானைப் போல தம்  அருகில் படுத்திருந்தனர்.

                            “நஞ்சு அடுத்தநயனியர்  நவ்வியின்
                             துஞ்ச அத்தனை மைந்தரும் துஞ்சினர்” (திருவடி சூட்டு படலம் 1067)

 மான் உரு கொண்ட மாரீசன்

இராவணனின் அச்சுறுத்தலால் மாரீசன், அவனிடம் என் தாயான தாடகையை, இராமன் கொன்றதால் நேர்ந்த அவமானத்தைத், தீர்த்துக்கொள்ள இரண்டு அரக்கர்களோடு இராமன் இருந்த தண்டகவனத்தில் மான் வடிவத்தில் புகுந்தேன். அப்போது இராமன் செலுத்திய அம்புகள் பாய்ந்ததனால், என்னுடன் வந்த இரு அரக்கர்களும் இறந்தனர். நான் பயந்து திரும்பி வந்துவிட்டேன் என்றான். இதைக் கேட்ட இராவணன் இப்போதும் நீ ஒரு பொன்மானாக மாறி அந்த மனிதர்கள் இருக்கும் இடம் சென்று சீதைக்கு ஆசையை உண்டாக்கு என்றான்.

மாயமானைக் கண்ட கலைமான்

 எவரிடமும் நிலைத்து நிற்காத மனமும், வஞ்சனை என்னும் குணமும் பெற்றுள்ள உண்மையான அன்பு இல்லாத வேசிகளிடமும் காமுகர்களாகிய ஆடவர் அனைவரும் மயங்கி விடுவதைப் போல, மாரீசனது மாய வடிவமான பொன்மானைக் கண்ட அந்த வனத்தில், இருந்த கலைமான் முதலிய மான்கள் யாவும் அலை வீசும் கடல் போல பெருகிய ஆசையுடனே அப்பெண் மானின் பின்னே ஓடி வந்தன.

                    “கலைமான் முதல் ஆயின கண்ட எல்லாம்
                     அலை மானுறும் ஆசையின் வந்தனவால்
                     நிலையா மன வஞ்சனை நேயம் இலா
                     விலை மாதர்கண் யாரும் விழுந்தெனவே” (மாரீசன் வதைப்படலம் 765)

  மாயமானைக் கண்ட சீதை

 சீதை மாயமானைக் கண்டாள். இராமனிடம் சென்று மாற்று உயர்ந்த பொன்னால் அமைந்ததும், தனது மேனியின் சிறந்த ஒளியினால் வெகு தூரம் பிரகாசிப்பதும், வலிமையான காதுகளும், கால்களும் மாணிக்கமயமாய் அமையப்பெற்றதுமான ஒரு மான் இங்கு வந்துள்ளது. அது கண்டு களிக்கத்தக்கது என்று கூறினாள். (மாரீசன் வதைப் படலம் 770)
மான் குறித்து இலட்சுமணன் கருத்து

பொன்னாலான மேனி, மாணிக்க மயமான கால்கள், செவிகள் இவற்றைக் கொண்டு பாய்ந்து வருகின்ற வடிவம் பெற்ற இந்த மான், இயற்கைக்கு ஒத்தது அன்று. இது மாயமான் என்று எண்ணுக. அவ்வாறு எண்ணாமல் உண்மையான மான் என்று மனத்தில் நினைப்பது பொருந்துமோ இது சிறிதளவும் மெய்யான மான் அன்று என்றான் இலட்சுமணன்.

மான் குறித்து இராமன்

ஒழுங்கான அறிவினால் உலகில் உள்ளவை அறிய வல்லவர்களும், ஒரு நிலையில் நிலையாக நிற்காத இந்த உலகத்தின் நிலைமையை முற்றும் உணர்ந்தார் அல்லர். உலகில் நிலை பெற்று வாழும் பிராணிகள் பல ஆயிரம் கோடி வகைகளாகப் பரவியுள்ளன. ஆதலால் இவ்வுலகில் இத்தகைய வியப்பான பிராணிகள் இல்லாமல் இல்லை. நம் காதுகளினால், நம் கண்கள் காணாத வியப்பான பிராணிகள் உள்ளன என்பதைக் கேட்டு அறிகின்றோம் பொன்மயமான உடம்பைப் பெற்ற ஏழு அன்னப்பறவைகள் தோன்றியதை நீ அறிந்தது இல்லையா (பரத்வாஜ முனிவரின் 7 புதல்வர்கள் 7 பொன் நிற அன்னங்களாக தோன்றினர் என்பர்) உடனே சீதை இவ்வாறு நீங்கள் பேசிக் கொண்டிருக்கும்போது, அந்த மான் பல வழிகளில் போய் மறைந்துவிடும் என்று கூறினாள். உடனே இராமன் அந்த மானைக் காட்டுக என்றான். (மாரீசன் வதைப் படலம் 775)

 மானுக்கு உவமை சொல்ல இயலாது

 மானைக்கண்ட இராமன் இந்த மானுக்கு எந்த பொருள் உவமையாகும் என்று சொல்ல முடியுமா? முடியாது இது தனக்கு தானே உவமையாகுமே அன்றி இதற்குப் பொருத்தமான உவமைப்பொருள் உலகில் உண்டோ இல்லை. இந்த மானின் பற்கள் ஒளி வீசும் முத்துக்களை ஒத்துள்ளன. பசுமையான புல்லின் மீது படருகின்ற இதன் நாக்கு மின்னலைப் போன்றது. இதன் உடம்பு செம்பொன்னால் ஆனது. உடம்பில் உள்ள புள்ளிகள், வெள்ளி போல் விளங்குகின்றன என்றான். இந்த மானின் அழகிய வடிவத்தை உற்றுப் பார்த்த மகளிரிலும், ஆடவரிலும் இதனிடம் ஆசை கொள்ளாதவர் எவர்? எவரும் இல்லை. ஊர்ந்து செல்லும் பிராணிகளும், பறந்து செல்லும் பறவைகளும் முதலிய அனைத்தும் இதனைக் கண்டு, இதனிடம் கொண்ட ஆசையால் குறுகிய மனத்தை உடையவனாய், பரவிய ஒளியை உடைய விளக்கைப் பார்த்த வீட்டில் பூச்சிகளைப் போல வந்து விழுவதைப் பார்ப்பாயாக என்றான்.(மாரீசன் வதைப் படலம் 779)

 சீதை, இராமனை நோக்கி கண்டவர் மனதை உருகச் செய்யும் இந்த மானை விரைவாக பிடித்துக் கொடுத்தால், இது வனவாசம் செய்யும் இக்காலத்தில் நாம் தங்கி இருக்கும் இடத்தில் வருத்தம் ஏற்படும் போது அதை நீக்குமாறு இனிமையாக விளையாடுவதற்கு, பெறுவதற்கு அரிய சிறப்பை உடையது என்றாள்.(மாரீசன் வதைப் படலம் 781).

 சீதை இவ்வாறு கூறியதும், இராமன் அதைப்பிடித்து தருகிறேன் என்று சம்மதித்தான். உண்மையைத் தெளிவாக உணரவல்ல இலட்சுமணன் கொடுமையும், வலிமையும் கொண்ட அரக்கர் வஞ்சக செயல் செய்ய விரும்பி தந்திரமாக, செய்து அனுப்பிய மாயமான் இது என்பதை முடிவில் நீ உணர்வாய் என்றான். அதற்கு இராமன் நீ சொன்னபடி, இது மாயமானாக இருந்தால், எனது அம்பினால் இறக்கும். அவ்வாறு இறக்கும்போது அரக்கரைக் கொன்று நமது கடமையைச் செய்து முடித்தவராவும், நாம் நினைக்கின்ற படி இது உண்மையான மானாக இருந்தால் பிடித்துக் கொள்வோம். நான் இப்போது கூறிய இரண்டு செயல்களில் ஏதேனும் ஒன்று தீமையானதோ சொல்லுக என்றான் அதற்கு இலட்சுமணன் இந்த மானை  அனுப்பி இதன் பின்னையும் மறைந்து நிற்பவர் இத்தன்மையர் என்பதை நாம் அறியமாட்டோம். அவர்கள் கொண்டுள்ள மாய வடிவம் எத்தகையது  என்பது தெளிவாக நமக்குத் தெரியாது. இந்த மான் எந்த மான் என்பதை நான் உணரவில்லை. நீண்ட காலமாக நிலைபெற்று நின்ற நீதி முறையில் வழியிலே நின்ற பெரியவர்கள் வெறுத்து விலக்கிவிட்ட வேட்டையாடுதலை நீ மேற்கொள்வது புகழுடைய செயல் ஆகாது என்றான் இலட்சுமணன்(மாரீசன் வதைப் படலம் 784).

இலட்சுமணன் இம்மானைத் தொடர்ந்து சென்று அவர்களை விரைவாக வெல்வேன். இது மாயமான் அன்று உண்மையான மான்தான் என்றால், அதைப் பிடித்துக் கொண்டு வருவேன் என்று கூறினான். அதற்கு சீதை நாயகனே, இந்த மானை நீயே பிடித்துக் கொடுக்க மாட்டாய் போலும் என்று கூறி, கண்களில் இருந்து முத்து போன்ற நீர்த் துளிகளைச் சிந்திக் கொண்டு அங்கிருந்து பர்ணசாலையை நோக்கிச் சென்றாள்.
இராமன், இலட்சுமணனிடன் ’மானை, நானே போய்ப் பிடித்துக் கொண்டு விரைவாக மீண்டு வருவேன். அதுவரையில் காட்டிலே உலவும் மயிலைப் போன்ற சீதையை நீ காத்துக் கொண்டு இரு’ என்று கூறிவிட்டு செல்லத் தொடங்கினான்.(மாரீசன் வதைப் படலம் 787)

மானின் ஓட்டம்

மானைப் பின் தொடர்ந்து இராமன் சென்றபோது, அந்த மாயமான் மெல்ல மெல்ல நிலத்தில் அடிவைத்து மிதித்து நடந்தது. வெறித்துப் பார்த்தது.பயம் கொண்டு மேலே தாவிக் குதித்தது. காதுகளை நெறித்து நீட்டிக்கொண்டு, குளம்புகளை உடைய கால்களை மார்பிலே படுமாறு செய்து கொண்டு, மேலே எழும்பிக் குதித்துப், பின்பு திடீரென்று தோன்றி வீசும். காற்றும், மனமும் என்னும் இவை தடையின்றி விரைவாகச் செல்லும். செலவுக்கு (ஓட்டத்துக்கு) ஒரு புதிய வகையைத் தான் கற்றுக் கொடுப்பதைப் போலத் திகழ்ந்தது.

                     “மிதித்தது மெல்ல மெல்ல வெறித்தது வெருவி மீதில்
                      குதித்தது செவியை நீட்டிக் குரபதம் உரத்தைக் கூட்டி
                      உதித்து எழும் ஊதை உள்ளம் என்று இவைஉருவச் செல்லும்
                      கதிக்கு ஒரு கல்வி வேறே காட்டுவது ஒத்தது அன்றே”  (மாரீசன் வதைப் படலம் 791)

இப்போது இராமன் மானைப் பின்தொடர நீட்டி நடந்தான். மறுபடியும் திருவடியை நீட்டி நடப்பதற்கு இந்த அண்டத்தைத் தவிர, வேறு ஒரு அண்டம் உள்ளதோ இல்லை. அத்தகைய சிறப்புப் பெற்ற திருவடிகளைக் கொண்டு, ஓடி அந்த மானைத் துரத்தினான். அவ்வாறு மானைத் தொடர்ந்து சென்று, தனது இடையீடு இல்லாமல் எங்கும் நிறைந்திருக்கும் தன்மையை வெளிப்படுத்தினான் என்று சொல்வதை தவிர, அப்போது அவன் ஓடிய ஓட்டத்தின் வேகத்தை அளவிட்டு கூறத்தக்கவர் யார்? எவரும் இல்லை. (மாரீசன் வதைப் படலம் 792)

அந்த மாயமான் மலைகளில் ஏறும். அங்கிருந்து மேகக் கூட்டங்களில் துள்ளிப் பாயும். விடாது அதை அடியொற்றிச் சென்றால், வெகு தூரம் விலகிச் செல்லும். தொடர்ந்து செல்லாமல், சிறிது தாமதம் செய்தால், கையால் தொடக்கூடிய தூரத்தில் நிற்கும். மீண்டும் தொடர்ந்தால், எவ்வளவு விரைவில் நின்றதோ, அவ்வளவு விரைவில் ஓடிப்போகும். இவ்வாறு பல்வேறு வகையில் செல்லும் அந்த மான், ஆடவர்களிடம் ஆசை கொள்ளாமல், அவர்கள் தரும் பொருளிடம் அப்பொருளுக்கு ஏற்ப ஆசைக் கொள்ளும் வாசனை வீசும் கூந்தலை உடைய வேசியர்களின் மனதைப் போலத் திகழ்ந்தது.

                     “குன்றிடை இவரும் மேகக்குழுவிடைக் குதிக்கும்கூடச்
                   சென்றிடின் அகலும் தாழின் தீண்டல் ஆம் தகைமைத்து ஆகும்
                   நின்றதே போல நீங்கும் நிதி வழி நேயம் நீட்டும்
                  மன்றல் அம் கோதை மாதர் மனம் எனப் போயிற்று அம்மா” (மாரீசன் வதைப் படலம் 793)

இந்த மானின் வடிவம் இயற்கையான மான் வடிவத்தில் இருந்து வேராக இருந்து, இது செய்யும் செயலும், ஒரு மானின் செயலிலிருந்து வேறுபட்டதாக ஆகிவிட்டது. இந்த எண்ணம் எனக்குத் தோன்றுவதற்கு முன்பு, இலட்சுமணனுக்குத் தோன்றியது. இந்த எண்ணம் பொருந்துவதாகும். இதை முன்னரே நாம் ஆராய்ந்து பார்த்திருந்தால் இதைப் பின்தொடர்ந்து வந்திருக்க மாட்டோம். இவ்வளவு தூரம் ஓடி வந்து நாம் வருத்தம் அடைய காரணம் அரக்கர் என்பவர் செய்த மாயையே ஆகும் என்று இராமன் உள்ளத்தில் நினைத்தான். (மாரீசன் வதைப் படலம் 794)

மானின் முடிவு

இராமர் இனி என்னைப் பிடிக்க மாட்டான். அம்பைச் செலுத்தி என்னைக் கொன்று, மேல் உலகத்திற்கு அனுப்புவான் என்பதை, தன் மனதில் உணர்ந்து கொண்ட அந்த மாயம்வல்ல அரக்கன் மாரீசன், மிகுந்த வேகத்தோடு வானத்தே எழுப்பிச் சென்றான். அதே வேகத்தில் இராமனும் தன் பகைவருக்குக் கொடுமையான சக்கராயுதத்தைப் போல, யாராலும் தடுக்க முடியாத ஒரு செந் நிற அம்பை, ’இந்த மான் எந்த இடத்துக்குச் செல்கிறதோ, அந்த இடத்துக்குச் சென்று, இதனது இனிய உயிரை நீக்குக’ என்று ஆணையிட்டுச் செலுத்தினான். இலை வடிவம் கொண்ட அந்த நீண்ட அம்பு வஞ்சனை உடைய மாரீசனது இதயத்தில் பொருந்தப் பாய்ந்தது. அப்பொழுதே அந்த மாரீசன், பிளவு கொண்ட தனது வாயினால், எட்டுத் திக்குகளிலும், அதற்கு அப்பாலும் சென்று ஒலிக்கும்படி ’சீதா! ,ஓ,, இலட்சுமணா’ என்று இராமனது குரலில் உரத்த ஒலியை வெளியிட்டு ஒரு மலையைப் போல தனது சுய வடிவத்தில் கீழே விழுந்தான்.

                      “நெட்டிலைச் சரம் வஞ்சனை நெஞ்சுறப்
                       பட்டது அப்பொழுதே பகு வாயினால்
                      அட்ட திக்கினும் அப்புறமும் புக
                      விட்டு அழைத்து ஒரு குன்று என வீழ்ந்தனன்” (மாரீசன் வதைப் படலம் 797)

முடிவுரை
         
நவ்விமான், கவரிமான், புள்ளிமான், கலைமான் போன்ற மான்கள் குறித்தும், பெண்களின் பார்வை மான் போன்ற மருண்ட பார்வையை உடையது என்பதும், மான் கூட்டம் போல மங்கையர்க் கூட்டம் இராமனைக் காண வந்தது என்பதும், முனிவர்கள் மானின் தோலை அணிவர் என்றும்,அம்பு பட்ட மான்போல, புலிகள் திரிகின்ற காட்டிலை வாழும் மான்கள் போல, ஆண் சிங்கத்தைக் கொல்லும் மான்குட்டி போல, புலியைக்கண்ட புள்ளிமான் போல,புலி தன்னைத் தின்னவருவதைக் கண்ட பெண்மான் போல, வலையிலே அகப்பட்ட மானைப்போல, மான்கூட்டம் சிங்கத்தை வெல்ல நினைப்பதுபோல, ஆண்புலியை ஒரு பெண்மான் கொன்றதுபோல என்பன போன்ற உவமைகள் கூறப்பட்டுள்ளன. சீதையைப் பிரிந்த இராமன் கவலையுடன் இருப்பதால் மான்கள் அமைதியாக இருந்தன. பிரிவாற்றாமல் இராமன் மானிடம் சீதை எங்கிருக்கிறாள் சொல்லுங்கள் என்று வேண்டியதையும், மான்களும் ஊடல் கொண்டன என்பது குறித்தும், மாரீசன் இராவணன் கூறியபடி மாயமானாக வந்ததையும், சீதை இராமனிடம் பிடித்துத்தர வேண்டியும், மாயமான் என்று இலட்சுமணன் கூறியும், இராமன் ஏற்காமல் மானின் பின் சென்று அதை தன் அம்பினால் அழித்ததையும் அறியமுடிகிறது.

துணை நூற்பட்டியல்

1.  இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம்,
     சென்னை,2016.
2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு,
    (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம் 
    புதுச்சேரி, சென்னை.
3.கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப்   
    பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.
4. எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம்,
    கோயம்புத்தூர், 2008.
5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளிபதிப்பகம்,   
    சென்னை,2019.
6. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5,  
    6,7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.
7. செல்வம்.கோ,கம்பன் புதையல்,   சாரு பதிப்பகம், சென்னை 2016.  
8. க.மங்கையர்க்கரசி, கம்பராமாயணத்தில் ஊடல்,   IOR மின்னிதழ்     

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.