- பதிவுகள் இணைய இதழுக்கு ஆய்வுக் கட்டுரைகளை அனுப்புபவர்கள் ஓருங்குறி எழுத்துருவில் அனுப்ப வேண்டும். பாவித்த நூல்கள் பற்றிய விபரங்கள் (நூல் பெயர், வெளியான ஆண்டு, பதிப்பகத்தின் பெயர்) உசாத்துணைப்பட்டியலில் குறிப்பிடப்பட வேண்டும். - பதிவுகள்.காம் -


முன்னுரை

    கிராமப்புற மருத்துவ முறை கிராம மக்களின் வாழ்வியலோடும், பண்பாட்டோடும், சமூக அமைப்போடும் பிரிக்க இயலாதபடி இரண்டற கலந்து விட்ட ஒன்றாகும். இம்முறை மருத்துவம் பலவகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. எவ்வித பக்க விளைவுகளும் இல்லாத இந்த மருத்துவத்தால் பயன் பெற்றவர்கள் உள்ளனரே தவிர பக்க விளைவால் பாதிக்கப்பட்டவர்களை காண்பது அரிது. இதனைப் பற்றி இக்கட்டுரையில் முழுமையாகக் காண்போம்.

நாட்டுப்புற மருத்துவத்தின் பல்வேறு பெயர்கள்

   நாட்டுப்புற மருத்துவமானது பாட்டி வைத்தியம் வீட்டு வைத்தியம்,  கை வைத்தியம், நாட்டு மருத்துவம், பரம்பரை வைத்தியம், பச்சிலை வைத்தியம், மூலிகை வைத்தியம், இராஜ வைத்தியம், இரகசிய மருந்து வைத்தியம் என மக்களால் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டு வருகிறது. இப்பெயர்கள் மருத்துவப் பொருள்களின் அடிப்படையில் மாறுபடுகின்றன.

நாட்டுப்புற மருத்துவம் உருவான வரலாறு

    இயற்கையோடு தொடர்பு கொண்டிருந்த மனிதன் தன்னைச் சுற்றி வளர்ந்துள்ள மரம், கிளை, இலை, வேர், செடி, கொடி, பூ, காய், கனி, விதை ஆகியவற்றையும் கூர்ந்து நோக்கினான். இதனால் அவற்றின் மருத்துவக் குணங்களும் அவனுக்குப் புலனாகத் தொடங்கின.  ஆங்காங்குக் கிடைக்கக்கூடிய தாவர வகைகளின் மருத்துவக் குணங்களை அறிந்து அவற்றை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்தி வெற்றி கண்டபோது நாட்டு வைத்தியத்தின் மீதும் வைத்தியர்கள் மீதும் மனிதர்களுக்கு நம்பகத் தன்மை உண்டானது. நோயுற்ற மனிதன் மருத்துவனை நம்புவதும், மருத்துவன் மருந்தை நம்புவதும் காலத்தின் தேவையாகியது.  இந்நிலையில்,  நாட்டு வைத்தியர்கள் பெரிதும் மதிக்கப்பட்டனர்.  இம்மதிப்பைக் காத்துக்கொள்ள அவர்கள் தமக்குத் தெரிந்த மருத்துவத்தில் மேலும் விளக்கம் தேட முற்பட்டனர். இத்தேடல் முயற்சி அவர்களுக்கு இத்துறையில் அனுபவ முதிர்ச்சியைத் தந்தது.  இப்பெரியோர்களின் அனுபவக் கொடையே நாட்டு மருத்துவமாகும். (முனைவர் ந. சந்திரன் ‘நாட்டு மருத்துவம்’ (2002) பக். 14-16).   

உணவு அதிகமாக உண்ணுவதாலும் குறைவாக உண்ணுவதாலும் ஏற்படும் விளைவுகளை திருக்குறள் பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.

மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர்
           வளிமுதலா வெண்ணிய மூன்று (941)

  வாதம், பித்தம், கபம்  ஆகியவை உடலில் எவை மிகுந்திருந்தாலும், குறைந்தாலும் நோய் ஏற்படும். சம உணவான மாவுப்பொருள், புரதம், கொழுப்பு ஆகிய தாது உப்புகளும், நீரும் தன்மையிலும் அளவிலும் மிகாமலும் குறையாமலும் அமைந்திருக்கவேண்டும். இன்றைய அலோபதி மருத்துவர்கள் கூறுகின்ற மருத்துவ ஆலோசனைகளை அன்றே திருவள்ளுவர் கூறியிருப்பது, பண்டைய தமிழர்களின் மருத்துவத் தொழில்நுட்ப அறிவை வெளிப்படுத்துவதாக உள்ளது. மேலும் வள்ளுவர் அளவோடு உண்ணவேண்டும் என்றும், செரித்தபின் உண்ணவேண்டும் என்றும், பசிக்கும்போது உண்ணவேண்டும் என்றும், நல்ல உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணவேண்டும் என்றும், குறைவாக உண்ணவேண்டும் என்றும், பசியின் அளவு அறிந்து உண்ணவேண்டும் என்றும் சுட்டிக்காட்டுவதோடு வள்ளுவர், நோய் ஏற்படுவதற்கும், நோய் ஏற்படாமல் இருப்பதற்கும் உணவும், உணவு பழக்கவழக்கங்களுமே காரணம் என்று குறிப்பிடுகின்றார்.

மருத்துவ முறைகள்

ஆண்கள் மருத்துவம், பெண்கள் மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், விலங்குகளுக்கான மருத்துவம் என வகைப்படுத்தலாம்.

ஆண்கள் மருத்துவம்

1.ஆண்மைக் குறைவு - இலுப்பைப் பூவை அரைத்துப் பசும்பாலில் கலந்து குடித்து வர ஆண்மைத் தன்மை பெருகும்.
2.ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று பூண்டு பற்களைச் சாப்பிடுவது விந்தணுவின் ஆரோக்கியத்துக்கு உதவும்.
3.மூத்திர எரிச்சல் - கரிசலாங்கண்ணி எனும் கீரையின் சாற்றை அளவுடன் குடித்து வரத் தீரும்.
4.நெல்லிச் சாறு, செஞ்சந்தனம். முகிழம்பூ ஆகியவற்றைச் சேர்த்துத் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து காய்ச்சித் தலையில் தேய்த்துவந்தால் பித்தம் தணியும். இளநரையும் நீங்கும்.

பெண்கள் மருத்துவம்

1.உடல் நாற்றம் - ஆவாரந் தழையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்து அரைத்துக் குளித்து வர நீங்குவதுடன் மேனியும் அழகு பெறும்.
2.பெண்களின் வயிற்று சதை குறைய: சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.
3.அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன்  குடித்து வந்தால் தாய்பால் பெருகும்.
4.தயிரை தலைக்குத் தேய்த்து ஊறிய பின் சீயக்காய் தூள் போட்டுக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும்.
5.ஆலமரப்பட்டை பொடி அல்லது ஆலமரப் பூக்களைக் காயவைத்துப் பொடியாக்கி காலை வேளையில் பாலில் கலந்து குடித்து வந்தால் கர்ப்பப் பை வீக்கம் குணமாகும்.
6.மொசுக்காயை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் பேன் தொல்லை பொடுகு தொல்லையை  முற்றிலும் நீங்கும்.

குழந்தைகள் மருத்துவம்

1.சளி – துளசி இலைச் சாற்றில் மூன்று, நான்கு துளிகள் தாய்ப்பாலைக் கலந்து கொடுக்க விலகும்.
2.பல்முளைக்கும்போது உண்டாகும் காய்ச்சல்,பேதிக்குத் தாளிசபத்திரி பொடி இரண்டு சிட்டிகை.
3.கழிச்சலை நிறுத்த மாதுளம்பிஞ்சு, பொடுதலைச் சாறு.
4.ஆறு மாசக் குழந்தைகளுக்கு பத்து நாளுக்கு ஒருமுறை, ஒரு வெற்றிலை, ஒரு பல் பூண்டு, ஒரு சிட்டிகை ஓமம் எல்லாத்தையும் அரைச்சு, வெந்நீரில்  கலந்து, ஒரு பாலாடை அளவு குடிக்க வைத்தால் குழந்தையின் வயிற்றில் வாயு சேராமல் இருக்கும்.
5.அதிக இருமலால் உண்டாகும் நெஞ்சுவலியையும் கற்பூரவல்லி போக்கும்

விலங்குகளுக்கான மருத்துவம்

1.புண் புழு - சந்தனத்தையும் சிறிய வெங்காயத்தையும் அரைத்து மாட்டின் புண்ணில் விடப் புழு வெளியேறிப் புண் ஆறும்.
2.வெண்ணெய்யில் மஞ்சள் தூளைக் கலந்து மாட்டின் மடிக்காம்பில் மற்ற விலங்குகளுக்கும் பூசி வரவிரைவில் புண் ஆறிவிடும்.
3.புற்றுமண், புளியந்தழை ஆட்டுப் புழுக்கை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து முறிவு ஏற்பட்ட இடத்தில் ஒரு ஈரத்துணியால் இறுக்கிக் கட்டி விட்டால் கால்முறிவு விரைவில் குணமாகிவிடும்.
4.சிறிய வெங்காயத்தைப் பொடியாக அரிந்து தீவனமாக உண்ணக் கொடுக்க அம்மை நோய் குணமாகும்.

மண் சிகிச்சை

   மண் சிகிச்சை முறை மிகவும் எளிமையானது. நிலத்தில் 3 முதல் 4 அடி ஆழத்தில் தோண்டி மண் எடுத்துக்கொள்ளவேண்டும். இதில் கற்கள், துண்டுகள், ரசாயான கலவைகள் கண்டிப்பாக இருக்கக்கூடாது. இயற்கையின் பஞ்ச பூத சக்திகளில் மண் ஒன்று ஆகும். இது உடல் ஆரோக்கியத்திற்கும், நோய்களை குணப்படுத்தவும் துணைசெய்யும். மண் சிகிச்சையினால் ஏற்படும் விளைவுகள்.
இயற்கையின் ஐந்து கூறுகளில் மண் ஒன்றாகும். இது நலம் மற்றும் நோயிலும் மிகஉயர்ந்த நன்மையை ஏற்படுத்தவல்லது, மண்ணை உபயோகப்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள்:
1. சூரிய ஒளியில் உள்ள சக்திகளை உடலுக்கு பெறச்செய்கிறது.
2. குளிர்ந்த மண்ணை உடலில் தடவி வெகு நேரம் உலராமல் இருப்பதன் மூலம் உடலின் வெப்பம் தணிந் து உடல் சம் நிலை அடைகிறது.
3. உடலில் பூசிய மண்ணுடன் நீரையும் சேர்ப்பதால் தேவையான அடர்த்தியும் , உருவமும் எளிதாக கிடைக்கிறது.
4. மலிவானது எளிதாக கிடைக்கக் கூடியது.
மண் சிகிச்சைக்கு தயார் செய்யும் முன்பே மண்ணை உலர வைத்து, கற்கள், மண்ணில் கலந்துள்ள இதர பொருட்களை பிரித்து விட்டு பயன்படுத்த வேண்டும்.

உபயோகிக்கும் முறை

சலித்த, மெல்லிய மண்ணை ஈரமான துணியில் நோயாளியின் வயிற்று அளவுக்கு ஏற்றவாறு கட்டி, செங்கல் வடிவ அளவில் நோயாளியின் வயிற்றின் மேல் வைக்க வேண்டும். குளிர்ந் த காற்று வீசினால் குளிர்ந்த காற்று படாதவாறு மேலே போர்த்த வேண்டும்.

மண்கட்டியின் பயன்கள்

1.மண்கட்டியினை அடிவயிற்றில் பயன்படுத்தும் பொழுது ஜீரணகோளாறுகளை போக்குகிறது. உடல் சு10ட்டை குறைக்கிறது.
2.மொத்தமாக தயாரிக்கப்பட்ட மண்கட்டிகளை தலையில் வைத்து பயன்படுத்தும்பொழுது அதிப்படியான தலைவலியும் உடனடியாக சரிசெய்கிறது.
3.இதை கண்கள் மீது பயன்படுத்தும் பொழுது கண் மற்றும் பார்வை பிரச்சனைகளான இமைப்படல அழற்சி, கண்விழி அரிப்பு, ஒவ்வாமை, கண்விழி அழுத்தம், கிட்டப்பார்வை மற்றும் தூரப்பார்வை முதலிய பிரச்சனைகளை சரிசெய்கிறது.

முகத்திற்கு பயன்படுத்துதல்

   சுத்தம் செய்யப்பட்ட மண் 30 நிமிடத்திற்கு வைத்திருப்பதனால் தோல்நிறம் அதிகரிக்கின்றது. கடும்புள்ளிகள், சிறுசிறு பொத்தல்கள் ஆகியவை சரிசெய்யப்படுகின்றது. மேலும் இது கண்களுக்கு கீழ் உள்ள கருவளையங்களை சரிசெய்வதற்கும் பயன்படுகிறது. 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை சுத்தமாக கழுவ வேண்டும்.

மண் குளியல்

    நோயாளி அமர்ந்த நிலையிலோ அல்லது படுத்திருக்கும் நிலையிலோ மண்ணை பூச வேண்டும். இது தோலில் இரத்த சுழற்ச்சியும் வலிமையையும் அளிக்கின்றது. மண் குளியலின் போது நோயாளிக்கு சளிபிடிக்காதவாறு கவனமாக கடைபிடிக்கவேண்டும். நோயாளியின் குளிர்ந்த நீரால் நோயாளியின் உடல் முழுதும் தெளிக்க வேண்டும். நோயாளி மிகவும் குளிர்ச்சியாக உணர்ந்தால் சுடுநீர் பயன்படுத்தலாம், உடனடியாக நோயாளியின் உடலினை துவட்டி உஷ்ணப்படுத்திக்கொள்ளவேண்டும். 45 முதல் 60. நிமிடங்கள் வரை மண் குளியல் செய்யலாம்.

மண்குளியலின் பயன்கள்

1.உடல் மற்றும் தோல் காயங்களை சரிசெய்வதில் மண்குளியல் சிறந்தபலனை தருகிறது.
2.உடலிற்கு குளிர்ச்சியூட்ட பயன்படுகிறது.
3.உடலில் உள்ள விசத்தன்மையை நீர்க்கச்செய்து, உறிஞ்சி வெளியே எடுத்து விடுகிறது.
4.பசியின்மை, மனஉளைச்சலினால் ஏற்படும் தலைவலி, அதிக இரத்த அழுத்தம், தோல் நோய்கள் முதலியவற்றிற்கு சிறந்தமுறையில் சிகிச்சை பயன்படுகிறது.
5.மலச்சிக்கலில் இருந்து விடுபடுவதற்கு காந்திஜி மண்குளியலையே பயன்படுத்தினார்.

முடிவுரை

பழங்காலத்தில் மக்கள் கொல்லைப்புறத்தில் மூலிகைச் செடிகளை வைத்து வளர்த்தனர். இதன் காரணம், நோய்கண்ட நேரத்தில் விரைந்து மருந்தளிக்க உதவின. பதினெங்கீழ்கணக்கு நூல்களான திரிகடுகம், ஏலாதி, சிறுபஞ்சமூலம் போன்ற நூல்கள் எண்ணற்ற மருத்துவ குறிப்புகளைத் தன்னகத்தே வைத்துள்ள அற்புதமான நாட்டு மருத்துவ நூல்களாகும். நம் வீட்டு சமையலறை ஒரு சிறிய வைத்தியசாலையாகும். உணவே மருந்து எனும் கொள்கையைக் கடைபிடித்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழ முடியும். இயற்கையோடு இயைந்து இன்பமாய் வாழ்வோம்.

உசாத்துணை  நூல்கள்

1. திருக்குறள் - திருவள்ளுவர்
2. முனைவர் ந. சந்திரன் ‘நாட்டு மருத்துவம்’ (2002)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.