முன்னுரை

கிராம மக்கள் உழைப்பே உயர்வு தரும் என்ற கொள்கை உடையவர்கள். உழைக்கும் கைகளில் உண்மையான இறைவன் இருக்கிறான் என்ற நம்பிக்கை உடையவர்கள். நெற்றி வேர்வை நிலத்தில் சிந்த உழைப்பவர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் உழவுத் தொழில் செய்கின்றனர். ஒவ்வொரு ஆணும் பெண்ணும் உழைக்க வேண்டியதாயிற்று. கிராமப்புற மக்கள் வாழ்க்கை அமைப்பிற்கேற்றவாறு இவர்களில் தொழில்கள் அமைந்திருந்தன. இவர்கள் பாடிய தாலாட்டுப் பாடல்களில் அமைந்துள்ள தொழில்கள் சிலவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

முத்துக் குவித்தல்

கடலும் கடல் சார்ந்த பகுதியாகிய நெய்தல் நிலத்தில் முத்துக் குவித்தல் நடைபெறுகிறது. கடலில் முத்து விளைகின்றது என்பதை மக்கள் அறிந்திருந்தனர்.

 கடலில் வெளஞ்சமுத்து
தூத்துக்குடி முத்து
பாண்டிக்குழி முத்து  

என முத்து விளையும் இடங்களைத் தாலாட்டில் பாடியுள்ளனர்.

தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தது. ஒரு மாவட்டத்திற்குள் நடைபெறும் முத்து எடுத்தல் தொழிலை இவர்கள் அறிவதற்கு வாய்ப்பு இருந்தது எனலாம்.

நெசவு

மக்களுக்கு வேண்டிய ஆடைகளை அளிப்பது நெசவுத் தொழிலாகும். இதை, நெய்தல் தொழில் எனலாம். சங்க இலக்கியங்களில் நெசவுத் தொழில் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. தழை ஆடைகள் அணிந்த காலம் மாறி, பருத்தி ஆடைகள், பட்டாடைகள் அளித்தனர். எலி, ஆடு இவைகளில் உரோமங்களால் கம்பளங்கள் நம் முன்னோர்களால் நெய்யப்பட்டு வந்தது.

     நூலினும் மயிரினும் நுழை நூற்பட்டிரும்
பால்வகை தெரியாப் பன்னூ ற்டுக்கத்து
நறுமடி செறிந்த ஆடையறுவை

என்றும் சிலப்பதிகார அடிகளால் இக்கருத்துகளை அறிந்து கொள்ளலாம்.

பருத்தியால் ஆடைகள்  நெய்யப்பட்டதை,
பத்தூருப் பருத்தி வாங்கி ஒனுக்குப்
பாவாட உண்டு பன்னி

என்ற தாலாட்டுப் பாட்டு பருத்தியால் பாவாடை  நெய்யப்பட்டதைக்  கூறுகிறது.

     குழந்தைக்குப் பட்டுத்துணியால் தொட்டில் கட்டியதாகவும், ஆண்கள் கம்பிக்கரை வேட்டி, மல்பீசு வேட்டி அணிந்ததாகவும் பாடல்கள் அமைந்துள்ளன.

பட்டெடுத்துத் தொட்டில்கட்டி
கக்களையன் கம்பி வேட்டி உங்களய்யா
கட்டும் வேட்டி ஒத்தக்கட மல்பீசு

மல்பீசு வேட்டி என்பது மென்மையான வாயில் வேட்டியைக் குறிக்கிறது எனலாம்.

புகை  முனிகந்தல்ல மாசில்துவுடை

என்ற சங்க இலக்கியம் மென்மையான ஆடை வகையைக் குறிக்கிறது.

தச்சுத் தொழில்

மரவேலை செய்வதைத் தச்சுத் தொழில் என்பர். இத்தொழில் செய்கின்றவர் தச்சர் ஆவார். உழவுத் தொழிலுக்கு வேண்டிய கலப்பை போன்ற பொருட்கள், வீடு கட்டுவதற்கு வேண்டிய சன்னல், நிலை, உத்திரம் போன்ற சாமான்கள் மரத்தால் செய்யப்பட்டன. தச்சுத்தொழில் தாலாட்டுப் பாடல்களில் இடம்பெறுகின்றது.

குழந்தைப்பேறு கிடைக்க வேண்டுமென்று மாரியம்மன் கோவிலுக்கு மரத்தொட்டில் நேர்ச்சையாகக் கொடுத்தார்கள் என்பதைத்,

மாரியம்மன் கோவிலுக்கு
மரத்தொட்டில் செஞ்சு வச்சேம்

என்ற தாலாட்டுப் பாடலடிகள் விளக்குகின்றது.

மாமன்மார்களில் வீடுகள் உத்திரங்களால் கட்டப்பட்டது என்பதைக்

உயரத் தெரியுதும்பா எங்கம்மாக்கு
உத்தரக்கால் மண்டபங்க

என்ற அடிகள் குறிக்கின்றன. தாலாட்டுப் பாடல்களிலிருந்து தச்சுத்தொழிலை அறிய முடிகின்றது.

பெட்டிப் பின்னுதல்

பனை ஓலையை வைத்துப்பெட்டி, கூடை, கொட்டான், பாய் முதலிய பொருட்கள் செய்யப்படுகின்றன. பெட்டி பின்னுவதைப் பெட்டி முடைதல் என்றும் சொல்வர். சங்க நுல்களில் பனை ஓலையால் கூடை பின்னுவது பற்றிய கருத்துகள் இடம் பெற்றுள்ளது.

கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும்

என்ற புறப்பாடல் வட்டி என்பது பனை ஓலையால் முடையப்பட்ட  கூடையைக் குறிக்கிறது.

கூந்தப்பன வெட்டிஒனக்குக்
குருந்தோலக் கொட்டாஞ்செஞ்சு
அதுவே போட்டுப் பண்டந்திங்கும்

என்ற தாலாட்டுப் பாடலடிகள் பனை ஓலையால் கொட்டான்கள் செய்தனர் என்பதை உணர்த்துகின்றன. பெரிய பெட்டிகளைப் போல் அல்லாமல் சிறு குழந்தைகள் கையில் வைத்துக்கொள்வதற்கான சிறுபெட்டி போன்ற அமைப்புடையவை கொட்டான்கள் எனலாம்.

சிற்றூர் மக்கள் குழந்தைகள் தின்கின்ற  பண்டங்களைக் கொட்டான்களில் கொடுப்பர். புன்செய் நிலத்தில் விளைகின்ற பயறு  வகைகளை அவித்தும், சோளத்தை வறுத்தும் கொடுப்பர். இவைகளைக் கொடுப்பதற்கு இக்கொட்டான்கள் ஏற்றதாகும். சூடான பயறு வகைகளைக் கொட்டான்களில் கொடுத்தால் சூடானது விரைவில் குறைந்துவிடும். கறி, ஆட்டு ரத்தத்தைப் பொறித்தும் கொட்டான்களில் கொடுக்கின்றனர்.

      வாழ்க்கை அமைப்பிற்கேற்றவாறு வீட்டுப் பழக்கத்திற்குப் பொருட்கள் வைத்திருந்தனர் என்பதும், அங்கு விளைகின்ற பொருட்களையே பண்டமாகக் கொடுத்தனர் என்பதையும் அறியலாம்.

 மருத்துவம்

நோயற்ற வாழ்வே குறையற்ற செல்வம் என்பது பழமொழி நோய்க்கு இடம் கொடேல் என்று பலர் எச்சரித்தாலும், நோய்கள் நம்மில் இடம் தேடிக்கொள்கின்றன. இந்நோய்களைத் தீர்ப்பது பற்றிய மருந்து வகைகள் தாலாட்டுப் பாடல்களில் காணப்படுகின்றன. நோய் மருந்து கொடுத்துக் குணமடையச்  செய்வதை மருத்துவம் என்பர். இத்தொழில் செய்கின்றவர் மருத்துவர் ஆவார். மருத்துவத் தொழில் புரிந்ததால்  மருத்துவன் தாமோதரன் என்று பெயர் பெற்ற புலவர் சங்க காலத்தில் வாழ்ந்தமை குறிப்பிடத்தக்கதாகும். கிராமத்தில் உள்ளவர்கள் கை வைத்தியம் பார்ப்பவர்கள்.

                        கைபிடித்துப் பார்த்து வைத்தியம் செய்ததால் கைவைத்தியம்

என்ற  பெயராயிற்று. சிலர் பாட்டி வைத்தியம் என்று சொல்வது, உண்டு. நன்கு அனுபவம் பெற்ற பாட்டியிடம் வைத்தியம் பார்ப்பதைப் பாட்டி வைத்தியம் என்பர்.

பட்டை வகைகள் மூலிகைகள், இஞ்சி, சுக்கு, மிளகு போன்ற பொருட்களாலான மருந்தைக் கொடுத்து வைத்தியம் பார்ப்பதை நாட்டு வைத்தியம்  என்பர்.

காய்ச்சல் அடிக்குதுன்னு ஓம்
பாட்டிக்கிட்ட கொண்டுபோனே
கைபுடிச்சுப் பாத்துட்டு எங்கனியே
ஒனக்கு மந்தக் காய்ச்சல் என்றுசொல்லா
மந்தம் கொமறயதுக்கு
ஒனக்குச் சுக்குப்பாலு கொடுக்கச் சொன்னா
சுக்குப்பாலு குடிச்சதுமே
சொகுசாய் வெளயாண்டாய்
புள்ளப் புணி தீக்கும்
புண்ணியவதி ஒம்பாட்டி

என்ற பாடல் பாட்டிவைத்தியத்திற்கு எடுத்துக்காட்டய் அமைந்துள்ளது. கைபிடித்துப் பார்த்துக் குழந்தைக்கு மந்தத்தால் காய்ச்சல் என்று கூறி விடுகின்றாள். மந்தம் என்பது குழந்தைக்குச் சீரணமின்மையாகும். ஜீரணிப்பதக்குச் சுக்குப்பால் கொடுக்கச் சொல்வதும், குழந்தைக்கு மந்தம் குறைந்து காய்ச்சல் குணமாகின்றது.

பாட்டி வைத்தியம் அல்லது நாட்டு வைத்தியம் பண்டுதொட்டு இன்று வரை நடைபெறுவதாகவும், கிராமங்களில் அது சிறப்புற்று விளங்கியதையும் அறியலாம். நாட்டு வைத்தியத்தைத் தற்பொழுது சித்த மருத்துவம் என அழைக்கின்றனர்.

எண்ணெய் எடுத்தல்

செக்கில் மாடுகளைப் பூட்டி எண்ணெய் எடுத்தனர். செக்கு வலிமை வாய்ந்த மரத்தால் செய்யப்பட்டது.

வன்னிமரம் பிளந்து
வாசலிலே செக்கணி
தந்திரமாகச் செக்காட்டும்
சமத்தல் மருமகளோ

என்ற  தாலாட்டுப் பாடலில் வன்னிமரத்தினால் செக்கு செய்யப்பட்டதையும், அச்செக்கில் மாமன் எண்ணெய் எடுக்கும் தொழிலில் ஈடுபட்டார் என்பதையும் அறியமுடிகிறது. செக்கில் நிலக்கடலை, எள், தேங்காய் ஆகியவைகளை ஆட்டிக் கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் எடுக்கப்படுகின்றது.

கணக்கெழுதுதல்

கணக்கெழுதும் தொழில் சிறந்த தொழிலாகப் போற்றப்படுகிறது. அலுவலகங்களில் கணக்கர் கணக்குகளை எழுதுகின்றனர். கிராமங்களில் கிராமத்தில் கோயில் வரவு, செலவு, தரகு போன்றவைகளைக் கவனிப்பதற்குக் கணக்கு எழுதுகின்றவர் இருக்கின்றனர். கணக்குப்பிள்ளை வேறு.

கணக்குப் பிள்ளை  அரசால் நியமிக்கப்படுவர். கணக்கு எழுதுபவர்களை அந்தந்தக் கிராம மக்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வர்.

கோடி கணக்கெழுதும் எங்கலியே
குணமுள்ளோர் உங்களய்யா
அறிஞ்சி கணக்கெழுதும்
அறிவாளி உங்களய்யா

என்ற பாடல் தந்தை கணக்கெழுதும் தொழில் செய்தவராகப் பாடுகின்றான். அறிவுடையவராக இருப்பின் கணக்கெழுதும் தொழில்  சிறப்புறும் என்பது புலனகின்றது. குணமுள்ளோர் என்பதற்கு கள்ளக் கணக்கு எழுதாது, இலாபம் சேர்ப்பவராக இல்லாது நேர்மையாகக் கணக்கெழுதுபவர் என்பது அறியத்தக்கதாகும்.

முடிவுரை

    வாய்மொழியாக வழங்கி வந்த தாலாட்டுப் பாட்டு காலந்தோறும் இலக்கியங்களில் சிறு சிறு பாடல்களாக முகிழ்ந்தன. இக்காலக் கவிஞர்களையும் தாலாட்டு ஆட்கொண்டது. திரை இசையிலும் ஒலித்தது மக்களிடம் பெருஞ்செல்வாக்குப் பெற்றிருந்த தன்மையினை இப்பரிணாம வளர்ச்சி புலப்படுத்துகிறது.

வழிவழியாகச் சொல்லப்பட்டுப் பாடப்பெறும் தாலாட்டுப் பாடல்களில் தொழில்கள் பற்றிய குறிப்புகளும் மிகுதியாக வந்துள்ளன. பாரத நாடு கிராமங்களில் வாழ்கிறது என்பதால் சிற்றூர் மக்கள் ஈடுபடும் தொழில்கள் யாவும் அவர் தம் வாழ்வியலோடு ஒட்டியே உள்ளன.

கிராமத்தார் தங்களுக்கு வேண்டிய பொருள்களைத் தாங்களே ஆக்கிக் கொள்வதால் எண்ணெய் ஆட்டும் தொழில் பற்றிய குறிப்பு வந்துள்ளது. ந கணக்கெழுதும் தொழில், நெசவுத்தொழில் பற்றிய குறிப்புகளும் இடம்பெற்றுள்ளன. தூத்துக்குடியில் முத்துக்குவிக்கும் தொழில் நடந்து வருவதைப் பாடலில் காணமுடிகிறது.

துணைநின்ற நூல்கள்

1. அழகப்பன்.ஆறு, தாலாட்டுப் பாடல்கள், பாரி நிலையம், சென்னை.1966
2. அன்னகாமு.செ, ஏட்டில் எழுதாக் கவிதைகள், கழக வெளியீடு, 1987.
3. சண்முகம்சுந்தரம்.சு, தாலாட்டுப் பாடல்கள், பூம்புகார் பதிப்பகம் சென்னை.1983.
4. வரதராஜன்.மா, தமிழக நாட்டுப்பாடல்கள், பார்த்திபன் பதிப்பகம், மதுரை, 1978.
5. வானமாமலை.நா, தமிழர் நாட்டுப் பாடல்கள், நியூசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.1976.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.