முன்னுரை
பழந்தமிழ் இலக்கியச் செல்வங்களுள் இன்று குறை நூலாய்க் கிடைத்துள்ளவற்றுள் முத்தொள்ளாயிரமும் ஒன்றாகும். புறத்திரட்டு நூலிலிருந்து தொகுக்கப்பட்ட நூற்றெட்டுப் பாடலோடு பழைய உரைகளிலிருந்து தொகுக்கப்பட்ட இருபத்திரண்டு பாடல்களும் சேர்ந்து தற்பொழுது வழக்கில் இருப்பது நூற்று முப்பது பாடல்களாகும். மூன்று, தொள்ளாயிரம் ஆகிய இரு சொற்களும் சேர்ந்து முத்தொள்ளாயிரம் எனப் பெயர் பெற்றது. இந்நூற்பாடல்கள் சேர, சோழ, பாண்டியர் ஆகிய மூவர் வரலாற்றையும் சுட்டுகின்றன. ஒவ்வொருவருக்கும் தொள்ளாயிரம் பாடல்கள் வீதம் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்களைக் கொண்ட இந்நூல் கனலாலும், புனலாலும், காற்றாலும், காழ்ப்பாலும் அழிந்தன போக எஞ்சிய நூற்று முப்பது பாடல்களைக் கொண்டுள்ளது.

இவற்றுள் ஒவ்வொரு பகுதியும் நாடு, நகர் பகைப்புலம் அழித்தல், திறை, எயில் கோடல், குதிரை மறம், யானை மறம், களம், வென்றி, புகழ், கைக்கிளை எனப் பல்வேறு குறிப்புகளைக் கொண்டுள்ளது. முத்தொள்ளாயிரம் மூவேந்தரின் வீரச் சிறப்பினையும், குதிரை, யானைப் படைகளின் தன்மையையும் இனிதே எடுத்துரைக்கின்றது. மூவேந்தரிடமும், யானைப் படைகள் சிறந்து விளங்கியது. அவ்யானைகள் பகைவரின் உயிரைக் குடிக்கும் கூற்றுவனைப் போல் விளங்கின. தம் நாட்டின் வெற்றிக்கு யானைப்படை முக்கியம் என்பதை உணர்ந்த மூவேந்தர்களும் யானைகளை நன்கு பராமரித்தனர். அவ்வாறு அவர்கள் பராமரித்த யானைகளின் மறம் (வீரம்) பற்றி விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆய்வுச் சுருக்கம்
முடிவுடைய மூவேந்தர்களும் யானைப் படையை வைத்திருந்தனர். அப்படையில் உள்ள யானைகள் ஒவ்வொன்றும் போர்க்குணம் கொண்டவை. பகைவரைக் கண்டவுடன் கடிது சென்று அழிக்கும் திறன் கொண்டவை. பகைவரைக் கொன்று குவிக்கும் களக் காட்சியையும், யானையின் வீரத்தையும் முத்தொள்ளாயிரப் பாடல்கள் எடுத்துரைக் கின்றன. மேலும்,

 யானைமறம்
 சேரனின் யானைமறம்
 சோழனின் யானைமறம்
 பாண்டியனின் யானைமறம்

என்னும் தலைப்பில் முடிவுடை மூவேந்தர்களின் யானை படையின் இயல்பினைக் கூறுவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகின்றது.

யானைமறம்
யானைப் படையின் பெருமையைப் பேசுவது இத்துறையாகும். இதனைத் தும்பைத் துறையாகக் கொள்வார் தொல்காப்பியனார். போர்க்களத்தில் யானையின் வீரச் செயல்களை எடுத்துக்காட்டுவது; கடல் போன்ற சேனையையுடைய அரசனின் இளைய யானைகளின் வீரத்தை எடுத்துக் கூறுவது என்பனவற்றிற்கு ‘எழும் அரவக் கடற்றானையான் மழக்களிற்றின் மறங்கிளந்தன்று’1 என்று புறப்பொருள் வெண்பாமாலை இலக்கணம் கூறுகின்றது.

மூவேந்தர்களிடமும் யானைப்படை இருந்துள்ளது. அவ்யானைகள் மிக்க சினம் கொண்டு பகை நாட்டை அழித்தன என்பதற்கு சான்றுகள் பல உள. முத்தொள்ளாயிரத்தில் யானைமறம் பற்றி விளக்கும பாடல்கள் பதினொன்று உள்ளன. இப்பாடல்கள் அனைத்தும் யானையின் தோற்றத்தையும், போர்க்களக் காட்சியையும், அதன் வீரத்தையும் எடுத்துரைக்கின்றன. யானைப் படையினை மிகுதியாக வைத்துள்ள வேந்தனே வலிமை மிக்கவனாகக் கருதப்பட்டான். பகைவர் நாட்டை அழித்து வெற்றிதரும் வீரம் மிக்க யானைகளைக் கொண்ட பெரும்படைகள் மூவேந்தரிடமும் இருந்தன. சங்க காலத்தில் இயற்கையாகவும் செயற்கையாகவும் அமைந்திருந்த காட்டரண், மலையரண், மதில், கோட்டை முதலியவற்றை அழிப்பதற்கு யானைகளே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. மூவேந்தரின் வெற்றிக்கு யானைகள் பெரிதும் உதவின என்பதை முத்தொள்ளாயிரப் பாடல்கள் மெய்ப்பிக்கின்றன.

சேரனின் யானைமறம்
சேரன் வில்லாற்றல் பெற்றவன். நீதிக்கும் நேர்மைக்கும் ஒழுக்கத்திற்கும் பெயர் பெற்றவன். பகைவரைக் கண்ட அளவில், சேரனின் கண்கள் இயல்பாகவே சிவந்துவிடும். தனக்கு யாரேனும் தீங்கு விளைவித்தால் சினங்கொள்வான். அத்தகைய சினங்கொள்ளும் சேரனின் யானைப் படையில் கோபமும் மதமும் கொண்ட யானைகள் பல இருந்தன. அப்படையில் இருக்கும் யானை ஒன்றிற்குச் சினம் தணியவில்லை. அவ்யானையின் மறத்தினை ஆசிரியர் இனிதே எடுத்துரைத்துள்ளார். செம்மையான கண்களையுடைய சேர மன்னன். அம்மன்னனின் யானை போர்களத்தில் சிறப்புமிக்க பகை அரசர்களுடைய முத்துமாலை தொங்கவிடப்பட்ட வெண்கொற்றக் குடைகளைப் பிடுங்கிச் சிதறும்படியாக வீசி அழிக்கும் பழக்கமுடையது. அப்பழக்கத்தால், இரவில், வானில் தோன்றுகின்ற முழுமதியினைப் பகைமன்னரின் வெண்கொற்றக்குடை என்று கருதி அதனைப் பிடுங்கி அழிப்பதற்காகத் தன் தும்பிக்கையினை நீட்டுகின்றது. இச்சிறப்பினை,

வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால் – தேறாது
செங்கண் மாக்கோதை சினவெங் களியானை
திங்கள் மேல் நீட்டும் தன்கை 2

எனும் முத்தொள்ளாயிரப் பாடல் உணர்த்துகின்றது. சினக்களிற்றின் சிறப்பினைச் சொல்லவந்த புலவர், அது பகையரசருடைய முத்துக் குடைகளைப் பிடுங்கி எறிந்த பழக்கத்தால் நிலவையும் பகையரசர் குடையென எண்ணி அதனையும் பிடுங்கி எறிந்துவிடத் தன் கையினை உயர்த்துகிறது எனக் கூறுவதில் கற்பனை வளம் மிகுந்திருப்பதைக் காண்கிறோம். மேலும், சேர நாட்டில் வாழும் களிற்றுக்கு இத்தகைய ஆற்றல் இருந்தது என்பதற்கு இப்பாடல் சிறந்த சான்றாக அமைகின்றது.

சோழனின் யானை மறம்
சோழ மன்னனின் போர்க்களத்தில் நிகழும் யானையின் வீரச்செயல்களை எடுத்துக்காட்டுவது யானை மறம் எனப்படும். சோழனின் யானை சினம் மிக்கது. வீரம் மிக்கது. போர்க்களம் புகுந்த சோழ மன்னனுடைய மதச்செருக்கு மிக்க யானை பகையரசர்களுடைய வெண்கொற்றக் குடைகளைப் பறித்துத் தேய்த்துச் சினம் கொண்டு நிற்கின்றது. இதனைக் கண்ட முழுமதி, கோபங்கொண்ட அவ்யானைத் தன்னையும் பகையரசர் குடையென்று கருதித் தன் மீது பாய்ந்து அழிக்குமோ என்று நினைத்து அஞ்சி, ஆகாயத்தில் நடுங்கித் தேய்கின்றது. இந்நிலையை,

மண் படுதொள் கிள்ளி மதயானை மாற்றரசர்
வெண்குடையைத் தேய்த்த வெகுளியால் - விண்படர்ந்து
பாயுங்கொல் என்று பனிமதியம் போல்வதூஉம்
தேயும் தெளிவிசும்பில் நின்று 3

எனும் முத்தொள்ளாயிரப் பாடல் உணர்த்துகின்றது. இயற்கையாக முழுமதி நாளுக்குப் பின்னர்க் குறைந்து வரும் இயல்பினையுடையது நிலவு. ஆனால் கிள்ளியின் களிறு தன்னை பகையரசர் குடை என நினைத்து, சினத்தால் ஆகாயத்தில் பாய்ந்து விடுமோ என அஞ்சி குளிர்மதி நடுங்கித் தேய்கின்றது என ஆசிரியர் கூறுவதில் யானையின் வீரம் உணர்த்தப்படுகின்றது.

மற்றொரு பாடலில் சோழ மன்னனின் யானை சிறப்பிக்கப்படுகின்றது. மேகத்தைப் போல் வரையாது கொடுக்கும் கைகளையும், வீரக் கழல் அணிந்த கால்களையும் கொண்ட சோழ அரசனுடைய சினம் மிக்க யானை, பகையரசர்களைக் கொன்று குவிக்கின்றது. உள்துளையுடைய தும்பிக்கையையும், தொங்கும் வாயையும் கொண்ட அவ்யானை மலைபோல் இருக்கின்றது. அந்த யானை தன் காலை நிமிர்த்தி இழுத்தால், அதன் காலில் கட்டியுள்ள சங்கிலியின் இணைப்புகள் மட்டுமல்லாது, பகைவர்களுடைய மான் போன்ற பார்வையினையுடைய மனைவிமார்களின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மங்கல அணியின் கயிறும் அறுந்து சிதையும் என்பதில் யானையின் வீரம் வெளிப்படுகின்றது. இவ்வீரச் சிறப்பினை,

கால் நிமிர்த்தால் கண்பரிய வல்லியோ புல்லாதார்
மானனையார் மங்கலநாண் அல்லவோ – தான
மழைத்தடக்கை வார் கழற்கால் மானவேற்கிள்ளி
புழைத் தடக்கை நால்வாய் நெருப்பு 4

எனும் பாடல் உணர்த்துகின்றது. யானை போர்க்கெழுந்தால், பகை மன்னர் அழிய அவர்தம் பெண்டிர் மங்கலநாண் இழப்பர் என்பதில் யானையின் வீரத்தை அறியமுடிகின்றது.

கிள்ளியின் யானை மறத்தை மற்றொரு பாடலும் எடுத்துரைக்கின்றது. காயும் சினம் மிக்க கிள்ளியின் யானை, போர்மேற் சென்று பகைவருடைய மதில் கதவினைப் பாய்ந்து இடிக்கின்றது. மதிலின் உள்ளும் பெரிய கதவுகள் உள்ளன. தன்னுடைய கொம்பினால் அக்கதவினைக் குத்தி நிற்கின்றது. அவ்வாறு நிற்கும் காட்சி கடலில் பாய்மரம் கட்டப்பட்டுச் செல்லும் மரக்கலத்தைப் போன்றிருந்தது. யானை மரக்கலம் போலவும், அது குத்தி எடுத்துத் தும்பிக்கையில் உயர்த்தியுள்ள கதவு, பாய்மரம் போலவும் காட்சியளிக்கின்றது. இக்காட்சியினை,

அயில் கதவம் பாய்ந்துழக்கி ஆற்றல்சால் மன்னர்
எயில்கதவம் கோத்தெடுத்த கோட்டால் – பனிக்கடலுள்
பாய்தோய்ந்த நாவாய்போல் தோன்றுமே எங்கோமான்
காய்சின வேல் கிள்ளி களிறு 5

எனும் முத்தொள்ளாயிரப் பாடல் உணர்த்துகின்றது. சோழன் பராமரிக்கும் யானைக்கே இவ்வளவு பலம் இருந்தால், சோழனுக்கு என்ன பலம் இருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் இப்பாடல் அமைந்துள்ளது.

சோழமன்னன் கிள்ளிவளவனுடைய யானை போர்க்களத்துக்குச் சென்று போர் செய்தது. கொடிகள் கட்டிய மதில்கள் மேல் பாய்ந்ததால் அதன் கொம்புகளும், பகையரசர்களுடைய மணிமுடிகளை இடறியதால் அதன் கால் நகங்களும் ஒடிந்தும், தேய்ந்தும் போயின. கொம்பும் குளம்பும் அழகிழந்த நிலையில், வெற்றி பெற்று மீளும் அவ்யானை தன் பெண் யானைக்கு முன்னால் வருவதற்கு வெட்கப்பட்டு நகரின் உள்ளே வராமல், புறத்திலே நின்றுவிட்டது. இச்சினம் மிக்க யானையின் நாணத்தைப் பின்வரும் பாடல் உணர்த்துகின்றது.

கொடிமதில் பாய்ந்திற்ற கோடும் அரசர்
முடி இடறித் தேய்ந்த நகமும் - பிடிமுன்பு
பொல்லாமை நாணிப் புறங்கடை நின்றதே
கல்லார் தோள் கிள்ளி களிறு 6

என்பதாகும். வெற்றிபெற்ற களிறு புறங்கடையில் நிற்பது இயற்கை. இதனை முத்தொள்ளாயிர ஆசிரியர், தன் தந்தமும் நகமும் அழகிழந்தமைக்கு நாணி பிடி முன் செல்லாமல் மதிற்புறத்தே நின்றது என்று கூறி, யானையின் மறச்செயலை விதந்து கூறியுள்ளார் என்பதை அறியமுடிகின்றது.

உறையூர் வேந்தனான கிள்ளியின் யானை, போர்க்கு விரைந்து செல்லும் காட்சி கூறப்படுகின்றது. உறையூரில் நிற்கும் சோழனின் மதயானை சீறிப்பாய்கின்றது. அது தனது ஒரு காலால் காஞ்சியையும், இரண்டாவது காலால் உச்ஞைனியையும், மூன்றாவது காலால் இலங்கைகையும் மிதித்து நான்காவது கால் வைக்க இடமின்றி உறையூருக்கே வந்தடைந்தது. உலகத்தில் இனி எதிரியில்லை என உறையூருக்குத் திரும்பும் யானையின் செயல்திறனை,

கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
தத்துநீர்த் தண்ணுஞ்சை தான் மிதியாப் - பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமேநம்
கோழியர் கோக் கிள்ளி களிறு 7

எனும் பாடல் உணர்த்துகின்றது. கதமும் மதமும் சிறந்து விரைந்து சீறித்தாவி பாய்ந்து சுழன்று வருகின்ற யானையின் விரைவு இப்பாடலில் உணர்த்தப்படுகின்றது. இவ்வாறு சோழனின் யானைமறம் பற்றி பேசும் பாடல்கள் முத்தொள்ளாயிரத்துள் நிறைந்துள்ளதைக் காணமுடிகின்றது.

பாண்டியனின் யானைமறம்
மதுரையைத் தலைநகராகக் கொண்டவன் பாண்டியன். அவன் இலை வடிவிலமைந்த வேலினை ஏந்தியவன், அப்பாண்டிய மன்னனுடைய யானை போர்க்களத்தில் பகைமன்னர் மார்புகளில் கோட்டால் குத்திப் போர் செய்கின்றது. தன் தந்தங்கள் எழுத்தாணியாகவும், வீரம் மிக்க பகைமன்னர்களுடைய அஞ்சத்தக்க மார்பு ஓலையாகவும் கொண்டு ‘செல்வம் திகழும் உலகம் முழுவதும் என் பாண்டி மன்னனுடையது’ என்று யானை பகைமன்னர் மார்பில் எழுதுவதை,

மருப்பூசி யாக மறம்கனல் வேல்மன்னர்
உருத்தகு மார்பு ஓலையாகத் – திருத்தக்க
வையக மெல்லாம் எமதென்று எழுதுமே
மொய்யிலை வேல் மாறன் களிறு 8

எனும் முத்தொள்ளாயிரம் பாடல் எடுத்துரைக்கின்றது. மாறனுடைய போர் யானையின் கொம்பு எழுத்தாணியாகவும், அச்சந்தரும் பகையரசர் மார்பு வெற்றி ஓலையாகவும், மாற்றாரைக் கொல்லுதல் எழுதுதல் என்றும் உருவகிக்கப்பட்டு யானையின் மறம் வியந்து பேசப்பட்டுள்ளதை இப்பாடல் உணர்த்துகின்றது.

முத்தொள்ளாயிரத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு பாடலும் பாண்டிய மன்னனின் போர்க்களக் காட்சியையும், யானையின் வீரத்தையும் எடுத்துரைக்கின்றது. அழகிய வேப்ப மாலையை அணிந்துள்ள பாண்டியனுடைய உயர்ச்சியும், அழகும் மிக்க யானையின் கொம்புகள் செய்யும் செயலை எண்ணிப் பார்க்குங்கால் மனத்தில் அச்சம் தோன்றுகிறது. போர்க்குணம் கொண்ட யானையின் ஒரு கொம்பு பகையரசர்களுடைய மார்புகளை வயல்போல் உழுகின்றது. மற்றொரு கொம்பு அப்பகையரசர்களுடைய மதில்களைக் குத்தித் திறக்கின்றது. மதம் கொண்ட யானையின் இச்செயலை,

உருவத்தார்த் தென்னவன் ஓங்கெழில் வேழத்து
இருகோடும் செய்தொழில் எண்ணில் - ஒருகோடு
வேற்றார் அகலமும் உழுமே ஒரு கோடு
மாற்றார் மதில் திறக்குமால் 9

எனும் முத்தொள்ளாயிரப்பாடல் எடுத்துரைக்கின்றது.

மாறனுடைய யானையின் வீரச் செயலுக்கு மற்றொரு பாடலும் சிறந்த சான்றாக அமைகின்றது. ஒளிவீசும் வேலேந்தியவன் பாண்டிய மன்னன். அம்மன்னனின் பட்டத்து யானைகள் பகைவர்மீது சீறிப் பாயும் தன்மையுடையன. அவை காண்போரைக் கண்கலங்க வைக்கும் ஆற்றல் கொண்டு, பகைவரை அழிக்கும் சினம் கொண்டு நிற்கும் யானையின் தோற்றம் மலைபோலுள்ளது. அது முழங்கும் ஓசை கடலின் அலையோசை போலுள்ளது. அதன் மதநீர் பொழியும் மழை போலுள்ளது. அதனுடைய செலவு காற்றிலும் விரைவுடையதாக உள்ளது. அதன் பலம் கூற்றுவனும் கைமாறாகக் கடன் வாங்கும் தன்மையில் உள்ளது. இத்தன்மை கொண்ட யானையின் வலிமையை,

தோற்றம் மலைகடல் ஓசைபுயல் கடாஅம்
காற்றின் நிமிர்ந்த செலவிற்றாய்க் – கூற்றும்
குறியெதிர்ப்பை கொள்ளும் தகைமைத்தே எங்கோன்
எறிகதிர்வேல் மாறன் களிறு 10

எனும் முத்தொள்ளாயிரப் பாடல் உணர்த்துகின்றது. யானையின் தோற்றத்தைப் புனைந்து கூறும் வகையில், அதன் வீரத்தையும், போர்த் தன்மையையும் உணருமாறு கவிஞர் கூறியுள்ளதை அறியமுடிகின்றது. யமனுக்கும் கடன் கொடுக்கும் ஆற்றலுடையது என்பதிலிருந்து பகைவரைக் கண்டாலே அழிக்கும் திறன் கொண்டது மாறனின் யானை என்பது புலனாகின்றது.

தொகுப்புரை
 முடியுடை மூவேந்தர்களும் யானைப் படைக்கு முக்கியத்துவம் கொடுத்து யானைகளைப் பராமரித்தனர் என்பதை அறியமுடிகின்றது.
 சங்க கால போர்கள் யானைகளைக் கொண்டு நிகழ்ந்தன என்பதையும், போர் யானைகள் மலைப்போலும், விரைந்து செல்லுதலில் காற்றினும் மிக்கதாய் பலமும் வளமும் கொண்டு இருந்தன என்பதை உணரமுடிகின்றது.
 அரசர்களால் வளர்க்கப்பட்ட பட்டத்து யானைகள் பகைவரைக் களத்தில் எதிர்த்து அவர்களைக் கொன்று அந்நாட்டைத் தனதாக்கிய பெருமையை அறியமுடிகின்றது.
 அரசின் வருவாயில் ஒரு பங்கு படைக்கென்றே செலவிடப்பட்டது. தன் நாட்டின் எல்லையை காக்க வேண்டும், எதிரிகளைக் கொன்று குவித்து நாட்டைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக முடியுடை மூவேந்தரும் யானைப் படைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது.
 அன்று முடியுடைய மூவேந்தரும் யானைகளைப் பராமரிக்கத் தனியாக வீரர்களை நியமித்து, அவர்களின் மூலம் யானைகளுக்கு வீரத்தை ஊட்டி வளர்த்துள்ளனர். ஆனால், இன்று யானைகளும் இல்லை, யானையைப் பராமரிக்கப் பாகர்களும் இல்லை. அறிவியில், வளர்ந்த விஞ்ஞான உலகம் நொடிப்பொழுதில் நாட்டை அழிக்கும் பீரங்கிகளையும், துப்பாக்கிகளையும் கண்டுப்பிடித்துள்ளது. இவ்வளர்ச்சி கூட யானைப்படைகள் அழிவதற்குக் காரணம் என்று கூறலாம். மேலும், இன்று சமுதாயத்தில் களவும், கொலையும், சூதும் மலிந்த காரணத்தால் யானைகள் வேட்டையாடப்படு கின்றன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

சான்றெண் விளக்கம்
1. புறப்பொருள் வெண்பாமாலை நூ.136
2. நா.சேதுரகுநாதன். முத்தொள்ளாயிரம் (உரை) சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகம், பதிப்பு ஆண்டு 1958 பா.எ.113
3. மேலது பா.எ.69
4. மேலது பா.எ.70
5. மேலது பா.எ.71
6. மேலது பா.எ.72
7. மேலது பா.எ.73
8. மேலது பா.எ.14
9. மேலது பா.எ.15
10. மேலது பா.எ.16

* கட்டுரையைப் பதிவுகள் இணைய இதழுக்கு அனுப்பியவர் - Dr.S. Velmurugan  (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)