முன்னுரை
ஆதி காலத்தில் மனிதர்கள் குகைகளிலும், காடுகளிலும் வசித்து வந்தனர். நாளடைவில் நாகரீக வளர்ச்சியின் காரணமாக ஆற்றங்கரைகளில் வீடுகளை அமைத்துக் கூட்டமாக வாழ்ந்தனர். காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தினால் மக்கள் ஊர், சிற்றூர், பேரூர், நகரம், பட்டினம் என்ற அமைப்பு முறைகளைத் தோற்றுவித்தனர். இதனை அக்காலத்தில் எழுந்த நூல்களில் பதிவு செய்துள்ளனர். தமிழ்மொழிக்குச் செம்மொழி உயர்வினைத் தேடித்தந்த சங்க இலக்கியம் ஒரு தொன்மையான இலக்கியமாகும். சங்க இலக்கியத்தில் ஒன்றான எட்டுத்தொகையில் இடம்பெற்றுள்ள நற்றிணையில் காணப்படும் ஊர்ப் பெயர்கள் பற்றி இக்கட்டுரை அமைந்துள்ளது.

அரிசில்
அரிசிலங்குமரனார் என்னும் புலவர் நற்றிணையில் பாடல் பாடியுள்ளார். அரிசில் என்ற ஊர்ப்பெயர் இவ்வூரைச் சேர்ந்த புலவர் பெயருடன் இணைத்துக் கூறப்பட்ட நிலையில் சங்க இலக்கியங்களில் இப்பெயர் பெறப்பட்டது.

அரிசிலற் தென்றல் அன்ன இவள்
விரை யொலி கூந்தல் விட்டமை கவனே (நற்.141)

என்று அரிலங்குமரன் அரிசிலாற்றைப் பற்றி பாடியுள்ளார். அரிசில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் தென்கிழக்கே நாலரை மைல் தொலைவில் அரிசிலாற்றங்கரையில் அரிசில் கரைப்புத்தூர் என்ற ஓர் ஊர் உள்ளது.

ஆலம்பேரி
ஆலம்பேரி சாத்தனார் என்னும் புலவர் நற்றிணைப் பாடலைப் பாடியுள்ளார். ஆலம்பேரி என்னும் ஊர் நெல்லை மாவட்டத்தில் உள்ளது. இந்த ஆலம்பேரி என்னும் ஊர் இச்சாத்தானருடையது என்பது உரையாசிரியர்களின் கருத்து பேரி என்ற சொல் பேரேரி என்பதன் சிதைவாகும் என்றனர். பெரிய ஏரிகள் பேரேரிகள் எனப்பட்டது.

ஆலங்கானம்
ஆலங்கானம் என்ற இவ்வூர்ப்பெயர் நற்றிணையில் மட்டுமன்றி மதுரைக்காஞ்சி, அகநானூறு, புறநானூறு ஆகிய இலக்கியங்களிலும் இடம்பெற்றுள்ளது. ஊர்களின் அமைப்புக் கருதி தலை, இடை,கடை என்ற முன் ஒட்டுகளில் ஒன்று ஊர்ப்பெயர்களோடு இணைத்துக் கூறும் முறையையொட்டி ஆலங்கானம் என்ற ஊர்ப்பெயர்களொடு தலை என்ற அடையுடன் தலையாலங்கானம் என வழங்கப்பெற்றுள்ளது.

ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழுதாளைச் செழியன் பாசறை (நற்.300)

இளம்புல்லூர்
நற்றினை 89 ஆம் பாடலை பாடியவர் இளம்புல்லூர்க் காவிதி என்பவர். காவிதிப் பட்டம் பெற்ற இப்புலவரின் ஊரினை கல்வெட்டு குறிப்பிடிகிஅது. சங்ககாலப் பாண்டிய நாட்டு ஊர்களுள் இளம்புல்லூர் என்பது ஓர் ஊர். இவ்வூர் இளமைப் பெயரால் சிறப்பிக்கப்படுகிரது. இச்சான்றோரது ஊரான இளம்புல்லூர் இடைக்காலத்தே மிழலைக் கூற்றது நடுவிற்கூறான இளம்புல்லூர்க் குடி என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்படுகின்றது.

உம்பற்காடு
இவ்வூரைச் சேர்ந்த புலவர் உம்பற்காடு இளங்கண்ணனார் எனப்படுவார். உம்பற்காடு சேரநாட்டுப் பகுதியாகும். உம்பல் என்ற சொல் யானையைக் குறிக்கும். எனவே யானைகள் மிகுந்த காடு என்ற பொருளில் இவ்வூர் பெயர் பெற்றிருக்கிறது. உம்பற்காடு என்பது மலையாள மாவட்டத்து வயநாட்டுப் பகுதியில் ஒன்று. இதனைப் பிற்காலத்தவர் நும்பற்காடு என வழங்கினர். இவ்வூர் கி.பி.1887 ஆம் ஆண்டு அரசியலார் இதனை வயநாட்டில் இருந்து பிரிந்து நீலகிரி மாவட்டத்தில் சேர்ந்தனர்.

தற்போது இப்பெயர் மறைந்து விட்டது. இன்றைய வயநாடு சங்ககாலத்துச் சேரமான் வஞ்சன் என்பவனுக்குரிய பாயல் நாடு. அங்குள்ள மலைத்தொடர் பாயல்மலை என்று வழங்கப்படுகிறது. இவ்வூரைப் பற்றி பதிற்றுப்பத்தில்,

இமயவரம்பன் தம்பி அமைவர
உம்பற்காட்டைத் தண்கொல் நிற்க (பதி.1-2)

ஒரு சிறை
ஒரு சிறை என்னும் ஊரில் வாழ்ந்தவர். பெரியனார் என்னும் புலவர் அவ்வூர் பாண்டிய நாட்டிலுள்ளது. தென்பாண்டி நாட்டு இராசராசபுரத்துக்குப் பிடாகையாக ஒரு சிறையென்னும் ஊர் இருந்ததென கல்வெட்டு கூறுகின்றது. தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் பகுதியில் இவ்வூர் உள்ளது. ஒரு சிறை என்பது ஒரு பக்கம் என்னும் பொருளுள்ளது.

சிறுகுடி
குடி என்னும் சொல் ஊர்ப்பெயர்களில் அமைந்து குடியிருப்பை உணர்த்துவதாகும். உறவு முறையையுடைய பல குடும்பத்தார் ஒரு குடியினராகக் கருதப்படுபவர். இத்தகைய குடியினர் சேர்ந்து வாழும் இடம் குடியிருப்பு என்றும் குடி என்றும் சொல்லப்படும். அத்தகைய குடியிருப்புகள் பரப்பின் சிறுமையால் சிறுகுடி எனப்பெயர் பெற்றது.

பண்ணன் என்ற வள்ளலுக்குரியது சிறுகுடி என்று சங்க இலக்கியம் கூறுகிறது. ஆகவே சிறுகுடி கிழான் பண்ணன் என்னும் பெயர் பெற்றான்.

வாணன் சிறுகுடி அன்ன (நற்.340)
மூதில் அருமன் பேரிசைச் சிறுகுடி (நற்.376)

ஓதலூர்
நற்றிணையில் உள்ள126ஆம் பாடலின் ஆசிரியர் ஓதலாந்தையாரின் ஊர் ஓதலூர் ஆகும். ஓதலூர் சேர நாட்டுக் குட்ட நாட்டுப் பகுதியில் உள்ளதோர் ஊர், இப்போது அப்பகுதி மலையாள மாவட்டத்துப் (கேரளா) பொன்னானரி வட்டத்திலுள்ளது. அப்பகுதி இன்றும் குட்ட நாடு என்றுதான் அழைக்கப்படுகிறது.

காண்டவாயில்
காண்டம் என்றால் நீர் காண்டவாயில் நீர்வாயில் நீர்த்துறை அல்லது நீர்க்கரை என்ற பொருளில் காண்டவாயில் என்ற ஊர்ப்பெயர் அமைந்திருக்கலாம், இதனை,
புலம்பா கின்றே தோழி கலங்குநீர்க்
கழிசூழ் படப்பைக் காண்ட வாயில் (நற்.38)

காவிதிப்பாக்கம்
பண்டைய நாளில் நல்லொழுக்கம் நிறைந்த சான்றோர்களுக்கு எட்டி, காவிரி போன்ற பட்டங்களை அறிந்து அவர்களுக்குச் சிறப்பு செய்கின்ற போக்கு இருந்தது. அந்தச் சிறப்பினர் ஒருவரின் பெயரால் அமைந்ததே இக்காவிதிப்பாக்கம். “இது வட ஆர்க்காடு மாவட்டத்தில் காவிதிப்பாக்கமாக விளங்கிய பேரூர்” ஆகும். தற்போது “காவிரிப்பாக்கம்” என மருவி வழங்குகிறது.

கிடங்கில்
தமிழகத்தின் பழமையான ஊர்களில் ஒன்று. கண்ணனார் என்னும் புலவர் இவ்வூரை சேர்ந்தவர். இது நடுநாட்டிலே ஓய்மாநாட்டு நல்லியக்கோடனின் ஆட்சியிலிருந்த ஒரு ஊர். இவ்வூர் தற்போது திண்டிவனம் நகரத்தின் அருகில் உள்ள ஊர். இவ்வூர் மிக பழமையானது. இந்நகர தெருக்களில் இருந்த புழுதியை யானைகளில் மதநீர் அருவி நனைத்து அடக்கியயதாகச் சங்க இலக்கியம் கூறுகின்றது.

அமுதம் உண்க நம் அயல் இலாட்டி
கிடங்கில் அன்ன விட்டுக்கரைக் கான்யாற்று (நற். 65, 1-2)

கிடங்கில் என்பது சங்க காலத்தில் தொண்டை நாட்டின் தென்பகுதியான ஒய்மா நாட்டுத் தலைநகரமாய் விளங்கிற்று. இப்போது திண்டிவனம் புகைவண்டி நிலையத்திற்கு அண்மையில் இவ்வூர் நகராட்சியில் அடங்கியுள்ளது.

குடவாயில்
கீரத்தனார் என்னும் புலவர் நற்றிணை பாடலைப் பாடியுள்ளார். இவர் குடவாயிலைச் சேர்ந்தவர். தற்போது குடவாயில் என்னும் குடவாசல் தஞ்சாவூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது. இது கும்பகோணம் – திருவாரூர் நெடுஞ்சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து மைல் தொலைவில் உள்ளது. இது சோழ நாட்டு பழமையான ஊர். இக்குடந்தையை சங்க இலக்கியத்தில் ஷஷதேர்வன் சோழர் குடந்தை வாயில் என்று நற்றிணை குறிப்பிடுகின்றது.

குழப்பந்தாங்கல்
குளம்பு என்னும் மூரினதாதலிற் குளம்பனாரெனப்பட்டார். தற்போது இவ்வூர் தொண்டை நாட்டு ஊர்களில் குழப்பந்தாங்கல் என வழங்கப்படுகிறது.

குன்றுகட் பாலி
குன்றின்கட் பாலியாதனார் என்னும் புலவர் நற்றிணைப் பாடலைப் பாடியுள்ளார். குன்றுகட் பாலி என்பது ஓர் ஊர். அது தற்போது பாலிக்குன்று என்ற உருவில் மலையாள மாவட்டத்தில் (கேரளா) கோழிக்கோட்டுப் பகுதியில் உள்ளது.

பொறையாறு
கல்லாடனார் என்ற சங்ககாலப் புலவரால் பாடப்பெற்ற பொறையாற்றுக் கிழான் என்பவன் பொறையாற்றின் தலைவன் ஆவான். அவன் பெரியன் என்றே குறிக்கப் பெறுகிறான் வலிமை என்னும் பொருளுடைய பொறை என்னும் சொல்லடியாக இவ்வூர்ப் பெயர் பொறையாறு எனப்பட்டது. உயர்த்தலைவன் வலிமையுள்ள ஒரு பெருந்தலைவனாக இருந்து அவன் வலிமை காரணமாகவே அவனது ஊரும் பெயர் பெற்றது.
நாகப்பட்டினம்மாவட்டம் மயிலாடுதுறை கோட்டம் தரங்கம்பாடி வட்டத்தில் பொறையாறு இன்று பேரூராட்சியாக உள்ளது.

நறவு மகிழ் இருக்கை நல்தேர்ப் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன (நற்.131)

கோன்மா
கோன்மா நெடுங்கோட்டனர் என்னும் புலவர் இவ்வூரினர். சோழ நாட்டின் கண் உள்ள ஊர்களில் ஒன்று. இதனை கல்வெட்டுகளும் குறிக்கின்றன. செயங்கொண்ட சோழ மண்டலத்துத் திருவிழந்தார் நாட்டுக் கோமலான குலோத்துங்க சோழச் சதுர்வேதி மங்கலம் என்று கூறுகின்றது. இந்நாளில் இது கோமல் என்று வழங்கப்படுகிறது. இது தற்போது நாகை மாவட்டத்தில் உள்ளது.

சுள்ளி
மதுரைச் சுள்ளி போதனார் என்னும் புலவர் ஒருவர். நற்றிணையில் பாடல் இயற்றியுள்ளார். சுள்ளி என்பது தற்போது சுருளியென மருவி விட்டது. இப்போது தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் உள்ளது. இவ்வூர் சுருளி அருவி சிறப்பு வாய்ந்தது.

தண்கால்
தண்கால் பொற்கொல்லன் வெண்ணாகனார் என்னும் புலவர் நற்றிணையில் பாடலை இயற்றியுள்ளார். தண்கால் என்னும் ஊர்ப்பெயர் பிற்காலத்தே தங்கால் என மருவி விட்டது. தங்கால் என்பது பாண்டிய நாட்டில் உள்ள ஓர் ஊர். திருத்தங்கலூர் என இன்று வழங்கப்படுகிறது. இவ்வூர் பொதியத்தில் தோன்றிவரும் தென்றல் இவ்வூர்ப் பகுதியடைந்தும் மென்மையும் தன்மையும் பெற்றுத் தமிழ் நடையுற்று இனிமை செய்யத் தலைபடுவதால் அவ்விடம் தண்கால் எனப்படுவதாயிற்று என்று ஒளவை துரைசாமி தன் உரையில் இவ்வூருக்கு விளக்கம் தருகிறார்.

நொச்சி – நியமம்
நொச்சி நியமங்கிழார் என்னும் புலவர் நற்றிணையில் பாடலை இயற்றியுள்ளார்.

நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே (நற். 45, 4-5)

நியமம் என்பது கோயிலைக் குறிப்பதால் முன்காலத்தில் நொச்சி நியமம் தெய்வநலம் பெற்ற ஊர்களில் ஒன்று என கொள்ளப்படுகிறது. தற்போது அவ்வூர்ப் பெயர் நொச்சியம் என மருவி வழங்குகின்றது. நொச்சி நியமம் என்பது சோழநாட்டுக் காவிரியின் வடக்கில் திருச்சிராப்பள்ளி வட்டத்து உத்தமர் கோயில் என்னும் ஊர்க்கு அண்மையில் உள்ளது.

பெருந்தலை
பெருந்தலை என்னும் ஊரிற் பிறந்த சாத்தனாரைப் பெருந்தலைச் சாத்தனார் என்று குறித்தார்கள். அவ்வூர் பெருந்தலையூர் என்னும் பெயரோடு கொங்கு நாட்டில் இன்றும் காணப்படுகின்றது. இவ்வூர் கோவை மாவட்டத்தில் பூவானி (பவானி)யாறு பாயும் நாட்டில் உள்ளதோர் உர் ஆகும்.

மருங்கூர்ப் பட்டினம்
பாண்டிய நாட்டில் திருவாடானை மருங்கூர் என்னும் பெயருடன் ஓர் ஊர் உள்ளது. பசும்பூண் வழுதி மருங்கை என்னும் தொடர் பாண்டியனுக்குரியது. மருங்கை என்னும் இவ்வூர் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படுகிறது.

பச்சிறாக் கவர்ந்த பசுங்கண் காக்கை
தூங்கல் வங்கத்துக் கூம்பிற் சேக்கும்
மருங்கூர்ப் பட்டினத் தன்ன இவன்
நெடுந்தேர் எவ்வளை ஓடுவ கண்டே (நற்.258)

என்று மருங்கூர்ப் பட்டினத்தின் சிறப்பைப் பாடியுள்ளார் நக்கீரர்.

முடிவுரை
இவ்வாறாக சங்க இலக்கியங்களில் அகத்திணைப் பாடல்களில் சிறப்புப்பெற்றது நற்றிணை. இந்நற்றிணையில் பல்வேறு சிறந்த புலவர்களின் பாடல்கள் மறைந்தும் அழித்து போயின, எச்சியுள்ளவை கொண்டு அப்புலவர்களின் ஊர் பெயர்களை அறியமுடிகிறது.

துணைநின்ற நூல்கள்
1. சேதுப்பிள்ளை ரா.பி.,தமிழகம் ஊரும் பேரும், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை, 2005.
2. பாலசுப்பிரமணியன் கு.வே, நற்றிணை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 14-பி சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை, 2008.
3. புலியூர் கேசிகன்,பதிற்றுப்பத்து, பாரி நிலையம், சென்னை, 2005.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.