முகவுரை
இன்றைய சூழலில் அடித்தளமக்கள் மற்றும் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்வனைத்தும் போராட்டத்தால் மட்டுமே மீட்டெடுக்க முடியுமென்ற அவலநிலையில்தான் இச்சமுதாயம் இருந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் வாழ்வனைத்தும் அநீதிகளையும், தீண்டாமைகளையும் புறக்கணிப்புகளையும் மட்டுமே எதிர்கொள்ளும் மாற்றுப்பாலினத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இன்று ஓரளவேனும் புத்துயிர்ப்பு பெறத்தொடங்கியுள்ளனர் என்று சொன்னால் அம்மாற்றங்களுக்கு நவீனஇலக்கியங்கள் முக்கியக் காரணமாகத் திகழ்கின்றன எனலாம். பேடி, அரவாணி, திருநங்கை போன்ற பல்வேறு பெயர்களால் விமர்சனத்துக்குள்ளாகி வரும் மூன்றாம்பாலினர் தங்களுக்கான வாழ்வுரிமைகளை மீட்டெடுப்பதில் தற்போது பெரும் சிரத்தை எடுத்துவருகின்றனர். இதற்கு இலக்கிய வடிவில் அவர்களும், அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்ட படைப்பாளர்களும் உறுதுணையாக நிற்கின்றனர்.

குறிப்பாக, ‘சு.சமுத்திரம் எழுதிய வாடாமல்லி என்னும் நாவல் தமிழில் திருநங்கையர் குறித்து வெளிவந்த முன்னோடிப் படைப்பாகும். இந்நாவலுக்குப் பிறகே திருநங்கையர்கள் பலரும் தங்கள் வாழ்வனுபவங்களை சமூகத்திற்கு தன்வரலாறாகப் படைத்துத் தருவதற்கு முன்வந்துள்ளனர். மனிதர்களில் எதிர்மறை உணர்வுகளால் சிக்கித்தவிக்கும் சிறுகுழுவினரான திருநங்கையர்கள் தங்களின் வாழ்வியல் உணர்வுகளை இதுபோன்று இலக்கியங்களில் கருத்தாக்கங்களாக பதிவிடத் தொடங்கிய இம்முயற்சி குறைவுதான் என்றாலும் இலக்கியவெளியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தவகையில், திருநங்கையர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை முதன்முதலில் மிகவும் உணர்வுப்பூர்வமாக படைப்பாக்கிய சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ நாவலில் இடம்பெற்றுள்ள மூன்றாம் பாலினர் குறித்த பன்முகச்சிந்தனைகளை கண்டறிந்து விளக்கும் முயற்சி இக்கட்டுரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சு.சமுத்திரம் - வாடாமல்லி நாவல் கட்டமைப்பு
சமுதாயத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட சு.சமுத்திரம் அவர்கள் எழுத்தை இறைவனாக நினைப்பவர். இவர் மக்களுக்குப் பயன்படும் நிலையில், சமுதாய அணுகுமுறையில் சமுதாயப் பிரச்சனைகளையே மையமாகக் கொண்டு பல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவருடைய படைப்புகள் அனைத்தும் கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் விளிம்புநிலை மாந்தராக அறியப்படும் திருநங்கையர் குறித்தப் புரிதல் சமூகப் பொதுவெளியில் குறைவானதாகவே இருக்கின்றன என்னும் கருத்தியலை விளக்க முற்பட்ட சு.சமுத்திரம், வாடாமல்லி என்னும் நாவலில், இந்த சமூகத்தில் ஆணாகவும் வாழமுடியாமல், பெண்ணாகவும் இயங்கமுடியாமல் பல சமூகச்சிக்கல்களை எதிர்கொள்ளும் ‘திருநங்கையர்களின்’ வாழ்வியல் இன்னல்களை விரிவாகப் பேசியுள்ளார். கல்வியாளர்கள் சிந்தனையாளர்கள் என யாவரும் நிச்சயம் படிக்கவேண்டிய நூறு சிறந்த நாவல்களை பட்டியலிட்டுள்ள ‘எஸ்.ராமகிருஷ்ணன்’ அவர்கள் ‘சு.சமுத்திரம் எழுதிய வாடாமல்லி’ நாவலையும் அதனுள் பரிந்துரைத்துள்ளார். ஏனெனில், 1994 ஆம் வெளிவந்த அந்நாவலின் வீச்சு அத்தனை வீரியங்களையும் தாக்கங்களையும் தமிழுக்குத் தந்துள்ளது.

ஆணாகப் பிறந்த ‘சுயம்பு’ என்ற ஒருவன் குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் உடலாலும், மனதாலும் மாறுதலுடைந்து பெற்றோரிடமும், உடன் பிறந்தோரிடமும், கல்லூரி நண்பர்களோடும், சமூகத்தில் உலவும் சகமனிதர்களோடும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள இயலாமல் பல்வேறு சமூகச்சிக்கல்களை எதிர்கொள்கிறான். பெற்றவர்களே தன் பிறப்பை புறக்கணிக்கும் போது தன்னிலை என்னவாகும் என்ற கேள்வியோடு சமூகத்தை வெறுப்போடு அணுகும் ‘சுயம்புவை’ மையமாகக் கொண்டு மானிட மேன்மைக்காகவும், குடும்பம் மற்றும் சமூகநிலைகளில் திருநங்கையர் குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டுமென்ற ஆவலோடும் சு.சமுத்திரம் அவர்கள் ‘வாடாமல்லி’ நாவலை படைத்தளித்துள்ளார். ‘காலம் காலமாக சமூகத்தில் ஒடுக்கப்பட்டு வரும் பிரிவில் ஒன்றான திருநங்கையர்களை மையமாக வைத்து 90 களில் விகடன் வாயிலாக எழுதிய தொடர்கதையின் ஒழுங்குபடுத்தப்பட்ட வெளியீடுதான் வாடாமல்லி நாவலாகும்.

திருநங்கையர் - பிறப்பில் சிக்கல்
திருநங்கையர் என்பவர் பிறப்பில் எந்த ஒரு வேறுபாடும் இன்றி எல்லோரையும் போல் பிறக்கின்றனர். குறிப்பிட்ட வயதைக் (13 – 18) கடந்தவுடன் மனம் மற்றும் உடல் மாற்றங்கள் தானாகவே மாற்றம் ஏற்படுகின்றன. அவர்களால் ஆண்களிடமோ பெண்களிடமோ மற்றவர்கள் போல் சமமாக பழக முடிவதில்லை. எல்லோரிடமும் இருந்து ஒதுங்கி வாழவே அவர்கள் மனமும் விரும்புகிறது. இதனால், பெரும்பாலும் கல்வியிலும் நாட்டமில்லாமல் காணப்படுகின்றனர். இவர்களைப் பற்றியப் புரிதலை விளக்க முற்படும் மருத்துவர்கள், ‘ஹெர்மாபுராடக்’ என்றும் விஞ்ஞானிகள் ‘குரோமோசோம்’ குறைபாடு என்றும் கூறுவதாக வாடாமல்லி நாவலின் ஆசிரியர் தனது நூலின் என்னுரையிலும், முன்னுரையிலும் குறிப்பிட்டுள்ளார். மேலும், இவரது நாவலில், ‘சுயம்பு’ என்ற கதைமாந்தரைப் பார்த்த மருத்துவரின் உதவியாளரின் கூற்றாக,

“சார்...................இந்தப் பையனப் பத்தி சொல்றதைப் பார்த்தால் இவன்
பார்க்குற பார்வையைக் கணக்கெடுத்தால் அநேகமாக
‘ஹெர்மாபுராடக்டா’ இருக்கலாமோன்னு எனக்கு ஒரு சந்தேகம்”
(சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.64)

என்று திருநங்கையரின் பிறப்பு பற்றியும், மற்றொரு இடத்தில் ‘டேவிட்’ என்ற கதாபாத்திரம் மூலம் திருநங்கையர் பிறப்பை ‘ஹெர்மாபுராடக்’ என்றும் சொல்வார். இக்கருத்தியல் இப்பிறப்பு இவர்களுக்கு சிக்கலுக்குரியதாக உள்ளதை உணர்த்துகிறது. இப்பிறப்பு ஒரு பரம்பரை நோயும் அல்ல. தொற்று வியாதியும் அல்ல. எல்லோரிடமும் ஆண் தன்மை, பெண் தன்மை உண்டு. அதில் ஆண்களுக்கு பெண் தன்மை மிகுந்தாலோ, பெண்களுக்கு ஆண் தன்மை மிகுந்தாலோ இந்நிலை ஏற்படுகிறது. இதற்கு எவரும் பொறுப்பேற்க முடியாது. எனவே, இவர்களுக்கு பிறப்பின் அடிப்படையிலேயே சிக்கல் ஏற்படுவதாக ஆசிரியர் சு.சமுத்திரம் அவர்கள் குறிப்பிடுகிறார்.

கல்விநிலையில் புறக்கணிப்பு
ஆணாக இருக்கும் ஒருவன் குறிப்பிட்ட பருவம் அடைந்த பிறகே இந்த உணர்வுகளுக்கு ஆட்படுகிறான். அப்போது அவனால் மேற்படிப்பை கூட தொடர்ந்து படிக்க முடிவதில்லை. இன்னும் பல கல்வி நிறுவனங்களின் விண்ணப்பத்தில் கூட இவர்களுக்கென்று தனிப்பிரிவு கிடையாது. பெண் தன்மை மிகுந்து காணப்படுவதால் இவர்கள் பல ஆண்களால் கேலி செய்யப்படுகின்றனர். இவர்களால் தன் தோழர்களிடமோ, குடும்ப உறவினர்களிடமோ தன் நிலை பற்றிக் கூறவும் முடியாமல், தன்னால் தான் யார், தன் நிலை என்னவென்று உணர்த்த முடியாமல் தவிக்க நேரிடும். இதை, ஆசிரியர் சுயம்பு பற்றி அவனுடைய நண்பர்கள் கூற்றாக,

“சுயம்பு ரொம்ப பிரிலியண்ட் சார் ஆனால்.....இப்போ ஒரு
மாதிரி ஆயிட்டான் நைட்ல எங்க கூட படுக்காம வராண்டாவுல
படுக்கான்......... பொண்ணுங்ககிட்ட ஓவரா பேசுறான்
திடீர் திடீர்னு அழுவுறான் கோபப்படுறான். துண்டை எடுத்து
மாறாப்பு மாதிரி போட்டுக்கிறான்” (சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.63)

என்று சுயம்புவின் அவலநிலையை நாவலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார். மேலும், தன்னிலை மறந்து ஒரு பெண்ணிடம் சென்று இருசக்கர வாகனத்தில் அமர இடம் கேட்டதை வைத்து அவன் மேல் பல குற்றங்கள் சுமத்தப்பட்டு கல்லூரியில் இருந்து நீக்கப்படுகிறான். அதனால் பொறியாளன் ஆகவேண்டுமென்ற அவனது இலக்கு சிதைந்து போகிறது. இதனை,

“சுயம்பு ரைட் நௌ ... நைட்ல வைஸ் சான்சலர
கன்சல்ட் செய்து...மேற்கொண்டு என்ன ஆக்ஸன் எடுக்கணுமோ
அதை எடுப்போம்” (சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.95)

என்று பதிவாளர் கூற்றாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். அவனை மீண்டும் கல்லூரியில் சேர்த்துக் கொள்ளும்படி உறவினர்கள் சிலர் வேண்டுகின்ற போது,

“நீங்களே மனுப்போட்டு ஒங்க பையனோட டி.சியை கேட்கிறது
மாதிரி தான் அந்தக் காகிதத்திலே எழுதியிருக்கோம்.....”
(சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.100)

என்று பதிவாளர் குறிப்பிடுகிறார். இவ்வாறு கல்லூரியில் மேற்படிப்பு படித்துவரும் ஒரு மாற்றுப்பாலினத்தவருக்கு சகமாணவர்களை எதிர்கொள்ள முடியாத நிலை அங்கே பதிவுசெய்யப்படுகிறது. இன்றளவும் மாற்றுப்பாலினத்தவர்கள் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கும் வகுப்பறையில் சமமதிப்பு பெற்று கல்விகற்பதற்கும் விடுதிகளில் தங்கி உண்டு உறங்குவதற்கும், இரயில் பேருந்துகளில் பயணிப்பதற்கும், ஆலயம், கடைவீதிகள், திரையரங்குகள், வாடகைவீடுகள், அலுவலகங்கள் என அனைத்து நிலைகளிலும் புறக்கணிப்புகள்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்னரே பொதுவெளிக்குள் மாற்றுப்பாலித்தவர்கள் வரமுடியாமல் சிக்கத்தவித்த மனநிலைகளை சு.சமுத்திரம் தன் நாவலில் திறம்பட விளக்கியுள்ளார்.

குடும்பத்திலிருந்து புறக்கணிப்பு
ஒருவன் திருநங்கையராக மாறிவிட்டால் அவனைப் பெற்றவராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வதில்லை. அவனுடன் இருந்தால் தங்கள் குடும்ப மரியாதை பாதிக்கப்படுவதாக நினைக்கின்றனர். உடன் பிறந்தோரும் தங்களுடைய திருமணம் தடைபடும், தங்களையும் பிறர் அவ்வாறே எண்ணி விடுவாரோ என்று அஞ்சி சுயநலமாகச் சிந்திக்கின்றனர். பலர் இவர்களுடைய நிலை என்னவென்றே அறியாமல் மூடநம்பிக்கையால் இவர்களை மேலும் துன்புறுத்துகின்றனர். இவர்களால் தனித்தும் வாழமுடியாமல் குடும்பத்தோடும் சேரமுடியாமல் நிர்கதியற்றுத் தவிக்கின்றனர். அவர்கள் தன் குடும்பத்தின் மீது எத்துணை அன்பு வைத்துள்ளனர் என்பதைச் சுயம்பு தன் அக்கா மரகதத்தைப் பார்த்ததும்,

“வயதளவில் நான்கு ஆண்டுகள் இடையில் நின்றாலும் உறவளவில்
முப்பதாண்டுகள் இடைவெளி கொடுக்கும் தாய்”
(சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.22)

என்று எண்ணுவதாகவும் சுயம்புவின் மனோபாவம் கதையில் வெளிப்படுமாறு ஆசிரியர் கூறியிருப்பார். சுயம்புவின் உடல்மன மாற்றங்களைக் கண்டு அவன் அத்தை அவனுக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறிப் பரிகாரம் செய்யச்சொல்லுகிறார். இதனை,

“சரி.........இப்பவே ஓடிப்போ..........நீ, கேட்டது எல்லாம் அடுத்த
செவ்வாய்கிழமை உச்சி காலத்துல ஒன்வீடு தேடி வரும்.......”
(சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.133)

என்று பேய் ஓட்டுவது போன்ற நாட்டார் வழக்காற்றியலின் நம்பிக்கையையும், மாற்றுப்பாலினச் சிந்தனை பற்றி அறவே அறியாத அம்மக்களின் வாழ்வையும் ஆசிரியர் அன்றே மிகநுணுக்கமாக விளக்கியிருக்கிறார். மேலும், இவர்களை குடும்பத்தார் ஆதரிக்காமல் ஒதுக்கினாலும் இவர்களால் தம் உறவுகளை மறக்க முடிவதில்லை. அதே நேரத்தில் அவர்களை சென்று பார்க்கவும் முடிவதில்லை என ‘சுயம்பு’ புலம்பித்தவிக்கும் மனநிலை வெளிப்பாட்டினை,

“எக்கா.....எம்மா....அய்யோ........அண்ணா........என்ன வந்து
கூட்டிட்டுப்போ அண்ணா அப்பா.....என்னை இழுத்துப்
போய் ஊர்லயாவது வெட்டிப் புதையுமப்பா.....”
(சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.199)

எனச் சுட்டிக்காட்டியுள்ளார். ‘மரகதம்’ என்பவள் தன் தம்பிமேல் பாசம் வைத்திருந்தாலும் அவன் செய்கை மாற்றத்தால் தன் திருமணம் தடைபட்டதால் அவனை வெறுத்து ஒதுக்குகிறாள். இதனை,

“என் வாழ்க்கையைக் கெடுக்குறதுக்குன்னே உடன் பிறந்தே
கொல்லும் நோயுடா..நீ” (சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.175)

என்று அன்புகொண்ட தன் சகோதரன்மீது சுயம்புவின் சகோதரி ஒரு கட்டத்தில் தன் சுயநலத்தை வெளிப்படுத்துவதாக ஆசிரியர் விளக்கியிருக்கிறார். இதுபோன்று வாழ்க்கையில் தாங்கவியலாத் துயருற்று பல்வேறு கொடுந்துயரங்களை அனுபவித்து வீட்டைவிட்டு வெளியேறிய சுயம்பு, புறவெளியில் எப்படியோ காலூன்றி அதன்மூலம் கிராமத்தில் படித்துக்கொண்டிருக்கும் அவன் தங்கைக்கு பணம் அனுப்புகிறான். ஆனால், அவனைத் தன் திருமணத்திற்கு வரவேண்டாம் என்றும், தன் திருமணம் அவனால் தடைபடும் என்று மனம்நொந்து கூறுகிறாள். இதனை,

“என்னதான் வேட்டி சட்டையோடு வந்தாலும் உங்கள் பேச்சும்
நடையும் அவர்களுக்குக் காட்டிக் கொடுத்து விடலாம்.........”
(சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.382)

என்று கூறி உடன்பிறந்த சுயம்புவிற்கு கடிதம் எழுதுகிறாள்.

“அக்கா கல்யாணத்திற்குப் போக முடியவில்லையே............
போக விடலையே, எக்கா............எக்கா, நான் இல்லாம
ஒனக்குக் கல்யாணமா” (சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.260)

என்று, “பெண்மையைச் சிறையிட்ட ஆணுடம்பை தண்டிப்பது போல் குதியாய்க் குதித்தான்.” என்னதான் திருநங்கையர் ஒருவர் வாழ்வில் முன்னேறினாலும் அவர்களது உதவியினை மட்டும் மறைமுகமாக ஏற்றுக்கொள்ளும் அவரது குடும்பம், அவரை மட்டும் சமூகத்திற்கு முன்பாக வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதில்லை என்பதனை மேற்கண்ட வரிகள் நன்கு புலப்படுத்துகின்றன.

சமூகத்திலிருந்து புறக்கணிப்பு
சமுதாயம் என்பது அனைத்து நிலைகளிலும் திருநங்கையர்களை எப்போதும் புறக்கணிப்பதிலேயே முனைப்பாகச் செயல்படுகிறது. இவர்களால் எந்த பொது நிகழ்ச்சிகளிலோ கொண்டாட்டங்களிலோ கலந்துகொள்ள முடிவதில்லை. இவர்களைத் திரைப்படங்களில் நகைச்சுவைக் காட்சிகளுக்கும், பாலுணர்சிக் காட்சிகளுக்கும் தான் பயன்படுத்துகின்றனர். அரசு இவர்களுக்கென்று பெரிதாக தனிச்சலுகையோ, உதவியோ செய்வதில்லை. எளியமக்களுக்கு எப்போதும் எந்த நலத்திட்டங்களும் முழுமையாக சென்றுசேர்வதில்லை என்பது இச்சமுதாயத்தில் எழுதப்படாத விதியாகவே இன்றுவரை இருக்கிறது. நாவல் எழுதப்பட்ட காலகட்டங்களில் நாட்டின் ஒரு குடிமகன் என்ற அடிப்படையில் ஓட்டுரிமைகூட இவர்களுக்கு இல்லை. கடந்த 25 ஆண்டுகளில் குறிப்பிடும் படியான சில சீர்திருத்தங்கள் விளிம்புநிலைச் சமூகத்தினருக்கு நிகழ்ந்திருக்கிறது என்று சொன்னால் அத்தனை எளிதில் இம்மண்ணில் அந்த மாற்றங்கள் நிகழ்ந்துவிடவில்லை.

ஏனெனில், திருநங்கையர்கள் முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களும் ஆரோக்கியமான விவாதங்களும் தங்கள் உரிமைக்காகக் குரல்கொடுத்த களச்செயல்பாடுகளும் தான் இதற்கு முக்கியக்காரணங்களாக விளங்குகின்றன. நவீன இலக்கியங்கள் இதற்கு தன்னளவில் மிகுந்த அர்ப்பணிப்புகளையும் இன்று நாளெல்லாம் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன எனலாம். திருநங்கையர்களில் சிலர் ஒரு குழந்தை பிறந்த வீட்டினுள் சென்று பாட்டுப்பாடி, ஆடி, குழந்தையைத் தூக்கி அன்பாக விளையாடுகின்றனர். அதைக்கண்ட அக்குழந்தையின் தாய் கோபப்பட்டு தன் கணவனிடம் எவ்வளவு பணம் கேட்டாலும் அதை கொடுத்து நம் குழந்தையை அவர்களிடமிருந்து வாங்கி வாருங்கள் என்று கூறுகிறார்கள். அக்குழந்தையை அவர்களிடமிருந்து பெற்றவுடன்,

“தடிச்சிங்களா.........தட்டுக்கெட்டதுகளா..........எச்சிக்கலைகளா
எறப்பாளிகளா.........என் குழந்தைய இனிமே தொடுங்க பார்க்கலாம்....”
(சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.227)

என்று கேவலமாகப் பேசுகிறாள். இதுபோன்ற புறக்கணிப்புகளாலும் மனம்நொந்து போகின்ற இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ சமூகத்திலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டு தனக்கென்று தன்னைப்போலுள்ள திருநங்கையர் கூட்டத்துடன் இணைந்து ஒரு சமூகமாக வாழத் தலைப்படுகின்றனர். பாதுகாப்பில்லாத அவ்வாழ்வினுள் தங்களுக்குள் சில உறவுமுறைகளை ஏற்படுத்திக்கொண்டு குடும்பஅமைப்பையும் உருவாக்கிக் கொள்கின்றனர். இதுபோன்ற சிந்தனைவாதங்களை எளியநடையில் வார்த்;தைகளால் வடித்துத்தந்துள்ளார் படைப்பாளர் சு.சமுத்திரம்.

வேலைவாய்ப்பில் புறக்கணிப்பு
திருநங்கையர்களுக்கென்று அரசு எந்த ஒரு வேலையையோ, தொழிலையோ ஒதுக்கவில்லை. அவர்களால் சராசரி ஆண்களைப் போலவோ பெண்களைப் போலவோ எந்த வேலையையும் செய்ய அனுமதி அளிப்பதில்லை. அவர்கள் உயிரோடு வாழ, மற்றவர்களைப் போல உணவு பொருளாதாரநிலை வேலைவாய்ப்பு இருக்கவேண்டும். இப்படி எந்தச் சலுகையும் இல்லாமல் இருப்பவர்கள் இறுதியில் பாலியல் தொழிலுக்குத் தள்ளப்படுகின்றனர். இவர்கள் சகமனிதர்களைப் போல முறையான தொழிலைச்செய்து நேர்மையாக வாழவிரும்பினால் இச்சமுதாயம் வாழவிடுவதில்லை. அரசுநிலைகளிலும் தனியார் மையங்களிலும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. இந்நிலை நீடிப்பதால் குற்றங்கள்தான் மேலும் பெருக வாய்ப்புள்ளது. இதுபோன்று வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்படுவதால் ஒரு விளி;ம்புநிலைச் சமூகம், சமுதாயத்தின் மிகக் கீழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதன் விளைவாக அவர்களின் வாழ்வு கேளிக்கைக்கும் கிண்டலுக்கும் அவதூறுகளுக்கும் இடமளிக்கவே வழிவகை செய்கிறது என்ற கருத்தியலை இந்நாவலாசிரியர் பக்கங்கள் தோறும் முன்மொழிந்துள்ளார். கால் நூற்றாண்டுக்கு முன் இந்நாவலாசிரியர் மாற்றங்களை வலியுறுத்திப் பேசிய சிந்தனைகள் பல சமுதாயத்தில் இன்னும் மலரவே இல்லை என்பதுதான் நிதர்சனம். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் மாற்றுப்பாலினத்தவர்கள் சமூகப் பொதுவெளியில் முன்னேற்றங்களை அடைந்துள்ளனர்.

திருமணம் குழந்தைப்பேறு இல்லாமை
வயது வந்த ஒரு ஆணும், பெண்ணும் திருமணம் செய்துகொண்டால் அவர்களைச் சமூகம் அங்கீகாரம் செய்கிறது. சட்டமும் அவர்களைக் கணவன் மனைவியாக ஒப்புக்கொள்கிறது. அவர்களுக்கு விருப்பம் இல்லாதநிலையில் விவாகரத்தும் செய்து வைக்கிறது. ஆனால், திருநங்கையர்களுக்கோ திருமணம் செய்துகொள்ளக்கூட சட்டத்தில் இடமில்லை. அப்படி இவர்களை சேர்த்துவாழ விரும்பிவரும் ஆணோ, பெண்ணோ இவர்களை விட்டுச்சென்றால் அவர்கள் மேல் எந்த வழக்கும் இவர்களால் தொடுக்கவும் முடிவதில்லை. இச்சமுதாயத்தில் இவர்களால் தனித்தும் வாழமுடியவில்லை. துணையுடன் சேர்ந்தும் வாழமுடியவி;ல்லை. வரலாற்றுக்காலம் தொடங்கி இவர்களின் பிறப்பு அர்த்தமற்றே கடக்கிறது.

திருநங்கையர்கள் பிறரோடு கூடினாலும், இவர்களுக்குள் கூடினாலும் குழந்தை பெற்றுக் கொள்ளமுடியாது. தன்னைக் கவனித்துக் கொள்ள எதிர்காலத்தில் ஓர் துணை அல்லது வாரிசு தேவை என்பதற்காக திருநங்கையர்கள் தங்கள் கூட்டத்தில் ஒருவரை சில சடங்குகள் செய்துகொண்டு வாரிசாகக் கூறிக்கொள்கின்றனர். ஆனால், இவர்களுக்கென்று சொந்த வாரிசு என்பதாக எவரும் இல்லை. இதனை, வாடாமல்லி ஆசிரியர் சு.சமுத்திரம், திருநங்கையர் என்பவர் யார் என்று டேவிட் என்ற கதாபாத்திரம் வாயிலாக எடுத்துரைக்கும் போது,

“அலிகளுக்கு குழந்தை பெறுகிற தன்மையே கிடையாது, இது
முளைக்கும் போதே சாவியா போகிற விதை நெல்லு மாதிரி
குஞ்சு இல்லாத கூமுட்டை மாதிரி” (சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.236)

என்ற வரிகளின் வாயிலாக விளக்கியுள்ளார். இவர்களால் குழந்தை பெறவும் தரவும் முடியாது என்பதனை அறிவியல் ஆணித்தரமாகச் சொன்னாலும், அதே அறிவியல் அதற்கான மாற்று வழிகளுக்கும் இன்று வகைசெய்து வருகின்றன.

காவல்துறையினரின் அடக்குமுறை
திருநங்கையர்களை குடும்பமும் சமுதாயமும் புறக்கணிப்பதால் உடலை விற்றுப்பிழைக்கும் பாலியல்; தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இச்சூழலில் காவல் துறையினரால் அளவுக்கு அதிகமான துன்பத்தை அடைகின்றனர். மற்றவர்கள் செய்த தவறுக்கும் சேர்த்து இவர்களே தண்டிக்கப்படுகின்றனர் என்பதனை,

“நேர கோர்ட்டுக்கு வந்து செய்யாத குற்றத்தை செய்ததாயும்
சோல்றோம், கைக் காசுலேNயு அபராதமம் கட்டறோம்...”
(சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.238)

என்ற வரிகளில், காவல்துறையினரின் அடாவடித்தனத்திற்கு அஞ்சும் திருநங்கையரின் பரிதாப நிலையினை ஆசிரியர் நாவலுக்கே உரிய அழகியல் தன்மையுடன் விளக்கியுள்ளார்.

பொதுவெளியில் புறக்கணிப்பு
திருநங்கையர்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை எல்லாமே அவர்களுக்கு எதிராகவே செயல்படுகிறது. இவர்களும் இந்நாட்டின் ஒரு குடிமகன் என்று சொல்லிக் கொள்ளக்கூடிய சூழ்நிலை எதுவுமில்லை. தனித்து தொழில் செய்தால் இவர்களை ஆதரிப்பவர் எவரும் இல்லை. பேருந்துகளில் ஆணுக்கென்றும், பெண்ணுக்கென்றும் தனித்தனி இருக்கைகள் உள்ளன. ஊனமுற்றோருக்கும் இருக்கை உண்டு. ஆனால், திருநங்கையர்களுக்கு மட்டும் இன்றுவரை எந்த இருக்கையும் பேருந்துகளில் ஒதுக்கப்படவி;ல்லை. ஆணோடு சேர்ந்து அமரவும் முடியாது, பெண்ணோடு சேர்ந்து அமரவும் முடியாது. இப்படிப்பட்ட அவலநிலை இச்சமுதாயத்தில் நிலவுகிறது என்று சுயம்புவின் மூலம் எடுத்துக்காட்டுகிறார்.

“தடுமாற்றத்துடன் அந்த இருக்கையின் பிடியைப் பற்றிக் கொண்டே
அவள் பக்கத்தில் உட்கார்ந்தான்....” (சு.சமுத்திரம். வாடாமல்லி.ப.234)

என்ற வரிகளில், சுயம்புவின் தடுமாற்றத்தை உணர்த்தும் ஆசிரியர் அவன் பேருந்தில் அமர்ந்ததால் அடிபட்டு நிற்கிறான் என்பதாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் மாற்றுப்பாலினத்தவர்களை மனிதப்பிறவிகளாகக்கூட நினைப்பதில்லை. ஆனால், வடநாட்டில் இவர்களுக்கென்று தனிமதிப்புகள் கிடைக்கின்றன. இதனை வாடாமல்லியின் ஆசிரியர் சு.சமுத்திரம் அவர்கள் தன் படைப்பின் வாயிலாக நன்கு விளக்கியுள்ளார். சுயம்பு தமிழ்நாட்டில் பல துன்பங்களை அடைந்தாலும், பிறகு வெளிமாநிலம் சென்றபின் ஒரு திருநங்கையர் கூட்டத்தலைவி ‘கங்காதேவியால்’ மகளாக ஏற்கப்பட்டுப் பெயர் மாற்றம் செய்து ‘மேகலை’ என்ற புதுப்பிறவி எடுக்கிறாள். பிறகு கங்காதேவியின் வாரிசாகி திருநங்கையர் கூட்டத்திற்கு தன்னால் இயன்ற நன்மைகளைச் செய்கிறாள். கங்காதேவிக்குப் பிறகு தலைமைப் பதவியை ஏற்றுச் சிறப்பாக வாழ்ந்துவருகிறாள். இதைக் கூறுவதன் மூலம் ஆசிரியர் தமிழ்நாட்டிலும் இதுபோல திருநங்கையர்கள் நல்லமுறையில் நடத்தப்படவேண்டும் என்றும் அவர்களை இரக்கமில்லாமல் துன்புறுத்தக்கூடாது என்றும் ஒரு விழிப்புணர்வையும் திருநங்கையர் சந்திக்கும் சிக்கலுக்கான ஒரு தீர்வையும் முன்மொழிந்துள்ளார்.

மேலும், திருநங்கையர்களுக்கென்று சமூகத்தில் ஒரு தனிமரியாதை வழங்கப்படவேண்டும். அவர்களுக்கும் சகமனிதர்களைப் போன்ற உணர்வுகள் உண்டு. அதனை மதிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறார். இவர்கள் ஆண் போன்ற பலத்தையும், பெண் போன்ற குணத்தையும் பெற்றிருப்பதால் இவர்களுக்கு எல்லா வேலைகளையும் செய்யக்கூடிய ஆற்றல் இருக்கும் ஆகையால், சமூகம் இவர்களை அந்நியமாகக் கருதி ஒதுக்காமல் மதிப்புமிக்க வேலைகளைத் தந்து ஊக்குவிக்க வேண்டுமென்று ஆசிரியர் சு.சமுத்திரம் அவர்கள் விரும்பிக் கேட்டுக்கொள்கிறார். முதலில் குடும்பத்தில் உள்ளவர்கள் இவர்களை ஆதரித்தால் மறந்தும் தவறான பாதையில் இவர்கள் செல்லமாட்டார்கள் என்பதனையும் வலியுறுத்தியுள்ளார். காவல்துறை உங்களின் நண்பன் என்ற வாசகம் வெறும் வார்த்தையாக இல்லாமல் வாழ்க்கையாகவும் இருந்தால் சமுதாயத்தில் நல்ல சில சீர்திருத்தங்களுக்கு வழிவகுக்கும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மூன்றாம் பாலினர் எனப்படும் திருநங்கையர்கள் தங்குவதற்கென்று ஒரு இடம்கூட இல்லாமல் சேரிகளில் மிகவும் வசதியில்லாத பகுதிகளில் வாழ்ந்து வருகி;ன்றனர். அரசு இவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துதர முன்வரவேண்டும் எனவும் தன் மனயெண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார். அரசியலில் இவர்களை மனிதப்பிறவிகள் என்று முதன்முதலில் அங்கீகாரம் செய்த தலைவர் அன்னை இந்திராகாந்தி ஆவார். இதனைத் திருநங்கையர்கள் பலர் தன்னிடம் நேரிடையாகக் கூறியள்ளதாகவும் ஆசிரியர் சு.சமுத்திரம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அவர் திருநங்கையர்களுக்கென்று டெல்லியில் தனிக்குடியிருப்புகளையும் கட்டிக் கொடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். திருநங்கையர்களை மக்கள் வெறுத்து ஒதுக்கினாலும் அவர்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர் அன்னை இந்திராகாந்தி. அவர் கொலையுண்ட பின்பு, டெல்லியில் பல்வேறு கலவரங்கள் நிகழ்ந்ததாகவும், இம்மோதலில் பல்வேறு மனித உயிர்களை திருநங்கையர்கள் காப்பாற்றியதோடு, அன்னை இந்திராவின் மரணத்திற்கு ஒப்பாரி வைத்து கதறியழுது கூக்குரலிட்டு டெல்லி மாநகரையே ஒருநாள் கண்கலங்கச் செய்தனர் என்ற செய்தியை தன் நட்புவட்டத்தின் வாயிலாக அறிந்ததாகவும் ஆசிரியர் சு.சமுத்திரம் தன் படைப்பில் பதிவிட்டுள்ளார்.

முடிவுரை
குடும்பத்தோடு ஒன்றியிருக்கவேண்டிய இளம்பருவத்தில், ஒரு மனிதப்பிறவியை சூடு போட்டு பிறப்பிடத்தைவிட்டுத் துரத்தினால் அந்தப் பாலும் மனம் என்ன பாடுபடும் என்று திருநங்கையர்களின் நிலையைக் கண்டு வாடாமல்லி நாவல் ஆசிரியர் ஆதங்கம் கொள்கிறார். திருநங்கையர்கள் பற்றிய புரிதலுடனும், சமுதாயப் பொறுப்புணர்ச்சியுடனும், மனிதநேயத்துடனும் மிகுந்த அக்கறையுடனும் சு.சமுத்திரம் அவர்கள் ‘வாடாமல்லி’ என்ற படைப்பின்வழி அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். மேலும், வாசிப்புவெளியில் திருநங்கையர்கள் பற்றி அறிந்துகொண்டு அவர்களிடம் அன்பாகப் பழகினால் அதுவே தனக்கும் தன் படைப்பிற்குமான வெற்றி என்றும் கருதுகிறார். திருநங்கையர்கள் படும் பாடுகள் பற்றி தான் கூறுவதை மக்கள் அறிந்தால் அவர்களுக்கு ஒரு நல்வழி பிறக்குமென்றும், சில இடங்களில் திருநங்கையர்கள் ஆதரிக்கப்படுவதாக வருகின்ற செய்திகள், உலகின் எல்லா இடங்களிலும் நடக்க வேண்டுமென்கிற நம்பிக்கையுடனும், மாற்றங்களை எதிர்நோக்கிய ஆவலுடனும் சு.சமுத்திரம் அவர்கள் படைத்த ‘வாடாமல்லி’ என்னும் ஆகச்சிறந்த இந்நாவலை அவருக்கேயுரிய அற்புதமான மொழிநடையில் படைத்துள்ளார் என்பதனை தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் மறவாது.


பார்வை நூல்கள்
1. ‘சு.சமுத்திரம் - வாடாமல்லி’ வானதி பதிப்பகம், 13, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை – 17, முதற்பதிப்பு – ஜீலை 1994.

<இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.