இந்தியாவில் தோன்றியதும் இலங்கையிலும் சிறப்பான வளர்ச்சி அடைந்த சமயமாக இந்து சமயம் விளங்குகின்றது. இச் சமயமானது பல்வேறு நாடுகளில் பரவிச் சிறப்படைந்துள்ளதுடன் இந்துப் பண்பாடானது சிறந்த முறையில் பயில் நிலையில் இருந்து வருகிறது. ஆங்கிலேயரின் வருகை மற்றும் காலனித்துவத்தினால் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்து நாகரிக ஆய்வுச் செயற்பாடுகளில் மேலைநாட்டவர்கள் ஆர்வம் கொண்டவர்களாகக் காணப்பட்டனர்.

மேலைத்தேசத்தவர்களுக்கு இந்து பண்பாடு குறித்த கரிசனைகள் அரசியல், சமூக, பொருளாதார செயற்பாடுகளால் ஏற்பட்ட ஒன்றாகும். இவ்வாறான சூழலிலே தோற்றம் பெற்ற ஒருவராக சேர்.வில்லியம் ஜோன்ஸ் விளங்கினார். இவர் ஆங்கிலேய தந்தைக்கும் வேல்ஸ் நாட்டு தாய்க்கும் 28.09.1746 ஆம் ஆண்டு; லண்டன் மாநகரில் பிறந்தார்.

இவர் தனது இளமைப் பருவத்திலே மொழியியலில் மிகுந்த நாட்டம் கொண்டவராக காணப்பட்டார். அந்த வகையில் ஆங்கிலம், வேல்ஸ், கிரேக்கம், இலத்தீன், பாரசீகம், அரபு, சீனமொழிகளிலே பாண்டித்தியம் பெற்றவராகக் காணப்பட்டார். இவர் 13மொழிகளை நன்கு அறிந்திருந்தார். மேலும் 28 மொழிகள் நியாயமான முறையில் நன்கு அறிந்திருந்தார். இவர் தனது பாடசாலைக் கல்வியை ஹாரோ பாடசாலையில் கற்றார்.

இதன் பயனாக ஒக்ஸ்போட் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகி 1768 இல் பட்டம் பெற்றார். 1772 இல் றோயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் 1773 இல் டாக்டர் ஜான்சனின் புகழ்பெற்ற இலக்கியக் கழகத்தின் உறுப்பினராகவும் காணப்பட்டார். றோயல் சங்கத்தினால் நீதிச் சேவையாளராக இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தியாவிற்கு வந்த வில்லியம் ஜோன்ஸ்சை இந்தியப் பண்பாடானது பெரிதும் கவர்ந்திருந்தது. இந்தியப் பண்பாட்டினை அறிய வேண்டுமென்றால் சமஸ்கிருதத்தினை அறிய வேண்டியதன் அவசியத்தினை உணர்ந்த வில்லியம் ஜோன்ஸ் பல்வேறு முயற்சிகளின் பின் “பிராம்லோசின் கலாபூசன” என்ற வைத்திய குலத்தினை சேர்ந்தவரின் உதவியோடு சமஸ்கிருத மொழியினை கற்றுத்தேர்ந்தார். ஏற்கனவே அவர் அறிந்திருந்த பழம்பெரும் மொழிகளுடன் ஒப்பீட்டு ரீதியான ஆய்வினை மேற்கொள்வதற்கும் சமஸ்கிருதத்தில் அமைந்த பல நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்கும் சமஸ்கிருத மொழியின் அருஞ்சிறப்புக்களை மேலைத்தேச அறிஞர்களுக்கு அறிமுகஞ் செய்வதற்கும் இவருடைய பங்களிப்பு மிக அவசியமானதாகக் காணப்பட்டது. அவ் வகையில் 1789ஆம் ஆண்டு காளிதாசருடைய அவிக்ஞான சாகுந்தலம் என்ற நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இதனூடாக வெளிநாடுகளில் வாழ்ந்த ஆங்கில மற்றும் ஜேர்மன் மொழிகளைக் கற்றறிந்தவர் மத்தியில் வரவேற்பைப் பெற்றதோடு வேற்று மொழியைச் சேர்ந்தவர்களும் நன்மை அடைந்தனர்.

மேலும் 1789 ஆம் ஆண்டு ஜெயதேவரினால் எழுதப்பெற்ற கீதகோவிந்தம் எனும் நூல் மொழி பெயர்க்கப்பட்டதோடு அதனை பதிப்பித்தும் 1972ஆம் ஆண்டு ருதுசம்ஹாரத்தினை மொழிபெயர்த்து வெளியிட்டார். அத்துடன் மனுசம்ஹிதையினை கற்று அதனையும் மொழி பெயர்ப்பு செய்தார்.

“சமஸ்கிருதம் கிரேக்க மொழியைக் காட்டிலும் வளர்ச்சியடைந்தது, இலத்தீன் மொழியைக் காட்டிலும் மிகவும் பரந்தது” எனும் கருத்தினை முன்வைத்து சமஸ்கிருத மொழியினை வெளிக்கொணர்ந்து மொழிகள் தொடர்பான ஒப்பியல் ஆய்வில் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தார். மேலும் கவிதை இயற்றும் வல்லமை கொண்ட வில்லியம் ஜோன்ஸ் இந்து தெய்வங்களான துர்க்கை, இலக்குமி , மன்மதன், சூரியன், கங்கை, பவானி, நாராயணன் ஆகியோர் மீது நெடுங்கவிதைகளை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். இதற்கு எடுத்துக் காட்டாக, “நாராயணனுக்கு ஒரு தோத்திரம்” என்ற கவிதையில் உலகம் பற்றிய வேதாந்த மரபின் நிலைப்பாட்டினை எடுத்துக் கூறியுள்ளமை சிறப்பிற்குரியதாகும்.

மேலும் 1784 இல் ஆசியக்கழகத்தை நிறுவினார். அத்துடன் ஆசியவியல் ஆய்வுகள் எனும் சஞ்சிகையையும் வெளியிட்டார். இவரால் உருவாக்கப்பட்ட ஆசியக்கழகத்தை நோக்கும் போது இந்துப் பண்பாட்டியல் சார்ந்த விடயங்களுக்கு அவற்றிலே முன்னுரிமை வழங்கப்பட்டது. அந்த வகையில் புராதன இந்துக்களின் மருத்துவவியல், கணிதம், இசை, பொருளாதாரம், அரசியல் என்பவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. இக் கழகத்தின் அங்குரார்ப்பண நிகழ்விற்கு கல்கத்தாவில் உள்ள முப்பது உயர் பதவிகளை வகித்த ஐரோப்பியர்கள் வந்திருந்தனர். இக் கழகத்தின் முதலாவது தலைவராக சேர் வில்லியம் ஜோன்ஸ் தெரிவு செய்யப்பட்டார். இவரால் உருவாக்கப்பட்ட ஆசியக்கழகம் இந்தியவியல் மற்றும் இந்து கற்கைகளுக்கு பங்களிப்பு செய்தது. அவ் வகையில்

  • அரிய கையெழுத்து பிரதி, சுவடிகளைச் சேகரித்தல்
  • நூல் நிலையத்தை ஸ்தாபித்தல்
  • பொருட்காட்சி நிலையங்களை நிறுவுதல்
  • ஆய்வரங்கத் தொடர்களை ஏற்பாடு செய்தல்
  • அவற்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுகட்டுரைகளைத் தொகுத்து வெளியிடல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மேலும் இவரது பணிகளாக, இந்தியா எங்கும் அங்கங்கே இருந்த வெள்ளையர்கள் தாங்கள் கண்டதை ஆசியக் கழகத்திற்கு கட்டுரைகளாக அனுப்பினர். ஜோன்ஸ் இதை எல்லாம் தொகுத்து முதல் தொகுப்பை 1789இல் வெளியிட்டார். இவரின் ஆர்வம் சமஸ்கிருத மொழியில் இருந்தது. இலத்தீன் கிரேக்க மொழிகளோடு ஒப்பிட்டு சமஸ்கிருத கடவுளர்களையும் அவர் கிரேக்க கடவுளர்களுக்கு ஒப்பிட்டார். சமஸ்கிருத காப்பியங்களை ஆங்கிலத்துக்கு மொழி மாற்றம் செய்தார்.

இந்திய கிளாசிக்கல் படித்த முதல் மேற்கத்தியராகவும் இசை மற்றும் இந்திய தாவரங்கள் மற்றும் விலங்குகளை வகைப்படுத்த முயற்சித்த பெருமை இவரையே சாரும.; இவர் தனது கல்கத்தா சொற்பொழிவுகளில் இந்துப்பண்பாட்டு விழுமியங்கள், இந்து மெய்யியற்கோட்பாடுகள் பற்றி வியந்து கூறிய இவர் 27.04.1794 இல் இறந்தார். இவ் வகையில் சேர் வில்லியம் ஜோன்ஸின் பங்களிப்பு மிகவும் சிறப்பானதாகவும் இன்று வரை அவருடைய பணிகள் பேசப்படும் ஒன்றாகவும் காணப்படுகின்றது.

உசாத்துணைப்பட்டியல்

1. கலாநிதி முகுந்தன்.ச, “இந்துக்கற்கைகளை வளமூட்டிய மேலைத்தேசத்து ஆளுமைகளும் ஆய்வுகளும்”, (2021), குமரன் புத்தக இல்லம் கொழும்பு- சென்னை.
2. https://www.persee.fr/doc/hel_0750-8069_1984_num_6_2_11903
3. https://www.notablebiographies.com/supp/Supplement-Fl-Ka/Jones-William.html

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.