- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


11

“இன்னவைதாம் கவியெழுத” ஏற்ற பொருள் என்று எண்ணாமல் இன்னல், ஏழ்மை, உயர்வு, என்பவற்றை பாடுங்கள் என்று மஹாகவி ஆரம்ப காலத்திலேயே விடுத்த அறிவிப்பு, கூடவே, இதற்கு முன்னதாக, “கேடுற்றவரிடையே கெட்டழியாது என்னிடமே எஞ்சி கிடக்கின்ற இன்தமிழ், இவ் என்பாக்கள், என்றைக்கொரு நாளோ எத்திசையும் வெல்லும்” என்று அறிவித்துள்ளது, எல்லாமே, கூறுமாப்போல், இவரது வாழ்க்கை தரிசனம் என்பது பாரதியை விஞ்சிய ஆழத்தைக் கொண்டது தானோ என்ற கேள்வியை எழுப்புவதாய் உள்ளது.

மஹாகவியின் வாழ்க்கை தரிசனம் பொறுத்த பேராசிரியர் நுஃமான் அவர்களின் கூற்றினைமீள ஒருமுறை நினைவு கூறலாம்:

“மஹாகவியின் படைப்பகளினூடு பிரதியாக்கப்படும் உள்ளடக்கத்தை மூன்று நிலைப்படுத்தி நோக்கலாம்,

1. ஆழமான மனிதாபிமானம்.
2. வாழ்வின் மீதான நம்பிக்கையும் வாழ வேண்டும் என்ற முனைப்பும்.
3. ஏற்றத்தாழ்வின் மீதும், போலி ஆசாரங்களின் மீதுமான அவரது எதிர்ப்பு. (ப-20)

மேலும் கூறுவார்:

“இருந்தும் இயக்க பூர்வமான நடவடிக்கைகளில் இருந்து அவர் தனித்தே நின்றார்…” ப - 202

இதே போன்று நா.சுப்ரமணியன் அவர்களும் பின்வருமாறு கூறுவார்:

“…மஹாகவி கோட்பாடு ரீதியான பொதுவுடைமை சிந்தனைக்குள் நிற்காமல் தனக்கென தனித்த சமூகப் பார்வையை வளர்த்து கொண்டார்” ப-85

எழுத்துக்களில், சமத்துவத்தையும், மானுடத்தையும் உள்ளடக்கல் என்பது, ஜெயமோகன் முதல் நூறு, ஆயிரக்கணக்கான எழுத்துக்களில், பொதுவில் இலகுவாயும் சகஜமாயும் காணக்கூடிய ஒன்றுதான் என்றாகி விட்டது.

மறுபுறமாய் பார்த்தால் ‘மானுடம் பாடுவது’ என்பதும் ‘சமத்துவத்தைப் போதிப்பது’ என்பதும் மனுக்குலத்தில் தொன்று தொட்டு வரும் ஒரு சங்கதியாகவே இருக்கின்றது.

இதனை ஓர் கலைஞன் பேச்சுக்காக, மேம்போக்காய் ஆற்றுவதும், குறித்த இலக்கை நோக்கி நடைமுறையில் போராடும் சமூகத்தின் போர்பரணியாக, தன் படைப்பை ஆழ்ந்த வாழ்க்கை தரிசனம் கொண்டு முன்னகர்த்தும் செய்கையும் வௌ;வேறாகின்றது.
உதாரணமாக, அரசியலில், சமபந்தி போஜனம் எவ்வளவு சகஜமானதோ அந்தளவில் எழுத்துக்களில் சமத்துவம் பாடுவதும் சகஜமானதுதான்.
வரலாற்று ரீதியில் சமத்துவ கோரிக்கையின் வகைபாடுகளை ஆராயும் கார்ல்மார்க்ஸ், தனது கம்ய10னிஸ்ட் கட்சி அறிக்கையில் கிறிஸ்தவம் கூட சமத்துவத்தைக் கோரியும், தனியுடைமைக்கு எதிராகவும் பிரகடனங்களை முன்வைக்க தவறுவதில்லை என்பதனைச் சுட்டிக்காட்டுகின்றார்.

அதாவது குறித்த பண்ணையார் தனது வயல்வெளியில் காயும் விவசாயிகள் நோயுறுவது குறித்து எப்படி கவலைப்படுவாரோ அல்லது பிரிட்டி~hர் தமது தோட்டங்கள் தோறும் தோட்டத்து வைத்தியசாலைகளை நிர்மாணிக்க எப்படி திண்ணம் கொண்டாரோ அப்படியே சம்பந்தப்பட்ட வேர்கள் இங்கே அடையாளப்படுத்த படுகின்றன. (இனி, இதனை வைத்து, பண்ணையாரும், பிரிட்டி~hரும் மானுட நேயம் கொண்டவர்கள் தான் என முடிவு செய்து கொள்வது அவரவர் விருப்பம் என்றாகின்றது.)

எனவே, மேற்கண்ட சூழல்களில், குறிப்பிட்ட படைப்பில், கூறவரும் மானுட தர்மம் எந்தளவில் அழுத்தம் பெறுகின்றது–முழு படைப்புடன் ஒப்பிடும் போது, அவற்றின் உண்மை வேர் எங்குள்ளன என்பதையெல்லாம் ஓர் விமர்சகன் கணித்து கொள்வது தவிர்க்க முடியாததாகின்றது.
மஹாகவி பொறுத்து, முருகையன், பொன்னம்பலம் போன்றவர்களால் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் அவரை ‘கட்டற்ற தேடல்’ கொண்டவராகவும், (சண்முகம் சிவலிங்கம்) உள்ளடக்கத்திலும் உருவத்திலும் முன்னுதாரணமற்ற வகையில் கவிதை படைப்புகளை தந்தவர் (பேராசிரியர் நுஃமான்) என்றும் அவர் அடையாளம் காட்டப்பட்டுள்ளதை மீள ஒருமுறை நினைவ10ட்டிக்கொள்வது விரும்பத்தக்கது.

இதனுடன் சேர்த்து, அவரது கவிதையில் காணக்கிட்டும் ‘அமைதியும் சாந்தமும்’ கவிஞனது ‘வாழ்க்கை நோக்கிலிருந்து’ பிறப்பெடுக்கின்றது என்றும் கூறி வைக்கப்படுகின்றது. (ப-202, 85)

சமூகத்தின் முரண்கள் முனைப்படைந்த ஒரு கட்டத்தில், அவை உக்கிரமாக தம்மை வெளிப்படுத்திக் கொண்ட ஓர் ‘சூழலில்’, மஹாகவி வாழ்ந்திருந்தார் என்றாலும் இறுதிவரை அவர் எந்தவொரு கோட்பாட்டுக்குள்ளும் சிக்காமலும் எந்தவொரு அணியை சாராமலும் “கேடு கெட்டவரிடையே இருந்து”தன் இன்தமிழை காப்பாற்றி தம் வாழ்வின் பண்பும் பயனும் இதுவாய் இருத்திக்கொள்ள முடிவு செய்தது இலங்கையின் நிர்வாக சேவைக்கும் தோதாக அமைந்து போவது இயற்கையே, என்பதனை தனிப்பட விரிவாக எடுத்துரைக்க தேவையில்லை.
இதன் காரணமாகவா, அதாவது, சமூகத்தின் முனைப்படைந்த முரண்களில், பங்கேற்காமல், ஒதுங்கி, நிர்வாக சேவையுடனும், தனக்கே உரிய, தன் இன்தமிழ் இலக்கியத்துடன் மாத்திரம் தன் வாழ்வினை முன்னெடுத்ததின் பெறுபேறாகவா இப்படியான, ‘அமைதியும் சாந்தமுமான’ கவிதை வரிகள், அமைதியும் சாந்தமும் கொண்ட அவரது மேற்படி வாழ்விலிருந்து பிறப்பெடுக்க கூடியதாக அமைந்துவிட்டன என்ற கேள்வி இங்கே பிறப்பெடுப்பதும் தர்க்கரீதியானதே.

அதாவது, பாரதியின் வரிகளில் கொப்பளித்த உக்கிரமும் கோபமும் இங்கு தேவையற்ற விடயமாகின்றன.

மேலும், இவை மேற்படி வாழ்வுக்கு சமயங்களில், அந்நியமானவையாகவும் அமைந்து போக கூடியவை எனபதிலும் சந்தேகம் இல்லை.
ஆனால், இலங்கையின் வடகிழக்கு போராட்டம் உக்கிரம் பெற்றிருந்த காலநிலையில் வாழ்ந்திருந்த கவிஞர்களான ஜெயபாலன், ஆதவன், சாருமதி போன்றோர் அமைதியையும் சாந்தத்தையும் தத்தம் வாழ்வில் நிலைநிறுத்திக் கொண்டதாக தெரியவில்லை. அவர்களது வரிகளில் ஒரு சமூகத்தின் உக்கிரமும், வேதனையும், போராட்டமும் கொப்புளிக்க தவறவும் இல்லை.

மேற்படி கவிஞர்களின் நேரடியான பங்கேற்பு (அவை அவ்வவ் இயக்கங்களின் விளிம்போரங்களில் அல்லது மையத்தில் நடந்திருந்தாலும்)–அப்பங்கேற்பானது அவரவரின் கவிதை வரிகளில் எதிரொலிக்கவே செய்தது. போதாதற்கு, பாரதியின் காலக்கட்டத்தை எடுத்துக்கொண்டாலும் கூட, பாரதியில் காணக்கிட்டிய “ஆன்ம பக்குவ நிலையும்” கூட மஹாகவியில் காணக்கிட்டுவது அருமையாகவே இருக்கின்றது.
இது பொறுத்து மு. பொன்னம்பலம் அவர்கள் தனது ‘மெய்ஞான கருத்து நிலையில்’ நின்று பிரச்சினைகளை அணுகுவதாக இருந்தாலும் கூட அவையும் ஒருவகையில் தொட்டுப்பார்க்கப்பட வேண்டிய ஒன்றே.

‘சமூக முக்தியினை’ நாடக்கூடிய மு. பொன்னம்பலம்,“தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா – உன்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா” என்ற பாரதியின் வரிகளைக் கோடிட்டுக் காட்டி, இந்தத் “தீக்குள் விரலை வைக்கும்” போக்குத்தான் மஹாகவியால் புரிந்து கொள்ளவோ உணர்ந்து கொள்ளவோ முடியாமல் போயுள்ளது” எனக் கூறுவார். (ப-251)

ஒருபுறம், நிச்சாமம் கிராமமும் (ஒரு குறியீடாக அமையும் அளவிற்கு, சாதீய போராட்டத்தால், உக்கிரமடைந்திருந்த கிராமம்) மறுபுறம் பொன்னம்பலம் போன்றவர்கள் குறிக்கக்கூடிய ஆன்மீக தளம் - இரண்டுமே - அந்நியப்பட்டு போன நிலையில், ‘மூன்றாவது தளமான’, “அமைதியும் சாந்தமும்” கொண்ட தளத்தில் அவரது பாடல்கள் உருவெடுக்க தொடங்குகின்றன.

இதற்கான காரணத்தை ஓர் விவசாய பின்புலத்தில் இருந்து இலகுவாய் கண்டறியலாம் என்றாலும், அவரே கூறுமாப்போல, தன் குரலையே ‘பேரொலியாக’ கேட்டு மகிழ விருப்பம் கொண்டுள்ள கவிஞரது அவாவில் இருந்து இவை பிறந்திருக்ககூடிய சந்தர்ப்பமும் உண்டென்றாகிறது. (பேரொலியை கேட்டு மகிழ்வது கூட ஒரு விவசாய வேரின் அடிப்படையில் இருந்து தோன்றுதற்கான நிகழ்தகவு அதிகமானதே).
இதே போன்று, இப்பேரொலியானது, நடைமுறையில் எவ்வாறு தன்னைத்தான் இயக்குவித்து கொள்கின்றது என்பதனை காண்பதும் சுவாரஸ்யமானதே.

உதாரணமாக ‘கோடை’ நாடகமானது நாவலர் விழாவில், கொழும்பில் மேடையேற்றப்பட்ட போது கடைசி நிமிடங்களில் நாடகம் அரங்கேறுவது தடுக்கப்பட்டதும், நாடகத்தில் வரும் காட்சியான நாயணக்காரர் வீட்டில் ஐயர் இட்லி சாப்பிடும் காட்சியானது நீக்கப்பட்டு, அரங்கேற்றப்படுமேயானால், இந்நாடகத்தின் அரங்கேற்றத்திற்கு முழுசம்மதம் என பிரமுகர் கூட்டம் தெரிவித்தது தொடர்பிலும் மேற்படி சம்பவம், அழுத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து எழுதும் பேராசிரியர் நுஃமான் அவர்கள் பின்வருமாறு எழுதுவார்:

“நெறியாளர்களும் நடிகர்களும் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் திரும்பி சென்றார்கள்” (கோடை முதற்பதிப்பின் பின்னுரை.)
மேற்படி சம்பவம் ‘கோடை’ நாடகத்தின் புரட்சிகர உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை காட்ட அவ்வப்போது அடிக்கடி உதாரணமாக காட்டப்பட்டு வந்துள்ளது.

ஆனால், நெறியாளர்-நடிகர்களின் நிராகரிப்பினை அல்லது ஆட்சேபனையைக் கூறும் மேற்படி பதிவு, அங்கே பிரசன்னமாயிருந்த நாடகப் பிரதியாளர் மஹாகவி அவர்களின் நிலைப்பாடு குறித்து அல்லது அவரது பிரதிபலிப்பு குறித்து எந்தவொரு கூற்றையும் தெரிவிக்காமல் ப10ரண மௌனம் சாதிப்பது எமது அவதானத்துக்குரிய ஒன்றே.

நாடகத்தில் பிரதான பாத்திரத்தை ஏற்றிருந்த திரு. சச்சிதானந்தம் (மாணிக்கம் - நாயணக்காரர்) மேற்படி சம்பவம் குறித்து கூறுகையில் பின்வருமாறு கூறுவது அவதானிக்கத்தக்கது:

“குறித்த காட்சியை நீக்குதல் பொருட்டு (நாயணக்காரர் வீட்டில் ஐயர் இட்லி உண்பது) நெறியாளரான தாஸிஸியசும் நாமும் எமது கருத்துக்களை வெளிப்படுத்தும் முன்பதாகவே, பிரமுகர்கள் நாடக பிரதியாளரை அணுகிய பொழுது அவர் எங்களை கேளாமலேயே நீக்குவதற்கு உடனடியாகவே உடன்பட்டு விட்டார். ஆனால் நானும் திரு முத்துலிங்கம் அவர்களும் கேள்வியுற்ற கணத்திலேயே எமது ஒப்பனைகளை கலைத்து விட்டதால் மேலும் வாக்குவாதங்களுக்கான தேவைப்பாடுகள் இல்லாமலாகி நாடகம் அத்துடன் ரத்து செய்யப்பட்டது” (இப்பதிவு, 22.06.2021, உரையாடலின் போது மீள நிச்சயித்துக் கொள்ளப்பட்டது. திரு.சச்சிதானந்தம் அவர்கள் ‘புதியதொருவீடு’ நாடகத்திலும் தலையாய பாத்திரமான மாயனின் பாத்திரத்தை ஏற்று நடித்தவர் ஆவார் - தாஸிஸியஸின் நெறியாள்கையில்).
பேராசிரியர் நுஃமான் அவர்கள் நாடகப் பிரதியாளரின் மேற்படி உடன்பாடு தொடர்பில் அறிந்தில்லா விட்டாலும் அவரது பதிவு மேற்படி விடயம் தொடர்பில் ப10ரண மௌனத்தை அனுஸ்டிக்கின்றது.

திரு. சச்சிதானந்தம் அவர்களும், திரு. முத்துலிங்கம் அவர்களும் வடக்கின் பல்வேறு சாதீய போராட்டங்களில் நேரடியாகவே பங்கேற்றவர்கள் என்பதும் இருவரும் அக்காலகட்டத்தில் இடதுசாரி இயக்கங்களில் முக்கிய பங்காற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதாவது அவரவர் பெற்றிருக்;ககூடிய வாழ்க்கை தரிசனங்கள் தருணங்களில் எப்படி முகம் காட்டுகின்றன என்பதற்கான உதாரணங்களில் ஒன்றாக இவை திகழக்கூடும். (இவை பிற்பட்ட காலங்களில் மாறலாம் என்பது வேறு விடயம்).

12

“அசோக மித்திரனின் … எல்லா கருக்களிலும் அவர் பொதுவாக பேசுவது நடுத்தர வர்க்க மனிதர்களை முன்வைத்து வாழ்வில் இன்றியமையாத இரும்பு விதிகளை பற்றித்தான்…” (ஜெயமோகன்)

அதாவது இந்த நடுத்தர வர்க்கத்து மனிதர்கள் குறித்து அல்லது சராசரி மனித வாழ்வின் சரிதம் குறித்து, பொதுவில், இலக்கியமானது, பெருமளவில் பேசியே வந்துள்ளது.

‘கட்டற்ற தேடலை’ மஹாகவி நடத்தினார் என கூற முற்படும் சண்முகம் சிவலிங்கம் கூட முத்தையனை பற்றிப் பின்வருமாறு குறிப்பிடுவது நிதானிக்கத்தக்கது:

“அவனுடைய வாழ்க்கையிலே ஓர் அர்த்தமற்ற தன்மையும் தனிமையும் ஒதுங்கியலும் நிச்சயமின்மையும் விரவி கிடக்க காண்கின்றோம்” ப-141
“மஹாகவியின்,‘ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம்’பழைய காவியங்களின் மூல உயிரையும்…சமகாலத்தில் காணப்படும் பாத்திரங்களை யதார்த்த நெறியுடன் கையாள்வதால் அது தற்கால நாவலின் தன்மையையும் உட்கொண்டுள்ளதை அறியலாம்… முருகையனின் நெடும்பகல் எனும் நெடும்பாடலை ஒரு பக்கத்திலும் அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள் எனும் நாவலை மறுபக்கத்திலும் மஹாகவியின் ஒரு சாதாரண மனிதனின் சரித்திரத்தை நடுவிலும் வைத்து ஒப்பிடுவதானால் இந்த உண்மை விளங்கும்…’

சுருங்கக் கூறினால் அது அசோகமித்திரனாகட்டும் அல்லது எமது மஹாகவியாகட்டும் அல்லது அசோகமித்திரனே இலக்கியத்தின் உச்சம் என்று கொண்டாடும் ஜெயமோகனாகட்டும் - இவர்களுக்கெல்லாம் இந்த சராசரி மனிதர் மேல் அல்லது இந்த நடுத்தர வர்க்கத்து மயிலுமில்லை குயிலுமில்லை என்ற வகைப்பட்ட கூட்டத்தாரின் மேல் ஒரு அலாதியான பரிவும் பாசமும் பொங்கி வழிவது அவதானத்துக்குரிய ஒன்றுதான்.
அசோகமித்திரனே கூறுவார்:

“ஆன்மிகம், தியாகம், துறவு என்றெல்லாம் சொல்கின்றோம்… எனக்கு தெரிந்த எத்தனையோ எளிய விதவைகள் தங்கள் முழு வாழ்க்கையும் யாருக்காகவோ செலவிட்டு அதில் நிறைவை கண்டிருக்கின்றார்கள்…எனக்கென்னவோ அதில்தான் ஆன்மீகமான அம்சம் இருப்பதாகத் தோன்றுகின்றது” (மேற்கோள் ஜெயமோகன்:ப-25)

இனி இந்த எளிய விதவைகள் இட்லியும் அவித்து, தொட்டுக்கொள்ள சட்னியும் பக்கத்தில் வைத்து விட்டால் இவர்களின் ஆன்மீக விடயம் சம்ப10ர்ணமாகிவிடும் என்பது தெளிவு. ஆனால் கேள்வி என்னவோ, இந்த முடிவு அல்லது இந்தப் பார்வை எப்படி சாத்தியமாகின்றது என்பதே.
‘கட்டற்ற தேடலா’ அல்லது அசோகமித்திரன் கொண்டுள்ளதாய் கூறப்படும் வாழ்க்கை தரிசனமா மேற்படி கூற்றை உதிர்க்க வைக்கின்றது, என்பதே கேள்வியாகின்றது.

இந்தச் சிந்தனை வேர்களின் பின்னாலேயே, அதாவது மேற்படி ‘சுவைஞர்களின்’ வேர்களில் இருந்தே, மாற்றங்களுக்கு எதிரான அரசியலும், இருக்கும் கட்டுமானங்களை அப்படி அப்படியே தக்கவைத்து கொள்ளும் அவாவின் நகர்வுகளும் ஆழ இறங்கி வேர் கொள்வதாய் இருக்கின்றது.
அனேக சந்தர்ப்பங்களில் இவை திட்டமிட்டு நடந்தேறும் சங்கதிதான் எனக் கூற முடியாது போனாலும் இவை, இச்சையின்றி நடந்தேறும் சாகசங்கள்தான், என்று கூறிக் கொண்ட போதிலும், இவை மேற்படி வேர்களில் இருந்தே உருக்கொள்கின்றன என்பதில் ஐயமில்லை.
அதாவது, ஒரு குறித்த புத்திஜீவியோ அல்லது விமர்சகனோ அல்லது கலைஞனோ தனக்குரிய பாடலை தானே தேர்ந்து,பாடவிருப்பம் கொள்கின்றான் என்பதாகின்றது.

இவ்வகையிலேயே மஹாகவியையும் ஜெயபாலனையும் சாருமதியையும் ஆதவனையும் நாம் வேறு பிரிக்கலாம். கூடவே ஜெயமோகனையும் அசோகமித்திரனையும் கூட இனங்கண்டு கொள்ளலாம். இதன் வெளிப்பாடகவோ என்னவோ, ஓர் இளம் கார்க்கி, தன் எதிர்பார்ப்பை (சரியாக சொல்வதானால், தன் எதிர்ப்பை) பின்வருமாறு வெளிப்படுத்திக் கொண்டான்:

“நான் இலக்கியத்தில் முக்கியமாக தேடித் திரிந்தது ஒரு கதாநாயகனைத்தான். ஓர் வலுவுள்ள விமர்சன மனப்பாங்குள்ள மனிதனைத்தான்… இத்தனைக்கும் நூற்றுக்கணக்கில் புத்திஜீவிகள் மக்களிடம் போனார்கள்… இலக்கியம் இவர்களை பிரதிபலிக்கவே இல்லை…”
இலங்கையின் சூழலும் இதற்கொன்றும் புறம்பானது எனக் கூறுதற்கில்லை. நூற்றுக்கணக்கில் இளைஞர்களும் புத்திஜீவிகளும் கடந்த காலங்களில், மக்களிடம் போகவே செய்தார்கள்.

மஹாகவியின் காலக்கட்டத்தில்தான், வட இலங்கையில், சாதீய போராட்டம் தன் உச்சநிலையை தொட்டிருந்தது. கொல்லப்பட்டும், சிறை செய்யப்பட்டும்,வெட்டப்பட்டும் போராட்டங்களில் பங்கேற்ற பலரை, வாழ்க்கையானது, அக்காலகட்டத்தில் முன்னகர்த்தி, முன்னிறுத்தவே செய்தது. இவர்கள் அனைவரும் மஹாகவி வர்ணிக்க முன்வரும் சராசரி மனிதர்களுக்குள் அடங்கமாட்டாதவர்களாய் போனார்கள் என்பது தெளிவு. புத்திஜீவிகள், மாணவர்கள், உயர்-அடிமட்ட விவசாயிகள், தொழிலாளர்கள் என வகைப்படுத்தக்கூடிய இம்மாந்தர்கள், குறிக்கத்தக்க ஆன்ம பலம் கொண்டு சமூகத்தின் பகைமை சக்திகளை பகைகொண்டு எதிர்க்க துணிந்தவர் தாம். இது புதுமையானதல்ல. வரலாறு முழுவதும் இப்படியாய்தான் இருக்கின்றது-முட்டுவதும்-மோதுவதுமாய்.

முழு இலங்கையையும் எடுத்துக் கொண்டாலுமே, 1960களில்,மோதல்களின் தொடர்ச்சி சாதீய போராட்டங்களாய்,மலையக தொழிற்சங்க போராட்டங்களாய், பின், 70களின் பின்னர்,வடகிழக்கு தேசிய போராட்டங்களாய்,தென்னிலங்கையின் 1971-1989 போராட்டங்களாய், அதன் பின் தேசிய போராட்டங்களாய் - ஓர் தொடர்ச்சியாக வெடித்தெழத் தவறவில்லை. இவற்றில் ஆன்ம பலம் கொண்டு பங்கேற்க முன்வந்த எத்தனை இளைஞர்களை, புத்திஜீவிகளை, கற்றோரை, விவசாயிகளை, தொழிலாளிகளை எம் இலக்கியங்கள், ஆரோக்கியமாகப் படம்பிடித்ததில் வெற்றி கண்டுள்ளன என்பதே கேள்வி. இருந்தும், இவற்றிலிருந்து அந்நியம் கொண்டு ஓர் ‘சராசரி’ வாழ்வை ஒரு எழுத்தாளன் தன் எழுத்தில் முன்னகர்த்த தேர்வு செய்து கொள்கின்றான் என்றால் அது அவனது தனிப்பட்ட விருப்பமாய் இருந்த போதிலும் - அத்தகைய அவனது விருப்பமானது ஒரு குறித்த காலக்கட்டத்தின், ஓர் வரையறுக்ககூடிய குறித்த மக்கள் கூட்டத்தினரின் அல்லது வகுப்பினரின் நலனை–பிரதிநிதித்துவப்படுத்துவதாகவே அமைந்து போகின்றது. மேலும் அக்கூட்டத்தாரின் நலன் சார்ந்த வேர்கள் எப்படியாய் கிளைத்து மேற்படி தெரிவில் உள்ளடங்குகின்றன என்பதும் இங்கே தொடர்புபடும் வினாக்களே.

இருந்தபோதிலும், மறுபுறமாய் பார்க்குமிடத்து, இம்மோதுகைகளில் பங்கேற்கும், அதிருப்தியான, தம்மளவில் விமர்சனங்களை கொண்டுள்ள அதேசமயம் போராடும் ஆன்ம பலத்தையும் சித்தத்தையும் கொண்டுள்ள மனிதர்களை – தமது எழுத்துக்களில் ஏந்திப்பிடிக்க அப்படியே சம்பந்தப்பட்ட எழுத்தாளன் விருப்பம் ப10ண்டாலும் கூட, அவற்றை அவற்றின் நலன் கெடாமல் ஏந்திபிடிக்க, சம்பந்தப்பட்ட எழுத்தாளனின் எழுத்துக்கள் வலிமையும் வன்மையும் பொருந்தியனவாக இருந்தனவா என்பதுவும் மறுபக்கத்து கேள்வியாகின்றது. அதாவது சம்பந்தப்பட்ட இவ்வெழுத்தாளர்களின் ஆன்ம பலமானது எந்தளவில் சோபித்திருந்தது – மேற்படி மனிதர்களை, தம் எழுத்துக்களில் வலிமையுற படைத்தளிக்கும் வண்ணம் என்பதே கேள்வி. வேறுவார்த்தையில் கூறுவதானால் இவ்வெழுத்தாளர்களின் வீணை தந்திகள் எவ்வளவு தூரம் முறுக்கேற்றப்பட்டிருந்தன, அவ்வவ் காலக்கட்டத்தின் அதிர்வுகளைத் தவறாது தத்தம் வீணைகளில் எதிரொலிக்கச் செய்ய என்பதுவே வினாவாகின்றது. இதற்கு மாறாக, வாழ்வை ஒரு குறுகிய வட்டத்துள் வாழ்ந்து முடிக்க முடிவுசெய்து வைத்துக் கொள்ளும் கலைஞனொருவன் தவிர்க்கமுடியாதபடி மேற்படி காலத்தின் கோரிக்கைகளில் இருந்து அந்னியம் பெற்று, தனக்கு தோதான வாழ்வியல் பகுதிகளைத் தேர்ந்துக் கொண்டு, அல்லது தனது தனிப்பட்ட அனுபவங்களை அல்லது விருப்பு வெறுப்புகளை அல்லது மனிதர்களை தன் படைப்புகளில் முன்னகர்த்த முனைவது இயல்பானதாகின்றது. இது தர்க்க ரீதியானதே. இதனையே இளம் கார்க்கி, ‘ஏமாற்றமடைவதாய்’ கூறத் துணிகின்றார்.

தன் வாழ்வின் குறுகல் காரணமாக, வெளிறிய ப10ஞ்சன நிலையை அடைந்துவிடும் எழுத்தாளனும், கூடவே, அவனை ஒத்த ரசிகக்கூட்டமும் கூட, தம் இறுதி போக்கிடமான மலினமான அல்லது வாய்வீச்சு நிறைந்த மானுட நேயத்தை அல்லது அதே போன்று வாய்வீச்சு நிறைந்த தேசியத்தை அல்லது அதே போன்று வாய்வீச்சு நிறைந்த சமத்துவத்தை – ஏந்தவும் சமயங்களில் முனைவர் என்பது வெளிப்படை.
வசதிக்கும் வாய்ப்புகளுக்கும் ஏற்ப, புண்ணியம் கருதி சில சில்லறைகளைப் பவ்வியமாகப் போட்டுவிட்டு ஒதுங்கிக் கொள்ளும், மனநிலையைத் தாண்டிய ஒரு மனநிலையைத் தேடினாலும் இங்கே காணக்கிட்டுவது அரிது.

மொத்தத்தில், குறித்த சமூக நலன், தனக்கான ப10ஜை நடாத்துவதற்கான ஐயரையும் கூடவே பக்த கோடிகளையும், கோயிலையும் குரவர்களையும் எப்படி எப்படி உருவாக்கி வைத்துக் கொள்கின்றதோ, அப்படியே எழுத்தும், எழுத்தாளனும், விமர்சகனும், ரசிகனும் பரஸ்பரம் தேடிக் கொள்ளப்படுகின்றார்கள்.

இக் கொடுமையான நிலைமையினை வாழ்வியல் தரிசனம் என்ற அடிப்படையிலும் வாதிக்கலாம். அல்லது அரசியல் விஞ்ஞானம் என்ற மொழியிலும் வாதிக்கலாம். இருந்தும் சாரம் ஒன்றேயாகும். இருக்ககூடிய சமூகக் கட்டுமானங்களை ஏந்திப் பிடிக்கும் ஒரு அக விருப்பத்தை, மொத்தத்தில், உள்ளடக்குவதே மேற்படி சாரமுமாகலாம். இவ்அரசியலை கொண்டே, சமூகம் தத்தம் எழுத்தாளர்களைக் கரம் பிடித்துப் பார்த்துத் தெரிவுசெய்து கொள்கின்றது. இதனாலேயே கார்க்கி கூறுகிறார்:

“வலிமையான மனநிலை அல்லது ஆன்மாவை கொண்ட ஒரு கதாநாயகனை இலக்கியத்தில் நான் தேடித் திரிந்தேன் என்று.”


13
மஹாகவியின் குறும்பாக்கள்:

எஸ். பொன்னுத்துரை அவர்கள், மஹாகவியின் குறும்பாக்களில் (1966) ஒன்றைத் தனது கட்டுரை ஒன்றில் பின்வருமாறு மேற்கோள் காட்டுவார்:

“முத்தெடுக்க மூழ்குகிறான் சீலன்
முன்னாலேயே வந்து நின்றான் காலன்
சத்தமின்றி வந்தவனின்
கைத்தளத்திற் பத்து முத்தை
பொத்தி வைத்தான். போனான் முச்சூலன்..”

கூறுவார்:

“குறும்பாக்களிலே சுயம்புவான கருத்துவீறும், மொழிவீச்சும், கற்பனைவளமும் இருக்கின்றன. இத்தன்மைகளே குறும்பா புதிய தமிழ் கவிதை முயற்சி என்பதை நிறுவுவதற்கு போதுமானவை…”– (2002) ப-123

இவையும் வலிந்து கூறப்படுபவையா அல்லது ஒரு குறித்த ரசனை மட்டத்தின் தர்க்கரீதியான வெளிப்பாடா என்பதெல்லாம் கேள்விகளுக்கு அப்பாற்பட்டவை. (அண்மையில் சிற்சில பேராசிரியர்கள்கூட, தத்தமது ணுழழஅ கலந்துரையாடல்களின் போது குறும்பாக்களை சிலாகிக்கவே செய்தனர். இவை எனனைக் குறிக்கின்றன? குறித்த மனிதரின் ரசனை மட்டத்தின் வெளிப்பாட்டை மாத்திரமா?). மறுபுறம், திரு. பொன்னுத்துரை மேற்கோள் காட்டிய மேற்படி குறும்பாவை விட மேலும் மலினமான குறும்பாக்கள் மஹாகவியின் குறும்பா நூலில் காணப்படுகின்றன.

திரு. பொன்னுத்துரை அவர்கள் மேற்கோள் காட்டும் இன்னுமொரு குறும்பாவானது, இவ்வகையில் மேலும் மலினப்பட்டு பரிதாபமாக நிற்பது வெளிப்படை:

உத்தேசம் வயது பதினேழாம்
உடல் இளைக்க ஆடல் பயின்றாளாம்
எத்தேசத் எவ்வரங்கம்
ஏறாளாம் ஆசிரியர்
ஒத்தாசையில், பயிற்சிப்பாழாம்…”

மேற்படி குறும்பா, சிந்தனையைத் தூண்டுவதாகவும், வாழ்க்கை தரிசனத்தின் அடிப்படையில் பிறந்ததாகவும் கூறப்படுகின்றது. (உண்மை மானுட நேயத்தின், ஒரு துளியையாவது, மேற்படி 70க்கும் மேற்பட்ட குறும்பாக்களில் தேடுதற்கும் இல்லை என்பது பிறிதொரு விடயம்).
இருந்தும், சாலை இளந்திரையனும் தன் பங்குக்கு, “ ‘குறும்பா’ இக்காலத்தில் விஞ்சி நிற்கும் வரதட்சணை என்னும் மாப்பிள்ளை விலை கொடுமையையும், கைய10ட்டு என்னும் லஞ்ச ஊழலையும் அணுகுண்டு அபாயத்தையும்…பற்றிப் படர்ந்துள்ளது” எனப் பாராட்டாமல் விடுவதாய் இல்லை. (பக்கம்: 186)

இவர் குறிப்பிடும் குறும்பாவில் ஒன்று வருமாறு:

1
“வல்லரசின் செய்கையினைக் கண்டு
வல்லரசு வீசியதோர் குண்டு.
நல்லபடி நம்மனிதர்
நச்சரிப்பு தீர்ந்து விடத்
தொல்லுலகை ஆள்கிறது நண்டு”

2
“சொந்தத்திற் கார், கொழும்பிற் காணி,
சோக்கான வீடு, வயல், கேணி
இந்தளவும் கொண்டுவரின்
இக்கணமே வாணியின் பாற்
சிந்தை இழப்பான் தண்டபாணி”

இப்படியாய், ‘குண்டில்’ துவங்கி ‘நண்டில்’ முடிப்பதை ஆர்வலர்கள் கவித்துவத்தின் உச்சமென மயிர்சிலிர்த்தலும் நடந்தேறியே உள்ளது.
மறுபுறமாய், மேற்படி 70க்கும் மேற்பட்ட குறும்பாக்களில் தொக்கி நிற்கும் ஆபத்தை உணர்ந்ததாலோ என்னவோ இதனை மஹாகவியின் ‘புறநடை’ என்று வகை செய்து விட்டாலும், இறுதி கணிப்பில், இதனை மஹாகவி என்ற ஒரு கலைஞன் ஏன்தான் எழுத நேர்கிறது என்ற கேள்வி மிஞ்சி நிற்கவே செய்கின்றது.

கார்க்கி எழுதுவார்:

“ஆன்மீக துறையில் பிச்சைக்காரர் நிலைக்கு தாழ்ந்துவிட்டு, முரண்பாடுகளின் சிக்கலிலே சிக்குண்டு சுகத்தைத் தரும் மூலை எங்கேனும் உள்ளதா என்று ஒட்டிக்கொள்ள முயற்சிகள் செய்து, என்றென்றைக்கும் கேலியும் இரக்கமும் தேடிக் கொள்கின்ற தனிநபர் போக்கு சீரழிந்து உடைந்து வருகின்றது…” ப-105

தனிமனித இலக்கியம் குறித்து கார்க்கியின் மேற்படி தயவு தாட்சன்யமற்ற விமர்சனமானது, சிதைவுகளின் அடித்தளங்களில் இருந்து கட்டமைக்கப்படும் எழுத்துக்களின் வேரையும் அதன் உருவாக்கத்தையும் ஒன்றுகூட்டி விசாரிப்பதாயுள்ளது என்பது தெளிவு.
குறும்பாவின், ஒரு வரியைத்தானும், பாரதி, தன் முழு வாழ்நாட்களிலும் தெண்டித்திருந்தாலும் கூட, எழுதியிருக்க முடியாது என்பது போல, இவ்வகையில், இதேப் போன்ற குறுகிய வடிவமான, ஹைக்கூவை அவன் மொழிப் பெயர்த்து, தமிழ் மக்களுக்கு அறிமுகம் செய்ய துணிந்திருந்தான் என்பதும் அவதானிக்கத்தக்கதே.

பின்வரும் அவனது தேர்வில் அவனது சிரத்தையையும் பொறுப்புணர்வையையும் நாம் ஒருங்கு சேர காணக்கூடியதாய் உள்ளது:

‘தீப்பட்டெறிந்தது.
வீழு மலரின்
அமைதி யென்னே’

மேலும் பாரதி பின்வருமாறு கூறுவார்: ‘மலர் தனது வாழும் காலம் மாறி கீழே விழும் போது எத்தனை அமைதியுடன் இருக்கின்றதோ, அத்தனை அமைதியுடன் ஞானி தனக்கு வரும் துன்பங்களை நோக்குகின்றார்’ என.

14
இத்தகைய ஒரு பின்னணியில், வாழ்க்கை தரிசனம், கட்டற்ற தேடல், மானுட நேயம், அன்றாட வாழ்க்கை தரிசன சித்திரிப்பு, விவரணநடை போன்ற அலங்காரங்களை ஒரு கணம் ஒதுக்கி வைத்துவிட்டு, திருப்பு முனையாக வர்ணிக்கப்படும்,N மலே கூறப்பட்ட ‘பேச்சோசையை’ எடுத்துக் கொண்டால், முதலில் கேட்டாற் போல், ‘பேச்சுமொழித்தான் அத்தனையுமா’ என்ற கேள்விக்கு முதலில் நாம் விடையளித்தாக வேண்டியுள்ளது. ஏனெனில், மஹாகவியின் தலைமுறைக்கு பின்னதாகத் தோன்றியிருக்ககூடிய தலைமுறைகளை சேர்ந்த ஜெயபாலனாயிருக்கட்டும் அல்லது ஆதவனாக இருக்கட்டும் அல்லது சாருமதியாக இருக்கட்டும் - உருவ –உள்ளடக்க ரீதியாக, இவர்களின் கவிதைகள் தொட்ட அல்லது தொட முனைந்த பரப்பெல்லையையும், இவை பிரதிநிதித்துவம் செய்ய முயற்சித்த வாழ்க்கை தரிசன தேடலும், ஒப்பீட்டளவில் வித்தியாசம் பெற்றதும் சற்றே திகைப்பூட்டக் கூடியதுமாகதான் இருக்கின்றது. ஒரு சோற்றுப் பதமாய் பின்வரும் கவிதைகளின் சில வரிகளை நாம் பார்க்கலாம்:

ஜெயபாலனின் கவிதை:

i. “பருத்து முறுகித் தொந்தி வைத்த
கிழட்டு மருத மரங்கள்
கீழே புதியவை.
… … …
மண்ணுள் பதுங்கி இரு என
புல் பூண்டுகளின் விதைகளுக்குரைத்தது.
ஒப்பாரி வைக்கும் மீன்களை அதட்டி
முட்டைகள் தம்மை மணலுள் புதைத்து
சேற்றுள் தலைமறைவாகி
வாழ்வுக்காக போரிடச் சொன்னது.
… … …

மருத மரங்கள் கொம்பரை சிலுப்பும்
மருத மரங்களே மருத மரங்களே
தீதெது செய்தேன் செப்புக என்றேன்.
மீண்டும் மீண்டும் பெருமூச்செறிந்தன
மருத மரங்கள்.
நூறு நூறாண்டுகள் இதே இதே கரைகளில்
வேரும் விழுதுமாய் வாழ்பவர் நாங்கள்
நூறு நூறாண்டாய் உன் வரலாறு
நமக்குத் தெரியும்.
… … …
அடிமை விலங்கை சுமந்திடும் எனது
மக்களும் மருந்தும் விருந்துமாய்
குருதியும் தசையும் தந்தேன்’”

ii. நெடுந்தீவு ஆச்சிக்கு

அலைகளின் மீது பனைக்கரம் உயர
எப்போதும் இருக்கிற
என்னுடைய ஆச்சி

தருணங்களை யார் வென்றாலும்
அவர்களுடைய புதை குழிகளின் மேல்
காலத்தை வெல்லுவாள் என் ஆச்சி.
… … …

சாருமதியின் கவிதை:
‘அடேய்’ என்ற அழைப்பாணைகளால்
புதையும் மணலில்
உதைத்து உதைத்து ஓடும்
பதறிப்போன சிறு பாதங்கள்
… … …

குப்பி விளக்கின் முன்
குந்தியிருந்து நடாத்தும்
குடிசை இளவரசர்களின்
கல்வி யாகம்.
… … …
‘யாரடா இந்த பூவரசன்
கோயிலுக்க! கோயிலுக்க!
நாங்கதான் கல்லிக்காய்
பெண்டுகள்
பாடத்தில் மனம்
பதியாத மூத்தவனின்
வாயில் இருந்து வந்த
வார்த்தைகள் உதிர்ந்தன.
‘ஓண்டா ஓண்டா!
விடிஞ்சா பொழுதுபட்டா
விளையாட்டு உங்களுக்கு
நாளைய சோத்துக்கு
நானென்ன செய்யிறது….’
… …. …
எந்த நேரமும்
உடைஞ்ச வண்டிச் சில்லாய்
உண்ட புறுபுறுப்பை
மனிசனால்
ஒண்டும் செய்யேலா
எந்த நாளும்
இந்த இழவுதான்’

குடும்ப அரியாசனத்து
அரசனின்
நெஞ்சத்து
நெருப்பு கால்கள்
வார்த்தைகளாய்
அடியெடுத்து வைத்தன.

புழுதிவார்த்த
பிஞ்சு உடல்களின்
மண்டையில் இருந்து
ப10தமொன்று இறங்கி
அவர்களின்
நெஞ்சத்து தளத்தில் நின்று
நர்த்தனம் ஆடியது.

‘அப்பா பாவம்
இல்லை இல்லை!
அம்மாதான் பாவம்
இல்லை இல்லை
அப்பாவும் அம்மாவும் பாவம்.
(பின் இணைப்பில் முழுதாய் தரப்பட்டுள்ளன.)

மேல் காணப்படும் கவிதைகள், சிற்சில இடங்களில் பேச்சோசையை முன்னிறுத்தி கொண்டாலும் அவை இயங்கும், இயங்கு தளங்கள், அனேக வித்தியாசங்களை முன்னிறுத்துவதாக உள்ளன. மேலும் மானுட நேயம் தொடர்பிலான ஈர்ப்பும்-வெளிப்பாடும், இங்கே பல்வேறு பரிமாணங்களில் ஒலிப்பதாகவும் தெரிகின்றது. இருந்தும், இவற்றில், எந்த வரிகளில் மஹாகவியின் தொடர்ச்சியை இங்கே நாம் காண்கின்றோம் என்பதே பிரதான கேள்வியாகின்றது. தனது எழுத்துக்களில் அல்லது தன்னில், பாரதியின் செல்வாக்கு எத்தகையதாய் இருந்துள்ளது என்பதனை சாருமதி பல சந்தர்பங்களில் திட்டவட்டமாய் கூறியுள்ளதும் இங்கே நினைவுபடுத்தி கொள்ளத்தக்கதுதான்.
அத்தகைய ஒரு வேரிலிருந்து வந்ததாலோ என்னவோ, நா. சுப்ரமணியனால் மேற்கோள் காட்டப்படும் சாருமதியின் கூற்று பின்வருமாறு இருக்கின்றது:

“போராட்டத்தில் நீதி, அநீதி எவையென கண்டு தன்பங்கு யார்பக்கம் என்பதை விட, போராட்டத்தின் காரணத்தை கண்டு அருவருத்து ஒரு அல்லும் தொல்லைக்கும் போகாத மனிதனாக தன் பொருள் நிலைபாட்டை அமைத்துக் கொண்டு விடுகின்றார் மஹாகவி… இதனை குறிவைக்க அவருக்கு… அங்கத தொனி போதுமானதாகின்றது…”

“(இதனை) அருவருத்து முகஞ்சுழிக்கும் ஒரு கணவானின் முணுமுணுப்புக்கு ஒப்பிடலாம்…” ப-100

மஹாகவிக்கு எதிராக சாருமதியால் ஆற்றப்படும் இக்கூற்றில் தவிர்க்கமுடியாத வண்ணம் பாரதியின் பாதிப்பை, அதன் உண்மையான பரிமாணத்தில், இங்கே காணலாம். ஏனெனில் முரண்களில், பக்க சார்பாய் நிற்பதும், தன் எழுத்தை அத்தகைய முரண்களின் முன் வரிசையில் அமர்த்துவதும் பாரதியின் பண்பாகின்றது.

[தொடரும்]


உசாத்துணை நூற்பட்டியல்

1. மஹாகவியியல் - மஹாகவி குறித்த விமர்சன தொகுப்பு நூல் - பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் - ப10பாலசிங்கம் பதிப்பகம் - 2008
2. நவீனத்துவத்தின் முகங்கள் -அசோகமித்திரன் - தமிழினி பதிப்பகம் - 2003
3. கவிதை நயம் - கைலாசபதி-முருகையன் - குமரன் பதிப்பகம் - 2000
4. பஞ்சமர் நாவல் - கே.டானியல் - அடையாளம் வெளியீடு - 2005
5. ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி – தளையசிங்கம்
6. தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம் - 2021
7. Lenin - On Literature and Art – Leo Tolstoy as the mirror of the Russian Revelution – Progress Publishers - 1967
8. Marxim Gorky’s Collected Works Vol – 8
9. Marxim Gorky’s Collected works - Vol -9 - 1982
10. Marxim Gorky on Literature – Progress Publishers
11. The complete Letters of Vincent Van Gogh – Vol -3 - 1958
12. Wings Of Fire – A.J.P. Abdul Kalam – University Press - 1999
13. My Journey - A.J.P. Abdul Kalam - Ruba Publication - 2015

Zoom Meetings and Youtubes

i. பௌசர் - Zoom Meeting
ii. மஹாகவி நினைவு பேருரை (20.09.2021 – சென்னை பல்கலைகழக ஏற்பாட்டில்ää பேராசிரியர் ய.மணிகண்டன் தலைமையில் இடம்பெற்றது)
iii. ஹம்சன் குமாரின் தட்சிணாமூர்த்தி குறித்த ஆவணப்படம்.
iv. தட்சிணாமூர்த்தி குறித்த (Youtube)
v. தட்சிணாமூர்த்தி குறித்த ஆவணப்படம் வெளியீட்டு விழா. (Youtube)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.