- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமாரின் கவிஞர் மஹாகவியைப்பற்றிய இக்கட்டுரையினை அவரிடமிருந்து பெற்றுப் 'பதிவுகள்' இணைய இதழுக்கு அனுப்பியவர் எழுத்தாளர் ஆதவன். இருவருக்கும் நன்றி. - பதிவுகள்.காம் -


4
இலக்கிய வரலாற்றில் யதார்த்த நெறியின் முக்கியத்துவம் குறித்து ஏங்கெல்சாலும், கைலாசபதியாலும், கார்க்கியாலும், லெனினாலும் அவ்வவ் காலப்பகுதிகளில் தொட்டுக்காட்டப்பட்டே வந்துள்ளது. கற்பனாலங்காரத்திற்கும் (Romanticism),  இயற்பண்பு வாதத்திற்கும் (Naturalism) யதார்த்த வாதத்திற்கும் (Realism) இடையே உள்ள வித்தியாச வேறுபாடுகள் மேற்படி அறிஞர்களால் தெளிவுற படம் பிடித்துக் காட்டப்பட்டுள்ளன.

டால்ஸ்டாய் பொறுத்த லெனினின் கூற்று வருமாறு:

“மொத்தமாகவும் சில்லறையாகவும் காணக்கிட்டும் சகல முகத்திரைகளையும் பிய்த்தெறியும் நிதானமிக்க யதார்த்த வாதம் அவரது…”
“டால்ஸ்டாயின் எழுத்துக்களைக் கற்பதற்க்கூடு, ரஷ்ய தொழிலாளி வர்க்கமானது, தன் எதிரிகள் பொறுத்த அறிவை மேலும் அதிகமாகக் கூட்டிக் கொள்ளும்…” ப-31 63

இதனை கார்க்கி பின்வருமாறு தெளிவுப்படுத்துவார்:

“எழுத்தாளன் என்பவன் அனைத்தையுமே அறிந்து வைத்திருக்கும் கடமை பூண்டுள்ளான் - வாழ்க்கை எனும் பெருநதியின் பிரதான சுழிப்புகளையும், கூடவே, அதன் அற்ப ஓட்டங்களையும், அன்றாட வாழ்வின் அனைத்து முரண்களையும் அதன் வீறுகளையும், எழுச்சிகளையும், வீழ்ச்சிகளையும், செழுமைகளையும் அதன் கீழ்மைகளையும், அதன் உண்மைகளையும் பொய்மைகளையும் அவன் அறிந்தே வைத்திருக்க வேண்டிய பொறுப்பு கொண்டுள்ளவனாகின்றான்…” 

“கூடவே, குறித்த ஓர் நெறிமுறையானது, அஃது அவனது தனிப்பட்ட பார்வையில் எவ்வளவுதான் அற்பமாயும் முக்கியத்துவம் இழந்தும் போயிருப்பினும், அது அழிபடும் ஒரு பழைய உலகத்து சிராய்பு துண்டங்களா (Fragments) அல்லது ஒரு புதிய உலகை நிர்மாணிக்க வந்திருக்கும் புதிய முளைகளின் கூறுகளா என்பதனையும் சேர்த்தே அவன் தெரிந்து வைத்திருக்கும் கடமை பூண்டுள்ளான்” 

கார்க்கியினது மேற்படி கூற்றில் யதார்த்தவாதத்தின் அடிப்படை பண்புகள் எப்படியாய் வரையறுக்கப்படுகின்றன என்பது தெளிவு.
இறுதிகணிப்பில் யதார்த்தவாதம் என்பது, இடம்பெறும் ஓட்டங்களில், நாளைய உலகின் நிர்மாணிப்புக்கான ஓட்டத்தை அல்லது அதற்கான முளைகளைக் கண்டுணர்ந்து தேர்ந்து கொள்வது என்பதனை தனது முன்நிபந்தனையாகக் கொள்வதாய் அமைந்து போகின்றது.
இதுவே, மறுபுறத்தில், இயற்பண்பு வாதத்தையும் (Naturalism), யதார்த்தவாதத்தையும் (Realism) வேறுபிரித்து காட்டும் எல்லை கோடாகவுமாகின்றது.


5

இருந்தும் பேராசிரியர் நுஃமான் அவர்களும், திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்களும் இப்படியான ஒரு அணுகுமுறையில் இருந்து அந்நியப்பட்டு, மஹாகவி அவர்களின் பேச்சோசையையும் அன்றாட நிகழ்ச்சி அனுபவத்தையையும், அதனை அவர் படம்பிடித்த நேர்த்தியையும் மாத்திரமே முதன்மைபடுத்தி, அவரை ஒரு யதார்த்தவாதி என வரையறை செய்து அடையாளப்படுத்த முனைவதிலேயே, சிக்கலின் தோற்றுவாய் அமைந்து போகின்றது எனலாம்.

இவற்றை, சற்று நின்று நிதானித்து நோக்கும்போது, ‘யதார்த்தப10ர்வமாய் சித்தரித்தல்’ என்பதே ‘யதார்த்தவாதமாகும்’ அல்லது ‘யதார்த்தவாத நெறியாகும்’ என வரையறை செய்;து குழப்பி வைத்துக் கொள்ளும் தப்பான போக்கு மேலெழுவதைக் காணலாம்.

இவை அனைத்தும் இரண்டு கேள்விகளை முன்னிலை நோக்கி நகர்த்துகின்றன:

1. யதார்த்தபூர்வமான வாழ்க்கையை இவர்கள் சித்தரித்தார்கள் எனும் போது, யாருடைய வாழ்க்கையை இவர்கள் யதார்த்தபூர்வமாகச் சித்தரித்தார்கள் என்ற கேள்வி எழுகின்றது.

2. மேலும், யதார்த்தபூர்வமான சித்தரிப்பு என்பதே யதார்த்தவாதம் என்பதாகுமா என்ற கேள்வியும் எழுகின்றது.

அதாவது, அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சி அனுபவத்தைக் ‘கறாராகப்’ படம்பிடித்ததின் காரணமாக இவரை (மஹாகவியை) ஓர் யதார்த்த வாதியாக வரையறை செய்து கொள்வதற்கு முன், இவர் படம் பிடித்ததாய்க் கூறப்படும் அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சியானது மொத்தத்தில் யாருடைய அன்றாட வாழ்க்கை நிகழ்ச்சி என்பது முதல் கேள்வியாகின்றது.

திரு. சண்முகம் சிவலிங்கம் போன்றோரால், பெரிதும் உவந்து போற்றப்படும், இவரது படைப்புகளில் ஒன்றாகிய, ‘ஒரு சாதாரண மனிதனின் சரித்திரம்’ பிறப்பு தொடக்கம் இறப்பு வரையிலான ஒரு மத்தியதர வர்க்கத்து மனிதனின் ஸ்தீரமற்ற நிலைமையினை சித்திரித்து ‘உயிர் ஒரு நெடுந்தொடர் பரிணாமம்’ என்பதனை உணர்த்துவதாய் உள்ளது எனக் கூறப்படுகின்றது. ப-158 - 176

“இளமை, வாலிபம், ஆண்-பெண் உறவு, முதுமை முதலியவற்றின் ஊடுள்ள வாழ்வியல் இயக்கத்தை ஒரு முழுமையாக காணும் முயற்சியே அது…”

“வாழ்வை அதன் சகல புறநிலை முரண்பாடுகளும் உள்ளடங்கி போக, அதனை ஒரு உயிர்ப்பு இயக்கமாக காணும் முயற்சியின் மிக உயர்ந்த பேறு என்றும் அதனை குறிப்பிடலாம்”என மேலும் விஸ்தரிப்பார் திரு. சண்முகம் சிவலிங்கம்.

இங்கே, மேலே குறித்தவாறு, ‘யாருடைய வாழ்விது’ எனும் கேள்வி பிரதானமானதாய் இருக்க, மறுபுறம், “வாழ்வை அதன் சகல புறநிலை முரண்பாடுகளும் உள்ளடங்கி போவதாய்” பார்ப்பதில் உள்ள “யதார்த்த நெறி” யாதாயிருக்கக் கூடும் எனும் சிக்;கல் மிக்க கேள்வி இங்கே உருவாவது தவிர்க்க முடியாததாகின்றது.

ஏனெனில் சகல முரண்பாடுகளும் உள்ளடங்கி போன ஒரு நிலையில், யதார்த்த நெறி கோரும் ‘முரண்களின் தேர்வு’ என்பது அவசியமற்ற ஒன்றாகின்றது. சுருங்கக் கூறினால், கார்க்கியும் லெனினும் டால்ஸ்டாயும் கைக்கொண்ட யதார்த்த வாதத்திற்கும் மஹாகவி பின்பற்றிய யதார்த்த நெறிக்கும் எவ்வித ஒட்டுறவும் இல்லை என்பது தெளிவாகின்றது.

‘சகல புறநிலை முரண்பாடுகளும் உள்ளடங்கி போன நிலையில்’ ‘வாழ்வை ஒரு உயிர்ப்பு இயக்கமாக’ காணும் முயற்சி ஒன்றே இங்கே விதந்துரைக்கப்படுகின்றது.

சண்முகம் சிவலிங்கம் கூறுவார்:

“ஒரு சாதாரண மனிதனது வாழ்க்கை சரித்திரம்” கதாநாயகனாகிய முத்தையனுடைய “வாழ்க்கை” ஓர் உழல்வின் அச்சிலே சுழல்வதாக தெரிகின்றது(ஓர் கட்டத்தில்). நெடுக அவனுடைய வாழ்க்கையிலே ஓர் அர்த்தமற்ற தன்மையும், தனிமையும், ஒதுங்கியலும் நிச்சயமின்மையும் விரவி கிடக்கக் காண்கின்றோம்… அவனது வாழ்க்கையில் தென்பட்ட வெறுமை… பலபட சொல்லப்பட்டுள்ளது… ப. -141

இப்படிப்பட்ட ஓர் சித்தரிப்பிலேயே, யதார்த்த நெறி கோரக்கூடிய ‘வாழ்வின் எழுச்சிகளையோ’ அல்லது ‘புதிய உலகின் முளைகளின் தேடுகையோ’ அர்த்தமிக்க முயற்சியாக இருக்க போவதில்லை என்பது தெளிவு. அதாவது, யதார்த்த நெறி கோரும் விதிகளுக்கும் வெறுமையையும் தனிமையையும் ஒதுங்கியலையும் முன்வைக்கும் மேற்படி கவிதைக்கும் இடையில் எந்த ஒரு ஒட்டுறவும், உறவு முறையும் இல்லாது போய் விடுகின்றது. அப்படியென்றால் இக்கவிதையின் முக்கியத்துவம்தான் யாது?


6
மரணத்தின் பின் என்ன என்பதைக் கண்டு கொள்வதும்தான் என முடிப்பார் சண்முகம் சிவலிங்கம். அவரின் கூற்று:

“மஹாகவியின் ஒரு சாதாரண மனிதனது சரித்திரம்… வாழ்க்கையை ஒரு தொடர்நிலை உயிர்ப்பு இயக்கமாக கருதுகின்றது. அப்பனே மகனாகி வளர்ந்து உயிர் ஓய்தலுற்று உயர்வு ஒன்றினை நாடுதலே வாழ்க்கையின் உண்மையாக உள்ளதை அது காண்கின்றது…” ப-153

அதாவது மரணம் என்ற கேள்வி ஏற்படுத்தக்கூடிய சூனியமயமாதலை, வாழ்வு என்ற பேரியக்கம் பிள்ளைகள்-பேரன்-பேத்தி என்ற ஒரு தொடர்ச்சிக்கூடாக வெற்றி கொள்கின்றது. மரணத்தின் பின் (அல்லது அதற்கு முன்பாகவேனும், ஆனால் மரணத்தின் பின்னணியில்) மிஞ்சப்போவது சூனியமில்லை எனும் இக்கருத்தை மஹாகவி வெளிக்கொணர்வது அளப்பறிய ஒரு பங்களிப்பாகவே இருக்கும் எனக் கருதுவார் சண்முகம் சிவலிங்கம்.

இது போலவே, பேராசிரியர் நுஃமான் கூறுவார்: “மரணம் பற்றிய ஒரு கோட்பாட்டையே மஹாகவி உருவாக்கினார். மரணத்தோடு மனித வாழ்வு முடிந்து விடுவதில்லை. அவன் தன் சந்ததிகளுக்கூடாக வளர்ந்து செல்கின்றான். அவ்வகையில் மனிதன் மரணிப்பதில்லை என்பது அவன் முன்வைத்துள்ள கருத்து…”(தத்துவம்). - 2021

வேறு வார்த்தையில் கூறுவதானால் தனது வம்சத்தின் தளைப்புக்கூடாக, மனிதன், சூனிய வெளியையும் மரணத்தையும் ஒருங்குசேர கடக்கின்றான் என்றாகின்றது.

இதன்வழி நோக்குமிடத்து, மனிதன் தன் வம்சத்திற்காக பாடுபடுவதும், சொத்துக்களைத் தன் வம்சத்திற்காக சேகரித்து வைப்பதும் சகஜமானது மாத்திரமல்ல மாறாக தேவைப்படும் அத்தியாவசிய நியமங்களில் ஒன்றாகவும் ஆகின்றது.

இந்நோக்கில் பார்க்குமிடத்து, இருப்பதைத் தக்கவைத்துக் கொள்வது என்பது, அவரவர், தமக்கிருக்ககூடிய அல்லது வாய்க்கக்கூடிய தராதரத்திற்கு ஏற்ப, அவ்வவ் சமூக கட்டுமானங்களை தக்க வைத்துகொள்வது (அவை வர்க்க, சாதீய கட்டுமானங்கள் என வகைப்படுத்தக் கூடுமென்றாலும்) – தக்கவைப்பது என்பது, மேற்படி சூனியத்தையும் மரணத்தையும் வெற்றிக் கொள்ளும் பொறிமுறையாகின்றது அல்லது அப்பாதையின் தவிர்க்கமுடியாத ஒரு நீட்சியாக அமையக்கூடியதாகின்றது, என்பது இவ்வகை தர்க்கத்தின் நீட்சியே.

மொத்தத்தில், இது வாழ்வை வெற்றி கொள்ளும் ஒருவகை ‘பா’வகை (வம்சங்களை தளைக்க செய்வதற்கூடு), என்றும் விளங்கி வைத்துக்கொள்ளப்படுகின்றது. இருக்கலாம். இருந்தும், பாரதி போன்ற மனிதர்களும் வாழ்வின் அர்த்தபாவம் குறித்து கலந்துரையாட முன்வர தவறவில்லை என்பதும் தொட்டுக்காட்டப்பட வேண்டியதே.

மரணத்தின் பின் யாது, என்ற ஓர் சூனிய பின்னணியில், வாழ்க்கை பொறுத்த கேள்விகளை நேரடியாக பாரதி அலசாவிட்டாலும், இதனை ஒத்ததாய்த் தோன்றக்கூடிய வாழ்வின் அர்த்தப்பாடுகளை அவனும் விசாரிக்கவே முற்பட்டுள்ளான். வாழ்வென்பது ஒரு மாயைதானா – கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்டவை யாவையுமே புதைந்தழிந்து போவதென்றால் வாழ்வின் அர்த்தப்பாடுகள்தான் என்ன என்பது போன்ற கேள்விகளை அவனும் கேட்கவே செய்தான். ஒருபுறத்தில், வாழ்வே சூனியம் என்ற வாதத்தின் பின்னணியில் வாழ்வின் அர்த்தப்பாடு குறித்த தேடல். மறுபுறத்தில்,வாழ்வே மாயம் என்ற ஒரு பின்னணியில் வாழ்வின் அர்த்தப்பாடு குறித்த தேடல். இரண்டுமே, மொத்தத்தில் வாழ்வு பயனற்றது – அர்த்தமற்றது என்ற முடிவை நோக்கி மனிதனை நகர்த்தக்கூடியதுதான். இதற்கான தீர்வு, மஹாகவியின் பார்வையில், அல்லது சண்முகம் சிவலிங்கம் பார்வையில்,‘வம்சத்தின் தளைப்பு’ என்பற்கூடு முன்வைக்கப்படுகின்றது. அதாவது வாழ்வு, வம்ச விருத்திக்கூடாக, தன் அர்த்தப்பாட்டைக் கண்டு கொள்கின்றது – இது ஒருவகை அர்த்தப்பாடு. மறுபுறம் பார்த்தால், பாரதியின் கூற்று வருமாறு இருக்கின்றது:

“போனதெல்லாம்
கனவினை போல்
புதைந்தழிந்து போனதனால்
நானும் ஓர் கனவோ
இந்த
ஞாலமும் பொய்தானோ…”
என்றும்
“காலம் என்றே ஓர் நினைவும்,
காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ?
அங்குக் குணங்களும் பொய்களோ
…. … …..
நீங்கலெலாம்
வெறுங்
காட்சி பிழைதானோ…”

என்றெல்லாம், கேள்வியை எழுப்பிக் கொள்ளும் பாரதி, இதன் தொடர்ச்சியாக, கற்பதுவும், கேட்பதுவும், கருதுவதும் அற்ப மாயைகளோ-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ என்றெல்லாம் வினவி பின் ஈற்றில் வருமாறு முடித்து கொள்கின்றான்:

“காண்பதெல்லாம் மறைவதென்றால்
மறைவதெல்லாம் காண்பமன்றோ…
வீண் படுகுழியிலே
நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உண்மை கண்டாய்…
காண்பதுவே சத்தியமாம்
இக்காட்சி நித்தியமாம்…”

இவ்வுலகமே பொய்மை அல்லது வாழ்வே ஒரு மாயை என்ற வாதத்தை எதிர்கொள்ளும் பாரதி தன்னை சுதாகரித்து வாழ்வின் அர்த்தப்பாட்டை இப்படியாய்க் காண்கின்றான். அதாவது சூனியம் அல்லது மாயை ஏற்படுத்தக்கூடிய கேள்விகளின் பின்னணியில் வாழ்வு அர்த்தப்ப10ர்வமானது – நீடிக்க கூடியது, அதன் விளைபொருள்கள் என்றும் ஜீவித்திருக்கக் கூடியவை எனும் கருத்தாக்கம் இங்கே உள்ள10ர ஓடுவதாய் அமைந்து போகின்றது. ஆனால் இதனை விட கார்க்கி இன்னும் தெளிவுற கூறுவதாய் தோன்றுகின்றது:

“மனிதனைப் பற்றிய வரலாற்றை விட மனித உழைப்பின் சிரு~;டியின் தன்மையின் வரலாறு எவ்வளவோ சுவையுள்ளதாகும். பொருள் நிறைந்ததாகும். நூறு வயது எட்டும் முன்னே மனிதன் இறந்து விடுகின்றான். ஆனால் அவனது படைப்புகளோ பன்நூற்றாண்டுகள10டே நிலைத்து வாழ்கின்றன” ப. 29

“மனிதன் செய்த ஒவ்வொரு காரியத்திலும், இன்றிருக்கின்ற ஒவ்வொரு பொருளிலும் மனித ஆன்மாவின் ஒரு துளி அடங்கியிருக்கின்றது. இந்த தூய்மைமிக்க, மாண்புமிக்க ஆன்மா விஞ்ஞானத்திலும், கலையிலும், ஏனையவற்றில் உள்ளதை விட அதிகமாக இருக்கின்றது. புத்தகங்களினூடே, புத்தகங்கள் வாயிலாக, இந்த ஆன்மா மிகுந்த சொல்வன்மையுடனும் தெளிவுடனும் பேசுகின்றது…” ப.21

அதாவது மனித வாழ்வின் இடையறா தொடர்ச்சி குறித்து, மேற்படி வித்தியாசமான பார்வை கொண்டவர்கள், இங்கே முன்னிறுத்தப் படுகின்றனர் எனலாம். இதனையே இன்குலாப்பின் மகத்தான இறுதி கவிதைகளில் ஒன்று பின்வருமாறு கூறி நிற்கின்றது:

உயிர்ப்பின் போதே என்னுடன்
ஒப்பந்தம் செய்தது காலம்
“தான் விரும்பும் போது தன்னோடு
கண்ணாமூச்சி ஆட வேண்டும்” (மரணத்தை இத்தகைய நெஞ்சுரத்துடன் எதிர்த்த கவிதைகள் குறைவு: முழு வடிவம் பின்னிணைப்பில்)

இப்பின்னணியில், மஹாகவியின் அணுகுமுறை நோக்கத்தக்கது. அவரது கொள்கை, வம்சவிருத்தி என்ற மிக சாதாரண குறுகிய அடிப்படையில் அல்லது சிறுமைபட்ட வட்டத்துள் சிக்கி அகப்பட்டு கொள்ளும் போது, மற்றைய இருவரின் பார்வைகள் வித்தியாசமாகக் கிளைபிரிவதை நாம் காணக்கூடியதாக இருக்கின்றது.

அதாவது இப்பார்வை வித்தியாசங்கள், முத்தையனின் தந்தை அல்லது முத்தையனின் பிள்ளை-பேரப்பிள்ளை என்றளவில் விடயத்தை அணுக முயற்சிக்கும் மஹாகவியின் உலகப் பார்வையின் எல்லைப்பாடுகளைக் சுட்டுவதாக அமைந்து போகின்றது. வேறு வார்த்தையில் கூறுவதானால், மரணத்தின் பின்… என்ற கேள்வியின் பின்னணியில் மனித வாழ்வின் அர்த்தப்பாடு யாதாகும் என்ற கேள்விக்கான தேடலில், மேலிருவரின் பார்வைகள், மஹாகவியின் தளத்திலிருந்து முற்றாய் வித்தியாசப்பட்டும் வேறுபட்டும் நிற்பதாய் உள்ளது. அதாவது, இவை இரண்டும், இரு வேறு துருவ பார்வைகளாகி, அது வேறு இது வேறு என்றாகின்றது.

ஒரு பார்வை, தான்-தன் குடும்பம் என்பதனை விட்டு, ஒரு சமூகப் பார்வையை ஒட்டி இயங்க முயற்சிக்கையில், மற்றதோ தன் குடும்பத்துள்ளேயே ஒடுங்கிப் போக சித்திக்கின்றது. (அண்மைக்காலத்து ‘வித்துடல்கள்’ குறித்த கருத்தாக்கங்களின் சமூகப் பின்புலங்களும் இங்கே நினைவுகளில் கொள்ளத்தக்கவையே. இது போலவே, இரண்டாம் உலகப் போரின் போது, ஸ்டாலினின், தன் மகன் குறித்த அணுகுமுறையும், அதற்கு பின்னால் தோன்றியிருந்த ஓர் தலைமுறையானது தத்தம் பிள்ளைகளுக்கு மார்க்ஸ் என்றும், ஸ்டாலின் என்றும், லெனின் என்றும் பெயர் சூட்டி மகிழ்ந்த விந்தையும் எம் கண் முன்னால் நடந்தேறும் சமாச்சாரங்கள் தாம்). (இதுபோலவே, மறுதுருவத்தில், ஒரு சிறிய கடைத்தெருவின் கல்லா பெட்டி வியாபாரி முதல், அதே கடைத் தெருவின் சாதாரண ரவுடி வரை, தத்தம் பிள்ளைகள் அல்லது தத்தம் வம்சம் கருதி சிந்தை கொள்பவராக இருப்பதென்பதும் பெரிய விடயம் இல்லை. சகஜமானதுதான் என்றாகின்றது).

இருந்தும் கூட, சாதாரண வழக்கில் ‘வம்ச தொடர்ச்சி’ என குடும்பத்துள் ஒடுங்கும் இக்கருத்தாக்கம் சற்றே பரிமளிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு ‘தொடர் நிலை உயிர்ப்பு’ என்று இங்கே வரையறுக்கப்பட்டாலும், இது, பல காலமாக (காலம் காலமாய்) இருந்துவரும் ஒரு சள்ளை பிடித்த கருத்தே என்பதில் கருத்து பேதம் இருக்க முடியாது.  ஆனால் இவையிவற்றின் ஆற்றப்படும் காலத்தையும் சூழலையும் ஒட்டி அவையவற்றின் தாற்பரியம் வித்தியாசம் பெறுவன. இதற்கான பிறிதொரு உதாரணத்தை, ‘மருத மரங்களின்’ பின்னணியில் எழுத்தாளர்கள் எப்படி கையாண்டுள்ளனர் என்பதனை மேலே காணலாம்.

7
மருதமரம் குறித்த பிரஸ்தாபிப்பு, சங்கப் பாடல்கள் முதல் ஆங்காங்கே இடம்பெற்றுள்ளன. சங்க பாடல்களில் மருத மரங்களின் காட்சிப்படுத்துகை மருத நிலத்தையும் அதனுடன் கூடவே, வரலாற்றின் ஒரு கட்டத்தில் வயல்வெளிகள் வந்து சேர்ந்த விதத்தையும், அதனடியாக வரலாற்றையும் எடுத்தியம்புவதாக நூல்கள் கருதும். எனினும், மருதமரம் குறித்த டானியலின் விவரிப்பு பின்வருமாறு இருக்கின்றது (டானியல், தன் பஞ்சமர் நூலில் ஒரு ‘நிழக்கிழாரின்’ மருதமரத்தை விவரிப்பார்):

“கால்நடைகள் கேணியில் தண்ணீர் குடித்துவிட்டு அந்த கையோடு ஆவுரஞ்சிக் கற்களில் உடம்பை உரசி திணவு எடுப்பதும், சுமைகளை தூக்கி வருபவர்கள் அந்த சுமைதாங்கிகளில் அவைகளை இறக்கி வைத்துவிட்டு கேணியில் முகம் அலம்பி பக்கத்தேயிருக்கும் மருதமர நிழலில் தங்கியிருந்து ஆறி போவதும், சுமையோடு போய்விட்ட அழகம்மா நாச்சியாரின் (கதையின்படி, வேலுப்பிள்ளை கமக்காரனின் தந்தையான கணபதிப்பிள்ளையின் வைப்பாட்டி) பேரால் நடைபெறும் தர்ம காரியங்களாகத்தான் கணபதிப்பிள்ளை நயினார் நினைத்திருந்தார்.
சக்கி முக்கி கற்களை போன்று நெறிகள் விட்டு, வீங்கலும் வற்றலுமாக உடம்பை ஆக்கி கொண்டு அந்த மருதமரம் வயற்பரப்பின் பகுதிகளை ஆக்கிரமித்திருந்தது. இப்போதுதான் அது தளிர்விட்டு புத்தம் புதிய தளிர்களை பிறப்பிக்கின்றது. வயதாகிவிட்ட அதன் முன்னைய தலைமுறை இலைகள், புத்தம் புதிய தலைமுறையினர் தலையெடுத்து பரவி வந்ததன் மேல்தான், அப்பாடா என்று நிம்மதியுடன் உதிர்ந்து போகின்றன” (பஞ்சமர், ப-178)

இந்த ‘நிம்மதியே’ எமது அவதானத்துக்குரியது. டானியலின் பார்வையில், நிலக்கிழாரது மருதமரத்தின் முதிர்ந்த இலைகள், தமது புத்தம் புது தலைமுறை இலைகள் தலையெடுத்து பரவி வந்ததன் பேரில், ‘அப்பாடா’ என்ற நிம்மதியுடன் உதிர்ந்து தொலைகின்றன. இருக்கலாம். இல்லாவிடில் அவையும் சூனிய வெளியில் ஸ்தம்பித்து இருக்கும் - திரு. சண்முகம் சிவலிங்கம் அவர்கள் அபிப்பிராயம் கொள்வது போல. ஆனால், டேனியல் மேற்படி மருத மரத்தை எழுதி முடித்து, கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் சென்ற பின்னர், எழுத்துத்துறையில் காலடி எடுத்து வைத்திருக்க கூடிய வ.ஐ.ச ஜெயபாலன், இதே மருத மரங்களைப் பற்றி மீண்டும் எழுத நேர்கின்றது. கவிஞனின் கவிதை இவ்வாறு ஓடுகின்றது:

i. “பாலி ஆற்றின் கரையில் இருந்தேன்.
மணல் மேடுகளில்
உயிர்வற்றும் நாணல்கள்
காற்றில் பெருமூச்சை கலக்கும்.
இரு மருங்கிலும்
பருத்து முறுகித் தொந்தி வைத்த
கிழட்டு மருத மரங்கள்
கீழே புதியவை…

ஆறு நடந்தது.
நாணல் புதர்களை நக்கி நனைத்தது
அல்லி கொடிகளின் கிழங்குகளுக்கு
நம்பிக்கை தந்தது.
… … …

மண்ணுள் பதுங்கி இரு என
புல் பூண்டுகளின் விதைகளுக்குரைத்தது.
ஒப்பாரி வைக்கும் மீன்களை அதட்டி
முட்டைகள் தம்மை மணலுள் புதைத்து
சேற்றுள் தலைமறைவாகி
வாழ்வுக்காக போரிடச் சொன்னது…

… …. ….
நீட்டி நிமிர்ந்து
முதிய மருத மரத்தின் வேர்களில்
சாய்ந்து கிடந்த வானை நோக்கினேன்
மருத மரத்தின் இலைகள் வேய்ந்த
முகட்டின் ஊடே
வெண்நெருப்பாக எரிந்தது வானம்…

இப்படியாய் மருத மர வேர்களில் சாய்ந்து கிடக்கும் கவிஞனுடன், மருதமரம் பேசுவும் செய்கின்றது:

பாட்டி கதைகளில் வருவது போல
நிசமாய் மரங்கள் பேசுதல் கூடுமோ…?
……
மருத மரங்கள் கொம்பரை சிலுப்பும்
………
எழுந்திடு மகனே!
உனக்குக் கீழோர் பெண் துயில்கின்றாள்..
மருத மரங்களின் சினேகிதியாகவும்
நாணல் புதர்களின் தோழியாகவும்
(இருந்தவள்)

வாலைக் கவியையும் மிஞ்சும் கனவினள்
எழுந்திடு மகனே..!

கவிதையில், மருத மரங்கள், ஒரு கட்டத்தில், தமது கொம்பர்களை வளைத்து, கவிஞனின் தோழர்களை அவர்களது எதிரிகளிடம் இருந்து ஒளித்து வைத்து கொள்வதாயும்; கவிதை படைக்கப்பட்டுள்ளது. இப்படியாய், தமிழ் இலக்கியத்தில் மருத மரங்களின் காட்சிபடுத்துகை வித்தியாசமுறுகின்றன. நிலக்கிழாரால் நடப்பட்டு, ‘அவருக்கு’ நெருக்கமானதாய் சித்தரிப்புக்குள்ளாகும் - டானியலின் மருதமரமோ, தன் இளந் தளிர்களை பார்த்து, வாழ்வினை ஒரு தொடர் இயக்கமாக கண்டுணர்ந்து அமைதி கொள்கையில் ஜெயபாலனின் மருதமரங்களோ நிலக்கிழார்களை மறந்து, வாழ்வை ஒரு மகாயக்ஞமாக கருதி, அதில் போராடும் மாந்தர்களின் தர்மங்களையும் அறங்களையும் கண்டுணர்ந்து, தோழர்களை எதிரிகளுக்கு எதிராக ஒளித்து வைப்பதில் ஈடுபடுகின்றது. டேனியலின் மருதமரம் நிலக்கிழார்களின் பார்வையில், மஹாகவியின் ‘அப்பனே மகனாகி’ என்ற தத்துவ பார்வையில் வாழ்க்கையை நோக்குகையில் ஜெயபாலனின் மருதமரமோ குடும்ப பிடிகளை விட்டு அகன்று, குறுகிய வட்டங்களை நிராகரித்து தோழர்களை – சமூகத்தை – அரசியலை அரவணைக்க முற்படுகின்றது. மொத்தத்தில், வாழ்வை ஒரு தொடர் இயக்கமாக கண்டு, தன் குடும்ப வட்டத்துடன் உள்ளடங்கி போகும் மருத மரம், ஒரு பக்கமாய் காட்சிப்படுத்தப்படுகையில் மறுபுறமாய் குடும்ப வட்டத்தை விட்டு நீங்கி, சமூக போர்களில் உள்ளோடும் நீதி நியாயங்களை கண்டுணர்ந்து பக்கசார்புடன் செயலாற்றி, தோழர்களை ஒளிக்க திண்ணம் கொள்ளும் மருத மரங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. அதாவது, சிறிய வட்டத்தில் இருந்து வெளிவந்து, சமூகத்தை அரவணைத்து கொள்கின்றன – அவை. அதாவது, ஒரு மரம், ‘உயிர் வாழ்தல்…என்பது’ என பாடுகையில், மறுமரம் கொம்பரை ‘வளைத்து கொள்கின்றது’.

[தொடரும்]


உசாத்துணை நூற்பட்டியல்

1. மஹாகவியியல் - மஹாகவி குறித்த விமர்சன தொகுப்பு நூல் - பேராசிரியர் ஸ்ரீ.பிரசாந்தன் - ப10பாலசிங்கம் பதிப்பகம் - 2008
2. நவீனத்துவத்தின் முகங்கள் -அசோகமித்திரன் - தமிழினி பதிப்பகம் - 2003
3. கவிதை நயம் - கைலாசபதி-முருகையன் - குமரன் பதிப்பகம் - 2000
4. பஞ்சமர் நாவல் - கே.டானியல் - அடையாளம் வெளியீடு - 2005
5. ஏழாண்டு கால இலக்கிய வளர்ச்சி – தளையசிங்கம்
6. தெட்சணாமூர்த்தி எட்டாவது உலக அதிசயம் - 2021
7. Lenin - On Literature and Art – Leo Tolstoy as the mirror of the Russian Revelution – Progress Publishers - 1967
8. Marxim Gorky’s Collected Works Vol – 8
9. Marxim Gorky’s Collected works - Vol -9 - 1982
10. Marxim Gorky on Literature – Progress Publishers
11. The complete Letters of Vincent Van Gogh – Vol -3 - 1958
12. Wings Of Fire – A.J.P. Abdul Kalam – University Press - 1999
13. My Journey - A.J.P. Abdul Kalam - Ruba Publication - 2015

Zoom Meetings and Youtubes

i. பௌசர் - Zoom Meeting
ii. மஹாகவி நினைவு பேருரை (20.09.2021 – சென்னை பல்கலைகழக ஏற்பாட்டில்ää பேராசிரியர் ய.மணிகண்டன் தலைமையில் இடம்பெற்றது)
iii. ஹம்சன் குமாரின் தட்சிணாமூர்த்தி குறித்த ஆவணப்படம்.
iv. தட்சிணாமூர்த்தி குறித்த (Youtube)
v. தட்சிணாமூர்த்தி குறித்த ஆவணப்படம் வெளியீட்டு விழா. (Youtube)

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.