முன்னுரை
‘வற்றிப் போன உடலோடு, வெற்றுக் கனவுகளை விழியோரம் சுமந்து கொண்டு சுற்றித் திரியும் கோடிக்கணக்கான ஏழைகளுக்காகக் குரல் கொடுக்கும் கவிஞனே மக்கள் கவிஞனாக மதிக்கப்படுவான். இவ்வாறு மெலிந்தவர்களுக்காகக் குரல் கொடுப்பதென்பது எல்லாருக்கும் இயலக் கூடியதன்று. திட்டமிட்டுச் செயலாற்றும் ஒருவரால் மட்டுமே செயற்கரிய செயலை செய்ய முடியும். இதைச் செய்பவர்களின் போலிச்சாயம் காலப் போக்கில் கரைந்துவிடும். அருவியிலிருந்து பாயும் நீரைப்போல் அகத்திலிருந்து மனித உயிர் நேயம் தன்னியல்பாகப் பெருக வேண்டும். உதைத்தவனுக்குக் கால் வலிக்குமே என்று கவலைப்படாமல் உதைபட்டவனுக்கு உடம்பிலும் மனதிலும் காயம்பட்டு விட்டதே என்று கவலைப்படுவதே மனித உயிர் நேயம் ஆகும் அத்தகு மனிதநேயம் பாரதியின் ஊனும் உயிரும் கலந்த பாக்களுக்குள் இழையோடுகிறது.

    சமூக விடுதலையோடு, அடிமைப்பட்ட இந்தியத் தாய்த்திருநாட்டின் விடுதலையை பாடிப் பறந்த குயில் பாரதியார் ஆவார். அவருடைய கவிதைகளில் மணம்வீசும் மானித உயிர் நேயத்தை காண்பதே இக்கட்டுரையின் நேக்கமாகும்.

மனிதம் - சொல்விளக்கம்
மானுடநேயம், மானுடம், மனிதம் என்று மனிதநேயத்தைக் குறிப்பிடுவார்கள். அன்புதான் மானுட வளர்ச்சியின் ஆணிவேர். எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டும் பண்பாடு தமிழகத்தில் ஆதிகாலம் தொட்டே இருந்து வருகிறது. தனக்கென வாழாமல் பிறர் நலனுக்காகவே வாழ்ந்து வரலாறாகி மிளிர்பவர்கள் பலர். சமயங்கள் பற்பல தோன்றிய தமிழ் நிலத்தில், யாவரும் கேளிர் என்ற நன்னெறியும் தழைத்து விளங்கியது.

    ‘மனம் என்ற சொல்லின் அடியாகவே மனிதன் என்ற சொல்லும் தோன்றியிருக்க வேண்டும். மனத்தை உடையவன் மனத்தன் என்றிருந்து பின்பு மனிதன் என்றாகியிருக்கலாம். அதுவே முதல் நீண்டு மானிடன் என்றும் ஆகியிருத்தல் வேண்டும்” (டாக்டர் அ. ஜெகந்நாதன், பாரதிதாசனில் மார்க்சியம், ப.48)என்று கரு.நாகராசன் ‘தமிழர் கண்ட மனம்” நூலில் கூறியதை சி.இராகவேந்திரன் வழிமொழிகிறார். மனிதன் என்ற சொல் ‘மனிதம்” ஆக மாறி மனிதநேயத்தைக் குறிக்கிறது என்பர்.

    நாம் அனைவரும் இந்தியத் தாயின் வயிற்றில் பிறந்த புதல்வர்கள். நமக்குள் சண்டையிடலாம்;; சமரசம் ஆகலாம்; ஆயிரம் இன வேறுபாடுகள் இருக்கலாம்; நாம் அதை மறந்து வாழலாம். ஆனால் நம்மை அடிமைப்படுத்த வேறொருவர் வந்து மூக்கை நுழைப்பது நீதியாகுமா? எனக் கேட்கிறார்.

        ‘ஆயிரம் உண்டிங்கு சாதி - எனில்
             அந்நியர்வந்து  புகல் என்ன  நீதி - ஒரு
        தாயின் வயிற்றில் பிறந்தோம் - தம்முள்
            சண்டை செய்தாலும் சகோதரர் அன்றோ”
                            (பாரதியார் கவிதைகள் ப.2)

எனச் சினத்தை உமிழ்கிறார் பாரதியார். தேசமக்கள் அனைவரின் மேலும் பாரதியார் கொண்ட காதல், நேசம், பற்று முதலியன வெள்ளிடைமலை போல் விளங்குகிறது.
நாம் அனைவரும் என்ற உன்னதமான கோட்பாட்டையுடைய மறைகளை வரைந்த கை நம் பாரததேவியின் கை என்கிறார் பாரதி.

        ‘ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்
            உலகின்பக் கேணி என்றே - மிக
        நன்று பல்வேதம் வரைந்தகை பாரத
            நாயகி தன்திருக் கை”
                        (பாரதியார் கவிதைகள் ப.24)

    மக்கள் வாழ்க்கையைத் துன்பக்கேணியாய் புதுமைப்பித்தன் சித்தரித்தார். பாரதியோ உலகம் இன்பமயமானது என்று கருதி இன்பக்கேணி என்று கூறுவதால், உலகின் மீதும் வாழ்வின் மீதும் அவர் கொண்ட நேயம் விளங்குகிறது.

கல்வியின் அவசியம்
    பஞ்சமும் பட்டினியும் மக்களை வாட்டிக் கொண்டிருக்கிறது. சொல்லொணாத் துயரில் மக்கள் உழல்கிறார்கள். ஆனால் தாம் படும் துயரம் எதனால் வந்தது? எவரால் விளைந்தது? என்ற காரணங்களைக் கூட அறியாமல் இருக்கிறார்களே என வருந்துகிறார். இத்தகைய மனிதர்களின் அறியாமை கண்டு அவர்களை வெறுக்கவும் மனமில்லை. அவர்களின் துயரங்களைத் தீர்ப்பதற்கு வழியும் இல்லையே என ஏங்குகிறார்.
        
        ‘நெஞ்சு பொறுக்கு திலையே - இதை
            நினைந்து நினைந்திடினும் வெறுக்குதிலையே
        கஞ்சி குடிப்பதற் கிலார் - அதன்
            காரணங்கள் இவையென்னும் அறிவுமிலார்
        பஞ்சமோ பஞ்சம் என்றே - நிதம்
            பரிதவித்தே உயிர் துடிதுடித்துத்
            துஞ்சி மடிகின் றாரே - இவர்    
            துயர்களைத் தீர்க்கவோர் வழியிலையே”
                            (பாரதியார் கவிதைகள் பக்.35,36)

எனத் துடிதுடிக்கின்றார் பாரதி.

    கல்வி அறிவு இல்லாமையால் எத்தனையோ மனிதர்கள் வாழ்வில் மடமையிலும் வறுமையிலும் துன்பப்பட்டுக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு அறிவு புகட்டினால், கீழ்நிலையில் வாழும் மக்கள் அனைவரும் மேனிலை எய்துவர் எனப் பாரதி கணிக்கிறார்.

‘வெள்ளத்தின் பெருக்கைப் போல்
கலைப் பெருக்கும்
கவிப் பெருக்கும் மேவுமாயின்
பள்ளத்தில் வாழ்ந்திருக்கும்
குருடரெல்லாம் விழி பெற்றுப்
பதவி கொள்வார்”  (பாரதியார் கவிதைகள் ப.45)

என உறுதி கூறுகிறார்.     

பாரதியார் ‘சக்கரவர்த்தினி” இதழில் மக்களுக்கு விழிப்பூட்டும் கருத்துக்களை அவ்வப்போது எழுதி வந்துள்ளார்.

    ‘இந்நாட்டு மாதர்கள் கல்வியும் ஞானப்பரப்பும் மிகப் பெற்று ஓங்கி, அவர்கள் வயிற்றிலே பிறக்கும் மக்கள் நோய்நீங்கிய உடலும், இருள்நீங்கிய அறிவும், பெருந்தன்மையும், கருணையும், அடிமை நிலையில் வெறுப்பும் கொண்டு விளங்கத் தொடங்குவராயின், பாரதாம்பிகையின் மனத்துயர் ஆறத் தொடங்கும்” (சீனி விசுவநாதன் மகாகவி பாரதி வரலாறு, ப.175)(சசக்கரவர்த்தினி 1906 சனவரி, பக்கம் 125) என்ற பாரதியின் உரை அவருடைய மானுடநேயத்தை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்த்துகிறது.

வறுமையைப் போக்க வழி
    சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகளுக்கெல்லாம் காரணமே வலியவர்கள் எளியவர்கள் மேல் செலுத்தும் ஆளுமைதான். துன்பத்தில் உழல்வோரைக் கண்டு எவ்வித உதவியும் செய்யாது வேடிக்கை பார்க்கும் உலகமிது. ஒருவர் பங்கை இன்னொருவர் திருடுவது பாவம். ஒருவர் உணவை மற்றொருவர் பறிப்பது நியாயம் ஆகுமா? இனியாவது இக்கொடுமை தீரவேண்டும். மனிதர்க்குள் நேயம் மலர வேண்டாமா? எனக் கேட்கிறார் பாரதி.

    ‘மனிதர் உணவை மனிதர் பறிக்கும்
        வழக்கம் இனியுண்டோ?
     மனிதர் நோக மனிதர் பார்க்கும்    
        வாழ்க்கை இனியுண்டோ?”
                    (பாரதியார் கவிதைகள் ப.39)

எனத் தான் காண விரும்பும் வளமான பாரத சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என வரையறுக்கிறார்.

    ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு
        வாழும் மனிதருக் கெல்லாம்
     பயிற்றிப் பலகல்வி தந்து - இப்
        பாரை உயர்த்திட வேண்டும்”
                    (பாரதியார் கவிதைகள் ப.201)

என அனைவருக்கும் உணவையும் கல்வியையும் தரவேண்டும் என வற்புறுத்துகிறார் மகாகவி. அப்படி நடவாமல் பசியோடு ஒருவன் இருந்தாலும்கூட இவ்வுலகையே அழித்திடுவோம் எனச் சூளுரைக்கிறார்.

    ‘இனியொரு விதி செய்வோம் - அதை
        எந்த நாளும் காப்போம்
    தனியொருவனுக் குணவிலை யெனில்
        சகத்தினை அழித்திடுவோம்”
                (பாரதியார் கவிதைகள் ப.39)

எனும் கனல் வரிகள் இப்பேருலகில் ஒருவன் கூடப் பட்டினி கிடக்கக் கூடாது என்ற அவாவையும் அடிமனச்சீற்றத்தின் வழி புலப்படுத்துகிறார்.

நேசத்துடன்  இணங்கு

    கடவுள் ஒருவரே என்பதில் உறுதியாக இருந்த பாரதி ‘ஆயிரம் தெய்வம் உண்டென்று கூறி அலையும் அறிவிலிகான்;” என ஏசுகிறார்.

    ‘நமக்கினித் தெய்வம் ஒன்றிடக் கேண்மின்
    ஒன்றாம் கடவுள் உலகிடைத் தோன்றிய
    மானிட ரெல்லாம் சோதரர் மானிடர்    
    சமத்துவம் உடையார் சுதந்திரம் சார்ந்தவர்”
                        (பாரதியார் கவிதைகள் ப.86)

என்று கூறி சமயங்களுக்குள் வரும் சண்டைகளைச் சாடினார் பாரதியார்.

    மதத்தின் பெயராலும் கடவுளின் பெயராலும் ஆதிகாலம் தொட்டே போர்களும் கலவரங்களும் நடந்துகொண்டே இருக்கின்றன. எல்லாச் சமயங்களும் ஒரே இறைவனையே கூறுகின்றன என்பதை உணராதவர்கள் நாட்டையே குருதிக் காடாக மாற்றிவிடுவார்கள். மானுடம் தொடர்ந்து காயம்பட்டுக் கண்ணீர்விட்டுக் கொண்டே இருக்கிறது. மக்களிடையே சமத்துவமும் சகோதரத்துவமும் மலர வேண்டும் என்று விரும்பிய பாரதியார்,

    ‘தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
        தீயை வளர்ப்பவர் மூடர்
    உய்வத னைத்திலும் ஒன்றாய் - எங்கும்         
        ஓர்பொருள் ஆனது தெய்வம்”
                (பாரதியார் கவிதைகள் ப.199)

என தெய்வத்தின் பெயரால் பகைமையை வளர்ப்பவர்களை மூடர்கள் எனச் சாடுகிறார்.

    பாரதியின் பரந்த மனம் மனிதர்களையும் தாண்டி அனைத்துயிர்களின் மேலும் பாசத்தைப் பொழிகின்றது. மனைவி செல்லம்மாள் சமையலுக்கு வைத்திருந்த அரிசியை எடுத்துச் சிட்டுக் குருவிகளுக்குப் போட்டதும், கடையத்திலிருந்த காலத்தில் கழுதைக்குட்டியை வாரியணைத்து முத்தமிட்டதும் பாரதியின் அருளன்புக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

    ‘காக்கை குருவி எங்கள் சாதி - நீள்
    கடலும் மலையும் எங்கள் கூட்டம்”
                (பாரதியார் கவிதைகள் ப.177)

என்று பறவைகளையும் நம் உறவுதான் எனப் பாடிக் களிக்கின்றார்.

    தாயுமானவரும் ‘எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே” என்பார். எல்லா மக்களும் அன்புடன் இணங்கி வாழவேண்டும் என்ற வேட்கை கொண்ட பாரதி,
    
‘மண்மீ துள்ள மக்கள் பறவைகள்
    விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
    யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே
    இன்பமுற் றன்புடன் இணங்கிவாழ்ந் திடவே
    செய்தல் வேண்டும் தேவ தேவா”
                (பாரதியார் கவிதைகள் பக், 98,99)

என இறைஞ்சுகிறார்.

    ஓரறிவுயிர் முதல் ஆறறிவுடைய மனிதஇனம் வரை அனைத்தும் இன்பமுடன் வாழவேண்டும் என்பதே பாரதியின் பேரவா. எழுதுதல் எல்லோர்க்கும் எளிது. அதன்படி இயங்குதல் இயலுமா? என வினா எழுவது இயற்கையே.

    குளிரில் நடுங்கும் மயிலுக்குப் போர்வை தந்த பேகனையும், கொழுகொம்பின்றி ஆடிக் கொண்டிருந்த முல்லைக் கொடிக்குத் தான் ஏறிவந்த தேரினைக் கொடுத்த பாரியையும், வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரையும் தமிழுலகம் கண்டிருக்கிறது. எனின் பாரதியும் பால் கடந்த, நிலவரைவு கடந்த, மானுடம் கடந்த நேயத்தைப் பல்வேறு இடங்களில் பதிவு செய்திருக்கிறார்.

    ‘பூமண் டலத்தில் அன்பும் பொறையும்
    விளங்குத் துன்பமும் மிடிமையும் நோயும்
    சாவும் நீங்கிச் சார்ந்தபல் லுயிரெலாம்
    இன்புற்று வாழ்க என்பேன்”
                (பாரதியார் கவிதைகள் ப.99)

என பாரதி கூறும்போது இயற்கை நெறியான இறப்புகூட மக்களுக்கு இடும்பை தரக் கூடாது என்ற இளகிய மனம் நம்மை வியக்க வைக்கிறது.

    ‘மண் பயனுற வேண்டும்    
        வானகம் இங்கே தென்பட வேண்டும்”
                        (பாரதியார் கவிதைகள் ப.178)

என்பதே மகாகவியின் முதன்மை இலக்காக இருப்பதை உணரலாம்.

    கொள்கையிலும் வழிபாட்டிலும் வடிவத்திலும் வேறுவேறு விதிகள் கொண்ட எம்மதத்திலும் பாரதிக்குச் சம்மதம் இல்லை. உடலை வருத்தி இறைவனை வழிபாடு செய்வதிலும் அவருக்கு உடன்பாடு இல்லை. ‘அன்பு” எனும் என் மதத்தை மட்டும் கடைப்பிடியுங்கள்; உய்யலாம் வாழ்வில் என்கிறார்.

    ‘யானெதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே நீவிர்
    என்மதத்தைக் கொண்மின் பாடுபடல் வேண்டா
    ஊனுடலை வருத்தாதீர் உணவியற்கை கொடுக்கும்
    உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்”
                        (பாரதியார் கவிதைகள் ப.169)

என்று பாடும்போது எந்த மதவாதங்களுக்கும் உடன்படாத அஞ்சாத பாவலனின் நெஞ்சுரமும் நேயமும் வெளிப்படுகிறது.

முடிவுரை
பாரதியாரின் நாட்டுணர்வு எல்லா உயிர்க்கும் இரங்கும் இனிய உள்ளம், வறுமையில் உழல்வோர் நிலைக்கு இரங்கும் உள்ளம், வறுமையை அகற்றிட துடித்த துடிப்பு முதலியன விளக்கப்பட்டுள்ளன.

கல்வியின் அவசியத்தையும் அந்த எண்ணத்தை மக்களிடையே  ஊட்டி பாடியதுடன் நம் நாட்டில் நிலவும் சாதிமத வேறுபாடுகள், எதற்கெடுத்தாலும் அஞ்சும் நிலை, வலிய மனிதர்கள் எளியவர்களைச் சுரண்டி, வறுமை என்னும் கொடிய நோய் போக்க, மக்களுக்குள் ஒற்றுமையின்மை  முதலியவற்றைக் கடுமையாகச் சாடியுள்ளார் என்பதையும். இவர் தன் பாடல்களில் மனித உயிரி நேயத்தைப் பற்றி அதிகமாக கையாளப்பட்டுள்ளதையும் அலசி ஆராயப்பட்டுள்ளது. இதனைப் படிப்போர் உளம் அறிவர்.

பயன்பட்ட நூல்கள்

1. டாக்டர் ஆ.ஜெகந்நாதன்
'பாரதிதாசனில் மார்க்கியம்',
அகரம் வெளியீடு,
15 பி-1 சரவணா காம்ப்ளக்ஸ்,
வெள்ளப் பண்டாரம் தெரு,
கும்பகோணம்,
முதற்பதிப்பு நவ.1996.

2. சீனி விசுவநாதன்     'மகாகவி பாரதி வரலாறு'
2, மாடல் ஹவுஸ்
லேன், சி.ஐ.டி. நகர்
சென்னை – 600 035

3. பாரதியார் 'பாரதியார் கவிதைகள்'
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
7, போயஸ் சாலை (எ;’.எம்,கார்டன்)
தேனாம்பேட்டை
சென்னை -18

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.