இயங்குதலே உயிரிகளின் அடிப்படை. மானுடசமூகத்தின் தொடர் இயக்கமே இன்று அதை பண்பட்ட சமூகமாக வளர்த்தெடுத்துள்ளது எனலாம். ஒரு சமூகத்தின் இயங்குநிலை பல்வேறு மரபுகளையும், பண்பாட்டுக் கலாச்சாரக் கூறுகளையும் உட்செறித்தது. அந்த இயங்குநிலைக்குத் தக்கச் சான்றாக சடங்குகள் விளங்கி வருகின்றன. ஒரு சமூகத்தின் மரபார்ந்த சடங்கின்வழி அதன் நெடிய இயக்கத்தினை அறிந்துக் கொள்ளவியலும். மேலும், சமூக இயக்கத்தின் நிலைச்சான்றாகவும் சடங்குகளைக் கொள்ளலாம். அவ்வகையில் நீலகிரியில் வாழும் பூர்வகுடி மக்களான படகர்களின் மரபார்ந்த சடங்குகளுள் ஒன்றான “உப்பு ஹட்டோது” (ஹட்டோது – ஊற்றுதல்) எனும் உப்புச் சடங்கினை இயக்கவியல் நோக்கில் ஆராய்வதை மையநோக்கமாகக் கொண்டு இவ் ஆய்வுக்கட்டுரை அமைகின்றது.

இயக்கவியலைப் புரிந்துக்கொள்ள முனையும்போது, “இயக்கவியல் என்பது விசியங்களை ஆராய்ந்து அறியாமலேயே விளக்குவதும், புரிந்துக்கொள்வதுமாக ஏற்பட்ட சாதனமல்ல. ஒரு விசயத்தின் ஒரு பொருளின் ஆதியென்ன?, அந்தமென்ன. அது எங்கிருந்து வந்தது, எங்கே போய்க் கொண்டிருப்பது என்று பரிசோதிப்பதற்கு வாய்த்திருக்கும் சாதனம். சிறந்த ஆராச்சிக்கு வாய்த்திருக்கும் சாதனம்” எனும் ஜார்ஜ் பொலிட்சரின் கூற்றை ஆழ்வதும், அணுகுவதும் அடிப்படையானதாகும்.

பொலிட்சரின் கூற்றினையொட்டி படகர்களின் மரபார்ந்த உப்புச்சடங்கினை அதன் ஆதி, அந்தம் அதாவது சடங்கியல் மற்றும் நோக்கநிலையின் ஆதி அந்தங்கள், அது எங்கிருந்து வந்தது?, அதாவது அதன் தோற்றநிலையின் காரண காரியம், அது எங்கே போய்க்கொண்டிருக்கின்றது? அதாவது அதன் பயன் ஆகிய கூறுகளின் அடிப்படையில் நோக்கும்போது அவ்வினத்தின் தொன்மையினையும், நீலகிரியில் அவர்களின் நெடுங்காலத்தைய இயக்கத்தையும் அறிந்துக் கொள்ளவியலும்.

உப்பும் படகர்களும் -

படகர்களின் உப்புச்சடங்கினைப்பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பாக அவர்களுக்கும் உப்பிற்கும் உள்ள உறவினை அறிந்துக்கொள்வது அவசியமானதாகும். நீலகிரிக்கு உப்பினை அறிமுகப்படுத்தியவர்கள் படகர்கள் எனலாம். அதுவும் தம் வாழ்வியல் இயக்கத்தின் பாற்பட்டு அவர்கள் தம் வாழ்வில் தேவைக்கருதி சேர்த்துக்கொண்ட பொருளிதுவாகும். உப்பினை ‘உப்பு’ என்றே அழைக்கும் படகர்களுக்கு உப்பு மரபுப்பொருளல்ல. தம் ஆநிரை வளர்ப்பிற்காக பிற்காலத்தில் வருவித்த பொருளாகும். இதை “பேசெகெயோ மாச கண்டு திந்தமனு, கிருனோகெ உப்பக் கண்டுத் திந்தமனு ஜாணா” (பேசெகெ – வெயில்காலம், மாசு – வரமிளகு, கண்டு திந்தமனு – கிடைத்து உண்டவனும், கிருனோகெ – மழைக்காலம், உப்பக் கண்டு திந்தமனு – உப்புக் கிடைக்கப்பட்டு உண்டவனும், ஜாணா – கெட்டிகாரன்) எனும் படுகு முதுமொழியொன்றின் மூலம் நன்கு உணரலாம். சிவப்புமிளகினைக் கொண்டு குழம்புத்தூள் உருவாக்கியதும், உப்பினை உணவில் இட்டுப் பயன்படுத்தியதும் படகர்கள் பிற்காலத்தில் பழகியவொன்றாகும். இந்த வரமிளகு மற்றும் உப்பிற்காக மட்டுமே படகர்கள் சமவெளியை நாடவேண்டிய அவசியமிருந்தது. அதுவும் இது தம் வாழ்வியல் இயக்கத்தினை தம் வாழ்களத்திற்கு வெளியே விரிவுப்படுத்திய நிலையில் உருவானதாகும்.

படகர்களின் சடங்கார்ந்த எல்லா படையல்களும் உப்பின்றி அமைவதும், உப்புச்சடங்கினைத் தவிர்த்த அவர்களின் பிற மரபார்ந்த சடங்குகளில் உப்பின் தேவையின்மையும், உப்பின்மீது தம் வாழக்காறுகளில் புனிதத்தன்மையைக் கட்டமைக்காமையும், மரபார்ந்த இந்த உப்புச்சடங்கார்ந்து அனைவராலும் புனிதப்பொருளாக கருதப்படும் உப்பினையே புனிதப்படுத்தும் போக்கும், அவர்தம் வாழ்வியலில் உப்பின் தன்மைக்கும் சுவைக்கும் ஈடாகும் தாவரங்கள் மற்றும் காய்கள் பற்றிய அறிவும், பயன்பாடும் படகர்களின் வாழ்வியலில் உப்பின் பயன்பாடு மரபானதல்ல என்பதை உறுதிப்படுத்துகின்றது.

உப்பின்மீது படகர்கள் கொண்டுள்ள மதிப்புநிலையானது அது கிடைப்பதன் அருமைக்கருதி மட்டுமே கட்டமைக்கப்பட்டதாக திகழ்கின்றது. “ஊட்டகில்லாத உப்பு ஒல்லா. கவ இல்லாத கோ ஒல்லா” (ஊட்டகில்லாத உப்பு – உணவிற்கில்லாத உப்பு, ஒல்லா – சரியில்லை, கவ இல்லாத – அன்பு இல்லாத, கோ – அழுகை) எனும் படகு முதுமொழியொன்று படகர்களிடமுள்ள உப்பின் மதிப்பினை வெளிப்படுத்துகின்றது. இந்த முதுமொழியின் “ஊட்டகில்லாத உப்பு ஒல்லா” எனும் வார்த்தைகள் “கவ இல்லாத கோ ஒல்லா” எனும் வார்த்தைக்காக, இம்முதுமொழியின் ஒலிமைக்காக ஆக்கப்பட்டிருக்கலாம். இல்லை, படகர்களின் வாழ்வில் உப்பின் புழக்கத்திற்குப் பிற்பட்டு உருவானதாக இருக்கலாம். ஏனெனில் தம் அன்றாட வாழ்வில் உணவிற்காககூட உப்பின் அவசியம் படகர்களுக்கு ஏற்படவில்லை. “உல்லு மஜிகெ”, “கைம்மெ சொப்பு”, “கைம்மெ கெ” போன்ற தன் வாழ்க்களத்தில் கிடைக்கும் உப்பு மற்றும் புளிப்பின் சுவைக்கொண்ட இயற்கைப்பொருட்களைக் கொண்டு அவர்தம் உணவுகளில் உப்பின் சுவையை ஈடுசெய்தனர்.

“உப்பக்கி ஈசோது” (தம் கோயில் மந்தைகளுக்காக உப்பினைப் பெறுதல்), “உப்பு இடப்பது” (திருமணத்தின்போது உப்புப் பிடித்தல்), “உப்பு அட்டோது” (உப்பு ஊற்றும் சடங்கு) போன்ற சடங்குகள் உப்பினை மையமிட்டு படகர்களிடம் வழக்கிலுள்ளவை. இவை அனைத்தும் உப்பின் மீ தேவைக்குப் பிறகே அவர்களிடம் வந்தது எனலாம். சான்றாக திருமணத்தின்போது “உப்பு இடப்போது” எனும் சடங்கு மற்ற இடங்களில் இருப்பதைப்போல உப்பினைச் சாட்சியாகவைத்து திருமணத்தினை உறுதிப்படுத்தும் நோக்கத்தில் அமைந்ததல்ல. திருமண விருந்திற்காகவோ, திருமணப் பெண்ணிற்குப் பிறந்தகத்தார் விரும்பி அளிக்கும் ‘அடோலி’ எனும் எருமைகளுக்காக தேவைப்படும் உப்பிற்காகவோ பெற்றுத்தருவதாக அமைந்துள்ளது. உணவார்ந்து உப்பின் தேவையை அறியாத இவர்களிடம் எருமைகளுக்கானதாகவே உப்பின்தேவை அமைந்திருந்தது என்று துணியலாம். அதேபோல “உப்பக்கி ஈசோது”, “உப்பு அட்டோது” ஆகிய சடங்குகளும் கால்நடைகளுக்கான உப்பின் தேவையடிப்படையிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்ததாகும். எனவே படகர்களிடம் உப்பின் தேவையானது தம் ஆதிவாழ்முறையான எருமைமந்தைகள் பராமறிப்பார்ந்தே ஏற்பட்டது எனலாம். மேலும் இது சமவெளியின் தாக்கத்தால் ஏற்பட்டதாகவும் கருத இடமுண்டு.

நீலகிரியும் உப்பும் -

படகர்கள் நீலகிரிக்கு உப்பினை அறிமுகப்படுத்தியது அவர்கள் “தலெயசீமெ” என்றும் “கொடலூரு” என்றும் அழைக்கின்ற இன்றைய கூடலூரிலுள்ள “உப்பட்டி” எனும் படகர்களின் ஊரிலிருந்து எனலாம். இந்த மரபார்ந்த ஊரின்பெயரே இதனை உறுதிப்படுத்துகின்றது. மேலும் படகர்களின் வாழ்க்களமான நீலகிரிக்குத் தலைப்பகுதியாக அமைந்திருப்பதால் இதை தலையசீமெ என்றும், கடல்மட்டத்திலிருந்து குறைந்த உயரம்கொண்டு பள்ளத்தில் அமைந்திருப்பதால் “கொடலூரு” என்றும் (“கொட” என்றால் படகுமொழியில் பள்ளம் என்று பொருள்) இப்பகுதியைப் படகர்கள் ஆதியிலிருந்து நிலவியல் அடிப்படையில் பெயரிட்டு அழைத்து வருகின்றனர். இப்பகுதிக்கு இன்று நிலவும் கூடலூர் என்ற பெயருக்கு ஆதிப்பெயராக படகர்களின் “கொடலூரு” என்ற பெயர் அமைந்திருக்கலாம். “கொடலூரு” என்பதே கூடலூரு என்று மருவியிருக்கலாம். ஆனால் படகர்கள் இவ்விடத்தை “கொடலூரு” என்றே அழைக்கின்றனர். மேலும் இன்றைய இவ்விடத்தின் பெயரான கூடலூர் என்பதற்கும் பொருந்தக்கூடிய வழக்காறொன்று படகர்களிடமுண்டு.

சந்திரமானக் கணக்கினை அடிப்படையாகக் கொண்ட படகர்களின் மாதக்கணக்கில் முதல் மாதம் “கூடலு” என்றும், இறுதி மாதம் “ஹெம்மாட்டி” என்றும் அழைக்கப்படுகின்றது. படகர்களின் இந்த பெரும்பொழுதின் ஆக்கம் முழுதும் அவர்களின் வாழ்வியலோடு தொடர்புடையவை. அவர்களின் “ஹெம்மாட்டி” மாதத்தில் அவர்தம் வாழ்க்களப்பகுதியில் கடும் பனிப்பொழிவு நிலவும். அவ்வேளையில் ஆநிரைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும், கால்நடைகளுக்கான புல்பரப்புகளும் கடும்பனிப்பொழிவினால் பெரிதும் பாதிப்பிற்குள்ளாகும். மேலும், இக்கடுங்குளிரில் ஆநிரைகளைப் பராமறிப்பதும் சவலானவொன்றாகும். எனவே இப்பருவத்தில் தம் எருமை மந்தைகளை தம் வாழ்க்களத்தைவிட கடல்மட்டத்தில் குறைந்த உயரமுடைய, சற்று வெப்பமான காலநிலையினைக் கொண்ட தம் “தலெயசீமைக்கு” ஓட்டிச் செல்கின்றனர். அங்கு தம் முன்னோர்கள் இம்மரபார்ந்த பயணத்திற்கென்று அமைத்துள்ள “எம்மாட்டி” எனும் எருமைமந்தைகளுக்கான ஊர்களில் தங்கி மந்தைகளைப் பராமறித்து, பனிப்பொழிவுக்காலம் கடந்ததும் தம் வாழ்க்களத்திற்கு ஓட்டிவருவதுண்டு. இது இவர்களின் ஆதிவாழ்வியல் சார்ந்த, கால்நடைப்பேணல் சார்ந்த மரபார்ந்தப் பயணமாகும். குறிப்பாக படகர்களின் முதல் மாதமான “கூடலு” மாதத்தில் அனைவரும் தம் எருமை மந்தைகளுடன் கூடியுள்ள இடமாக இவ்விடம் இருந்தமையால் இவ்விடத்திற்கு “கூடலூர்” எனும் பெயர் வந்திருக்கலாம். அவ்வகையில் நோக்கும்போது அனைவரும் “ஹெம்மாட்டிப்” பயணத்திற்காக கூடியுள்ள ஊர் என்றும், “கூடல்” மாதத்திற்குரிய ஊர் என்றும் காரணக்காரியத்தோடு இப்பெயர் பொருந்திப்போவதைக் காணலாம். இன்று இவ்விடம் கேரளம், கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களும் இணையும்பகுதி என்ற அடிப்படையில் கூடலூர் என்று இதன்பொருள் கொள்ளப்பட்டாலும் இதன் ஆதிப்பொருளாக படகர்களின் வழக்காறுகளே விளங்குவதாக கருதலாம். இதற்கு அவ்விடங்களுக்குப் படகர்கள் இட்டுள்ள பெயர்களின் அன்றைய நிலவியல் மற்றும் பண்பாட்டு ஒப்புமைக்கூறுகள் மேலும் வலுசேர்க்கின்றன. படகர்கள் தாங்கள் வாழ்ந்துவந்த நிலப்பகுதிக்குத் தாம் காடோடி மற்றும் வேட்டைச்சமூகமாக இருந்தபோதும், பின் கால்நடைச்சமூகமாக இருந்தபோதும் சென்று தங்கிய, தங்குவதற்கான அமைப்புடனேயே எல்லைகளை வரையறுத்துள்ளனர். அவை இன்றும் படகர்களால் நிர்வகிக்கப்படுகின்ற வனக்கோயில்களாகத் திகழ்கின்றன. அவ்வகையில் “கொடலூரு” பகுதியில் “பொக்கெபுர”, “மாசினிகுடி”, “ஆனெகல்லு”, “சிரியூரு” போன்ற படகர்கள் வரையறுத்த எல்லைகள் இன்று வனக்கோயில்களாக மாறியுள்ளன. படகர்களின் இக்கோயில்களும் தலெயசீமைக்கான படகர்களின் உறவினை நன்கு வெளிப்படுத்துகின்றன. இந்தக் கோயில்கள் இன்றும் படகர்களால், அங்குவாழ்கின்ற பிற பழங்குடியின மக்களின் உதவியோடு நிர்வகிக்கப்படுபவையாக விளங்குவது குறிப்பிடத்தக்கதாகும்.

படகர்கள் தம் எருமை மந்தைகளுக்குக் கோடைக்காலத்திலும், நீண்டப் பயணத்தின் போதும் “நம்மைவிட அதிக எடைகொண்டமையால் பண்ணை விலங்குகளுக்கு நாம் பயன்படுத்துவதைவிட அதிக அளவு உப்பு தேவைப்படுகிறது. கோடைகாலங்களில் வியர்வையின் வாயிலாக உப்புச்சத்து அவற்றின் உடலில் இருந்து வெளியேறுவதால், இந்த இழப்பை ஈடுசெய்யும் வழிமுறையாக அவை சுவரை நக்குவதை காணலாம்” (உப்பிட்டவரை, ஆ.சிவசுப்பிரமணியம்) எனும் கூற்றிற்கு இணங்க தம் எருமை மந்தைகளுக்கு உப்பினை அளிக்கும் வழக்கினைக் கொண்டிருந்தனர். பனிப்பொழிவின் காலத்தில் பகல்பொழுதில் கடுமையான வெயில் நிலவும். இப்பருவத்தில் நீலகிரியில் நிலவும் வெயில் தோலினைக் கருக்கச்செய்யும் தன்மையுடையது. எனவே இந்த வெயிலினால் ஆநிரைகளுக்கு ஏற்படும் வியர்வையிழப்பைச் சரிக்கட்டவும், மேலும், பனியால் வரண்டுப்போன புற்களை உண்பதால் ஆநிரைகளுக்கு ஏற்படும் ஒருவிதமான அடைஎரிப்பு நோய்க்கு நாசினியாகவும் உப்பினைத் தம் மந்தைகளுக்கு அளிக்கின்றனர்.

உப்பின் வரத்திற்கு முன்பும் இவ்வழக்கினைக் கையாண்ட படகர்கள் பிற்காலத்தில் உப்பின் அறிமுகத்திற்குப்பிறகு உப்பினை இச்சடங்குடன் சேர்த்துக் கொண்டனர் எனலாம். தம் உடலின் உப்பின் தேவைக்காக உப்புத்தன்மைக்கொண்ட ஒருசில பாறைகளை எருமைகள் தம் நாவல் நக்குவதை அனுமதித்து, அச்செயல்பாட்டிற்காகவே அப்பாறைகளுக்கு அருகில் மந்தைகளை அழைத்துச்சென்றது, தம் மந்தைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள “தோ” எனும் வட்டவடிவக் கல்லினால் கட்டப்பட்பட்ட இடத்தை, அத்தகு உப்புத் தன்மைக்கொண்ட கற்களைக் கொண்டுவந்து சேர்த்து கட்டியது, “உப்புக் கெ” எனும் உப்புத் தன்மை மிகுந்த காயினை உடைத்து உப்பிற்குப் பதிலாக உப்புச்சடங்கில் பயன்படுத்தியது போன்ற கூறுகள் உப்பின் அறிமுகத்திற்கு முன்பாகவே தம் மந்தைப்பராமறிப்பில் உப்பிற்குரிய சத்தினை மந்தைகளுக்குப் படகர்கள் அளித்திருந்ததற்குச் சான்றுப் பகர்கின்றன. இது மந்தைப் பராமறிப்பில் உப்பின் தேவைக்குறித்த மற்றும், உப்பின் தன்மையை ஈடுசெய்யும் தம் வாழ்களத்தில் மரபார்ந்து விளங்கிய இயற்கை வழக்காறுகள் குறித்த படகர்களின் மரபறிவிற்கும் தக்கச் சான்றாகும். எனவே இயக்கவியல் அடிப்படையில் நோக்கும்போது உப்பின் வரத்திற்கு முந்தைய படகர்களின் வாழ்வியல், உப்பின் வரத்திற்குப்பின்பான நிலை, மற்றும் இந்நிலை மாற்றம் இச்சடங்கின் பரிணாம நிலையா? இல்லை பரிமாண நிலையா? போன்ற பல நிலைகளை அலசவேண்டியுள்ளது.

படகர்களின் உப்புச் சடங்கு –

இயக்கவியலின் அடிப்படையில் படகர்களின் உப்புச் சடங்கினை ஆராய்வதற்கு முன்பாக அச்சடங்கின் செயல்முறையினைப்பற்றி அறிந்துக்கொள்வது அடிப்படையானதாகும். வருடத்தில் இரண்டுமுறை இந்த உப்பு ஊற்றும் சடங்கினைப் படகர்கள் நிகழ்த்துகின்றனர். இது அவர்களின் ஆநிரைசார்ந்த வாழ்க்கை சுழற்சியை அடிப்படையாகக் கொண்டவை. அவர்களின் மரபார்ந்த வாழ்வியலைத் தரித்தவை. வடக்கிழக்கு மற்றும் தென்மேற்குப் பருவமழையை அடிப்படையாகக் கொண்டு படகர்கள் தம் மழைபொழிவிற்கான பருவத்தைக் “கார்”, “கடெ” என்று இருபகுதிகளாக பகுத்துள்ளனர். இதை அடிப்படையாகக் கொண்டே தம் விதைப்பையும், விளைச்சலையும் கணிக்கின்றனர். விளைச்சலை நோக்கும்போது “கார் போக”, “கடெ போக” என்று பகுக்கின்றனர். அதேநிலையில் இந்த உப்புச் சடங்கினையும் “கார் உப்பு”, “கடெ உப்பு” என்று இருவகைப்படுத்துகின்றனர். இவை நாம் முன்னரே கண்ட படகர்களின் எருமை மந்தைகளுக்கான “ஹெம்மாட்டிப்” பயணத்தினை அடிப்படையாகக் கொண்டவை. இப்பெயர்களும் படகர்களுக்க உப்பின் அறிமுகத்திற்குப்பிறகே திரிந்திருக்கலாம். இதற்கான முந்தைய வடிவினை ஆராயும்போது “கார் சொருப்பு”, “கடெ சொருப்பு” எனும் வழக்காறுகள் கிடைக்கின்றன. உப்பின் அறிமுகத்திற்கு முன்பு இச்சடங்கின் பெயர் இதுவாக இருந்திருக்கலாம். “கடெமழை” நிறைந்தப்பிறகும், “கார்மழை” தொடங்கியப்பிறகும் படகர்கள் இச்சடங்கினை நிகழ்த்துகின்றனர்.

படகர்கள் தம் “ஹெம்மாட்டி” மாதத்தில் தம் எருமை மந்தைகளை அழைத்துச் செல்லும்போது “கடெ உப்பினை” ஊற்றுகின்றனர். “ஹெம்மாட்டிப்” பயணத்தை நிறைத்து திரும்பும்போது “கார் உப்பினை” ஊற்றுகின்றனர். உப்பினைக் கொண்டு நிகழ்த்தும் இச்சடங்கினைப் படகர்கள் “உப்பு ஹட்டோது” (“ஹட்டோது” – ஊற்றுவது), “உப்பு ஹப்பா” (“ஹப்பா” – திருவிழா) என்று இருநிலைகளில் அழைக்கின்றனர். ஒருவகையில் இச்சடங்கினைத் திருவிழாவாகவே கருதுகின்ற மனப்பான்மையும் இவர்களிடம் உண்டு. மேலும் “கடெ உப்பினை” தம் மரபார்ந்த நிகழ்வான “தொட்ட ஹப்பா” எனும் திருவிழாவோடு இணைத்து நிகழ்த்துவதுண்டு.

(உப்புச் சடங்கில் பங்கேற்கும் நபர்)

இச்சடங்கின் நிகழ்முறையை நோக்கும்போது முன்னிலையுறுவது ஆநிரைகளே. எருமை மந்தைகளையுடையவர்கள் தம் வீட்டிலோ அல்லது தம் கால்வழியில் முதலில் தோன்றிய வீடான “தொட்டமனெயிலோ” உள்ள நிலஉரலில் உப்பினையும், உலர்ப்பட்டாணிக் கடலையையும் இட்டு இச்சடங்கிற்கெனவே இருக்கும் “நுக்குசு ஆரே” எனும் சிறியளவிலான இரும்பு உலக்கையால் இடித்து உப்பினை ஓரளவிற்குத் துகளாக்குவர். அதை இச்சடங்கிற்கென சாணமிட்டு மெழுகிய “உப்புக் குக்கெ” எனும் கூடையில் இட்டு அதனுடன் ஆநிரைகளுக்கான புல்அரியும் “சொப்புக்கத்தி” எனும் சிறிய அரிவாளையும், “குடுக்கெ” அல்லது “மடக்கெ” எனும் மண்சட்டிகளையோ அல்லது வெண்கலம் அல்லது பிற உலோகங்களால் ஆன கலத்தையும் தன் வலதுகரத்தில் எந்திக்கொண்டு, காலையில் உணவு உண்ணாது தம் மந்தைகளை அழைத்துக்கொண்டு உப்புச் சடங்கினை நிகழ்த்தும் ஆற்றங்கரைக்குச் செல்கின்றனர். பொதுவாக வீட்டின் மூத்த ஆணே இச்சடங்கில் பங்கேற்பதுண்டு.

("கள்ளெ" எனும் உலர்ப்பட்டாணியை இட்டு புனிதப்படுத்தி உப்புக்கூடையில் எடுக்கப்பட்ட இச்சடங்கிற்கான உப்பு)

ஐந்து அல்லது ஆறாடி அகலத்தில், ஒரு அடி நீள மற்றும் ஆழத்தில் நீளவாக்கிலும், அதன் மேற்புறம் அரையடி ஆழம் மற்றும் விட்டத்தில் மூன்று சிறுகுழிகள் வடிவிலும் இச்சடங்கிற்கென அமைக்கப்பட்டிருக்கும் “உப்புக்குய்” எனும் உப்புக்குழிக்குச் சற்றுமேலே தான் கொண்டுச்சென்ற பொருட்களை வரிசையாக வைக்கின்றனர்.

(உப்புச் சடங்கிற்கான "உப்பு குய்" எனும் உப்புக்குழி)

கொண்டுச்செல்கின்ற ஆநிரைப் பராமறிப்பார்ந்த இப்பொருட்களை இச்சடங்கினை முன்னின்று நிகழ்த்துகின்ற நபர் வாங்கி வைப்பர். அனைவரும் வந்துச் சேர்ந்தப்பின்னர் ஊர்த்தலைவரோ அல்லது இச்சடங்கில் முன்னிலை வகிக்கும் அகவை முதிர்ந்த நபரோ தம் கையில் அணிந்திருக்கும் “முத்தரா” அல்லது “உங்கரா” எனும் வெள்ளி கையணியைக் கழற்றி தம் முன்னோர்களை நினைத்து, எருமையின் சாணத்தைவைத்து, அதன்மேல் தும்பை மலரினை இட்டு தூய்மைப்படுத்தியுள்ள உப்புக்குழியின் மேல் நடுப்பகுதியில் வைத்து, தம் மூதாதையர்களை அழைப்பதுடன் இச்சடங்குத் தொடங்குகின்றது.

(வரிசையாக வைக்கப்பட்ட உப்புக்கூடைகள்)

ஊர்க்கவுடர் தம் வலக்கரத்தில், அரிவாள்களும், கலன்களும் எடுக்கப்பட்டு வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் உப்புக்குடையிலிருந்து வலப்புறத்திலிருந்து இடப்புறமாக ஒரு பிடி உப்பினை எடுத்து அடுத்தக் கூடைக்கும், அடுத்தக் கூடையிலிருந்து உப்பினையெடுத்து அடுத்தக்கூடைக்குமென உப்பினை மாற்றிக்கொண்டே சென்று இறுதிக்கூடையிலிருந்து ஒரு கைப்பிடி உப்பினை எடுத்துக் கொள்வார். அவரைத்தொடர்ந்து மற்றவர்களும் இதைப்பின்பற்றி உப்பினை எடுத்துக்கொள்ள அனைவரும் இச்சடங்கு நிகழும் ஆற்றங்கரைக்குச் செல்கின்றனர். எல்லோரும் அவ்வாற்றங்கரையில் சூழ்ந்திருக்க ஊர்க்கவுடர் இச்சடங்கினை தம் மூதாதையர்களுக்கும், குலத்தெய்வத்திற்கும் அர்ப்பணிப்பார்.

(உப்புக் கூடையிலுள்ள உப்பினை மாற்றி எடுத்தல்)

தொடர்ந்து தம் கையிலுள்ள உப்பினை அவ்வாற்றில் இட மற்றவர்களும் அவ்வாறு இடுகின்றனர். பிறகு தாம் கொண்டுச் சென்ற கலன்களில் உப்பிடப்பட்ட அவ்வாற்றிலிருந்து நீரினைக் கொண்டுவந்து உப்புக்குழியில் ஊற்றுகின்றனர். குழி நிரம்பியதும் ஏற்கனவே செய்ததைப்போலவே கவுடர் முன்னிலைவகிக்க உப்புக்கூடையிலிருந்து உப்பினை மாற்றி எடுத்து ஆற்றில் இட்டதைப்போலவே உப்புக்குழிகளுக்கு இடுகின்றனர்.

(தம் உப்புச் சடங்கினை இயற்கைக்கும் தம் மூதாதையர்களுக்கும் சமர்ப்பித்து உப்பினை

ஆற்றில் இடுதல்)

பின்னர் தாம் அவ்விடத்திற்கு ஒட்டிச்சென்றிருந்த தம் எருமை மந்தைகளுக்கு அவ் உப்புநீரினை அளிக்கின்றனர். முதலில் அவ்வெருமை மந்தைகளைப் பாதுகாக்கும் “கோணா” எனும் ஆண் எருமைகளுக்கும் தொடர்ந்து மற்ற எருமைகளுக்கும் இந்நீரினை அளிக்கின்றனர். அம்மந்தைக்குத் தலைமை வகிப்பதனையொட்டி ஆண் எருமை இச்சடங்கில் முன்னிலைப் படுத்தப்படுகின்றது. ஒவ்வொரு எருமையும் குடித்து முடித்ததும் அவ் உப்புக்குழியிலிருந்து வலக்கரத்தில் சிறிதளவு நீரினையெடுத்து அதன் முகத்தில் தெளித்துத் தடவி தன் அன்பினை வெளிப்படுத்துகின்றனர்.

(ஆநிரைக்கு உப்பினை அளித்தல்)

அவரவர்கள் கொண்டுச்சென்ற உப்புக்கூடை, அரிவாள், கலன் ஆகிய பொருட்களை அச்சடங்கினை நிகழ்த்திக்கொடுத்தவர் எடுத்துத்தர அனைவரும் தாம் கொண்டுவந்த கலன்களில் உப்புக்குழியிலிருந்தும், ஆற்றிலிருந்தும் உப்புநீரினை எடுத்துக்கொண்டு அவ்விடத்திற்குப் பறித்து வந்திருந்த “தவட்டெ”, “உப்பே” ஆகிய தாவரங்களைப் பகிர்ந்தெடுத்து, தம் மந்தைகளை ஓட்டிக்கொண்டு “ஹாவ்.. ஹாவ்.. ஹாவ்..” எனும் தம் மங்கல ஒலியை முழங்கிக்கொண்டே இல்லம் அடைகின்றனர். இச்சடங்கினை நிகழ்த்திவந்த வீட்டின் மூத்த ஆண் வீட்டினுள் நுழையும்போது வீட்டின் உள்ளிலிருந்து அவ்வீட்டின் முதிர்ந்தப்பெண் “பண்டகோ எல்லாவு ஒள்ளங்கே உப்பு நீரு குடத்தவா?” (“பண்டகோ எல்லாவு” - மந்தைகளெல்லாம், “ஒள்ளங்கே” - நன்றாக, “உப்பு நீரு குடத்தவா - உப்பு நீரினை அருந்தினவா?) என்று கேட்பாள். அதற்கு அவ்வாண் “ஆ.. எல்லா சிங்கரா.. எல்லாவு ஒள்ளங்கே குடத்தோ” (“ஆ” – ஆம், “எல்லா சிங்கரா” – எல்லாம் நிறைவே, “எல்லாவு” – எல்லா எருமைகளும், “ஒள்ளங்கே” – நன்றாக, “குடத்தோ” – குடித்தன) என்று பதிலுரைப்பான். இவ்வாறு மூன்றுமுறை கேட்டு பதிலுரைத்தப்பின் அவர் வீட்டினுள் செல்வார்.

"தவட்டெ", "உப்பெ", "பெள்ளெ முள்ளி" ஆகிய தாவரங்களை காப்பாய் குறியீடாய் இடுதல்

அவ்வாறு இல்லத்தை அடைந்ததும் கொண்டுச்சென்ற நீரினை உரலினுள் வைத்து அதனை முறத்தால் மூடுகின்றனர். கொண்டுச்சென்ற தவட்டெ, உப்பெ ஆகிய தாவரங்களை உள்ளறையின் கூரையில் திணிக்கின்றனர். சில இடங்களில் “பள்ளெ முள்ளி கிடு” எனும் முள்தாவரத்தையும் இத்துடன் இணைத்து இடுகின்றனர். தொடர்ந்து உப்புச்சடங்கில் பங்கேற்றவர் தம் ஆகோட்டிற்குச் சென்று சாமையசிரியை இட்டு “ஒரெக்கூ” எனும் படையலுணவை எருமைகளுக்குப் படைப்பார். பிறகு இச்சடங்கினை நிகழ்த்தியவருக்காகவும், அவ்வீட்டின் பங்காளிகளுக்காகவும் மோரின் மேல்பரப்பில் வடிந்திருக்கும் நீரினைக்கொண்டு சாமைக்களிச் செய்தும், அவரையை வேகவைத்தும் அளிப்பர். அவ்வுணவில் இச்சடங்கு முடிந்தப்பிறகு, இச்சடங்கிற்கு எடுத்துச்சென்ற உப்புக்கூடெயில் இருந்த உப்பு இடப்படும். அவ்வீட்டில் அதற்குப்பிறகுத் தொடர்ந்து அவ்வுப்பு உணவிற்குப் பயன்படுத்தப்படும். ஆனால் அச்சடங்குநாளில் அச்சடங்கு நிறைவுறுவதற்கு முன்பு சமைக்கப்பட்டிருக்கும் உணவுகள் உப்பின்றியே ஆக்கப்பட்டிருக்கும். தொடர்ந்து “மேரெ தைகெ” எனும் இச்சடங்கிற்குரிய வெண்கலத்தட்டில் படைக்கப்பட்ட இவ்வுணவை வெண்ணையுடன் சேர்த்து இச்சடங்கில் பங்கேற்றவர் முன்னிலைவகிக்க வீட்டிலுள்ள பங்காளிகள் அனைவரும் ஒரே தட்டில் உண்பார். பிறகு அவ்வீட்டிலுள்ள மற்றவர்களும் அவ்வுணவினை உண்பர். நிறைவாக உரலிற்குள் வைக்கப்பட்டிருந்த உப்புநீரினை அச்சடங்கில் பங்கேற்ற நபர் கொண்டுச்சென்று தன் “தோவின்” உள்ளே சுவற்றில் தெளிப்பார். தொடர்ந்து தொழுவத்தின் எருக்குழியிலிருந்து ஒருகூடை சாணஎருவினைக் கொண்டுச்சென்று தன் விளைநிலத்தில் கொட்டுவதுடன் இச்சடங்கு நிறைவுறுகின்றது. தொடர்ந்து தம் வீட்டில் செய்த திணை மற்றும் பால்சார்ந்த பலகாரங்களை அனைவரின் இல்லங்களுக்கும் சென்றும் பகிர்ந்தளிப்பார். அன்றைய நாள் ஊரிலுள்ளவர்கள் அனைவரின் இல்லங்களுக்கும் சென்று பலகாரங்களை உண்டு, மோர் அருந்திவருவது கட்டாயமாகும். “ஹெம்மாட்டிக்கு” செல்வதற்கு முன்பு நிகழ்த்துகின்ற “கடெ உப்பு” மேற்கண்ட நிகழ்வுகளோடு ஒத்திருக்கும். ஆனால் “ஹெம்மாட்டிப்” பயணம் நிறைந்து அவ்விடத்திலேயே ஊற்றப்படும் “கார்உப்பில்” எருமைகளுக்கு உப்பு ஊற்றுவது மட்டும் இடம்பெற்றிருக்கும். ஹெம்மாட்டியின் வழக்கம் அருகிப்போனபின்பு சில ஊர்களில் “கடெஉப்பு” ஊற்றுவதைப்போலவே “கார்உப்பினையும்” ஊற்றுகின்றனர்.

(உப்புக் குழியிலிருந்து உப்புத் தண்ணீரைக் கொண்டுச் செல்லுதல்)

இயக்கவியலும் படகர்களின் உப்புச் சடங்கும்

நாம் முன்னரே கண்டதைப்போல இயக்கவியல் அடிப்படையில் படகர்களின் உப்புச்சடங்கினை நோக்கும்போது அதன் ஆதி, அந்தம், அது எங்கிருந்து வந்தது, எங்கே போய்க்கொண்டிருக்கின்றது போன்ற கூறுகளை ஆராயவேண்டும்.

படகர்களின் உப்புச் சடங்கின் ஆதி –

படகர்களின் உப்புச் சடங்கின் ஆதியை இரண்டு நிலைகளில் கொள்ளவேண்டும். அதோடு இச்சடங்கு எங்கிருந்து வந்தது என்பதற்கும் இதன் ஆதியை அறியும் நிலையிலிருந்தே விடைக்காணலாம். அவ்வகையில் இந்த உப்புச்சடங்கினை முன்னரே கண்டதைப்போல படகர்களுக்கு உப்பின் அறிமுகத்திற்கு முன், பின் என்ற இரண்டு நிலையில் நோக்கவேண்டும். உப்பின் அறிமுகத்திற்கு முன்பே இச்சடங்கு நிகழ்ந்திருந்ததா? என்பதற்கு விடைக்காண படகர்களின் வாழ்வியல் பரிமாணத்தை நோக்க வேண்டியுள்ளது. நீலகிரியில் காடோடி மற்றும் வேட்டைச் சமூகமாகவும் பிறகு எருமை மந்தைகள் சார்ந்தும், பின்னர் எருமைகளோடு, வேளாண்மையையும் ஒருங்கிணைத்த வாழ்வியலைப் படகர்கள் கட்டமைத்தவர்கள். இதற்குரிய பல சான்றுகளுண்டு. அவ்வகையில் படகர்களின் “பநா”, “பலெ” போன்ற மரபார்ந்த சடங்குகள் அவர்களின் காடோடி மற்றும் வேட்டைச்சமூகம் சார்ந்த ஆதி வாழ்விற்கான சான்றுகளாக, தொல்லெச்சங்களாக விளங்குகின்றன.

காடோடி மற்றும் வேட்டைச்சமூகத்திற்கு அடுத்தநிலையில் எருமைமந்தைகள் சார்ந்த படகர்களின் வாழ்வியல் பரிமாணமும் கணிக்கவியலாததாகும். காடோடியாகவும், வேட்டைச்சமூகமாகவும் தொடங்கிய படகர்களின் இயங்குதல் ஆநிரை பராமறிப்பார்ந்ததாக பரிணமித்தபோது இந்த உப்புச்சடங்கும் அடுத்தநிலைக்குப் பரிணமித்திருக்கலாம். இவர்கள் காடோடிகளாக வாழ்ந்திருந்தபோதே காலநிலை மற்றும் வாழ்வியலிற்கான கூடுகையை நோக்கமாகக் கொண்ட இச்சடங்குத் தோன்றியிருக்கலாம் என கருத இடமுண்டு.

படகர்கள் கட்டமைத்துள்ள, வரையறுத்துள்ள காலநிலையானது ஆநிரை வாழ்வு மற்றும் ஆநிரைவாழ்வோடு ஒருங்கிணைந்த வேளாண் வாழ்வியலின் இயக்கத்தின் பாற்பட்டதாகும். மேலும் அக்கூறின் பண்பட்ட நிலையும் அதனையொற்றியே அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். சான்றாக, படகர்களின் பெரும்பொழுதின் பெயரமைவும், அதுகுறித்த வழக்காறுகளும், காலக்கணிப்புகளும் அதையொற்றியே அமைந்துள்ளன. மேலும் வானியல் மற்றும் நிலவியல் கூறுகளையடுத்து ஆநிரைகள் சார்ந்த வாழ்வியல் கூறுகளே இதில் மிக்குள்ளன. சான்றாக நாம் ஏற்கனவே கண்ட படகர்களின் “ஹெம்மாட்டி” மாதத்தின் பெயரமைப்பும் அவர்களின் ஆநிரை வாழ்வினை அடியொற்றியே வரையறுக்கப்பட்டதாகும். மேலும், “ஹெம்மாட்டியோ ஹெம்மெ ஒருவ மே” (“ஹெம்மாட்டியோ” – ஹெம்மாட்டி மாதத்தில், “ஹெம்மெ” – எருமையை, “ஒருவ” – எடுத்துச் செல்கின்ற, “மே” – மழை), “ஹெம்மாட்டியோ ஹெம்மெ மொர சிகிவ ஹனி” (“ஹெம்மெ மொர” – எருமையைப் போன்ற வலிமையான மரம், “சிகவ” – சிதைக்கும், “ஹனி” – பனிப்பொழிவு) எனும் இப்பருவத்திற்குப் படகர்கள் கணித்துள்ள காலநிலையும், எருமை மந்தைகளையும், இயற்கைநிலையையும் அடியொற்றியே அமைந்துள்ளன. பெரும் மரத்தையும் சிதைக்கும் பனிப்பொழிவு என்ற நிலையில் வலிமையான மரத்திற்கும் எருமையையே அடையாகக் கொள்வதும் குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இக்காலத்தைய இயற்கை இடர்களிலிருந்து ஆநிரைகளைக் காப்பதற்கான பயணமே, ஆயத்தமே இந்த “ஹெம்மாட்டிப்” பயணமும், உப்புச் சடங்குமாகும். இதைவைத்துக் காணும்போது படகர்களிடையே வலுவான சமூக அமைப்பும், பண்பட்ட நிலையும் ஆநிரைவாழ்விலிருந்தே தொடங்கியது எனலாம்.

“ஹெம்மாட்டி” பயணத்திற்கான ஆயத்தமாக அனைவரும் ஒன்றிணையவும், மந்தைகளைக் கூட்டவுமான மரபுக்கூறாக உப்பின் அறிமுகத்திற்கு முன்பான படகர்களின் உப்புச்சடங்குத் திகழ்ந்ததெனலாம். அவ்வகையில் நோக்கும்போது இச்சடங்கில் பயன்படுத்தப்படும் “தவட்டெ செப்பு”, “உப்பெ கிடு”, “பெள்ளெ முள்ளி” ஆகிய தாவரங்கள் படகர்களிடம் பெரும் புனிதம் கட்டமைக்கப்பட்ட மரபார்ந்த தாவரங்களாகும். மேலும் மரபார்ந்த, சடங்கார்ந்த, மருத்துவத் தன்மை கொண்டவைகளாகும். இதைக்கொண்டு நோக்கும்போது இச்சடங்கின் இயக்கத்தில் படகர்களின் காடோடி வாழ்வியலின் கூறாக இத்தாவரங்கள் திகழ்கின்றன எனலாம். இதை நிரூபிக்கும் விதமாக இத்தாவரங்கள் படகர்களின் மரபார்ந்த மற்றும் வாழ்க்கைவட்டச் சடங்குகளிலும் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கதாகும். சான்றாக “பெள்ளெ முள்ளி” எனும் தாவரம் படகர்களின் பெயர்சூட்டும் நிகழ்விலும், தம் முன்னோர்களை வரவேற்பதற்கான “சக்கலாத்தி” சடங்கில் காப்பிடுவதற்கான தாவரமாகவும், கோத்தர்களிடமிருந்து பெறுகின்ற மண்சட்டியில் தீட்டுக் கழிக்கின்ற பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றது. அதேபோல “தவட்டெ சொப்பு” எனும் தவட்டெமரம் படகர்களின் தீக்கடையும் நிகழ்வு, தோரணமிடல், வயிற்றுப்போக்கு உட்பட பல மருத்துவங்கள், “பீதேகூ” எனும் இறப்புச்சடங்கார்ந்த சடங்கு போன்ற பல மரபார்ந்த நிகழ்வுகளிலும் முக்கியமானப் பொருளாகப் படகர்கள் பயன்படுத்துகின்றனர். அதேநிலையில் “உப்பெ கிடுவும்” சிறந்த மருத்துவப் பொருளாகும்.

இச்சடங்கார்ந்த தாவர வழக்காறுகளின் தொன்மையானது கணிக்கவியலாத தன்மையைக் கொண்டதாகும். அவ்வகையில் நோக்கும்போது படகர்களின் இந்த உப்புச் சடங்கின் ஆதியில் பங்குபெற்ற பொருட்களாக இவற்றை துணியலாம். மேலும் அத்தாவரங்களின்மீது இன்றுவரையிலும் கட்டமைக்கப்பட்டுள்ள மரபு மற்றும் புனிதநிலை இதை உறுதிச்செய்கின்றது. இச்சடங்கின்மூலம் கொண்டுவருகின்ற இத்தாவரங்களை வீட்டின் உள்ளறையின் முற்றத்தில் கால்நடைகளுக்கான காப்பாகவும், கால்நடைகளுக்கான குறியீடாகவும், உப்புச்சடங்கு நல்ல முறையில் நிகழ்ந்ததன் குறியீடாகவும் படகர்கள் இடுகின்றனர். இது இவர்களின் ஆநிரைசார்ந்த வாழ்வியலின் இயக்கத்தைக் காட்டுகின்றது. இயற்கையொட்டிய இச்சடங்கின் இந்த தாவர வழக்காறுகள் இன்றுவரை மறாமல் தொடர்கின்றன.

நாம் ஏற்கனவே கண்ட “கைம்மெ கெ” எனும் உப்பின் தன்மைக்கொண்ட காய் இந்த உப்புச்சடங்கின் அடுத்த இயக்கமாகக் கொள்ளலாம். இது ஆநிரைகளுக்கு உப்பின்தேவையை நிறைவேற்றுவதற்கான படகர்களின் மரபறிவின் தொடர்ச்சியாகவும் இதைக் கொள்ளலாம். நாம் ஏற்கனவே கண்ட இச்சடங்கில் பயன்படுத்தப்படும் தாவரங்கள் ஒருகாலத்தில் அங்குக்கூடும் எருமைகளுக்கு அளிக்கப்பட்டவைகளாகக்கூட இருக்கலாம். ஒருவேளை எருமைகளின் உப்புத்தேவையினைப் பூர்த்திசெய்வதற்காகப் படகர்களால் கண்டறியப்பட்ட மரபறிவாகவும் இது திகழ்ந்திருக்கலாம். “ஹெம்மாட்டிப்” பயணத்திற்கு முன்பு இந்த தாவரங்களின் மூலம் எருமைகளின் உப்பின்தன்மைச் சமன்செய்யப்பட்டிருக்கலாம். குறிப்பாக இச்சடங்கில் இடம்பெறும் “உப்பெகிடு” படகர்களின் மரபுமருத்துவத்தில் பல்வலிக்கான சிறந்த மருந்தாகும். இதைக் கொண்டு நோக்கும்போது இந்தத் தாவரங்கள் ஆநிரைகளுக்கான உப்பின்தேவையினைச் சீர்மைப்படுத்த அவர்களால் அளிக்கப்பட்டதாக துணிய இடமுண்டு. மேலும் இச்சடங்கில் இடம்பெறும் ஆநிரைகளுக்கான தாவரங்களை அரியும் அரிவாளும் இச்சடங்கிற்குரிய இத்தாவரங்களை அரிவதற்காக இடம்பெற்றிருப்பதாக கொள்வதற்கும் இடமுமுண்டு. உப்பின் அறிமுகத்திற்குப்பிறகு இந்த மரபு குறியீட்டளவில் மட்டும் எஞ்சியிருக்கலாம். இச்சடங்கின் முழுமைக்கும் இச்சடங்கில் பங்கேற்கும் நபர் தம் கரங்களில் மேற்கண்ட தாவரங்களை வைத்துக்கொண்டே நிகழ்த்துவது இது அவர்களின் காடறிதல் சார்ந்த ஆதிவாழ்வின் வழக்கினை வெளிப்படுத்துவதாக திகழ்கின்றது.

படகர்களுக்கு உப்பின் அறிமுகத்திற்கு முன்பு தம் ஆநிரைகளுக்கான உப்பின் தேவையினை இந்தக் “கைம்மெக் காயின்” பங்களிப்பு இச்சடங்கில் நிறைவு செய்துள்ளது எனலாம். இந்தக் “கைம்மெக் காயின்” பங்களிப்பிற்குப் பிறகே இச்சடங்கில் உப்புக்குழி அமைக்கும் முறை ஏற்பட்டிருக்கலாம். உப்புக்குழியை எடுத்து அதில் உப்பின் தன்மையினைக் கொண்ட இந்தக் “கைம்மெக் காயினை” இடித்துப்போட்டு எருமைகளுக்கு அத்தண்ணீரை அளித்துள்ளனர். மேலும் இந்தக் காயினை நீர்நிலைகளிலும் இடித்து கலப்பதான மரபு சில ஊர்களில் எஞ்சியுள்ளன. ஒருவகையில் இது நீர்நிலையினைத் தூய்மைச்செய்யும் சிறந்த கிருமிநாசினியாகவும் இருந்திருக்கலாம். உப்புசடங்கில் ஆற்றில் உப்பினை இடுவதும் ஒருவகையில் நீரினைத் தூய்மைச்செய்வதற்கான செயல்பாடாகும். மேலும் இச்சடங்கிற்கான முதல் செயல்பாடாக இச்சடங்கு நிகழ்த்தப்படும் ஆற்றங்கரையினைத் தூய்மைச் செய்வது படகர்கள் கட்டமைத்துள்ள சிறந்த சூழலியல் பாதுகாப்புக்கூறுகளுள் ஒன்றாகும். இதைக் கொண்டு நோக்கும்போது பெரும்பாலும் நீர்நிலைக்கு அருகிலேயே தன் குடியிருப்பினை அமைத்துக் கொள்கின்ற பழக்கம் படகர்களிடம் வேட்டைசமூகக் காலம்தொட்டே நிலவிவருமொன்றாகும். நீர்நிலைக்கு அருகில் அமைந்திருக்கின்ற, வேட்டைச் சமூகக்காலத்தில் படகர்களின் முன்னோர்கள் வாழ்ந்த “பனா” அமைப்பு இதற்கு சிறந்த சான்றாகத் திகழ்கின்றது. தமக்கும் ஆநிரைகளுக்கும் உயிர்நாடியான நீர்நிலையினைப் பராமறிக்கும் உணர்வின், மரபறிவின் தொடர்ச்சியாக இந்தச் சூழலியல்கூறானது உப்புச்சடங்கில் ஆதியிலிருந்து தொடர்ந்திருக்கலாம்.

இச்சடங்கிற்குரிய தாவரங்களை மட்டுமே கொண்டு இயங்கிய படகர்களின் இந்த உப்புச்சடங்கின் ஆதிப்பெயரினை அறிய இயலவில்லை. ஆனால் நாம் ஏற்கனவே கண்டதைப்போல “உப்பு அட்டோது”, “உப்பு ஹப்பா” எனும் பெயர்கள் உப்பின் அறிமுகத்திற்குப்பிறகே இச்சடங்கிற்கானவை என்று துணியலாம். கி.பி 1825 இல் படகர்கள் “ஒத்தகெ” என்று பெயரிட்டு அழைக்கும் உதகையில் சந்தை உண்டானது. அதன்பிறகு உப்பின்வரத்து நீலகிரியில் பரவலானது. “படகர் தங்களுக்குத் தேவையான உப்பினை கி.பி. 1820 – க்கு முன் சமதளப் பகுதிகளான குண்டல்பேட்டை, காரமடை போன்ற இடங்களுக்குச் சென்று வாங்கி வந்துள்ளனர்.” (இரகு.கு.ஆல்துரை, படகர் பண்பாடு) என்ற கூற்றின்படி நோக்கும்போது படகர்களின் தலையசீமைப்பகுதிக்கு அருகிலிருக்கும் குண்டல்பேட்டையிலிருந்து உப்புக் கிடைத்திருக்கலாம். அவ்வாறு கிடைத்த உப்பினைக் கொண்டு உப்பூற்றிய இடமானதால் அவ்விடம் “உப்பட்டி” என்று பெயர்ப்பெற்றிருக்கலாம். ஆனால் இந்த “உப்பட்டி” உருவான காலமும் கணிக்கவியலாததாகத் திகழ்கின்றது. எனவே இதைக்கொண்டு நோக்கும்போது உப்பின் வரத்திற்குப்பிறகு உப்புக் கிடைப்பதற்கான அருமை மற்றும் இச்சடங்கில் உப்பின் முன்னிலை ஆகியவற்றின் அடிப்படையில் இப்பெயரினை இச்சடங்கு ஏற்றிருக்கலாம். எனவே படகர்களுக்கு உப்பின் அறிமுகத்திற்குப்பிறகு அவர்களுக்கு கிடைத்த உப்பு ஆதியிலிருந்து அவர்கள் நிகழ்த்திவந்த இச்சடங்கோடு இணைக்கப்பட்டுள்ளது என்பதை துணியலாம்.

இச்சடங்கிற்கென பெறப்படும் உப்பானது முழுதும் ஆநிரைகளை அடிப்படையாகக் கொண்டமைவது குறிப்பிடத்தக்கதாகும். தம் ஆநிரைகளுக்கான தேவைகளை நிறைவுசெய்தப்பிறகே தம் தேவைக்கென உப்பினைப் பயன்படுத்தும் நிலையானது இச்சடங்கின்போது, இச்சடங்கிற்கு முன் சமைக்கப்படுகின்ற உணவு உப்பிடப்படாமலும், அதற்குப்பின் அச்சடங்கில் பயன்படுத்திய உப்பினையிட்டும் சமைக்கப்படுவதுமாக தொடரும் வழக்கின்மூலம் நிலைத்திருப்பதைக் காணலாம். மேலும் கிடைத்த உப்பினைப் பாதுகாத்துவைத்து, “ஹெம்மாட்டிப்” பயணத்திற்கான “கடெ உப்பிற்காக” தாம் புனிதப்பொருளாக மரபார்ந்து கட்டமைத்துள்ள உலர்ப்பட்டாணியை இட்டு இடித்து புனிதப்படுத்தும் போக்கானது படகர்களின் மரபறிவினையும், அருமைசார்ந்த பொருட்களின் பயன்பாட்டினையும் வெளிப்படுத்துகின்றது.

வெண்கலத்தின் பயன்பாடு படகர்களிடம் இருந்தும், உப்பினை வெண்கலப்பாத்திரத்தில் இடாமல் அதற்கென அமைக்கப்பட்டிருந்த கூடையில் பத்திரப்படுத்தியது உலோகத்தோடு உப்பானது வினைப்புரியும் என்பதார்ந்த படகர்களின் அறிவியல் அறிவேயாகும். மேலும் உப்புச்சடங்கின்போது உப்புக்கூடையில் உள்ள உப்பினை உரலிலிட்டு அதனோடு உலர்ப்பட்டாணியையிட்டு அப்பழைய உப்பினைப் புனிதப்படுத்துவதும் ஒருவகையில் அதை தூய்மைப்படுத்தும் செயலாககூட இருக்கலாம். மேலும் அவ் உப்புக்கூடையினையும் சாணமிட்டு மெழுகுவதும் உப்பு வைத்திருந்த கலத்தினைத் தூய்மைசெய்யும் பாங்காகும். மேலும் உப்புச் சடங்கின் போது ஒவ்வொரு உப்புக்கூடையிலிருந்தும் உப்பினை மாற்றி எடுப்பதும் ஒருவகையில் உப்பினைச் சுத்தம் செய்கின்ற, தூளாக்கும்போது இறுகும் உப்பினை இளக்குகின்ற செயல்முறையாகும். மேலும், இச்சடங்கார்ந்த ஒற்றுமையின் குறியீடாகவும் இது விளங்குகின்றது. இதை வைத்து நோக்கும்போது உப்பின் அறிமுகத்தின்பிறகு அதுசார்ந்து படகர்கள் கொண்டிருந்த அறிவின் நிலையையும் நன்கு உணரலாம். மேலும் தம் மரபுக்கூறோடு இச்சடங்கில் பிற்காலத்தில் கிடைத்த உப்பினை இணைத்திருப்பதையும் துணியலாம்.

படகர்கள் “கள்ளெ” என்று அழைக்கும் உலர்ப்பட்டாணிக்குப் படகர்களின் மரபில் இன்றியமையான இடமுண்டு. படகர்களின் மரபார்ந்த அனைத்து சடங்குகளிலும் புனிதம் மற்றும் மரபுப்பொருளாக உலர்ப்பட்டாணி இடம்பெறும். மேலும் பெரும்பான்மையான சடங்குகளில் நீரோடு இடப்படும் பொருளாக இது திகழ்கின்றது. சான்றாக கோத்தர்களிடமிருந்து பெறும் மண்கலன்களைத் தீட்டுக்கழிப்பதற்கான “மடக்கெக் கனப்பது” சடங்கிலும், புதுமனைப்புகுவிழாவின் போது வளமைக்கருதி பால்காய்ச்சும் சடங்கிலும் மட்கலனில் ஊற்றிய நீரிலும், பாலிலும் உலர்ப்பட்டாணியை இடுவது படகர்களின் மரபுவழக்காகும். அவ்வகையில் நோக்கும்போது ஆதியில் உலர்ப்பட்டாணியை மந்தைகள் அருந்தும் நீர்நிலைகளிலும், உப்புக்குழியிலும் இட்ட நிலையில், உப்பின் அறிமுகத்திற்குப்பிறகு உப்பும் அதோடு சேர்ந்துக்கொண்டதாகவும் கருத இடமுண்டு. மேலும் ஒரு தொலைவினையோ, பிரிவினையோ, ஏற்றத்தையோ சந்திக்க நேர்ந்தால் அதிலிருந்து நன்முறையில் திரும்புதல் சார்ந்தும், நிறைவுசார்ந்தும் உலர்ப்பட்டாணியை அளிக்கும் மரபார்ந்த வழக்கமும் படர்களிடமுண்டு. அவ்வகையில் “ஹெம்மாட்டிக்கான” பயணத்திற்காகவும், அடுத்த ஆண்டின் தொடக்கத்திற்காகவும் இச்சடங்கில் இம்மரபின் அடிப்படையிலாக உலர்ப்பட்டாணி உப்பின் அறிமுகத்திற்கு முன்பு இச்சடங்கில் இடப்பட்டிருக்கலாம். படகர்களுக்கும் உலர்ப்பட்டாணிக்கும் உள்ள மரபுநிலையை உற்றுநோக்கும்போது இக்கருத்தினை நாம் துணியவும் அதிக இடமுள்ளது. இச்சடங்கார்ந்த, மரபுநிலையிலுள்ள தாவரப் பயன்பாட்டோடு உலர்ப்பட்டாணியின் பயன்பாடும் இச்சடங்கின் ஆதிவழக்காறாகும்.

இச்சடங்கின் ஆதியைக்கொண்டு நோக்கும்போது இது காடோடி மற்றும் வேட்டை, ஆநிரை மற்றும் ஆநிரையோடு வேளாண்மை ஆகிய படகர்களின் வாழ்வியல் இயக்கத்தில் உருவாகி உருவேறியதாக இருக்கலாம். நீலகிரியில் தாமுற்ற இயக்கநிலைகளின் அடிப்படையிலும், அதுசார்ந்து இச்சடங்கில் சேர்ந்துக்கொண்ட வழக்காறுகள் மற்றும் புழங்குபொருட்களின் அடிப்படையிலும் இச்சடங்கினை நோக்கும்போது இது படகர்களின் வாழ்வியலில் உருவான ஒன்றாகத் திகழ்கின்றது. இதற்கு இச்சடங்கில் விரவியுள்ள படகர்களின் மரபும், இயற்கைக்கூறுகளும் தக்க சான்றுப்பகர்கின்றன. எனவே இச்சடங்கு படகர்களின் மரபானவொன்று என்று துணியலாம். “நீலகிரியிலுள்ள எல்லா மலைவாசிகளும் மாடுகளுக்கு உப்புநாள் என்று ஒரு விழா கொண்டாடுகின்றனர்” (ஆ.சிவசுப்பிரமணியம், உப்பிட்டவரை) என்ற கூற்றின் அடிப்படையில் நீலகிரியில் வாழ்கின்ற ஆநிரைவாழ்வோடு பெரிதும் புழங்கும் தொதவர்களும் தம் மந்தைகளுக்கு உப்பினைக் கொடுக்கின்றனர். ஆனால் தொதவர்களுக்கு இச்சடங்கிற்காக உப்பினைப் படகர்களே அளிப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதைவைத்து நோக்கும்போது படகர்களின் மூலம் தொதுவர்களுக்கு இச்சடங்கு அறிமுகமாயிருக்கலாம். இதை “படகர்கள் உப்பைக் கரைத்து சற்றுத் தொலைவுவந்து புல்வெளியில் அமர்வார்கள். அங்கு தொதவர்கள் வந்து மீதமுள்ள உப்பில் ஒருபகுதியை வாங்கிச் செல்வார்கள்” (இரா.கு.ஆல்துரை, படகர் பண்பாடு) என்ற கூற்று மெய்ப்பிக்கின்றது. மேலும் படகர்களின் இச்சடங்கு உப்பினை மட்டும் மையமிட்டது கிடையாது என்பதும் இச் சடங்கு படகர்களின் மரபார்ந்த தொல் சடங்கு என்பதை அறிவுறுத்துகின்றது.

உப்புச் சடங்கின் பயன் -

படகர்களின் உப்புச்சடங்கின் பயனை “அது எங்கே போய்க்கொண்டிருக்கின்றது” என்ற பொலிட்சரின் கூற்றோடு ஒப்புநோக்கவியலும். காலநிலைசார்ந்த புரிதல், காலநிலை சூழலிற்கான வாழ்வியல் சார்ந்த ஆயத்தம், காலநிலை சூழலிற்கான மரபார்ந்த பயணத்திற்கான முன்திட்டமிடல், சமூக ஒற்றுமை, மந்தைகளின் கணக்கெடுப்பிற்கான வாய்ப்பு, மந்தைகள் சார்ந்த அறிவியல் மற்றும் மரபியல் நிலையில் அமைந்த பாதுகாப்பு, மருத்துவ மற்றும் அனுபவப் பகிர்வுகள், மரபார்ந்த காடறிதல் அறிவினைப் பகிர்தல், மரபின் தொடர்ச்சி, ஆநிரை வாழ்வியலிற்கான புழங்குபொருட்களைப் புனரமைத்தல், உப்பினைத் தூய்மைச்செய்தல், உப்புக் கலத்தினைத் தூய்மைச்செய்தல் போன்ற பண்பாடு மற்றும் மரபறிவின் செப்பனிடல், சூழலியல் பாதுகாப்பு, சூழலியல் அக்கறை, தம் வாழ்வியலுக்கு ஆதாரமான ஆநிரைகளைப் பேணல், சகோதரத்துவம், சமூகக் கட்டமைப்பு, மகிழ்ச்சியின் வெளிப்பாடு போன்ற பல்வேறு பயன்நிலைகளை இச்சடங்கு உட்செறித்துள்ளது. இந்த பயன்நிலைகளே இச்சடங்கின் தொன்மைக்குச் சிறந்த சான்றாகும். இச்சடங்கு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்ற வினாவினை இச்சடங்கின்மீது தொடுக்கும்போது ‘இது சிறந்த சமூகக்கட்டமைப்பினைச் சார்ந்தும், இடைவிடாத மரபுநிலையைச் சார்ந்தும், ஆநிரை வாழ்வியலின் செம்மை சார்ந்தும் சென்றுக்கொண்டிருக்கின்றது’ என்ற விடை கிடைக்கின்றது. “ஹெம்மாட்டிப்” பயணம் அருகிப்போன இன்றைய நிலையிலும் இச்சடங்கும், இச்சடங்கின் பயன்களும் மாறாமல் நிலைத்திருக்கின்றன. இந்த நிலைத்தன்மையும் படகர்களின் இச்சடங்கின் தொன்மைக்கும், ஒரு புள்ளியில் தொடங்கி வாழ்வின் அடுத்தடுத்த இயக்கத்தில் தம் வாழ்வியல்சார்ந்த சில புள்ளிகளை இணைத்துக்கொண்ட படகர்களின் வாழ்வின் இயங்கியல் தன்மைக்கும் சிறந்த சான்றாகும்.

இயற்கையிலிருந்து கிளைத்த, இயற்கைசார்ந்த கூறுகளை அடிப்படையாகக் கொண்ட சடங்குகளின் நிலைத்தன்மைக்கான அடிப்படைக் காரணங்களுள் அதில் பயன்படுத்தப்படும் புழங்குபொருட்கள் இன்றியமையான ஒன்றாகும். “பொருளும் பண்பாடும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. நறுக்குத் தெறித்தார் போன்று மிகக் குறைந்தபட்ச வரையறையாகச் சொன்னால் பண்பாட்டின் கண்ணாடி புழங்கு பொருட்கள்” (பக்தவத்சல பாரதி, பண்பாட்டு மானுடவியல்) எனும் கூற்றின்படி இச்சடங்கில் இடம்பெறும் “தவட்டெ”, “உப்பெ”, “பெள்ளெ முள்ளி”, “கள்ளெ” எனும் உலர்ப்பட்டாணி, எருமைச் சாணம், தும்பை மலர், “முத்தரா” அல்லது “உங்கரா” எனும் வெள்ளி மோதிரம், உப்பு, உப்புக்கூடை, மண் அல்லது உலோகக் கலம், “செப்புக்கத்தி” எனும் சிறிய அரிவாள், “மொரெத் தைகெ” எனும் வெண்கலத் தட்டு, சாமை, அவரை, வெண்ணெய் போன்ற புழங்குப்பொருட்களில் உப்பினைத் தவிர மற்ற எல்லாப் பொருட்களும் படகர்களின் வாழ்விலோடு பின்னிப்பிணைந்தது, அவர்களின் வாழ்க்களத்திலே கிடைப்பது. அவர்களின் மரபோடு தொடர்புடையது. இப்புழங்கு பொருட்களை வைத்து நோக்கும்போதும் இச்சடங்கின் மரபார்ந்த இயங்கியலை நமக்கு இவை நன்கு உணர்த்துகின்றன. அவ்வகையில் இதில் இடம்பெற்றுள்ள “தவட்டெ”, “உப்பெ”, “பெள்ளெ முள்ளி”, “கள்ளெ”, “தும்பை” ஆகிய இயற்கைக்கூறுகள் இச்சடங்கார்ந்த ஆதி இயங்கியல் சார்ந்ததாகும்.

“முத்தரா” அல்லது “உங்கரா” எனும் வெள்ளி மோதிரம், “செப்புக்கத்தி”, “மொரெத் தைகெ” ஆகிய உலோகங்களைக் கொண்டு நோக்கும்போது. இப்பொருட்களின் உலோக ஆக்கத்திற்கு முந்தைய வடிவத்தினையும் இச்சடங்கில் ஒரு சில ஊர்களில் பயன்படுத்துவதை காணலாம். அதாவது “செப்புக்கத்திக்குப்” பதிலாக கல்லினைக் கூர்த்தீட்டியும், வெண்கலத்தட்டிற்குப் பதிலாக மரத்தினாலான தட்டினையும் பயன்படுத்துகின்றனர். அதேபோல உப்பினை உரலிலிட்டு இரும்பாலானா “நுக்குசு ஆரெயில்” இடித்து துகளாக்குவதற்குப் பதிலாக “இடிகல்லு” எனும் சிறிய கல்லினைக் கொண்டு இடிப்பதையும் சில இடங்களில் காணமுடிகின்றது. மேலும் வெள்ளியின் பயன்பாட்டிற்குப் பிறகே முத்தரத்தினை வைத்து தன் முன்னோர்களை அழைக்கும் வழக்கம் படகர்களிடம் தோன்றியிருக்கலாம். ஆனால் இச்சடங்கிற்கு தம் மூதாதையர்களை அழைக்கும் ஆதி வடிவாக இச்சடங்கில் இடம்பெறும் சாணம் திகழ்கின்றது. உப்புக்குழியின் மேலே நடுப்பரப்பில் வைக்கப்படும் சாண உருண்டையும், அதன்மேல் வைக்கப்படும் தும்பை மலரும் படகர்கள் தம் முன்னோர்களை நினைத்து வணங்குகின்ற, தம் ஆநிரைசார்ந்த ஆதிவாழ்வின் மரபுத் தொடர்ச்சியாக விளங்குகின்ற “ஆப்பி” வழிப்பாடாகக் கொள்ளலாம். மேலும் சாணத்தில் தொடங்கி சாணத்தில் முடியும் படகர்களின் தனித்தன்மைவாய்ந்த சாடங்காகவும் இது திகழ்வது நோக்கத்தக்கதாகும். இச்சடங்கின் நிறைவாக வீட்டின் உரலினுள் வைத்த உப்புநீரினைக் கொண்டுச்சென்று தொழுவத்தினுள் சுற்றித் தெளிப்பதும், அதன்பிறகு தொழுவத்திலிருந்து ஒரு கூடை எருவினைக் கொண்டுவந்து நிலத்தில் அடுத்த போகத்திற்காக கொட்டுவதும் ஆநிரைகளுக்கான மரபார்ந்த பயணம் முடிந்ததும் உணவிற்கான உற்பத்தியின் தொடக்கமாகவும், முனைப்பாகவும் விளங்கிய படகர்களின் வாழ்வியலோடு இணங்கிய இச்சடங்கின் இயங்கியல் விளங்குகின்றது. படகர்களின் தெளிவான, மரபார்ந்த வாழ்வியல் வரையறையை உட்செறித்ததாக இச்சடங்குத் திகழ்வதோடு அவர்களின் வாழ்வியலின் அடுத்தடுத்த இயங்கியலுக்கான ஊக்கி மற்றும் இயக்கியாகவும் இது விளங்குவது குறிப்பிடத்தக்கது. மேலும், இச்சடங்கின் புழங்குப்பொருட்களை ஒப்பிடும்போது உப்பின் பங்களிப்பு மட்டுமே சேர்க்கையாகத் திகழ்கின்றது. இச்சடங்கார்ந்த இயற்கைக்கூறுகளைத் தவிர்த்த மற்ற புழங்குபொருட்களின் பயன்பாடுகளில் பரிணாமநிலைசார்ந்த இயங்கியலைக் காணலாம்.

இச் சடங்கில் “தவட்டெ”, “உப்பெ”, “பெள்ளெ முள்ளி” உள்ளிட்ட தாவரங்களைத் தம் வீட்டின் முற்றத்தில் காப்பு மற்றும் நிறைவின் குறியீடாக திணிப்பதோடு இன்றி தொழுவத்திலும் திணிக்கின்ற மரபில் ஒரு பெரும் மரபறிவு அடங்கியுள்ளதைக் காணலாம். அதாவது படகர்கள் “தோ” என்று அழைக்கின்ற தொழுவத்தின் கல்லிடுக்கில் திணிக்கப்படும் இத்தாவரங்கள் தம் உடலில் உப்பின் தேவையை உணரும் நிலையில் ஆநிரைகள் உண்பதற்கான நோக்கம் கொண்டவையாகத் திகழ்கின்றன. இந்த இயங்கியலின் அடுத்த நிலையாக உப்பின் வரத்திற்குப்பிறகு உப்புக்குழியிலிருந்து கொண்டுவரும் உப்புநீரை “தோவிற்குள்” கற்சுவர்களில் படும்படி தெளிக்கின்ற இன்றைய நிலைத் திகழ்கின்றது. அவ்வாறு சுவரில் படியும் உப்பினை ஆநிரைகள் தமக்கு உப்பின் தேவையேற்படும்போதும் நாவால் நக்குவதின் மூலம் பெறும் என்ற நோக்கத்தோடு இவ்வாறு நிகழ்த்தப்படுகின்றது. படகர்களின் மரபறிவுசார்ந்த இக்கூறுகளின் இயங்கியல் உப்பின் வரவிற்குப்பிறகு பரிமாணித்துள்ளதே தவிர பரிணமிக்கவில்லை. அதேநிலையில் ஆற்றங்கரையினைத் தூய்மைசெய்வது, உப்போடு உலர்ப்பட்டாணியைச் சேர்த்து துகளாக்குவது, ஆற்றிற்கு உப்பினை இடுவதும், பெரிய எருமைகளுக்கும், எருமை கன்றுகளுக்குமென உப்புக்குழியினை அமைப்பது, உப்புசார்ந்த சுகாதாரம், உப்புக்கூடையிலிருந்து உப்பினை மாற்றும் குறியீட்டு நிலை, ஆநிரைகளுக்குக் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அடைஎரிப்பு நோய் மற்றும், மழைப்பொழிவிற்குப்பின் வளர்ந்திருக்கும் புற்களில் உள்ள சுவைக்குறைப்பாட்டினைச் சமன்செய்வதற்காக உப்பினையும், உப்புத்தன்மைக்கொண்ட தாவரங்களையும் அளித்தல், மற்றும் உப்பினை இளக்கும் முறை போன்ற படகர்களின் மரபறிவும் இச்சடங்கில் விரவியுள்ளன. இந்த மரபறிவிலும் உப்பின் தன்மை பரிமாணமாகவே விளங்குகின்றது.

நிறைவாக இச்சடங்கின் அந்தம் என்பதைக் கண்ணுறும்போது இரண்டுநிலைகளைக் காணலாம். ஒன்று இச்சடங்கு நிறைவுறும் நிலை. மற்றொன்று இச்சடங்கின் இறுதிநிலை. காடோடி வாழ்வியலை முதன்மையிட்டுத் தொடங்கும் இச்சடங்கின் ஆதிக்கு அடுத்தநிலையானது ஆநிரைவாழ்வினை மையமிட்டதாகவே விளங்குகின்றது. படகர்களின் வாழ்க்கை வட்டத்தில் ஆநிரைக்காக தொடங்கி ஆநிரைக்காக நிறைவுறும் மரபார்ந்த சடங்காக இது திழ்கின்றது. எனவே இச்சடங்கின் நிறைவுசார்ந்த அந்தமானது ஆநிரையை மையமிட்டது. இதற்கு இச்சடங்கில் இடம்பெறும் படகர்களின் ஆநிரைவாழ்வின் குறியீடான ஆப்பியே சிறந்த சான்றாகும். மேலும் “கடெஉப்பில்” தொடங்கிய “ஹெம்மாட்டிப்” பயணம் “கார் உப்பில்” நிறைவுறுகின்றது. இது இப்பயணத்தின் ஆதி அந்தத்தை இச்சடங்கினைக் கொண்டு படகர்கள் தீர்மானிப்பதைக் காட்டுகின்றது. மேலும் பனிப்பொழிவின் காலநிலைக்கான ஆதி அந்தமாகவும் இச்சடங்கு திகழ்கின்றது. தம் உணவுசார்ந்த உற்பத்திக்கான அந்தமாகவும் இச்சடங்கு திகழ்கின்றது. “கடெ உப்பினை” ஊற்றும் நிகழ்வினைப் படகர்கள் தாம் நிகழ்த்தும் தம் வாழ்வியலில் வருடத்தின் முதல் மற்றும் இன்றியமையான விழாவான “தொட்ட ஹப்பாவின்” ஒரு நிகழ்வாகக் கொண்டாடுகின்றன. “தொட்ட” என்ற படகுச் சொல்லிற்கு பெரிய என்று பொருள் இந்த விழாவின் பெயரே இதன் இன்றியமையாமையை உணர்த்தி நிற்கின்றது.

இச்சடங்கின் இறுதிநிலை என்று நோக்கும்போது இயற்கையிலிருந்து கிளைத்திருக்கும் இச்சடங்கின் இறுதியைத் தீர்மானிப்பது இயற்கையின் கைகளிலேயே உள்ளது. இச்சடங்கின் ஆதிவழக்காக இச்சடங்கில் இணைந்துள்ள இயற்கைசார்ந்த தாவரங்கள் அழிவுறும்போதும் இச்சடங்கில் சில மாற்றங்கள் நிகழலாம். ஆனால் அத்தகு சூழலைப் படகர்களுக்கு இயற்கை இன்னும் அளிக்கவில்லை. தேயிலைத் தோட்டங்களும், தங்கும் விடுதிகளும் படகர்களின் வாழ்க்களமான நீலகிரியை ஆக்கிரமித்திருந்தாலும், இன்றும் தனித்திருக்கும் படகர்களின் வாழ்வியல் கட்டமைப்பு தம் மரபார்ந்த சடங்கியலிற்குரிய இயற்கைக்கூறுகளையும் உட்செறித்து திகழ்வது அவர்களின் மரபார்ந்த இயற்கைப்பேணலுக்குச் சிறந்த சான்றாகும். மேலும் ஆற்றங்கரை உள்ளிட்ட நீர்நிலைகள், முக்கியமான தாவரங்கள் ஆகியவற்றை பாதுகாப்பது, அதை மாசுப்படுத்துவதைப் பெரும்பாவமாகக் கருதுவது ஆகிய அவர்களின் மரபார்ந்த விழுமியக் கட்டமைப்பும் படகர்களின் இயற்கையிலிருந்து கிளைத்த சடங்குகளின் நிலைத்தன்மைக்குச் சிறந்த கூறாகும். மேலும் ஆப்பியில் தொடங்கி ஆப்பியில் முடியும் இச்சடங்கிற்கு ஆப்பி கிடைக்காத காலமொன்று வந்தால் இச்சடங்கில் மாற்றங்கள் நிகழலாம். ஒருவகையில் படகர்களின் ஆநிரைவாழ்வியல் இயக்கத்தின் சரடே இந்த ஆப்பியில் நிறைந்திருக்கின்றதெனலாம். ஆனால், ஆநிரைகளிலிருந்து பிரிபடும்போதும் படகர்களின் வாழ்வானது மரபிழந்து அர்த்தமற்றுப்போகக்கூடும். எனவே படகர்களின் மரபோடு பிணைந்துள்ள இச்சடங்கு ஒருவேளை இயற்கையைப் படகர்கள் கைவிட்டாலும் அவர்தம் வாழ்வியலில் எச்சமாகத் தொடரக்கூடும். எனவே இயற்கைப் படகர்களைக் கைவிட்டாலொழிய அவர்களின் இச்சடங்கிற்கு இறுதியான அந்தமில்லை எனலாம்.

நிறைவாக –

இயக்கவியல் அடிப்படையில் படகர்களின் உப்புச்சடங்கினை ஆராய்ந்தவிடத்து கீழ்க்காணும் முடிவுகளை நிறுவலாம்.

படகர்களின் உப்புசடங்கின் ஆதியும் அந்தமும் படகர்களின் வாழ்வியல் இயக்கத்தோடு தொடர்புடையவை. அவை காலநிலை, வாழ்வியல் பரிணாமம் மற்றும் பரிமாணம் ஆகிவற்றோடு பின்னிப் பிணைந்தவை.

படகர்களின் ஆதி வாழ்வியலான காடோடி வாழ்வியல், அதற்குப்பிந்தைய ஆநிரைவாழ்வு, அதற்குப் பிந்தைய ஆநிரையோடு கூடிய வேளாண்வாழ்வு ஆகிய முப்பரிமாணங்களின் கூறுகளை, இயங்கியலை உட்செறித்ததாக இச்சடங்குத் திகழ்கின்றது.

இயற்கையோடு இயைந்த வாழ்க்கை, குடிவாழ்க்கை போன்ற படகர்களின் தொல்குடித் தன்மைக்கு இச்சடங்கு சிறந்த சான்றாகும். இயற்கையை, தம் மூதாதையர்களை அடியொற்றி அமையும் இச்சடங்கின் இயங்கியல் இச்சடங்கின்வழி நிலைநிறுத்தப்படும் படகர்களின் தொல்குடித் தன்மையாகும். படகர்களை நீலகிரியின் வேளாண்குடிகளாக மட்டும் அடையளப்படுத்தும் தார்மீகமின்மையினையும் இச்சடங்குச் சுட்டிக்காட்டுக்கின்றது.

படகர்களின் வாழ்வியலின் தாரக மந்திரமான “பண்டா பதுக்கு” (பண்டா – எருமை மந்தைகள், பதுக்கு – வாழ்வ) என்பதற்கான விளக்கமாக, அதற்கு அடிக்கோலுவதாக இச்சடங்குத் திகழ்கின்றது. “பண்டாவை” விட்டால் படகர்களுக்குப் “பதுக்கு” கிடையாது என்பதை இச்சடங்கின் இயக்கம் நிலைநிறுத்தி வருகின்றது.

உப்பின் தன்மைக்கொண்ட தாவரங்கள் பற்றிய மரபறிவு, உப்பின் அறிமுகத்திற்குப்பிறகான உப்பின் பராமறிப்பு பற்றிய மரபறிவு போன்ற படகர்களின் மரபறிவுகளை இச்சடங்கு உட்செறித்துள்ளது.

நீலகிரிக்கு உப்பினை அறிமுகப்படுத்திய வரலாற்றிற்கும், காலநிலைக்கேற்ப தம் வாழ்வியலில் படகர்கள் கட்டமைத்திருந்த தகவமைப்பிற்கும் விளக்கமாக இச்சடங்குத் திகழ்கின்றது. உப்பின் அறிமுகம் கிட்டி உப்பின் பெயரினை ஏற்று இச்சடங்கினை நிகழ்த்தியப்பிறகே படகர்களின் வாழ்வில் உணவில் உப்பினைப் பயன்படுத்தும் நிலை தொடங்கியது என்று துணியலாம்.

தம் வழ்வியலுக்கு அடிப்படையாக விளங்கும் இயற்கை மற்றும் ஆநிரைகளைப் பேணுவதற்கான, அவற்றிற்கு முன்னிலை அளிக்கின்ற போக்கிற்கும், சகோதரத்துவத்திற்கும், சமூகக் கட்டமைப்பிற்குமான நிலைச்சான்றாக இச்சடங்குத் திகழ்கின்றது.

இச்சடங்கின் ஆதி, அந்தம், இது எதுவாகப்போகிறது? எனும் இயக்கவியல் சார்ந்த வினாக்களின் அடிப்படையில் நோக்கும்போது உப்பின் அறிமுகத்திற்குப்பின்னர் உப்புச்சடங்கு எனும் பெயர்ப்பெற்ற இந்தச் சடங்கானது படகர்களுக்கான தனித்தன்மைவாய்ந்த மரபார்ந்த சடங்கு என்பதைத் துணியலாம்.

ஆநிரைவாழ்விற்கு அடிப்படையான சகோதரத்துவத்தை தக்கவைக்கும் சடங்காகவும், இயக்கியாகவும் இச்சடங்குத் திகழ்கின்றது. இச்சடங்குநாளின் போது அனைவரின் வீடுகளுக்கும் சென்று பலகாரம் உண்ண வேண்டும் என்ற இச்சடங்கார்ந்த இயக்கத்தின் நிலையானது உறவினை புதுப்பிப்பிப்பதற்கான சிறந்த கட்டமைப்பாகவும் தகிழ்வது குறிப்பிடத்தக்கதாகும்.

உப்பின் அறிமுகத்திற்கு முன்பு, உப்பின் அறிமுகத்திற்கு பின்பு என்ற இரண்டு பரிமாணங்களைக் கொண்டுள்ள படகர்களின் உப்புச்சடங்கிற்குள் பூர்வக்குடிகளான படகர்களின் நெடிய மரபானது உயிர்த்துள்ளது எனலாம்.

துணைநின்றவை

1. இரா.கு.ஆல்துரை, படகர் பண்பாடு.

2. ஆ.சிவசுப்பிரமணியம், உப்பிட்டவரை.

3. பண்பாட்டு மானிடவியல், பக்தவத்சல பாரதி.

4. இ.முத்தையா, நாட்டுப்புற மருத்துவ மந்திரச் சடங்குகள்.

5. நேர்க்காணல் திரு. மகாலிங்கம், ஆய்வாளர், எடக்காடு, நீலகிரி மாவட்டம்.

6. நேர்க்காணல், திரு.இராமாகவுடர், ஊர்த்தலைவர், பொறங்காடு சீமை, நீலகிரி மாவட்டம்.

7. நேர்க்காணல் திரு. ஆலன், கம்பட்டி, நீலகிரி மாவட்டம்.

8. நேர்க்காணல் திரு. ஆனந்தராஜ், மொழியியல் அறிஞர், நீலகிரி மாவட்டம்.

9. நேர்க்காணல் திரு. பானிரங்கன், கடக்கோடு, நீலகிரி மாவட்டம்.

10. நேர்க்காணல் திரு. கோபால், ஒரசோலை, நீலகிரி மாவட்டம்.

11 . முனைவர் கோ.சுனில்ஜோகி, படகர்களின் மரபுசார் பண்பாட்டுப் புழங்குபொருட்கள்,

முனைவர் பட்ட ஆய்வேடு.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.