முன்னுரை

தனிமனிதனிடம் இயல்பாக அமையப்பெற்ற செயல் பழக்கமாகும். “பழக்கம்” என்பது பலநாளாகக் கற்கும் செயலாகும். இதைத் தொடர் வழக்கமாகக் கொள்ளும் நிலையாகும். பழக்கம் என்பது தனி மனிதனது நடவடிக்கை என்றும், வழக்கம் சமூகம் சார்ந்தாகவும் அமைகிறது. தனிமனிதனும், சமுதாயமும் ஒருங்கிணைந்து அவற்றால் வெளிப்படுவது பழக்கவழக்கமாகும்.இவை இயற்கையாகவும், செயற்கையாகவும் தோன்றக்கூடியது. மனிதனின் மனதில் தோன்றும் எழுச்சி, உணர்ச்சி,விருப்பு, வெறுப்போடு தொடர்புடையதாக அமையும்.

பழக்கம் – தனிமனிதனைச் சார்ந்த தொடக்க நிலை
வழக்கம் – சழுதாயம் சார்ந்த தொடர்நிலை

சிலப்பதிகாரம் மக்கள்காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்று அழைக்கப் படுகின்றது. இந்நூலில் மூன்று நாட்டு மன்னர்களும், மக்களும் சிறப்பு பெறுகின்றனர். அரசனின் கோல் ஆட்சி யின் கீழ் வரும் மக்களாகச் சிலப்பதிகார மக்கள் இருந்தமையை உணரமுடிகிறது. அத்தகைய சிறப்புமிக்க மன்னர்களின் பழக்கவழக்கங்களை ஆராய்வதாக அமைகிறது. சிலம்பில் மன்னர்களின் பழக்கவழக்கங்களைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்.

முடிசூடல்
வரைவுரைத்தல் (நன்மொழிகூறல்)
வாழ்த்துரைத்தல்
திறைசெலுத்துதல்
முரசறைதல்
பறையறைதல்
சிறைவீடு

முடிசூடல்

அரசர்களின் வாழ்வில் முக்கிய நிகழ்வாக முடிசூடல் நிகழ்வு அமைந்திருந்தது. இந்நிகழ்வு வயது காரணமாகவோ, இறப்பிற்குப்பிறகு, புதியவருக்கோ தன் மகனுக்கோ முடிசூட்டி தன் பதவியை ஒப்படைப்பதாகும். சிலம்பில் அரசனது ஆட்சிக்குப் பிறகு அவரது இளவல்கள் பதவியை ஏற்று நடப்பது சுட்டப்படுகிறது.

விரிகதிர் பரப்பி உலகம் முழுது ஆண்ட
ஒருதனித் திகரி உரவோன் காணேன் சிலம்பு.4.1-26

விரிகதிர்களைப் பரப்பும் கதிரவன் மறைவுக்குப் பின் சந்திரன் எழுச்சிபெறுவது போல முடிசூடல் நடைபெற்றமையை உணர்த்துகிறது. சோழன் பெருங்கிள்ளியின் ஆட்சியை எதிர்த்த குறுநில மன்னர்கள் ஒன்பது பேரையும் பெருங்கிள்ளி அழிந்த பின்பு ஆட்சி ஏறினான் என்பதை, இளங்கோ வேந்தர் இறந்ததன் பின்னர்

வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு
செங்கோற் நன்மை தீதன்றோ சிலம்பு.27.159-161

என்னும் வரிகளால் பேரசனுக்குப் பின்பு சிற்றரசன் முடிசூடியமையை சுட்டுகின்றது. அண்ணனுக்குப் பிறகு தம்பியும், தந்தைக்குப் பின்பு மகனும், பேரசனுக்குப் பின்பு சிற்றரசரும் முடிசூடியமையை சிலம்பு எடுத்துரைக்கிறது.

வரைவுரைத்தல் நன்மொழி கூறுதல்

ஒருவர் மற்றொருவரைச் சந்திக்கும் பொழுது அவர்களை வரவேற்று, வணங்கி, வாழ்த்தி நன்மொழி கூறுதல் என்பது மரபாக இருந்ததை அறியமுடிகிறது.அரசனுக்குச் செய்தியானது வாயிற்காப்பாளன் வழியாக எடுத்தச் சென்றமையை அறியலாம். கண்ணகி தன் கணவன் கொலையுண்டதை அறிந்து வழக்குரைக்கச் சென்ற பாண்டிய மன்னனின் அரசவையில் வாயிலோயே வாயிலோயே என்று கூறிக் கொண்டு பாண்டிய மன்னனின் அரசவையில்,

கணவனை இழந்தாள் கடையகத் தாள் என்று
அறிவிப்பாயே அறிவிப்பாயே    சிலம்பு.20.28-29

என்னும் வரியில் கணவனை இழந்த ஒருத்தி தான் வாயிலிடத்தே நிற்கிறாள் என்று வாயில்காவலனிடம் தன் வரவினைக் கூறச் சொல்லி கண்ணகி மொழிந்ததை எடுத்துரைக்கிறது.

கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும்
சஞ்சயன் முதலாத் தலைக்கீடு பெற்ற
சேய்உயர் வெற்கொடிச் செங்கோல் வேந்தே சிலம்பு.26.136-140

சேரமன்னனின் வாயிலில் சஞ்சயன் தலைமையில் தலைப்பாகையுடைய ஆயிரம் வீரர்கள் வந்து நிற்பதை வாயில் காப்போனால் சேரனிடத்தில் கூறும் நிலையானது வரைவுரைத்தலை எடுத்துரைக்கிறது.

வருக மற்று அவள் தருக ஈங்கு என
வாழ்த்துரைத்தல்    சிலம்பு.20.45

வாழ்த்துரைத்தல்

அரசவைக்கு வருகை புரிந்தோர் முதலில் மன்னனுக்கு வாழ்த்து கூறிய பின்னரே மக்கள் அவரிடம் தான் கூற வந்ததைக் கூறுவது என்பது இயல்பு.

வாழி எம் கொற்கை வேந்தே வாழி!
……………………….
தென்னம் பொருப்பின் தலைவ வாழி!
செழிய வாழி! தென்னவ வாழி!
பழியொடு படராப் பஞ்சவ வாழி! சிலம்பு.20.30-33

என்று வாயிலோன் பாண்டிய மன்னனை வாழ்த்துவதும்,

வாழ்க எங்கோ! மாதவி மடந்தை சிலம்பு.27.49

அடிப்படுத்து ஆண்ட அரசே வாழ்க சிலம்பு.27.52

மன்னர் கோவே! வாழ்க ஈங்கு என    சிலம்பு.27.111

நீடு வாழியரோ நீள்நில வேந்து    சிலம்பு.27.116

வாழ்க எம்கோ வாழியர் பெரிது என    சிலம்பு.27.140

என்னும் வரிகளில் சேரனை மாடலன் பாசறையில் வாழ்த்திக் கூறியமையைக் காணமுடிகிறது. வாழ்த்துரைத்தல் நிகழ்வு அரசர்களின் வாழ்வில் முக்கிய அங்கமாக அமையப் பெற்றமையை மேற்கூறிய சான்றுகள் வாயிலாக அறியமுடிகிறது.

திறைசெலுத்துதல்

நாட்டினை ஆட்சி செய்யும் பேரரசருக்கு சிற்றரசர்கள் திறையினை செலுத்தி தன் மக்களைக் காக்கும் முறையானது வழக்கமாக இருந்தது. புகார் நகருக்கு அழகு சேர்க்கும் வகையில் பகைமன்னர்களது அழிக்க இயலாத திறைகள் அமைந்தமை சிறப்பிற்குரிய நிகழ்வாகும்.

பகைப்புறத்துக் கொடுத்த பட்டி மண்டபமும்
அவந்தி வேந்தன் உவந்தனன் கொடுத்த
…………………………………………….
ஒருங்கு உடன் புணர்ந்து ஆங்கு உயர்ந்தோர் ஏத்தும் சிலம்பு.5.99-109    

என்னும் வரிகளால் பொன்னாலும் மணியாலும் புனைந்த கொற்றப்பந்தரும், பட்டிமண்டபமும், தோரணவாயிலும், வச்சிரம், மகதம், அவந்திநாட்டு மன்னர்களால் சோழ மன்னனுக்குத் திறை செலுத்தியமை அறியலாகிறது.

நாடக மகளிர் ஈரம்பத்து இருவரும்
கூடிசைக் குயிலுவர் இருநூற்று எண்மரும்
……………………………
கண்ணெழுத்துப் படுத்தன கைபுனை சகடமும் சிலம்பு.26.128-136

என்னும் பாடல் வரிகள் உயர்ந்த பொருள்களோடு படைகளையும், கலைஞர்களையும் திறைப் பொருளாக செலுத்திய வழக்கம் சமூகத்தில் இருந்தமையை எடுத்துக்கூறுகிறது.

முரசறைதல்

அறிவியல் ஆதிக்கம் எதுவும் இல்லாத காலத்தில் தகவல்களைப் பரிமாற்றம் செய்வதில் முரசும், பறையும் முக்கிய அங்கமாக இருந்தமையை நாம் அறியலாம். போர், வெற்றி, விழா, சடங்குகள் முதலான அனைத்து நிகழ்வுகளும் முரசறைதல் மூலம் அறிவிக்கப்பட்டது. நல்லது கெட்டது என இரண்டு நிகழ்வு முரசின் வாயிலாக மக்களிடையே கொண்டு சேர்க்கப்பட்டது. இன்றும் கிராமங்களில் முரசின் வாயிலாக செய்திகள் கூறுவதைக் காணமுடிகிறது.

மாநகர்க்கு ஈந்தார் மணம்
அவ்வழி
முரசியம்பின, முருமு அதிர்ந்தன முறை எழுந்தன சிலம்பு.1.43-45

என்னும் வரியில் காப்பியத் தலைவனான கோவலனின் திருமண நிகழ்வினை முரசறைந்து தெரிவித்தமையை உணரமுடிகிறது. நாடாளும் மன்னனாலும், செல்வந்தர்கள் இவர்களது செய்தியானது யானையின் மீது அமர்ந்து அறிவித்தமையை அறியமுடிகிறது.

இந்திரவிழாவானது முரசறைந்து தொடங்குவதும், ஐராவதயானை கோட்டத்தில் இருந்து தொடங்கி ஊர்முழுவதும் செய்தியை வள்ளுவன் தெரிவித்த நிலையை,

வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
………………….
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி    சிலம்பு. 5.141-144

மேற்கூறிய சான்றுகள் மக்களுக்கு முக்கிய செய்திகளைக் கூற முரசினைப் பயன்படுத்தியமையை எடுத்துரைக்கிறது. முரசறைவதற்கு என்று வள்ளுவன் என்ற குடியினைச் சார்ந்தவன் இருந்தமையையும் புலப்படுகிறது. அவர்களோடு மங்கல விழாச் செய்தியைக் கூற மங்கல மகளிரும் இருந்தமையை அறியமுடிகிறது.

பறையறைதல்

முரசிற்கும் பறைக்கும் சிறு வேறுபாடு உண்டு. இரண்டும் செய்திகள் அறிவிக்கப் பயன்படுத்தியமைக் காணமுடிகிறது. மகிழ்வான செய்திகள் முரசு வழியாகவும் அச்சம் தரும் செய்திகளைப் பறை வழியாகவும் தெரிவித்தனர்.

பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம்
வேக யானை வெம்மையிற்    சிலம்பு. 15.46-47

என்னும் வரிகள் மதவெறியால் யானை பாகனின்றித் திரியும் போது யானையிடம் இருந்து நாட்டு மக்களைக் காக்கும் பொருட்டு பறையறைந்து கூறியதன் பொருட்டு அச்சமான செய்திகள் பறையின் வாயிலாகத் தெரிவித்தமைப் புலப்படுத்துகிறது. செய்திகளை விரைவாகத் தெரிவிக்கவும், மக்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் செய்திகள் சென்று சேர்க்கும் பொருட்டும் முரசைறைதலும், பறையறைதலும் பயன்படுத்தப்பட்டிருந்தன. இரண்டிலும் வள்ளுவன் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிறைவிடு

சிறைவிடு என்பது சிறையிலிருந்து விடுத்தல் என்று பொருள்படும். அரசன் நல்ல செயல்களை செய்யும் போதும், தன் பிறந்த நாளின் போதும், முடிசூட்டு விழாவின் போதும் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருந்தமையைக் காணமுடிகிறது. குற்றவாளிகள் மற்றும் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தமையைக் காணமுடிகிறது.

புறநிலைக் கோட்டத்துப் புண்ணியத் தானமும்
திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால்
……………………………………………………..
அடித்தளை நீக்க அருள் சிறந்து ஒருபால் சிலம்பு5.180-184

இந்திர விழாவின் போது சோழ மன்னன் பகை மன்னர்களின் கைவிலங்கினை நீக்க உத்தரவிட்டமையைக் காணமுடிகிறது.


முடிவுகள்

சிலம்பு மக்கள் காப்பியமாக அமையப் பெறினும் மக்களை வழிநடத்திய நிலையில் மன்னர்கள் இருந்தமையை எடுத்துக்கூறுகிறது.

தனிமனிதனைச் சார்ந்த தொடக்கநிலை செயலானது சமுதாயம் சார்ந்த தொடர்நிலை செயலாக மாறும் போது அது பழக்கவழக்கமாக மாறும் நிலையை உணர்த்துகிறது.

மக்களுக்கு சிறந்த ஆட்சிப் பொறுப்பினை வழங்கும் வகையில் கோலாட்சி அமைந்திருந்தமையைக் காணலாகிறது.

முடிசூடல் நிகழ்வு அரசனது வாழ்வில் மிகப்பெரிய அளவில் அமைந்திருந்தமையும், முடிசூடல் என்பது தந்தைக்குப் பின் மகன் வயது காரணமாகவோ இறப்பின் காரணமாகவோ நிகழ்ந்திருக்கும் நிலையையைப் புலப்படுத்துகிறது.

நன்மொழிகூறல் என்பது சிலம்பில் காணப்படும் முக்கியச் சிறப்பு மன்னன் அல்லது மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும் போது இந்நிகழ்வு நடைபெற்றமையை அறியலாம்.

வாழ்த்து என்பது புகழ்ந்து கூறல் என்பதும் மன்னனைப் புகழ்ந்து போற்றியத் திறத்தையும் காணமுடிகிறது.

திறை நிலை என்பது தன் ஆட்சிக்குக் கீழ் உள்ள நாடுகள், தன்னால் சிறைபட்ட நாடுகளானது திறை செலுத்தியதை சிலம்பு எடுத்துக்கூறுகிறது.

முரசறைதல் என்பது நன்செய்திகளைக் கூறப் பயன்படுத்தியது என்பதும், பறையானது அச்ச செய்திகளைக் கூறப்பயன்படுத்தியது என்பது தெரிகிறது.

முரசும், பறையும் வள்ளுவன் என்பவனால் அறைந்து செய்திகள் கூறியதைக் காணமுடிகிறது. வள்ளுவனுடன் மகளிரும் அமர்ந்து நற்செய்தி கூறியதன் வாயிலாக செய்தி பரப்பாளராகப் பெண்களும் இருந்தனர் என்பது புலப்படுகிறது.

தன் பிறந்த நாளின் போதும், முடிசூட்டு குற்றவாளிகள் மற்றும் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்தமையைக் காணமுடிகிறது.

மேற்கூறியவை மன்னர்களின் வாழ்நிலையில் பழக்கவழக்கங்களாக அமைந்திருந்தமையை சிலம்பானது திறம்பட எடுத்தியம்புகிறது.


துணைநின்ற நூல்கள்

சிலம்பொலி சு.செல்லப்பன், சிலப்பதிகாரம், பாரதி நிலையம், சென்னை 2016.
சுப்பிரமணியன் ச.வே, சிலப்பதிகாரம், கங்கை புத்தக நிலையம், சென்னை 2001.
தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை 2002.
கைலாசபதி க, பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும், நியு செஞ்சுரி புக் ஹவுஸ் சென்னை 1999.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.