ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே ஆங்காங்கே சிதறிக் கிடந்த நூல்களைத் தொகுத்து விளக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் நமது சான்றோர் ஆவார். அச்சிடப்பட்டு தொகுத்துரைத்த காகிதங்களை நூல் வடிவத்தில் படிப்பதற்கு உறுதுணையாய் பாடுபட்டுள்ளனர். மலிந்த நூலாயினும் அதன் தரத்தையும், இன்பச்சுவையையும் பருகிட வாசகர்களுக்கு உதவியாய் இருந்தது. இணையத்தின் வரவால் விலையற்ற பொருளாக நூல்கள் எளிதாகக் கற்க தற்போது வெளியிடப்பெறுகின்றன. காலநேரத்தை வீணாக்காமல் கையடக்கமாகக் கொண்டு செல்ல தமிழ் இலக்கியங்கள் புதுவடிவெடுத்து வருகின்றது. கருத்து, கற்பனை, உணர்ச்சி, வடிவம் என்ற கட்டமைப்பில் படைக்கப்பெறும் கவிதை வடிவங்களை இணையவழியில் அச்சின்றி புகுத்துவது வரவேற்கத்தக்கதாகின்றது. இவற்றால் நூல்களின் எண்ணிக்கை அளவு குறையக் கூடும் என்பது வருந்ததத்தக்கது ஆகும். ‘தமிழ் கவிதைகள்’ என்ற தலைப்பில் கௌதம் என்பவரால் வெளியிடப்பெற்ற இணைய கவிதைகளை மட்டும் சமூக நோக்கில் ஆராய்வதாக இக்கட்டுரை படைக்கப்பெறுகின்றது.

உழைப்பின் மேன்மை

“உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து” 1

என்ற வள்ளுவரின் வாக்கிற்கிணங்க உழவனே உலகத்திற்கு அச்சாணியாக இருப்பதால் நாம் உழைப்பின் மேன்மை உணரமுடிகின்றது. மூடநம்பிக்கையின்றி உடல் உழைப்பால் முன்னேறினால் எல்லா வளங்கள் பெறக் கூடும். உழைப்பாளரின் மகத்துவம் பற்றி கூறுகையில்,

“கழுதைக்கு
கல்யாணஞ் செஞ்சு வச்சா
கொட்டிப்புடும் மழை
அம்பலக்காரர்
அழுத்திச் சொல்ல
மழை கொட்டாது
……………….
உடலால் உழைப்பதற்கு
ஊருச் சனமிருக்கு
வெட்டுகிற மண்ணெடுத்து
கொட்டுவதற்கு நாங்க இருக்கோம்…..
ஒரே மாசத்துல கெணறு
வெட்டி முடிச்சிடலாம்……
நட்ட பயிர் கடத்திலாம்….
நாட்டை கரை
சேர்த்திடுவோம்
எல்லோரும் சேர்ந்துழைச்சா
எதுக்கய்யா கவர்மெண்டு?” (கு.கௌதமன்., தமிழ்கவிதைகள் , கவர்மெண்டு……?)

மேற்கண்ட கவிதை வரிகள் உழைப்பின் உன்னத நிலையை விளம்புகின்றன. என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில் ஏன்கைகளை ஏந்த வேண்டும் அரசாங்கத்திடம் என்ற வினா நோக்கோடு ஆசிரியர் வினவுகிறார். இங்கு உழைக்கும் தோழர்கள் ஒன்று கூடினால் நாளைய நாடு நமதாக வெற்றி பெறலாம் என்பது குறிக்கப்பெறுகின்றது. மழையையோ, அரசாங்கத்தையோ நம்பி வாழாமல் உழைக்கும் கைகளை நம்பி வாழ வேண்டும் என்பது சமூக எழுச்சியாகப் படைக்கப்பெறுகின்றது. இதே கருத்து,

“பற்பல பேர் சேர்க்கை பலம் சேர்க்கும் செய்தொழிலில்
முற்போக்கும் உண்டாகும் முன்னிடுவீர்”2

என்று நாட்டுமக்கள் கூடித்தொழில் செய்யும் முறைமையை பாரதிதாசன் தமது கவிதைகளில் சாடியுள்ளார். கூடித் தொழில் செய்யாக் குற்றமே வறுமை ஏற்படக் காரணம் என்பது புலனாகிறது.

சுற்றுச்சூழல் பாதிப்பு

‘வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் நாட்டுவளம் காப்போம்’ என்கிறோம். நவீன தொழில் நுட்ப சாதனங்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளது. மக்கள் தொகைப் பெருக்கமே காட்டழிவிற்கு முக்கிய காரணிகளாகின்றது. உணவு உற்பத்திப் பெருக்கத்திற்காகவும், புதியதாய் தொழிற்சாலைகளை ஏற்படுத்துவதற்காகவும் மரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. பழுத்த மரம் நாடித் திரியும் பறவைகள் கூட வாழ வழியின்றி தவிக்கின்றது. பச்சைப் பசேல் என்ற வயல்வரப்பெல்லாம் மாளிகை குளிர்சாதன அறைகளாய் மாறி குளுமை ஊட்டுகின்றது. இத்தகு சூழலியல் மாற்றத்தை உணர்த்தும் கவிதைவரிகள் இதோ,

“குடைகள் போல் நிழல்
பரிமாறிக் கொண்டிருந்த
பெரு மரங்களையெல்லாம்
நான்கு வழிப் பயணத்துக்காக
பிடுங்கியெறிந்து
பறவைகளையும் பசுமைகளையும்
விரட்டி அடித்தாயிற்று…………..

மரங்களை இழந்த பறவைகளும்
தங்களது மொழியினை மறந்த படி
பறந்து கொண்டிருக்கின்றது
மவுனத்தைச் சுமந்த படி” (கு.கௌதமன்., தமிழ்கவிதைகள்,மவுனம் சுமக்கும் பறவைகள்)

என்பதாகும். இங்கு மரங்களை வளர்க்க உதவும் பறவைக் கூட்டத்தின் வாழ்வு கேள்விக்குறியாகின்றது. மனிதனின் வரம்பு மீறிய செய்கையால் இயற்கை அழிவு பேராபாயத்திற்குரியதாகின்றது.

மற்றொரு கவிதையில் வயலும் வயல் சார்ந்த மருதநில வளங்கள் காலப்போக்கில் அணுஉலை தொழிற்சாலைகளாய் மாறி விடும் என்பதனைப் பின்வருமாறு எடுத்துரைப்பர்.

“………கயலினம் சுமந்த ஓடை
கழிவுநீர் சுமக்க லாச்சு
வயல்களில் மேய்ந்த மாடு
வண்டியில் ஏற லாச்சு……
விலங்குகள் பறவை மற்றும்
விரிபுவி உயிர்கள் எல்லாம்
தொலைந்துதான் போன தன்றி
தோற்றது உழவர் வாழ்வும்……” (கு.கௌதமன்., தமிழ்கவிதைகள்,வயலும் வயல் சார்ந்த இடமும்)

என்பதன் வழி மனிதன் இயற்கையை ஆட்டிப் படைப்பதால் எல்லா உயிரினங்களோடு பூமியும் சேர்ந்து அழியும் என்பது புலனாகிறது. பசுமை வளம் காக்கும் வயல்வெளிகளே உழவனின் சோற்றுக்கு எமனாக அமைகின்றது. இவையே சூழலியல் சார் பல்லுயிரினப் பாதுகாப்பின்மைக்கு நற்சான்றாகும். தொழிற்சாலை விஷக் கழிவுகளால் நிலத்தின் மாசுஅடையும் என்ற சூழலியல் பாதிப்பு ஈண்டு பதிவாகின்றது.

பசி

‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்’ என்பது பொன்மொழி. ஓரறிவு முதல் ஆறறிவு படைத்த அனைத்து உயிர்களை உள்நின்று உடற்றுவது பசியாகும். மரங்களின் அழிவால் உயிரினங்கள் உணவுமுறை பேரளவு பாதிக்கப்பெறுகின்றது. புல், பூண்டுகளை நம்பி வாழும் கால்நடைகள் சுவரொட்டிகளை உணவாக உட்கொள்ளும் சூழலியல் பாதிப்பு பெரிதும் வருத்ததற்குரியதாகும். ஆபாச படங்களைக் கொண்டு தனது பசியைப் போக்கும் அஃறிணை செயல்பாட்டினை,

“சமூகப் பணியில் மாடுகள்
நகரத்துச் சுவர்களில்
ஆபாச சுவரொட்டிகள்” (கு.கௌதமன்., தமிழ்கவிதைகள் , பசி)

என்ற கவிதைவரிகள் சுட்டுகின்றன. இக்கவிதை சமூக நலப்பணி என்ற பெயரில் எள்ளல் தன்மையை விளக்குகின்றது. இருப்பினும் மறைமுகமாக விளம்பரதாரர்களின் வியாபார நோக்கினைப் படம்பிடித்துக் காட்டுகிறது. மழையில்லையேல் மரமில்லை மரமில்லையேல் மண்ணிற்கு உணவில்லை என்ற நிலைமாறி விட்டமை ஈண்டு நோக்கத்தக்கது.

வரதட்சணை

வறுமையை விடக் கொடிது வரதட்சணை எனலாம். மணப்பெண் வீட்டார் தனது பிள்ளைகள் குறைவின்றி வாழ சீர்வரிசை செய்வது மரபாகும். மணமகனுக்கு நகைகள், பணம், அதோடு ஆடம்பரப் பொருட்கள் போன்றவற்றை அன்பளிப்பாக வழங்குவர். இருப்பினும் பேராசையால் வன்கொடுமைக்கு ஆளாகும் சூழல் தற்போது நிலவுகின்றது. புரட்சி செய்யும் பெண்கள் கூட புத்திக்கூர்மையாய் வரதட்சணையை கைம்மாற்றுவதாக ஆசிரியர் பின்வரும் கவிதை வழி சுட்டுகிறார்.

“அவருக்கு அரை பவுனோட
கொறை பவுன் சேத்து
மொக்கையா மோதிரத்த
தீபாவளிக்கு போட்டுடுங்க
அப்படியே
கத்தா கட்டிலையும்
பொங்கச் சீருல
குடுத்திடுங்க….
என் மூலமா
நீங்க விட்டத
நாத்தனா மூலமா
நாம மீட்டுப் புடலாம்” (கு.கௌதமன்., தமிழ்கவிதைகள் , முதல் கடுதாசி)

என்ற கருத்து ஈண்டு குறிப்பிடத்தக்கது. இதில் மறைவாக வரதட்சணையை எதிர்க்கவும் அதீதமாக பணம் பெற நினைக்கும் மனிதரை ஏமாற்றும் மதிநுட்பம் தெளிவாகின்றது. சட்டப்பூர்வமாக வரதட்சணை பெறுவோருக்குத் தண்டனைகள் அரசால் வழங்கப்பெறுகின்றது.

தேர்தல்

மக்களவை தேர்ந்தெடுக்கும் அரசியல் சிம்மாசனம் தேர்தல் ஆகின்றது. தொன்றுதொட்டு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை விதம் மக்கள் தங்களுக்கென்று ஒருநபரை உறுப்பினர்களைத் தேர்வு செய்வர். இத்தேர்தல் பணியோ இன்று வியாபாரமாகி விட்டது. பொதுமக்களின் அடிப்படைத் தேவைகள் அரசாங்க அதிகாரிகளாலும், அரசு அலுவலர்களாலும் நிராகரிக்கப்பெறுகின்றது. ஓட்டுப்போடும் உரிமைகள் கூட மறுத்துரைக்கப் பெறுவதாகப் பின்வரும் கவிதை வரிகள் சாடுகின்றன.

“…..ஒங்க ஊரு
ஓட்டெல்லாம்
ஓட்டு லிஸ்ட்டுல
விட்டுப் போச்சே……
இனிமே சேக்கிறதுக்கு
இப்போதைக்கி வழியில்ல
அதனால…..
அடுத்த முறை பாக்கலாம்
ஓட்டுக்கு நிக்கிறவரு
ஒரு வழியா சொன்ன போது
அசந்து போச்சு ஊருசனம்!”(கு.கௌதமன்., தமிழ்கவிதைகள் , அஞ்சுவருசம் போச்சேப்பு!)

இங்கு மக்கள் இல்லாமலே கள்ள ஓட்டுகள் போடும் சூட்சமம் வெளிப்படுகிறது. செல்லாத நாணயமாக மக்கள் தொகுதிக்கேற்ப மட்டும் பயன்படுத்திக்கொள்ளும் தந்திரமான அரசியல் ஊழல்கள் ஈண்டு வெளிப்படுகின்றன.

முதியோர் இல்லம்

மகட்பேறாகிய நற்பிள்ளையைப் பெறுவதற்கு பெற்றோர்கள் தவமாய் இருப்பர். மகன் தந்தைக்குச் செய்யக் கூடிய கைம்மாறு பிறர் புகழுமாறு வாழ்ந்து காட்டுவதாகும். இது பற்றி வள்ளுவர் கூறுகையில்,

“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என் நோற்றான்கொல் எனும்சொல்”3

என்பர். இன்றைய காலக் கட்டத்தில் தனிக்குடும்பத்தின் வருகையால் பெற்றோர்கள் முதியோர் இல்லங்களில் சேர்க்கப்பெறுகின்றனர். காலப்போக்கில் மனிதன் தன்னிச்சையாக வாழும் சூழல் நிலவுகின்றது. இருப்பினும் பெற்றோரின் இதயத்துடிப்பு உன்னதமாய் பிள்ளைகளை எண்ணி ஏங்கி செயலாற்றும். இவ்வுண்மையை,

“உனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர்
இதயம்………..
இன்றும் கூட துடிக்கிறது முதியோர்
இல்லத்தில்
என் மகன் எப்படி இருக்கிறானோ
என நினைத்து?” (கு.கௌதமன்., தமிழ்கவிதைகள் , தாயின் துடிப்பு)

மேற்சுட்டிய கவிதை வரிகள் தாய்மையின் அன்பினைச் சித்திரிக்கின்றன. இதன் வழி பிள்ளைகள் பெற்றோரை விட்டு நீங்கினாலும் பெற்றோர் பிள்ளைகளை மறப்பதுமில்லை நினைக்காமல் இருப்பதுமில்லை. இதே கருத்து,

“உன்னை சுமந்த பத்து மாதத்தில் ஒரு கணம் கூட பாரமாய் எனக்கு இருந்ததில்லை!!
ஆனால் இப்போது ஒவ்வொரு கணமும் பாரமாய் இருக்கிறது!!
என் கண்கள் வாசலையே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது
என்றாவது ஒரு நாள் என்னை திரும்ப அழைத்து செல்வாய் என்று!!
எனினும் மறவாதே என் செல்வமகனே!!
உனக்கும் ஒருநாள் முதுமை காத்திருக்கிறது என்று!!!!”4

என்ற இணையவழி கவிதைகள் முதியோரின் வாழ்வியலை எடுத்தாள்கின்றது.

முடிவுரை

இதுகாறும் பல்வேறு இலக்கியங்கள் தோன்றினாலும் சமூக உணர்ச்சிகளை எள்ளல்பட எடுத்துரைப்பதில் கவிதையின் பங்கு அளவிடமுடியாது. இணையதள எழுத்தாளரின் கவித்திறம் சமூகப்பிரச்சனையாகிய சுற்றுச்சூழல் பாதிப்பு, உழைப்பின்மேன்மை, வரதட்சணை, தேர்தல், முதியோர் இல்லம் போன்ற தலைப்பின் கீழ் சூட்சமமாக உணர்ச்சி ததும்ப எழுதியிருப்பது பாராட்டுத்தக்கது. எதார்த்த வாழ்வில் நிகழும் அவலங்களை அறிவுணர்ச்சிக்கு சவாலாக ஏற்று இக்கவிதை அமையப்பெற்றுள்ளன.

அடிக்குறிப்புகள்:

1. பரிமேலழகர் உரை., திருக்குறள், 1032
2. தமிழ்வேட்பன் (ப.ஆ)., பாரதிதாசன் கவிதைகள், ப. 105.
3. பரிமேலழகர் உரை., திருக்குறள், 70
4. கவிதை ரசிகை., முதியோர் இல்லம், 29 மே2017.

துணைநூற்பட்டியல்:

1. தமிழ்வேட்பன் (ப.ஆ).,பாரதிதாசன் கவிதைகள், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், ப. எண். 24, கிருஷ்ணா தெரு, பாண்டி பஜார்- தியாகராய நகர், சென்னை. முதற்பதிப்பு-1995.
2. பரிமேலழகர் உரை., திருக்குறள், பழனியப்பா பிரதர்ஸ், 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை, முதற்பதிப்பு- 1962.
3. WWW. Tamil Kavithaigal. GowthamanK. com
4. கவிதை ரசிகை., முதியோர் இல்லம், 29 மே2017.


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.