ஆய்வுக் கட்டுரை வாசிப்போமா?பால் எனும் சொல் தமிழில் பிரிவு எனப் பொருள்படும். இதனை ஆங்கிலத்தில் Gender என்பர். இத்தகைய பால் எனும் அடிப்படையில் பிரிவாகக் கொண்டு ஆண்பால், பெண்பால் எனப் பகுப்பர். இத்தகைய பாகுபாடானது உலக மொழிகள் பலவற்றிலும் உள்ளது. ஆனால், உலக மொழிகளில் காணப்படும் பால் பகுப்பினை எடுத்து நோக்கின் “இயற்கைப் பால் பகுப்பு, இலக்கண பால் பகுப்பு என இரண்டு வகையாகப் பகுக்கலாம். இயற்கைப் பால் பகுப்பு என்பது உலகில் காணப்படும் மனிதர்களையும், விலங்கு, இடம், மரம், ஆறு போன்ற பிறவற்றையும் அடிப்படையாகக் கொண்டது ஆகும். இலக்கணப் பால் பகுப்பு ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பானது. இலத்தீன் மொழியில் நட்சத்திரங்களைப் பெண் பாலாகப் பகுப்பர்” . அதுபோலவே இந்தி மொழியில் உயிரில் பொருட்களையும் ஆண்பால், பெண்பால் எனப் பகுப்பர். இலக்கணப் பால் பகுப்புக்கு முக்கியக் காரணம் மொழியின் அமைப்பேயாகும்.

இதனடிப்படையில் தமிழில் உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர்பால் எனப் பகுக்கின்றனர். “தமிழ் மொழியில் உயர்திணையை ஆண்பால், பெண்பால், பலர் பால் என மூன்றாகப் பகுப்பதற்கு காரணம் தமிழ் மொழியில் காணப்படும் பதிலீடு பெயர்களேயாகும். அவன், அவள், அவர் என்ற மூன்று பதிலீடு பெயர்களை உயர்திணை கொண்டிருப்பதால்தான் இது மூன்று பால்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. உயர்திணையில் ஒருமையில் ஆண், பெண் வேறுபாடு உள்ளதேயன்றிப் பன்மையில் இவ்வேறுபாடு இல்லை. இதனால்தான் பலர்பால் எனப் பிரித்தனரேயன்றி ஆண்பால் பன்மை என்றோ, பெண்பால் பன்மை என்றோ பிரித்திலர் எனத் தமிழில் இலக்கணப் பகுப்பாக, உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால் என்று பிரிக்கக் காரணம் அறியலாம்.

“தமிழ் முதலிய திராவிட மொழிகளில் பெயர்ச் சொற்கள் திணை, பால் பாகுபாடற்ற நிலையிலிருந்து இரு திணை ஐம்பாற் பகுப்பு, படிப்படியே வளர்ந்து அமையப் பெற்றது” தமிழ் வரலாற்று இலக்கணத்தில் ஆ வேலுப்பிள்ளை குறிப்பிடுகின்றார். ஆகவே இது தொல்காப்பியர் காலத்துக்கு முந்தைய நிலை எனவும் உணரலாம். இவ்வாறுள்ள பால் பகுப்பினைக் கொண்டு தமிழ் மொழியில் உயர்திணைப் பெயர், அஃறிணைப் பெயர், விரவுப் பெயர்கள் என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவாக மனிதரைச் சுட்டும் பெயர் உயர்திணை என்றும், மனிதர் அல்லாத ஏனைய உயிருள்ள உயிரற்ற பொருள் அனைத்தையும் சுட்டும் பெயர்கள் அஃறிணை என்றும், இரண்டிலும் விரவி வருவதை விரவுப் பெயர்கள் என்றும் பகுப்பர்.

இப்பாகுபாடானது வாக்கியத்தில் எழுவாய்க்கும், பயனிலைக்கும் உள்ள உறவின் அடிப்படையில் அமைகின்றது தமிழில் பால் என்ற பாகுபாடானது ஆண், பெண் என்ற அடிப்படையிலும், ஒருமை, பன்மை என்ற அடிப்படையிலும் அமைந்துள்ளது. உயர்திணை ஒருமைப் பெயர்கள் ஆண்பால், பெண்பால் என்றும், உயர்திணை பன்மைப் பெயர்கள் பலர்பால் எனவும் பகுக்கப்படுகின்றன. அஃறிணை ஒருமைப் பெயர் ஒன்றன் பால் எனவும் அஃறிணை பன்மைப் பெயர்கள் பலவின் பால் எனவும் வகைப்படுத்தப்படுகின்றன.

அஃறிணையும் உயர்திணையும்

தமிழ் மொழி இலக்கணப் பகுப்பில் அஃறிணை உயர்திணை எனும் பகுப்பு பல நுட்பமான செய்திகளை உள்ளடக்கியதாகவே காணப்படுகிறது. இதன் பெயர் சூட்டலும், பொருண்மையும் மிகுந்த மானுட நேய மாண்பினை கொண்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. உயர்திணை எனும் சொல்லுக்கு எதிர்சொல் கீழ்த்திணை அல்லது தாழ்த்திணை எனவே இடம்பெறும். ஆனால் அவ்வாறு வருமானால் அது இழிவான பொருண்மையை கொண்டதாக அமைந்துவிடும் எனக்கருதிய தொல்காப்பியர் உயர் அல்லாத திணை “அஃறிணை” என பெயர் சூட்டியுள்ளார்.

குழந்தையும் அஃறிணையும்

ஆங்கில இலக்கணம் உலகப்பொருட்களை உயிர் உள்ளன, உயிர் அற்றன எனப்பகுக்க தமிழ் இலக்கணம் அஃறிணை,உயர்திணை என மானுட நேய நோக்கில் பகுப்பதை கண்டோம். அதைப்போல தமிழ் இலக்கணம் குழந்தைகளை அஃறிணையில் சேர்க்கின்றன. அதற்குரிய காரணமாக மனிதன் என்பவன் உடல் தோற்றத்தால் மட்டும் அளவிட முடியாது எனவும் உள்ளத்தின் வளர்ச்சியுடன் மட்டுமே அவற்றை உறுதி செய்திட முடியும் என அறுதியிட்டு கூறுகின்றது.

பால் காட்டும் விகுதிகள்

அவற்றுள் ஆண்பால் பெயர்கள் அன், ஆன் எனும் விகுதிகளையும், பெண்பால் அள், ஆள் எனும் விகுதிகளையும் இலக்கண நிலையிலும் பேச்சு நிலையில் ஐ, இ, ஆட்டி, ஆத்தி போன்ற விகுதிகளையும் பெற்று வரும். பலர் பால் விகுதிகளாக அர், ஆர், கள், ஓர், மார் முதலியன வரும். ஒன்றன் பால் விகுதியாக, „து‟ என்பது வரும். பலவின்பால் விகுதியாக, „கள்‟ என்பது வரும். இவ்விகுதிகள் இலக்கிய வழக்கு, பேச்சு வழக்கு எனும் இரட்டை வழக்கினைக் கொண்டுள்ளன. தமிழ் மொழியில் மேற்காணும் பால் காட்டும் விகுதிகள் உள்ளன. இனி, பேச்சு வழக்கினை மட்டுமே கொண்டுள்ள களப்பகுதிப் பழங்குடி மொழிகளில் காணப்படும் பால் காட்டும் விகுதிகளை அதன் பயன்பாட்டு நிலையைக் கொண்டு காணலாம்.

ஆண் பால் விகுதிகள்

ஆண்பாலை உணர்த்தும் விகுதிகளைப் பெற்று வருவன ஆண்பால் விகுதிகள் எனப்படும். “ஆண்பால் பெயர்கள் எழுவாயாக வரும்போது அவற்றின் பயனிலையாக வரும் வினைமுற்றுக்கள் ஆண்பால் காட்டும் நிலையில் ஆண்பால் விகுதிகளைக் கொண்டு நிற்கும்”

இவ்வாறு வரும் விகுதிகள் ஆண்பால் பெயர்களின் பதிலாக உள்ளதைக் காணலாம். ஆண்பால் விகுதிகளைக் குறித்து தொல்காப்பியர்,

“னஃகான் ஒற்றே ஆடூஉ அறிசொல்” (தொல். 488)

“அன் ஆன் அள் ஆள் என்னும் நான்கும்

ஒருவர் மருங்கில் படர்க்கைச் சொல்லே” (தொல். 690)

என்று குறிக்கிறார். இதன்மூலம் ஆண்பால் விகுதிகளாக அன், ஆன் ஆகியன உள்ளதாக அறியமுடிகிறது. இதனோடு „ஒன்‟ என்பதும் வருமென்கிறார். சங்க இலக்கியத்தில் காணப்படும் ஆண்பால் விகுதிகளைக் கணக்கிடும்போது “சங்க இலக்கியத்தை முழுமையாகக் கொண்டு அன் விகுதி 1159 இடங்களிலும், ஆன் விகுதி 652 இடங்களிலும், ஒன் விகுதி 519 இடங்களிலும் பயின்று வந்துள்ளதாக அறியமுடிகிறது இவ்வாறுள்ள நிலையில் ஒன் எனும் விகுதி சங்க காலத்திற்குப் பிறகு வழக்கொழிந்து விட்டது. தற்கால நிலையில் „அன்‟, „ஆன்‟ எனும் விகுதிகளேஆண்பாலை உணர்த்தும் விகுதிகளாக உள்ளமையைக் காணமுடிகிறது. நீலகிரி மாவட்ட பழங்குடி மக்களின் வழக்கில் உள்ள ஆண்பால் விகுதிகள் எவ்வாறு பழந்தமிழுடன் எத்தகு உறவினை கொண்டுள்ளது என்பதை காணலாம்.

காட்டுநாயக்கர் பழங்குடிகளிடம் ஆண்பால் விகுதிகளாக ‘என்’ பின்வரும் நிலையில் உள்ளதைக் காணமுடிகிறது.

ஒப்பென் – ஒருவன் , கொல்லென் – கொல்லன் ,குரும்பென் – குறும்பன் தொட்டவென் , பெரியவன் „என்‟ எனும் இவ்வாண்பால் விகுதியானது, தமிழ் மொழியில் காணப்படும் „அன்‟ விகுதியோடு தொடர்புடையதாக உள்ளது.

பெட்டக்குறும்பர் பழங்குடிகளிடம் ஆண்பால் விகுதிகளாக „அன், என், ன்‟ போன்றவை உள்ளன. அவற்றுள் தமிழ் மொழியிலிருந்து வேறுபட்டுக் காணப்படும் விகுதிகளாக „என், ன்‟ ஆகியன உள்ளன. ஆனால், பொருண்மை நிலையில் இவ்விகுதிகள் „அன்‟ என்பதோடு தொடர்புற்றுள்ளதைக் உணரமுடிகிறது. இதனை பின்வரும் சான்றுகளோடு காணலாம்.

‘என்’ தோளென் – பணியன், குர்ப்பென் – குறும்பன், மூனென் – மூடன்

‘அன்’ உடுகன் – இளைஞன் , புச்சன் - புதியவன்

‘ன்’ பிடாலன் – முள்ளுக்குறும்பன் , பௌன் - வெள்ளன் , பட்ன் – செட்டி , தட்ன் - ‘தட்டான் , தொட்ன் - பெரியவன் , குட்ன் - குருடன

முள்ளுக்குறும்பர் வழக்கில் காணப்படும் ஆண்பால் விகுதிகளாக „என்‟, „அன்‟ ஆகியவை உள்ளன.

‘என்’ - அப்பென் – அப்பா , பெப்பென் – பெரியப்பா , எளாப்பென் – சித்தப்பா அம்மச்சென் – மாமனார் ,அனியென் - தம்பி

‘அன்’ - அலியன் - மச்சான் , முத்தப்பன் – மூத்தவர் , மருமெகன் – மருமகன், அம்மாவன் – தாய்மாமன் என வழக்கில் உள்ளன .

பணியர்களின் வழக்கில் ஆண்பால் விகுதிகளாக வருவன „என்‟, „ஆன்‟, „அன்‟, „பெண்‟, „காரென்‟ ஆகியனவாகும்.

‘என்’ - அப்பென் – அப்பா, மகென் – மகன் , பெரென் – பெயரன்

‘காரென்’ - பணிக்காரென் – வேலைக்காரன் , காக்காரென் - இசுலாமிய மலையாளி

மேற்கண்ட சான்றுகளின் அடிப்படையில் பழங்குடிகளான காட்டுநாயக்கர், பெட்டக்குறும்பர், முள்ளுக்குறும்பர், பணியர் ஆகியோர் வழக்கில் ஆண்பால் ஈறுகளாக அன், ஆன், என், ன், இ, வென், பென், காரென் ஆகியவை காணப்படுகின்றன. இவற்றைத் தமிழில் காணப்படும் ஆண்பால் ஈறுகளான அன், ஆன் ஆகியவற்றோடு ஒப்பிட்டு நோக்கும் போது இவர்களது வழக்கில் காணப்படும் ஒலி மாற்ற நிலைகளால் மட்டுமே அன், ஆன், தவிர்த்த „என்‟, „ன்‟, „இ‟, „வென்‟, „பென்‟, „காரன்‟ ஆகிய ஆண்பால் ஈறுகள் வேறுபட்டு வருவதை உணரமுடிகிறது.

பெண்பால் விகுதிகள்

பெண்பால் பெயர்களும் ஆண்பால் பெயர்களைப் போன்று எண், திணை, பால் காட்டுவனவே. இவ்விலக்கணக் கூறுகள் அனைத்தையும் ஒருசேரக் காட்டுவனவாகப் பெண்பால் விகுதிகள் உள்ளன. பண்டைத் தமிழில் பெண்பால் பதிலிடு பெயர்களாக அவள், இவள், உவள் என்று மூன்று பதிலிடு பெயர்கள் காணப்படுகின்றன. தொல்காப்பியரும் „அவள், இவள், உவளென வரூஉம்‟ பெயரும் என்கிறார். பழந்தமிழ் இலக்கியங்களான சங்கப்பாக்களில் இம்மூன்று பெண்பால் பெயர்களும் காணக்கிடக்கின்றன. “இவள் என்ற பெயர் சங்கப் பாக்கள் அனைத்திலும், அவள் என்பது பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு ஆகியவற்றில் மட்டும் காணக்கிடக்கின்றன. உவள் என்ற சொல் பரிபாடலில் மட்டுமே காணப்படுகின்றது”

இவ்வாறு வரும் பெண்பால் பெயர்களுள் காணப்படும் விகுதிகளைக் காணலாம். பழந்தமிழில் அள், ஆள், ஒள், இ ஆகியன பெண்பாலைக் குறித்து வரும் விகுதிகளாக உள்ளன. இவ்விகுதிகள் ஆண்பால் விகுதிகளில் வேறுபடுகின்றனவே அன்றி ஆண்பால் விகுதிகளின் பண்புகள் அனைத்தையும் பெறுகின்றன. “இவ்விகுதிகளுள் பழந்தமிழ்ப் பாக்களில் „அள்‟ பெரும்பான்மையும் பயின்று வந்துள்ளது எனவும் பின் பழந்தமிழ் நூற்களில் ஆள் விகுதி பெருவரவினதாகவும் உள்ளது எனவும், „ஒள்‟ விகுதி முன் பழந்தமிழில் மிகுந்தும் பின் பழந்தமிழ் குறைந்தும், „இ‟ என்ற விகுதியும் மிகவும் குறைந்தும் காணப்படுவதை அறியமுடிகிறது”

மேற்காணும் பெண்பால் விகுதி நான்கனுள் இன்றளவும் பயன்படுவது „ஆள்‟ என்ற விகுதி என்பதை அறியமுடிகிறது. தற்காலத் தமிழில் அள், ஆள், ஒள், இ எனும் பெண்பால் விகுதிகளோடு „ஐ‟, „ஆட்டி‟,„ஆத்தி‟ போன்ற விகுதிகளும் சேர்ந்துள்ளன. இவ்வாறு தமிழில் இலக்கிய நிலையிலும் வழக்கு நிலையிலும் காணப்படுகின்றன. இனி, பழங்குடிகளது வழக்கில் காணலாகும் பெண்பால் விகுதிகளைக் காணலாம்.

ஓளு - பெரியோளு - பெரியவள் , நல்லோளு -நல்லவள், செறியோளு - சிறியவள்

மேற்காணும் நிலைகளில் முள்ளுக்குறும்பர் வழக்கில் காணும் பெண்பால் விகுதிகளில் „ட்டி‟, „ஆட்டி‟ எனும் விகுதிகள் தமிழின் பெண்பால் விகுதியான „ஆட்டி‟ என்பதோடு வைத்து எண்ணத்தக்கனவாய் உள்ளன. தவிர „ளு‟ எனும் விகுதி „அள்‟ எனும் தமிழ் விகுதிக்கு நிகரான பயன்பாட்டைக் கொண்டுள்ளதைக் உணரமுடிகிறது. „இ‟ எனும் விகுதியும் தமிழ்ப் பெண்பால் விகுதியான „இ‟ என்பதோடு எண்ணத்தக்கது. „ச்சி‟ என்பதும் „இகரப்‟ பெண்பால் விகுதியோடு தொடர்புடையது. முள்ளுக்குறும்பர் வழக்கில் தனித்தன்மையான விகுதியாகக் காணப்படுவது „ஓளு‟ என்பது மட்டுமே. பழந்தமிழில் காணப்படும் „ஒள்‟ எனும் பெண்பால் விகுதியோடு தொடர்புடையது என்பது இதன் தனித்தன்மையாகும். வேறு பழங்குடி மொழிகளில் இவ்விகுதியைக் காண இயலவில்லை. இவ்விகுதி முள்ளுக்குறும்பர் மொழியினது பழந்தமிழ் உறவு நிலையைக் காட்டுகிறது.

இவ்வாறு பழங்குடி மக்கள் வழக்கு மொழிகளில் பால்பகுப்பு ஆண்பால் விகுதிகளாகவும் பெண் பால் விகுதிகளாகவும் பழந்தமிழுடன் உறவுடையதாகவும் உள்ளதை காணும் பொழுது இவை திராவிட மொழி உறவின் நிலையினை உணர்த்துவதாகவே உள்ளது.

பார்வை நூல்கள்

1.தொல்காப்பியம் மூலம்

2.நன்னூல் மூலம்

3.ஆ வேலுப்பிள்ளை - தமிழ் வரலாற்று இலக்கணம்

4. செ துரைமுருகன் - கூடலூர் வட்டார தொல்பழங்குடிகளின் வழக்கு தமிழ் ஆய்வேடு


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.