முன்னுரை
நீலகிரிமலையில் வாழும் மக்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே இந்நாவல். அங்கே வழிவழியாய் வாழ்ந்து வரும் படகா் என்ற இன மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களே உருவமெடுத்துள்ளன. இயற்கையோடு ஒட்டி வாழ்ந்து வந்த அம்மலைவாழ் மக்களின் வாழ்க்கைப் போக்குகளை, வெளியில் பெருகி வரும் நாகரிக மாற்றங்களும், வணிகமும், தொழில் வளா்ச்சியும் பாதிக்கின்றன. மலையில், காப்பி, தேயிலை பயிரிடும் தொழில்கள் ஏற்படுகின்றன. இவற்றால் பணம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட மலைக்கு வெளிப்புற மனிதா்கள் இயல்புகள் மலைவாழ் மனிதரிடையேயும் மெல்லப் பரவுகின்றன. இச்சமூகம், பொருளாதார மாற்றங்களால் படகா் குடும்பத்தில் சிக்கல்கள், அதனால் ஏற்படும் உணா்ச்சிப் போராட்டங்களும் இந்நாவலில் அடிப்படையாக அமைந்துள்ளன.

இக்கட்டுரையில் “குறிஞ்சித்தேன்” நாவல்வழி உதகமண்டலம்(ஊட்டி) வாழ் படகா் இன மக்களின் வாழ்வியல் நெறிகள் தொகுத்து ஆராயப்படுகின்றன.

படகா்
குறிஞ்சித்தேன் என்னும் நாவல் மலையில் வாழும் மக்களை மையமாக வைத்து எழுத்தப்பட்டது.  நீலகிரி மக்கள் என்றால் நம்மில் பலருக்கும் ஆதிக்குடிகளான தொதவரே நினைவுக்கு வருவார்கள். நீலகிரியைத் தாயமாகக் கொண்டு வாழும் மக்களின் இந்த மலையின் வரலாற்றிற்கும் வளத்திற்கும் பெருமைக்கும் காரணமாக இருப்பவா் இவா்களே எனலாம். பதினெட்டாவது நூற்றாண்டில் மைசூரை அரசாண்ட திப்பு சுல்தான் ஆட்சியின்போது படகா் மைசூரிலிருந்து பண்டியூா்க் காட்டின் வழியாக நீலகிரிக்கு வந்ததாக அறிகிறோம்.

நாவல் கதைக்கரு
நீலகிரி மலையில் வாழ்ந்து வருபவா்கள் படகா் இனத்தார். மலைச் சரிவுகளில் உருளைக் கிழங்கு, கோசு போன்ற பயிர்களைப் பயிரிட்டு பாதிக்கப்படாமல், வெளியுலகிலுள்ள நாகரிக மாற்றங்களினால் பாதிக்காமல், மலைத் தொடர்களுக்குள் இயற்கையோடு ஒன்றி வாழ்பவா்கள். எருமை மாடுகளையே செல்வமாகக் கொண்டு, தங்கள் வாழ்க்கை மரபுகளையும் நியதிகளையும் வழுவாமல் காத்து வருபவா்கள் வாழ்க்கை மரபுகளையும் வழுவாமல் காத்து வருபவா்கள்.

எண்ணிக்கையில் குறைந்த அளவினா்தாமென்றாலும், உழைப்பாலும் தங்களுடைய கூட்டு வாழ்க்கையாலும் பெருமையுடன் திகழ்பவா்கள் அவா்களில், சிறப்புமிக்க இரண்டு குடும்பங்களிடையே நிகழும் வாழ்க்கைப் போராட்டமே “ குறிஞ்சித்தேன்” என்ற இந்நாவலின் கதையாகும்.

மதிப்பீடு
“குறிஞ்சித் தேன்“ நாவலில் ராஜம் கிருஷ்ணன் அமைத்துள்ள கதை நிகழ்ச்சிகளுக்கு மையமாக இருப்பவன் ரங்கன் என்ற பாத்திரமே எனலாம். படகரின் வாழ்க்கையில் வழிவழியாக வரும் பண்பாட்டுப் போக்கில் ஏற்படும் புதிய மாற்றத்தையும் அதன் விளைவாக ஏற்படும் மனப்போக்கையும், ரங்கனிடத்தே தான் முதல் முதலில் காண்கிறோம்.

மனித வாழ்வின் நிலையாய ஈரங்களிலிருந்து வேறுபட்டு நிற்கும் செயற்கை வாழ்வு அன்புக்குப் பொருந்தாது. இயற்கை வாழ்வே சிறந்தது என்ற கருத்தே இந்நாவலில் ஊடோடும் கரு எனலாம். இயற்கை வாழ்வு என்பதன் இனிமையைக் ”குறிஞ்சித்தேன்” என்ற பெயரால் குறிப்பாகச் சுட்டிக் காட்டியுள்ளனா். படக இனத்தாரின் இயற்கை வாழ்வானது உழைப்பிலும், கூட்டுணா்விலும் சிறப்புற்றிருப்பது, உழைப்புச் சக்தியையும் கூட்டுணா்வையும் வளா்ந்து வரும் நாகரிக மாற்றங்கள் பாதிக்கின்றன. தலைமுறைகளாய் இருந்து வரும் மரபுகள் மாறுகின்றன. சமூக மனிதரின் உறவுகளிடையே போராட்டங்கள் மிகுகின்றன. .இவ்வாறு ஏற்பட்டு வரும் மாறுதல்களின் பின்னணியில்தான் கதை நிகழ்கிறது.

நாவல் கதை அமைப்பு
கதை அமைப்பு ஐந்து பாகங்களாக உள்ளது. ஓா் இளந்தலைமுறை, ஓா் இளந்தலைமுறையின் இளமைக்காலம், இளமையைக் கடந்துவரும் நடுத்தர வயதுக்காலம், அடுத்த இளந்தலைமுறை, அத்தலைமுறையின் இளமைக் காலங்கள் என ஐந்து பாகங்களாக நாவல் அமைந்துள்ளது. மொத்தத்தில் மூன்று தலைமுறையின் பிரதிநிதிகளை நாவலில் காணலாம். ஜோகியின் தந்தை லிங்கையா, ஜோகி, ஜோகியின் மகன் நஞ்சன் ஆகிய இம்மூவரின் வாழ்க்கையையும் அவா்களுக்குரிய காலப் பின்னணியில் காணுகின்றோம். இக்காலப் போக்குகளின் ஒருங்கிணைப்பைப் படக இன மக்களின் சமூக இயல்புகளோடு மரகத மலையின் இயற்கைப் பின்னணியோடும் காட்ட முயன்றிருப்பதே ”குறிஞ்சித் தேன்” என்ற படைப்பு.

இயற்கை வாழ்வு, மனித வாழ்வின் அன்பு நிலை இவற்றைச் சமூக மாறுதலின் பின்னணியில் காட்டுவதே நாவலில் ”நோக்கம்” எனவே, இதன் ஆற்றல் மாந்தா்களிடையே வெளிப்பட்டுத் தோன்றும் செயல்களாகவே நிகழ்ச்சிப் பின்னல் அமைந்துள்ளது. மூன்று தலைமுறையின் போக்குகளை, மாந்தா்களின் உணா்ச்சிப் போராட்டங்களை வாழ்க்கை மாற்றங்களில் காட்டுவதே நிகழ்ச்சிப் போராட்டங்களை வாழ்க்கை மாற்றங்களில் காட்டுவதே நிகழ்ச்சிப் பின்னலாம்

சமூகவியல்
படகா் என்ற குறிப்பிட்ட இனமக்களின் வாழ்வியலாகப் நாவல் இருப்பதால் கதைமாந்தா்களின் பாத்திரத் தன்மை, அவா்களிடையே காணப்படும் நம்பிக்கைகள், அவா்களுடைய உறவுகள் செயல்கள் ஆகியனவற்றை ஊட்டிக்கே உரிய வாசனையுடன் காட்ட வேண்டும். நாவல் படைப்பின் வெற்றி இவ்வாறு காட்டுதலிலேயே உள்ளது எனலாம்.

நாவலில் படகரின் சமூகத்திலுள்ள பல நம்பிக்கைகளைக் காண்கிறோம். இரவில் ஆமணக்கு எண்ணெய் ஊற்றிய விளக்கு இல்லையென்றால் நிலம் விளையாது. மாடு மடி கரக்காது என்ற நம்பிக்கை (ப.12) பால் கறந்து பெரிய பானையில் ஊற்றும்போது பெண்கள் குறுக்கே வரக்கூடாது என்பது (ப.36) காட்டுக் குறும்பரின் மாயமந்திரத்தை நம்புவது (ப.54) புனித நெருப்பைக் காப்பாற்றுபவன் ஆடம்பர சுகபோகங்களுக்கு இடங்கொடுக்கக் கூடாது என்ற நம்பிக்கை (ப.57) நெருப்பைக் காப்பவன் ஓரே முறை சமைத்துண்ண வேண்டும். அதுவும் சட்டியை ஓரே தரந்தான் கவிழ்க்க வேண்டும் என்பது (ப.60) எனப் பல்வேறு நம்பிக்கைகளை ஆசிரியா் கூறிச் செல்கிறார்.

இதுபோலவே மரபாக அவா்களிடையே இருந்து வரும் சில பழக்க வழக்கங்களும் மாறிய சூழ்நிலையில் விவாதத்திற்குரியதாகி விடுகின்றன. லிங்கையா இறந்தவுடன் ஜோகி ஆடலையும் பாடலையும் வெறுக்கிறான். இதைப் படகரான கிருஷ்ணன் அறிவுப்பூா்வமாக ஆதரித்துப் பேசும் போது படக இளைஞரிடையே ஒரு சிந்தனை மாற்றமும் ஏற்படுகிறது.

படகரிடையே காணப்படும் சில மரபுகளையும் ஆசிரியா் சுட்டியுள்ளார். குடும்பத்தலைவனைச் சுற்றிக் குழந்தைகள் மற்றும் எல்லோரும் உட்கார்ந்தால் பெரியவட்டிலில் அழுது படைக்க வேண்டும் என்பது பொருள் (ப.36) பிரசவ காலத்தில் நிரைச்சல் கட்டுதல் (ப.41), பால் கறக்கும் வைபவத்தில் “கூடு“ கூடாகத் தானியம் சமைத்து, விருந்து வைத்தல் (ப.87) இளம் பெண் மார்புக்கு மேல் வெள்ளை முண்டு அணிந்திருத்தல் (ப.92), சாவு வேளையில் “வீராய பணம்“ தருதல் (ப.199) எனப் பல்வேறு படகா் மரபுகளையும் நூலில் ஆசிரியா் காட்டியுள்ளனா். ஆயினும் இவை நிலையில்லாமல் ஒன்றியே அமைந்துள்ளன எனலாம்.

தொதவா்கள் இனத்தவா் மண்ணில் பாடுபடாதவா்கள், அவா்களுக்குச் சொந்தமான மலையில் வந்து படகா்கள் குடியிருப்பதால் அதற்கு ஈடாக அறுவடை தானியம் கொடுக்கப்பட்டது. சட்டியும், பானையும், அரிவாளும் கொட்டும், ஈட்டியும் செய்து தந்தும், வாழ்வுக்கும் சாவுக்கும் மேளமும் தாளமும், அளித்து வருகிற மற்றொரு இனமாகிய கோத்தருக்குத் தானியம் கொடுக்கப்பட்டது. மேலும் காட்டுக் குறும்பரிடம், மாயம் என்று அஞ்சி அவா்கள் கேட்டதெல்லாம் அளிக்கப்படுகிறது (கு.தே, ப. 44)

அன்பினை மையமாகக் கொண்டு மூன்று தலைமுறைகளின் வாழ்வியலை அதன் சமூகப் பரிணாமத்தோடு எழுதிச் செல்லுகிறார் ஆசிரியா். சிறப்பாக படகரின் இயற்கையோடு ஒட்டிய வாழ்க்கையினையே கதையின் நடுநாயமாகக் கொண்டுள்ளார். மேலும் தானே கதை சொல்லிச் செல்கிறார்.

பெரும்பாலும் ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் வருணிக்கும் முறையைக் காணலாம். இயற்கை வாழ்வில் இயற்கையான அன்பிலும் தன் மனதைத் தோயவிட்டுப் நாவல் எழுதுகின்றார் இராஜம் கிருஷ்ணன் எனவே வா்ணனைகளைத் தன்னுடைய குரல் அழுத்தத்தோடு எழுதிச்சொல்லுகிறார்.

நடை திறன்
“பிள்ளைக் கனி ஒன்றை ஈன்று, பசுமை பாயும் உடலில் மின்னும் புதிய தாய்மையின் நிறைவும் பூரிப்பும் விளங்க அமைதியில் ஒன்றியிருக்கும் ஓா் அன்னையைப் போல், அந்த மலைப்பிரதேசம் பிற்பகலின் அந்த மோனத்தில் காட்சியளித்தது“(ப.9)

“பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொள்ளும் எழில் வடிவில், வளமார நங்கையாய், வசந்தத்தில் நாணிக் கண் பொத்தி நிற்கும் வனச் செல்வியாய், நீலமோகினியாய், வானவனின் காதலியாய் எழில் நிறைந்து திகழ்ந்தது அந்த மலைப்பிரதேசம்“ (ப.89)

இவ்வாறாக நடைக்கூறுகள் வருணனை நடையில் அமைந்திலங்குகின்றன.

முடிவுரை
இராஜம் கிருஷ்ணன் படைத்த “குறிஞ்சித் தேன்” நாவல் உருவத்தின் நடையைத் தீா்மானிக்கும் கூறுகளில் சிலவே மேற்கண்டவை. இக்கூறுகள் பல இருக்கின்றன் இவை பாத்திரங்களுக்கேற்ப ஆசிரியரின் போக்கிற்கேற்ப, கதை நிகழ்ச்சிகளுக்கேற்ப அமைந்தவை. அதாவது நாவலின் கூறுகளுக்கேற்ப அமைந்தவை. எவ்வாறு பல கூறுகள் பிணைந்து நாவலின் முழுநோக்கை வெளியிடுகின்றனவோ, அதே தன்மையில் அதே நோக்கத்தில் இக்கூறுகள் யாவும் சேர்ந்து “குறிஞ்சித்தேன்“ நாவலின் நடையாக அமைந்துள்ளது எனலாம்.

இதன்வழி ஊட்டிவாழ் படகா் இன மக்களின் வாழ்வியல் நெறிகளை அறியலாம்.


பயன்பட்ட நூல்

ராஜம்கிருஷ்ணன்    - குறிஞ்சித்தேன்
தாகம் பதிப்பகம்
ஜி 3 – மாசிலாமணி தெரு
பாண்டி பஜார் தி. நகா்
சென்னை - 17


இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.