முன்னுரை

இலக்கியங்கள் பொதுவாக மனித வாழ்வினைப் பிரதிபலிக்கும் தன்மையில் அமைகின்றது. இலக்கியங்கள் வாயிலாக மொழியும் மனித வாழ்வியலும் உயர்வு பெறுகின்றன. செவ்விலக்கியங்கள் எனப்போற்றப்படும் இலக்கியங்களில் ஒன்று புறநானூறு. அப்புறநானூற்றின் வழியாகப் பண்டைத் தமிழரின் வானிவியல் அறிவை அளவிடுவதாக இக்கட்டுரை அமைகிறது.

ஐம்பூதங்கள்
இவ்வுலகமானது பஞ்சபூதங்களால் ஆனது. நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் பஞ்சபூதங்களாக் கூறுவர். இத்தகைய ஐம்பூதங்களை ,
மண் திணிந்த நிலனும்
நிலன் ஏந்திய விசம்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போல
(புறம்.2.1-6)

என்னும் வரிகளால் இயற்கை ஐந்து கூறுகளால் அமைந்தது என்பதை முரஞ்சியூர் முடிநாகராயர் சங்க கால வாழ்வு இயற்கையுடன் இணைந்து வாழ்வு என்பதனையும் இயற்கையை ஐந்து கூறுகளாகக் கண்ட அறிவினையும் அறியமுடிகிறது.

ஞாயிற்றின் வெம்மை

சேர மன்னனைப் புகழ்ந்து பாடும் புலவர் நினது ஆட்சியில் ஞாயிற்றின் வெம்மையைத் தவிர வேறெந்த வெம்மையும் மக்கள் அடையவில்லை என்பதனை ,

செஞ்ஞாயிற்றுத் தெறல் அல்லது
பிறிது தெறல் அறியார் நின் நிழல் வாழ்வோரோ

என்கிறார் சங்கத் தமிழர்கள் சூரியன் மிகுந்த வெம்மையுடையது என்பதனை அறிந்திருந்ததுப் புலனாகிறது. தட்டையான வட்டம் போல் தோற்றமளிக்கும் சூரியன் உண்மையில் கோள வடிவில் இருக்கிறது. சூரியன் ஒரு நடுத்தர அளவு நட்சத்திரமே அதைவிடப் பலமடங்கு பெரிய விண்மீன்களும் இருக்கின்றன. சில கதிரவனை விட பல்லாயிரம் மடங்கு ஒளியும் வெப்பமும் உடையது என்ற பட்சிராஜ் அவர்களின் கருத்தும் ஏற்புடையதாய் அமைகிறது.

நம்முடைய கண்ணுக்குப் பல்வேறுபட்ட விண்மீன்களை விடச் சூரியனே மிகப்பெரியதாகவும் , வெப்பம் உடைய விண்மீன்கள் அதிகமான வெப்பத்தைக் கொண்ட சூரியன் எழுந்ததும் ஒளி கெடுவது போலத் தெரியும். ஆகையால் மட்டுமே நம் கண்ணுக்கு சூரியன் மட்டுமே பகலில் தெரிவதைக் காணமுடிகின்றது.

ஒளிச்சிதறல்

வளிமண்டல மூலக்கூறுகளில் ஒளிச்சிதறல் பற்றி முதலில் கூறியவர் லார்ட் ராவலே என்பவர் ஆவார். புவி மண்டலத்தில் உள்ள வாயு மூலக் கூறுகளால் சூரிய ஒளி சிதறலைடையும் நிகழ்வு ராலே ஒளிச்சிதறல் ஆகும். ஒளிச்சிதறலின் அடிப்படை மூலக்கூறுகள் உட்கவர்தலும் மற்றும் பல்வேறு திசைகளில் வெளியிடுவதும் ஆகும்.

நண்பகலை விட சூரிய உதயம் மற்றும் மறைவின் போது சூரிய ஒளிக்கதிர்கள் வளிமண்டலத்தில் நீண்ட தொலைவிற்குச் செல்ல வேண்டியுள்ளது. இதில் நீல நிறமானது முழுமையாக சிதறடிக்கப்படுவதால் குறைவாக சிதறும் சிவப்பு நிறக் கதிர்கள் மட்டுமே பார்பவர்கள் இடம் சேருகின்றது. ஆகவே தான் சூரியன் உதயம் மற்றும் மறைவில் சிவப்பு நிறமாகத் தோற்றமளிக்கிறது. இது ராலே என்பவரால் கண்டறியப்பட்ட அறிவியல் சார்ந்த உண்மையாகும். இத்தன்மையில்,

வாள் வலம்தர மறுப்பட்டன
செவ்வானத்து வனப்புப் போன்றன
(புறம் 4.1-2)

என்னும் வரிகளின் மூலமாக வாள்கள் வெற்றிக்காகப் போரிட்டதால் குருதி கரைந்தது. அதை சிவந்த வானத்திற்கு ஒப்புமைப்படுத்தினர். பண்டையத் தமிழர்கள் சிவந்த வானத்தை ராலேயின் ஒளிச் சிதறல் விதியுடன் தொடர்புபடுத்தும் போது புலனாகிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வலி திரிதகு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்று இவை
சென்று அமர்ந்து அறிந்தோர் போல (புறம் 30.-6)

என்ற வரிகளில் ஆகாயத்துச் சென்று அறிந்தவர் போல ஞாயிற்றின் பாதை அதன் இயக்கம் அது செல்லும் இடப்பரப்பு ஆகியவற்றையும் காற்றுப்புரவி நிற்கும் திசைகளையும் ஆகாயத்தின் தன்மையையும் கருத்தளவையும் நுட்பமும் அறிந்தவராகத் தமிழர்கள் இருந்தனர் என்பதை அறியமுடிகிறது.

ஞாயிறு பற்றிய இயக்கத்தையும் கோள்கள் பற்றியும், வானத்தைப் பற்றியும் அக்காலத்தில் வாழ்ந்தவர் நுட்பமாக அறிந்திருக்க எவ்வாறு இயலும் என்ற வினாவை எழுப்புகிறது. இப்புவியில் அமைப்பும் வானியலை அறிந்துரை ஏற்புடையதாய் இருந்திருக்குமோ என்ற வியப்பும் எழுகிறது.

உழவு மதி உருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற
(புறம் 3.1-2)

முழுமதியின் வடிவத்தைப் போல் விளங்குகின்ற உயர்ந்த வெண்கொற்றக் குடை என்பதில் வெண்மையாகிய முழுநிலவினை வெண்கொற்றக் குடைக்கு நிறத்தாலும் வடிவாலும் பெற்ற உவமையாதலின் முழுமதியின் வடிவம் இப்படித்தான் இருக்கும் என்கிற உய்த்துணரும் அறிவினை உடையவர்கள் என்பதனை மேற்கண்ட வரிகள் புலபடுத்துகின்றன.

நாள் மீன் கோள் மீன்

தலையானங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனிடம் சேரனும், சோழனும் போரில் இறக்குமாறு வென்றாய். அவ்விருவரும் இவனிடம் தோற்றமையைப் பாடும் கல்லானார் மீன் விளங்கும் பரந்த இருள் நீங்க ஒங்கிச் செல்லுதல் முறைமையுடையை தனது தன்மையினில் பிழையாது வலிய வெம்மை மிகுந்த ஞாயிறு திங்களுடன் நிலம் சேர்ந்தது என,

மீன்திகழ் விசும்பிற் பாய் இருள் அகல
ஈண்டு செலல் மரபின் தன் இயல் வழாஅது
உரவுச் சீனம் திருகிய உருகெழு ஞாயிறு
நிலவுத் திகழ் மதியமொடு நிலம் சேர்ந்தாங்கு
(புறம் 25.1-4)

தன்மையான ஒளியுடன் திகழும் மதியினோடு விண்ணைவிட்டு நீங்கி நிலம் சேர்ந்தமை போன்றது என்பதுடன் நிலவானது தன்மையுடன் விளங்கும் ஆற்றலுடையது என்று உரைக்கும் பழந்தமிழர்களின் வானியல் அறிவு மெச்சும் தன்மையில் அமைகின்றது.

சங்க காலத்திற்கு முன்பிருந்தே தமிழகத்தில் கணிநூல்,வான்நூல் ஆகிய கலைகள் மக்களின் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டிருக்க வேண்டும்.

வானத்து மீன் என்றும் வானத்து வயங்கித் தோன்றும் மீன் என்றும் புறநானூறு நாள் மீன் கோள்மீன் என இரண்டு வகைப்படும். நாள் மீன் இயற்கை ஒளியுடையது கோள் மீன் நாள் மீனின் ஒளியைக் கொண்டு விளங்குகிறது.

செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திசையும்
வறிது நிலைஇய காணமும் என்று இவை
சென்று அளந்து அறிந்தோர் போல
(புறம் 30.1-6)

தமிழர்கள் ஞாயிறு முதலான மீன்களைப் பற்றியும், அம்மீன்கள் சூழ்ந்த மண்டிலம் பற்றியும் அறிந்திருந்தார்கள் என்ற உண்மையானது புலனாகிறது.

அக்காலங்களில் கோள்மீன், நாள் மீன் ஆகியவற்றின் இயல்பையும், இயக்கத்தையும் ஆய்ந்து பருவ காலங்களையும், அக்காலங்களில் விளையக் கூடியனவற்றையும் கூறவல்லர் சங்க காலத்தில் வாழ்ந்தனர் என்று தெரிகிறது.

குறிப்பாக நில நடுக்கோட்டுப் பகுதியில் வாழ்ந்த திராவிட இனத்தவரால் மட்டுமே சூரியனின் தெற்கு வடக்கு இயக்கங்களையும் விண்மீன் கூட்டங்களின் மேற்கு நோக்கிய நகர்வுகளையும் நுட்பமாய் பதிவு செய்திருக்க முடியும் என்ற சு.முத்து அவர்களின் கருத்தினை வளம் சேர்க்கும் வகையினிவே பண்டையத் தமிழரின் வானியல் அறிவானது வியக்கத்தக்கதாகும்.

புறநானூற்றில் காணலாகும் குறிப்புகள் இன்றைய அறிவியலோடு தொடர்புடையதாகவும், காலத்திற்கேற்ப பயன் தரும் வகையில் தமிழரின் வானியல் அறிவு அமைந்தமையானது வியப்பிற்குரியது.

இன்றைய வானியலோடு புறநானூற்றுப் பாடல் செய்திகளை ஒப்பிடுகையில் தமிழர்களின் வானியல் அறிவுத்திறமானது புலனாகிறது.

வானிலை, தட்பவெட்பம், நில அமைப்பு, பருவமாற்றம் குறித்த செய்திகளை அறிய முடிகிறது.

ஞாயிறு செல்கிற பாதை அதன் இயக்கம் அது செல்லும் இடப்பரப்பு காற்று பரவி நிற்கும் திசைகள் வானத்தின் தன்மைகள் இவை அனைத்தையும்நேரில் சென்று அளந்து அறிந்தவர் போல அறிவும் ஆற்றலும் கொண்டு வாழ்ந்த தமிழர்களின் திறமையானது புலனாகிறது.

துணை நின்ற நூல்கள்

1.புறநானூறு மூலமும் உரையும் முனைவர் கு.வெ. பாலசுப்பிரமணியன்.
2. வானை அளப்போம்.பட்சிராஜ்
3.சூரியச் சுற்றுலா – சு.முத்து
4.தமிழ்நாட்டுப்பாடநூல் கழகம் 12ஆம் வகுப்பு இயற்பியல்

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.