முன்னுரை :
- சௌ. சிவசௌந்தர்யா,  ஆய்வியல் நிறைஞர்,  தமிழ்த்துறை,  காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம்,      காந்திகிராமம்,    திண்டுக்கல் -ஏட்டு இலக்கியம் தோன்றுவதற்கு முன்பே வாய்மொழி இலக்கியம் தோன்றியது. வாய்மொழி இலக்கிய வடிவங்களில் ஒன்று பாட்டு இலக்கியமாகும். பாட்டு என்பது தமிழக மக்களைப் பொறுத்தவரை பிறப்பு முதல் இறப்பு வரை நிற்கின்றது. தொன்மைக் காலத்தில் ஒப்பாரியை கையறு நிலைப்பாடல், புலம்பல், இரங்கற்பாää சாவுப்பாட்டு, இழிவுப்பாட்டு, அழுகைப்பாட்டு என முன்னோர்கள் ஒப்பாரியை அழைத்தனர். ஒப்பாரி என்பது பெண்களுக்கே உரிய வழக்காற்று வடிவமாக உள்ளது. ஒப்பாரி பாடல்கள் இறந்தவர்களின் சிறப்புகளைப் பற்றிப் பாடப்படுகிறது.

ஒப்பாரி – சொற்பொருள் விளக்கம் :
ஒப்பாரி என்பதற்கு “ஒத்த பாவனை” “அழுகையிலொப்பனையிடுகை”, “அழுகைப் பாட்டு”, “ஒப்புச் சொல்லியழுதல்” என்று பொருள் விளக்கம் கூறப்படுகிறது.

ஒப்பாரி பொருள் விளக்கம் :
ஒப்பாரி என்பதனை ஒப்பு 10 ஆரி ஸ்ரீ ஒப்பாரி எனப் பிரித்துக் கொள்ளலாம். ஒப்பு என்றால் இழந்தப்  பொருளுக்கு இணை என்றும், இதற்கு ஒப்புச் சொல்லி ஆரிப்பதும் என்று பொருள் கொள்ளப்படுகிறது. மேலும் அழுகைப்பாட்டு என்றும், போலி என்றும், ஒப்பு என்றும் அகராதி பொருள் விளக்கம் தருகிறது. ஆரிப்பது என்பதை அவழச் சுவையுடன் ஆரவாரம் செய்வதும் என்றும் கூறலாம். எனவே இறந்தவர்களை எண்ணிப் பெண்கள் பாடும் ஒரு வகை இசைப்பாடலே “ஒப்பாரி” என்கிறார் மு. அண்ணாமலை

“மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரியுங் கண்டது இல்”      குறள் -1071

என்ற குறளில் ஒப்பாரி என்ற சொல் ஒத்தவர் என்ற பொருளில் திருவள்ளுவர் கூறியுள்ளார்.

ஒப்பாரி :
ஒருவருடைய நெருங்கிய உறவினர்கள் இறக்கும் போது இழப்பின் துயரம் தாங்கிக் கொள்ள முடியாமல் பெண்கள் இறந்தவர்களின் சிறப்புகளையும், அவர்கள் இறந்ததால் அடையப்போகும் துயரத்தையும் பாடலாகப் பாடுவார்கள். ஒப்புச் சொல்லி அழுவதால் ஒப்பாரி என்று அழைக்கப்படுகிறது.

 “வாழ்வின் முன்னுரை தாலாட்டு ஆனால் முடிவுரை ஒப்பாரியாகும். தாலாட்டு கலங்கரை விளக்கமானால்ää ஒப்பாரி நினைவுச் சின்னமாகும், தாலாட்டும் ஒப்பாரியும் பெண் குலத்தின் படைப்பாகும்” என்பர் சு.சக்திவேல் பற்றிக் கூறியுள்ளார்.

ஒப்பாரிக்கு முக்கியத்துவம் பெண்களே :
ஒப்பாரிப் பாடல்கள் அனைத்தும் பெண்களால் குறிப்பாக ஒரு பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து பாடப்படுகின்றது. பெண்ணானவள் ஒரு குழந்தைக்கு முதலில் தாய் என்ற நிலையில் இருந்தும், பெற்றோருக்கு மகள் என்ற நிலையில் இருந்தும், உடன் பிறந்தவனுக்குக் கூடப் பிறந்தவள் என்ற நிலையில் இருந்தும். ஒருவருக்கு மனைவி என்ற நிலையில் இருந்தும், பேரன், பேத்திக்குப் பாட்டி என்ற நிலையில் இருந்து பாடல்களைப் பாடுகின்றாள் என்று செங்கோ.மா.வரதராசன் குறிப்பிடுவதை உணர முடிகின்றது.

தொல்காப்பியம் அழுகை பற்றிய விளக்கம் :

தொல்காப்பியத்தில் மெய்ப்பாடு பற்றி தொல்காப்பியர் விளக்கம் தருகிறார்.
“இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே”

என்கிறார். பிறரால் இகழப்பட்ட நிலையில் இளிவும், தந்தை தாய் முதலான சுற்றத்தாரையும் இன்பம் பயக்கும் நுகர்ச்சி முதலியவற்றையும் இழக்கின்றபோது இழிவும், பண்டைநிலை கெட்டு வேறுநிலை அடையும்போது அசைவும், போகத்துய்க்குப் பெறாதா பற்றுள்ளம் கொண்டபோது வறுமையும் அழுகைக்கு அடிப்படைக் காரணங்களால் அமையும் என்பார்.

சங்க இலக்கியங்களின் கருத்து :
சங்க இலக்கியங்களில் மன்னன் இறந்தபோது பாடுவதைப் பற்றி குறிப்பிடப்படுகிறது.

“அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவன்..... எந்தையுமிலமே”
எனப் பாரி இறந்தது அவர் மகள் புறநானூற்றுப் பாடலில் கூறப்பட்டுள்ளது.
“சிறியகள் பெறினே எமக்கீயு மன்னே
பெரியமகள் பெறினே யாம்பாடத் தான் மகிழ்ந்துண்ணும்”

என்று அதியமான் இறந்த பிறகு பாடியுள்ளார்.

கையறு நிலையும் ஒப்பாரியே
நாட்டுப்புற மக்கள் அழுகைப் பாட்டே ஒப்பாரி என அழைக்கின்றனர். கற்றறிந்த சான்றோர்கள் அழுகைப் பாட்டை முறைப்படுத்திச் செம்மை செய்து “கையறு நிலைப் பாடல்கள்” எனவும் இரங்கற்பா எனவும் பெயர் சூட்டியுள்ளனர்.

“வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின்
கற்றோர் உரைப்பது கையறு நிலையே”
எனப் பன்னிரு பாட்டியல் கையறு நிலைக்கு விளக்கம் தருகிறது.
“கழிந்தோர் தேஎத்து அழிபடர் ஹீஇ
ஒழிந்தோர் புலம்பிய கையறு நிலை”

என்று அழுது புலம்பனும் கையறுநிலைப் பற்றித் தொல்காப்பியர் நூற்பாலில் எடுத்துரைக்கிறார்.

கணவனை இழந்த நிலை :
சமுதாய அமைப்பில் பெண்ணின் பெரும்பகுதி கணவனது பாதுகாப்பில் உள்ளது. கணவனே சொத்தாக இருக்கிறான். சமுதாயத்தில் மதிப்பும், மரியாதையும் அவனால் தான் அவருக்குக் கிடைக்கிறது. இறப்பிலே மிகக் கொடுமையானது திருமணமானவுடன் கணவன் இழந்து விடுவதாகும். ஆண்மகன் இறந்து விட்டால் அவன் மனைவி பாதுகாப்பு இழநந்துவிடுகிறாள். பாதுகாப்பு சமுதாயத்தில் கிடைப்பதில்லை. மதிப்பும் மரியாதையும் விலகிவிடும். குடும்பத்தைக் கணவனே தலைமை தாங்கி நடத்துவதால் ஆண்மகன் இல்லாமல் குடும்பநிலை குறைந்து விடும்” கணவனை இழந்தோர்க்கு காட்வது இல” என்பது சிலப்பதிகாரத் தொடராகும்.

“வானம் போகும் சுடுகாடு இன்னக்கி
பொகப்புடிச்சு வேகுதின்னு – நான்
பொன்னாள் விசிறிகொண்டு
போசியிலே தண்ணி கொண்டு
போறப்ப வாரான்னு – நீ
பக்கம் நின்று கேக்காம
பறந்தோடிப் போனய்யா”

இறந்த தன் கணவன் உடலைச் சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்கிறார்கள். நெருப்பினிலே வேகும்போது வெம்மையை அவனால் தாங்க முடியாது என்று விசிறியும் தண்ணீரும் கொண்டு போகிறாள். அப்படிப்போகும்போது தனது பாட்டைக் கேட்காமல் போகிறானே என்று புலம்புகிறாள்.

விதவை நிலை :
கணவனை இழந்தவளுக்குப் பிறந்த வீட்டில் மதிப்பில்லை. அவ்வீட்டுச் சொத்து சுகங்களில் அவளுக்குப் பங்கில்லை. இதனால் புகுந்த வீடுகளின் கொடுமைகளுக்கு அஞ்சி, பிறந்த வீடு செல்லுவோம் என்றால் அங்கு அவளுக்கு வரவேற்பு இருக்காது. கணவனை இழந்த சூழலில் தன் பிள்ளைகளை எப்படி வளர்ப்பது என்று தனது நிலையை நினைத்து வருந்துகிறாள்.

முடிவரை :
இதுவரைக் கண்ட செய்திகளைத் தொகுத்து நோக்குமிடத்து நாட்டுப்புறப் பாடல்களில் ஒப்பாரிப் பாடல்கள் பெண்களுக்கு உரியதாகும். ஒப்பாரியின் பொருள் விளக்கம்ää கைறு நிலை, சங்க இலக்கியங்களிலும், கணவனை இழந்த பெண்களின் நிலைமைப் பற்றியும் கூறப்படுகிறது.

துணைநூற்பட்டியல்
1. தொல்காப்பியப் பொருளதிகாரம் - நூ.எ-120
2. சு. சக்திவேல், நாட்டுப்புற இயல் ஆய்வு –ப.59
3. மு.அண்ணாமலை, நமது பண்பாட்டில் நாட்டுப்புற இலக்கியம் -ப.123
4. கோ. பெரியவண்ணன் - நாடு போற்றும் நாட்டுப்புறப்பாடல்கள் ப-271
5. தகவலாளர் - ம.பவுன்தாய்ää ஒப்பாரிப்பாடல்

* கட்டுரையாளர்: - சௌ. சிவசௌந்தர்யா,  ஆய்வியல் நிறைஞர்,  தமிழ்த்துறை,  காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம்,      காந்திகிராமம்,    திண்டுக்கல் -

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.